“நீலப் புலிகள் நீந்துகின்ற நிலவில் நிற்காமல் போனது நெஞ்சின் நிம்மதி”- இந்த வரிகளைப் படிக்கும்போது எதோ அபாரமான உருவகங்களுடன் கூடிய கவிதை. நமக்குத்தான் புரியவில்லை என நினைத்திருப்பீர்கள். ஆனால் இது மூளையில் மொழித்திறனோடு தொடர்புடைய ஒரு பகுதி பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதிய வாக்கியம் இது. இந்தக் கவிதை (????) குறித்துப் பேசுமுன் ஒரு சின்ன விளக்கம்!

கடந்த கட்டுரைகளில் மூளையில் மொழி உருவாகும் இடங்களைப் பற்றிப் பார்த்து வந்தோம். அக்கட்டுரைகளில் ஒலிகள் மற்றும் பேச்சுக்களைப் பற்றி மட்டுமே பார்த்தோம். ஒலிகளை எப்படி மூளையில் உள்ள வெர்னிக் ஏரியா (Wernicke’s area) என்ற பகுதி அர்த்தப் படுத்திக் கொள்கிறது என்பதைப் பார்த்தோம். அதே போல் வார்த்தைகளை எப்படி இலக்கண முறைப்படி அடுக்கி அர்த்தமுள்ள உரையாடலாக ஆக்க ப்ரோகா ஏரியா (Broca’s area) என்ற பகுதி செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம்.

எந்த ஒரு மொழியாகவோ தொடர்பு கொள்ளும் முறையாகவோ இருந்தாலும் அதில் இரண்டு விஷயங்கள்தான் முக்கியமானவை. ஒருவர் வெளிப்படுத்தியதை உள்வாங்கிப் புரிந்து கொள்ளுதல். நாம் நினைத்தவற்றை வெளிப்படுத்துதல். இதை ஆங்கிலத்தில் Reception and Expression என அழைக்கின்றனர். வெர்னிக், ப்ரோகா ஆகிய இரண்டு பகுதிகளில் வெர்னிக் பகுதி உள்வாங்கிப் புரிந்து கொள்வதற்கும் ப்ரோக்கா பகுதி வெளிப்படுத்துவதற்கும் செயல்படுகிறது.

வெர்னிக் பகுதி பாதிக்கப்பட்டால் அடுத்தவர்கள் நம்மிடம் பேசும் சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போய்விடும். அது மட்டுமல்ல நாம் பேசும் சொற்களுக்கும் நமக்கே அர்த்தம் புரியாமல் போய்விடும். இதுபோன்ற நபர்கள் பேசுவது புரியாததால் இவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என நினைத்து மனநல மருத்துவமனைக்கு அழைத்து வருவதுண்டு. இது போல் மூளை பாதிப்பால் நமது மொழித்திறன் பாதிப்படைவதை aphasia என்பார்கள். வெர்னிக் பகுதி பாதிப்பால் வருவதை ரிஸெப்டிவ் அஃபேசியா (receptive aphasia) அல்லது ஜார்கன் அஃபேசியா (Jargon aphasia) என அழைப்பார்கள். ஜார்கன் என்றால் ஆங்கிலத்தில் புரியாத மொழி என்று அர்த்தம். அவர்களது முளையை சி.டி அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் படமெடுத்தால் இந்தப் பிரச்சனையைக் கண்டறியலாம்.

அதே போல் ப்ரோக்கா பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் பேசுவது புரியும் . அவர்களுக்கும் வார்த்தைகளின் அர்த்தம் தைரியும். ஆனால் அந்த வார்த்தைகளை எப்படி இலக்கணப்படி அடுக்கிப் பேசுவது என்பது முடியாமல் போய்விடும். ஒரு புதுமொழியைக் கற்கும் போது அகராதியைப் பார்த்து சில காய்கறிகள், பழங்கள், சாமான்கள் பெயர்களைத் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் அதை எப்படி வாக்கியமாகப் பயன்படுத்திக் ‘கத்திரிக்காய் கிலோ என்ன விலை?’ என்பது போல் பயன்படுத்த முடியாது. அந்த மாதிரிதான் ப்ரோகா பகுதி பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு இருக்கும். இதை எக்ப்ரெஸ்ஸிவ் அஃபேஸியா (Expressive aphasia) என்பார்கள்.

முதலில் சொல்லப்பட்ட கவிதை (??) வெர்னிக் பகுதி பாதிக்கப்பட்ட ஒருவரால் எழுதப் பட்டது. அவருக்கு வார்த்தைகளின் பொருள் தெரியவில்லை ஆனால் அவரது ப்ரோக்கா பகுதி சரியாகச் செயல்படுவதால் வார்த்தைகளை அடுக்கிப் பேச முடியும். இதுவே ப்ரோக்கா பகுதி மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் பேச்சுக்கு உதாரணமாகச் சென்ற கட்டுரையில் பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் கதைவசனம் எழுதினால் எப்படி இருக்கும் எனப் பார்த்தோமே அதுபோல் இருக்கும்.
இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். மொழி என்பது பேச்சு மட்டுமல்ல. அது அதையும் தாண்டி மிகப் பெரிய விஷயம். எழுத்து என்ற ஒரு சிக்கலான விஷயமும் மூளையின் மொழிச் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்று. யானை என்ற சொல்லைக் கேட்டதும் அந்த ஒலி காது நரம்புகள் வழியே மூளைக்குச் செல்கிறது. அங்கு உங்கள் மூளையில் கேட்கும் பகுதி (Auditory cortex) உள்வாங்கிக் கொள்கிறது. அந்தப் பகுதி அப்படியே மொழிப் பகுதியான வெர்னிக் பகுதியோடு தொடர்பு கொண்டு இத்தகவல்களைச் சொல்கிறது . இது வரை அது வெறும் ஒலிதான் . வெர்னிக் பகுதிதான் அந்த ஒலிக்கு இதுதான் அர்த்தம் என அர்த்தப் படுத்துகிறது.

அதே போல் ‘யானை’ என்று எழுதியிருப்பதை நீங்கள் படிக்கிறீர்கள். அப்போது யா மற்றும் னை என்னும் எழுத்துகள் சில வகையான கோடுகளே. அந்தக் கோடுகளை நம் கண்கள் பார்த்து விழி நரம்புகள் வழியே மூளைக்குக் கடத்துகின்றன. மூளையில் உள்ள பார்வை பகுதிகள் (Visual Cortex) அதை வெர்னிக் பகுதிக்குக் கடத்தி அங்கு அதன் பொருள் உணரப்படுகிறது. அது மட்டுமல்ல யானை என்ற எழுத்துக்களைக் கண்டதும் அதை யானை என்ற ஒலியோடும் தொடர்புபடுத்திக் கொள்கிறது. அதனால்தான் நாம் யானை என்ற எழுத்துக்களைப் படித்த உடன் வாசிக்கிறோம். செவிப்புலன், காட்சிப்புலன் இரண்டும் இணைகிறது. இந்த இணைப்பில் பிரச்சனை இருப்பவர்களுக்கு எழுத்துக்களை வாசிக்கச் சிரமமாக இருக்கும். இதை டிஸ்லெக்சியா என்பார்கள். இது பற்றிப் பின்னால் பார்க்கலாம்.

ஒலி ,ஒளி இரண்டுமட்டுமல்ல. கண்களை மூடியபடி ஒரு யானை சிலையைத் தொட்டுப் பார்த்தால் தொடு உணர்வு உணரும் பகுதி (Sensory cortex) அதை வெர்னிக் பகுதிக்குக் கடத்துகிறது. அந்தத் தகவல் யானை என்ற ஒலியோடும் யானையின் உருவத்தோடும் இணைத்துக் கொள்கிறது.

இதேபோல் கண்மூடி ஒரு ரோஜாவை முகர்ந்தால் அந்த வாசம் மூளையின் நுகர்தல் பகுதிகளால் ( Olfactory center) உணரப்பட்டு இதே போல் ரோஜா என்ற ஒலியோடும் ரோஜாவின் உருவத்தோடும் இணைக்கப் படுகிறது. அது போல் கண்மூடி ஒரு லட்டைத் தின்றால் சுவை மொக்குகள் மூலம் மூளையின் சுவையறியும் பகுதிகள் ( Gustatory areas) வெர்னிக் பகுதியோடு தொடர்பு கொண்டு லட்டு என்ற ஒலியோடும் உருவோடும் இணைத்து அர்த்தம் செய்கிறது.

இப்படி வெர்னிக் ஏரியா பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஐம்புலன்களையும் இணைக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஐம்புலன்களும் இணைந்து யானை , ரோஜா அல்லது லட்டு என்ற கருத்தை உருவாக்குகின்றன. இது புலன்களைத் தாண்டிய ஒரு செயல். ஐம்புலன்களாலும் உணரப்படாமல் மனதிலேயே யானை,ரோஜா, லட்டு என நினைத்துப் பார்த்தால் அதன் பெயர், அதன் உருவம், மணம், சுவை எனப் பல்வேறு பண்புகள் நம் சிந்தனையில் தோன்றுகின்றன. அதுமட்டுமின்றி நாம் பார்த்த யானை தொடர்பான நினைவுகள், யானை பற்றிய தகவல்கள் என மூளையின் நினைவுகளோடு தொடர்புடைய பகுதிகளும் இணைந்து கொள்கின்றன.
இப்படி ஐம்புலன்களும் நினைவுகளும் இணைந்து உருவாக்கும் ஒரு கருத்து நம் மூளையில், மனதில் உருவாகிறது. யானை என்ற பருப்பொருள் மட்டுமல்ல காதல், பாசம் போன்ற கருத்தாக்கங்களும் இப்படித்தான் மனதில் உருவாகின்றன. இது புலன்களைத் தாண்டிய உருவாக்கம் என்பதால் இதை Meta representation என்கிறார்கள். ராஷ்மிகா மந்தனாவையோ, செத்துப் போன வடக்குப்பட்டி ராமசாமியையோ நினைக்கும்போது அவர்களைப் பற்றிய ஐம்புலன்களின் தகவல் நினைவுகளோடு அந்நினைவுகள் கிளப்பும் உணர்வுகளும் எழுகின்றன .இதுதான் எண்ணங்களின் தோற்றம் உருவாகிறது.

இப்படிக் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலன்கள் இணைந்து போடும் கோலம்தான் சிந்தனையின் , எண்ணங்களின் தொடக்கப் புள்ளி.
சிலருக்கு ,குறிப்பாகக் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு இந்த ஐம்புலன்களின் இணைப்பு மிக அதிகமாக இருக்குமாம். அதுபற்றி ..அடுத்த கட்டுரைகளில்,,,,