சென்னைக்கு வந்து திருமணமும் ஆகி விட்ட இந்த சில ஆண்டுகளில் செண்பகத்துடனான நட்பு முழுமையாக அறுந்து விடவில்லை. செண்பகம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பேசினாள். காலமும் கவலைகளும் ஒரு தொட்டிலைப் போல ஆடிக் கொண்டிருக்கிறது என்றாள். அவளுக்கும் கல்லூரி படிக்கும் வயதில் மகள் வளர்ந்து விட்டாள். என் குடும்பம் பற்றி விசாரித்தாள்.

“சந்தோசமா இருக்கியா?”

“ம்ம்ம்ம் ஒகே.”

“லேய் மக்கா வேணிக்க அப்பா தூக்கு மாட்டிக்கிட்டாரு பாத்துக்க. அவரு சாகல்ல, உனக்கு ஞாபகமிருக்கா, தோழர் குலோத்துங்கன். நான் உன்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போனேனே?”

“இறந்துட்டாரா?”

“இல்லை கயிறு ஒழுங்கா இறுகல்ல, அதனால் பொழைச்சிக்கிட்டாரு. ஆனா படுக்கைல விழுந்துட்டாரு?”

“ஓ.”

இதைத் தவிர அவரைப் பற்றி நினைக்கவோ சொல்லவோ அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.

தோழர் குலோத்துங்கனுக்கு ஒரு மகன், ஒரு மகள். மூத்தவன் மகன். அவன் நான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோதே கல்லூரி முடித்து எங்கோ வேலைக்குச் சென்று கொண்டிருந்தான்.வேணி இளையவள். இப்போது அவரது இந்த முடிவுக்குக் காரணம் அவள்தான். பேப்பர் போடும் பையனோடு அவள் ஓடிப் போனாள். அப்போதே கவலையில் வீழ்ந்தவர் மனைவியின் மரணத்திற்குப் பின்னர் தன் உயரத்திற்குத் தகுந்த கயிற்றைத் தெரிவு செய்யாமல் அளவு தப்பி இப்படி ஆகி விட்டது என்றாள்.

பின்னர் தொலைபேசியைத் துண்டித்து விட்டாள்.

அவன் தோழர் குலோத்துங்கனின் உயரம் பற்றியோசிக்கத் துவங்கினான். உயரத்துக்கு ஏற்ற மாதிரி தூக்குக் கயிறு இருக்க வேண்டும் என்ற உண்மை அவருக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி சிரமப்படுகிறார் என்று யோசித்தவனுக்கு செண்பகத்தோடு அவனுக்கிருந்த இளம் வயது நட்பு நினைவுக்கு வந்தது.

அந்த வயதில் அவனுக்கிருந்த ஒரே தோழி செண்பகத்தை சந்திக்கச் செல்வது மட்டும்தான். அவனுக்கான அன்றைய வேலை. அதைத் தவிர வேறு எந்த வேலைகளும் அப்போதைக்கு இல்லை. அன்று அவனுக்கு விடுமுறை நாள் என்பதால் அவனது கிராமத்தில் நின்றிருந்தான்.

துறையில் அப்போது பெய்து கொண்டிருந்த மழைதான் இந்த ஆண்டின் முதல் மழை என நினைத்தான். வலிய கோடையில் இந்த மழை ஊரைக் குளிர்வித்திருந்தது.பங்களா தெருவில் ஆறு ஜன்னல் உள்ள வீடு ஒன்றின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றான்.அந்த வீடு எப்போதும் அவனுக்குப் பிடிக்கும். காரணம், அது மேசைக்காரர் ஒருவரின் இல்லம். “மேச இல்லம்” என்றே அழைக்கப்பட்டது.

தாழ்வாரம் வழியே உருண்டு கோடு போல் விழுந்த மழை நீர் உருண்டோடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.தன் கால் விரவில் மழை நீர் தெறித்து விழுவதை அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு கடற்கரைக்குச் செல்லலாமா எனத் தோன்றியது.இரண்டு தெரு தள்ளி தெற்கில் நடந்தால் அரபிக்கடல். ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் ஆக்ரோஷத்தைக் கொட்டும்.

கடலின் கரையில் இருந்து நீளமாக அமைந்த மூன்றாவது வரிசையில் வீடு. அவனது ஊரையொட்டிய கிராமங்களில் ஊரமைப்புகளில் முதல் வரிசை வீடுகளில் கடல் தொழில் செய்யும் கடலோடிகளும், இரண்டாம் வரிசையில் கடல் தொழில் செய்கிறவர்களும், மூன்றாம் வரிசை வீடுகளில் கப்பல் தொழில் கரை வேலை செய்கிறவர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்களின் வீடுகளும் இருக்கும். இது அவனது ஊரின் அமைப்பு.
பிளஸ் டூ தேர்வெழுதி விட்டுக் கல்லூரி செல்வதற்காக அந்த விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தவனுக்கு கடல் காற்றும் மழைத் தூரலும் தனிமை உணர்ச்சியை அவனுக்கு ஊட்டியது.

அம்மா அப்பா இருவருமே அரசுத்துறையில் பணியாற்றினார்கள். ஒரே மகன் என்பதால் பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. அவனைத் தப்பாகவும் வளர்த்து விடவில்லை.அப்பா அம்மா இருவருக்குமே ஒரே பயம், இவனைக் கடல் அடித்துச் சென்று விடக்கூடாது என்பதுதான்.

“மக்கா கடல் பக்கம் போவாத. உன்ன நேத்து கூட கடக்கரைல பாத்ததா இன்னாசியார் சொன்னாரு…உனக்கு தண்ணீல கண்டம்னு ஜோசியக்காரன் சொல்லியிருக்கான்… போவாத மோனே….” என்று எச்சரிப்பார்கள்.

பெற்றவர்களுக்குக் கடல் பற்றிய பயம். காரணம், காலங்காலமாக அரபிக்கடலை ஆண் கடல் என்றும் வங்கக் கடலைப் பெண் கடல் என்றும் விளிப்பார்கள் அத்துறையில் உள்ள கடலோடிகள்.

தூறலோடு வீட்டுக்குச் சென்றவன் ஒரு குடையை எடுத்துக் கொண்டு தூறலுடன் வெளியேறி கடற்கரைக்குச் சென்றான்.

மழை நீர் கடலில் சேரும்போது கடல் நீர் சுடு நீர் போல வெதுவெதுப்பாக இருக்கும். கரையில் அலை
வாய்க்கரையில் நின்று அதை பார்த்துக் கொண்டே இருந்தான்.

மழை வெறித்து விட்டது. கருமேகம் கலைந்து நீல மேகங்கள் கடல் மேல் இறங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கு செண்பகத்தைக் காணச் செல்ல வேண்டும் என்பது நினைவுக்கு வந்தபோது கடற்கரையில் இருந்து வெளியேறி வீட்டிற்குச் சென்று குளித்து விட்டுப் பத்து மணிக்கு வரும் டவுன் பஸ்சைப் பிடித்தான்.

அவனுக்குப் பிடித்த சில விஷயங்களுள் செண்பகமும் ஒருத்தி. அவனுக்கு யார்மீதும் காதலென எதுவும் இல்லை. கடற்கரைக்கு அப்பாலான ஒரு உலகை இவனுக்கு அறிமுகம் செய்தவள் செண்பகம்தான். அவள் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தாள். அவன் பார்த்த முதல் கம்யூனிஸ்ட் அவள்தான். செண்பகத்தை ஒரு கம்யூனிஸ்ட் என்றே அவன் நம்பினான்.

“கம்யூனிஸ்டுன்னா எல்லாத்தையும் ஏழைகளுக்கு கொடுத்திடுவாங்கல்ல.”

அவள் சிரித்தாள். அதற்கு ஒரு காரணம் இருந்தது. செண்பகத்தின் அப்பா ஒரு சிறிய அரிசி மண்டி வைத்திருந்தார். ஆனால் அவர் பழுத்த காங்கிரஸ்காரர் என்றுதான் அவள் சொல்லியிருந்தாள். பள்ளியில் கிடைத்த தொடர்புகளில் பாடல்களின் மூலமே இவள் கம்யூனிஸ்ட் தாக்கம் பெற்றாள். அரிசி மண்டியில் இருக்கும் அரிசியை எல்லாம் உணவில்லாதோருக்கு எடுத்துக் கொடுத்து விடுவாள் என இவன் நம்பினான்.

அவள் சிரித்தாள். “ தேவைக்கதிகமாக இருக்கும் எதையுமே தேவைப்படுவோர் ஏதோ ஒரு சூழலில் எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒருவர் எடுக்கும் போது உன்னை மாதிரி ஆளுங்க அதைத் திருட்டு எனச் சொன்னால் நாங்கள் பொலிட்டிக்கலாக அதுக்கொரு விளக்கம் கொடுப்போம் அது ஒரு பொருள் முதல்வாத விளக்கமாக இருக்கும்” என்றாள்.

பேருந்து நகருக்குள் நுழைந்த மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கினான். அவளுக்காகக் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவள் ஸ்கூட்டியில் வந்தாள்.

”ஏறுடா” என்றாள்.

அவன் பின்னால் அமர்ந்து கொண்டான்.

இவனுக்கு வண்டி ஓட்டத் தெரியாது. “நான் உனக்கு வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுக்கவா?” என்று
கேட்ட போது இவன் மறுத்து விட்டான். அவள் வேகமாக வண்டி ஓட்டுவாள்.

நாகர்கோவில் என்ற சிறு நகரத்தில் எந்தச் சாலையில் சென்றால் எங்கு வர முடியும், எந்த தெருவில் எந்தெந்த பிரபலங்கள் வசிக்கிறார்கள் என்பதை எல்லாம் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.

“இது நாகராஜா கோவில்.”

“இதான் சுந்தரராமசாமி வீடு.”

“இங்க 13 தியேட்டர் இருக்கு.”

“கருப்பட்டி பாயாசம் இந்தத் தெருவுல கிடைக்கும்.”

“இப்படிப் போனா சுசீந்திரம் குளம்.”

பள்ளிக்கூடம் விட்டால் வீடு, மீதி நேரம் கடற்கரை இந்த வாய்ப்புகளை மட்டுமே கொண்டிருந்தவனுக்கு ஒரு சின்ன நகரத்தின் அறிமுகமும் வெளியாட்களின் பழக்கங்களும் கிடைத்தது செண்பகம் மூலமாகவே. .அவள் நிறைய பேரை “தோழர்” என்று அழைப்பாள். இவனை “வாடா போடா ” என அழைப்பாள்.

அவன் “ஏன் சிலரைத் தோழர்ங்கிற, என்னை வாடா போடானு சொல்ற” என்று கேட்ட போது அதற்கும் ஒரு விளக்கம் சொன்னாள்.

“தோழர் என்கிற சொல் நண்பன் என்ற வார்த்தைக்கு இணையான அல்லது அதை விட மேலான அரசியல் அர்த்தம் உள்ள சொல்” என்றாள். அவன் அன்று முதல் யாரையாவது “தோழர்” என அழைக்க விரும்பினான்.

வீட்டில் அம்மா தோசை சுட்டு வந்து தட்டில் வைத்த போது “நன்றி தோழர்” என்று அம்மாவைப் பார்த்து சிரித்தான்.

அம்மா பதறி விட்டாள். “டேய், நீ நக்சலைட் ஆகப் போறியா? இந்த கடற்கரைல யாருடா உனக்கு தோழர்னு சொல்லிக் கொடுத்தாங்க. உம் போக்கே சரியில்லை” என்று கவலைப்பட்டவள், மகன் தோழர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதாகவும் அவனை நல்வழிப்படுத்துமாறும் கணவனிடம் சொன்னாள்.

செண்பகத்திற்கு அவனை கம்யூனிஸ்ட் ஆக்கி விடும் திட்டம் எதுவும் இல்லை. இவனுக்குத்தான் செண்பகம் மீது மரியாதை கூடியிருந்தது.

“டேய், உனக்கு தோழர் குலோத்துங்கனை அறிமுகம் செய்து விடவா?” என்றாள்.

“யாரு அவரு?”

“அவரைத் தெரியாதா? அவர் டவுன்ல பெரிய கம்யூனிஸ்ட். நம்ம வேணி அப்பாதான் தோழர் குலோத்துங்கன்” என்றாள்.
வேணி ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் மகள் என்பதை இவனால் நம்ப முடியவில்லை. காரணம் அவளுடைய நடை உடை வார்த்தைகள் எதிலும் சிகப்பு சிறிய அளவில் கூட இருந்ததில்லை.

“வேணியோட அப்பா கம்யூனிஸ்டா? அரிசி மண்டி அதிபரோட பொண்ணு நீ எல்லாரையும் தோழர்ன்னு கூப்பிட்ற… தோழரோட பொண்ணு வேணி ஏன் யாரையுமே தோழர்னு கூப்பிட மாட்றா?” என்று கேட்டான்.

“அது அவகிட்டதான் கேட்கணும். வேணி வீட்டுக்குப் போலாம் “ என்று வண்டியை குறுக்கு மறுக்காக ஓட்டி வரிசைக்கிரமான சிமெந்து பூசிய தெரு ஒன்றுக்குள் ஓட்டிச் சென்று நிறுத்தினாள்.

செண்பகம் ரொம்ப பழக்கமான வீடு போல உள்ளே வேகமாக ஓடினாள். இவன் தயங்கித் தயங்கி உள்ளே சென்றான்.

வேணிதான் வந்து இவனை உள்ளே அழைத்துச் சென்றாள். நீளமான கம்பிகளைக் கொண்ட பெரிய ஜன்னல் கொண்ட வீடு அது. உள்ளே மரத்தூண்களுடன் தாழ்வாரம் இருந்தது. மழை பெய்தால் அந்த தாழ்வாரத்தில் இருந்தே மழையைப் பார்க்க முடியும். இது போன்ற வீடுகளை எல்லாம் அவன் முதன் முதலாகப் பார்க்கிறான்.

அவன் ஓடு வேய்ந்த அந்த வீட்டின் உள்ளே கசியும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னல் நிறைய படங்கள். தலைவர்கள் படங்கள் இருந்தன. சுவரில் ஒரு சின்ன கண்ணாடி அதன் முன்னால் ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருந்தது. அது காற்றில் அணைந்து விடாதபடி சுவருக்குள் துளையிட்டு தீபத்தை ஏற்றியிருந்தார்கள்.அதன் முன்னால் கொஞ்சம் பூக்கள் இருந்தன.

ஜன்னல் வழியே வீசப்பட்ட நாளிதழ்கள் தாழ்வாரத்தின் அருகில் மழைக்கு ஒதுங்கி அப்படியே விழுந்து கிடந்தது.

சுவரில் இருந்த படங்களை செண்பகம் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்

“இது கார்ல்மார்க்ஸ்..இது லெனின்.”

“இது தோழர் ஜீவா.”

அவன் தான் இந்த வீட்டில் எங்கு அமர்வது என இடம் பார்த்தான். ஒரு நீளமான ஊஞ்சல் சில மரச்சேர்கள் இருந்தன.

உள்ளே இருந்து தோழர் வெண் சட்டையில் வெளியில் வந்தார்.

“செண்பகம் சௌக்யமா, இவர்தான் அந்த இளம் தோழரா?” என்றபடி “வாங்க வாங்க உக்காருங்க” என்றார்.
அவனும் அமர்ந்து கொண்டான்.

ஊஞ்சலில் தோழர் அமர்ந்தார். அவர் அருகில் செண்பகம் அமர்ந்து கொண்டாள். வேணி அடுக்களைக்குள் அம்மாவுடன் நின்றாள். வெளியில் வந்த வேணி “அப்பா இவனைத் தெரியுமா? என் கிளாஸ்மெட். செண்பகமும் இவனும் ரொம்ப குளோஸ். இப்போ அவன் என்னைப்பார்க்க வந்திருக்கான். செண்பகம் உங்களைப் பார்க்க வந்திருக்கா.” என்று சொன்னபடி மறுபடியும் குசினுக்குள் ஓடி விட்டாள்.

வந்திருந்த இளம் தோழர் பற்றி விசாரித்தார். குலோத்துங்கன் வேணியின் அம்மாவிடம் காபி போடச் சொன்னார். “இளம் தோழருக்கு ஒரு கடுங்காப்பி போட்டு கொண்டு வா” என்றார்.

“எனக்கு காபி வேண்டாம்.”

“இல்லை தோழரே, கடுங்காப்பியில் பல நன்மைகள் உண்டு அது இதயத்துக்கு நல்லது” என்றவர் அந்தக் கருத்தை ஆமோதிக்க செண்பகத்தை துணைக்கழைத்துக் கொண்டார். தாமாக முன் வந்து நீதிமன்றம் எடுக்கும் வழக்குகளுக்கு நீதிமன்றத்துக்கு உதவ ஒரு வக்கீல் நியமிக்கப்படுவார். அப்படித்தான் செண்பகம் கடுங்காப்பி இதயத்துக்கு நல்லது என்பதை நிரூபிக்க சில வார்த்தைகள் சொல்ல அவளை நியமித்துக் கொண்டார்.

அவன் அணையாமல் எரிந்து கொண்டிருந்த விளக்கை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவன் . “அந்த விளக்கு எப்பவும் இப்படித்தான் எரியுமா?”

“ஓ அதுவா? அது வாடா விளக்கு அய்யா. வைகுண்டருக்கு ஏத்துறது.ஒரு கண்ணாடி, அதன் முன்னால் ஒரு விளக்கு, அதன் முன்னால் கொஞ்சம் பிச்சிப்பூ.எவ்வளவு எளிமையான ஆடம்பரம் இல்லாத வழிபாடு” என்றார்.

“இது எப்பவுமே அணையாதா?”

“எப்பவும் அணையாது. அணையாம பாத்துக்கிடுவோம்.”

“ஓ.”

“இளம் தோழருக்கு எந்த ஊர்?” என்றார்.

“பூத்துறை.”

“கடப்புறமா.”

“ம்ம்ம்ம் ஆமா.”

அவரது முகம் மாறி விட்டது. அவர் தன் மூளையில் உண்மை என நம்பியிருந்த ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்து விட்டார்.”

“அப்போ இளம் தோழர் மீன்பிடிச்சிட்டு வருவீங்க. வேணி அதைக் காயப்போட்டு கருவாடாக்கி மீனு மீனேய்…மீனு மீனேய்….”னு விப்பாளா..-என்று தலையில் மீன் பெட்டி சுமப்பது போன்ற சிறுநடையோடும் நளினத்தோடும் செய்து காட்டினார்.

அவனுக்கு வியர்த்து விட்டது. தொண்டை வழியே புளிப்பான ஏதோ ஒன்று உள்ளே இறங்கியது போலிருந்தது.

வேணியைப் பார்த்தான். “வேணி, நான் கிளம்பணும். போலாமா?”

வெளியில் வந்தவள் “என்ன மக்கா என்னாச்சு?”

“ஏன் அவர் அப்படிச் சொல்கிறார். நீ கூப்பிட்டேன்னுதான் நான் வந்தேன் நான் வேணியைப் பார்க்கவே வரல்ல.. அவள் அப்படி ஒன்றும் அழகும் இல்லை. அவள்மீது காதலோ கவர்ச்சியோ எதுவுமே இல்லை, ஏன் அவர் கடப்புறம் என்கிறார்?”

“விடு மக்கா, வயசாகுது, நீ ஹர்ட் ஆயிட்டியா?”

“இவனெல்லாம் கம்யூனிஸ்டா. நான் காலேஜ் முடிச்சிட்டு சென்னை போவேன். நிறைய கம்யூனிஸ்டுகளைப் பார்ப்பேன். ஆனா யாரும் இவனை மாதிரி அல்பமா இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றேன்.

அவள் என்னை அமைதிப்படுத்தினாள்.

அந்த சம்பவத்தின் பின்னர் நான் செண்பகத்தை சந்திக்கவே இல்லை. சென்னை வந்தேன் .நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டேன். திருமணமும் ஆகி விட்டது. எப்போதாவது தொலைபேசி வழியே எங்கள் நட்பு தொடர்பெல்லைக்கு வெளியில் செல்லாமல் இருக்கிறது.

ஒரு மாதத்திற்குப் பின்னர் ஊருக்குச் சென்ற போது செண்பகத்தைப் பார்க்கப் போனான். அவளது மகளுக்கு இனிப்புகளும் ஒரு பரிசுப் பொருளும் வாங்கிச் சென்றிருந்தான். செண்பகத்திற்கு சுமாரான ஒரு கணவன் வாய்த்திருந்தான். நல்ல வேலையில் இருந்தான். ஆனால் அழகில் குறைபாடுடையவன் அவன். ஆனால் அவன்மீது மிகுந்த பரியத்தோடு செண்பகம் இருந்தாள்.

தோழர் குலோத்துங்கன் பற்றிய பேச்சு வந்த போது அவன் சொன்னான்.

“நான் நிறைய கம்யூனிஸ்ட் தோழர்களோடு பழகுறேன். அவங்க யாரும் இந்த ஆளை மாதிரி இல்ல. அவங்க மக்களுக்காக முழு நேரமும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிச்சிருக்காங்க …நான்கூட எப்போவாச்சும் அவங்களுக்கு டொனேஷன் கொடுப்பேன்.”

“குலோத்துங்கன் இன்னும் சாகலியா?” என்று கேட்டேன்.

அவள் சொன்னாள் “லேய், விடு மக்கா. அவரே பாவம். சாப்பாடு உள்ளே இறங்காது நீராகாரம்தான்.வேணியை இழுத்துட்டு ஓடுன அந்த பேப்பர் போடுறவர்தான் தோழரைப் பார்த்துக் கொள்கிறார்” என்றாள்.

“வேணி பேப்பர்காரனோடு போனதுதான் அவருக்குப் பிரச்சனையா?”

“அதுவும் ஒரு காரணம்…. ஆனா அவர் ரொம்ப வருஷமா கட்சியோட கலை இலக்கிய அமைப்பைத் தன் கட்டுக்குள் வைச்சிருந்தாரு. இந்த வாட்டி அது வேற ஒருத்தங்க கையில் போயிடுச்சி. அதுவும் அவருக்கு ரொம்ப மன வருத்தம்.”

“வேற ஒருத்தங்கன்னா வேற சாதிக்காரங்க கைக்குப் போயிடுச்சா..ஓ கட்சின்னா எல்லாம் நம்ம கட்டுப்பாட்டலையே இருக்கணும். நாம பேசுறதுதான் இலக்கியம். அவங்க சாதி ஆளுங்க எழுதுறதுதான் இலக்கியம்.முற்போக்கா இருக்கணும். ஆனா அது நம்ம சாதி ஆளா இருக்கணும் இல்லியா…. மற்றவங்க இப்படி இருக்கலாம் செண்பா… ஆனா கம்யூனிஸ்டுன்னு தன்னைச் சொல்லிக்கிற ஒருத்தன் இப்படி இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது…”.

“சரி, நான் கேட்கேன்னு கோவிச்சுக்காத. எனக்கு கம்யூனிசம் கத்துக் கொடுத்தவரு அவரு. நீயும் வா, போய் ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடலாம். நீ அவர மன்னிச்சி விட்ரு….” என்றாள்

“ஓ உனக்கு கம்யூனிசம் வேற தெரியுமா?” என்று சிரித்தவன்,“நான் எதுக்கு வரணும். அவர் எப்போ சாகிறாரோ அப்போ சொல்லு. முடிஞ்சா வர்றேன்” என்றபடி அங்கிருந்து கிளம்பி விட்டேன். கடல் பார்க்கச் சென்றேன். மீண்டும் சென்னைக்குத் திரும்பி விட்டேன். அந்த நினைவுகள் எதுவும் இல்லை.

arulezhilan@gmail.com