சலீம் தலைமையாசிரியர் அறையில் தன்  அத்தாவோடு நின்றிருந்தான். அவர் உத்தமபாளையம் பிடிஆர் காலனியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். கடையின் பெயர் கூட அவனுடையதுதான்.தனிமையில் இருக்கும் போதெல்லாம் அவன்  அடிக்கடி’ சலீம் சைக்கிள்ஸ்’ என்று சொல்லிப் பார்த்துக் கொள்வான். சரவணக்கனி சார் முன்பெல்லாம் அவனை ‘சலீம் ஜஹாங்கிர் பாதுஷா’ என்று செல்லமாக அழைப்பார். அவர் அனார்கலி கதை சொன்ன நாளிலிருந்து பசங்களெல்லாம் ‘ சலீமு யாருடா ஒன் அனார்கலி? ‘ என்று ஓட்டுவார்கள்.அப்படிக் கேட்ட உடனே அவன் நினைவுக்கு வந்த சிறுமிகள் எல்லாம் மூக்கு ஒழுகியபடி அவனைப் பார்த்துச் சிரித்தபடியே மறைந்தார்கள். சார் நாடகம் போல் நடித்துக் காட்டினாரே அனார்கலி கதையை. இதோ இவள்களிடம் பேசினால் ‘ ஏ ! மூக்கொழுகி அனார்கலி ! இதோ இந்த வெளக்குமாத்துக் குச்சியைப் பிடித்தபடி முக்காலியில் சீட்டிப் பாவாடையைச் சுருட்டியபடி அமர்ந்து ராஜ்ய பரிபாலணம் செய். எட்டுச் சீமையையும் கட்டி ஆளும் ஷா இன்ஷா அக்பர் சக்ரவர்த்தியின் செல்ல மகன் சலீம் சற்று நேரம்  முள்காட்டுப் பக்கம் ஒதுங்கி விட்டு  வருகிறேன்.’ என்றல்லவா அபத்தமாக உளற வேண்டியதிருக்கும்.  எல்லாம் ஆறாம் வகுப்போடு போய் விட்டது. ஏழாம் வகுப்புக்கு வந்ததில் இருந்து சலீம் வேறு ஆளாகி விட்டான். சலீமுக்குள் நிகழ்ந்த மாற்றங்களை சலீமாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா ஆசிரியர்களும் அவனை எதிரி போல் பாவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தலைமையாசிரியர் அவனைக் கண்ட உடனே  அடித்து விட்டுத்தான் பேசவே ஆரம்பிக்கிறார். ‘ எல்லாம் அவனுஹலால் வந்தது ‘ சலீமுக்கு அந்த மூணு பேரை நினைத்ததுமே பற்றிக் கொண்டு வந்தது. ‘ அவனுஹ ஊர்லயே ஏழாப்பும் படிக்க வேண்டியதுதானே ? இங்க ஏன் வந்தானுஹ மணியாட்டிக்கிட்டு ? அந்த ஊருக்குப்  பேரு கூட நல்லா இல்ல. ‘குறும்ப பட்டியாம் குறும்பபட்டி . வெளக்குமாத்துப்பட்டி. ‘

”ஏய்  இங்க பார்றா .ஏண்டா இப்பிடி பண்ண ?”

தலைமையாசிரியர் இக்பால் பிரம்பை ஆட்டிக் கொண்டே அவன் முன்னால் நின்றார். அவரை அந்த நிமிடத்தில் பார்க்கும் போது கறிக்கடை முஸ்தபாத்தா மாதிரியே இருந்தார். அந்தப் பிரம்பு கூட கத்தி மாதிரி காட்சியளித்தது. தன்னை குர்பானி ஆடாக உணர்ந்தவுடன் கண்ணீர் துளிர்த்தது.

‘ ம்ஹூம் இவன் சரிப்பட மாட்டான். நீங்க டிசிய வாங்கிட்டு கூட்டிட்டு  போய் குண்டியமிக்கி ஒக்கார வச்சு சைக்கிள்  தொடைக்க விடுங்க. அப்பத்தே உருப்படுவான். ‘

அவர் சொல்லி முடிப்பதற்குள் சேட்டின் கைகள் சலீமின் முதுகில் இடியாய் இறங்கின . வலி தாளாமல் ‘ எம்மோ ‘ ‘ எம்மோ ‘ ‘ எம்மோ கொல்றாஹகளே ‘ என்று கத்தினான்.

‘கல்லூளி மங்கன். வாயத் தொறக்குறானா பாரு?விட்டா ஊரையே முழுங்கி ஓசி  ஏப்பம் விட்ருவான். என்னா சரவணக்கனி இவனுக்கு டிசி கொடுத்திரலாமா ?’

‘………………….’

‘என்ன பேச மாட்டீங்கிறீங்க ? நீங்கதான  வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணீங்க..’

‘ இல்ல சார்..படிக்கிற பையதே. இந்த வருஷம் என்னா ஆச்சுன்னே தெரியல. ஆளே மாறிட்டான். எனக்கே ஆச்சர்யமா இருக்கு. புரட்டிப் போட்ட பாம்பு மாதிரி எங்கண்ணுக்கே இப்ப இவன் வேறொருத்தனா தெரியிறான். ஒரு சான்ஸ் வேணா  கொடுத்துப் பாப்போம். ‘

‘ இந்த ஆறு மாசத்துல இது பத்தாவது சான்ஸ் . ‘

‘ ஆமா சார் ….’

சரவணக்கனி சார் தலைமையாசிரியரிடம் என்னவோ  பேசிக் கொண்டிருந்தார். அவன் அந்தச் சொற்களைக் கவனிக்கவில்லை. அவர் குரலைக் கேட்கக் கேட்க தன்னையுமறியாமல் அழுகை வந்தது.

சம்பவம் நேற்றுதான் நடந்தது. சார் இரண்டாவது பீரியட் முடியும் போது  ‘ ரீசஸ் பீரியட் முடிஞ்சதும் பேப்பர் தர்றண்டா. அடுத்த பீரியடும் நாந்தே. கணக்கு நடத்துணும்டோய் ‘ என்று சொல்லிக் கொண்டே அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை மேசையில் வைத்திருந்தார். சலீம் அதுவரை அப்படி யோசிக்கவில்லை. ஆனால் விடைத்தாள்களைப் பார்த்ததும் சமீப காலமாய் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்  குறுக்குப் புத்தி வேலை செய்யத் தொடங்கி விட்டது. சார் எப்படியும் ரீசஸ் பீரியடில் தம்மடிக்க மரத்தடிக்குப் போய் விடுவார் என்று தெரியும். எல்லோரும் ஹோவென்று கத்தியபடி வகுப்பறையை விட்டு வெளியேறினார்கள். ஒரு நிமிடம் காத்திருந்தவன் நேராக மேசையருகே சென்று விடைத்தாள்களை அவசர அவசரமாகப் பிரித்தான்.  நரசிம்மன் பேப்பர் நாலாவதாக இருந்தது. அவன்தான் எப்போதும் கிளாஸ் ஃபர்ஸ்ட். ‘ எப்புர்றா எல்லா பாடத்துலயும் தொண்ணூறுக்கு மேல எடுக்கிற? ‘ என்று யாராவது கேட்டால்  ‘நாங்க ஐயர்றா. எங்களுக்கு மூளை ஜாஸ்தி ‘ என்று பெருமையடிப்பான்.  ‘ நம்ம வீட்ல நம்மள படிக்க விடாம கடை கண்ணிக்கு போகச் சொல்லிட்டே இருக்காங்கள்லடா. அவங்க வீட்ல  அப்பிடிலாம் இல்ல.எல்லாம் படிச்சவங்க. வேலை சொல்லாம உக்கார வெச்சு சொல்லி வேற தருவாங்க. ஹார்லிக்ஸூம் , பூஸ்டும் ஆத்தித் தந்து தனி ரூம்ல சொல்லிக் கொடுத்தா நான்லாம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுப்பன்டா ‘ என்று ராஜேஸ்தான் உடனே பதிலடி தருவான். ஆறாம் வகுப்பு படிக்கும் போது சலீமுக்கும் ,நரசிம்மனுக்கும்தான் போட்டி. இப்போதுதான் எல்லாம் மாறி விட்டதே. எல்லாம் அந்த மூணு பேரால். சலீம் நரசிம்மனின் பேப்பரை எடுத்து முத்துராசுவின் பையில் வைக்கும் போது ஜன்னலில் நிழல் தெரிந்தது. ‘ ஐய்யய்யோ முத்துமணி ‘ என்று சலீம் பதறினான். முத்துமணிக்கு ‘கோள்மூட்டி வாயன் ‘ என்கிற பட்டப்பெயருண்டு. யாராவது குஞ்சை ஆட்டிக் கொண்டே காம்பவுண்டுச் சுவரில் படம் வரைவது போல் ஒண்ணுக்கடித்தால் கூட ஏதோ உலகப் போர் ரேஞ்சுக்கு வாத்தியாரிடம் போய் வத்தி வைப்பான். இதையா விடப்போகிறான் ?’ சார் இங்க பாருங்க’ என்று அவன் கத்திய கத்தலில் சரவணக்கனி சார் ஜன்னலோரம் வந்து விட்டார். கையும் களவுமாகப் பிடிபட்டதால்தான் இந்த நிலைமை. அரைமணி நேரமாக  மொண்டிங்கால் போட்டதில் கால்கள் எரிந்தன.சரவணக்கனி சார் அவன் மீது சாக்பீஸை எறிந்து விட்டு வெளியேறினார். சலீம் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தான்.

அவனுக்கு சரவணக்கனி சாரை ரொம்பவும் பிடிக்கும். அவர் பாடம் நடத்தும் விதம் அவ்வளவு அழகாக இருக்கும். முதன்முதலில் பெரியார் என்கிற பெயரை அவர் மூலமாகவே அறிந்தான். தாடி வைத்து, கருப்புச் சட்டை போட்ட ஒரு மனிதரின் படத்தைக் காட்டி  ‘ இவரு இல்லன்னா நீங்கள்லாம் படிக்க வந்திருக்க மாட்டீங்க. டீயாத்திக்கிட்டோ , சைக்கிள் தொடச்சுக்கிட்டோ , பலசரக்கு கடைல பொட்டணம் மடிச்சுக்குட்டோ இருந்துருப்பீங்க. நானும் கூட ஆடு மேச்சிட்டுதே இருந்திருப்பீ.. பேக் ..பேக்..பா…பா..பா ‘ என்று விநோதமாகக் குரல் எழுப்பி ஆடு மேய்க்கிற மாதிரியே செய்து காட்டினார். வகுப்பறையே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

‘ சார் நீங்க ஆடெல்லாம் மேப்பீங்களா ?’

‘ ஆமாடா. எங்கப்பாரு ஆடு மேச்சவருதே. நானே சின்ன புள்ளைல மேச்சிருக்கேன்.’

‘ லே நிசமாவாடா. ‘

‘ ஆமாடி. ஸாரு குறும்பக் கவுண்டர். ‘

‘ எவண்டா அது ..’சார் சாக்பீஸை தூக்கி எறிந்தார்.

‘ சார் இவனுஹ ஜாதி பேசுறானுஹ சார் ‘ நரசிம்மன் பவ்யமாக எழுந்து அவர்களை நோக்கிக் கண்காட்டினான்.

‘ எல்லா எனக்குத் தெரியும் . நீ மூடிட்டு ஒக்காரு. ‘

நரசிம்மன் முகம் சுருங்கிப் போயிருந்தது. அன்று ரீஸஸ் பீரியடில் சாரைத் திட்டிக் கொண்டிருந்தான்.கூடவே பெரியாரையும்  திட்டிய போது ராஜேஸ் ‘ ஐயரே மணியாட்டறப்ப எதுக்கு நீசபாஷை  ? என்று கேட்கவும் எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

ஏழாம் வகுப்பில்தான் அவர்கள் மூன்று பேரும் இந்தப் பள்ளிக்கு வந்தார்கள். அவர்கள் சார் ஊருக்குப் பக்கத்து ஊர். உ. அம்பா சமுத்திரம் என்பது அந்த ஊரின் பெயர். ஆனால் எல்லோரும் ‘ குறும்ப பட்டி ‘ என்றுதான் செல்வார்கள்‌ . மூவரில் வளத்தியாய் இருக்கும் முத்துராசுவிடம் சார்’ எந்த ஊர்றா ?’ என்று கேட்ட போது ‘ உ. அம்பா சமுத்திரம் ‘ என்று கை கட்டியபடியே சொன்னான்.  ‘அம்பா சமுத்திரம்.பாப்பா மூத்திரம் ‘ என்று ராஜேஸ் சொன்ன போதும் மூவரைத் தவிர வகுப்பே சிரித்தது. சாரும் சேர்ந்து சிரித்து விட்டு ‘ எலேய், தல வெடிச்ச பயலே..உன் ஊரு சின்னமனூரு..அப்ப அது என்ன சின்ன எமனூராடா ?’ என்று கேட்க ‘ இருக்கலாம் சார். ஹெச். எம். ஊரும் அதானே ‘  என்றான். வகுப்பே ஹோவென்று கத்தியது. சார் வழக்கம் போல் சாக்பீஸை அவன் மேல் எறிந்து விட்டு கரும்பலகைப் பக்கம் திரும்பி விட்டார்.

வந்து ஒரு மாதத்திற்குள் மூவரையும் சலீமுக்குப் பிடிக்காமல் போனது. முத்துராசு நல்ல வளத்தி. பெரும்பாலும் குனிந்தேதான் நிற்பான். நிமிர்ந்து யாரையாவது பார்க்கிற போது மரத்திலோ, சுவரிலோ உட்கார்ந்தபடி காக்காய் பார்ப்பதைப் போல் தலை சாய்த்துப் பார்ப்பான். மது கருப்பாக வழவழப்பான முகத்தோடு இருந்தான். அவன் பேசினால் தூக்குவாளிக்குள் கல்லைப் போட்டு குலுக்குவது மாதிரி இருக்கும். பிச்சையும் கருப்புதான். ஆனால் மதுவின் வழவழப்பு அவனிடம் இருக்காது. அவன் நெற்றியில் பெரிய தழும்பு உண்டு. ‘சண்டைல ஒர்த்தன்  கல்லைக் கொண்டி எறிஞ்சப்ப வந்தது ‘ என்பான். மூவரும்  ஆரம்பத்தில் சலீமின்  பக்கத்தில்தான் உட்காரந்திருந்தனர். வந்த புதிதில் சலீம் அவர்களோடு நன்றாகப்  பேசிக் கொண்டுதான் இருந்தான். ஒரு தடவை முத்துராசு அவனுக்கு தொக்கெல்லாம் கொண்டு வந்தான்.’ தொக்குத் திண்ணி கவுண்டனும் மாடு தின்னி ராவுத்தனும் ஒண்ணா அலையுறானுஹடா ‘ என்று விஜயகுமார் கூட கிண்டலடித்திருக்கிறான். ஆனால் ஒரே மாதத்தில் சலீம் அவர்களை ஒரேடியாக வெறுத்ததன் மர்மம் யாருக்கும் விளங்கவில்லை. அவர்கள் பக்கத்தில் கூட உட்காராமல் வேறு இடத்தில் அமர்ந்து கொண்டான். சார் வந்து கேட்ட போது ‘ அவனுஹ மேல ஆட்டுப் புழுக்க வாட வருது சார் ‘ என்றான். அன்றுதான் அவனை சரவணிக்கனி சார் முதல்முறையாக அடித்தார். அவர் முதல் அடி அடிக்கும் போது பிரமை பிடித்த மாதிரி சலீம் நின்றான். ‘ சாரா என்னை அடிப்பது ? ‘ . அதற்குப் பிறகு அவன் தற்காப்புக்காக விலகக் கூட இல்லை. ‘ இதற்கு மேல் என்ன ஆக வேண்டும்?.என்னைக் கொலை கூட செய்து கொள்’ என்கிற பாவனையில் அப்படியே நின்றான். சார் அடித்து ஓய்ந்து விட்டு சாக்பீஸை அவன் மீது எறிந்து விட்டுப் பெருமூச்சோடு வெளியேறினார்.

அதற்குப் பிறகு அவர்கள் மீதான வன்மம் இன்னும் கூடியது. பையில் தவளையைப் போடுவது , ரீசஸ் பீரியடில் டிபன் பாக்ஸ் சோற்றை எடுத்துக் கொட்டி விடுவது , சோத்துக்குள் கரப்பான் பூச்சியை விடுவது,பின்னால் உட்கார்ந்து  காம்பஸில் குத்துவது, டெஸ்கில் குப்பையைப் போடுவது என்று என்னென்னவோ செய்தான். ஒரு முறை காம்பவுண்டுச் சுவரில்

‘மது 9
பிச்சை 999
முத்து ராசு 99999999

என்று கரிக்கட்டையால் எழுதும் போது ஹெச். எம்.மே பார்த்து விட்டார். அவனுடைய சீருடை கிழிந்தது அன்றுதான். துரத்தித் துரத்தி அடித்து விட்டுக் கடைசியாகக் கேட்டார் ‘ ஒம்போதுன்னா என்னன்னு தெரியுமாடா ஒனக்கு? குஞ்சைப் பிடிச்சு ஒண்ணுக்குப் போறப்பவே சொவரு எட்டாம டவுசரை நனைக்கிற வயசில உனக்கெல்லாம் ஒம்போது , உஸ்ஸூன்னு பேச வருது ‘. அவர் அவ்வளவு அடித்த போதும் சலீம் அழுகாமல் நின்றிருந்தான். சரவணக்கனி சார் அன்றிலிருந்துதான் அவனோடு பேசுவதைச் சுத்தமாக நிறுத்தியிருந்தார். அவனிடம் கேள்விகளே  கேட்பதில்லை. விடைத்தாள்களைக் கூட இன்னொருவனிடம் கொடுத்துதான் தரச் சொன்னார். வருகைப் பதிவேடு எடுக்கிற போது நிமிர்ந்து பார்த்து விட்டு பெயரை விளிக்காமல் ஆஜர் போட்டு விடுவார். சலீமால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் பெயரையே  திரும்பத் திரும்ப எழுதியிருந்த  நாலு கோடு நோட்டை வாய்க்காலில் வீசி எறிந்து விட்டு குமுறிக் குமுறி அழுதான். இந்த மாற்றம் வேறு விதத்தில் வீட்டிலும் பிரதிபலிக்க அத்தா அவனைத் துவைத்தெடுத்தார்.ஆறாம் வகுப்பு படிக்கிற போது  முதலிடமோ , இரண்டாவது இடமோ வந்த சலீம் இப்போது அனைத்துப் பாடங்களிலும் ‘ ஜஸ்ட் பாஸ் ‘ ஆகிற அளவுக்கே படித்தான். அவனுடைய குணக்கேடுகள் அனைத்திற்கும் அந்த மூவர் மீது  கொண்ட வெறுப்புதான்  காரணம் என்று அவன் வகுப்புத் தோழர்களுக்கும் , சாருக்கும் மட்டுமே தெரியும். அவர் ஹெச். எம். மிடமோ , சலீமின் அத்தாவிடமோ இதைச் சொல்லவேயில்லை.

‘ ஏன் சார் இவன் திடீர்னு கோட்டி புடிச்ச மாதிரி ஆயிட்டான் ?’

என்று ஹெச். எம். கேட்டதற்கு ‘ வயசு சார். மீன ராசிக்காரங்களுக்கு இந்த வயசுல செவ்வாய் வக்ரமா வேலை செய்யும்.  ‘ என்று சம்பந்தமேயில்லாமல் பதில் சொன்னார்.

‘ சரவணக்கனி!  என்னா இது? விட்டா வேலைய ரிசைன் பண்ணிட்டு ஒரு கிளியைப் புடிச்சுட்டு போயி பஸ் ஸ்டான்ட்ல உக்காந்திருவீஹ போல.ஜோஸியமும் மண்ணுந்தே.அதெல்லாம் ஒரு பலாவும் இல்ல. எல்லாம் சினிமா செய்ற வேலை.
‘பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
புக்ஸை எல்லாம் நீ சுமந்தா பாவமடின்னு ‘ இல்ல பாட்டெழுதி ஊரைக் கெடுக்கிறானுவ. எல்லாம் காலக் கிரஹம்.  சரி தம் இருக்கா பாக்கெட்ல? ‘

அது அரசுப் பள்ளி என்பதால் அவ்வப்போது ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நிகழும். சரவணக்கனி சாரை திண்டுக்கலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு ஊர்ப்பக்கம் மாற்றியிருந்தார்கள். அவரே வகுப்புக்கு கலங்கிப் போய்தான் வந்தார். ‘ டேய் கவனிங்க. சாரு நாளைல இருந்து வர மாட்டேன். டிரான்ஸ்ஃபர்டா.அதாவது வேற ஸ்கூலுக்கு….’ பாதியிலேயே குரல் உடைந்தது.மேஜையை நோக்கித்  தலையைக் கவிழ்ந்தபடி மௌனமாக  உட்கார்ந்து கொண்டார். ‘ சார் ..சார் ..சார் ‘ அழுகையும் கூப்பாடுமாக மாணவர்கள் அவரை நோக்கி வந்தார்கள். பலரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். ‘ சார் எங்கப்பாட்ட சொல்லி என்னையும் ஒங்க ஸ்கூல்ல சேர்க்க சொல்லுங்க சார்’, ‘ சார் நாங்க விட மாட்டோம் சார். பஸ்ஸை மறிச்சு ஸ்ட்ரைக் பண்ணுவோம் ‘, ‘ சார் ஹெச். எம்ட்ட போக முடியாதுன்னு சொல்லுங்க  சார் ‘, ‘ சார் யாரு சார் மாத்துனா? ஜெயலலிதா மேடமா?. இதுக்குதேன் சார் எங்கப்பா கலைஞருக்கு ஓட்டுப் போட்டாரு. கலைஞரு ஜெயிச்சிருந்தா நீங்க இங்கயே இருந்திருப்பீங்க சார் ‘ .மற்ற நேரமாக இருந்திருந்தால் சார் வெடித்துச் சிரித்திருப்பார். அன்று ஏனோ அமைதியாக இருந்தார்.

ராஜேஸ் அவரருகே போய் சில நிமிடம் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அப்படியே நின்றான் . கமறழான குரலில் ‘ அது என்ன ஊரு சார். கே‌ . புதுக்கோட்டையா ? கொடுத்து வச்ச பசங்க சார். ‘

முத்துராசு , மது , பிச்சை மூவரும் பெருங்குரலெடுத்து கன்னடத்தில் அரற்றினார்கள். சார் அவர்களை முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தினார்.

‘ சார் பெரியார் பத்தி நடத்துறப்ப மாடு மேச்சு காமிச்சீங்கள்ல. அத இன்னொராட்டி செய்ங்க சார் ‘

சட்டென்று சாருக்கு சிரிப்பு வந்து விட்டது. கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து நின்று நீண்ட நேரம் பல்வேறு பாவனைகளுடன் அதைச் செய்து காட்டினார்.

‘ சரிடா எல்லோரும் என் வகுப்பை பத்திப் பேசி எனக்கு விடை கொடுங்க .’

சலீம் அதுவரை அவர் அருகிலேயே செல்லவில்லை. முதல் டெஸ்கில் அமர்ந்தபடி நடப்பவற்றையெல்லாம் பிரமை பிடித்தது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ சலீம் ஒன் கோவம் இன்னும்  போலையா. நீ ஆரம்பிடா ‘

சலீம் திரும்பி அந்த மூன்று பேரையும் பார்த்தான். அவர்கள் இவனைக் கவனிக்கக் கூடத் தெம்பில்லாமல் கன்னடத்தில் அரற்றிக் கொண்டிருந்தனர். சார் அவர்களோடு முதன்முதலாக கன்னடத்தில் பேசிய போது நாற்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பறையில் தானடைந்த தனிமை உணர்வின் நொடிகள் நினைவுக்கு வந்தன. தன் வன்மத்தின் விதை கண்டிப்பாக அந்தத் தருணத்தில்தான் மனதில்  ஊன்றப்பட்டிருக்க வேண்டும்

வகுப்பே இப்போது சலீமை உற்றுப் பார்த்தது. சலீம் உதடுகள் துடிக்க சாரையே பார்த்தபடி மெதுவான குரலில்

‘ அயோக்லு மாதிரி கன்னடா சென்னங்க மாத்தாடாக்க நங்கனு ஏலி கொடண்டா ‘

சரவணக்கனி சாருக்கு பேச்சே வரவில்லை. அவனையே உற்றுப் பார்த்தார். தன் முன்னால் இருப்பது பனிரெண்டு வயதுச் சிறுவனல்ல ; பால்குடி மறக்காத குழந்தை என்று தோன்றியது. அந்தக் குழந்தை சொல்ல முடியாத ஏக்கத்தோடு கைகளை நீட்டியபடி தன்னை நோக்கி தத்தித் தத்தி வருவதைப் போல் இருந்தது. வகுப்பறை , கரும்பலகை , பள்ளி யாவுமே ஏதோ ஒரு மாய சுழற்சியில் மறைய தானும் , அவனும் மட்டுமே அந்தரத்தில் நிற்பது போலிருந்தது.

‘ ச..லீ…’

‘சார் ஒங்களை ஹெச்.எம். ஒடனே வரச் சொன்னார் ‘

நாகேந்திரன் அண்ணன் அழைத்ததும் சரவணக்கனி ஒரு நிமிடம் நின்று அவனையே பார்த்தார்.’ ஏனா கிறுக்கானு மாதிரி ஈங்க மாடிசாட்டவே ‘ என்று செல்லமாகத் திட்டி விட்டு வழக்கம்போல் சாக்பீஸை எறிந்து விட்டுப் போனார். அவர் கண்கள் கலங்கியிருந்தது போல் காட்சியளித்தன அல்லது சலீம் அப்படிக் கற்பனை செய்து கொண்டான்.

சார் வெளியேறியதும் சலீம் திரும்பிப் பார்த்தான்.  முத்துராசு குழப்பத்தோடு சலீமை  நோக்கித் தன் வழக்கமான காக்கைப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். சலீம் மென்மையாகப் புன்னகைத்தான். ஒரு நொடி தயங்கிய முத்துராசு கள்ளமில்லாமல்  சலீமைப் பார்த்துச் சிரித்தபடியே பழம் விட்டான்.

ஓங்கி ஒலித்த மணிச்சத்தத்தை துணைக்கழைத்துக் கொண்டு  பிள்ளைகள் சரவணக்கனி சாரைப் பார்க்க பறப்பது போல் ஓடிக் கொண்டிருந்தார்கள்.