மோடி அரசு அடுத்துவரும் நான்கு ஆண்டுகளில் நன்றாகச் செயல்பட்டுவரும் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு National monetization pipeline என்ற ஆர்ப்பாட்டமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பணம் பெருக்கும் வரிசை என்று உத்தேசமாக மொழிபெயர்க்கலாம். அதாவது அரசு சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம். பணமாக்கல் என்றால் வேறொன்றும் இல்லை. தனியாருக்கு விற்பனை செய்வது அல்லது குத்தகைக்கு விடுவதாகும்.

இத்திட்டத்தின்கீழ் 26,700 கிமீ சாலைகள், ரயில் லைன்கள், 28,608 கிமீ பவர் லைன்கள், 6 gw நீர்மின் நிலையங்கள், 2.86 லட்சம் பைபர் சொத்துக்கள் 14,917 டெலிகாம் டவர்கள், 8154 கிமீ இயற்மை எரிவாயு பைலைன்கள், 3,930 கிமீ பெட்ரொலியம் பைப் லைன்கள் தனியாரிடம் குத்தகைக்கு விடப்படுகின்றன. (livemint Nov 14- saurav anand) சுமாராக 8160 அரசு அமைப்புகள் தனியாரிடம் 15 லிருந்து 30 ஆண்டுகாலத்துக்குக் குத்தகைக்கு விடப்பட உள்ளன. இதில் 23 சதவீத திட்டங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன.

பிஜேபி அரசு பொதுச் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்வது வழக்கம் தானே, இதில் என்ன புதிதாக இருக்கக் கூடும் என்ற கேள்வி எழக்கூடும். இந்தத் திட்டமானது இரண்டு விதங்களில் தனித்துவமானது. அதே காரணங்களால் அபாயகரமானது.

இந்தத் திட்டமானது 2019 ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு துணிச்சல் மிகுந்த உள்கட்டுமானத் திட்டத்துக்குத் தேவையான பணம் திரட்டவே உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும் மேலும் கடன் வாங்காமல் பொதுச் சொத்துக்களைப் பணமாக மாற்றிப் பயன்படுத்துவது பொருளாதார அடிப்படையில் புரட்சிகரமானது. இது கார்ப்பரேட்டுகள் நெருக்கடிகளின்போது பயன்படுத்தும் உத்தியாகும். பொருளாதார நெருக்கடி, வீழ்ச்சி ஏற்படும் போது சொத்துக்களை விற்று சமாளிப்பது (deleverage starategy), அமைதியாகக் காத்திருந்து நெருக்கடியைக் கடப்பது ஆகியவை அடிப்படையான முதலாளித்துவ தந்திரங்கள், இவற்றை அரசு கையாள்வது அற்புதமானது என்று வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் கொண்டாடுகின்றனர். அரசு சொத்துக்களையும், பொதுச் சேவை நிறுவனங்களையும் வைத்து நிர்வகிக்க வேண்டியதில்லை. எல்லாப் பொதுச் சேவை நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன, செயல்திறனற்று இருக்கின்றன. எனவே இவற்றைத் தனியாரிடம் விடுவதே இவற்றின் செயல்திறனை அதிகரிக்கும் வழி. இந்த வழியை அரசு தேர்ந்தெடுத்து செயல்படுத்துவது சிறப்பானது என்று கார்ப்பரேட்டுகளும் முதலாளித்துவ அறிஞர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றனர். இது மிக இயல்பானதாகும்.

ஆனால் அரசு சொல்வதின் உண்மைத் தன்மை குறித்து பல பொருளாதார நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

1. இத்திட்டம் இதற்கு முந்தைய தனியார் மயமாக்கும் முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரே மூச்சில் அனைத்து அரசு, பொதுச் சொத்துக்களையும் தனியாரிடம் ஒப்படைத்து விடுவதுஎன்ற துல்லியமான திட்டத்துடன் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது.

2. வெறும் தனியார் மயம் மட்டும் இந்தத் திட்டத்தின் நோக்கம் இல்லை. இந்திய அரசின் நிதிநிலை படுமோசமான நிலையில் உள்ளது. அதிலிருந்து வெளிவர எந்தத் திட்டமுமில்லாத அரசு தனது சொத்துக்களை விற்று ஒழிப்பதே ஒரே தீர்வாகக் கருதுகிறது. பொருளாதார ரீதியிலும், கோட்பாட்டு ரீதியிலும் இந்துத்துவ அரசானது படுதோல்வியடைந்து விட்டது என்பதை இந்தத் திட்டம் காட்டுகிறது.

இந்த தேசிய மானிடைசேஷன் பைப்லைன் திட்டமானது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதையும், பெரிய அளவுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுவதையும், நாட்டின் கடன்சுமை அதிகரிப்பதையும், பலகாரணங்களால் மொத்த உற்பத்தி குறைந்து வருவதை சரிக்கட்டவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும் என்று சோனாலி ரானடே தி வொயரில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தத் திட்டம் உள்கட்டுமானத்துக்கு செலவிடப்படும் முதலீட்டை 5.8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இது வாஜ்பாய் அரசில் 5.2 ஆகவும், மன்மோகன் அரசில் 7.2 ஆகவும் இருந்தது. உள்கட்டுமானத்தை வளர்த்து எடுத்தல் என்பது சாலைகளையும், ரயில்வே துறையையும், கப்பல் போக்குவரத்தையும் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைத்தல், நகரங்களை வணிக மையங்களாக்குதல் ஆகியவையேயாகும். மக்கள் நன்மைக்காக குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவோம். பிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கை குறித்து நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதே இதன் பொருள்.

மக்களுக்கான சேவைத் துறைகளுக்கு அரசு பொதுச் சொத்துக்களை விற்று வரும் பணத்தில் ஒரு பைசா கூடச் செலவழிக்கப் போவதில்லை. அனைத்து சேவைத்துறைகளையும் தனியாரிடம் விடுவதே அரசின் கொள்கை.உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை தனியார் அமைப்புகள் லாபம் ஈட்டும் வணிகமாக மாற்றுவார்கள். அவர்களுக்கு உதவ அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

1999 ஆம் ஆண்டு அரசு முதல் முதலாக அரசு சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் வேலையில் இறங்கிய போது பொதுத்துறை சொத்துக்களில் உள்ள அரசு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம் அதன் நிர்வாகத்தை நேரடியாக மாற்றிக் கொடுப்பது என்ற வெளிப்படையான முயற்சியை மேற்கொண்டது. ஆனால் ஒருசில வெற்றிகளுக்குப் பிறகு இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. மக்கள் எதிர்ப்பு ஒரு காரணம். அரசு நிறுவனங்களுக்கு அரசு அளித்து வந்த சலுகைகளை எப்படித் தனியாருக்கு அளிப்பது என்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் இன்னொரு காரணம். முக்கியமான இடங்களில் சலுகைவிலையில் நிலம், சுரங்கங்கள், வரிச்சலுகை போன்றவை கிடைத்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும். இதற்கான ஒரு குழப்பமற்ற செயல் திட்டத்தை உருவாக முடியவில்லை. அரசு நிறுவனத்தின் மதிப்பு என்பது இந்த சலுகைகளும் சேர்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கு சரியான விடைகாண முடியவில்லை. அரசுத் துறை நிறுவனங்களை நிர்வகிப்பதில் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு இருந்த அனுபவக் குறைவு மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. எனவே நினைத்த வேகத்தில் தனியார்மயம் நடக்கவில்லை.

இரண்டாவதாக எடுக்கப்பட்ட முயற்சி தனியாரும் அரசும் இணைந்து செயல்படும் public private partnership PPP திட்டம் ஆகும். இது 2010இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச்சலுகைகள், மலிவான இடங்களை வழங்குதல், கச்சாப் பொருட்களை வழங்குதல் ஆகியவற்றை அரசு இந்த நிறுவனங்களில் ஒரு பங்கு வகிக்கிறது என்ற போர்வையில் தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வர வழி செய்தது. ஒரு மிக முக்கியமான சிக்கல் கடக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றினாலும், இத்திட்டமும் இறுக்கமான அரசு விதிகள், அதிகார வர்க்க தொல்லைகள் ஆகியவற்றால் தோல்வியடைந்தது. அரசு சொத்துக்கள் பகுதியளவுக்குத் தனியார் மயமாக்கப்பட்டாலும் இக்காரணங்களால் உரிய லாபம் கிடைக்கவில்லை.

எத்தனை முறை தோற்றாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போன்ற ஒன்றிய அரசானது ஏன் இத் தோல்விகள் ஏற்படுகின்றன என்று ஆராய 2015 ஆம் ஆண்டு கேல்கர் கமிட்டி என்ற ஒரு கமிட்டியை அமைத்தது. இந்தக் கமிட்டி கொடுத்த அறிக்கையானது இதைச் சரி செய்யப் பல பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் இந்த மானிடைசேஷன் எனப்படும் அரசு சொத்துக்களைப் பணமாக்கும் முறை பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மே மாதம் 2020 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களோடு, சாலைகள், வங்கிகள் போன்றவற்றையும் இந்தத் தனியார்மயமாக்கும் திட்டத்தில் இணைக்க முடிவு செய்தார்.

இந்தப் பணமாக்கும் திட்டத்தில் அரசு பொதுச் சொத்துக்களை விற்காது, குத்தகைக்கு மட்டுமே விடுகிறது கூறப்படுவது மக்கள் எதிர்ப்பை சமாளிக்கச் செய்யப்படும் தந்திரமாகும். தேயிலைத் தோட்டங்கள் குத்தகைக்குத்தான் விடப்பட்டன. நூறு ஆண்டுகளாகியும் குத்தகை முடிந்தும் அவற்றை மீட்க முடியவில்லை. மீட்கும் எண்ணமும் அரசுக்கு இல்லை. எனவே குத்தகை என்பது ஒரு கண் துடைப்பாகும். அரசு பொதுத் துறை நிறுவனங்களை நடத்தக் கூடாது என்ற கொள்கை இருக்கும்
போது குத்தகை முடிந்தால் இன்னொரு குத்தகைதான் வரும். அரசு உரிமையாளராக இருந்து என்ன பலன்?

அரசு சொத்துக்களை 15 லிருந்து 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் முதலாளிகள் அச்சொத்துக்களை கார்ப்பரேட் முறையில் நிர்வகிக்கலாம். அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் குத்தகைத் தொகை கிடைக்கும். ஆனால் இது வேலையிழப்புகளுக்கு இட்டுச் செல்லும். விலைகள் உயரலாம். ஒவ்வொரு முறை நிர்வாகம் மாறும் போதும் கார்ப்பரேட்டுகள் எடுக்கும் முதல் நடவடிக்கை ஆட்குறைப்பு ஆகும். அரசு நிறுவங்களின் நோக்கம் மக்களுக்கு குறைந்த செலவில் சேவைகளை அளிப்பது, வேலை வாய்ப்புகளை அளிப்பது ஆகியவை ஆகும். அரசு நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதில்லை. எனவே இவற்றைக் கைப்பற்றும் தனியார் நிறுவனங்கள் இவற்றின் கட்டமைப்பை மாற்றி அமைத்தாக வேண்டி வரும். லாபம் ஈட்டுபவையாக இவற்றை மாற்றியமைப்பதே அவர்களின் நோக்கமாகும். எனவே மக்களுக்கு அரசு நிறுவனங்கள் அளித்து வந்த சலுகைகள் இல்லாமல் போவதைத் தவிர்க்க முடியாது.

அரசானது தனியார் மயத்தால் விலைகள் உயர்வதைத் தடுக்க முதலாளிகளுக்கு இடையே ஏற்படும் போட்டி உதவும் என்று கருதுகிறது. ஆனால் துறைமுகங்களை இயக்குவது, ரயில் நிலையங்களை நிர்வகிப்பது, பவர் லைன்களைப் பராமரிப்பது போன்ற துறைகளில் போட்டியிடும் அளவுக்கு அனுபவம் பெற்ற தனியார் நிறுவனங்கள் இல்லை. எனவே இவை அனைத்தும் ரிலையன்ஸ், அதானி குழுமம், டாடா குழுமம் போன்ற ஒரு சில நிறுவனங்களாலேயே கைப்பற்றபடும். ஆரோக்கியமான முதலாளித்துவப் போட்டி என்பது சாத்தியமே இல்லாத நிலையே இந்தியாவில் நிலவுகிறது.

இப்படிப் பல பிரச்சினைகள் இருந்தாலும் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தப் பணமாக்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆதாவது 2021 ஆம் ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசு சொத்துக்கள் தனியார்மயப்படுத்தப்பட்டன. இது இலக்கான 88000 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

2022 நிதியாண்டில் 1,75,000 கோடி ரூபாயை அரசு சொத்துக்களை விற்பதன் மூலம் திரட்டவேண்டுமென்று முடிவு செய்யபட்டது. நிதிஆயோக் அமைப்பானது எந்தெந்த அரசு சொத்துக்களை தனியார் மயப்படுத்துவது மற்றவற்றோடு இணைப்பது என்று கண்டுபிடிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

2022-23 ஆண்டில் 1,62,422 கோடி ரூபாய் சொத்துக்கள் பணமாக மாற்றப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 1,24,179 கோடி ரூபாய்தான் கிடைக்கும் என்று இப்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே 30000 கோடி ரூபாய் சொத்துக்களை தனியாரிடம் விட வேண்டும். ஆனால் 1,829 கோடி ரூபாய் சொத்துக்கள் தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இப்படி சில துறைகள் தங்களை சொத்துக்களைத் உத்வேகத்துடன் விற்று இலக்கை எட்டியுள்ளன. சில விற்க முடியாமல் பின்தங்கியுள்ளன. பின்தங்கியுள்ள துறைகளின் அரசு சொத்துக்களை விற்க அதாவது குத்தகைக்கு விட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசானது பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. மோடி பொருளாதாரத்தின்மீது பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று கடும் தாக்குதல்கள் தொடுத்தார். பின்பு 2019ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 145 லட்சம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளித்தார். இந்த நட்டத்தை எப்படி சரிக்கட்டுவது என்று திட்டம் எதுவும் இல்லாமலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, அரசு கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கை சமாளிக்க பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியது. இதன் விளைவாக விலைகள் உயர்ந்ததால் மக்களின் செலவளிக்கும் திறன் குறைந்தது. நாட்டின் வளர்ச்சிவிகிதம் மேலும் கீழே சரிந்தது. அரசின்
மொத்த வருமானத்தில் கடனானது 90 சதவீதத்தை எட்டியது. (சோனாலி ரானடே – தி வொயர்).

இந்தக் கடன்களைக் கட்டுவதற்கே அரசு சொத்துக்களை விற்பனை செய்து வரும் பணம் செலவிடப்படும். அரசு மேலும் பலவீனமடையும். வெளிநாட்டு மூலதனம் வெள்ளம்போலப் பாயப் பாய அரசு தனது தனித்தன்மையை இழந்து மக்களைக் கண்காணிக்கும் பணியை மட்டும் செய்யும் போலீஸ் அரசாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1969ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனியார் வங்கிகளை தேசிய உடைமையாக்க திட்டங்கள் வகுக்கும்படி தனது குழுவிடம் கூறினார். 2021-22 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐடிபிஐ வங்கியையும், எல்.ஐ.சி.யையும், வேறு இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் தனியார் மயமாக்கப் போவதாக அறிவித்தார். 2020-ல் பத்தாக இருந்த பொதுத்துறை வங்கிகள் நான்காகக் குறைக்கப்பட்டன. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாரஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கையும் தனியார்மயப்படுத்த முடிவு செய்யப்பட்டது. வங்கிகள் அடையும் நட்டம் சமூகத்தில் எதிரொலிக்கிறது. வரி செலுத்துபவரை பாதிக்கிறது. ரகுராம்ராஜன் வங்கியைத் தொழிலதிபர்களுக்கு விற்பது மாபெரும் தவறாகிவிடும் என்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய அளவிற்கு கடன் பெற்று அவற்றை டிவிடெண்டுகள் அல்லது பங்குகளாக அரசுக்கு மாற்றிவிடுவது வழக்கம், தனியார்மயத்தின் அடிப்படையானது பணம் திரட்டுவது மட்டுமல்ல. அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது, நிறுவனத்தை சந்தைக்குள் கொண்டு வருவது ஆகியவையாகும்.

தனியார்கள்தான் வங்கிகளின் நஷ்டங்களுக்குக் காரணம். அவர்களிடமே முக்கியமாக தொழிலதிபர்களிடம் வங்கிகளை ஒப்படைப்பது என்பது தற்கொலை என்று ரகுராம் ராஜன் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வளவு பெரிய நிறுவனங்களை வாங்குமளவுக்கு உள்ளூர் மூலதனம் இல்லை. வெளிநாட்டு மூலதனமே இந்த நடவடிக்கையை இயக்கும் என்கிறார் சிதம்பரம். இது இந்திய உள்கட்டுமானத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்தும்.இந்த அரசு நிறுவனங்கள் ஏற்கனவே பணம் ஈட்டி
வருகின்றன். இவற்றை விற்று 6,00,000 கோடி ஈட்டுவது என்பது லாபமா நட்டமா என்பது கேள்விக்குரியது. ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு 5.5 லட்சம் கோடி பட்ஜெட்டில் பற்றாக்குறை உள்ளது. அரசு சொத்துக்களில் பெரும்பகுதியை விற்று 6,00,000 கோடி ஈட்டுவதால் என்ன பலன் என்று சிதம்பரம் கேள்விகள் எழுப்புகிறார். இவற்றுக்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்லவில்லை. உண்மையில் தனியார் மயம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதா என்பது ஒரு அடிப்படையான கேள்வியாகும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ விற்றால் என்ன நடக்கும்? அதன் விலை 100 ரூபாய் என்றால் வாங்குபவர் 120 ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பார். ஏனெனில் அது ஈட்டித் தரும் பணம் அத்தகையது. இந்தப்பணத்தில் பெரும்பகுதி கடனை அடைக்கவே சரியாக இருக்கும். அரசும் கடன் வாங்கும் போது தனியாரிடம் பணம் குவியும் (புவர் எகனாமிக்ஸ் – தி டெலிகிராப்).

தனியர்மயம் பொருளாதாரத்தை கடுமையகப் பாதிக்கும். இந்தியா இப்போது சந்தித்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகளின் அடிப்படை மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததுதான். இதனால் பொருட்களுக்கு சந்தையில் தேவை குறைகிறது. தனியார் நிறுவனங்கள் அரசு சொத்துக்களை வாங்கி திறமையாகச் செயல்
பட்டாலும் வாங்கும் திறனை அதிகரிக்க முடியாது அல்லவா?

ஓஎன்ஜிசி இந்தியாவின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமாக இருந்தது. மிகப் பெரிய லாபம் ஈட்டும் நிறுவனமும் இதுதான். அடுத்தடுத்த வந்த அரசுகள் இதை உறிஞ்சின. மோடி அரசு இதை சக்கையாக்கித் துப்பிவிட்டது.

1991 ஆம் ஆண்டு இந்திய அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்தை உலக வங்கியிடமிருந்து 450 கோடி டாலர் கடன் பெறும்படி வற்புறுத்தியது. கடனுக்கான நிபந்தனைகள் என்னவெனில் ஓஎன்ஜிசி மற்றும் அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் எண்ணெய் வயல்களை தனியார் மற்றும் அன்னிய நிறுவனங்களுடன் இணைந்தே வளர்த்தெடுக்க வேண்டும் என்பதாகும். இருந்த போதும் இந்த நிறுவனம் லாபகரமான நிறுவனமாகவே இருந்தது.

மோடி அரசு லாபகரமாக இயங்கிய எல்லா பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் பணத்தை உறிஞ்சி எடுத்தது. ஓஎன்ஜிசி தனது உபரித் தொகை முழுவதையும் இழந்ததோடு பெரும் கடனிலும் சிக்கிக் கொண்டது. ஒன்றிய அரசு எண்ணெய் உற்பத்தி செய்யும் வயல்களில் 60 சத பங்குகளை விற்பனை செய்யும் படி செய்ய முயன்றது. (Praneta jha- ONGC woes; How modi govt drove Inida’s most profitable company under a mountain of debt). இந்த நடவடிக்கைகளால் மிகுந்த லாபகரமாக இயங்கி வந்த ஓஎன்ஜிசி இப்போது நட்டத்தில் இயங்கும் நிறுவனமாகிவிட்டது.

குத்தகைக்கு விடுவதற்கு மாற்று என்னவெனில் இந்த அரசு சொத்துக்களை infrastructure investment trust (InvIt) என்ற அமைப்பு கையகப்படுத்தி யுனிட்டுகளாகப் பிரித்து முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கும். இது எந்த விதமான ஜனநாயக அமைப்புக்குக் கட்டுபட்டது என்பது தெரியவில்லை.

எனவே தனியார் மயம் மக்களுக்கு நன்மை செய்யுமா, மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமா, வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்குமா என்ற கேள்விகளுக்கு பதில் அரசுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்பதாகும். அது அரசு மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகளை நிறுத்தி எல்லாவற்றையும் லாபநட்டக் கணக்காக மாற்றுகிறது. இல்லாவிட்டால் ரயில்வே லாபம் ஈட்டுகிறதா? கல்வி நிலையம், குடிநீர் வழங்கும் அமைப்பு லாபம் கொடுக்கிறதா என்ற அபத்தமான, அநீதியான கேள்வியை ஒரு அரசு கேட்குமா?

தனியார்மயப்படுத்தும் பணியில் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசானது எத்தனை முறை விழுந்தாலும் விக்கிரமாதித்தன் போல எழுந்து அதே பாதையில் ஓடத்தான் செய்யும். அதன் கோட்பாடு அது. ஓஎன்ஜிசி ஏன் நட்டமடைந்தது என்று கேட்டால் பக்கத்து வீட்டு முஸ்லிம்தான் காரணம் என்று அடித்துப் பேசி நம்ப வைக்கும் சாமார்த்தியத்தை அது கொண்டிருக்கும் வரை இந்த ஓட்டம் தொடரும்.

 

 

iramurugavel@gmail.com