உன் வாழ்வுக்குள் வருகிறேன்

………………………….
நான் வருகிறேன்

உன் வாழ்க்கைக்குள்

 

உன் வாழ்வின்

ஏனைய அன்பு அனைத்தையும்

சின்னஞ் சிறியதாக்க

 

 

 

ஒரு முடிந்த ஆண்டில்

…………………………..

‘இந்த ஓராண்டில்

என்னதான் செய்தாய்?’ எனக்

கேட்கிறார்கள்

 

ஏதேதோ செய்தேன்

ஏதேதோ வெற்றிகள் அடைந்தேன்

ஏதேதோ தோல்விகள் அடைந்தேன்

அன்பு கிடைத்தன

அவமானங்கள் கிடைத்தன

 

எதை நான் சொல்லவேண்டும் எனத்

தெரியவில்லை

கண்ணில் நீர் மல்க

ஒருத்தி கூறினாள்:

“இந்த ஆண்டில்

எனக்கு சிறப்பாக நிகழ்ந்தது

நீ மட்டும்தான்

உன்னைவிட மேலாக ஒருவன்

இனி என்னை நேசிக்க முடியாது

என்பதை நினைக்கும் போதுதான்

எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது”

 

எனக்கு இந்த ஆண்டைப்பற்றி சொல்ல

இது மட்டுமே

முக்கியமாக இருக்கிறது

யாரோ அழைத்தாற்போலிருந்தது

…………………………………………….

அகாலத்தில்

ஒருபோதும் அழைக்காதவள்

நேற்றிரவு அழைத்திருந்தாள்

நான்தான் தூங்கிப் போயிருந்தேன்

காலையில்

கண்ணீரும் பதட்டமுமாய் கேட்டாள்:

“உனக்கு நேற்றிரவு

ஒன்றும் ஆகவில்லையே என்று,

உன் வழக்கமான துயர வரிகள் நடுவே

துர் நிழலின் வரியொன்றைக் கண்டதாக

என் நண்பன் கூறினான்

நீ நன்றாகத்தானே இருக்கிறாய்?”

 

அவளது கண்ணீர்

எனக்கு அவ்வளவு

இதமாக இருந்தது

” எனது மெய்யான வாசகனே

எனது ஆபத்தான வரிகளை கண்டுகொள்வான்

நான் விளிம்புவரை சென்றேன்

யாரோ கூப்பிட்டதுபோல இருந்தது

பிறகு திரும்பி வந்துவிட்டேன்” என்றேன்

விளக்கணைத்துவிட்டு

……………………………..

சிலரது தனிமையின் இருட்டில்

இரவு வெகு நேரம்

பேச்சுத் துணையாக

ஒரு அகல் விளக்காய்

ஒளிர்ந்துகொண்டிருந்தேன்

 

அப்புறம் ஒரு நாள்

சட்டென அந்த விளக்கை

ஊதி அணைத்துவிட்டு

யாருடனோ தூங்கப்போய் விடுகிறார்கள்

 

வாசனைத் திரவியம்

………………………………………

நான் ஒரு இனிய

வாசனைத் திரவியம்

 

நீ எப்போதாவது

பயன்படுத்திவிட்டு

ஒரு மூலையில் வைத்துவிட்டுச்

செல்வதற்காக இருக்கிறேன்

 

மறுபடி என்னிடம்

நீ வரும்வரை

என் வாசனையை

பிடிவாதமாக

இழக்காமல் இருப்பேன்

 

 

 

யாரால் சொல்ல முடியும்?

……………………..

 

 

இன்றிரவு பெய்யும் மழை

தொப்பி அணிந்து

கையில் கேக்குடன் பெய்கிறது

 

இந்த மழையை

சாண்டா என்று அழைக்கலாம்

அன்பே

 

இனியும் காணாதிருக்க முடியாது என

நள்ளிரவில் நீ வந்து கதவு தட்டினால்

உன்னையே என் சாண்டா

என்றழைப்பேன்

 

நாளை தபால்காரர்

ஒரு நல்ல செய்தியைக்கொண்டுவந்தால்

அவர் என் சாண்டா

 

பரிசுகளும்

ஆசிர்வாதங்களும்

காதல்களும்

எங்கிருந்து வரும் என்று

யாரால் சொல்ல முடியும்?

 

சுவரில் சாய்ந்துகொள்கிறேன்

…………………………

யாரையாவது

கொஞ்சம் சார்ந்திருக்கலாம் என்றால்

அவர்கள் அதைவிட பலமடங்கு அதிகமாய்

என்னைச் சார்ந்திருக்கிறார்கள்

 

 

நான் பேசாமல்

இந்த சுவரில் சாய்ந்துகொள்கிறேன்

இந்தப் படிக்கட்டில்

சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறேன்

 

யாருக்காக

……………….

 

வேலையிலிருந்து

திடீரென தலையை

உயர்த்திப் பார்த்தேன்

யாருமே இல்லாதது போலிருந்தது

 

யாருமே இல்லை என்றால்

பிறகு யாருக்காக

வேலை செய்கிறேன் என்பது

மிகவும் குழப்பமாக இருக்கிறது

 

வெண்ணிற ஆடையில் ஒரு கறை

……………………..

நான் செய்யும்

எல்லாக் காரியங்ளிலும்

நான் சிறு பிழை ஒன்றை

வேண்டுமென்றே செய்வேன்

 

அது நீங்கள் கண்டுபிடிப்பதற்காக

அதில் நீங்கள் உங்கள் திறமையை

வெளிப்படுத்துதற்காக

 

மற்றபடி

என் காரியங்கள் குறித்து

உங்களுக்குச் சொல்ல

வேறு எதுவுமே இல்லை

 

ஒரு வெண்ணிற ஆடையில்

சிறிய கறையை உண்டாக்குவது

மிகவும் அவசியம்

 

போகும்போது

……………………..

 

வீட்டைவிட்டுப் போகும்போது

சொல்லிக்கொண்டு போவது

ஒரு நல்ல பழக்கம்

என் அம்மா இதை எனக்கு

கற்றுக் கொடுத்தாள்

 

ஏன்

ஒருவர் வாழ்க்கையைவிட்டுப்

போகும்போதும் அப்படித்தான்

 

 

அன்பின் நதிகள்

…………………….

 

“உன்னை இப்பவே பார்க்கணும்

வர முடியுமா..? ”

 

“இப்பவேவா..?

முடியாதே

வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள்”

 

“வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டால்

வந்திருப்பாயா?”

 

“இல்லை

அப்போதும் முடியாதென்றுதான்

தோன்றுகிறது ”

 

எப்போதும் இயலாதவற்றின்மீதுதான்

அன்பின் நதிகள்

இடையறாது ஓடிக்கொண்டிருக்கின்றன

 

 

பார்க்கணும்

……………………………

 

ஒரு பிரியத்தின் அதிகபட்ச வாக்கியம்

‘உன்னைப் பார்க்கணும் போல இருக்கு’

 

அதற்கு மேல் சொல்ல முடியாது

இதைச் சொல்லும்போது

எனக்கு கண்கள் தளும்பும்

 

குரல் தடுமாறும்

பார்க்கும்போது

அப்படியெல்லாம்

இருக்குமா என்று தெரியாது

 

ஆறுதல் அளிக்கும்போது

……………………………….

எனக்கு ஆறுதல் சொல்லும்போதோ

என்னை சமாதானப்படுதும்போதோ

ஒரே ஒரு நிமிடம் மட்டும்

ஆதரவளித்துவிட்டு

அவசரமாக

உங்கள் அடுத்த வேலைகளுக்கு

செல்லாதீர்கள்

 

என் வருத்தத்தின் ஆழம்

கொஞ்சம் பெரிது

என் துக்கத்தின் பாழும் கிணற்றிலிருந்து

படியேறிவர

எனக்கு ஐந்து நிமிடமாவது ஆகும்

 

உங்கள் அவசரத்திற்கு

என்னை சிரிக்கச் சொல்லாதீர்கள்

………………

 

யார் வாழ்விலாவது இருப்பாய்

………………………………………….

என் வாழ்வில் இப்போது

யாருமே இல்லை என்றால்

நம்ப மறுக்கிறாள்

 

“உன் வாழ்வில் இப்போது

யாரும் இல்லாமல் இருக்கலாம்

ஆனால்

யார் வாழ்விலாவது

நீ இருந்துகொண்டுதான் இருப்பாய்”

 

அப்படியும் நிகழ

வாய்ப்பிருக்கிறதா என்ன?

 

 

குளிர் இணைத்துவைத்ததை

………………………..

 

எந்த விதியும்

நம்மை இணைக்கவில்லை

 

எந்தக் காதலும்

நம்மை இணைக்கவில்லை

 

எந்த ஒத்த சிந்தனையும்

நம்மை இணைக்கவில்லை

 

அன்பே

நம்மை இணைத்துவைத்தது

இந்தக் குளிர்தான்

பனி இவ்வளவு கடுமையாக

இருந்திராவிட்டால்

நாம் ஒருவருக்கொருவர்

தேவைப்பட்டிருக்கவே மாட்டோம்

 

குளிர் இணைத்துவைத்ததை

மனிதன் பிரிக்காதிருக்கட்டும்