நாடு, இனம், மொழி, கலாச்சாரம் தாண்டி ஒட்டுமொத்தமாக நம் எல்லாராலும் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒன்று காதலாகத்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன். காதல் இல்லையென்றால் தமிழ் சினிமாவில் படங்களே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு காதலுக்குப் பல்வேறு பரிணாமங்களை சினிமாக்களும், ஊடகங்களும் நமக்குக் கொடுத்திருக்கின்றன. ஆனால் நம் எல்லோராலும் மிக குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவும் காதல்தான் இருக்கிறது!

இப்படி இருந்தால்தான் உண்மையான காதல், இல்லையென்றால் போலிக் காதல், கள்ளக்காதல் என காதலுக்குப் பல வரையறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சமூகம் ஆண்-பெண் உறவை எப்படி அணுகுகிறது என்பதைப் பொறுத்து இந்த வரையறைகள் மாறுகின்றன.

உண்மையில் காதல் என்பது என்ன?

காதல் என்பதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன: ஒன்று, உணர்வு (Emotion). இரண்டாவது அர்ப்பணிப்பு (Commitment) .

நமக்கிருக்கும் பல்வேறு உணர்வுகளைப் போல காதலும் ஓர் உணர்வு!. சந்தோசம், கவலை, பயம் போன்ற உணர்வுகளில் காதலும் ஓர் உணர்வு. உணர்வுகள் எப்படிப் புற மற்றும் அக சூழலைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்குமோ அதே போல காதலென்ற உணர்வும் மாறிக்கொண்டிருக்கும். ஒரு நேரத்தில் நாம் விரும்பும் ஒன்றை எல்லா நேரத்திலும் எப்படி விரும்ப முடியாதோ அதே போலவே நாம் காதலென்ற உணர்வும் எல்லா நேரங்களிலும் கொண்டிருக்க முடியாது. அனைத்து உணர்வுகளையும் போல காதல் என்பதும் அகசூழலைப் பொறுத்தது.

ஒருவர் மீது நாம் காதல் கொள்ளப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவையெல்லாம் காரணமாக நாம் எடுத்துக்கொண்டவையே. உண்மையான காரணம் அகவயப்பட்டது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மகிழ்ச்சியை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியாதோ அப்படி. ஒருவரைப் பார்க்கும் போது நமக்குள் ஏற்படும் ஓர் உணர்வொன்று அவர் மீது காதல்வயப்பட வைக்கிறது. இதை நல்லுணர்வு (wellbeing) என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த உணர்வைப் பொதுமைபடுத்த முடியாது. அதே நபரைப் பார்க்கும் எல்லோருக்கும் இந்த உணர்வு வரும் என சொல்ல முடியாது, அதே போல பார்க்கும் அத்தனை நபர்களின்மீதும் இந்த உணர்வு ஏற்படாது. முழுக்க முழுக்கத் தனிப்பட்ட நபரின் அகம் சார்ந்த உணர்வே காதல்.

ஒருவரைப் பார்க்கும் போதோ அல்லது அவருடன் இருக்கும்போது நம் உள்ளுக்குள் ஏற்படும் இந்த நல்லுணர்வு அதை மீண்டும், மீண்டும் உணர்வதற்காக அந்த நபரைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கும், அவரோடு இருப்பதற்குமான தூண்டுதலை நமக்குக் கொடுக்கும். வேறு எந்த தேவைகளையும் விட மனம் இந்த உணர்வை மீண்டும் பெறுவதிலேயே உன்னிப்பாக இருக்கும்போது நாம் நமது அன்றாடச் செயல்களின் மீதான முனைப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த நல்லுணர்வை அடைவதற்கான செயல்களிலேயே அதாவது அந்த நபரைப் பார்ப்பதிலோ அல்லது அவருடன் இருக்க முற்படுவதிலேயோ நாம் மூழ்கி இருக்கும் நிலையையே நாம் காதல் வயப்பட்ட நிலை என்கிறோம். இது ஒரு உடலியல் செயல்பாடு (Biological Process).

யாருக்கும் யார் மீதும் இந்த உணர்வு வரலாம். ஆனால் அப்படிப்பட்ட உணர்வு மட்டுமே காதல் அல்ல. வெறும் உணர்வை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த உறவைத் தக்கவைக்க முடியாது, அந்த உணர்வைத் தக்கவைப்பதற்காக நாம் சில அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அர்ப்பணிப்புகள் காதல் கொண்ட நபருடனான ஓர் உறவை மேற்கொள்ளத் தேவையானதாக இருக்கிறது. இந்த அர்ப்பணிப்புகள் பக்குவப்பட்டவை, அறிவுப்பூர்வமானவை அவைதான் ஆண்-பெண் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.

அப்படி என்ன அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்?

ஆண்-பெண் உறவில் இருவருக்குமே சம பொறுப்புகள் இருக்கின்றன என்பதை உணர வேண்டும். பாலின சாதகத்தைக் கொண்டு இன்றைய காலத்தில் ஒரு உறவைக் கையாள முடியாது. அதனால் ஒரு உறவில் இருக்கும் இருவரும் அந்த உறவை நீட்டிப்பதற்கான மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்:

  1. பொறுப்புணர்வு (Responsibility)
  2. ஒப்புவித்தல் (Commitment)
  3. நல்லெண்ணம்(Compassion)

பொறுப்புணர்வு (Responsibility):

ஒர் உறவின் நிமித்தம் நமது பொறுப்புகளை உணர வேண்டும். அந்த உறவை நீட்டிப்பதில் தனக்கும் சம பொறுப்பு இருக்கிறது, அதில் வரும் இடையூறுகளுக்கும், சிக்கல்களுக்கும் தானும் ஒரு காரணமாக இருக்கலாம் என உணர்ந்து அதற்காகத் தன்னை, தனது நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நிறைய நேரங்களில் காதலில் பிரச்சினைகள் வரும்போது “உன்னால் தான் இந்தப் பிரச்சினை, நீ இப்படி நடந்து கொண்டதால் தான் இந்தப் பிரச்சினை” என மற்றவர்களை மட்டும் காரணமாக்குவதால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது, அந்தப் பிரச்சினைக்கு தான் எந்த வகையில் காரணம், தனது புரிதல்களோ அல்லது நடவடிக்கைகளோ எந்த வகையில் இதற்குச் காரணமாக இருக்கின்றன என்று யோசிக்கத்தொடங்கும்போது அதற்கான முழுமையான, நிரந்தரமான தீர்வை நோக்கி நகர முடியும். இந்த உறவை நீட்டிக்க வேண்டும் என நினைத்ததில் எனக்கும் முழு பொறுப்பு இருக்கிறது என்பதை உணரும் போதுதான் அதன் சிக்கல்களிலும் எனக்குப் பொறுப்பிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், அந்த உறவை நீட்டிக்க வேண்டும் என தம்பதிகளுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்கள் நினைப்பதால், இந்தப் பொறுப்புணர்வை தம்பதிகள் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் தொடக்க காலங்களில் அவர்களுக்குள் நிறைய முரண்பாடுகள் ஏற்படும். எவ்வளவு விரைவாக நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்கிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்களுடைய உறவு பக்குவப்பட்ட ஒன்றாக மாறும்.

ஒப்புவித்தல் (Commitment):

ஓர் உறவைத் தக்கவைப்பதற்கான அவசியமான பண்பு என்பது அந்த உறவிற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பது. என்னளவில் இந்த உறவு எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்து அதற்காக நான் முழுமையாக என்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ நாம் பல நபர்கள் மீது காதல் வசப்படலாம் ஆனால் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் உறவின் நிமித்தம் நாம் அவற்றையெல்லாம் நிராகரிக்க வேண்டும். அந்த உறவில் உள்ள நபர்களுக்காக அல்ல, உறவின் நீட்டிப்பதற்காக நாம் இந்தப் புறத் தூண்டுதல்களையும், சபலங்களையும் எப்போதும் புறக்கணிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நல்லெண்ணம்(Compassion):

ஒருவர் மீது ஒருவர் உண்மையான வாஞ்சையுடனும் காதலுடன் இருக்க வேண்டும். இன்னொருவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவராக, அதற்கு மதிப்பளிப்பவராக, அவர்களின் மீது உண்மையான கரிசனம் கொண்டவராக எப்போதும் இருக்க வேண்டும். ஆண்-பெண் உறவைப் பொறுத்தவரை ஆயிரமாயிரம் பிரச்சினைகள் எப்போதும் முளைத்துக்கொண்டே இருக்கலாம், சண்டையிட வேண்டும் என முடிவு செய்து விட்டால் தினந்தோறும் ஆயிரம் காரணங்கள் கிடைக்கும். ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் ப்ரியமும், அன்னியோனியமும் இந்தக் காரணங்களையெல்லாம் புறக்கணிக்க வைக்கும். எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளிடம் நான் காண்பது அவர்களுக்கிடையே எந்த அன்னியோன்மான உறவும் இல்லாதிருப்பதையே!. அவர்களிடம் நான் சொல்வதும் இதைத்தான். “ஒருவர் மீது ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எல்லாம் நியாயமானவைதான. நான் மறுக்கவில்லை, மனிதர்களே பெரும்பாலும் சிறுமைகள் நிறைந்தவர்களே!, ஆனால் உங்கள் இருவருக்கிடையேயும் எந்த உள்ளார்ந்த அன்பையும், ஆசையையும் என்னால் பார்க்க முடியவில்லை, அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்த சிறுமைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீங்களே கடந்து போய்விடுவீர்கள்”. ஒரு அன்னியோன்யமான உறவில் பிரச்சினைகளே இல்லாமல் இருக்காது, ஆனால் பரஸ்பர அன்பின் காரணமாக அந்தப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் வாழ முற்படுவார்கள். எந்த உறவை நீட்டிப்பதற்கும் ஒருவர் மீதான இந்த நல்லெண்ணமும், கரிசனமும் மிகவும் அத்தியாவசமானது.

அக ரீதியான நல்லுணர்வும், அந்த நல்லுணர்வைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்சொன்ன மூன்று பண்புகளும் சேர்ந்ததே காதல்! இந்த மூன்று பண்புகளையும் முழுமையாக, எப்போதும் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இவை அவசியம் என்று உணரும்போது அந்த உறவு மேன்மையை அடையும்.

முந்தைய காலங்களில், குறிப்பாக குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைப் பொறுத்தவரை தனிநபர்களுக்கு இப்படிப்பட்ட பொறுப்புகள் தேவையில்லை, திருமணம் என்ற சட்ட ரீதியான ஒப்பந்தமே போதுமானது, திருமணம் ஆகிவிட்டால் பிடிக்கிறதோ இல்லையோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை திருமணமே வழங்கி விடும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த உறவில் இருந்து பிரிவதே இயலாது என்ற நிலையில் தனிப்பட்ட நபர்கள் எப்படி இருந்தாலும் அந்தக் குடும்பமும், சமூகமும் உறவை நீட்டிப்பதற்கான ஆயத்தங்களை எடுத்துவிடும். ஆனால் நவீன கால ஆண்-பெண் உறவுகளில் இதற்கான சாத்தியங்கள் குறைவு. திருமணம் என்பது பரஸ்பர ஒத்திசைவு, புரிதல், அன்பினால் மட்டுமே சாத்தியமாக இருக்கிறது, இவை எதுவுமே இல்லாமல் ‘திருமணம் என்ற ஒன்றே உறவை நீட்டிக்கப் போதுமானது’ என்ற அந்தஸ்தை திருமணங்கள் இன்று இழந்துவிட்டன.

விட்டுக்கொடுப்பதா அல்லது சகித்துக்கொள்வதா?:

ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பதே உறவின் மரபார்ந்த சூத்திரமாக நாம் இத்தனை காலம் நம்பிக்கொண்டிருந்தோம்.

“உனக்காக நான் இதையெல்லாம் செய்தேன், எனக்காக நீ என்னவெல்லாம் செய்தாய்?” என்பதை தான் நான் ஒவ்வொரு உறவு முறிவிலும் கேட்டு வருகிறேன்.

காதல் என்பதன் மீதான புனிதத்துவமான பிம்பம் தான் ‘விட்டுக்கொடுப்பது’ என்பதற்குக் காவியத்தன்மையை கொடுத்திருக்கிறது. உண்மையில் எதார்த்தங்களில் யாரும் யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. இந்த உண்மை புரியவே நமக்குப் பல காலங்களாகியிருக்கிறது.

“எனக்காகத் தண்ணி அடிப்பதை மட்டும் விட்டுவிடுங்களேன்” என்ற கேள்வியைக் கணவர்கள் மிக சுலபமாகவே அணுகுகிறார்கள். ஆனால் ஒரு போதும் அவர்கள் அதை செய்வதேயில்லை, அவர்கள் செய்வது ஒன்றைத்தான், மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். மனைவிக்குத் தெரிய வரும்போது அது அதிர்ச்சியடைகிறார்கள். அதை மட்டுமே கொண்டு இவ்வளவு நாள் என்னை ஏமாற்றிப் போலியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள் என சிறுமைபடுத்துகிறார்கள். உண்மையில் அப்படிப்பட்ட விஷயங்களை மட்டுமே கொண்டு ஓர் உறவை மதிப்பிட முடியாது. அது அவரின் பலவீனம், அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும், அதை ஏற்றுக்கொள்வதன் வழியாகவே இருவருக்குள்ளும் வெளிப்படைத்தன்மையை வளர்த்துக்கொள்ள முடியும், வெளிப்படைத்தன்மை இருக்கும் போதுதான் அது ஆபத்தான கட்டத்தை அடைவதற்கு முன்பு தடுக்க முடியும்.

அதே போலவே ஒவ்வொருவருக்கும் பலவீனங்கள் இருக்கின்றன, போதாமைகள் இருக்கின்றன, நமக்குப் பிடிக்காத நடவடிக்கைகள் இருக்கின்றன. அதை முறைப்படுத்த வேண்டுமானால், அதனால் நேரும் ஆபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஆனால் “விட்டுக்கொடுப்பது தான் உண்மையான காதல்” என நாம் கொண்டிருக்கும் மனப்பான்மை வழியாக இந்த பலவீனங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம், “ஏன் எனக்காக விட்டுக்கொடுக்கவில்லை?” என கேட்கிறோம், அப்படிப்பட்ட அணுகுமுறைகளினால் அது மறைமுகமாக செய்யப்படுகிறது, மறைமுகமாக நடக்கும் எதுவும் ஒரு நாள் ஆபத்தில் சென்றே முடியும், அந்த ஆபத்து இருவரையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.

ஒருவருடனான உறவை நான் நீட்டிக்க முற்படுகிறேன் என்றால் அதை விட்டுக்கொடுத்தலினால் செய்ய முடியாது, மாறாக, மூன்று முக்கியமான பண்புகள் அதற்கு வேண்டும்:

  1. புரிதல்
  2. ஏற்றல்
  3. சகித்தல்

உண்மையில் விட்டுக்கொடுப்பதைவிட இந்த மூன்று பண்புகள் அமையப்பெறுவதன் வழியாகவே நம் உறவை நாம் பாதுகாக்க முடியும்.

திருமணம் அதன் மரபான அதிகாரத்தை இழந்து விட்ட இந்த நவீன காலத்தில், இந்த மூன்று பண்புகளே உறவை நீட்டிப்பதில் முதன்மையானது.

புரிதல்:

ஓர் உறவிற்கு ஆத்மார்த்தமானது பரஸ்பர புரிதலே!. புரிதல் என்றால் முன்முடிவுகளின்றி, சுய விருப்புகளை மீறி ஒருவரை முழுமையாகப் புரிந்து கொள்வது. பெரும்பாலான நேரங்களில் ஒருவரை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்றால், அவர் எப்படி இருந்தால் நமக்குப் பிடிக்குமோ அப்படித்தான் அவர் இருக்கிறார் என புரிந்து கொள்கிறோம், அதற்கு மாறான நடவடிக்கைகள் வெளிப்படும்போது அப்படி எல்லாம் இருக்காது என நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். “அவனுக்குக் கோபமே வராது, மிக மிகப் பொறுமையானவன்” என ஒருவரைப் பற்றி நாம் முடிவு செய்து கொள்ளும்போது அவர் பொறுமையிழந்தாலோ அல்லது கோபப்பட்டாலோ “இந்தந்தக் காரணங்களினால் தான் அவர் பொறுமையிழந்தார். இல்லையென்றால் இப்படிக் கோபப்பட மாட்டார், அப்படிப்பட்ட ஆள் அவர் கிடையாது” என நமக்கு நாமே காரணங்களைச் சொல்லிக்கொள்கிறோம்.

ஓர் உறவு தொடங்கும் கட்டத்தில், காதல் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதால் ஒருவர் அவரது இணையை இப்படி நேர்மறையாகவே புரிந்து கொள்கிறார், அதுவே சில காலங்களுக்குப் பிறகு காதலுணர்வு குறையும் பட்சத்தில் எதிர்மறையாகப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றனர். உதாரணத்திற்குத் தனது இணையர் தனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பார் என புரிந்து கொள்கிறோம், ஒரு நாள் “என்ன இவ்வளவு தாமதமாக வருகிறாய்?” என அவர் சண்டையிட்டால் தொடக்கத்தில் “நான் தான் லேட் பண்ணிட்டேன், அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு போல, இல்லையென்றால் இப்படிக் கோபப்பட மாட்டார், எனக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கக் கூடிய ஆள் தான் இவர்” எனப் புரிந்துகொள்பவர், அதுவே சில காலங்களுக்கு அதே கேள்வியை இணையர் கேட்டால் “வேறு யாருக்குனா எவ்வளவு நேரம் வேணாலும் காத்திருப்பார், என்ன தான் பிடிக்காதே, அதான் காத்திருக்க முடியல” என புரிந்து கொள்கிறார். இரண்டு காலத்திலும் தவறாகவே புரிந்து கொள்கிறார்!.

இப்படி சொந்த விருப்பு வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஒருவரை அப்படியே புரிந்து கொள்வது தான் உண்மையான புரிதல். பெரும்பாலான நேரங்களில் இந்தப் புரிதல் இறுதி வரைக்கும் யாருக்கும் கைகூடுவதேயில்லை. மனிதர்கள் என்பவர்கள் நிறைகளையும், குறைகளையும் கொண்டவர்களே, ஒருவரைப் பிடிக்கும்போது அவரது நிறையை மட்டுமே பார்த்து நிறைவானவர் என நினைத்துக்கொள்வதும், பிடிக்காமல் போகும்போது குறைகளை மட்டுமே பார்த்து மோசமானவர் என நினைத்துக்கொள்வதும் என இரண்டுமே சந்தர்ப்பங்களை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான புரிதல் என்பது சந்தர்ப்பங்களைத் தாண்டி, ஒருவரை அவரது நிறைகளோடும், குறைகளோடும் புரிந்து கொள்வதே ஆரோக்கியமானது. ஒருவருக்கு குறைகளே இல்லை அல்லது நிறைகளே இல்லை என இரண்டு விதமான மனப்பான்மையும் முன்முடிவுகள் சார்ந்தது. உங்கள் இணையிடம் நிறைகளையும், குறைகளையும் ஒரு சேரப் புரிந்து கொள்ள முற்படுங்கள்.

ஏற்றல்:

புரிதலைத் தாண்டி ஓர் உறவில் இருக்கும் முக்கியமான சிக்கல் ஒருவரைப்  புரிந்து கொண்டபடி ஏற்றுக்கொள்வது. முன்னரே குறிப்பிட்டபடி நாம் ஒருவரை அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை, எப்படி இருந்தால் நமக்குப் பிடிக்குமோ அப்படி இருக்கிறார் என நினைத்துக்கொள்கிறோம், இதனால் அவர் அப்படி இல்லை என்பதையோ அல்லது அவரின் உண்மையான குணங்கள் தெரிய நேரும்போதோ அவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறோம்.  என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெரும்பாலான இணையர்களிடம் நான் பார்க்கும் பொதுவான குணம், உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது. ஏன் மறுக்கிறோம்? ஏனென்றால் நான் வேறு மாதிரி புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி இல்லை என்பது எனது புரிதலின் கோளாறாக, என்னுடைய பிரச்சினையாக மாறிவிடுகிறது, அதை ஏற்றுக்கொள்ள முடியாததால் உண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புதிதாக திருமணமான மனைவி தனது அம்மாவை அவரது அம்மா போல ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தனது குடும்பத்தில் உள்ளவர்களை அவரது குடும்பமாய் வேண்டும் எனவும் ஆசைப்படும் ஒரு கணவன், மனைவியை அவனது குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராக்க் கருதுகிறார்களா எனப் பார்ப்பதில்லை. மாறாக, மனைவி அப்படி இருக்க வேண்டும் என கறாராக நினைக்கும்போது புதிதாக வீட்டிற்கு வரும் பெண்ணால் நிச்சயமாக உடனடியாக இணக்கமாகப் பழக முடியாது, அதுவும் மற்றவர்கள் அவரை அந்நியமாக உணரும் போது, அவள் மட்டும் அனைவரையும் தனது குடும்பமாகக் கருத முடியாது. அதைக் கணவன் புரிந்து கொண்டால் அவளின் இந்த இயலாமையை ஏற்றுக்கொள்வான். மாறாக, அவளால் அப்படி இருக்க முடியவில்லை என்பதை உணராமல் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கறாராக இருப்பதன் வழியாக இன்னும் நிறைய சிக்கல்கள் முளைக்கின்றன. அவளின் இந்த சிறிய தயக்கத்தை, எதார்த்தத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டால் பெரும்பாலான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்க முடியும், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் சம்மதிக்காததன் விளைவாக உறவின் தொடக்கமே ஏராளமான பிரச்சினைகளுடன் தொடங்குகிறது. அதுவும் நவீன கால திருமணங்களில் குடும்பத்திற்கும் தம்பதிகளுக்குமான இடைவெளி இன்னும் அதிகம், அதனால் உரசல்களும், முரண்பாடுகளும் வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம். இந்த சூழலில் ஒருவரை முழுமையாகப் புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டபடி ஏற்றுக்கொள்வதும் அத்தனை முக்கியமானது.

சகித்தல்:

“சின்னச் சின்ன விஷயத்துக்குகூட ரொம்ப நேரம் எடுத்துக்குறா, ஒரு பொருள எடுத்தா அந்த இடத்துல வைக்கிறதில்ல, எப்ப பார்த்தாலும் வீட்ல தேட வேண்டியிருக்கும், எதையும் கவனமாக செய்றதில்லை, எப்ப பார்த்தாலும் யோசனை, அப்படி என்னதான் யோசிப்பாளோ தெரியல, நானும் இவள மாத்துறதுக்கு எவ்வளவோ டிரை பண்ணிட்டேன், அப்படியே தான் இருக்கா. ஆனா அவளோட கம்பெனி வொர்க் மட்டும் நேரத்துக்கு முடிச்சிடுறா. வீட்ல வந்தாவே இப்படிதான் இருக்கா” என அந்த கணவன் அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு வந்தான்.

அந்தப் பெண் அமைதியாகவே இருந்தாள். நான் கேட்டதற்குப் பிறகு நிதானமாக சொன்னாள்.“நான் சின்ன வயசுல இருந்தே அப்படிதான். வீட்ல அப்படி ஏனோ தானோனு இருப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் மாத்திக்கிட்டேன். இன்னமும் டிரை பண்றேன், ஆனா அதையும் மீறி சில விஷயங்களை மறந்துடறேன். அத ஏன் இவ்வளவு பெருசு பண்றாருனு தெரியல, இவர்கிட்ட என்ன பிரச்சினையே இல்லையா? எப்ப பார்த்தாலும் வெடுக் வெடுக்குனு கோபப்படறது, நாலு பேருக்கு முன்னாடியே என்னைக் குறை சொல்றதுனு, இவர்கிட்டயும் எனக்குப் பிடிக்காதது நிறைய இருக்கு, ஆனால் அதான் அவர் குணம்னு ஏத்துக்கிட்டேன், சகிச்சிட்டுப் போறேன், அது மாதிரி எனது இந்த சின்னச் சின்ன குறைகளை சகிச்சிக்க இவருக்கு என்ன பிரச்சினை?” என கேட்டாள்.

உண்மையில் ஒருவரை சகித்துக்கொள்வது என்பது அவர்மீதான முழுமையான அன்பின் வெளிப்பாடு!.

“எனக்குப் பிடித்த மாதிரி நீ இருந்தால் எனக்கு உன்னைப் பிடிக்கும்” என்பதில் என்ன அன்போ, காதலோ இருக்கிறது. “உன்னை எனக்குப் பிடிக்கும், பிடிக்குமென்றால் உனது குறைகளோடு சேர்த்தே உன்னை எனக்குப் பிடிக்கும்” என்பதில்தானே அன்பும், காதலும் இருக்கிறது. விட்டுக்கொடுப்பது அல்ல, சகித்துக்கொள்வதே ஓர் உறவை மேன்மையாக்கும், தக்கவைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை நாம் ஒருவரை சகித்துக்கொள்ளத் தயாராகிவிட்டால் அதன் பெரும்பாலான பிரச்சினைகளை சுலபமாகக் கையாளலாம்.

எதற்காக சார் சகித்துக்கொண்டு வாழ வேண்டும்? என நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆண்-பெண் உறவு என்றில்லை, நாம் மனிதர்களுடனான எந்த உறவிலும் மற்றவர்களைச் சகித்துக்கொண்டே வாழ்கிறோம். நமது அம்மாவை, அப்பாவை, தங்கையை, தம்பியை, அண்ணன்களை, பிள்ளைகளை எல்லாம் சகித்துக்கொண்டு தானே வாழ்கிறோம். அனைவரும் நாம் விரும்பியபடியேவாகவா இருக்கிறார்கள் அல்லது நடந்து கொள்கிறார்கள்? இருந்தாலும் நாம் சகித்துக்கொண்டு தானே வாழ்கிறோம். ஏனென்றால் இரண்டு மனிதர்கள் ஓரிடத்தில் சேரும்போதே முரண்பாடுகள் உருவாகத் தொடங்கிவிடும், அந்த முரண்பாடுகள் இயல்பானது. அது இரண்டு தனி நபர்களின் இருவேறு ஆளுமைப் பண்புகளினால் உருவாகக்கூடியது. முரண்பாடுகள் வருகிறது என்பதற்காக நாம் யாரை விட்டும் நீங்கிச் செல்வதில்லை. அதையெல்லாம் எதிர்கொள்ளப் பழக்கிக்கொண்டு வாழ்கிறோம்.

அனைத்து உறவுகளிலும் நாம் கடைபிடிக்கும் இந்தப் பண்பை ஏன் பிரத்தியேகமான உறவில் கடைபிடிப்பதில்லை? ஏனென்றால் காதல் என்பதன் மீதான புனிதத்தன்மையே அதற்குக் காரணம். எனக்காக நீ ஏன் இதைச் செய்யக்கூடாது, எனக்காக ஏன் நீ உன்னை மாற்றிக்கொள்ளக்கூடாது? என நினைப்பதே நாம் ஒருவரைப் புரிந்து கொள்வதில் இருந்து தடுக்கிறது, ஏற்றுக்கொள்வதில் இருந்து தடுக்கிறது, சகித்துக்கொள்வதில் இருந்து தடுக்கிறது.

இன்றைய காதல் முந்தைய காலங்களை விட எதார்த்தமானது. மிகைப்படுத்தப்பட்ட கனவுகளோ, புனைவுகளோ, புனித பிம்பமோ ஒப்பீட்டளவில் இன்றைய காதலில் குறைவு. ஆண்-பெண் இருவரும் எதார்த்தமானவர்களாகவும், நடைமுறைகளைப் புரிந்து கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு செடி, ஒரு காதல், ஒரு பூ என்றெல்லாம் அவர்கள் குழப்பிக்கொள்வதில்லை. காதலென்ற உணர்வு நிறைய பேரிடம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள், அதே நேரத்தில் அந்த உணர்வு மட்டும் போதுமானதல்ல என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பரஸ்பர அர்ப்பணிப்பின் வழியாகவே ஓர் உறவை நீட்டிக்க முடியும். அதற்கான பொறுப்பு இருவருக்கும் இருக்கிறது என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பிற்கு அந்த நபர் தகுதியானவரா? என்பது மட்டும்தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது. தகுதியானவர்களை அவர்களின் சிறுமைகளையும் மீறி ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லையென்றால் அந்த உறவை முறித்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. இன்றைய காதல் ஒப்பீட்டளவில் முந்தைய கால காதலைவிடப் பக்குவப்பட்டதாக இருக்கிறது என்பது எனது அனுபவங்கள் வாயிலாக நான் உணர்ந்து கொண்டது. அது சில நேரங்களில் தவறாகவும் இருக்கலாம்.

 

sivabalanela@gmail.com