எண்பத்திரெண்டு வயதாகிய அருட்தந்தை ஸ்டான்சாமி தடுப்புக் காவல் சட்டமான யு.ஏ.பி.எ. (Unlawful Activities Prevention Act)  வின்கீழ் கைது செய்யப்பட்டு,  சிறையிலடைக்கப்பட்டு பின் அங்கு மிகவும் மோசமாக நடத்தப்பட்டு கொரோனா வந்து இறந்து போனார் என்பது ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து போகும் அளவிற்கு சிவில் சமூகத்தின் மனம் மொன்னையாக்கப்பட்டு வருகின்றது. ஸ்டான்சாமியின் மரணம் துர் மரணம் அல்ல. அது ஒரு அமைப்புப் படுகொலை. அவர் மரணம் பற்றித் தீவிர விசாரணை வேண்டும் என்றும் பல ஜனநாயக அமைப்புகள் சமீபத்தில் மும்பையில் குரல் எழுப்பியுள்ளன.

போலி ஆவணகள் விதைப்பு

ஸ்டான்சாமியின் கைது என்பது அவர் லேப் டாப்பிலிருந்து கைப்பற்றப்பட்ட சில கடிதங்களின் அடிப்படையில்தான். அக்கடிதங்கள் பிரதமர் மோடி அவர்களைக் கொல்லும் சதித்திட்டதின் ஒன்றாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பிலிருந்தார் என்பதை நீரூபிப்பதாகவும் தேசிய புலனாய்வுத் துறை (National Investivative Agency)  வழக்கில் தெரிவித்தது. ஆனால் அப்படிப்பட்ட கடிதங்களைத் தான் கண்டதே இல்லை என அருட்தந்தை தெரிவித்தார். இக்கடிதங்கள் அவர் லேப்டாப்பில் எப்படி வந்தன என்பது பற்றி என்.ஐ.ஏ. உளவுத்துறை வேறுவகைகளில் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஸ்டான்சாமியின் வழக்கறிஞர்கள் இத்தரவுகளை அமெரிக்கா பாஸ்டனில் உள்ள ஆர்செனல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி ஆராயச்செய்தனர். இந்த நிறுவனம் உலகில் பல அரசாங்கங்களின் டிஜிட்டல் பாதுகாப்புக்காகப் பல ஆய்வுகளையும், தீர்வுகளையும் வழங்கும் பெரும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சென்ற மாதம் அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பைத் தரவுகளோடு முன்வைத்துள்ளதை பலர் அறிவோம்.

ஸ்டான்சாமியின் லேப்டாப்பில் 2014 ஆம் ஆண்டுமுதலே ஹேக்கர்கள் நுழைந்து நெட் வையர் எனும் மென்பொருளை விதைத்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தொலைதூரத்திலிருந்தே ஒருவர் லேப்டாப்பில் ஆவணங்களைப் புகுத்தவும் முடியும், எடுக்கவும் முடியும். அவர் லேப்டாப்பிலிருந்து பிறர் மின்னஞ்சலுக்குக் கடிதம் அனுப்பவும் முடியும். அந்த வகையில் நாற்பத்திநாலு ஆவணங்களை 24000 ஃபைல்கள் மூலம் ஹேக்கர்ஸ் அருட்தந்தை சாமியின் கணினியில் விதைத்துள்ளனர் என்பதை ஆர்செனல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த லேப் டாப்பை போலீஸ் கைப்பற்றுவதற்குச் சரியாக முதல் நாள் தாங்கள் உள்ளே நுழைந்ததற்கான ஆதாரங்களையும் ஹேக்கர்ஸ் அழித்துள்ளனர்.  அவர்களுக்கு எப்படியோ போலீஸ் அவரைக் கைது செய்யப்போவது தெரிந்திருக்கின்றது. இந்த உளவு மென்பொருள் மூலம் ஸ்டான்சாமி தன் கணினியின் மூலம் செய்த எல்லா கடிதப் போக்குவரத்துகளையும், கடவுச்சொற்களையும் அறியமுடியுமாம்.

இதே போன்றுதான் பீமா கொரேகான் வழக்கில் கைதாகியுள்ள ரோனா வில்சன் கணினியில் 30 ஆவணங்களும் மற்றும் சுரேந்திர காட்லிங்  கணினியில் 22 ஆவணங்களும் வெளியிலிருந்து ஹேக்கர்கள்  விதைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி நாட்டையே உலுக்கியிருக்க வேண்டிய செய்தி. பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு ஜனநாயக முறையில் அரசுடன் போராடக் கற்றுக்கொடுத்தவர் ஸ்டான்சாமி. ஆனால் மோடிஜியைக் கொல்லவோ, அல்லது அரசை அப்படியே அபகரிக்கவோ அவர் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டார் என்பன அப்பட்டமான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு.

இந்திய அரசு முயற்சித்தால் இந்த ஹேக்கர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை ஆர்செல் நிறுவனத்தின் பொறுப்பாளர் மார்க் ஸ்பென்சர் என்பவர் என்.டி.டி.வி. செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு பற்றி தேசிய அளவிலான உளவுத்துறை (NIA) அதிக அளவில் அக்கறை காட்டவில்லை என்பது மிகவும் ஆபத்தான விஷயம். வேண்டுமென்றே இவர்களைச் சிக்க வைக்க செய்யப்பட்ட சதியாகத் தெரிகின்றது. ஒன்றிய அரசின் கொள்கைகளை வலுவாக எதிர்க்கும் எவரையும் வாயடைக்கச் செய்யும் வகையில் பலர் பீமா கொரேகான் வழக்கில் யு.ஏ.பி.எ. சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு மட்டும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு பிணை கிடைத்துள்ளது.

மக்கள் விரோத சட்டமும் அடக்குமுறையும்

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்து சுதந்திரத்தை நெறிப்பதற்கு இந்த யு.ஏ.பி.ஏ. சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் பல கடுமையான திருத்தங்கள் பா.ஜ.க. அரசால் சேர்க்கப்பட்டு அது ஒரு கொடும் சட்டமாக ஆக்கப்பட்டு விட்டது. இதன்கீழ் பிணை பெறவே இயலாது. மேலும்  காவல்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வெகுகாலம் எடுத்துக்கொள்ள இயலும். அதாவது விசாரணையும் இன்றி, முறையீட்டுக்கு வழியும் இன்றி சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கவேண்டும். இந்த சட்டம் ஒரு ஆள் தூக்கி சட்டமாக இருக்கின்றது.

மாநில அரசின் அதிகாரத்தை விழுங்கும் என்...

இந்தச் சட்டத்தைக் காவல்துறை பயன்படுத்தலாம் என்பது தவிர இதற்காகவே ஒரு நாடு தழுவிய சிறப்புக் காவல் பிரிவை நடுவண் அரசு உண்டாக்கியுள்ளது. அதுதான் என்.ஐ.ஏ. ஆகும். இதன் அதிகாரம் வானளாவியது.  எந்த மாநிலத்திலும் அது புகுந்து யாரையும் கைது செய்யலாம். மாநில அரசின் அதிகாரம் என்பதெல்லாம் இதன் முன்பு செல்லாது. இந்த அமைப்பால் யாரையும் மாவேயிஸ்ட்,தேசத்துரோகி என்று  முத்திரையிட்டுக் கைது செய்து சிறையிலடைக்க முடியும்.

மகாராஷ்டிரத்தில் மாநில போலீஸ் கையாண்டு வந்த பீமா கொரேகான் வழக்கினை, 2020 தேர்தலில் பா.ஜ.க. தோல்வியுற்று, சிவசேனா ஆட்சிக்கு வந்த பின் எங்கே இவர்களை விடுதலை செய்து விடுவார்களோ என்றெண்ணி வழக்கை என்.ஐ.ஏ. மாநில அரசிடமிருந்து கைப்பற்றி, கைதிகளையும் பூனா சிறையிலிருந்து மும்பை சிறைக்கு எடுத்துச் சென்றது. இதன் மூலம் சர்வ ஆதிகாரங்களும் தங்களுக்கு உள்ளது என்பதை பி.ஜே.பி. அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்து தேசத்துரோக வழக்கிலோ அல்லது யு.ஏ.பி.எ. வழக்கிலோ உள்ளே தள்ளும் அதிகாரத்தை நடுவண் அரசு உருவாக்கிக்கொண்டுவிட்டது ஜனநாயகத்திற்கான் பெரும் சவாலாகும்.

என்.ஐ.ஏ. இணையதளத் தரவுகளின்படி, 88 சதவிகிதம் வழக்குகள் மாநில விசாரணை நிறுவனங்களிலிருந்து என்.ஐ.ஏ. விற்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுகளின் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது கேள்விக்குறியே. மேலும் முகநூலில் செய்யப்படும் பதிவுகளுக்காக என்.ஐ.ஏ.வினால் யு.ஏ.பி.ஏ.வில் கைது செய்யப்பட்டவர்கள் நிறையவே உள்ளனர்.

வாடிப்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர்  அப்பகுதி சிறுமலைப் பகுதிக்குத் தன் குடும்பத்தாருடன் ஜீப்பில் செல்வதை முகநூலில் பகிர்ந்தவர், விளையாட்டாகத் துப்பாக்கி பயிற்சிக்குச்ச் செல்வதாகக் குறிப்பிட்டார். மறுநாள் விடியற்காலை உள்ளூர் போலீசால் யு.ஏ.பி.ஏ. வின்கீழ் தேசத்துரோகியாகக் கைது செய்யப்பட்டார். நீதிபதி காவல்துறையை இதற்காக கண்டித்து மதிவாணணை விடுதலை செய்தார். இது போல இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கின்றது என்பதைப் புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

யு..பி.. சட்டத்தின் விஷக்கொடுக்குகள்

இந்த சட்டத்தின்படி ஒருவரை பயங்கரவாத செயல் அல்லது பயங்கரவாத அமைப்புகளில் உறுப்பினராக இருக்கின்றார் என்று சொல்லி மிகச் சாதாரணமான அத்தாட்சிகளை வைத்துகூட கைது செய்து சிறையிலடைக்க முடியும். தேசப் பொருளாதார அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கருதுபவர்கள் மீதும் இச்சட்டம் பாயலாம். இது பெரும்பாலும் இஸ்லாமியர்மீது பாய்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 8371 பேரை யு.ஏ.பி.எ. சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதில் NCRB ( தேசிய குற்றப் பதிவுத் துறை) கணக்கின்படி 27.57% த்தினர் மீதுதான் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் எவ்வளவு பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார்த்தால் வெறும் 2.8%தான் வரும். மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறர் அதாவது 97% பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டும் உள்ளனர்.

அத்தகைய உயர் விடுதலை விகிதங்கள், பெரும்பாலான வழக்குகள் தகுதியற்றவை என்பதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.

மற்றுமொரு நடைமுறையை வழக்குரைஞர்கள் கடைபிடிப்பது உண்டு. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைக் குற்றவாளியாக ஒத்துக்கொண்டால், குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பிக்கலாம். பெரும்பாலோனோர் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருப்பார்கள். பண வசதி அற்றோர் பலர். பல ஆதிவாசிகள் சரியான சட்ட உதவி இல்லாமல் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடி வருகின்றனர்.  எனவே செய்யாத குற்றத்தை நிர்பந்தத்தின்கீழ் ஒப்புக்கொள்பவர்களும் உண்டு. இது சட்டத்திற்குப் புறம்பாகத்தான் செய்யப்படும் பேரம் ஆகும்.

யு.ஏ.பி.எ. (UAPA) துஷ்பிரயோகத்தின் விளைவாகக் கடுமையான துன்பத்தை முஸ்லிம் சிறுபான்மையினர், தலித்-பகுஜன்- ஆதிவாசிகள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரும் அனுபவிக்கிறார்கள்.

குஜராத்தில் ஒரு கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற 127 முஸ்லிம்கள் யு.ஏ.பி.ஏ.வில் கைது செய்யப்பட்டு அந்த வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என 19 ஆண்டுகள் கழித்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சத்தீஸ்கரில் 121 ஆதிவாசிகள் நக்சலைட்டுகள் என 2017இல் என்.ஐ.ஏ. வினால் கைது செய்யப்பட்டு பின்னர் 2021இல் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டனர். இது தவிர தனியாளாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பல நூறு பேர்.

UAPA-வின்கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சிலர் பல பத்தாண்டுகளாக இன்னும் விசாரணை தொடங்கப்படாமல் சிறையில் வாடுகிறார்கள்,  . அவர்கள் விடுவிக்கப்படுவதற்குள், அவர்கள் வாழ்வில் ஈடுகட்ட முடியாத பல இழப்புகளை, பாதிப்புக்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஸ்டான்சாமி போன்றோருக்காவது சில அத்தாட்சிகளை விதைக்கவேண்டி வரலாம். ஆனால் பல ஆயிரக்கணக்கான சாதாரணர்களுக்கு எதுவுமே தேவையில்லை. எந்த வழிகாட்டலும் இன்றி சிறையில் யு.ஏ.பி.ஏ. சட்டத்தினால் வாடும் நபர்கள் பல ஆயிரம் உள்ளனர்.

நீதியை யார் கேட்பது?

ஸ்டான்சாமியின் மரணத்திற்கு நீதி கேட்கும் அதே நேரத்தில், யு.ஏ.பி.ஏ. போன்ற கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் பலத்த குரலில் கேட்க வேண்டியுள்ளது. மேலும் மாநிலங்கள் தங்கள் அதிகாரத்தைப் பறிக்கும் என்.ஐ.ஏ. அமைப்பை நடுவண் அரசு கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். சட்டத்தை தவறாகப் பயன்படுத்திப் பொய்யாக குற்றம் சாட்டிக் கைது செய்த அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுப்பதே நீதியாகும்.

இதற்காக மக்கள் சிவில் உரிமைக்கழகம் (பி.யு.சி.எல்.) சென்ற ஆண்டு அனைத்து எதிர்க் கட்சிகளையும் இணையதளக் கூட்டத்தில் பேசவைத்து அதில் பி.ஜே.பி. ஆதரவுக் கட்சிகள் நீங்கலாக அனைத்துக் கட்சித் தலைவர்களும்  எதிர்ப்பு தெரிவித்தார்கள். அறிக்கைகளும் வெளியிட்டனர். ஆனால் அது ஒரு மழைக்கால மேகமாய் மறைந்து விட்டது. மனித உரிமை தளத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் செயல்படுவேதே இந்தியாவின் ஜனநாயகத்திற்குப் பலம் சேர்க்கும். இல்லாவிடில் இந்தியா ஒரு பாசிச நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இருக்காது.