உலகம் எங்கும் நோர்டிக் மாடல் என்பது மிக பிரபலமான வார்த்தை. நோர்டிக் மாடல் என்பது மக்கள்நல திட்டங்களால் ஆன அரசின் திட்டங்களைக் குறிப்பது. இதில் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து நாடுகளை உள்ளடக்கிய மாடல். இதன் தொடக்கம் 1930இல் இருந்து ஆரம்பித்து இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வளர்ச்சி அடைந்த மாடல். நார்வேயின் அரசியல் அமைப்பு கூட்டாட்சி  பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது.

வலுவான சமத்துவ மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. குடிமக்கள் அதிக வரி செலுத்துவதைக் கொண்டு சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற பொது நல சேவைகள் உரிமையாக (இலவசம்) வழங்கப்படுகின்றன

நோர்டிக் நாடுகள் அனைத்தும் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.

  • பிரதிநிதித்துவ ஜனநாயகம்
  • சமத்துவ மதிப்புகள்
  • பொதுச் சேவைகளுக்குச் செலுத்துவதற்கு அதிக அளவிலான வரிகளை விதித்தல்
  • நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்களுக்கு உயர் தரமான சேவைகளை வழங்குதல்
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு விகிதம்
  • உள்நாட்டு உற்பத்தியில் 20% வரை உள்ளூராட்சிச் செலவுகளுக்கு ஒதுக்கப்படுதல் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது
  • நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குடிமக்களுக்கு சமமான தரத்துடன் உயர் மட்ட சேவைகளை வழங்குவதே தேசிய நோக்கமாகும்.

 

அரசியல் கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் பாரம்பரியமாக இதற்குப் பரந்த அரசியல் ஆதரவு உள்ளது

உள்ளூர் அரசாங்கத் துறையானது தேசிய சூழலில் வலுவானது மற்றும் முக்கியமானது. உள்ளூர்க்கு தான் நீங்கள் இங்கே அதிக வரி செலுத்துவீர்கள்.

நார்வேயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9% உள்ளூர் அரசாங்கங்களுக்கு செலவிடப்படுகிறது. நார்வே நாட்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% உள்ளூர் அமைப்புகள்  மூலம் கிடைக்கிறது .நார்வேயில் உள்ள வேலை பார்க்கும் நபர்களில் ஐந்தில் ஒருவர் உள்ளூர் அரசாங்கத் துறையில் பணியாற்றுகிறார்.

நார்வே நாடு முழுக்க 11 கவுண்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 11 கவுண்டிக்களில் மொத்தம் 356 முனிசிபாலிட்டிகள் செயல்படுகின்றன.

 

 

கவுன்டிக்களின் பொறுப்புகளாக

 

  • இள நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி
  • பிராந்திய வளர்ச்சி
  • மாவட்ட சாலைகள் மற்றும் பொது போக்குவரத்து
  • பிராந்திய திட்டமிடல்
  • வணிக வளர்ச்சி
  • கலாச்சாரம் (அருங்காட்சியகங்கள், நூலகங்கள், விளையாட்டு)
  • கலாச்சார பாரம்பரியம்
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

வரையறுக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், உங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் செல்ல பஸ்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் உங்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பேசினால் போதும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படித் தான் செயல்படுகிறது நோர்டிக் மாடல்.

 

மத்திய அரசின் பொறுப்புகள்

  • தேசிய காப்பீட்டுத் திட்டம்
  • சிறப்பு சுகாதார சேவைகள் (மருத்துவமனைகள்)
  • உயர் கல்வி/பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் சந்தை, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்
  • தேசிய சாலை நெட்வொர்க், ரயில்வே, விவசாயப் பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
  • போலீஸ், நீதிமன்றங்கள், சிறைகள், ஆயுதப்படைகள், வெளியுறவுக் கொள்கை
  • சிறப்பு சமூக சேவைகள்.

முனிசிபாலிட்டிக்களின் பொறுப்பாக

  • ஆரம்ப மற்றும் கீழ்நிலைப் பள்ளி
  •  நர்சரிகள்/மழலையர் பள்ளி
  • ஆரம்ப சுகாதாரம்
  • முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு, சமூக சேவைகள்
  • உள்ளூர் திட்டமிடல், விவசாயப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், உள்ளூர் சாலைகள், துறைமுகங்கள்
  • நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் கழிவுநீர்
  •  கலாச்சாரம் மற்றும் வணிக மேம்பாடு

உங்கள் ஊரின் துறைமுகத்தை உங்கள் பேரூராட்சியே நிர்வகித்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள்.

 

5 லட்சம் க்ரோனர் சம்பாதிக்கும் குடிமகன் ஒருவர் உள்ளூர் வரியாக 36,332, கவுண்ட்டி வரியாக 7,963, கூட்டு வரியாக 28,701, படி வரியாக 10,602, சமூக வரியாக 40,000 ஆக மொத்தம் 123,598 செலுத்துவர்.

 

 

இதில் சமூக வரி என்பது கல்வி, சுகாதாரம் மற்றும் பொது சேவைகளுக்குப் பயன்படும். எடுத்துக்காட்டாக திடீர் என்று வேலை இழப்பு நிகழ்ந்தால் உங்களின் கடைசி சம்பளத்தில் 66.3%த்தை அரசு உங்களுக்கு வேலையில்லா நல தொகையாக 1 வருடம் வரை வழங்கும். இப்போது வரை நோர்டிக் நாடுகளில் அரசு வேலைகளில் அனைத்து மக்களின் பங்களிப்பை உறுதி செய்ய அனைத்து தகுதியான ஆட்களிலும் குறைந்தபட்சம் ஒரு பெண்,ஒரு புலம்பெயர் பின்னணியைச் சார்ந்தவர்கள் அழைக்கப்படுவார்கள். இதனால் எல்லா விதமான வேலைகளிலும் எல்லா விதமான ஆட்களின் பங்களிப்பை உறுதி செய்ய முடியும்.

 

இந்த மாடலுக்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை என்ன என்பதை அடுத்த இதழில் காண்போம்