முழுவதும் நீராலும் அற்புதமான

அலைகளாலும் நிரம்பியிருந்த அந்தக் கடல்

அந்நிலையிலிருந்து விடுபடுவதாய் நினைக்கத்

தொடங்கிய நாளில் அனைத்துப் பிரச்சினைகளும்

துயரங்களும் துவங்கிவிட்டன

    ( திரைப்படத்திலிருந்து ஒரு  குறிப்பு)

 

உலக சினிமா வரலாற்றின் பக்கங்களில் சினிமா கலை மொழியின் தீவிரமும், ஆழ்ந்த படைப்பாக்கத்தன்மையும் மிகவும் வேகமான காட்சி ரூபத்தின் நவீனக் கதையாடல்களையும் புதிய திரை மொழி ஆக்கங்களையும் ஆழ்ந்த பிரக்ஞையுடன் திரை மேதைகள் தன் சட்டக வெளிகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். காட்சி ஊடகங்களின் அதிநவீன தொழில் நுணுக்க வரவினால் சினிமா கலை அதனுடைய உயர்ந்த இடத்திற்கு சென்றபடியே இருக்கின்றது.  இவ்வுலகில் தவிர்க்க முடியாத நோயாகத் தொழில்நுட்பங்கள் வளர்கின்றது. அந்த நோயை உள்வாங்கும் தளமாக ஹாலிவுட் சினிமாக் கூடாரங்கள் இருக்கின்றன. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆழ்ந்த புரிதலுடனும், தேவை கருதியும் பிரக்ஞையுடனும் பயன்படுத்தும் போக்குகளை நாம் உலக சினிமாவில் இருந்தே கண்டறிய முடியும். தொழில்நுட்ப ஜாலங்களை நம்பி ஏமாற்றப்படும் பாசிச ஏகாதிபத்திய சினிமாக்களுக்கு மத்தியில் வாழ்வின் மொழியாக சினிமாவைக் காணும் திரைப்பட மேதைகள் தன்னுடைய சுய வெளிப்பாட்டின் போதாமையாகவே தொழில்நுட்பத்தை ,இனம் காண்கிறார்கள். ஒரு பக்கம் தொழில்நுட்பம் பார்வையாளனைச் சுரண்டுவதற்கும், மயக்கமான ஒரு வெளியை உண்டாக்குவதற்கும் திட்டமிட்டு பயன்படுத்தினாலும் சினிமாவை வாழ்வைச் சொல்லும் சாதனமாக காணும் கலைஞன் தொழில்நுட்பத்தின் தேவையை தனது பிரக்ஞையை வெளிப்படுத்த போதாமையோடு உணர்கிறான். கணினி உறவுடான தொழில்நுட்பத்தினால் வெறும் பாசாங்கான அசட்டுத்தனமான சினிமாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். நல்ல சினிமா என்பது பிரமாண்டமான ஹாலிவுட் தொழில்நுட்ப மோசடி வேலைகளில் இல்லை. எளிமையாக உருவாக்கப்படும் சினிமாவில் இருக்கும் ஆன்மா பிரமாண்டமான பொருட் செலவுகளால் உற்பத்தி செய்யப்படும். சினிமாவில் இருப்பதில்லை.

கலை எப்போதுமே மிக எளிமையாலும், அனுபவத்தினாலும், வலியினாலும் மக்களின் ஞாபக வெளிகளில் தங்கிப் போகின்றது.

“விஞ்ஞானம் என்பது அறிவின் எல்லையை விஸ்தரிக்கச் செய்கிறது. முயற்சி, தொழில்நுட்பம் அந்த அறிவினைச் செயல்படுத்தும் முறையாகும்.” ஐரோப்பிய, ஹாலிவுட் தொழில்நுட்ப ஜாலங்கள் மனிதமூளையை திசைத் திருப்பவும், மன அமைப்பை நுகர் சக்கையாகப் பிழியவும் மனிதனை வன்முறை உருவமாக வடிவமைக்கவும், ஏகாதிபத்திய பிரதியாக உருச்செய்யவும் மட்டுமே இவ்வகையான பாசாங்கு சினிமாக்களின் வேலை. ஆனால் சினிமாவை சுய மருத்துவமாகக் கருதும் படைப்பு கலைஞன் மனிதனை ஏமாற்றுவதற்காக அல்லாமல் வாழ்வைத் தீர்க்கமாக சொல்லவும் மனித வாழ்வின் துயர கதையை தன்னுடைய சினிமா மொழியின் மூலமாக இனம் கண்டு தீர்க்கவும், மானுட விடுதலைக்காகவும், அன்பை விதைக்கும் ஊடகமாகவுமே எல்லாவிதமான நவீனத்துவ சினிமா உத்திகளும் உலக சினிமாக கலைஞனுக்கு உதவுகின்றது.; கலையும், தொழில்நுட்பமும் இணையும்போது சினிமாவின் படைப்பாளுமை நுட்பமாக அமைந்துவிடுகின்றது. மனிதனுக்குள் இயக்குநர் நினைக்கும் உணர்வை வெளிக்கொண்டு வர உதவுகின்றது.

தொழில்நுட்பம் என்பது கலைக்கும் கலைப் படைப்புக்கும் நுட்பமானதொரு இருப்பைத் தருகின்றது. தொழில் நுட்பத்தை தன் கருத்தியலுக்குத் தகுந்தபடி சரியாக பயன்படுத்த தெரிந்த சினிமா கலைஞனால் மாஸ்டர் படைப்பைத் தரமுடிகின்றது.

தொழில்நுட்பங்களை எடிட்டிங், கோணம் ஒலி, ஒளி சிறப்பு சப்தங்கள், இசை, களம், காலம், உணர்வு, சூழல், பின்னணி, தோற்றம் போன்றவைகளைக் கலை ரீதியாகப் பயன்படுத்தும்போது சினிமா கலை சாதனமாகப் பரிணமிக்கின்றது. அந்த வகையில் நவீன சினிமா மொழியுடன் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்டிருந்த நெதர்லாந்து திரைப்படமான அங்கே ஒரு கடல் இருந்தது (The sea that thinks) என்ற திரைப்படம் கடந்த கேரள உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் காட்சிக் கலையின் அதி நவீன உத்திகளை கையாண்டிருப்பதன் வழியாகவே மனித பிரக்ஞையை தொடவும், மனித உணர்வை தட்டி எழுப்பவும் என்றும் மறக்க முடியாத நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களின் நினைவுகளில் தேங்கி நிற்கவைக்கின்றது.

“நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை

அவைகளைக் கண்களால் உணர முடியாது

இதயத்தால் தான் உணர முடியும்.”

சினிமா கலையின் ,Clouse up என்கிற மிக அண்மைக் காட்சித் துண்டுகளில் தத்துவத்தையும், அதன் அழகியலையும் அதன் தொழில்நுட்ப கலைப்பயன் பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இச் ஸென் சினிமாவை வாழ்நாளில் நிச்சயம் ஒரு தரம் பார்த்து விட்டு வரவேண்டும். ஸென் வாழ்விற்கும் குளோஸ் அப் என்கிற சினிமாவின் ஒரு துண்டு ஷாட்டுக்கும் என்ன உறவு? ஸென் தன்மையை ஒரு துண்டு ஷாட்டுகள் எப்படித் திரை பிம்பங்களில் வெளிப்படுத்துகின்றது. ஒரு தத்துவத்தை சொல்ல ஒரு சாதாரண , Clouse up ஷாட் மட்டும் போதுமானதாக இருந்த சாத்தியம் எப்படி?

“சில சமயங்களில் க்ளோஸ் அப் என்பது இயற்கையான ஒரு விளக்கத்தை நமக்குத் தருவது போலத் தோன்றலாம். ஆனால் ஒரு நல்ல க்ளோஸ் அப் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றியும் நம்முடைய அழகிய சிந்தனையை ,இதமான அக்கறையை வாழ்க்கை பற்றி நெருக்கமான உணர்வை மற்றும் விரும்பக் கூடிய உணர்வை அது நமக்குக் காட்டுகிறது. நல்ல“ க்ளோஸ் அப்பு“கள் கவிதை போன்றவை.

இத்திரைப்படமும் மனதின் ஆழ்வெளிகளுக்கு சென்று மூடுண்டு கிடந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பி நம்மை நமக்கே உணரச் செய்து உள் உலகத்திற்குக் கொண்டுச் சென்று விட்டு விடுகின்றது. உயிருருவின் இசையை இருப்பின் ஓசையை இப்படம் தன் சலன சித்திரம் வழியாக ஞபாகப்படுத்தி சென்று விடுகின்றது. இப்படத்தைப் பார்த்த பின் என்னுள் எங்கோ படித்த செயின்ட் திரேசாவின் “நீ செய்ய வேண்டிய தெல்லாம் பார்க்க வேண்டியதுதான்’ என்ற எளிமையான வாசகமே நினைவுக்கு வந்தது.

“வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை நாம் ரொம்பவும் மேம்போக்காக எடுத்துக் கொள்கிறோம்.

மிகப் பெரிய விஷயங்களுக்குக் காரணமாக விளங்கும் முக்கியமான பிரச்சினைகளின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் காமிராவானது வெளிக்காட்டியது. பல்வேறு மண் துகள்களின் சரிவுகள்தான் ஒரு பெரிய நிலச்சரிவாக மாறுகிறது. பல்வேறு க்ளோஸ்அப்கள் ஒரு பொதுவான விஷயத்தை ஒரு நொடியில் ஒரு குறிப்பிட்ட விஷயமாக மாற்றக்கூடியது. க்ளோஸ்அப்பானது வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை அகலப்படுத்த மட்டும் இல்லை, ஆழப்படுத்தவும் செய்தது.

இத்திரைப்படமும் நம் மனவெளிகளின் ஆழ்ந்து போய்விட்ட வாழ்வின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று, பிடிப்பு தழுவிய விரக்தி அப்பிய வாழ்வின் கணங்களில், சின்னச் சின்ன சலனங்களை, நம்முள்ளேயே அமிழ்ந்திருந்த தன்னுணர்வற்ற நினைவலைகளைக் கிளறி விடும்போது நமக்குள் எழும் கலை உணர்வை பற்றியே இப்படம் தன் திரை மொழியில் விவரிக்கின்றது.

“கலை மனிதனின் பகுத்தறிவைப் பாதிப்பதில்லை

அவன் உணர்வுகளை பாதிக்கிறது

அவன் ஆன்மாவைக் கலக்குகிறது

நல்ல விஷயங்களை நோக்கி அவனைத் திருப்புகிறது.”

ஒரு திரைப்படம் நம் வாழ்வின் போக்கை விசாரணைக்குட்படுத்தும், அக்கறையற்ற வாழ்வின் பிரச்சினையின் நெருப்பு நிமிஷங்களில் நாம் கவனிக்க மறந்த நம்முடைய நிழலின் ஒளிபிம்பத்தை நம் கண்ணுக்குத்தெரியாத தியான சிதறல்களை மெல்லிய உணர்வுகளை, வாழ்க்கை அதன் தனித்தன்மையை புதிரை, காதலை, நிர்வாணத்தை, கிழிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை, தொலைக்காட்சியை, தொலைக்காட்சியில் விரியும் காட்சி வன்முறையின் மன சாட்சிகளை, குடும்பச் சூழலின் மனைவி என்ற கதாபாத்திரத்தை, குழந்தையைத் தன் வீட்டை, தன் காரை, தன் இருப்பில் கலந்திருக்கும் நவீன வாழ்வின் புதிய கதாபாத்திரமான கணிப்பொறியை, கணிப்பொறிக்குள் எலியைப் போல் அகப்பட்டுக் கொண்ட மனித வாழ்வை நவீனக் காலத்தின் அவசர கதியான வாழ்வின் அவசியமற்ற தன் இடுப்பில் உயிர்ப்புடன் இருக்கும் நிழல்போன்று தன்னருகே இருக்கும் இன்னொரு இருப்பை, தன் குழந்தையின் பொன் சிரிப்பை, அழுகையை, செல்லப்பிராணியாக வீட்டின் மூலைகளில் சாட்சியாகத் திரியும் பூனையின் வாழ்வை, இன்னும் படிக்கும் புத்தக அடுக்குகளை, சிதறிக்கிடக்கும் வீட்டின் பராமரிப்பற்ற நிறுவன வெளியை, மனிதன் புழங்காத தூசி படிந்த இருட்டறைகளை, தன்னை விட்டுப்போன மனைவியின் மீள் வருகையினால் முரணடையும் ஒரு அறிவு ஜீவியின் பதற்றத்தை, நடைமுறையை, தொலைக்க முடியாத இன்னல்களை, சிதறிய பிண்டங்களாகக் கலைத்துப் போடப்பட்ட வாழ்வின் சிதறிய பகுதிகளைப் படம் பிடிக்கும் இத்திரைப்படம் வாழ்வை இருவேறு பகுதிகளாக ஆய்வு செய்கின்றது.

உள்ளே வெளியே என்கிற ஆன்மீகத்தேடலின் மொழியாகத் திரைபிம்பம் இப்போது க்ளோஸ் அப் காட்சிகளாக நமக்கு ஸென் மொழியின் வழித்தடங்களை இனம் காட்டுகின்றது.  மனிதன், அவன் சூழலை சாதாரண காட்சிகளில் காட்டும் சினமா இப்போது தன் இருப்பை மிக அண்மைக் காட்சிக்கு நகர்த்துவதன் வழியாக திரைப்படம் வேறொரு பரிமாணத்தை அடைவதன் மூலமாக பார்வையாளனுக்கும் புதிய பிம்பத்தை திரையில் உணர்த்துகிறது. உணர்த்தப்படும் திரைமொழி அது வரையிலும் எந்த சினிமாவிலும் சொல்லப்படாத புதியமொழி அம்மொழி ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக மொழியானது.

நாம் கவனித்தும் உணராதுபோன ஆன்மீக சொல்லின் திரை

“ஒவ்வொருவரும் திரைப்படமும் புலப்படுத்தலுக்கான தனக்கேயான அடிப்படையை தானாகவே கண்டுபிடித்தாக வேண்டும்.”

புத்தரின் தனித்த வழிநடத்தை போல் இச்சினிமாவினுள் இயற்கையின் நர்த்தனங்களை, மழை வடியும் ஜன்னலின் மழைத்துளிகளில் இருக்கும் ஹைக்கூ தன்மையை ஒளியினது நிழல்களை, சினிமாவின் கேமரா தரம் மிக அண்மைய காட்சியில் விழித்திரையினுள் தரும் இப்படத்தின் காட்சி குறியீடுகளும் ஒழுங்கமைப்பும் இப்படத்தின் ஒரு நவீன அரசியல் ஓவியத்தை நம் கண்களுக்குள் தந்தாலும் இச்சினிமாவில் உள் நுழைந்து பயன்படும் பார்வையாளர்கள் மனதில் கவி ஓவியன் பாஷோவின் இச் ஸென் கவிதை தரும் காட்சி அடர்த்தியை என்றும் உள் நினைக்கும் …

பழைமையான குளம் 

தவளையொன்று குதிக்கிறது 

மீண்டும் மோனம் 

திரைப்படத்தில் வரும் ஒற்றைக் கதாபாத்திரம் தன் மனத்தில் எழும் மொழியைத் தேடிப் பயணிப்பதன் மூலமாக வாழ்வை ஆய்வு செய்கின்றது.

கடந்த காலத்தில் முற்றுப் பெறாத அனைத்துச் செயல்களின் தொகுப்பே மனம்.

ஐரோப்பிய நாகரிகமும், பண்பாடும் அவன் மனத்தை உள்ளே ஆழமாக அழுத்தி வைத்திருப்பதை அறியாதவனாய் அவனைத் திரைப்படம் நமக்கு உணர்த்துகின்றது.

மிக அண்மைக்காட்சிகளாக நமக்கு வந்து சேரும் காட்சிக் கவிதைகள் ஸென் தத்துவம் என்றால் என்ன என்பதை விவரித்தபடியே இருக்கின்றது. அவன் தொலைத்துவிட்ட தன்மைக்கும் நிகழும் வாழ்விற்கும் திரைப்படக்காட்சிகள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு புரிந்துகொள்ள முடியாத ஒரு தத்துவத்தை மிகவும் எளிமையானதொரு காட்சிகளின் மொழியில் செல்லும் இப்படம், எப்படி ஸென் தன்மையை ஒரு சினிமாவின் மூலமாக சொல்வதற்கு சாத்தியமானது. திரையில் தனியாகத் தன்னைத் தேடித்திரியும் கதாபாத்திரமாக நாமும் இணையும் புள்ளிதான் இச்சினிமாவின் தனித்துவமும் இதுவரையும் பார்வையாளராக இருந்த நாமும் ஒரு தருணத்தில் திரையினுள் இழுத்துச் செல்லப்பட்டு வாழ்வில் தவறவிட்ட ஸென் தன்மையை நமக்கு இனம் காட்டுகின்றது. நம் வழித்தடங்களில் விலகி நகர்ந்த நுட்பமான புள்ளிகளை இப்படம் இனங்காட்டுகின்றது. அது காட்டும் உலகம் நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை அறியும்போது நம் மனம் விழிப்பு அடைகின்றது. திரையில் இப்போது சினிமாவாக இல்லாமல் வாழ்வாகப் பார்க்கும் நிலைமைக்குச் சென்றடைகின்றோம். சினிமா முடிந்ததும் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்பும் அந்த விழிப்புப்பெற்ற மனத்தின் மொழி தமக்குள் செயற்படுகின்றது. பாதைகளும், பயணங்களும், மனிதர்களும் இப்போது வேறுமாதிரியாகத் தெரிகிறார்கள். வானமும், பூமியும், காற்றும், மலர்களும் வேறொன்றாகத் தெரிகின்றது. தற்சமயம் என்ன என்பதை இப்படம் பார்வையாளனுக்கு உணர்த்தும். வாழ்வையும் மனதையும் இத்திரைப்படம் வேறுமாதிரி பார்க்கச் சொல்கின்றது. இப்போது ஸென் என்பது என்ன என்பது புரிகின்றது.

 

02

சினிமா வெரித்தி (Cinema – Verite) அல்லது நேரடி சினிமா ((Direct Cinema) ரஷ்ய திரைப்படத்துறையில் 1972களில் இலக்காக வளர்ந்திருந்தது. விஷயங்களை அப்படியே நேரடியாக அதே நேரத்தில் கலை நயத்தோடு காண்பிப்பது ஒரு அழகாகவே இருந்தது. ஆனால், The Sea That thinks சினிமா வாழ்வையும் தத்துவார்த்த பின்னணியையும் இணைத்து இயல்பைக் கலை நயத்தோடு தேடுகின்றது.

படத்தில் ஸென் வாழ்வின் தத்துவார்த்தத்தோடு காட்சிமொழி அணுகப்பட்டிருந்ததால் ஒரு முதிர்ந்த தன்மையையும் ஆழ்ந்த அனுபவ தன்னிலையையும் தூண்டுகின்றது.

நம்முடைய தினசரி வேலைநாள் வாழ்க்கையில் நிகழும் சிறு சிறு நிகழ்ச்சிகளை காமராவின் வழியாகக் கூர்ந்து பார்ப்பதுதான் இவரது பாணியின் நோக்கம். இத்தகைய சிறு நிகழ்ச்சிகளை நாம் மேம்போக்காகத்தான் பார்க்கிறோம். கூர்ந்து கவனிப்பதில்லை. வாழ்க்கையின் இத்தகைய சிறு துகள்களை க்ளோஸ் அப்பில் தனித்துக் காண்பிக்கும்போது அவைகள் முக்கியத்துவமுடையதாய் மாறுகின்றது. இவ்வாறு அவைகளை தனித்துக்காட்டுவதன் மூலம் அவைகளுக்கு தோற்றங்களையும் வடிவத்தையும் தரமுடிகின்றது. இத்தகைய சிறுசிறு நிகழ்ச்சிகள் அப்படியே காமிராவில் படம் பிடிக்கப்பட்டவையாகும். அவை ஜோடிக்கப்பட்ட ஒன்றல்ல.

ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஸென். ஸென்னை நாம் எங்கே போய் தேட முடியும். அது ஒவ்வொரு உயிரிடமும் இயல்பாகவே இருக்கின்றது. உண்மை மிகவும் எளிமையாக இருப்பதனாலேயே மனம் அதை நம்ப மறுத்து ஸென்னை எங்கோ தேடித்திரிந்து வாழ்வையே குறுக்கிக் கொள்கின்றது. இப்படத்தின் கதாபாத்திரத்திற்கும் இதுதான் நிகழ்கின்றது.

தன் வாழ்வில் ஏதோ ஒன்று இருப்பதாக நினைத்து தன் எண்ணங்களை மனம் பேசும் வார்த்தைகளை (Auto Mission) என்ற எழுத்து வெளிப்பாட்டின்படி எழுதிப்பார்ப்பது தன்னையே ஒரு ஆய்வாளனாக, தன் மனக்கிடங்கில் குவித்து கிடக்கும் லட்சக்கணக்கான வார்த்தைகளைத் தன் அறையில் நவீன வாழ்வில் வந்து கலந்திருக்கும். கணிப்பொறியியல் முன் விடாது தட்டச்சினை இயக்கிய படியே இருக்கின்றன.

படத்தில் வரும் கதாபாத்திரமோ தன் கணிப்பொறியைத் தன் வாழ்வைப் பற்றிய ஆராயும் கருவியாகி, மனம் நினைக்கும் தொடர்பற்ற வார்த்தைகளை விடாமல் கணிப்பொறி திரையில், எழுதியபடியே இருக்கிறாள். புத்தகங்களை படிப்பதுமாய் அவன் ஒரு கட்டத்தில் மனசோர்வு மிகுதியாக அயர்கிறான். அயர்வும் மனஉளைச்சலும், சலிப்பும் நம்மை சூழ்கின்றது. அவனையும் அது எழுதுவதும் பல்வேறு உறக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது.

“மனம் என்பது அழகிய நுண்ணிய ஒரு கம்ப்யூட்டர் இயந்திரம். விஞ்ஞானம் அதைப்போல ஒன்றை இதுவரை உண்டாக்கவில்லை. ஏனெனில், அதனுடைய வேலைத்திறன் மிகவும் சூட்சுமமானது மிகவும் பின்னப்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்தது. அதனுடன் போராடினால் நீங்கள் நிச்சயம் தோல்வியைத் தான் காண்பீர்கள்.  என்ற ஒசோவின் மொழிதான் ஞாபகம் வருகின்றது இவனோ (Auto Mission) என்ற எழுத்தின் வழியாக தன்னையே எழுதிக் கரைத்தபடி இருந்தாலும் அவன் தேடும் வாழ்வின் அர்த்தம் ஒஷோ சொன்னது போல் காணாமல் போன மூக்குக் கண்ணாடி தன் மூக்கின் மேல் இருப்பதைக் கண்டுகொள்வது போன்றதுதான் ‘ஸென்” என்பதை அவனுடனே இருந்து அவனே தவற விடுகிறானே என்கிற ஏக்கத்தை தந்தாலும், அவன் வாழ்வின் இருக்கும். ஸென் தன்மையில் மொழியின் சாரமும் அவன் தவற விடும் காட்சிகள்தான் நமக்கும் க்ளோஸ் அப் காட்சிகளாக வருகின்றது. அப்போதுதான் பார்வையாளனுக்கும் அந்த செய்தி வந்து சேர்கின்றது .

அந்த செய்தி ஒவ்வொரு தேடல் நிறைந்த மனிதனுக்கும் சொந்தமானது. புரிந்துகொள்வதற்கும் விளங்கிக்கொள்வதற்கும் கடினமான தத்துவார்த்த கருத்துக்களை மிக எளிமையாக உணர்த்த செய்கின்றது இப்படம். படத்தில் கதாபாத்திரம் கணிப்பொறியில் ஆன்ம விசாரணையில் மூழ்கி இருக்கும்போதே காமிரா தன் இருப்பை ஸென்னுக்குத் திருப்புகிறது திரையில் தோன்றும் கதாபாத்திரம் கம்ப்யூட்டரிடம் தன்னை இழந்துவிட்டதையும் படம் குறிக்கின்றது.

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனை பொம்மைவாசியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் வன்முறை, வன்முறை கருத்தாக்கங்களின் மேலும், உலகை கையடக்க தொழில்நுட்ப கருவிக்குள் அடக்கிப் பார்க்க வேண்டும் என்கின்ற ஏகாதிபத்திய குரூர மனத்தின் போதையையும், கம்ப்யூட்டரே கதி அதன் முன் பசி, தூக்கமின்றி மணிக்கணக்காய் நாட்கணக்காய்த் தங்கள் அறிவையும் திறனையும் இழந்த மனிதனின் தனித்தன்மையும், உணர்வுகளை கம்ப்யூட்டர் என்ற இயந்திரத்தினிடம் மனிதன் இழந்துவிட்ட காலப்பின்னணியையும் நவீன தொழில்நுட்பங்களும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் மனித ஆன்மாவை வன்முறைகளுக்கும் உளவியல் சிக்கலுக்கும் இட்டுச்செல்வதை இப்படம் உணர்த்தும். அதேநேரம் இன்று தங்களை கம்பியூட்டருடன் ஒப்பிட்டுப் பேசுவதையும் சிலர் தங்களைக் கிட்டத்தட்ட கம்பியூட்டர்கள் எனக் கருதுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சமூகவியலாளர்கள் ஷெரிடகில்.இது போலவே இப்படத்தில் வரும் கதாபாத்திரம் தன் தேடலை, மனம் பேசும் வார்த்தைகளை கணிப்பொறித்திரையில் எழுதி தன்னையே தேடும் ஒரு நவீன இயந்திர தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதன் ஒரு கட்டத்தில் இப்பாத்திரமும் தன்னையும் தன்முன் இருக்கும் கணிப்பொறியைப் போலவே இயந்திரம் என்று உணர்கின்றது. அதுவும் அவனைப்பொறுத்தவரையில் மனத்தின் வார்த்தை என்றும் நம்பி வார்த்தைகளின் மனத்தின் புலம்பல்களின் இருப்பே மனத்தின் வார்த்தை பெருங்கதையாடலாக அவனுக்குத் தோன்றுகின்றது. கணிப்பொறியுடனான தேடல், தத்துவார்த்தமான தீவிர படிப்பு, எல்லாம் வெறும் மனச்சுமையை, தேடல் ஒரு மாபெரும் சோர்வாக அவனுக்குத் தோன்றுகின்றது. இதைத் திரைப்படக் காட்சிகள் தமக்கு உணர்த்துகின்றது. அவன் சேகரித்த குறிப்புகள், தரவுகள் இன்னும் பல ஆயிரம் பக்கங்களில் எழுதிய, படித்த பல லட்சக்கணக்கான வார்த்தைகளின் புத்தக பக்கங்களின் தாள்கள், வாசித்த புத்தக மடிப்புகள், புத்தகத்தின் மேல் அவன் இட்ட அடிக் குறியீடுகளும், புத்தக வரிகளில் மையினால் கீறிய அவனுக்கான தேடலின் சார்புள்ள பக்கங்கள் எல்லாம் அவனை ஒரே பாறாங்கல்லாய் போட்டு அழுத்துகின்றது குழப்பம், மன விசாரத்தின் சுமையும், தடுமாற்றம் எல்லாம் சேர்ந்து திடீரென்று வீட்டுக்கு வரும் மனைவியின் கோபம் இவன் மேல் திசைதிரும்பி அவனை விரக்தியுடைய மனிதப் பிரதியாகின்றது.

இவன் மீண்டும் தன் கணிப்பொறி எலிவலைக்குள் சிக்குவது போல் சிக்குகிறான். இப்படியாக ஒரு நாள் பொழுது முடிகின்றது. கணிப்பொறியை நிறுத்துகின்றான். திரை இருள்கின்றது. அவன் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்கின்றான். இப்போது தன் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணி பூனை. அவன் இதுவரை தன்னுடைய அடையாளத்தை தேடிக்கொண்டிருந்த இடத்தில் கணினியில் … மேசையில் என்று ஏறி அமானுஷ்யமான ஓர் உருவமாகப் பெரிதாகி திரை முழுவதும் மாயா தோற்றத்துடன் நடந்து போகின்றது. படமும் அத்தோடு முடிகின்றது. இப்படத்தில் பெருங்கதையாடலுக்கான முன்திட்டங்களோ, கதாநாயக பிம்பங்களோ, நீண்ட அலுப்பு தரும் உரையாடல் தொகுப்போ ஏதும் இல்லை. அப்படியான உரையாடல் இருந்தாலும், அது நம்மை வந்து தொந்தரவு செய்வதில்லை, சேர்வதும் இல்லை. இங்கே படத்தில் கதை நாயகன் காமிராவும், க்ளோஸ் அப்பும்தான். க்ளோஸ் அப் காட்சிகளுக்கு ஏற்கனவே வலிமையான சக்தி இருக்கின்றது. இந்தப் படத்தில் வரும் க்ளோஸ் அப் காட்சிகள் மனவெளியில் ஸென் கவிதைகளை போல் உணர்வுகளையும் ஆழ்ந்த ஞான தேடலையும் தூண்டுபவை, தியானத்தின் அமைதியைப் போல் க்ளோஸ் அப் காட்சிகள் இப்படத்தின் வழியாக நம்மை வந்து தாக்குகின்றது. ஆயிரம் பக்கங்களின் மேல் சொல்லப்படும் பிரபஞ்ச மொழியை இப்படம் ஒரு க்ளோஸ் அப் காட்சிகளில் சொல்லிவிடுகின்றது .

இப்படத்தின் இன்னும் புரியாத எத்தனையோ காட்சி வெளிகள் இருந்தாலும் இப்படத்தின் தீராத ஞாபகங்கள் முடிந்து விடாமல் தொடர்ந்தபடியே இருக்கின்றது. இப்படம் இன்னும் ஒரு பனித்துளியைப் போல் ஞாபகப் பதிவில் கரைந்துவிடாமல் கால ஓட்டத்தை தாண்டி புதிர் தன்மையினால்தான் ….. க்ளோஸ் அப்புகளும் மற்றும் சில காட்சிகளும் அவ்வப்போது வாழ்வின் அழகிய தருணங்களில் எழுந்து நினைவுக்கு வருகின்றது. ஒரு சினமா ஆழ் மனவெளிகளில் கலந்து நிகழ்வாழ்வின் அன்றாட நடைமுறைகளில் அவ்வப்போது நினைவுக் குமிழிகளாக உதிரும் கணங்களை ஒவ்வொரு பொழுதிலும் ஞாபகப்படுத்தும் தன்மையை ஒரு சினிமா சாத்தியமாக்கி இருக்கின்றது.

முதல் மழைத்துளியையும், ஒளியின் நர்த்தனங்களையும் ஜன்னலோரத்து பசுமையையும் வாழ்வு மாபெரும் க்ளோஸ் அப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு புதைவெளி என்ற செய்தியை இத்திரைப்படம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்தியபடியே இருக்கின்றது.

 

03

பெரும் கதைக்கான படங்களில் இருக்கும் ஆபாசம், பாசாங்கு, அசட்டுத்தனமான போலிகள், வன்முறை எல்லாவற்றையும் மீறி சினிமா என்ற கலையின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் எல்லா விதமான நடைமுறைகளையும், கட்டுகளையும் உடைத்தெறிந்து ஒரு அறிவு ஜீவியின் மனம் செயல்படும் விதத்தை மன மொழியின் வரைபடத்தை இச் சினிமாவின் காட்சி படிமங்கள் பதிவு செய்கின்றது.

ஏற்கனவே இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட அதிகார மையங்களின் காட்சி சட்டத்தின் வடிவ உத்தி கோட்பாடுகளை எல்லாம் சுக்குநூறாகத் தூக்கி எறியும் இச்சினிமா புதிய சினிமாவுக்கான நவீன வழித்திடங்களை காட்சி மொழி கொண்டு நிகழ்த்தியிருக்கின்றது. பெரும் கதையாடல்கள் கொண்டு தொடக்கம் விறுவிறுப்பு சுபமான முடிவு என்ற நிறுவனப்படுத்தப்பட்ட கழிசடை சினிமாக்களுக்கு பழக்கப்பட்ட எனக்கும், இச்சினமாவில் ஏன் கதையாடல், நடிப்பு, செட் பிரமாண்டம் எல்லாம் இல்லை கேள்வி எழுந்தாலும் நானே முடிவு செய்து கொண்டேன். “பெருங்காய டப்பாவிலிருந்து பெருங்காயத்தை எடுத்த பின்னரும் பெருங்காய வாடை இருக்குமே, அதுபோல் தமிழ் சினிமா சூழல் எனக்குள் விதைத்திருக்கும் நோய்க்கூறுகளின் மூலமாக இப்படத்தையும் என் சிற்றறிவு அளவுகோலால் நிராகரித்துவிட என்னால் முடியவில்லை. ஏனெனில் இச்சினிமா ஆழமாக என் மனபரப்பில் சுய அடையாளத்தை தூண்டியிருந்தது. இதுவரை என்மனதில் இருந்த எல்லா வகையான சினிமாத்துண்டுக் காட்சிகளும் சிதறிப் போனது.

நம் சூழலில் எல்லா படங்களிலும், ஏதோ ஒரு மனநிறைவை, குற்றவுணர்வை, ஈகோவை உணரும்படி செய்து நம்மைத் தன்னிலையற்ற பிரதியாக வெளியே தள்ளும் சினிமாவுக்கு மத்தியில் The Sea that Thinks திரைப்படம் பார்த்த பின் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது உலகின் காட்சியே மாறிவிட்டது போல் உணரும் தருணமும், வாழ்வின் போக்கே இன்றிலிருந்து வேறொன்றாய் ஆகிவிட்டதோ என்ற மனப் பதற்றமும் எனக்குள் பரவியது. நிகழ்வுகளும் உலகின் உண்மைகளும் நாம் காணாமல் நகர்ந்து கொண்டிருப்பது போல் உணரக்கண்டேன். இப்படம் பார்த்த பின் உலகில், தெருவில், வானில், சக மனித இருப்பில், உணர்வுகளில், நடைபாதை வெளிகளில் எங்குமே ஒரு ஓயாத ஒளித்திரவம் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது போலவே உணர்ந்தேன். ஒரு நல்ல கவிதையை உணர்ந்த பின் ஏற்படும் மனநிலையை, ஒரு ஸென் டீ அருந்திய ஒரு அந்திமழையில் நனைத்த உணர்வை இப்படம் எனக்குள் திசைபரப்பியது.

முழுக்க முழுக்க நடக்கக் கூடிய யதார்த்தத்தை அப்படியே நம்பும்படி படம் பிடித்தால் அது மிகவும் அக நிலைவாய்ப்பட்டதாக இருக்கும். அவைகளுக்குக் கதை என்று எதுவும் கிடையாது. ஆனால், மையக்கதாபாத்திரம் அதாவது கதாபாத்திரம் அதாவது கதாநாயகன் என்பது வீடு, இந்தக் கதாநாயகனோ கண்ணுக்குத் தெரியமாட்டான். ஆனால் காமிராவின் பின்னிருந்து காமிராக் கண் மூலம் எல்லாவற்றையும் பார்க்கிறான். அவ்வாறு பார்க்கப்படும் ஒவ்வொன்றும் பார்ப்பவனின் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இந்த ஷாட்டுக்களில், யதார்த்தம் என்பது எந்த அளவுக்கு ஜோடிக்கப்பட்டதாக இருந்தாலும், அது பார்ப்பவனின் தன்மையை பிரதிபலிக்கும் யதார்த்தத்தின் வேறு துண்டுகளை விட்டு விட்டு அந்த குறிப்பிட்ட சிறு பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவன் அந்த ஷாட்டுகளின் தன்மையையே காண்பித்துக்கொண்டிருக்கின்றான். அவனுடைய அக நிலை உணர்வுதான் அவனுடைய விருப்பத்தையும், காட்சித் தொகுப்பையும் படத்தொகுப்பின் சீர்மையையும் நிர்ணயிக்கின்றது.

பார்ப்பவனுக்கும் பார்க்கப்படும் பொருளுக்குமான உறவை சார்புத்தன்மைப் பற்றி பேசும் பேலபெலாஸின் வார்த்தைகளைப் போல இத்திரைவெளி பார்வையாளனுக்கும் படைப்புக்குமான இடைவெளிகளே இல்லாமல் ஆக்கிவிடுவதோடு, எல்லா வகையான பார்வையாளனுக்கும் தன் சொந்த ஆன்மீக மட்டத்தையும் தனக்குள் இருக்கும் ஸென்னை ஞாபகப்படுத்தும் பிரதானமான தொடக்கத்தை இப்படம் எப்போதும் நிறைவேற்றும்.

 

04

 

நெதர்லாந்து தேசத்திலிருந்து கேரள உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட The Sea that Things என்ற ஆங்கில மொழி தலைப்பை’ அங்கே ஒரு கடல் இருந்தது என்றே தமிழாக்கப்படுத்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கடல் இருக்கின்றது. அதைத் தேடும் முயற்சிதான் இப்படம்.

திரையில் பிரதானமாக ஒற்றைக் கதாபாத்திரமாகத் தோன்றும் படத்தின் இயக்குனர் Gert de Graff (கெத்தே கிராஃப் ) இத்திரைப்படத்திற்காக 13 வருட காலமாகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். படம் பற்றிய குறிப்புகளை 100 மணிநேரமான அளவுக்கு சேகரித்திருந்தார். சேகரித்த குறிப்பிலிருந்து தன் சினிமாவை தொடங்கியவர் 16 மாத காலமாக இரவு பகல் என்று படத்தின் படத்தொகுப்புக்காகப் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் மூலம் உள்நாட்டு, வெளிநாடு என்ற பல்வேறு சிறந்த விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளார்.

கதாபாத்திரம், காட்சிப்படிமங்கள், உரையாடல் இவற்றின் தந்திரங்கள் மூலம் ஏனைய படங்கள் சொல்ல முயற்சிக்கின்ற ஒரு விசயத்தை கிராஃப்  நேரடியாக நம் உணர்வுகளுக்குக் கொண்டு வருகிறார். அதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.

உந்தித் தள்ளும் வாழ்வின் தவிர்க்க இயலாத முரண்படும் நெருக்கடியின் வழியாகவே சமகால மனிதனின் அடிப்படையிலான பிரச்சினைகளே தந்திரங்களாக இவரின் படத்தில் விரிந்து செல்கின்றது.

வாழ்வின் யதார்த்தத்தை, அமைப்பைத் தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கும் போது பொருளின் இக்கேள்வியானது ஒரு அறிவார்ந்த மனிதனை நிச்சயமாக தர்க்கத்திற்கு இட்டுச் செல்லும், உண்மையைப் பற்றி விசாரிக்கும்.

மனிதன் கட்டமைக்கப்பட்ட பொய்களை நிராகரிப்பதன் வழியாகவே தன்னைத்தானே விசாரணக்கு உட்படுத்திக் கொள்வான் என்பதை திரைக்கதையாடலின் வழியாகச் சொல்லியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையாசிரியர் பாத்த லேப் உயர்ந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிடுகிறார். இப்படத்தின் வாயிலாகத் தன் திரைக்கதையில் யதார்த்தத்தை உண்மையாக அணுக முயற்சிக்கிறபோது யதார்த்தம் என்னவென்பதை நேர்மையாக சித்தரிக்கிறார்.

காட்சிகளும், திரைக்கதையும், பரஸ்பரம் இயக்குனரையும், பார்வையாளரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து விடுகின்றது.

உண்மை என்பது வாழ்வைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்வே பெரும் ஸென்னாக, தாவோவாக, யதார்த்தமாக எல்லாமாக இருக்கின்றது. பாராயணங்கள், பக்தி, வழிபாடு, சடங்குகள் எல்லா வகையான புனைவுகளும் உன்னை ஏய்ப்பதற்காகச் சொல்லப்படும் பெருங் கதையாடல் வடிவே என்பதை இத்திரைப்படம் தெளிவாக முன்வைக்கின்றது.

நாம் தொலைத்துவிட்ட அந்தக் கடலை கண்டு பிடிப்பதும் … அந்தக் கடலில் வாழ்வதுமே இப்போது தேவை.

நம்முன் மறைந்துவிட்ட கடலின் அடையாளம் குறித்து நாம் எங்கிருந்து உணர்வும், குறிப்பும் பெற முடியும். வேறெங்கும் இல்லை. இத்திரைப்படத்தில் சில சுய குறிப்புகள் கிடைக்கின்றது. அக்குறிப்புகளின் வழியாக நாம் இழந்துவிட்ட அந்தக் கடலைக் கண்டறியவாம். என்றும் மறந்து விடாதபடிக்கு நினைவில் மூழ்கிவிட்ட இப்படத்தைப் பார்த்த அந்த மாத அளவில் என்னுள் ஒரு கவிதை எழுந்தது. ஆன்மீக மனமும், வாழ்வின் ஸென் தன்மையை உணர்ந்த நிலையில் அக்கவிதைக்கு வெறும் கோப்பை என்று தலைப்பிட்டிருந்தேன். கவிதை இதுதான்.

தொலைபேசி மணி 

அடித்தபடி இருந்தது .. 

தேநீர் அருந்திக்கொண்டிருந்தோம் .. 

வாசலில் சிறு குழந்தைகளின் 

நடமாட்டம்

அறையின் 

மின்விசிறி 

சுழன்றபடி இருந்தது …. 

ஞாமடைவது பற்றி 

பேசிக் கொண்டிருந்த 

நீண்ட உரையாடல் 

தொடர்ந்தபடி இருந்தது அன்றும் ….. 

 

பேச்சினூடே 

அவன் ஒரு கணத்தில் கொன்னான் 

ஓடும் மின் விசிறியை 

நிறுத்தி … 

தேநீர் அருந்திய 

எச்சில் கோப்பைகளைக் 

கழுவி வை” 

என்று 

அப்போது எனக்கும் 

எல்லாம் புரிந்தது 

எல்லாம்….!

00

மேற்கோளுக்காகப் பயன்பட்ட நூல்கள்

  1. சினிமா கோட்பாடு – பேல பெலாஸ்
  2. தியானம் – ஓஷோ
  3. மக்களைத் தேடும் கலைகள் – அந்தராய் தார்க்கோணங்கி
  4. அறிவியல், அதிகாரம், ஆன்மீகம் – ஞானி
  5. Daily Bulleten – IFFK, 99
  6. தம்மபதம் – ஓஷோ
  7. பெண் விடுதலை ஒரு புதிய தாரணம் – ஓஷோ

 

      Mariemahendran134@gmail.com