மணிகண்டனை முதன்முதலாகப் பார்த்த போது, அவன் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற தருணத்திலேயே மேசையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நன்னா பணி மாற்றலானதால் நாங்கள் இந்த ஊருக்கு வந்தோம்.  முஸ்லிம் ஜமாத் நடத்துகிற பள்ளியில்  என்னைச் சேர்ப்பதற்காக நன்னா அழைத்து வந்திருந்தார்.

தலைமையாசிரியர் அறையில் எல்லா வேலைகளும் முடிந்ததும், அவர் மணியடித்து சவுக்கத் அலி வாத்தியாரை வரச் சொன்னார்.

‘ வாத்தியார் பேரன். கொஞ்சம் பார்த்திக்கிடுங்க. ‘

சவுக்கத் அலி சார்  நல்ல சிவப்பாக இருந்தார். வெள்ளைச் சட்டையை முழங்கைக்கும் மேல் எம்ஜிஆர் போல் மடித்து விட்டிருந்தார். நல்ல சுருள் முடி. அவரோடு நடக்கும்போது  குட்டிக்கோரா பவுடர் வாசனை வந்தது.

‘ நல்லா படிப்பியாடா? ‘

‘ குச்சனூர் ஸ்கூல்ல நா ஸ்கூல் ஃபர்ஸ்ட் சார். ‘

‘ நீ வாத்யார் பேரனா இருந்துக்கோ.என்னவாவும் இருந்துக்கோ.ஆனா சவுக்கத்தலி வாத்யார்ட்ட எந்த தலை தெறிச்சவனும் அகராதியா பேச மாட்டான். பயலுஹ கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கோ. இப்போ பொச்ச அமுக்கிட்டு கம்முன்னு வா. ‘

நான் சொன்ன உண்மையில்  என்ன அகராதியைக் கண்டுபிடித்தாரென்று விளங்கவேயில்லை.

‘ந்தா இங்க உக்காரு. ‘

அவர் கை காட்டிய இடத்தில் பவ்யமாய் அமர்ந்து கொண்டேன். அடுத்த நிமிடமே    ‘ ஹெச்எம் கூப்பிடுறாரு சார் ‘ என்று அலுவலகப் பணியாளர் தங்கவேலு அண்ணன் அழைக்க சார் குறுமீசையை நீவிக்கொண்டே ‘ சத்தம் வந்தா கொன்னேபுடுவேன் ராஸ்கோல்ஸ் ‘ என்று ஆஸ்பெஸ்டாஸ் கூரையை நோக்கிக் குச்சியை ஆட்டி விட்டுக் கிளம்பி விட்டார்.

யாரோ என் சட்டையைப் பிடித்து இழுத்தார்கள். ‘ ங்க வா ‘ ஒரு கட்டைக்குரல் உரிமையோடு அழைத்தது. அவனைப் பார்த்ததுமே நீண்ட நாள் பழகியதைப் போல் இருந்தது. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனைப் போல் உடனே பின்னால் சென்று அமர்ந்து கொண்டேன்.

‘ எம் பேரு சுந்தர தமிழ் பாண்டி . நாங்க மறவர் ஆளுஹ. ‘

அறிமுகமே அமர்களமாய் இருந்தது.

‘ ரஷீத் .’

‘ ராவுத்தமாரா ? நீங்களும் , நானும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. உங்களாளுஹள்ல ஒரு  மாமிதான்  எங்க தேவர் ஐயாவுக்கு  பால் கொடுத்து வளத்தாஹளாம். ‘

‘ ம். ‘

எனக்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது. குச்சனூரில் இப்படியெல்லாம் மாணவர்கள் சாதி சொல்லிப் பேசிக் கொண்டதில்லை. கோவில் திருவிழாக்களில் நன்கொடை கொடுத்தவர்களின்   பெயர்களை பாலசுப்பிரமணியம் சார் ஒலிவாங்கியில் சொல்கிற போதுதான் பின்னொட்டாக மறவர் , நாயக்கர் , பிள்ளை ஆகிய சொற்களைக் கேட்டிருக்கிறேன்.

முன்னால் பார்த்தேன். மணிகண்டன் அமர்ந்திருந்த பெஞ்சில் வேறு யாருமே இல்லை.

‘ நீ இங்கயே உக்காந்துக்க .’

‘ அங்க நிறைய இடம் இருக்கு. ‘

சுந்தரத் தமிழ் பாண்டி என் காதுகளுக்கு அருகே வந்து ரகசியம் போல் கூறினான்.

‘ அவுங்க கக்கூஸ் அள்றவுங்க.’

பக்கத்தில் இருந்தவர்கள் இந்த ரகசியத்துக்கு மூக்கைப் பொத்திக் கொள்வது போல் பாவனை செய்தார்கள். ’ இவன் கோட்டைச் சாமி. நம்மாளுஹதான் மறவரு. இது ஜெயராசு. சேட்டைக்காரன். ந்தா இருக்கான்ல இவந்தே கமலு. கருவா கமலு. பெரிய ஸ்டைல் மன்னன்னு நினைப்பு .’

இப்படித்தான் நாங்கள் ஐவரும் நண்பர்களானோம். விளையாட்டு என்றால் நாங்கள் ஒரே அணியில் இருப்போம். பள்ளிக்கு வருகிறபோதும், வீட்டுக்குப் போகிறபோதும் ஒன்றாகவே தோள் மேல் கை போட்டபடி நடந்து செல்வோம். கொடிக்காயோ ,நெல்லிக்காயோ , ஜவ்வு மிட்டாயோ எதுவென்றாலும்  பிறர் கடித்த எச்சில் பண்டத்தை அசூயையின்றிப் பரிமாறிக் கொள்வோம். ஐந்து பேரும் அருகருகே நின்று  குஞ்சுகளை ஆட்டியபடி உலக வரைபடத்தைச் சுவற்றில் வரைய முயற்சிப்போம். வீடுகளிலும்கூட நாங்கள் அவ்வப்போது மதியங்களில் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். சில நேரங்களில் ஏதாவது சின்னச் சின்ன சண்டைகள் வந்து விடும். அது மாதிரியான நேரங்களில் யாரிடமிருந்தாவது இந்த வசனம் தவறாமல் வந்து விடும்

‘ அப்பன்னா எங்க வீட்ல சாப்பிட்டதை கக்குங்கடா. ‘

மணிகண்டன் எங்கள் நட்பின் தருணங்களை முகமெல்லாம் விரிந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருப்பான். அவன் நல்ல சிவப்பு. எங்களில் எவருமே அவனைப் போன்ற நிறமில்லை. ஆனால் அவனுக்கு எப்போதும் சளி பிடித்திருக்கும். மூக்கைச் சிந்தி டவுசரில் துடைத்துக் கொண்டே இருப்பான். வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு வந்தால் சவுக்கத் அலி சார் அவன் பக்கம் திரும்பி ‘ மணிகண்டா,நாளைக்கு காலைல வந்து வகுப்பை கூட்டிர்ரோய் . குப்பம்மாட்ட திங்கிறதுக்கு ஏதாவது வாங்கிக்க . நா காசு கொடுத்திர்றேன்’ . அவன் மௌனமாகத் தலையாட்டுவான்.

அவன் அப்பா மனிதக் கழிவுகளை அள்ளுகிறவரோ , துப்புரவுப் பணியாளரோ இல்லை. ஒரு லாரியில் ஓட்டுநருக்கு உதவி செய்கிறவராய் பணியாற்றினார். அவன் காதுபடவே  பலரும் ‘ கக்கூஸ் அள்ளுறவங்க ‘ என்று கூறுகிறபோது அவன் மறுப்புக் கூறவோ , விளக்கம் தரவோ முயன்றதில்லை. எங்கோ வெறிப்பது போல் பார்த்தபடி அமைதியாகி விடுவான். அவனுக்குச் சிறுவயதில் இருந்தே இந்தச் சொல் பழக்கமாகி இயல்பான ஒன்றாக மனதிற்குள் மாறியிருக்கக் கூடும்.

இந்த விஷயம் கூட ஒரு தடவை காமாட்சி வாத்தியார் ‘ ஒங்கப்பா என்னடா செய்யுறாரு ?’ என்று எல்லோரிடமும் கேட்ட போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அதற்குப் பிறகும் மணிகண்டன் எங்கள் மனதில் ‘ கக்கூஸ் அள்ளுகிறவனாகவே ’ இருந்தான் .

மணிகண்டன் வலிந்து யாரிடமும் பேச முயல மாட்டான். பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருப்பான். இரவுகளில் அவன்  புளி தட்டும் வேலைக்குச் செல்வதாக மாணவர்கள் பேசிக் கொள்வார்கள். ஆசிரியர்களும் அவனை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. ‘ மணிகண்டா ‘ என்று ஒரு அரட்டுப் போடுவார்கள். சடாரென்று எழுந்து முகத்தில் வழிந்த கோழையைத் துடைத்து டவுசரில் தடவி விட்டுக் கவனிப்பது போல் பாவனை செய்வான். அவன் மிகக் குறைவான மதிப்பெண்கள் எடுத்தபோதும் எந்த ஆசிரியரும் அவனை அடித்ததில்லை.விடைத் தாள்களையோ , தர வரிசை அட்டையையோ தருகிற போதுகூட கோவிலில் ஐயர் பாமர ஜனங்களுக்கு விபூதி தருகிற பாவனையையே அவர்கள் கடைப்பிடித்து வந்தனர். சவுக்கத் சார் மகள் ஆயிஷா எங்களோடு தான் படித்தாள். அவள் தன் பிறந்த தினத்துக்கு மிட்டாய் தருகிறபோது எல்லோருக்கும் தேடித் தேடி அவளே தந்தாள். மணிகண்டனுக்கு உரியதை மட்டும் என்னிடம் தந்து சைகை காட்டினாள். மணிகண்டன் அதைப் பார்த்துக் கொண்டேதான் இருந்தான் . ஆனாலும் நான் தந்தவுடன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வாங்கிக் கொண்டான்.

சுந்தரத் தமிழ் பாண்டி எமனே பாசக்கயிற்றோடு வந்தால் கூட ‘அங்க சொர்க்கத்துல மறவர் மக்கள் மன்றம் இருக்கா ?’ என்று கேட்கிற ஆள். சவுக்கத் அலி சார் வரலாறு நடத்துகிற போது ‘ உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட  மதம் எது ? என்று கேட்ட போது உடனே அவசரமாகக் கைகளைத் தூக்கி  ‘ மறவர் சார் ‘ என்று சொல்லி விட்டுக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான். சம்பந்தமில்லாமல் ஜாதி பேசியதாக அவர் அவனைக் கம்பால் அடித்தபோது அமைதியாக இருந்து விட்டு ‘ இவரு பத்தாப்பு பெயிலாம். எங்கப்பா சொல்லிருக்காரு. படிக்கிறப்ப சரியா படிக்காம என்னைய அடிக்கிறாரு பாரு ‘ என்று முணுமுணுத்திருக்கிறான்.

மணிகண்டன் பொதுவாக யாருடனும் சேர விரும்புவதில்லை. ஆனால் அவன் எங்களோடு இணைந்திருக்கவே விரும்பினான்.  கோக்கோவோ , ஒளிஞ்சு விளையாட்டோ, காவியம் மணிக்காவியம் என்று பாடி குனிந்தவனின் முதுகில் ஏறிக் குதிக்கிற   பச்சைக் குதிரையோ நாங்கள் விதவிதமாய் விளையாடும் பொழுதுகளில் அவன் கால்களை அகல விரித்து எங்களையே பார்த்துக் கொண்டிருப்பான். அவனாக வந்து ‘ என்னையும் ஆட்டையில  சேத்துக்கங்க ‘ என்று ஒருபோதும் கேட்டதேயில்லை. ஆனால் அவன் கண்கள் பசித்தவன்  உணவைப் பார்க்கிற மாதிரி எங்களையே தொடர்ந்து வரும்.நாங்களாக மனமிரங்கி அவனை வரச் சொன்னதுமில்லை. ஆனால் அவன் எங்கள் மனம் இளகும் ஒரு நாளுக்காகக் காத்திருந்தான் என்று மட்டும் புரிந்தது.

‘ லே அவனையும் சேத்துக்கலாமா .’

‘ அப்ப நா போறீ. ‘

சுந்தரத் தமிழ் பாண்டி பையை எடுக்கப் போய் விடுவான். அவனைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஒரு தடவை மணிகண்டன் பாக்கெட்டில் கையை விட்டு முறுக்கு மாதிரி ஒரு வஸ்துவை என்னிடம் தர வந்த போது சுந்தரத் தமிழ் பாண்டி கண்களால் முறைத்து ஜாடை காட்டினான்.’ எனக்கு காலையில இருந்து வயித்தால போகுது ‘ என்று சமாளித்தேன். திருப்பித் தந்ததை மௌனமாக வாங்கிக் கொண்டான்.

எனக்கு இந்தச் சம்பவம் மனசை அறுத்துக் கொண்டே இருந்தது. போதாக்குறைக்கு  வெள்ளிக்கிழமை ஜூம் ஆ பயானில் அசரத் அடிமை வம்சத்தில் பிறந்த கருப்பு நிற பிலால் பாங்கு சொல்ல, எல்லோரும் தொழுத கதையைச் சொல்லி இஸ்லாத்தில் ஜாதி இல்லை , பேதம் இல்லை என்று உருக்கமாகப் பேசினார். எனக்கு அவர் பேசப்பேச மணிகண்டனின் நினைவு மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.

தொழுகை முடிந்ததும் தயங்கித் தயங்கி அவரிடம் போனேன்,

‘ அசரத்துங்க! நம்மாளுஹல்ல ஜாதி இல்லைல. யார் எது தந்தாலும் வாங்கிச் சாப்புடலாமா? ‘

‘ தாராளமா . ஆனா கோவில்ல தர்றத வாங்கக் கூடாது. வீட்டுல தர்றத சாப்புடலாம்.  கவுச்சின்னா  கண்டிப்பா ஓதி அறுக்கணும். இல்லன்னா ஹராம் ‘

‘ கக்கூஸ் அள்றவுங்க கிட்ட .’

திடீரென்று அவர் மௌனமாகி விட்டார். அடுத்து ஏதோ கேட்க முனைந்த போது       ‘ போ..போயி ஒங்க நன்னாட்ட கேளு.’ தலையில் இருந்த  உருமாலை அவிழ்த்துக் கட்டுவது போல் என்னுடன் பேசுவதைத் தவிர்க்க முனைந்தார்.

இந்த  நட்புக்குச் சோதனையாய் எங்கள் பகுதியில்  அடுத்தடுத்துப் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாதித் தலைவர் போடி மீனாட்சிபுரத்தில் என்னவோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. தேவரை அவமானப்படுத்திப் பேசி விட்டார் என்று அங்கங்கே விவாதித்துக் கொண்டார்கள். நன்னாவும் , மாமாவும் இதைப் பற்றியே வீட்டில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். மாமாவுக்கு அந்தச் சாதியில் நண்பர்கள் அதிகம் என்பதால் அவர் மறவர்களையே ஆதரித்துப் பேசினார்‌. நன்னா யாரையும் ஆதரிக்காமல் பட்டும்  படாமல் நழுவி விடுவார். அந்த ஊரில் தொடங்கிய கலவரம் மாவட்டம் முழுவதும் பரவியது. மறவர்களோடு, பிள்ளைமார் உள்ளிட்ட வேறு சில சாதிக்காரர்களும்  ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டனர்.  இவர்களும் துணிந்து எதிர்ப்பதற்கு  திராணியிருந்த ஊர்களில் மோதல்களும் , கும்பலாகப் போய் தீ வைப்பதும் நிகழ்ந்தன. அங்கங்கே கொலை முயற்சிகள் அரங்கேறின. ‘பத்து பேரைப் போட்டுட்டானுங்க’, ‘ அந்த ஊரே காலி ‘ என்றெல்லாம் விதவிதமாய் வதந்திகள் கிளம்பின.பல ஊர்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களின் கால்களில் சரணடைந்து பாதுகாப்பு தேடினர்.  அவை பெருமிதமாகவோ , விஷமமாகவோ பல ஊர்களுக்கும் பரவின.உச்சகட்டமாக ஐந்து பேருந்துகள் சின்னமனூர் காந்தி சிலை அருகே தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.இதன் தாக்கம் பள்ளியிலும் எதிரொலித்தது.

‘ ஏண்டா உங்க பயலுஹ சும்மா இருக்க மாட்டானுஹளாடா. ‘

என்று காமாட்சி வாத்தியார் கேட்ட நாளிலிருந்து கமல் தனக்குள் ஒடுங்கிப் போனான். இந்த இம்சை ஆரம்பித்ததில் இருந்து சுந்தரத் தமிழ் பாண்டி வேறொரு ஆளாய் மாறியிருந்தான். அவர்கள் வீட்டில் எல்லோரும் பேசிக் கொள்கிற விஷம் தோய்ந்த வார்த்தைகளை இங்கே வரி விடாமல் ஒப்பிக்க கமலும் , ஜெயராஜூம் அடிக்கடி முகம் சுருங்கினார்கள்‌ . கமல் அமைதியாயிருக்க தாங்கிக் கொள்ள முடியாமல் ‘ ஆளே இல்லாத பஸ்ஸ எரிக்கிறவனுக்குத்தே வீரன்னு பேரா ?’ என்று ஜெயராஜ் எதிர்த்துப் பேச அதுவரை அமைதியாய் இருந்த கோட்டைச் சாமியும்         ‘ எங்க சாதி பத்தி சின்ன சாதிக்காரன் நீ  பேசாதடா. நாங்க சிங்கம்டி. சீறுனா சின்னமனூரே காலி ‘ என்று கைகளை மடக்கி, சதையைத் திரட்டி  குண்டு பல்பு மாதிரி விரல்களால் பிடித்துப் புஜபலம் காட்டினான்.

அன்று மதியமே இருவரும் பின்னால் போய் விட, பின்னாலிருந்த சிலர் எங்கள் பெஞ்சில் அமர்ந்தனர்.மணிகண்டன் மௌனமாய் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று மாலை நானும் சுந்தரத் தமிழ் பாண்டியும் வெளியேற முனைந்தபோது , கமல் ஆவேசமாக என்னை நோக்கி வந்தான்.

‘ நீ அவனுஹ கூடயா ? எங்க கூடயா ?’

‘ரெண்டு பேரு கூடயுந்தே ‘ என்று சொல்ல முனைவதற்குள் சுந்தரத் தமிழ் பாண்டி பாய்ந்து அவன் சட்டையைப் பற்றினான். ‘ நாங்க பங்காளிஹடா. எங்களையாடா பிரிக்கப் பாக்குற ?’ என்று அவன்மீது பாய்ந்தான். இருவரும் மண்ணில் புரண்டு உருள கோட்டைச்சாமியும் , ஜெயராஜூம் ஓடி வந்து விலக்கி விடாமல்  இணைந்து சண்டை போட்டனர். தலைமையாசிரியர் பிரம்போடு வந்து கத்திய பிறகும் அவர்கள் விலகவேயில்லை. வேறு சில ஆசிரியர்கள் வந்து ஒட்டிக் கொண்ட சதைப் பிண்டங்களைப் பிய்த்தெடுப்பது போல் அவர்களை விலக்கி விட்டனர்.

‘ யாரு மேலடா தப்பு. ‘

தலைமையாசிரியர் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டு என்னை நோக்கிச் சீறினார். நான்கு பேரும் எனக்குப் பின்னால் மௌனமாகத் தலைகுனிந்து நின்றிருந்தனர்.

‘ ஒன்னைத்தாண்டா கேக்குறீ..ஊமைக்கொத்தான். நீதான அங்க இருந்தே. ‘

‘ ரெண்டு பேர் மேலயுந்தேன். ‘

என் குரல் எனக்கே கேட்காது போலிருந்தது. ஆனால் அது தலைமையாசிரியருக்குக் கேட்டு விட்டது. நான்கு பேரும் மறுநாள் வருகிற போது அவர்களின் அப்பாவோடுதான் வர வேண்டும் என்று ஆணையிட்டதோடு நில்லாமல்  ‘ அண்ணாக்கயித்துல டவுசர் நிக்காம குண்டிய காட்டிட்டு அலையுற வயசுல ங்கொப்பனோலிஹளா சாதி கேக்குதோ சாதி ‘ என்று சொல்லிக் கொண்டே கம்பு ஒடிகிற வரை  வெளுத்தெடுத்து விட்டார். என்னை முறைத்துக் கெண்டே அவர்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபடி வெளியேறினர்.

மறுநாளும் வழக்கம் போல் இரண்டாவது பெஞ்சிலேயே பழக்க தோஷத்தில் அமர்ந்தவன் சுந்தரத் தமிழ் பாண்டியைப் பார்த்ததும் பையை எடுத்துக் கொண்டு எழுந்தேன். முன்னால்தான் வரப் போகிறேன் என்று யூகித்த மணிகண்டன் எனக்கு இடம் விடுவதற்காகச் சற்று விலகி உட்கார முனைந்தான். ஆனால் நான் நான்காவது பெஞ்சுக்குப் போய் அக்கீமோடு அமர்ந்து கொண்டேன். ஐந்தாம் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கமலும் , ஜெயராஜூம் என்னை முறைத்துப் பார்த்தார்கள். நான் அவர்களைக் கவனிக்காதது போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

வருகைப் பதிவேடு எடுத்து முடிந்ததும்.

‘ என்னடா பஞ்ச பாண்டவர்களா.. பிரிஞ்சிட்டீங்களா ?’

என்று கேட்க சிலர் சிரித்தார்கள். நாங்கள் பதில் சொல்லாமல் மௌனமாயிருந்தோம்.

‘ எந்த பாஞ்சாலிடா ஒங்களைப் பிரிச்சது. ‘

‘ ஹெச்.எம் சார்.’

சொன்னது யாரென்று தெரியவில்லை. சார் சாக்பீஸை இலக்கில்லாமல் எவன் மீதோ எறிந்து விட்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையை நோக்கிக் கம்பை ஆட்டினார்         ‘ ராஸ்கோல்ஸ் தோலை உரிச்சு  உப்புக்கண்டம் போட்ருவேன். ‘

அதற்கடுத்த நாட்களில் 2  திமுக அமைச்சர்கள் சின்னமனூருக்கு வந்தார்கள். ஊரில் கலவரங்களின் அமளி துமளி ஓய்ந்து விட்டாலும் எங்களுக்குள் விழுந்த கங்கு அணையவேயில்லை. ஒருவர் வந்தால் மற்றவர்கள் விலகி நிற்க , ஒருவரை ஒருவர் சீண்ட , சுவர்களில் கிறுக்கி வைக்க , கும்பலாகச் சேர்ந்து  போடா அஜக்கு  நீதேண்டா தோத்தாங்கோலி ‘ என்று இலக்கே இல்லாமல் எங்கள் பனிப்போர் நீண்டது. இரு குழுக்களோடும் அவ்வப்போது சம்பந்தமில்லாமல் வேறு சிலரும் சேர்ந்து கொள்ள எதற்கென்றே தெரியாமல் என் தலைமையிலும் ஒரு குழு உருவானது.

மார்ச் மாதம்தான் நிலநடுக்கம் வந்ததென்று நினைக்கிறேன். வீட்டில் படுத்திருக்கும்போதே தலையணை , பாய், பீரோ , அண்டா எல்லாம் என்னோடு சேர்ந்து ஆடியது. மூன்று குடங்கள் திண்டிலிருந்து தரையில் கவிழ்ந்தன. ‘ சட்டுன்னு வெளிய வாங்க’ என்கிற கூக்குரல் கேட்டு எல்லோரும் வெளியே ஓடினோம். பலரும் அங்கே நின்றிருந்தார்கள். அக்கீம் அவன் அம்மாவின் கையை விட்டு விட்டு வேகமாக ஓடி வந்து என் காதில் சோகமாகச் சொன்னான் ,’ நிலநடுக்கம் வந்தப்ப தீப்பெட்டில வச்சிருந்த  பச்சை பொன்வண்டு செத்துருச்சுடா.’ இதைச் சொல்லும் போது அவன் குரல் கம்மியது. எனக்கும் அழுகை வரும் போல் இருந்தது. ஒரு சின்ன உயிரைக் கொல்வதற்காகவா கடவுள் இத்தனை பேரை வீதியில் நிறுத்தியிருக்கிறார்? என்று விநோதமான யோசனை வந்தது ‘ கியாமத் நாளின் அறிகுறி. அல்லாவோட கோவப் பார்வை மனுஷப் பய மேல விழுந்திருச்சு . இனி துன்யா அவ்வளவுதான் ‘ அந்த அமளிக்கு நடுவிலும் உளுந்த வடையைத் தின்று கொண்டே யூசுஃப் மாமு சொல்ல ,பெண்கள் எல்லோரும் தலையில் சீலை போட்டபடி அதை ஆமேதித்தார்கள். நானும் , அக்கீமும் மேலே நிமிர்ந்து பொன்வண்டின் ரூஹை வானத்தில் தேடிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் வகுப்பில் சவுக்கத் அலி சார் பாடம் நடத்தாமல் நிலநடுக்கம் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது ? என்று அறிவியல் பூர்வமாக ஆரம்பித்தவர் கொஞ்ச நேரத்தில் அவரையும் அறியாமல் ‘உலகம் அழியப் போகுது  ‘, ‘ மனுஷ வாழ்க்கை கொசு புழுக்கை போடற மாதிரிதே,  ‘ இன்னிக்கு செத்தா நாளைக்கு குஸ்கா’என்றெல்லாம் பேசி நிலையாமையை நோக்கி நகர்ந்து விட்டார். முந்தைய நாள் வீட்டிலும் , தெருவிலும் நாங்கள் உணர்ந்த மரணத்தின் பீதி அவர் பேச்சோடு ஒன்ற வைத்தது. பேசிக்கொண்டே வந்தவர் ‘ சாதி என்னடா சாதி, மயிறு..எல்லாம் ஒண்ணுமில்லடா.அல்லா நினைச்சா ஆலமரம் இலவம் பஞ்சா பறந்து போயிரும். இதுல பெருசா மீசைய முறுக்கிக்கிட்டு பஸ்ஸ எரிக்கிறானுஹ. ஒன்னு மண்ணா திரிஞ்ச பலாய்ஹ எல்லாம் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு பேசாம அலையுறானுஹ . இன்னிக்கு இருக்கிறவன் நாளைக்கு இல்லங்கிறதுதான் பூமியோட விதிங்கிறப்ப இன்னிக்கு ஏண்டா ஒருத்தன்ட்ட பேசாம இருக்கனணும். இன்னொரு முறை இங்க பிறந்து இதே எடத்துல ஒண்ணு மண்ணா இருப்பங்கிறதுக்கு ஏதாவது கேரண்டி உண்டாடா?. மண்ணு திங்கப் போற மனுஷ மக்க ஏண்டா குண்டிய திருப்பிட்டு பொச கெட்டு அலையுறீங்க ..’ அதற்கடுத்து எதையோ சொல்ல வந்தவரால் பேச முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. அழுது விடுவோமோ என்று பயந்தவர் வழக்கம் போல் பிரம்பை எடுத்து ‘ ஹெச். எம். ரூமுக்குப் போறேன் . சத்தம் வந்துச்சு..டவுசர் அவுந்துரும் ராஸ்கோல்ஸ் ‘ என்று  ஆஸ்பெட்டாஷை பார்த்துக் கத்தி விட்டு வெளியேறி விட்டார்.

அன்று கரும்பலகையை அழிப்பது என் முறை. அழிப்பானைத் தேடிக் கொண்டேயிருந்தேன்.சவுக்கத் அலி சார் திரும்ப வந்தால் கத்துவார்‌ . தேடித் தேடி நடந்து கொண்டேயிருந்தேன். ‘ ந்தா ‘ சுந்தரத் தமிழ் பாண்டி அழிப்பானை எடுத்துத் தந்தான். என்னைத் திட்டு வாங்க வைப்பதற்காக நேற்றே எடுத்துத் தன் பையில் ஒளித்து வைத்திருக்கிறான். எனக்கு நேற்று அதை எடுத்து ஒளித்து வைத்தவன் என்பதால் உருவான கோபத்தை விட ,இப்போது என் பதைபதைப்பைப் பார்த்து விட்டு எடுத்துத் தந்ததால் உருவான  சந்தோஷம் கூடுதலாக  இருந்தது . திரும்பி வந்து ‘ தேங்ஸ்டா ‘ என்றேன். அவன் பதிலேதும் சொல்லாமல் டவுசருக்குள் கை விட்டு ‘ ஊறப் போட்ட கல்ல..சாப்புடுறியா ‘ என்றான். அதை வாங்காமல் ‘ கமலுக்கு ‘ என்றேன். அவன் அப்போது மௌனமாக இருந்தான். ஆனால் கண்களில் கோபமோ , வெறுப்போ தென்படவில்லை.நான் பின்பக்கம் திரும்பி ‘ கமலு பாண்டி கூப்புடுறான் ‘ என்று சொல்லி முடிப்பதற்குள் ஜெயராஜூம்  கூட சேர்ந்து வந்தான்‌ .’ உப்பு கக்கிதுடா ‘ என்று ஜெயராஜ் சொல்ல ‘ அப்படியா ? ங்கொப்பனோலி ஒண்ணுக்குல ஊற போட்ருப்பான் ‘ என்று கோட்டைச்சாமியும் இணைந்து கொள்ள ஐந்து பேரும் சிரித்துக் கொண்டோம். சார் திரும்பி வந்தபோது நாங்கள் ஐவரும் ஒன்றாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். எங்களைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவுமே நிகழாதது போல் முதலாம் பானிபட் போரில் சண்டை போட்ட இப்றாஹிம் லோடியை  வகுப்புக்குள் அழைத்து‌ வந்து அல்லாவையும், நில நடுக்கத்தையும் சுத்தமாக மறந்து விட்டார். மணிகண்டன் அப்போதும்  பூரிப்போடு திரும்பி ஒரே ஒருமுறை எங்களைப் பார்த்துச் சிரித்து விட்டு மௌனமாகி விட்டான்.

இடைவேளையில்’ ஹெச். எம் அடிச்சது வலிச்சுதாடா ‘ என்றேன்..’ ச்சே ச்சே, மல்லிகைப்பூவை மஞ்சத்தண்ணில கலந்து ஊத்துன மாதிரி இருந்தது. அடியாடா அது? குண்டிய குறி வச்சே கும்மி எடுத்துட்டாப்ல. அந்தாளைக் கூட பெறவு பார்த்துக்கலாம். முதல்ல அந்தக் குச்சிக்கு ஒரு செய்வினை வைக்கணுண்டா ‘ என்று கமல் கலாய்க்க, எங்களுக்குள் விட்டுப் போயிருந்த ஏதோ ஒன்று மீண்டும் இழைந்து மொத்தமாய் தழுவிக் கொண்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக விளையாட வேண்டும் என்கிற ஆசையோடு மணி அடித்ததும் ஓடி வந்தோம். மணிகண்டனும் எங்களுக்குப் பின்னாலேயே வந்து வழக்கம் போல் கடைசிப் படிக்கட்டில் பையை வைத்தபடி லேசாய்ச் சாய்ந்து கொண்டான்.

‘ லே பாண்டி! மணியையும் ஆட்டைல சேத்துக்குருவமா ?’

பாண்டி பதில் கூறும் முன் கோட்டைச்சாமியும் , கமலும் ‘ மணி நீயும் வர்றியா விளையாட ? ,என்று கேட்கவும் மணி திடுக்கிட்டு எழுந்து நின்றான். அவன் கண்கள் என்னையே உற்று நோக்கின. நான் கண்களாலேயே அவனை அழைத்தேன். ‘ மணி பிகு பண்ணாம வாடா. சார் சொன்னதைக் கேட்டீல . எல்லாமே ஒண்ணுதான்டா’ ஜெயராஜூம் தன் பங்குக்கு அழைக்க ‘ வர்றது ‘ என்று  மெதுவாகச் சொன்னான் சுந்தரத் தமிழ்ப் பாண்டி.

அதுவரை எந்த யோசனையுமின்றி ஆசுவாசமாகச் சாய்ந்திருந்தவன் இப்போது அவசரமாக சிறுநீர் கழிக்கப் போகிறவனைப் போல் பையை எடுத்தான்.

‘ ல்ல. நா வல்ல. வீ..ட்ல .வே.ல  இ.ர்க்கு ‘

சளியால் அடைத்த மூக்கோடு அவன் ஒவ்வொரு சொல்லாகச் சொல்லியபடி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

‘ லே மணிகண்டா. ‘

‘ மணி .’

‘ டேய். ‘

‘ யப்பா ரோஷக்காரா .’

என்று நாங்கள் மாற்றி மாற்றி கத்திக் கொண்டிருக்கப் பள்ளி மைதானத்தில் நான்கைந்து ஆசிரியர்கள் நேற்றைய நில நடுக்கத்தையும் , கடவுளின் கருணையையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.  எதையுமே கவனிக்காமல் மணிகண்டன் தன் போக்கில் விசுவிசுவென்று நடந்து கொண்டேயிருந்தான்.நாங்கள் எந்த ஆட்டத்தையும் ஆரம்பிக்கத் தோன்றாமல்  வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.