சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், கால்பந்து வீராங்கனை பிரியா என்ற பெண்ணிற்கு கால் மூட்டில் செய்யப்பட்ட அறுவைசிகிச்சையில் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார். ஏராளமான நம்பிக்கைகளுடன் இருந்த ஓர் இளம் வீராங்கனையின் திடீர் இழப்பில் ஒட்டுமொத்த மாநிலமே வேதனையும் அதிர்ச்சியும் கொண்டது. அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது, எந்த ஆறுதலும், இழப்பீடுகளும் அவர்களின் இழப்பை ஈடுசெய்து விடாது. இந்த நேரத்தில் ஒட்டு மொத்த சமூகமாக நாம் எல்லோரும் அவர்களுடன் நிற்க வேண்டியது நம்முடைய கடமை.

இந்த சூழலைப் பயன்படுத்தி சில தீய சக்திகளும், சுயநலக் கும்பல்களும் அரசியல் உள் நோக்கத்திற்காக தமிழக மருத்துவக் கட்டமைப்பையே பலவீனமானது என்றும், அரசு மருத்துவர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் எனவும், அதற்காகத்தான் நீட் தேர்வு தேவை எனவும் பிரச்சாரம் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல; இப்படிப்பட்ட கடினமான சூழலைக் கூட தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்களது நோக்கங்களை நாம் புரிந்து கொண்டு அதைப் பொருட்படுத்தாமல் விலகிச் செல்ல வேண்டும். ஏனென்றால் மிகவும் வலிமையான தமிழக மருத்துவக் கட்டமைப்பைக் குலைத்து, அதை வட இந்திய மாநிலங்களைப் போல தனியாருக்குத் தாரை வார்க்கும் தங்களது நோக்கத்திற்காக இது போன்ற சம்பவங்கள் ஏதும் கிடைக்காதா என காத்துக்கிடக்கும் அவர்களுக்கு நாம் எந்த வகையிலும் வாய்ப்பினை வழங்கிடக் கூடாது. நடந்த சம்பவம் நிச்சயம் வருத்தமும்,வேதனையுமளிக்கக்கூடியதே. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இது ஓர் அரிதிலும் அரிதான சம்பவம். இதை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த மருத்துவத்துறையும் சரியல்ல, அரசு மருத்துவர்களுக்குத் திறமையில்ல என்று சொல்வது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

என்ன நடந்தது?

பிரியா பத்தொன்பது வயது கால்பந்து வீராங்கனை. வட சென்னைப் பகுதியைச் சேர்ந்தவர். பொதுவாகவே விளையாட்டு வீரர்களுக்கு வரக்கூடிய பிரச்சினையான மூட்டின் ஜவ்வு நார் கிழிவது அவருக்கும் வந்திருக்கிறது. ஜவ்வு நார் கிழிவது என்பது அத்தனை வலி நிறைந்தது, காலை மடக்குவதிலும், நடப்பதிலும் கூட நிறைய சிரமத்தைக் கொடுக்கக்கூடியது. அதற்கான சிகிச்சை முறையான ஜவ்வு நாரைத் தைப்பது. ஆர்த்ராஸ்கோப்பி என்னும் நுண்துளையிட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையினால் செய்யப்படும். பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்களில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, தங்களது வீட்டிற்கு அருகே உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலேயே இலவசமாக செய்யப்படுகிறது என்பதை அறிந்து அங்கு சிகிச்சைக்காக பிரியா அனுமதிக்கப்படுகிறார்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனை, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனை. அங்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்துதான் பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்கு செயல்படத் தொடங்கிருக்கிறது. அது முதல் அங்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கின்றன, பிரியாவிற்கு செய்யவிருக்கும் ஆர்த்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் பல பேருக்குச் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. பிரியாவும் அதே போல வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் நண்பர்களுக்கு “இன்னும் பலமாக மீண்டு வருவேன்” என்று பகிர்ந்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு சென்றார்.

பொதுவாகவே, கால் மூட்டில் ஆர்த்ராஸ்கோப்பி சிகிச்சை செய்யும் போது, ரத்த இழப்பைக் குறைப்பதற்காக கால் மூட்டிற்கு மேலாக டோர்னிக் என்ற பாண்டேஜைக் கொண்டு ரத்த ஓட்டத்தை தடுப்பார்கள். ஒரு அறுவை சிகிச்சை எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் பொறுத்து இந்த பாண்டேஜ் எப்போது எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்வார்கள், ஏனென்றால் நீண்ட நேரம் ரத்த ஓட்டத்தை எந்த இடத்திலும் நாம் தடுக்கக்கூடாது. அன்றும் பிரியாவிற்கு அறுவை சிகிச்சைக்கும் முன்பு பாண்டேஜ் கட்டப்படுகிறது. பிறகு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுகிறது, ஜவ்வு நார் மிக நன்றாக தைக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறித்த நேரத்தில் கழட்ட வேண்டிய பாண்டேஜ் கழட்டப்படாமல் விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்து வார்டிற்கு சென்ற பிறகும் கூட டோர்னிக்கை யாரும் கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வலி அதிகமாகவே பிரியா அங்கிருந்து செவிலியரை அழைத்துச் சொன்ன பிறகுதான் செவிலியர் சென்று பார்க்கிறார், டோர்னிக் கழட்டப்படாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஆனால் அதற்குள் இரத்த ஓட்டம் தடைபட்டதால் கால் நசிவடைய தொடங்கியிருக்கிறது. அதன் பிறகு பிரியா அவசர அவசரமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். கால் நசிவடையத் தொடங்கினால் அதிலிருக்கும் நஞ்சு உயிரை பாதிக்கும் என்பதால் உடனடியாக ஒரு கால் அகற்றப்படுகிறது. ஆனாலும் அதற்கு முன்பே உடல் விபரீத நிலையை அடைந்திருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து அடுத்த நாள் பிரியா மரணமடைந்திருக்கிறார்.

டோர்னிக் கழட்டாமல் விட்டதுதான் இறப்பிற்குக் காரணம் என்ற முதல் கட்ட செய்தி உறவினர்களுக்குச் சொல்லப்பட்டவுடன், அவர்கள் பெரியார் நகர் மருத்துவர்களுக்கு எதிராக போராடத்தொடங்குகிறார்கள். உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சருக்கு விவரம் சொல்லப்பட அவர் பெரியார் நகர் மருத்துவமனையில் ஆய்வு செய்து “மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியாவின் இறப்பிற்குக் காரணம்” என்று அறிவித்து அவர்கள்மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார். அமைச்சர் சொன்ன பிறகு இப்படிப்பட்ட சம்பவம் நடக்காதா எனக் காத்திருந்த தீய சக்திகள் உடனடியாக சமூக வலைதளங்கள் முழுவதும் தமிழக மருத்துவக் கட்டமைப்பை பற்றி மிக மோசமாக எழுதத் தொடங்குகிறார்கள், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் பிரச்சாரம் நீட் தேர்விற்கு ஆதரவாக வந்து நிற்கிறது. நீட் தேர்வின் வழியாகவே இப்படிப்பட்ட தகுதியற்ற மருத்துவர்கள் வரமால் தடுக்க முடியும் என்ற பொய் பிரச்சாரம் இந்த சம்பவத்தை ஒட்டித் தொடர்ச்சியாக செய்யப்படுகிறது.

அரசு இதை விசாரிக்க குழுவை அமைக்கிறது, முதல் கட்ட விசாரணையில் மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று வருகிறது. காவல் துறை மருத்துவர்களை கைது செய்யும் நடவடிக்கையை எடுக்கிறது.மருத்துவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு போடுகிறார்கள், அது நிராகரிக்கப்படுகிறது, எந்த நேரமும் மருத்துவர்கள் கைதாகலாம் என்ற நிலையில், உச்சநீதி மன்றம் மருத்துவர்களைக் கைது செய்யக்கூடாது என்று ஏற்கனவே ஒரு வழக்கில் கூறியிருப்பதை மேற்கோள் காட்டி மருத்துவர்களைக் கைது செய்யக் கூடாது, மருத்துவர்களைக் கைது செய்தால் போராட்டம் நடத்துவோம் என மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இப்போது நமக்கிருக்கும் கேள்விகள்:

  • உண்மையில் மருத்துவர்களின் கவனக்குறைவுதான் பிரியாவின் இறப்பிற்குக் காரணமா?
  • இந்த மரணம் என்பது எதை உணர்த்துகிறது? மருத்துவக் கட்டமைப்பின், நிர்வாகத்தின் போதாமையா ? அல்லது வெறும் தனி நபர் கவனக்குறைவு மட்டுமா?
  • நீட் தேர்வு வந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காதா?
  • இதில் அரசாங்கத்தின் பொறுப்பென்ன?
  • இப்படிப்பட்ட சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

மருத்துவத்துறையும், கவனக்குறைவும் (Medical Negligence):

மருத்துவத்துறையில் கவனக்குறைவு புதிதான ஒன்றல்ல. மருத்துவர்களுக்கு எதிராக, மருத்துவமனைக்கு எதிராக உலகம் முழுக்க சொல்லப்படும் புகார்களுக்கு மூலக்காரணம் கவனக்குறைவுகளே!. மருத்துவர்களோ அல்லது மருத்துவப்பணியாளர்களோ அவர்களின் கவனக்குறைவின் விளைவாக நோயாளிகள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் வருகின்றன. இந்தக் கவனக்குறைவை நிறுவுவதன் வழியாக நோயாளிகள் தங்களுக்கான நீதியைப் பெற முடியும். இந்த கவனக்குறைவை நிறுவ வேண்டுமானால் இரண்டு விஷயங்களை நிறுவ வேண்டும்:

  • ஒன்று, மருத்துவர்களோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ தாங்கள் செய்ய வேண்டிய பணியை செய்யாமல் விட்டிருக்க வேண்டும்.
  • அந்தப் பணி செய்யாமல் விட்டதன் விளைவாக நோயாளி பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மிக சாதாரணமான உடல்நல பாதிப்பு முதல் இறப்பு வரை நோயாளிகளின் பாதிப்பு இருக்கலாம். அதற்கு ஏற்ப நோயாளிகளுக்கான இழப்பீடு வழங்கப்படும்.
  • இந்தக் கவனக்குறைவு பெரும்பாலான சிவில் வழக்குகளாகவே நடத்தப்படுகின்றன. எப்போது இந்தக் கவனக்குறைவு கிரிமினல் குற்றங்களாக கருதப்படுகின்றன?
  • மருத்துவரின் செயல்பாடு தொடக்கத்தில் இருந்தே அலட்சியத்துடன் இருக்க வேண்டும்.
  • சிகிச்சை முறை கூட இந்த அலட்சியத்தின் விளைவாக இருக்கலாம்
  • மிக மோசமான அலட்சியத்தின் விளைவாக மிக விபரீதமான பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்
  • அந்த அலட்சியத்தைப் பற்றி அவர் சற்றும் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
  • ஒரு மருத்துவராக அவரின் செயல்பாடு போதாமையுடனும், திருப்தியில்லாமலும் இருக்க வேண்டும்.
  • இந்த சூழ்நிலைகளில் மருத்துவரின் கவனக்குறைபாடு கிரிமினல் குற்றமாக்க் கருதப்படும். நோயாளியின் பாதிப்பிற்கு இந்த சூழ்நிலைகள் காரணமாக இருந்தனவா என்று விசாரிக்க ஒரு தனிப்பட்ட மருத்துவக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும், அந்தக் குழுவின் விசாரணையின் முடிவை வைத்தே கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய வழிமுறைகள் கூறுகின்றன.

ஒரு மருத்துவர் என்பவர் நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒரு சிகிச்சையை வழங்குகிறார், அவரையும் மீறி சில சந்தர்ப்ப சூழலில் அந்த சிகிச்சை முறையின் விளைவாக நோயாளி பாதிக்கப்படும்போது அவரைக் காயப்படுத்துவதோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதோ மருத்துவரின் நோக்கமாக இருக்காது என்ற எண்ணத்தினாலும், மருத்துவர்களின் இந்தக் கவனக்குறைவை கிரிமினல் குற்றமாகக் கருதினால் மருத்துவர்களும் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் சில முக்கியமான முடிவுகளை எடுக்காமல் போய்விடுவார்கள். அது சிகிச்சையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்ற காரணங்களினாலும் கவனக்குறைவைப் பெரும்பாலும் சிவில் வழக்குகளாகவே கருத வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்.

 

நிர்வாகத்தின் போதாமையா? தனிநபர் கவனக்குறைவா?

இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை தொடர்ந்து பலரும் இது அரசு நிர்வாகத்தின் தோல்வி என்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். பெரும்பாலான நேரங்களில் மருத்துவத்துறையின் அனைத்து கவனக்குறைவுகளுக்கு நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும் கூட, இப்படிப்பட்ட தனிப்பட்ட நபர்களின் கவனக்குறைபாடுகளை நிர்வாகத்தின் தோல்வியாகப் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது எவ்வளவு விரைவாக நிர்வாகம் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது, தவறை உணர்ந்து கொள்கிறது, தவறுக்கெதிரான நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக எடுக்கிறது என்பவைகளை வைத்துக்கொண்டு தான் நிர்வாகம் இதை சரியாகக் கையாண்டிருக்கிறதா என சொல்ல முடியும்.

இங்கிலாந்தின் NHS கூட கவனக்குறைவு நடக்கும்போது அதை மிக விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையையே மருத்துவர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்த சம்பவத்தை தமிழக அரசு பெரும்பாலும் சரியாகவே கையாண்டிருக்கிறது. உடனடியாக அமைச்சர் மருத்துவமனைக்கு செல்கிறார், விசாரணை செய்கிறார், விசாரணைக் குழுவை அமைக்கிறார், முதலமைச்சர் இழப்பீடு வழங்குகிறார் என அத்தனையும் துரிதமாகவே நடந்திருக்கிறது, எனவே இதை நிர்வாகத் தோல்வி என சொல்வது உள் நோக்கம் கொண்டது. இந்த சம்பவத்தில் நிர்வாகம் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நின்றிருக்கிறது. மருத்துவத்துறையில் இப்படிப்பட்ட கவனக்குறைவு சம்பவங்கள் பொதுவானது என்ற வகையில் அதைக் குறைப்பதற்குண்டான நடவடிக்கைகளை இனி வரும் காலத்தில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிர்வாகத்தின் செயல்பாடு இனி இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

 

இட ஒதுக்கீட்டினால் வந்த தமிழக அரசு மருத்துவர்கள் தகுதியற்றவர்களா? நீட் தேர்வு தகுதியானதா?

இது திட்டமிட்ட பொய் பிரச்சாரம். இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களைக் காட்டிலும் மிக வலுவான மருத்துவக் கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வு தொடர்பான பல குறியீடுகளில் தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கிறது. மூன்று கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை, மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறப்பு நிபுணர்களால் வழங்கக்கூடிய பெரும்பாலான உயர் சிகிச்சைகளும் கிடைக்கின்றன. பிரியாவிற்கு செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை கூட இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்காது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை போன்ற இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளிலேயே இது போன்ற உயர் அறுவை சிகிச்சை முறைகள் பலருக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் நமது தரத்தின் சாட்சி. இப்படிப்பட்ட அரிதிலும் அரிதான சம்பவங்களை வைத்துக்கொண்டு நமது தரம் சரியில்லை என்று பேசுவது முறையானதல்ல. இட ஒதுக்கீடு என்பது எப்படி ஒரு சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கிறது என்பதற்கு உதாரணமானதே நமது மருத்துவக்கட்டமைப்புதான். கிராமப்புற மருத்துவமனைகளிலும் கூட பெரும்பாலான உயர் சிகிச்சை நிபுணர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நம்மில் இருந்து வந்த மருத்துவர்களே! அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்ததாலேயே அவர்களின் சேவையை எல்லா மக்களுக்கும் வழங்க முடிகிறது. இட ஒதுக்கீடு என்பது தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல. அது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை என்பது தான் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு உலகத்திற்கு சொல்லும் செய்தி. அப்படிப்பட்ட மருத்துவக் கட்டுமானத்தில் நடந்த ஓர் சம்பவத்தை மட்டுமே கொண்டு அதை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் திருப்புவதும் உள் நோக்கம் கொண்ட நேர்மையற்ற செயலாகவே பார்க்க முடியும்.

 

இனிவரும் காலத்தில் கவனக்குறைவுகளை எப்படி தடுப்பது?

சமீபத்தில், இங்கிலாந்தின் பொது மருத்துவக் கட்டமைப்பான NHS இல், பொருளாதார காரணங்களுக்காகப் பெருமளவு ஆட்குறைப்பு நடத்தப்பட்டது, அதன் விளைவாக மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தப் பற்றாக்குறைக்கு பிறகு அங்கு கவனக்குறைவு வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவ நாளேடுகள் கூறுகின்றன. மருத்துவர்களின் அதீத பணிச்சுமை கூட இப்படிப்பட்ட கவனக்குறைவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதையும் நாம் இங்கே உணர வேண்டும்.

இந்தப் பிரச்சினையை ஒட்டி, சமூக சமத்துவத்திகான மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்  ரவீந்திரநாத் அவர்களின் அறிக்கைகளை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

“தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் கிடைப்பதை பாதிக்கும் வகையில், கவனக் குறைவுகள் ஏற்படும் வகையில் நமது அரசு மருத்துவத்துறையில் கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகள், போதாமைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டும்” என்கிறார்.  “அதே போல ஊழியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை இங்கு கடுமையாக உள்ளது, பெரியார் நகர் மருத்துவமனையிலேயே கூட வெறும் 7 செவிலியர்கள் மட்டுமே நிரந்தர பணியில் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த சிகிச்சை நோயாளிகளைக் கவனிப்பது கவனக்குறைவு போன்ற விபரீத சம்பவங்களுக்கு காரணமாகிவிடும்” என்கிறார். “சிகிச்சை வழங்கலில் பணிமுறை சார்ந்த நடைமுறை ஒழுங்கு முறை (protocols) , ஒருங்கிணைந்த சிகிச்சை தொடர்பான செயல்திட்டங்கள் (standard treatment guidelines surgical safety check list ) போன்றவற்றை உருவாக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் சொல்கிறார்.

மருத்துவத்துறையில் கவனக்குறைவுகள் உலகளாவியவை. அவற்றை முற்றிலுமாக நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் குறைக்க முடியும். சிகிச்சை முறைகள் என்பவை எப்போதும் தனி நபரை மட்டும் சார்ந்தவையாக இருக்கக்கூடாது, ஏனென்றால் தனிநபரின் குறைபாடுகளால் சிகிச்சைகள் எப்போதும் பாதிக்கப்படக்கூடாது. அதனால் பெருமளவு சிகிச்சை என்பது கூட்டு செயலாகவே இருக்க வேண்டும். சிகிச்சையின்போது அதன் படிநிலைகளை பலரும் கண்காணிக்கும் வகையில் நாம் ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக, அறுவை சிகிச்சையின் போது சரியான நபரா, சரியான சிகிச்சையா, சரியான மருந்துகளா, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்புகள் என்பவற்றையெல்லாம் கண்காணிக்க பல அடுக்கு கண்காணிப்பு முறைகளை உருவாக்க வேண்டும். மயக்கவியல் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், அறுவை அரங்கம் செவிலியர், வார்ட் செவிலியர், வார்ட் மருத்துவர் என ஒவ்வொருவரும் சிகிச்சையின் படிநிலைகளைக் கண்காணிக்க வேண்டும். இப்படிப்பட்ட செயல்வடிவங்கள், ஒழுங்குமுறைகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒழுங்குமுறைகள் மட்டுமே கவனக்குறைவைத் தடுப்பதற்கான வழி என்கிறது இங்கிலாந்தின் NHS அமைப்பு. அதே போல கவனக்குறைவிற்கான இழப்பீட்டையும் தாமதில்லாமல் வழங்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு.  கவனக்குறைவு போன்ற தனி நபர்களின் பலவீனங்களைக் குறைக்க வேண்டுமானால், ஒரு நிறுவனமாக அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும், மருத்துவர்கள் மட்டுமல்லாது, பல அடுக்கு பரிசோதனைகளுக்கான செயல்முறைகளை உருவாக்கி அதைப் பின்பற்றுவதன் வழியாக இப்படிப்பட்ட கவனக்குறைவுகளைத் தடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் சொல்கின்றன.

 

நிதி ஆயோக் பரிந்துரைகளும், சுகாதாரத்துறையில் தனியார்துறையின் ஆதிக்கமும்:

கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுமையும் அரசாங்க மருத்துவமனைகள் திட்டமிட்டு பலவீனமடையச் செய்யப்படுகின்றன. குறிப்பாக, நிதி ஆயோக் பரிந்துரையின் படி,  சுகாதாரத்துறையில் அரசு மற்றும் தனியார்துறையினரின் கூட்டு செயல்பாட்டு வடிவங்கள்  (Public Private Partnership) முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அதன் நீட்சியாக கர்னாடகாவிலும், குஜராத்திலும் அரசாங்க மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளாக அரசாங்க மருத்துவமனைகளிலும்கூட காப்பீட்டின் வழியாகவே சிகிச்சையளிக்க நிர்ப்பந்தம் கொடுக்கப்படுகின்றன. இந்த நிர்ப்பந்தங்கள் கூட ஒருவகையில் மருத்துவர்களின் அதீத பணிச்சுமைக்கும், கவனக்குறைவுகளுக்கும் காரணமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசாங்க மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளும், பெரும்பாலான பரிசோதனைகளும் இலவசமாகவே கிடைத்து வந்தன. கடந்த பத்தாண்டுகளில் காப்பீட்டு முறை நமது பொது மருத்துவமனைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தப்பட்டது. இன்று, காப்பீட்டு இல்லாதவற்றுக்கு சிகிச்சை நிராகரிக்கும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் காப்பீட்டை சார்ந்திருக்கின்றன. கடந்த மாதம், பெங்களூரு அரசு மருத்துவமனை ஒன்றில் காப்பீடு இல்லாததால் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்த நிலையில் அந்தப் பெண் இறந்தது விவாதமானது, இதே சூழ்நிலை இன்று கிட்டத்தட்ட தமிழகத்திலும் இருக்கிறது. சாதாரண சிகிச்சையில் இருந்து சிக்கலான அறுவை சிகிச்சை வரை அனைத்திற்கு காப்பீடு கேட்கும் முறை இங்கும் நிலவுகிறது. காப்பீடு திட்டத்தின்படி மருத்துவர்களுக்கு அரசாங்கங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கட்டாயப்படுத்துவதாகவும் மருத்துவ சங்கங்கள் சொல்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு எலும்பு நோய் அறுவை சிகிச்சை நிபுணருக்கு மாதத்தில் காப்பீடு திட்டத்தின்படி இத்தனை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. அந்த இலக்குகளை அடைவதற்காக நிறைய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக மருத்துவர்களும் தெரிவிக்கிறார்கள். மருத்துவர்களின் பற்றாக்குறையும், ஊழியர்களின் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் இடங்களில் கொடுக்கப்படும் இந்த நிர்வாக அழுத்தம் கவனக்குறைவிற்குக் காரணங்களாக இருக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் வெறும் மருத்துவர்களை மட்டும் பலிகடா ஆக்குவது முறையல்ல.

 

தமிழக சுகாதாரத்துறை என்ன செய்ய வேண்டும்?

முதலில், கவனக்குறைவு போன்ற சம்பவங்கள் நடக்கும்போது எழக்கூடிய கொந்தளிப்பான சூழலில், சமூக வலைதளங்கள் கொடுக்கக்கூடிய அழுத்தத்திற்கு அடிபணியாமல் நிதானமாகவும், பொறுமையாகவும் பிரச்சினையைக் கையாள வேண்டும், உடனடியாக மருத்துவர்கள்தான் காரணம் என்று அந்த பிரச்சினைக்கு உடனடி தீர்ப்பை வழங்குவது அந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அதிகரிக்கத்தான் செய்யும் என்பதை உணரவேண்டும். முறையான துறை சார்ந்த விசாரணைக்கு பிறகே அது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும்.

தமிழக சுகாதாரத்துறைக்கென்றே சில தனித்துவங்கள் இருக்கின்றன, பெரும்பாலான அரசு மருத்துவர்கள் முழு ஈடுபாட்டுடனும், சேவை மனப்பான்மையுடனே இங்கே இருக்கிறார்கள், அவர்களைக் குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கை மாற்றிக்கொண்டு அவர்களை இணக்கமாகப் பணி செய்ய அனுமதிக்கும்போது பொது மருத்துவமனைகளின் தரம் இன்னும் மேலும் உயரவே செய்யும். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும், தொடர்ச்சியாகப் பல அழுத்தங்களைக் கொடுப்பதுமான போக்கு அவர்களின் செயல்திறனைக் குறைப்பதோடு அவர்களையும் மனவுளைச்சலுக்கும் உள்ளாக்கும், பெருகிவரும் மருத்துவர்களின் தற்கொலைகளோடு சமீபத்திய நிர்வாக அழுத்தங்களையும் நாம் இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான ஒருங்கிணைந்த பொது வழிகாட்டுதல்களையும், செயல்திட்டங்களையும்,ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும், பல்லடுக்கு கண்காணிப்பு முறைகளையும் ஏற்படுத்த வேண்டும், அதற்கான மாநிலம் தழுவிய பயிற்சியை சுகாதாரத்துறை ஒருங்கிணைக்க வேண்டும்.

சுகாதாரத்துறையில் இருக்கும் ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் பற்றாக்குறையில் இருக்கிறார்கள். இதனால் அங்கு பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு அதீத அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அதை உணர்ந்து உடனடியாக காலிப்பணியிடங்களை அரசாங்கம் நிரப்ப வேண்டும்.

சமீபகாலங்களில் சுகாதாரத்துறையில் பணியிடங்கள் ஒப்பந்த பணி அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. பெரியார் நகர் மருத்துவமனையிலேயே கூட செவிலியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒப்பந்த பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பணியில் முழு ஈடுபாடு இருக்காது, மேலும் அவர்கள் நிர்வாக வரையறைக்குள் வர மாட்டார்கள் என்பதால் சிகிச்சை சார்ந்த பொறுப்பும் இருக்காது, அவர்களின் இந்த நிலைகூட கவனக்குறைவிற்கு வித்திடலாம். எனவே சுகாதாரத்துறையை பொறுத்தவரை ஒப்பந்த பணி வழங்கலை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, நிரந்தரப் பணியிலேயே அனைத்துக் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் முற்றிலும் காப்பீட்டைச் சார்ந்து இருக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும். காப்பீட்டின் காரணமாக மருத்துவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கும் போக்கையும் நிர்வாகம் நிறுத்த வேண்டும். சமீப காலங்களில் அரசு மருத்துவர்களின் மனவுளைச்சலுக்கு காப்பீடு தொடர்பாக கொடுக்கப்படும் அழுத்தங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் புலம்புகிறார்கள். மிகவும் அரிதான, உயரிய, சிக்கலான சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீட்டைப் பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான அரசு மருத்துவ நடைமுறைகளை, சிகிச்சைகளை காப்பீட்டைச் சாராமல் மேற்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும்.

அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வையும் பரிசீலித்து உடனடியாக முடிவெடுத்து நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு  வேறுபட்டு நிற்பதற்கு முக்கியமான காரணம், நம்மிடம் உள்ள பொது சுகாதார கட்டமைப்பு. சமூக நீதியை அடிப்படையாக கொண்ட இந்தக் கட்டமைப்பு இத்தனை வலிமையானதாக, வளர்ச்சியடைந்த ஒன்றாக இருப்பதுதான் நம் திராவிட அரசியலின் சாதனை. அதனால்தான் இந்த பொது சுகாதார கட்டமைப்பு தொடர்ச்சியாக எதிரணியினரால் குறிவைக்கப்படுகிறது, அவர்களின் நோக்கம் புரியாமல் நாமே நம் கட்டமைப்பை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அதன் குறைகளை நிவர்த்தி செய்யாமல் இருந்தாலோ அல்லது அதில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றமால் அலட்சியப்படுத்தினாலோ ஒரு காலத்தில் அந்தப் பொது சுகாதாரக் கட்டமைப்பே வலுவிழந்து உடைவதை நாமே காணவேண்டியிருக்கும், நம் எதிரணியினரும் அதைத்தான் விரும்புவார்கள், ஏனென்றால் மற்ற மாநிலங்களில் பொது மருத்துவத்துறையைத் தனியாருக்குக் கொடுத்தது போல இங்கே அவர்களால் செய்ய முடியவில்லை, அதைச் செய்ய வேண்டுமானால் வலுவான இந்த அமைப்பை தகர்ப்பதுதான் வழி. அதையும் நம்மை வைத்தே செய்ய வைப்பது தான் அவர்களின் திட்டம். இதை புரிந்து கொண்டு இந்த இக்கட்டான சூழலில் நாம் நமது அரசாங்க மருத்துவமனைகளின் பக்கம் நிற்பதுதான் நமது இப்போதைய கடமை.

 

 

sivabalanela@gmail.com