“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது ஒழுங்கற்று வெறுமையாய்க் காணப்பட்டது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவன் நீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ‘தேவன் வெளிச்சம் உண்டாகட்டும்’ என்றார். வெளிச்சம் உண்டாகியது. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” – ஆதியாகமம் (1:1-4)

‘முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா?’ என்னும் கேள்வி, ஆண்டாண்டுகாலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. இப்போது இக்கேள்வியே ஒரு இழிவழக்கு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தக் கேள்விக்கு, அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பதிலும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நமக்கான கேள்வி இதுவல்ல. அதனால், இந்தக் கேள்விக்குள் நாம் நுழையப் போவதில்லை. இதைப் பிரதிபலிக்கும் இதுபோன்ற இன்னுமொரு நவீனமான கேள்வி இருக்கிறது. அதன்மீதே நாம் பயணிக்கப் போகிறோம். கேள்விதான் நவீனமானதேயொழிய, அது உருவான கருவின் கதையாடல் மிகவும் பழைமையானது. கிட்டத்தட்ட 13.8 பில்லியன் ஆண்டுகள் பழையது.

“ஒளியா இல்லை இருளா, எது முதலில் தோன்றியது?”. எளிமையான கேள்விதான் இல்லையா? ஒட்டுமொத்தப் பேரண்டத்திலேயே முதலில் தோன்றியது ஒளியா இல்லை இருளா என்பதே கேள்வி. இதற்கான பதிலைக் கண்டுகொள்வதற்கு, பேரண்டத்தின் பிறப்புக் கணத்தை நோக்கிச் சென்றால்தான் நமக்குப் பதில் கிடைக்கும். அதனால், 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பேரண்டப் பிறப்பின் கணத்தை நோக்கி நாம் நகரலாம்.

“பேரண்டம் உருவாகியபோது, முதலில் இருள் வந்ததா? இல்லை ஒளி வந்ததா?” என்னும் கேள்வி இலகுவானதாகத் தோன்றினாலும், அறிவியல் ரீதியாக மிகவும் குழப்பத்தைத் தரக்கூடியது. ஆழமான அறிவியல்கொண்டு சரிபார்த்தாலும், சிக்கலையே கொடுக்கும். சரி, இதுபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இதற்கான ஒரு பதிலைத் தெரிவுசெய்துவிட்டு மேலே படிக்கத் தொடங்குங்கள்.

உங்களில் பலர் இப்படியான ஒரு கருத்துடன் இருப்பீர்கள். “ஒளியின் இன்மையே இருள் ஆகும்” (Darkness is the absence of light) என்று நினைப்பீர்கள். இதன்படி, முதலில் ஒளியும், அது இல்லாமல் போவதால் இருளும் தோன்றுகிறது என்னும் முடிவுக்கு நாம் வருவோம். ஆனால், இதுவொரு தவறான கருத்து. ஒரு பொருளோ அல்லது இடமோ ஒளியைப் பெறவேண்டுமானால், அவற்றில் ஒளிபட்டுத் தெறிக்கவேண்டும்.

ஒளிபட்டுத் தெறித்தால் மட்டுமே வெளிச்சம் இருக்கும். ஒளி படுவதற்கு முன்பு அவை இருளாகவே இருந்திருக்க வேண்டும். சூரிய ஒளிபடுவதாலேயே, பூமி வெளிச்சமாகிறது. ஆனால், விண்வெளியூடாகப் பயணம் செய்து பூமிக்கு வரும் சூரிய ஒளியால் விண்வெளி ஒளிர்வதில்லை. விண்வெளி எப்போதும் கருப்பு இருட்டாகவே காணப்படுகிறது. காரணம், சூரிய ஒளி பட்டுத் தெறிப்பதற்கான எந்தப் பொருளும் விண்வெளியில் இல்லை. சந்திரன் மட்டும் விதிவிலக்கு. அறை ஒன்றிற்கு ஒளி கொடுத்தால்தான் அது வெளிச்சமாகும். ஒளி இல்லாதபோது அது இருட்டாகத்தானே இருக்கும். அதனால், ஒளியின் இல்லாமையால் இருள் உருவாவதில்லை. இருளில் உள்ள பொருட்களின் மேல் ஒளி பரவும்போது வெளிச்சம் தெரிகிறது. இதை இப்படி மாற்றிப் பாருங்கள். ‘ஒளியின்மை என்பது இருள்’ என்றால், இருள் இன்மை என்பது என்ன? ஒளி என்று சொல்லலாமா? இதைச் சிந்திக்கச் சிரமமாக இருக்கிறதல்லவா? ஒன்றின் இன்மை இன்னுமொன்றத் தோற்றுவிக்காது. அவற்றின் இருப்பே அதைத் தீர்மானிக்கிறது. அந்த இருப்புப்பற்றியே இனித் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Evolution of the Universe. Cosmic Timeline and evolution of stars, galaxy and Universe after Big Bang

இந்த இடத்தில், ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். “ஆதியில் வானத்தையும், பூமியையும் தேவன் உருவாக்கினார். ஆழத்தில் இருள் இருந்தது. தேவன் ‘ஒளி உண்டாகுக’ என்றார். வெளிச்சம் உண்டாகியது” என்றுதான் வேதங்கள் கூறுகின்றன. ஆன்மீகத்தின்படி, முதலில் இருளும், பின்னர் கடவுளால் ஒளியும் தோன்றியதாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால், பேரண்டத் தோற்றத்தின் முதல் கணமான, ‘பிக்பாங்’ (Big Bang) பெருவெடிப்பை, நவீன அறிவியல் துல்லியமாகக் கணித்திருக்கிறது. அந்த அறிவியல் கணிப்பீட்டின்படி முதல் தோன்றியது எது? ஒளியா, இருளா? அறிவியல் என்ன சொல்கிறது என்பதையே நாம் பார்க்கப் போகிறோம்.‘அறிவியலையும், ஆன்மீகத்தையும் மோதவிட்டு, ‘யார் சரி, யார் தவறு’ என்ற விவாதத்துக்குள் நாம் நுழையப் போவதில்லை. அது நம் நோக்கமுமல்ல. அதற்கு அவசியமும் இல்லை.

இன்று முடிவிலியாய் விரிந்திருக்கும் பேரண்டம், சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஒற்றைப் புள்ளியாய்ச் சிறுத்திருந்தது. பிளாங்க் நீள (Plank length) அளவுகொண்ட ஒருமைப் புள்ளியாய் (Singularity), அதாவது 10^-35 மீட்டர் அளவுகொண்ட ஆகச்சிறிய ஒற்றைப் புள்ளியாக அது இருந்தது என்கிறார்கள். ஏதோவொரு தவிர்க்க முடியாத கணத்தில், அப்புள்ளி பெருவெடிப்புப்போலப் (Big Bang) பேரண்டமாய் விரிந்தது. அந்த ஆரம்பக் கணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டால், ஒளி/இருள் சார்ந்த நமது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

பலகோடி கோடி கோடி விண்மீன்களையும், கோள்களையும், பிற வானியல் பொருட்களையும் உள்ளடக்கிய பிரமாண்டப் பேரண்டம், ஒரு புள்ளியாய் எப்படிச் சிறிதாக இருந்திருக்க முடியுமென்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மணல் துகள்போல நம் பூமி சிறுத்திருந்தது என்று சொல்வதைக்கூட நம்மால் கற்பனை செய்துகொள்ள முடிவதில்லை. ஆனால், பூமியின் அனைத்துக் கடற்கரைகளில் இருக்கும் மணல் துகள்களின் எண்ணிக்கையைவிட அதிகளவு எண்ணிக்கைகொண்ட விண்மீன்களையும், கோள்களையும் உள்ளடக்கிய பேரண்டம், ஒரு சிறுபுள்ளியாக இருந்தது என்பதை எப்படி நம்பமுடியும்? சிந்தனைக்குள் அதை ஏற்றுவதே பெரும் சிரமம். பிக்பாங் பெருவெடிப்பின் ஆரம்ப கணத்தில் எந்தப் பொருளும் இருக்கவில்லை. இருந்தவை எல்லாம் நான்கே நான்கு விசைகள் (Forces) மட்டும்தான். அந்த நான்கு விசைகளும் ஒன்றுடன் ஒன்று, ஒன்றுசேர்ந்து ஒரு விசையாக, உச்ச விசையாக (Super Force) மாறியிருந்தன.

ஈர்ப்புவிசை (Gravity), மின்காந்தவிசை (Electromagnetic force), வலுவற்ற அணுவிசை (Weak Nuclear force), வலுவான அணுவிசை (Strong Nuclear force) ஆகிய நான்கு அடிப்படை விசைகளும் ஒன்றாகச் சேர்ந்து, ஒரேயொரு உச்ச விசையாக இருந்தபோது, அங்கு இடமோ (Space), காலமோ (Time) இருக்கவில்லை. ‘இல்லாமை’ (Nothing) மட்டுமே இருந்தது. இந்த இல்லாமையிலிருந்தே அனைத்தும் உருவாகின என்பதுதான் ஆச்சரியம். ‘இல்லாமை என்று எப்படிச் சொல்லலாம். அங்குதான் உச்ச விசை இருந்ததே!’ என்று நீங்கள் கேட்கலாம். அதில் தத்துவார்த்தமாக ஒரு சிக்கல் இருக்கிறது. விசை என்பதைப் பொருளாக எப்படி எடுப்பது? எதுவென்று சொல்லமுடியாத கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆற்றல்தான் விசை. அதற்கு உருவமோ, பருமனோ, எடையோ கிடையாது. ஒரு விசையால் எடையுள்ள பொருளை வேகத்துடன் நகர்த்தமுடியும் (F=MA). ஆனால் அதற்கெனத் தனியாக எடை கிடையாது. அதுபோல, ஒரு விசையால், ஒரு பொருளின் உருவத்தை மாற்ற முடியும். ஆனால் அதற்கென எந்த உருவமும் கிடையாது. விசையானது ஒற்றைப் பரிமாணம் (One Dimensional – 1D) கொண்டது. அதனாலேயே, பிக்பாங் பெருவெடிப்புக் கணத்தில் அந்த உச்ச விசையால், ஒரு புள்ளியாக ஒடுங்கியிருக்க முடிந்தது. ஆனாலும், மொத்தப் பேரண்டத்தையும் உருவாக்கக் கூடியளவு மாபெரும் ஆற்றல்கொண்டதாக அந்த உச்ச விசை இருந்தது. பேரண்டத் தோற்றம் நடைபெறாத அந்த நிலையில், இருள் முதலா, ஒளி முதலா என்ற கேள்விக்கும் அர்த்தம் இருக்கவில்லை.

ஒரேவிசையாக இருந்த நான்கு விசைகளில், மிகவும் குறைந்த ஆற்றல்கொண்ட ஈர்ப்புவிசை, ஒரு குறித்த கணத்தில் அவற்றிடமிருந்து பிரிந்து விலகியது. இதுவே, அவ்விசைகளால் ஏற்படுத்தப்படப்போகும் மாபெரும் விளைவுகளுக்குத் தூண்டலாய் (Trigger) அமைந்தது. இத்தூண்டலின் காரணமாக, வலுவான அணுவிசை அடுத்துப் பிரிந்தது. இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. பிளாங்க் நீள அளவிலிருந்த நான்கு விசைகளும், திடீரென ஆரஞ்ச்பழ அளவான (10செமீ) கோளமாகத் விரிந்தது. அதிக அடர்த்தியும், அதிக வெப்பநிலையுமுடைய ‘குவார்க், குளுவோன் பிளாஸ்மா கூழாக (Quark – Gluon Plasma Soup) அக்கோளம் உருவாகியிருந்தது. இல்லாமையிலிருந்து இருக்கும் ஒரு பொருள் முதலில் தோன்றியது இக்கணத்தில்தான். ஆனால், அதைப் பொருளென்று சொல்லிவிட முடியாது. குவார்க் துகள்களும், குளுவோன் துகள்களும் 10^32 சதமபாகை ( 1 உடன் 32 பூச்சியங்கள் சேர்த்து வரும் எண்) என்னும் அதியுயர் வெப்பநிலையில் மிகவும் பிரகாசமான ஒளிரும் கோளமாக மாறியிருந்தது. பேரண்டத்தின் ஆரம்பக் கணத்தில் தோன்றியதே ஒளிர்வதாக இருந்தது. அப்படியெனின், பேரண்டத்தில் முதலில் தோன்றியது ஒளிதான் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாமல்லவா? இதற்கு ‘ஆம்’ என்றோ, ‘இல்லை’ என்றோ பதில் சொல்ல முடியவில்லை. காரணம், பேரண்டம் அப்போது முழுமையாக உருவாகிவிட்டதாகச் சொல்ல முடியாது. அதற்குப் பின்னர், எஞ்சியிருந்த வலுவற்ற அணுவிசையும், மின்காந்தவிசையும் தனித்தனியாய்ப் பிரிந்துகொள்ள, பிக்பாங் பெருவெடிப்பு நிகழ்ந்தது. அப்போதுதான் பேரண்டம் பெருவிரிவாய் விரிந்தது. நிஜமான அண்டவெளி (Space) தோன்றியதும் அப்போதுதான். நான்கு விசைகளும் தனித்தனியாகப் பிரிந்த கணத்திலேயே இது நடந்தேறியது. இவை அனைத்துமே ஒரு செக்கனுக்குக் குறைவான நேரத்திலேயே நடந்தன என்பதுதான் பெருவெடிப்பின் விந்தையாகும்.

முதலில் பிளாஸ்மாக் கூழாக ஒளி தோன்றிய அடுத்த கணத்தில், நான்கு விசைகளும் தனியாகப் பிரிய, அண்டவெளி தோன்றியது. ஆனால், அவ்வண்டவெளி அனைத்தும் கருமையான இருளாக இருந்தது. இதையே பேரண்டத்தின் ‘இருண்ட சகாப்தம்’ (Dark Era) என்பார்கள். அதாவது அண்டவெளி (Space) தோன்றியபோது அங்கு இருட்டே இருந்தது. அதன்பின்னர், பேரண்டம் படிப்படியாகக் குளிர்ச்சியடைய, புரோட்டோன், எலெக்ட்ரோன், நியூட்ரோன் என்பவை உருவாகி, அவற்றால் ஹைட்ரஜன், ஹீலியம் ஆகிய அணுக்கள் உருவாகி, அதன் வழியே விண்மீன்கள் உருவாகின. இருண்ட பேரண்டத்தில் மீண்டும் ஒளி தோன்ற ஆரம்பித்தது. இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடியது, ‘பேரண்டத்தின் ஆரம்பக் கணத்தில், ஒளியே உருவாகிப் பின்னர் இருளாகி, அதன் பின்னரே மீண்டும் ஒளி தோன்றியது’ என்பதே! ஆனால், எது பேரண்டம்? அந்த ஆரம்பக் கணமா, இல்லை அண்டவெளி தோன்றிய பின்னரான நிலையா?
பேரண்டத்தில் முதல் தோன்றியது ஒளியா இல்லை இருளா? என்ற கேள்விக்கு, இருள்தான் முதல் தோன்றியது என்றுத்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பேரண்ட உருவாக்கக் கணத்திலிருந்தே பார்த்தால், ஒளிதான் முதலில் தோன்றியது என்று பதில் சொல்லலாம். இரண்டையும் எதிர்த்தும் மறுத்தும் விவாதிக்க முடியும். இதனாலேயே, கிடைக்கும் பதில் சற்றுக் குழப்பமாக இருக்குமென்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். நான் அப்படிட் சொன்னதற்கான காரணம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.