தமிழிலக்கிய  வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரத் திவ்யப்பிரபந்தந்ததுக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இவ்வுரை நூல்கள், வியாக்கியானங்கள் என்று சமஸ்கிருத பெயரால் அழைக்கப்பட்டு, சமயம் சார்த்தியே வழங்கின என்பது காரணமாக இருக்கக் கூடும். சமயத்தை மறந்து, இவ்வுரைகளை இலக்கியமாகவும், சமூக வரலாற்று ஆவணங்களாகவும்  காணும்போதுதான் நாம் எப்பேர்ப்பட்ட கருவூலத்தைக் காணத் தவறிவிட்டோம் என்பது தெரியவரும்.

பிரும்ம சூத்திரத்துக்கும், பகவத் கீதைக்கும் சமயப் பெரியோர்கள் அவரவர் கொள்கைகளை நிறுவ சமஸ்கிருதத்தில் உரை எழுதினார்கள். சமஸ்கிருதத்துக்கு இணையான மொழி தமிழ் என்பதால், தமிழில் எழுதப்பட்டிருந்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துக்குத் தமிழில் உரை எழுதப்பட்டு, அவை சமஸ்கிருத பாஷ்யங்களுக்கு நிகராக வேண்டுமென்று இராமாநூஜர் தம் சிஷ்யர்களைப் பணித்தார். முதல் உரையாக, இராமானுஜர் பிரதம மாணாக்கராகியாகிய  திருக் குருகைப் பிள்ளான் எழுதி  ‘ஆராயிரப்படி’ வெளிவந்தது. ‘படி’ என்றால், ஒற்றுக்களைக் கணக்கிடாமல் மற்றை  எழுத்துக்களைக் கணக்கில் கொண்ட கிரந்தம் என்று பொருள். இவ்வுரைகளிலே, நம்மாழ்வார் அருளிய ‘திருவாய்மொழி’க்கு வடக்கு திருவீதிப்பிள்ளை அவர்கள் எழுதி, ‘ஈடு’ என்று சிறப்பிக்கப்பட்ட ‘முப்பத்தாறாயிரப்படி’ குறிப்பிடத்தக்கது. இது, இலக்கிய, இலக்கண நயங்களோடு மட்டுமல்லாமல், அக்காலத்திய சமூகச் செய்திகளைப் பற்றி  ஆவணமாகவுமிருக்கிறது. இக்காலத்தில், ஒரு தமிழ் நூலின் பரந்துபட்ட சிறப்பை ஆங்கில மொழி கொண்டு தெளிவுறுத்துவது போல், அக்காலத்தில், தமிழ் படைப்பின் சிறப்பை அகில இந்திய  மொழியாக இருந்த சமஸ்கிருதத்தில் புலப்படுத்த வேண்டியிருந்தது. ஆகவே இவ்வுரைகாரர்கள், தூய  தமிழ் சொற்களும், அழகிய சமஸ்கிருதச் சொற்களும் கலந்த, மணியும் பவளமும் கோத்தாற்போன்ற ‘மணிப்பிரவாள’ நடையில் எழுதினார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்நடை ஜனரஞ்சகமாகவில்லை என்பதே, இவ்வுரைகளின் சிறப்பை அறிவதற்குத் தடையாக இருந்தது.

அக்காரக் கனியே என்கிறார் நம்மாழ்வார். ‘அக்காரக்கனி’ என்றால் என்ன ? ‘கரும்பு’ என்கிறது ஈடு. அ காரம் என்றால் காரமில்லாதது. ‘க்ஷாரம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லே தமிழில் ‘காரம்’ ஆயிற்று. கரும்புக்குக் கனி கிடையாது. காய் வர்க்கமான கரும்பே இப்படி இனித்தால்,, அதற்குக் கனி இருந்தால் எப்படி இனிக்கும்? இறைவன் அப்படி இனிக்கின்றான் என்கிறது ஈடு.                         —

இப்பொழுது நாம் ‘கட்டுடைத்தல்’ (deconstruction) பற்றி அதிகம் பேசுகிறோம்.  எட்கார் ஆலன் போவின் ‘ The purloined letter’ என்ற கதை எத்தனைப் பேரால் கட்டுடைக்கப்பட்டிருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். டெர்ரிடா, லேகன் போன்ற பேர்களைக் கேள்விப்படாத அக்காலத்திலேயே, திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் எவ்வாறு  வியாக்கியானக் கர்த்தாக்களால் கட்டுடைக்கப் பட்டிருக்கின்றன என்று நாம் அறியும்போது ஆச்சர்யமாகவிருக்கின்றது. ஒரு சொல்லை வைத்துக்கொண்டு, அதன் பின்னணியில்,அது நிகழும் நிலையில், ஒரு தேர்ந்த வாசகன் மனத்தில் நினைவோட்டமாக, ஒன்றுக்கொன்று தொடர்பின் காரணமாகத் தொடர்ந்து  விளையும்  மன அசைவுகள், த்வொனிப் பொருள்கள் அனைத்தையும் கட்டுடைத்துக் காணும் இவ்வுரையாசிரியர் ஆற்றல் வியக்கத்தக்கது.

உதாரணமாக, ஒரு பாடல். இது ‘திருவாய்மொழி’யில் வருகிறது.

 

அஞ்சிறை  மட நாராய்! அளியத்தாய்! நீயும் நின்

அஞ்சிறை  சேவலுமாய்  ஆஆவென்று எனக்குஅருளி

வெஞ்சிறைப்புள் உயர்ந்தாற்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்

வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ!

 

தமிழ் அக இலக்கிய மரபுக்கேற்ப, ஒரு தலைவி, தலைவனாகிய திருமாலுக்கு ஒரு பெண்நாரை¨  ஆண்நாரையுடன் தூது அனுப்புகின்றாள். அவனிடம் தன் விரக தாபத்தைச் சொல்லும்படி வேண்டுகின்றாள். ‘ஆனால் தலைவன் நீங்கள் சொல்வதைக் கேளாமல் இருந்து விட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று அந்நாரைகளை வினவுவது போலிருக்கிறது இச்செய்யுள்.

மிகச் சாதாரணப் பாடல் போல் தோன்றுகிறதல்லாவா? ‘ஈடு’ எப்படி விளக்குகிறது இப்பாடலை?

‘அழகிய சிறகுகளையும் மடப்பத்தையுமுடை  பெண்நாரையே’ என்று விளிக்கின்றாள். ஏன் இப்படி விளிக்க வேண்டும்? காரியமாக வேண்டுமென்றால், முதலில் பேடை  முன்னிட்டுச் சேவலைப் பற்ற வேண்டும். வைணவ மரபில் திருமகள் மூலந்தான் திருமாலைப் பற்ற முடியும். அவன் பெயரே, ‘திருமகள் கேள்வன்’ தான்.’மிஸ்டர் மஹாலக்ஷ்மி’.

‘அழகிய சிறகுகளை’ ஏன் முதலில் சொல்ல வேண்டும்? ‘குழந்தை,  தாயின் உறுப்புக்கள் எல்லாம் கிடக்க, முலையிலே வாய் வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண் வைக்கிறாள்’. புரிகிறதா? ஏன் ‘அழகிய சிறகுகள்’ என்று குறிப்பிடுகின்றாள்? ‘நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த மகிழ்ச்சி வடிவிலே தொடை கொள்ளலாம்படி( அறியலாம்படி) இருக்கின்றதாலின், ‘அம்சிறை’ என்கிறார்’.’மட நாராய்’.மடம்- ஏவிக் காரியங் கொள்ளலாம்படி பணிவு தோன்ற இருந்தது.

‘அளியத்தாய்’ என்றால் ‘அருள் பண்ணத்தக்கதாய்’ என்று பொருள். ‘அளி’ என்றால் ‘அருள்’. இங்கு நாரை என்ன அருள் செய்தது? தலைவனைப் பிரிந்து வாடியிருக்கையில்,’ தூது போ’ என்று சொல்வதற்கு வாகாக, முகம் காட்டி நின்றது. அதுவே அருள். அது தனித்து வரவில்லை. தன் துணையாகிய சேவலுடன் வந்திருக்கின்றது. தலைவி தனித்திருக்கத் தான் துணையுடன் இருப்பதினால், தலைவிபால் அனுதாபம் பிறக்கக் கூடும். இவள் நாரையைப் பார்த்தது எப்படி இருந்தது? சீதையைப் பிரிந்த இராமன் பம்பை நதிக் கரையில் அநுமனைச் சந்தித்தது போல் இருந்தது.  ‘ஈடு’ இதை அழகாக இலக்கிய நயத்துடன் கூறுகின்றது. ‘ அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத்  தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது’. என்ன அர்த்தம்? வயலோரங்களில் இருந்த நீலோற்பலம், தாமரை ஆகிய மலர்கள் , சீதையினுடைய  கண்களுக்கும் முகத்துக்கும் போலியாக இருந்து இராமனை, ‘வழி பறித்து’ நிற்கின்றன. அப்பொழுது  யதார்த்தத்தை உணர்த்தும் தாய் போல் அநுமன் வந்து உபகரிக்கின்றான். பிறகு இலங்கைக்குத் தூது போகின்றான்.அது போல், இப்பொழுது நாரையும் தூது போக இருக்கின்றது.

‘அம்சிறை  சேவல்’. சேவலின் சிறகுகளும் அழகாய் இருக்கின்றன. காரணம், ‘பெண்ணை அணைந்து பெற்ற அழகு வடிவிலே தோன்றுமாதலின்’.

‘எனக்கு அருளி’  ‘அவனைக் கண்ணால் காணப் பெறுவது என்றுகொல் என ஏங்கியிருக்கும் எனக்கு’. ‘அருளி’- ‘அத்தலை குறைவு அற்றாற்போல அன்றோ அருளுக்கு விஷ மான இத்தலை குறைவு அற்றபடி’.. அதாவது, ‘அவ்விடத்தில் நீங்கள் இருவரும் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்திருக்கிறீர்கள், ஆனால்  இவ்விடத்தில், நான் தனித்திருக்கும் இந்தக் குறை நீங்க அருள வேண்டும்’.’அருளி’ என்று ஏன் சொல்லுகிறாள் தலைவி? அருள் செய்யக்கூடியவன் உலகில் இறைவன் ஒருவன்தான்.’ இறைவனிடம் நீங்கள் எனக்காகத் தூது சென்றால் அதற்குச் சமனாக நான் என்ன கைம்மாறு செய்  இயலும்? ஆகவே, இறைவனைப் போல் ,நீங்கள் எனக்குச் செய்வது அருள்.’

‘வெஞ்சிறைப் புள் உயர்ந்தார்க்கு’-  கொடி  சிறகுகளையுடைய  கருடனை வாகனமாகக் கொண்டவன். ஏன் கொடி கொடி சிறகுகள்?தலைவியைத் தனியே தவிக்கவிட்டு அருளின்றியத் தலைவனை (திருமாலை) த் தாங்கிப் பறந்து சென்றதால்.

‘என் விடு தூதாய்’- ‘பெரு மிடுக்கரான பாண்டவர்களுக்குக் கிருஷ்ணன் தூது போன்றதன்று, அபலையாய் மிக்க துன்பதையுடையளாய் இருக்கிற எனக்குத் தூதாக’.. ( ஒவ்வொரு சொல்லையும் கட்டுடைத்து அதன் பின்னால் ஆசிரியருக்கே தெரியாமல் உள்ளீடாக நிழலிடும்  த்வொனிப் பொருளை எடுத்துக் கூறுவதுதான் இவ்வுரையின் சிறப்பு.) ‘சென்றக்கால், பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே  உங்களுக்கு அன்றோ பலன் சிந்திக்கப் புகுகிறது? என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். (அதாவது, இறைவனைத் தரிசிக்கும் பேறு உங்களுக்கல்லவோ முன்னால் கிடைக்கப் போகிறது?)

‘வன்சிறையில் அவன் வைக்கில்’- ‘தூது வந்தவர்களுக்கு முகம் கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடைவமாக இருத்தல். இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ எனின், அரச குமரர்கட்கு உரிய அவ்வவ்வக்காலங்களில் வெள்ளிலை( வெற்றிலை) இடாதபோது அவர்கள் வருந்துவார்கள்.அது போன்று, இவைகட்கும் முகம் கொடுத்துக் கேளாமையே துன்பத்தைத்விளைப்பதாம். இதனையே ‘வன்சிறை’ என்றாள்.’  (இங்கு அக்காலத்திய  சமுதாயப் பழக்கமாகிய வெற்றிலைப் போடுதல் என்ற போகம் தரும் சடங்கு புலனாகிறது.

இது பற்றி  அரசப் பணியில் இருப்பவர்களுக்கு ‘அடைப்பைக்காரர்’ என்று பெயர். அவர்களுக்கு நில மான்யமும் உண்டு)

‘வைப்பு உண்டாகில் என் செய்யுமோ?’– ‘பிறருக்காகச் சிறை இருப்பது, கிடைப்பது ஒன்றோ? இராவணன் தெய்வப் பெண்களைச் சிறை வைக்க, தான் அவர்கள் கால் விலங்கைத் தன் காலில் கோத்துச் சிறை மீட்டவளன்றோ சீதை? தரிசனப் பேறு, தியாகப் பேறு இரண்டு கிடைக்கும்போது, தூது போவதில் என்ன தடை?’

நம்மாழ்வாரைத்  தாண்டி, பாடல், உரைகண்டவர்  உடைமையாய் ஆகிவிடுகிறது.

பாருங்கள். இதைத்தான், பின்நவீனத்துவ விமர்சகர்கள், ‘ The author is dead’ என்று கூறுவார்கள். அதாவது படைப்பு, படைப்பாளியைத் தாண்டி, காலத்தை வென்று,

வாசகர்களின் பார்வைக்கேற்பப் பொருள் பெறுகின்றது.