“இது நன்கு திட்டம் தீட்டப்பட்ட ஒரு சர்வதேச தீவிரவாதத் திட்டம். இந்தியாவோட பிரபலமான மனிதர்கள அழிக்கிறதுதான் இவங்க திட்டத்தோட நோக்கமா இருக்கு. இதுல நாலுபேர் சம்பந்தப்பட்டிருக்காங்க முதல் நபர் கபிர் M. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர்ல லக்‌ஷர் இ தொய்பா அமைப்பால் பயிற்சி பெற்ற தீவிரவாதி. இவர் காத்மாண்ட்ல இருக்குற கேஸினோல நேபாளி ISI-ய சந்திச்சிருக்காரு. அவங்க பேரு கிரிஜா குருங்க். அவங்க ஆயுதங்கள ஏற்பாடு பண்ணது மட்டுமில்லாம இந்தியாக்குள்ள பாதுகாப்பா நுழையிறதுக்குத் திட்டம் போட்டுக் குடுத்திருக்காங்க. அவங்க கோரக்பூர் வழியா இந்தியாவுக்குள்ள நுழைஞ்சு மேலும் ரெண்டு பேர சந்திச்சிருக்காங்க. UP-யோட Most wanted criminal, பஞ்சாப்ப சேர்ந்த shooter தான் அவங்க. அதுக்கப்புறம் ஆபரேசனோட முதல் target-அ தேடி டெல்லிக்கு வந்திருக்காங்க. It was TV Reporter Sanjeev Mehra. டெல்லில்ல தாரிக் என்ற நபர் இவங்களுக்காக ஒரு திருட்டுக் கார ஏற்பாடு பண்ணித் தந்திருக்காரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தாரிக்கோட பிணம் சீலம்பூர் குட்டையில கண்டுபிடிக்கப்பட்டுச்சு. அவரோட வீட்ல ஒரு suicide நோட்ட கண்டுபிடிச்சோம்.  அதுல அவரோட வாக்குமூலத்த அவர் எழுதியிருந்தாரு. பத்லா ஹவுஸ்ல ஒரு ஃப்ளாட்ல தங்கியிருக்காங்க. அந்த வீட்டை இவங்க கிரிஜா குரங்க் பேர்ல வாடகைக்கு எடுத்திருக்காங்க. டார்கெட்ட கொல்றதுக்கு வசதியா அவர் வீட்டு பக்கத்துல இருக்குற ஒரு ஹோட்டல்ல தங்கியிருக்காங்க. ஆயுதங்கள வீட்ல வச்சிருக்காங்க. வீட்ல இருக்குற ஆயுதங்கள எடுக்கப் போயிருக்காங்க.  அப்போதான் துப்புக் குடுக்கப்பட்டு போலிஸ் அவங்கள துரத்தியிருக்காங்க. கைரேகை ஆயுதங்கள மீட்டு எடுத்துருக்கோம். இதுல AK 56 Rifle, two Glock G17 Pistols அதோட நூத்துக்கணக்கான குண்டுகளும் அங்க இருந்துச்சு. கபிரோட பாஸ்போர்ட்ட recover பண்ணியிருக்கோம். அவரோட பாகிஸ்தானி பாஸ்போர்ட், ஜிகாதி literature இதுல கபிரோட பேரும் இருக்கு. இந்த ஆதாரங்களையும் விசாரணைகளையும் அடிப்படையா வச்சு CBI இந்த நாலு Accuses-க்கு எதிரா Charge Sheet file பண்ணப்போகுது”

நான்கு பேரைப் பிடித்துக்கொண்டு சிபிஐ இப்பிடிச் சொன்னால் அதை அப்பிடியே நம்பிய ஒரு காலமும் இந்தியாவில் இருந்தது. இப்போது மக்கள் யாரும் இதை முழு உண்மை என்று எடுத்துக்கொள்ளப்போவதில்லை. நாம் உண்மையில்லை என்று நம்பினாலும் அவர்கள் ஜனநாயகத்தின்மீது நடத்தும் என்கவுண்டரை நிறுத்தப்போவதுமில்லை.  சிபிஐ மட்டுமில்லை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, இராணுவத்துறை என எல்லாமே ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுவிட்டன. இதுபோன்ற அச்சுறுத்தல் நிறைந்த இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லும் இந்தி வெப் சீரீஸ்தான் பாதால் லோக் (பாதாள உலகம்)

பொதுவாக இந்தி வெப் சீரீஸ்கள் எல்லாம் வலதுசாரி தன்மை மேலோங்கி இருக்கும். இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற அல்லும் பகலும் கஷ்டப்படுவார்கள்! பாவம் அவர்களுக்குச் சீனாக்காரர்கள் ஒருபோதும் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்! ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, துணிகரமான தேசபக்த வீரர்கள் சிங்கத்தின் குகைக்கே போய்த் திரும்புவார்கள். இப்படி நம்பகத்தன்மையோ, நாணயமோ இல்லாத இந்தி சீரீஸ்களைப் பார்ப்பதைவிட, ஆங்கில, ஸ்பானிய வெப் சீரீஸ்களைப் பார்ப்பது மேல் என நினைத்து அவற்றிற்கு முழு ஆதரவு தருகிறார்கள் நம்முடைய இளைஞர்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்கு ஒன்று வராமல் போய்விடுமா என்ன? அப்படி அத்திபூத்தாற்போல வந்த அருமையான வெப் சீரீஸ்தான் பாதால் லோக்.

“சொர்க்கம், பூலோகம், பாதாளம் அப்பிடின்னு மூணு லோகங்கள் இருக்கு. சொர்க்கத்துல கடவுள்கள் வாழ்வாங்க. பூலோகத்துல  மனுசங்க வாழ்றாங்க.  இதுக்கும் கீழ ஒரு உலகம் இருக்கு. அதுதான் பாதாள லோகம். அங்கு புழு, பூச்சி இப்பிடி எல்லாம் வாழும். அப்பிடின்னு சாஸ்திரங்கள் சொல்லுது. ஆனா நான் இத வாட்ஸப்பில்லதான் படிச்சேன்” என்று இன்ஸ்பெக்டர் ஹாதிராம் சௌத்திரி சொல்வதிலிருந்து கதை தொடங்குகிறது.

சொர்க்கம், பூலோகம், பாதாளம் என்பவை எங்கேயோ இல்லை. டெல்லியைச் சுற்றியும் இந்த மூன்று லோகங்கள் இருக்கின்றன என்பது ஹாதிராம் புராணக் கதைக்குத் தரும் புது விளக்கம். Lutyens’ Delhi, அசோக் ரோடு, ஔரங்சீப் ரோடு ஆகியவை எல்லாம்  சொர்க்கம். ப்ரீத் விஹார், வசந்த் விஹார், மெஹ்ரூலி, நொய்டா இவையெல்லாம் பூலோகம். ஓக்லா, கட்கர்டூமா, அவுட்டர் ஜமுனா பார் (ஹாதிராம் சௌத்திரி பணியாற்றுமிடம்) மாதிரியான பகுதிகள்தான் பாதாள லோகம். பாதாள லோகத்தில் இருக்கும் புழு, பூச்சிகள் எல்லாம் சொர்க்கத்தில்  இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அருகில் பூலோகத்தில் வாழ்கின்ற பகுதிக்குச் சென்று ஏதாவது செய்துவிடும். ஆருஷி கொலை , நிதாரி கொலை எல்லாம் அப்படி நடப்பவைதான் என்பது அவரது எண்ணம்.

ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நான்குபேர்தான் கதையின் பாதாள லோகத்து மனிதர்கள். விஷால் தியாகி, டோப் சிங், கபிர், மேரி லிங்க்டோஹ் என்ற அந்த நான்குபேரும் கொலை செய்ய வந்த இடத்தில், அதைச் செய்யாமல் திரும்பிப் போகிறார்கள். டெல்லி DCP (Deputy Commissioner of Police) படை ஒன்று அவர்களைத் துரத்துகிறது. மிகச் சரியாக யமுனை நதி பாலத்தில் வைத்து அவர்களை மடக்குகிறார்கள். தங்களுடைய ரகசியங்கள் யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்த டோப் சிங்க் தன் கையில் வைத்திருந்த செல்ஃபோனை யமுனை நதியில் எறிந்துவிடுகிறான்.

இந்த நான்கு பேரும் பிரபல பத்திரிக்கையாளர் சஞ்சீவ் மெஹ்ராவைக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள்.  சஞ்சீவ், ஸ்டிங்க் ஆபரேசன்கள் செய்து, பெரும்புள்ளிகள் பலரின் திடுக்கிடும் ஊழலை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியவர். இதனால் கோபம் கொண்ட யாரோ ஒருவர் அவரைக் கொலை செய்ய, கூலிப்படைகளை ஏவியிருக்கலாம். எதற்காக இந்தக் கொலைமுயற்சி நடந்தது என்பதைப் பதினைந்து நாளுக்குள் விசாரித்துக் கண்டறியும் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஹாதிராம் சௌத்திரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் ஹாதிராம் சௌத்திரி  சில கேள்விகளை DCP டீமிடம் கேட்கிறார். “இந்த நான்கு பேர் சஞ்சீவ் மெஹ்ராவைக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்று சொன்னது யார்? அவருக்கு எப்படி இது தெரிந்தது? இப்படி ஒரு செய்தி வருகிறது என்றால், அதை முதலில் லோக்கல் போலிஸிடம் சொல்லாமல் மேலிடத்து ஆட்கள் களத்தில் இறங்கக் காரணம் என்ன?” ஒரு வழக்குக்கு முக்கியமான இந்தக் கேள்விகளைக் கேட்ட ஹாதிராமைக் கேலியாகப் பார்க்கிறார்கள். எங்களையே கேள்வி கேட்கிறாயா? என மிரட்டுகிறார்கள். டெல்லியில் போலிஸ் வேலை பார்ப்பது என்பது பெண்ணைக் கொடுத்து, மாப்பிள்ளைக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடுவது போன்றது. எந்த அதிகாரமும் இல்லாமல், எல்லாவற்றையும் மேலிடமே முடிவு செய்யும் இடத்தில், கடைகோடி போலிஸ் அதிகாரி எதைக் கண்டுபிடிக்க முடியும்!

ஆனாலும், ‘நம் வாழ்நாளெல்லாம் சின்ன சின்ன பெட்டி கேஸ்களாகப் பார்த்து புரமோசன் வாங்காமல் இருக்கிறோம். முதல் தடவையாக பெரிய கேஸ் ஒன்று, அதுவாக வந்து தம் கையில் கிடைத்திருக்கிறது. இதை நழுவவிடக் கூடாது’ என ஹாதிராம் நினைக்கிறார்.   கொலைகாரர்களில் டோப் சிங்க் என்பவன்தான் தலைவன் என நினைக்கிறார்கள். அவனுடைய சொந்த ஊர் பஞ்சாப்பில் இருக்கிறது. அந்த இடத்தில் போய் விசாரிக்கும் பொறுப்பைத் தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் அன்ஸாரி என்ற போலிஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கிறார் ஹாதிராம். இன்னொருவன் விஷால் தியாகி. அவன் மாஸ்டர்ஜி என்பவருடன் அடிக்கடி பேசியிருக்கிறான். அதைக் கண்டுபிடிக்க அவனுடைய சொந்த ஊரான சித்திரகூட்டிற்கு ஹாதிராமே நேரில் செல்கிறார்.

உத்திரபிரதேசத்தில் தாழ்ந்த ஜாதிப் பெண்கள் மீது நடக்கும் வன்முறையை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று, சின்ன வேலை. இதன்பொருள் பழிவாங்க நினைக்கும் ஒரு பெண்ணைப் பிடித்து விரலால் உறவு கொள்வது. அங்கு இதுபோன்ற விசயங்கள் சர்வசாதரணம். பெரும்பாலும் இது வெளியே தெரியாமலே போய்விடும். இரண்டு, பெரிய வேலை. இதன்பொருள் ரேப் செய்தல். மூன்றாவது முழு வேலை.  ரேப் செய்வதோடு கொலையும் செய்துவிடுவது. ஒரு மாட்டை வாங்குவதைவிட குறைவான விலைக்கு இதுபோன்ற குற்றச்செயல்கள் செய்பவர்கள் கிடைப்பார்கள். அந்த ஊரில் விஷால் தியாகியின் மூன்று சகோதரிகளுக்குப் பெரிய வேலை நடந்துவிடுகிறது.

புந்தேல்கண்ட் என்பது உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் எல்லையில் இரண்டு மாநிலங்களையும் தொட்டுக்கொண்டு நிற்கும் பகுதி.  அதற்குள்தான் சித்ரகூட் பகுதி வருகிறது. கம்பராமாயணம் இப்பகுதியை சித்ரகூடம் என்கிறது. இந்தப் பகுதியில்தான் குகன் வாழ்ந்தான். கம்பராமாயணத்தில் இராமன் குகனிடம் “அன்பு உள இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்று நட்பு பாராட்டியுள்ளான்.  இப்போது அந்தப் பகுதியில் குஜ்ஜார் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.  அவர்கள் குகனின் வம்சாவளியினராக இருக்கலாம். ஆனால் அவர்களை யாரும் நட்பு பாராட்டுவதில்லை. பாஜ்பாயி என்ற அரசியல் தலைவனுக்கு அங்கு குறிப்பிட்ட செல்வாக்கு இருக்கிறது. ஆனால் பாஜ்பாயி உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர். குஜ்ஜார் இனம், விஷால் தியாகி, பாஜ்பாயி என்ற இவர்களை சம்பந்தப்படுத்தி இந்தக் குற்றச்செயல் இருக்கிறது என்பதைத் தோராயமாக யூகிக்கிறார் ஹாதிராம்.

இன்னொரு பக்கம், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் டோப் சிங்கை விசாரிக்கப் போன இடத்தில், அன்ஸாரிக்குச் சில செய்திகள் கிடைக்கின்றன. அந்த ஊரில் மஞ்சார் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் டோப் சிங்க். அடிக்கடி தொல்லை கொடுத்துவந்த மூன்று உயர்சாதி பஞ்சாபிகளைக் கொலை செய்திருக்கிறான். பதிலுக்கு அவனுடைய அம்மாவைப் பத்து பதினைந்து உயர்சாதி பஞ்சாப் சிங்குகள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பஞ்சாபில் இருக்கும் உயர்சாதி ஆணவம் என்பது  கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத கொடூரங்களைக் கொண்டது. அதனால், டோப் சிங்க் மீண்டும் அவன் கிராமத்திற்கு திரும்பிப் போகவே முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறான். டெல்லியில் சிறு சிறு குற்றங்களைச் செய்து வாழ்ந்திருக்கிறான். டெல்லியில் இருந்தபோது அவனுக்கு சந்தா என்ற பெண்ணின் நட்பு கிடைத்திருக்கிறது – என்பதுவரை அவனைப் பற்றிய செய்தி கிடைக்கிறது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருத்தியான மேரி லிங்க்டோவ் என்பவள் பெண் இல்லை, ஓர் ஆண்  (அரவாணி) என்பது தெரியவருகிறது. இந்த விசயம் வெளியில் தெரியும்போது ஹாதிராம் முறையாக வழக்கை விசாரிக்கவில்லை என்று அவரிடமிருந்து சிபிஐ வழக்கை எடுத்துக்கொள்கிறது. ஹாதிராம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சிபிஐ கையில் எடுத்த சில நாட்களில் கபிர் தீவிரவாதியாகிவிடுகிறான், மேரி லிங்க்டோவ் நேபாளியாகிவிடுகிறாள். அவர்கள் இருவரும் சந்திக்கும் கூலிப்படை ஆட்களாக தியாகியும், டோப் சிங்கும் மாறிவிடுகிறார்கள்.

இந்தக் கொலை முயற்சி நடப்பதற்கு முன்பு, சஞ்சீவ் பணியாற்றும் ஊடக நிறுவனமே அவரைப் பணியிலிருந்து தூக்குவதற்குக் காத்துக்கொண்டிருந்தது. வேலையைத் தக்கவைக்க சஞ்சீவ் போராடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்தக் கொலைமுயற்சி நடக்கிறது. சிபிஐ யாருக்கோ ஏவல் நாயக இருந்து வேலை செய்கிறது என்பது சஞ்சீவுக்கும் தெரிகிறது. இராணுவத்துறையில் ஊழலைச் செய்த விக்ரம் கபூரை ஸ்டிங்க் ஆபரேசன் செய்து, கையும் களவுமாகப் பிடித்துக்கொடுத்தவர் சஞ்சீவ். கபூரைப் போன்றவர்கள் முன்பு எல்லாம் மீடியாவின் பார்வையில் மறைந்து வாழ்ந்தார்கள். இப்போதெல்லாம் அவர்கள் மீடியாவையே வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். கபூர் வேறு ஏதோ ஒரு மீடியாவை வாங்குவதைவிட தான் பணியாற்றும் மீடியாவையே அவரை வாங்க வைத்துவிட்டால் தன் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என யோசிக்கிறார் சஞ்சீவ். நல்ல விலைக்கு விற்கவேண்டுமானால் பரபரப்பான நியூஸ் வேண்டும்.

நியூஸ் தேடி அலைவானேன். அவருடைய கொலை முயற்சி நிகழ்வை அவரே பிரைம் நியூஸாக மாற்றுகிறார். அதில் அவர் பல மாங்காய்களை அடிக்கிறார். முதலில் பொதுமக்கள் அநுதாபம் அவர்மீது விழுகிறது. மரணத்தின் வாசலில் இருந்து தப்பித்திருக்கிறார் என மக்களை இரக்கப்பட வைக்கிறார். அதனால், இதுவரை அவரை வெளியேற்றத் துடித்த நிறுவன முதலாளி இப்போது சஞ்சீவை நீக்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார். நியூஸ் பரபரப்பாக மாறுகிறது. ஒரு காலத்தில் எதிரியாகக் கருதிய கன்சர்வேடிவ் கவர்ன்மெண்ட் இப்போது அவரைக் காப்பது தங்கள் கடமை எனப் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறார்கள். சொல்வதற்கு அவருக்கு நா கூசினாலும், வேறு வழியில்லாமல் அவரும் நாடு கடந்த தீவிரவாதத்தை, அதுவும் தன்மீது நடத்த இருந்த கொலைத் திட்டத்தை எதிர்த்து மீடியாவில் பேசு பேசு என்று பேசுகிறார். எதையும் சாதிக்கும் சாதுர்யம் தெரிந்த சஞ்சீவ், கபூர் மூலம் பத்திரிக்கை நிறுவனத்தையும் வாங்கிவிடுகிறார்.

சிபிஐ, மேரி லிங்க்டோவை நேபாளியில் இருக்கும் ISI உளவாளி என்றது. ஆனால், அவள் ஓர் அரவாணி. சீனக்காரனைப் போல இருப்பதால் எல்லோரும் சீனி என அழைத்தார்கள். அவள் தஹ்ல்ரேஜா ஹாலிடே ஸ்டே இன் என்ற நிறுவனத்தில் மசாஜ் செய்பவளாக இருந்தவள். ஏதாவது ஒரு இடத்திற்குச் செல்லும்போது பெண்களும் உடன் சென்றால் பார்ப்பவர்கள் சந்தேகப்படமாட்டார்கள் என்பதால் விஷால் தியாகியோடு அனுப்பப்பட்டவள்.

ரயிலில் கோழிக்கறியைச் சாப்பிட்ட ஒரு முஸ்லிமை மாட்டுக்கறி சாப்பிடுகிறாயா எனச் சொல்லி இந்து தீவிரவாதிகள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொல்கிறார்கள். அந்த அப்பாவியின் தம்பிதான் கபிர். அவன் செய்த தவறு, தாரிக் என்பவன் பேச்சைக் கேட்டு, ஒரு காரைத் திருடிக் கொண்டுவந்து கொடுத்ததுதான். சிபிஐ கூற்றுப்படி, தாரிக் தன் கழுத்தைத் தானே நெறித்து, பிறகு ஓடிப்போய் சீலம்பூர் குட்டையில் விழுந்து இறந்து போகிறான். சிபிஐ காவலில் இருக்கும்போது கபிரை, “கோத்தா பாகிஸ்தானி” எனக் கத்திக்கொண்டு ஒருவன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுகிறான். பின்னால்தான் சிபிஐக்கு இன்னொரு உண்மை தெரிகிறது. பிளேடால் கழுத்தை அறுத்தவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று!

பிரதான முடிச்சு சித்திரகூட்டில்தான் பின்னப்பட்டிருக்கிறது என்பது ஹாதிராமுக்குத் தெரிகிறது. மறுபடியும் போகிறார். அங்கு சில உண்மைகளைக் கண்டறிகிறார். டொனோலியா என்பவர்தான் மாஸ்டர் ஜி.  அவரின் தீவிர விசுவாசிதான் தியாகி. டோனோலியா குஜ்ஜார் இனத்தின் பாதுகாவலன். அவர் சொல்வதே குஜ்ஜார் இனத்தின் வேதவாக்கு. அவரால் நியமிக்கப்பட்டவர் பாஜ்பாயி என்னும் பிராமணர். ஆனால் அவர் தலித்களின் விடிவெள்ளி என்று தன்னை அழைத்துக்கொள்கிறார். தலித்களின் விடிவெள்ளி என்று அழைத்துக்கொண்டாலும், குஜ்ஜார் மக்களைத் தொட்ட பாவம் தீர கங்கைத் தண்ணீரோடுதான் எந்த இடத்திற்கும் பயணம் செல்வார். டொனோலியாவின் தம்பி க்வாலா குஜ்ஜார். பாஜ்பாயியை வெற்றிபெற வைப்பது டொனோலியாவின் வேலை. பதிலுக்கு அவர் க்வாலா குஜாராருக்குக் காண்ட்ராக்ட் கொடுப்பார். கமிஷன் மிகச் சரியாகப் பாஜ்பாயிக்குச் சென்றுவிடும். ஆனால், சமீப காலமாக பாஜ்பாயிக்கும், க்வாலா குஜ்ஜாருக்கும் விரிசல் விழுந்துவிட்டது என்பதுவரை ஹாதிராம் கண்டுபிடித்துவிடுகிறார்.

இந்த நேரத்தில் க்வாலா குஜ்ஜாரிடம் பிடிபடுகிறார் ஹாதிராம். “இதுவரைக்கும் எவ்வளவு உண்மைய கண்டுபிடிச்சிருக்க?” என க்வாலா குஜ்ஜார் ஹாதிராமிடம் கேட்கிறான். “மாஸ்டர் ஜி என்று சொல்லப்படும் டோனோலியா செத்துட்டார்’ன்றது வரைக்கும் கண்டுபிடிச்சிட்டேன்” என்கிறார் ஹாதிராம்.  இவ்வளவு ரகசியம் தெரிந்த ஒருவரை குவாலா குஜ்ஜார் உயிரோடு விடுவதில்லை. ஆனாலும் ஹாதிராமை விடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மாஸ்டர் ஜி’யின் தீவிர விசுவாசி தியாகி. அவர் சொன்னதால் ஏன் என்று கேட்காமல் 45 கொலைகளைச் செய்தவன் அவன். இப்போது சிறையில் இருக்கிறான். இந்த நேரத்தில் மாஸ்டர் ஜி உயிரோடு இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறது. அவனைப் பார்க்கும்போது கொடுத்துவிடும்படி டோனோலியா அணிந்திருந்த வளையத்தை ஹாதிராம் கையில் கொடுக்கிறான் குவாலா குஜ்ஜார்.

ஹாதிராம் தெரிந்துகொண்ட உண்மைகள் சிலவற்றைக் கதையின் இறுதியில் அவிழ்க்கிறார்கள். அவை: கொல்லவதற்காக தேர்ந்தெடுத்த டார்கெட் சஞ்சீவ் இல்லை, தியாகிதான்.  அவனை என்கவுண்டரில் கொல்வதற்கு குலுக்கல் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ரேண்டம் பத்திரிக்கையாளர்தான் சஞ்சீவ். டோனோலியாவின் தீவிர விசுவாசி தியாகி. டொனோலியா இறந்த பிறகு அவனைக் கழற்றிவிட நினைக்கிறார்கள். டோனோலியா சொன்னதாக சஞ்சீவைக் கொல்லும் அசைன்மெண்ட்டைக் கொடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் டோப் சிங்குக்கு சந்தா என்பவளோடு தொடர்பு இருக்கிறது. சந்தாவோ பாஜ்பாயிடம் பெர்சனல் செகரட்டரியாக இருக்கும் சுக்லாவோடு நெருக்கமாக இருக்கிறாள். அதிகாரம் மிகுந்த இடம், பணம் எல்லாம் கிடைக்கும்போது சுக்லாவை விட்டு டோப்சிங்கோடு போக அவள் விரும்பவில்லை. ஆனால் டோப் சிங்க் அவளை விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறான். இதை அவள் சுக்லாவிடம் சொல்கிறாள். தியாகிக்குக் கொடுத்த அசைன்மெண்டில் டோப்சிங்கையும் சேர்த்துவிடுகிறார்கள். ஏன் என்றே தெரியாமல் மிகப் பெரிய வலையில் மாட்டுகிறான் டோப் சிங்க். கபிர் காரைத் திருடியவன். சீனி டஹ்ரேஜாவால் அவர்களோடு அனுப்பப்பட்டவன். தியாகியைத் தவிர மற்றவர்களுக்கு எங்கு போகிறோம், ஏன் போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியாது. ஆனால் இப்படி நான்கு பேர் வருகிறார்கள், அவர்கள் சஞ்சீவைக் கொல்லப்போகிறார்கள், கொன்றவுடன் என்கவுண்டர் செய்யவேண்டும் என்று மூன்று நாட்களாக அவரைப் பின் தொடர்ந்திருக்கிறது DCP டீம்.

கதையின் தொடக்கத்தில் பாதாள லோகத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது வெளியில் வந்து மனிதர்கள் வாழும் பூலோகத்தில் குற்றங்கள் செய்வார்கள் எனச் சொல்கிறார்கள் இல்லையா? உண்மை அப்படி இல்லை. சொர்க்கலோகத்தில் இருப்பவர்களின் அதிகார பலம், பண பலம், பூலோகத்தில் இருப்பவர்களின் படை பலம் எல்லாம் சேர்ந்து தொலைதூர பாதாள லோகத்தில் இருப்பவர்களைப் புழுவை நசுக்கிக் கொல்வதுபோல கொல்கிறது. ஆனால் பழிபாவம் எல்லாம் பாதாள லோகத்து மனிதர்களுக்கே போகிறது என்பதுதான் வெப்சீரீஸ் சொல்லும் நீதிமொழி.

சரி, கைக்கு அருகில் கிடைத்த சஞ்சீவைத் தியாகி கொல்லாமல் விட்டதற்குக் காரணம் என்ன? அதற்கான காரணத்தை கதையின் இறுதியில் ஹாதிராம் சஞ்சீவைச் சந்திக்கும்போது சொல்கிறார். “ பாண்டவர்கள் அவங்க காலம் முடிஞ்ச பின்னால சொர்க்கத்துக்குப் போனாங்க. வழி யெல்லாம் கஷ்டமா இருந்துச்சு. போற வழியில ஒவ்வொருத்தரா காணாம போயிட்டாங்க. யுதிஷ்டிரர் சொர்க்கத்த அடைஞ்சப்போ அவர்கூட அவரோட தம்பிங்க யாரும் வரல. ஒரு நாயி மட்டுந்தான் அவரோட வந்துச்சு. அங்க இருந்த இந்திர தேவன் அவர வரவேற்றாரு. சொர்க்கத்துக்கு வரும்படி அழைச்சாரு. யுதிர்ஷ்டிரர் என்னடான்னா நாயையும் கூப்பிட்டுப் போயிட்டாரு, ‘ஒரு கேவலமான நாயி சொர்க்கத்துக்கு வர்றதா’ன்னு இந்திர தேவன், ‘வாய்ப்பே இல்லை’ன்னு மறுத்தார். ‘இங்க பாருங்க பிரபு, வர்ற வழியில என்கூட பிறந்த சகோதரர்கள்கூட என்கூட வரல, ஆனா இந்த நாய் என்னவிட்டு போகல, இது சொர்க்கதுக்குள்ள வரலேன்னா நானும் சொர்க்கத்துக்கு வரமாட்டேன்’னு சொல்லிட்டு யுதிர்ஷ்டிரர் திரும்பிட்டாரு. ஆனா இந்திர தேவன் அவர் கைய புடிச்சிட்டாரு. ‘யுதிர்ஷ்டிரரே நீங்க உங்க சோதனையில ஜெயிச்சுடீங்க’ன்னார். ‘இந்த நாய் இருக்கே இது சாக்ஷாத் தருமன்’னார். ‘சொர்க்கத்துக்கு உங்க ரெண்டு பேரையும் வரவேற்கிறேன்’னார். Actual-ஆ இது எல்லாம் சாத்திரங்கள்லதான் எழுதப்பட்டிருக்கு. ஆனா நான் வாட்ஸாப்லதான் படிச்சேன்” என்று ஹாதிராம் கதை சொல்லி முடிக்கிறார். இந்தக் கதைக்கும், விஷால் தியாகி சஞ்சீவைக் கொல்லாமல் விட்டதற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. அதை நீங்கள் வெப் சீரீஸைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வெப் சீரீஸ் வட இந்தியாவின் பரந்துபட்ட பகுதியில் சமீபகாலமாக இஸ்லாமியர்கள் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதும், விளிம்புநிலை மக்கள்மீதும், ஊடகச் சுதந்திரத்தின்மீதும் தொடுக்கப்படும் தாக்குதலை முடிந்தவரை வெளிப்படையாகப் பதிவு செய்கிறது. தாக்குதல் என்றால் கட்டையால் அடித்துத் தாக்குவது என்றில்லை. நடைமுறைப் பேச்சில், பார்வையில், ஒதுக்கப்படுவதில், மூன்றாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதில்  என பாகுபாடுகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தியாவைக் காட்டுகிறார்கள்.

ஒரு காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் முஸ்லிம் அதிகாரியின் காதுபட, “ஒரு முஸ்லிம புடிக்கிறதுக்கு இன்னொரு முஸ்லிம அனுப்புனா இப்பிடித்தான் ஆகும். காஷ்மீர் முஸ்லிம் சாதாரண முஸ்லிமவிட மோசமானவங்க” எனப் பேசுகிறார்கள். இந்திய குடிமைப் பணிக்காக அன்ஸாரி என்பர் தயாராகிறார். அவருக்கு மாதிரி நேரடித்தேர்வு நடத்துகிறார்கள். அவரிடம் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்துக் கேள்வி கேட்கிறார்கள், “இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்களான்னு என்கிட்ட கேட்டீங்கன்னா… ஆமான்றதுதான் என்னோட பதில்” என்கிறார் அன்ஸாரி. அவரிடம் நேரமுகத் தேர்வு பயிற்சி கொடுப்பவர்கள் சொல்கிறார்கள், “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது”. அடிப்பவர்களைப் பார்த்து அடிக்கிறார்கள் எனச் சொல்லக்கூட கூடாது என்பது எவ்வளவு பெரிய வன்முறை.

வசனங்கள் எல்லாம் மிக அற்புதமாக இருக்கின்றன. “உங்களோட இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்ல இந்தியா பத்தி நியூஸ் இருக்கும். இந்தியர்கள் பத்தின நியூஸ் இருக்காது”  “ ஒரு மனுசனுக்கு வேற எந்த வழியும் இல்லன்னா அவன் அமைதியா இருந்துவான். எல்லாத்தையும் தாங்கிருவான். ஆனா மனசுல யாராவது ஒரு சின்ன நம்பிக்கை குடுத்துட்டா…! அந்த நம்பிக்கை ரொம்ப மோசமானதாயிரும்” இப்பிடி நிறைய சொல்லலாம்.

பாதால் லோக் சீரீஸ் எடுப்பதற்கே தெஹல்கா.காம் நிறுவனர் தருண் தேஜ்பால் மீது நடந்த கொலை முயற்சிதான் காரணமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். 2010-இல் அவர் எழுதிய நாவலான The story of my assassins என்பதை ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார்கள். தருண் தேஜ்பால் வாழ்க்கையையும் ஆங்காங்கே தொட்டுக்காட்டியிருக்கிறார்கள். அவர் 2K தொடக்கங்களில் பல ஸ்டிங்க் ஆபரேசன் செய்து புகழ்பெற்றவர். லிபரல் எண்ணங்களோடு செயல்பட்டவர். பத்திரிக்கை உரிமையாளரோடு முரண்பட்டவர். கொலைமுயற்சியில் தப்பித்தாலும், பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டவர் இப்படி பல விசயங்கள் பாதால் லோக் சீரீஸில் வருகின்றன.

பத்திர்க்கையாளர்கள் ஒரு காலத்தில் ஸ்டிங்க் ஆபரேசன் செய்து ஹீரோ போல இருந்தார்கள். பிறகு  மக்கள் அவர்களை மறந்தார்கள். சமீபகாலங்களாக அவர்கள் விலைகொடுத்து வாங்கப்படுகிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள். “கௌரி லங்கேஷுக்கு என்ன நடந்துச்சு பாத்தியா?’ என கதையின் ஓரிடத்தில் அச்சத்தோடு பேசுகிறார்கள். அந்த அச்சம் பத்திரிக்கையாளர்கள்மீதான அச்சம் மட்டுமல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீதான அச்சம். இப்படி, இறந்துகொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தின் மிகச் சிறிய பதிவுதான் இந்தப் பாதால் லோக் என்றும் சொல்லலாம்

 

sankarthirukkural@gmail.com