1. புரிதல்

நாம் இந்தக் காட்டிற்குள் நடந்து

வெகு தொலைவு வந்து விட்டோம்

நீ கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த

சிறு பூவொன்றை வைத்திருக்கிறாய்

உனக்கு இன்னுமொரு பூ

வேண்டுமெனத் தோன்றி விட்டது

எளிய விண்ணப்பம் தானே!

ஆனால் – இங்கு

பழுப்பும் பச்சையும் தவிர

வேறு வண்ணங்களே இல்லை

நீ விசும்பத் துவங்குகிறாய்

எங்குமே இல்லாத பூவை

எங்கு போய் தேடுவது?

புரிந்து கொள்ளேன்

நீ கண்டு கொள்ள வேண்டியது

இன்னொரு பூவை அல்ல

இன்னொரு வனத்தை

(அம்முவிற்கு)

 

 

2) நழுவும் பிடி

எப்போதும் போல் – வெகுநேரம்

காத்திருக்க நேர்ந்து விட்டது இன்றும்.

பிடிமானமற்ற பாலத்தின் மேல் நின்று

மங்கிக் கொண்டிருக்கும் மாலை ஒளியில்

இருபுறமும் குமுறியபடி புரண்டோடும்

நீரின் பிரவாகத்தைப் பார்த்தபடி இருக்கிறேன்

வறுத்த கடலையும் இஞ்சி தேநீரும்

விற்பவர்கள் – வெற்றுப் பார்வையுடன்

கடந்து செல்கிறார்கள்.

வந்து நாழியாயிற்றா என்கிறாய்

அரைமனது ஆலிங்கணங்களில்

அர்த்தமென எதுவும் இல்லை

உடனே அங்கிருந்து அகன்றிடும்

எண்ணம் வலுப்பெறத் துவங்குகிறது

வெண்நுரை பொங்கப் பாய்ந்து செல்லும்

அடையாற்றின் வேகத்தில்

எந்தக் கவலையுமற்று நகர்கிறது

கறுப்பு அன்னங்களின் ஊர்வலமொன்று

 

 

3) விடுபட்ட கண்ணி

இது கார் காலமா..?

கொடும் பனிக் காலமா..?

அந்தரத்தில் மயங்கிச் சுழல்கிறது

என் கடிகாரம்

கால யந்திரத்தின் கண்ணியிலிருந்து

தெறித்து விடுப்பட்ட

ஓர் எஃகு துண்டமென.

உன் நினைவுகளைக்

கிளர்ந்தெழச் செய்கிறது

மழையின் பொழுதுகள்

அடிமனது ஏக்கங்களை

அடர்ந்து உறைய வைக்கிறது

பனியின் நாட்கள்

ஒரு மகரந்தத் துகளின்

எடையைக்கூடத் தாங்கவியலாது

துவளும் சிறு தும்பியின்

கண்ணாடி சிறகு நான்

இரக்கமில்லாத இரு வெவ்வேறு

பருவங்களின் எடையை

எப்படித் தாங்குவது?

குழப்பமான காலத்தின் இரவுகளில்

கண்களில் நீர் வழிய

கடல் ஆழத்தில் சயனித்திருக்கிறது

கற்சிற்பமொன்று.