1

 

லூயி பிரான்சுவா தனது வீட்டிலிருந்து வெளியே வந்தார். நேற்றைக்கும் இன்றைக்கும் எந்த மாற்றமும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. ஆனால், மனதளவில் நேற்றை விட இன்று அவருக்கு விநோதமாகவும் அந்நியமாகவும் இருப்பதாகத் தோன்றியது. மெல்லக் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மக்கள் அவர்களுள் மகிழ்ச்சியாகவும் தன்னை வெறுப்புடனும் பார்ப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. ஒருவேளை அது தன்னுடைய பிரமையாகக் கூட இருக்கலாம் என்று நினைத்தார். பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தவுடன், இனி நமக்குக் காலம் வெகுதூரமில்லை என்பதை உணர்ந்தார்.

லூயி பிரான்சுவா கடற்கரையில் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். அவ்வப்போது எதிரே வந்தவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தியும், அவர் கவனம் வேறு எங்கேயோ இருந்தது. நின்று திரும்பி அலைகளைப் பார்த்தார். அலைகள் அவரிடம் ஏதோ சொல்வதைப்போல் தோன்றியது. ஒருவேளை ‘எதுவும் நிரந்தரமில்லை’ என்றுதான் இந்த அலைகள் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறதோ என்று நினைத்தார். திரும்பிப்பார்த்தார். சுற்றி ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பிரெஞ்சு கட்டிடகங்கள் எல்லாம் எப்போது வேண்டுமானாலும் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்துவிடுமோ என்று அச்சமேற்பட்டது. வேகமாக நடந்து தன் வீட்டிற்குச் சென்றார்.

லூயி புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கத்தில் ஒரு முக்கியமான அதிகாரியாக இருந்தார். நீண்டகாலமாக நாட்டை விட்டு இங்கு வந்து மிகவும் சோர்ந்துபோய் இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. நாட்டின் சூழ்நிலையும் சரியில்லை என்பதை உணர்ந்தேயிருந்தார். பிரிட்டிஷ் முழுவதும் வெளியேறிய பிறகு நமக்கு நெருக்கடிகள் மேலும் அதிகரிக்குமென்று அனைவருக்கும் தெரிந்தாலும், புதுச்சேரி மக்கள் நம்மை அவ்வளவு கடுமையாக எதிர்க்கமாட்டார்கள் என்றும் அவர் மனம் நம்பியது. என்ன செய்வதென்று தெரியாத சூழல். நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரான்ஸுக்கே சென்றுவிடுவதென்று. அதை அவர் மனைவியிடம் தெரிவித்தார். மனைவியும் அதற்குச் சம்மதித்தார். தன் முடிவைப்பற்றி பிரான்ஸில் இருக்கும் தன் மகனுக்கும் மகளுக்கு தந்தியடித்தார். அவர்களுக்கும் அதில் மகிழ்ச்சி என்றே பதில் வந்தது. மீண்டும் ஒருமுறை நன்றாக ஆலோசித்தார். தான் எடுத்தது நல்ல முடிவு என்றே அவருக்குத் தோன்றியது. லூர்துசாமி இதை எப்படி எடுத்துக்கொள்வான் என்று யோசித்தார். ஒருவேளை அவன் மகிழலாம். தன்னுடைய முடிவை அரசுக்குத் தெரியப்படுத்திவிட்டுக் காத்திருந்தார். ஊரை விட்டுப் போய்விடலாமென்று முடிவெடுத்தவுடனேயே லூயிக்குத் திடீரென்று புதுச்சேரியின்மேல் தீராத காதல் உண்டானது. நன்றாகச் சுற்றினார். விருப்பமான இடங்களுக்கு அடிக்கடி சென்றார். அவரது செயல்களில் ஏற்பட்டுள்ள விநோதமான மாற்றத்தை மற்றவர்கள் கவனிக்காமல் இல்லை.

லூர்துசாமியிடமும் தன் முடிவைச் சொல்லிவிடலாம் என்று நினைத்தார் லூயி. லூர்த்துசாமி லூயியினுடைய நம்பிக்கையான வேலையாள். அவருக்குத் தேவையான அனைத்தையுமே அவர் லூர்துசாமியிடமே கேட்டுப்பெறுவார். லூர்துசாமியின் இயற்பெயர் கோவிந்தசாமி. தனது பதினாறாவது வயதில் அவர் லூயியிடம் வேலைக்குச் சேர்ந்தார். வெகு விரைவிலேயே பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக்கொண்டு லூயிக்கு நெருக்கமானார். லூயியும் அவரிடம் அன்பாகவே நடந்துகொண்டார். தன் குடும்பத்தில் ஒருவனாகக் கருதினார்.

லூயி அழைத்ததின் பேரில் லூர்துசாமி அவர் அறைக்குள் நுழைந்ததுமே ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்தார். மெல்ல லூயியின் அருகில் சென்று நின்றார். லூயி பிரெஞ்சில் பேச ஆரம்பித்தார்.

“லூர்துசாமி.”

“மிசே.”

“எப்படி இருக்க.”

“எனகென்னங்க மிசே. ரொம்ப நல்லா இருக்கேன்.”

“உன் மனைவிக்கு இப்போ எத்தனையாவது மாசம்.”

“எட்டு மிசே.”

“ம்…”

லூயி ஏதோ சொல்ல வந்து தயங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை லூர்து உணர்ந்தார். இருந்தாலும் அவரே சொல்லட்டும் என்று அவர் முகத்தையே பார்த்தபடி அமைதியாக இருந்தார். சிறிது யோசனைக்குப் பிறகு லூயி மெல்ல வேறு எங்கேயே பார்த்தபடி பேசினார், “லூர்த்துசாமி, நான் பிரான்ஸுக்கே திரும்பப் போயிடலாம்னு இருக்கேன்” என்றார். எதாவது பதில் வரும் என்று லூயி எங்கோ பார்த்தபடி காத்திருந்தார். லூர்துசாமியிடமிருந்து எந்த பதிலும் வராததினால் திரும்பி அவரைப் பார்த்தார். லூர்துசாமியின் கண்கள் கலங்கியிருந்தது. அவர் நிச்சயம் அழுகிறார் என்று அவரின் முகபாவனையில் கண்டுகொண்டு லூயி இருக்கையிலிருந்து எழுந்தார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தார். யோசித்தார். சட்டென ஏதோ நினைத்தவராக லூர்துசாமியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

லூர்துசாமிக்குக் கண்கள் இருண்டுகொண்டு வந்தன. திடீரென்று லூயி இப்படிச் சொல்வார் என அவர் எதிர்பார்க்கவில்லை. பிரிட்டிஷ் அரசு வெளியேறுவது இங்கு பலருக்குக் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ‘எங்கிருந்தோ வந்தார்கள். மீண்டும் போகிறார்கள். நமக்கென்ன’ என்று தன்னை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றார். ஆனால், மனம் ஏனோ கலங்கியது. லூயி மற்ற பிரெஞ்சு அதிகாரிகளைப் போல் அல்ல. மிக அன்பானவர். அவ்வளவு சுலபத்தில் கடுமையான ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வராது. அவர் தன்னை இப்படி விட்டுவிட்டுப் போவார் என்று லூயி இதுவரை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. லூர்துசாமி கலங்கியபடியே நின்றுகொண்டிருந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகுத் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தார்.

“லூர்துசாமி…”

“மிசே.”

“உனக்கு விருப்பமிருந்தால் நீயும் உன் மனைவியும் எங்களுடன் பிரான்ஸுக்கு வரலாம். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இப்போது போல் நீ எப்போதும் எங்களுடன் இருக்கலாம்” என்றார்.

லூர்துசாமி இப்போது வாய்விட்டே அழுதுவிட்டார். அவர் இருவரின் கால்களிலும் விழப்போனார். லூயி தடுத்து எழுப்பினார். ”உன் மனைவியிடம் சொல். இன்னும் ஆறு மாதத்திற்குள் நாம் பிரான்ஸ் போகப்போகிறோமென்று” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். லூர்துசாமிக்குத் தலைகால் புரியவில்லை. லூயியும் அவர் மனைவியும் சிரித்துக்கொண்டே வெளியேறினர்.

அன்று இரவு லூர்துசாமி வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தன் மனைவியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவர் எதிர்பார்த்ததுபோல் இல்லை மனைவின் முகபாவம். அவள் அஞ்சியதைப்போல் உணர்ந்தார்.

“என்ன… ஏன் ஒருமாதிரியாகிவிட்ட? பிரான்ஸுக்குப் போறதுல உனக்கு சந்தோஷமில்லையா.”

“அது இல்ல, ஏற்கனவே இங்க ரொம்ப பேருக்கு நீங்க அந்த தொரகிட்ட வேலை செய்யறது புடிக்கல. ஜாடமாடையா பேசறாங்க. போன வாரம் கூட இந்தப்பக்கமா ஒரு ஊர்வலம் போச்சி. நம்ப ஊட்டாண்ட வந்ததுமே ஜாடமாடயா உங்களத்தான் கண்டபடி பேசினாங்க. இதுல நாம அவருகூடயே போறோம்னு தெரிஞ்சா சும்மாவா இருப்பாங்க.”

அவள் சொல்வது சரியெனவே லூர்துசாமிக்குப் பட்டது. “அப்ப போவ வேணாமுன்னு சொல்றயா.”

“அது இல்ல. யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்றேன்.”

லூர்துசாமி சரியெனத் தலையாட்டினார்.

 

2

2000ஆவது ஆண்டின் முற்பகுதி.

எதிர்வீட்டு கேசவன் புதிதாக ஒரு லேடிபேர்ட் சைக்கிள் வாங்கியிருந்தான். அவனுக்கு அந்த சைக்கிளின் மேல் ஒரு ஈர்ப்பு. கேசவனின் உடல்வாகுக்கு அதை அவன் ஓட்டுவதைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. நானும் அவனும் தினமும் மாலை ஐந்து மணிக்குக் கடற்கரைக்குப் போக ஆரம்பித்தோம். அதற்கு முன்பு வரை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போவோம். ஒன்று அவன் அப்பாவின் சைக்கிள் கிடைக்கும்போது அல்லது என் அப்பாவின் சைக்கிள் கிடைக்கும்போது. கேசவனுக்கு என்னைவிட இரண்டு வயது அதிகம். இருந்தாலும் இருவருமே வாடா போடா நண்பர்கள்தான். அவன் பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்தான். நான் ஒன்பதாவது. இருவருமே முதலில் ஜீவானந்தம் பள்ளியில் படித்தோம். பத்தாவதில் அவன் நல்ல மதிப்பென் எடுத்ததால் வ.ஊ.சி. பள்ளியில் சேர்ந்தான். பள்ளி நேரம் தவிர இருவரும் ஒன்றாகத்தான் சுற்றினோம். பெரும்பாலும் கடற்கரைதான். உப்பளம் சாலை வழியாகப்போவோம். இந்திராகாந்தி மைதானத்தைக் கடந்து வலதுபுறம் திரும்பித் தீயணைப்பு நிலையத்தை தாண்டி டூப்ளைக்ஸ் சிலைக்கு எதிரில் சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் சாலையைக் கடந்து நடைமேடைக்கு வருவோம். அந்த சாலையில் எப்போதாவது இருசக்கர வாகனங்கள் வந்துபோகும். டூப்ளைக்ஸ் சிலையிலிருந்து எதிர்முனையில் இருக்கும் சாராய ஆலை வரைக்கும் நடப்போம். சாராய ஆலை முன்பு ஒருகாலத்தில் இயங்கியது. இப்போது அது ஒரு பாழடைந்த கட்டிடம். எதாவது பேசிக்கொண்டே நடப்போம். பெரும்பாலும் கிரிக்கெட்தான். எப்போதாவது பெண்கள் பற்றி. கேசவனுக்குப் பெண்களைப் பற்றிப் பேசப் பிடித்திருந்தது. எனக்குள் பெண்களைப் பற்றி பலவிதமான விஷயங்களை விதைத்துக்கொண்டிருந்தான். அதுவரை கழுத்தில் முத்தம் கொடுத்தால் குழந்தை பிறந்துவிடுமென்று நான் தவறாக நினைத்துக் கொண்டிருந்ததை, அவன்தான் மாற்றி அதன் சூட்சுமத்தை விளக்கினான்.

எங்கள் கடற்கரை பயணத்தின் ஒருநாள். வழக்கம் போல் நாங்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையைக் கடந்தோம். நன்றாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. நடைமேடையில் ஏறி நின்று சுற்றி ஒருமுறை பார்த்தோம். அருகிலிருந்த சிமெண்ட் இருக்கையில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார். நிச்சயம் அவருக்கு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். சற்றுப் பருமனாக இருந்தார். எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் எங்கள் வழக்கமான நடையைத் தொடர்ந்தோம். சாராய ஆலை வரை சென்று திரும்பி வந்துகொண்டிருந்தோம். டூப்ளைக்ஸ் சிலை அருகே வந்துகொண்டிருந்தபோது சற்றுத் தொலைவில் அந்தப் பெண்மணி மெல்ல எழுந்து சாலைக்கு அருகே நடக்க முடியாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் புடவை கட்டியிருந்தாலும் அதில் ஒரு அந்நியத் தன்மை தெரிந்தது. அது என் அம்மா கட்டுவதுபோல் இல்லை. சாலையைக் கடக்க வேண்டுமென்று முயன்றார். சாலையில் எந்த வண்டியும் அவர் அருகில் வரவில்லை. தொலைவில் ஒரு சைக்கிள் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் அந்த சைக்கிள் கடக்கும் வரை காத்திருந்தார். அதற்குள் நாங்கள் அவரை நெருங்கியிருந்தோம். நாங்கள் அருகில் வந்ததும் கொஞ்சம் பிரெஞ்சு கலந்த தமிழில், “தம்பிகளா, கொஞ்சம் அந்தப்பக்கம் உட்டுருங்களேன்” என்றார். கேசவன்தான் அவர் கையைப்பிடித்து மெல்ல அழைத்துச்சென்றான். நாங்கள் சைக்கிள் விட்டிருந்த மதில் அவருடைய வீட்டினுடையதுதான் என்று தெரிந்துகொண்டோம். பத்து அடிக்கு மேல் உயரம் இருக்கும். மதிலுக்குப் பின்புறம் இருந்த கட்டிடத்தின் சிறிது பகுதிமட்டும் வெளியே தெரியும். மற்றபடி எதுவும் தெரியாது. “மெர்சி” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். கேசவனும் பதிலுக்கு “மெர்சி” என்றான். நான் கூச்சத்துடன் அமைதியாக இருந்தேன். அவர் மெல்ல வீட்டிற்குள் சென்று கதைவை சாத்திக்கொண்டார்.

அதன்பிறகு அவரை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். பார்த்தவுடன் சிரிப்பார். எனக்கும் கூச்சம் மறைந்திருந்தது. நாங்கள் நடந்துவிட்டு வரும்வரை காத்திருப்பார். பிறகு நாங்கள் அவர் கையைப் பிடித்து மெல்லச் சாலையைக் கடக்க உதவி செய்வோம். வழக்கம்போல் ‘மெர்சி’க்களுடம் முடியும். பிறகு எங்களுடன் சிறிது தூரம் நடக்க முடியாமல் நடக்க ஆரம்பித்தார். முன்பே அவ்வப்போது எங்கள் பெயர்கள், எங்கிருந்து வருகிறோம், எங்கள் குடும்பப் பின்னணி என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். நான் அவரிடம் “உங்க பேரு என்ன?” என்றேன். அவர் சிரித்துக்கொண்டே “ஜென்னி” என்றார்.

அன்று வழக்கம்போல அவரை சாலையைக் கடந்து வீட்டு வாசலில் விட்டுவிட்டு நகர எத்தனித்தோம். எப்போதும்போல் ‘மெர்சி’ என்றுதான் சொல்வாரென நினைத்தோம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக எங்களை உள்ளே அழைத்தார். முதலில் நாங்கள் தயங்கினோம். உண்மையில் கேசவன்தான் தயங்கினான். எனக்கு நீண்ட நாட்களாக மதிலுக்குப் பின்புறம் அந்த வீடு எப்படியிருக்கும் என்று பார்க்க ஆசை. “வாங்க, வந்து ஒரு காபி குடிச்சிட்டு போலாம்” என்றார். கேசவன் அசையவில்லை. நான் ஒரு அடி எடுத்து வைத்ததும் கேசவன் தானாக வந்தான். முதலில் அவர் மெல்ல உள்ளே நுழைந்தார். பிறகு நாங்கள். கதவைச் சாத்திவிட்டு அவர் முன்னே செல்லும் வரை காத்திருந்தோம். சட்டென ஒருநொடி, வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்ததைப் போல் இருந்தது. ஒரு சிறிய நடைபாதை. இருபக்கமும் விதவிதமாக இதுவரை பார்த்தேயிராத செடிகொடிகள். மலர்கள். திடீரென்று எங்கள் மீது படர்ந்த வாசனை. எல்லாமே இந்த உலகத்தினுடையது இல்லையென்று நம்பினோம். நடைபாதையில் வலதுபுறம் ஒரு கிளை பிரிந்து உள்ளேயே இருந்த ஒரு சிறிய வீட்டிற்குச் சென்றது. நாங்கள் நடைபாதை வழியாக அவரைப் பின் தொடர்ந்து பெரிய வீட்டிற்குச் சென்றோம். கண்ணாடிக் கதவின் வழியாக உள்ளே போவதற்கு முன்பே அதன் அழகில் நாங்கள் வாயைப் பிளந்துகொண்டிருந்தோம். மஞ்சள் விளக்குகளால் அந்த வீடு மின்னிக்கொண்டிருந்தது.

 

3

அன்றிலிருந்து ஏழு மாதத்திற்குப் பிறகு லூயி குடும்பத்துடன், லூர்துசாமியும் அவர் மனைவியும் ஐந்து மாத பெண் குழந்தையும் பிரான்ஸுக்குச் சென்றனர். பல எதிர்ப்புகளை மீறியே லூர்துசாமி செல்ல வேண்டியிருந்தது. குடும்பம் ஒருபக்கம் என்றால், கட்சிக்காரர்கள் மற்றொரு பக்கம். லூர்துசாமி ஒரு தேசத் துரோகி என்று அவர் காதுபடவே பேசினார்கள். மேலும் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் கடல் பயணம் ஆபத்தானது எனப் பலரும் எச்சரித்தனர். சிலர் அவரைத் தனியாகப் போகும்படியும் அறிவுறுத்தினர். ஆனால், லூர்துசாமியின் மனைவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 1949 தொடக்கத்தில் லூர்துசாமி பிரான்ஸில் உள்ள சென்ஸ் நகரில் தன் குடும்பத்துடன் குடியேறினார். பாண்டிச்சேரியில் லூயி பிரான்சுவாவுக்கு என்னவெல்லாம் செய்தாரோ அதையே பிரான்ஸிலும் தொடர்ந்தார். லூயி, லூர்துவின் குடும்பத்தைத் தனது குடும்பம்போல் பாவித்தார். அவர் மகளை ஒரு பிரெஞ்சுப் பெண்ணாகவே வளர்த்தார். பதினொரு வருடங்கள் மெல்ல மெல்லக் கடந்தன. அவ்வப்போது பாண்டிச்சேரியிலிருந்து வரும் நண்பர்களும் கடிதங்களும் அவருக்கு ஊர் நிலவரங்களைத் தெரிவித்தன. அவருக்கு திரும்பப் போக வேண்டுமென்றே தோன்றவில்லை. அவர் பிரான்ஸ் வந்தது தன்னுடைய பிறவிப் பயனென நினைத்தார். அவர் மனைவிக்கு எப்போதாவது ஊர் ஞாபகம் வந்து எதாவது பேச வரும்போதெல்லாம் பேச்சை மடைமாற்றினார்.

1960ஆம் வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் லூயியும் அவர் மனைவியும் பக்கத்து நகரத்திற்குச் சென்றிருந்தனர். லூயியின் வீட்டிற்குப் பின்னால் இருந்த சிறிய வீட்டிலேயே லூர்துசாமி குடியிருந்தார். லூயி இல்லாத சமயத்தில் வீட்டைப் பார்த்துக்கொள்வதும் அவருடைய வேலை. அதை மட்டும் சரியாகச் செய்யவில்லையென்றால் அவருக்குக் கடுமையான கோபம் வரும். அன்று லூர்துசாமிக்கு என்னவோ போல் இருந்தது. மனம் எத்தையெல்லாமோ யோசித்து சஞ்சலமானது. கண்கள் அடிக்கடி துவண்டன. பாதி இரவாவது விழித்திருக்க நினைத்திருந்தார். ஆனால் முடியாததுபோல் தோன்றியது. சரி, சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாமென்று நினைத்து எழுந்து மெல்ல நடக்கத் தொடங்கினார். நினைவுகள் அவர் கையைப் பிடித்து வெகுதூரம் அழைத்துச்சென்றது. முழுக்க முழுக்க ஊர் ஞாபகம். திடீரென்று ஏன் இந்த ஊர் இப்படிப் படுத்துகிறதென்று நொந்துகொண்டார். குளிர் உறைக்காத அளவிற்கு நினைவுகள் அவரை போர்த்தியிருந்தது. ஏதோ நினைத்து சிரித்துக்கொண்டார். சட்டெனச் சாலைகள் மாறிவிட்டது போன்றும் தான் ஏதோ புதுச்சேரியின் வீதியில் நடந்துகொண்டிருப்பது போன்றும் தோன்றியது. திடீரென்று பெரும் இடியோசை போன்ற ஒரு சத்தம். அவரின் அனைத்து நினைவுகள் கிழித்து எரிந்து அவரை நிகழ் உலகத்திற்கு இழுத்துப்போட்டது. ஒருகணம் அவருக்கு எதுவும் புரியவில்லை. தான் எங்கே இருக்கிறோம் என்று புரிந்துகொள்ளவே அவருக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. இருட்டில் மெல்லச் சத்தம் வந்த திசையை கூர்ந்துபார்த்தார். ஒரு கருப்பு நிற கார் மரத்தில் மோதியிருந்தது. வேகமாக அதன் அருகில் ஓடினார். அவருக்கு முன் யாரோ ஓடுவதுபோல் தோன்றியது. ஒருவேளை அது அவருடைய பிரமையாகக் கூட இருக்கலாம். இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. யாராவது இருக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை. காரிலிருந்து ஏதேதோ சிதறியிருந்தது அவர் கால்களில் தட்டுப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திரும்ப வீட்டை நோக்கி ஓடினார். மூச்சு இரைக்க ஒரு விளக்கோடு வந்தார். அதுவரை அங்கு யாரும் வரவில்லை. காரில் இருவர் இருந்தனர். இருவரும் இறந்துவிட்டது போல் அவருக்குத் தோன்றியது. சுற்றிலும் பார்த்தார். கீழே ஒரு தோல் பை திறந்து கிடந்தது. அதிலிருந்து காகிதங்கள் சிதறிக்கிடந்தன. அவை காற்றில் பறந்துவிடுமோ என்று அவருக்குத் தோன்றிய நொடியே ஒரு காகிதம் பறந்து சென்றது. லூர்துசாமி அதைப் பிடிக்கச் சென்று இருட்டில் தடுக்கி விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் மேலும் சில காகிதங்கள் கொத்தாக இருந்தன. அவர் அதை எடுத்து வெளிச்சத்தில் பார்க்கலாமென்று நினைத்தபோதே தூரத்தில் சத்தம் கேட்கச் சட்டென விளக்கை அணைத்தார். யாராவது தன்னைப் பார்த்துவிட்டு சாயியிடம் சொல்லிவிட்டால், அவர் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே என்று அஞ்சினார். மெல்லச் சத்தம் எழுப்பாமல் மரங்களின் ஊடாகவே நடந்து தூரமாகச் சென்றார். அதற்குள் ஒரு சிறு குழு விபத்துப்பகுதியை சூழ்ந்துகொண்டது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டு லூர்து சாமி தனது வீட்டிற்கு வந்துவிட்டார். கையோடு கொண்டு வந்த காகிதங்களை ஏதோ தோன்றவே பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.

மறுநாள் காலை அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது லூயியின் கார் நின்றிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்து வேகமாக அவர் வீட்டிற்கு சென்றார். வெளியிலேயே அவர் ஒரு நாற்காலியில் சோகமாக உட்கார்ந்திருந்தார். லூர்துசாமி அருகில் சென்று நின்றதும் தலையை உயர்த்திப் பார்த்தவர் படபடப்பாக, “லூர்துசாமி, நேத்து அங்க ஒரு விபத்து நடந்திருக்கே உனக்குத் தெரியுமா” என்று கேட்டதும் லூர்து சாமி அதிர்ந்துபோனார். என்ன சொல்வதென்று குழம்பினார். லூயி ஏதாவது திட்டப்போகிறார் என்று நினைத்து, “ஏதோ சத்தம் கேட்டது. ஆனால், நான் இங்கேயே இருந்துவிட்டேன்” என்றார். லூயியின் முகம் கோபத்தில் வெடித்தது.

“முட்டாள்… முட்டாள்… வேகமாகச் சென்றிருந்தால் விலை மதிக்க முடியாத ஒரு மாமேதையை நீ காப்பாற்றியிருக்கலாமே” என்றார். லூர்துசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அங்கே விபத்தில் இறந்தது உலகப்புகழ் பெற்ற எழுத்தாளன் ஆல்பர்ட் காம்யு” என்றார்.

லூர்துசாமிக்கு அவர் யாரென்றே தெரியவில்லை. லூயி இவ்வளவு வருத்தப்படுவதைக் கண்டு அவர் மிகவும் முக்கியமானவர் என்று மட்டும் தெரிந்துகொண்டார். பின் வந்த நாட்களில் ஆல்பர்ட் காம்யுவைப் பற்றி செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்துகொண்டார். லூயியின் நூலகத்திலிருந்து அவரின் சில நூல்கள் வாசித்துப்பார்த்தார். அவருக்கு எதுவும் புரியவில்லை. லூர்துசாமி, அந்த விபத்துப் பகுதியிலிருந்து எடுத்து வந்த காகிதங்களை மறந்தே போனார். ஆனால், அது அவரிடம் பத்திரமாகவே இருந்தது.

 

4

 

தேநீரும் பிஸ்கெட்களும் வந்தபோது தான் உள்ளே ஒரு வேலையாள் இருந்ததையே நாங்கள் கவனித்தோம். அவர் தேநீர்க் கோப்பையை எங்கள் முன் வைக்கும்போது அவர் முகத்தை நான் கவனித்தேன். இதுவரை ஒருமுகத்தில் அத்தனை வெறுப்பைப் பார்த்ததேயில்லை. நான் பார்த்ததை ஜென்னியம்மாளும் பார்த்துவிட்டார். வேலையாள் உள்ளேபோகும் வரை காத்திருந்தவர், “அவன் என் மருமகளோட உளவாளி” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் சொன்னது நிச்சயம் உள்ளேயிருந்த வேலையாளுக்குக் கேட்டிருக்கும். கேசவன் இன்னும் கூச்சத்துடனே நெளிந்துகொண்டிருந்தான். நான் தேநீர்க் கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே வீட்டைச் சுற்றிப்பார்த்தேன். இடதுபக்கச் சுவரில் வாசலை ஒட்டி ஒரு பெரிய படம் மாட்டப்பட்டிருந்தது. வெளியேயிருந்து வரும்போது நிச்சயம் கண்ணில்படாது. அந்தப்படத்தில் ஒரு மனிதர் தனது குழந்தையைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பதுபோல் இருந்தது. இருவரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி.  நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவர்தான் என் அப்பா, லூர்துசாமி” என்றார் ஜென்னியம்மாள்.

நான் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கேசவன்தான் முகத்தையும் உடலையும் பவ்யமாக வைத்துக்கொண்டான்.

ஜென்னியம்மாள் சிறிது நேரம் அந்தப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். “நான் கைக் கொழந்தையா இருந்தப்பவே எங்கப்பா என்னை பிரான்ஸ் இட்டுன்னு போயிட்டார்.” என்றதும் நானும் கேசவனும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். திடீரென்று ஏதோ ஒரு சத்தம். வேலையாள் வேகமாக ஓடினான். நாங்கள் அவன் ஓடுவதையே பார்த்துக்கொண்டிருந்தோம். நடைபாதையை ஒட்டி ஒரு இளம் பிரெஞ்சுப் பெண் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். வேலையாள் அவளிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

“அவ தான் என் மருமவ. என் புள்ள வேலயா பிரான்ஸ் போயிருக்கான். அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிக்கணும். நான் செத்துட்டா அவளுக்கு நிம்மதி.”

நாங்கள் எதுவும் பேசவில்லை. கேசவன் போகலாமா என்று கண்ணைக் காட்டினான். நான் எதுவும் சொல்லவில்லை. சிறிது அமைதிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்.

“நாங்க திரும்பவும் இங்க வருவோம்னு நெனச்சிப்பாக்கவேயில்ல. நான் பதினெட்டு வயசு வரைக்கும் பிரான்ஸ்லதான் இருந்தேன். அறுவத்திஎட்டுல பிரான்ஸ்ல ஒரு கலவரம் நடந்துச்சி தெரியுமா” என்றார். நாங்கள் ‘இல்லை’ என்று தலையசைத்தோம். “ம்… அப்புறமா எல்லாரும் அத புரட்சின்னு சொன்னாங்க. எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது. அப்பத்தான் எங்கப்பாவுக்கு எல்லாமுமா இருந்த லூயி செத்துப்போனார். எங்கப்பாவால அவர் சாவ தாங்கிக்கவே முடியல. அவர் சொத்துல ஒரு பங்க எங்கப்பாவுக்கு எழுதியிருந்தார். அதுக்கப்பறம் எங்கப்பாவால கொஞ்சநாள் கூட அங்க இருக்க முடியல. இங்க வந்துட்டோம். வீடுகாட்டினார். நேஷ்னாலிட்டிக்காக சொந்தக்காரங்க ஓடி ஓடி வந்தாங்க. யாரையும் கிட்ட சேத்துக்கல. பார் நடத்தி நல்லா சம்பாரிச்சார். என்ன நல்லா கட்டிக்குடுத்தார். ஆனாஅவருக்குள்ள ஏதோ ஒன்னு இருந்துச்சி. வெளியே சொல்லவேயில்ல. எங்கப்பா தொன்னுத்தி எட்டுலதான் செத்தார். சாவறதுக்கு முன்னாடி என்னக் கூப்பிட்டு ஒரு பையக்குடுத்தார். உள்ள ரொம்ப பழைய பேப்பருங்க. பிரெஞ்சுல எழுதியிருந்துச்சி. நான் ஒன்னும் புரியாம அவரப்பாத்தேன். அப்ப பக்கத்துல இருந்த ஒரு பிரெஞ்சு புத்தகத்த எடுத்துக் காமிச்சாரு. நீ இதப்படிச்சிட்டு அதுக்கப்பறம் இந்த காகிதங்களபடின்னாரு. எனக்கு புஸ்தகம் படிக்கறதுலல்லாம் பெருசா விருப்பம் இல்ல. செரி அவர் சொல்றாரேன்னு மொதல்ல அந்த புக்கப்படிச்சேன். அது ஒரு நாவல். ஆல்பெர் காம்யுன்னு ஒரு பிரெஞ்சு எழுத்தாளார் எழுதனது. அதுவும் அது அவரோட கடைசி நாவல். பேரு ‘லே பிரிமியர் ஹோம்’. ரொம்பக் கஷ்டப்பட்டு படிச்சேன். அது ஏதோ பாதிதான் கிடைச்சிது. அத முடிக்கறதுகுள்ள அவரு விபத்துல செத்துட்டாருன்னு அதுல இருந்துச்சு. இத எதுக்கு என்ன படிக்கச் சொன்னாருன்னு எனக்குப் புரியல. அப்பறம் அந்த பழைய பேப்பருங்க. அத படிக்கப் படிக்க எனக்கு ஒரே ஆச்சர்யம். அது அந்த நாவலோட மீதி. ரெண்டும் சேத்து படிச்சா ஒரு முழு நாவல். ஆனா, அது எங்கப்பா கிட்ட எப்படி வந்துச்சின்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.” என்று சொல்லிவிட்டு சற்று மூச்சு வாங்கினார்.

நான் கேசவனைப் பார்த்தேன். அவன் எரிச்சலுடன் என்னைப் பார்த்தான். எங்கள் இருவரின் பார்வையையும் புரிந்துகொண்ட ஜென்னியம்மாள், “செரி நேரமாச்சி, கிளம்புங்க” என்றார். கேசவன் வேகமாக எழுந்து ஜென்னியம்மாளைப் பார்த்து தலையாட்டினான். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். என்னையும் அறியாமல் “அப்பறம் இன்னாச்சு” என்றேன். நான் கேசவனைப் பார்க்கவில்லை. ஜென்னியம்மாள் கதையை வேகமாகச் சொல்லி முடித்தாள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தனக்குத் தெரியவில்லை என்றாள். அதைத் தன் தந்தையுடனேயே சேர்த்துப் புதைத்துவிட்டதாகச் சொன்னாள். ஏமாற்றத்துடன் புறப்பட்டோம்.

அதன் பிறகு சில நாட்கள் ஜென்னியம்மாள் எங்களுடன் நடந்தார். மெல்ல மெல்ல அவர் வரவு குறைந்துபோனது. கேசவன் தடுத்தும் கேட்காமல் ஒருநாள் நான் அவர் வீட்டைத் தட்டினேன். வேலைக்காரன் விரட்டினான்.

 

5

 

கேசவன் ஒருபக்கம்  நான் ஒருபக்கம் எனப் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கேசவன் புதுச்சேரியிலேயே ஒரு அரசு வேலையிலிருந்தான். நான் சென்னைக்கு வந்துவிட்டேன்.புதுச்சேரிக்கு வரும்போது எப்போதாவது அவனைச் சந்திப்பேன். எதாவது பேசிக்கொண்டிருப்போம். பொதுவாக எனது வேலையைப் பற்றித்தான் பேச்சு இருக்கும். நான் ஒரு பத்திரிகையாளனாக இருந்ததால் எதைப்பற்றியாவது கேட்டுக்கொண்டேயிருப்பான்.

இன்று யதார்த்தமாக அவனைக் கடற்கரையில் சந்தித்தேன். அதுவும் துய்ப்ளே சிலையருகே. வழக்கமாக நாங்கள் உட்காரும் இடத்திலேயே உட்கார்ந்தோம். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். அவன் குடும்பம் எனது குடும்பம் எனப் பல கதைகள். அரசியல் நிலவரங்களைப் பற்றி ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டான். ஊடகங்களின் சில செயல்பாடுகளைக் குறித்து அதிருப்தி தெரிவித்தான். அதைப் பற்றி எங்களுள் சிறிய வாக்குவாதம் நடந்தது. சட்டென இருவருமே அமைதியானோம். இருவரின் பார்வையுமே ஜென்னியம்மாவின் வீட்டிற்குச் சென்றது.

“அவங்க செத்து ரொம்ப நாள் ஆச்சு” என்றான் கேசவன்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.

“அவங்க சொன்னதப் பத்தி நீ என்னிக்காவது நெனச்சிப்பாத்திருக்கியா.”

நான் இல்லையென்று தலையசைத்தேன். அவன் மீண்டும் அந்த வீட்டைப் பார்த்தான். அதைப் பார்த்தபடியே பேசினான்.

 

“அவங்க சொன்ன எழுத்தாளரோட பேரு ‘ஆல்பர்ட் காம்யு’. பிரெஞ்ச் எழுத்தாளர். நோபல் பரிசுல்லாம் வாங்கிருக்காரு. அவரோட கடைசி நாவலோட ஒருபகுதி தான் அவங்களோட அப்பாகிட்ட இருந்ததாகவும், அதை அவங்க அவரோட சேர்த்து பொதச்சிட்டதாகவும் சொன்னாங்க.”

“நீ அத நம்பறியா?”

“நான் அப்பறமா அதப்பத்தி தேடினேன். உண்மையாவே அவரோட கடைசி நாவல் முழுமையானது இல்ல. ஆனா, பிரெஞ்சுக்காரங்க அவர் அவ்வளவுதான் எழுதனதா சொல்றாங்க.”

“ஆனா, ஜென்னியம்மா அந்த ரெண்டு பிரதியையும் படிச்சதா சொன்னாங்களே”

“ம்.”

“அவங்க அப்பாவோட சமாதி எதுன்னு சொல்லிட்டாவது போயிருக்கலாம்.”

“ஏன்? தெரிஞ்சி என்னப் பண்ணப்போற” என்று ஆர்வத்துடன் கேட்டான் கேசவன்.

“என்ன மாதிரியான விஷயம் அது. சும்மாவா. ‘நோபல் பரிசு வாங்கின ஒரு எழுத்தாளரின் கடைசி நாவலின் எஞ்சிய பகுதி புதுச்சேரியின் கல்லறையில் உறங்குகிறது’ அப்படின்னு ஒரு பிரேக்கிங் நியூஸ் போட்டு ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தப்பக்கம் திருப்பியிருக்க மாட்டேன்.”

கேசவன் லேசாக சிரித்தான்.

“என்னடா?”

“நீ சொன்னா, இந்த உலகம் நம்பிடுமா.”

“சரியான ஆதாரம் இருந்தா நம்ப வைக்க முடியும்.”

கேசவன் அமைதியாக இருந்தான். நான் அவனையே பார்த்துகொண்டிருந்தேன்.

“என்னடா.”

“ரொம்ப நாள் முன்னாடி நான் ஜென்னியம்மாவப் பார்த்தேன். அவங்க என்னப் பாக்கல. வீட்டவிட்டு வெளியே வந்து அவங்க வேலைக்காரனோட ஆட்டோல ஏறனாங்க. சட்டுன்னு எனக்குப் பொறிதட்டுச்சி. வேகமா ஆட்டோவப் பின்தொடர்ந்து போனேன். நான் நெனச்ச மாதிரியே அவங்க கல்லறைக்குத்தான் போனாங்க. அன்னைக்கு கல்லறைத் திருவிழா. நான் தூரத்துலருந்து அவங்க எந்தக் கல்லறைக்குப் பூப்போடறாங்கன்னு கவனிச்சேன். ரொம்ப நேரம் நின்னு அழுதாங்க.”

“அப்ப உனக்கு அந்தக் கல்லறை எதுன்னு தெரியுமா?”

“ம்…”

“அடப்பாவி, இத ஏன்டா நீ இவ்வளவு நாளா சொல்லாம இருந்த.”

“நீ எப்பவுமே ஒருபக்கத்துல இருந்து மட்டும் யோசிக்காத. அது காம்யு நாவலோட ஒரு பகுதின்னு தெரிஞ்சதும் லூர்துசாமியே அத வெளியிட்டிருந்தா அவர் உலகம் முழுக்கப் பிரபலமாகியிருப்பாரு. அவரால அத உண்மைன்னு சுலபமா நிரூபிச்சிருக்க முடியும். ஆனா அவர் அத செய்யல. ஏன் தெரியுமா?”

“ஏன்.”

“ஆல்பர்ட் காம்யு, உண்மையாகவே விபத்துல சாகலன்னு ஒரு தியரி இருக்கு. ஒரு வெளிநாட்டு ஏஜென்சிதான் அவர கொன்னுச்சின்னு சிலர் நம்பறாங்க. ஒருவேளை லூர்துசாமி அத நம்பியிருக்கலாம். அந்த ஏஜென்சிக்கு பயந்திருக்கலாம்.”

நான் எதுவும் சொல்லவில்லை. உண்மையில் சற்று நடுங்கிக்கொண்டிருந்தேன். ஏன் தோளைத் தட்டி, “என்ன, பிரேக்கிங் நியூஸ் போடப்போறியா” என்றான் கேசவன். நான் அமைதியாக இருந்தேன்.

 

“போலாமா.”

“எனக்கு அந்தக் கல்லறையக் காட்டறியா.”

“நான் உன்னை நம்பமாட்டேன்” என்று சிரித்துகொண்டே சொன்ன கேசவன், திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

 

*