அக்கல்லை  செந்தில், பழனிமீது விளையாட்டாகத்தான் எறிந்தான். அது ஒரு பொடிக் கல்தான். அவன் குறி பார்த்தும்  எறியவில்லை. பழனி தன்னைக் கிண்டல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கையில் அகப்பட்டஒரு சின்ன கல்லை அவன்மீது எறிந்தான். பழனி சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தான். கல் அவன்மீது பட்டாகவேண்டுமென்று செந்தில் நினைக்கவும் இல்லை.

ஆனால் அந்தக் கல் ராமபாணம் போல் சென்று பழனியின் நெற்றியைத் தாக்கிற்று.

பழனி சுருண்டு கீழே விழுந்தான். செந்தில் திடுக்கிட்டு நண்பனை நோக்கி ஓடினான். அது கருங்கல்லோ, கூழாங்கல்லோ கூட இல்லை. நெற்றியில் பட்டதும் மண்ணாக உதிர்ந்துபோன இந்தப் பொடிக்கல் தாக்கியா பழனி சுருண்டு விழுந்தான்? செந்திலுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவன் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு, செந்தில் அழுகையை அடக்கமாட்டாத குரலில், “ பழனி, பழனி” என்று கூப்பிட்டான்.

பழனி மயக்கமுற்றிருந்தான். கல் தாக்கிய இடத்தில் காயமேதும் இருந்ததாகத் தெரியவில்லை. ரத்தக் கசிவோ, வீக்கமோ இல்லை. பொடிக்கல் மேலே பட்டு மயக்கமுறுவது சாத்தியமா? செந்திலுக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பர்கள் இருவருக்கும் ஒரே வயது.பன்னிரண்டு. ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள். ஏழாம் வகுப்பு. பழனியின் அப்பா ஆளும் கட்சி அங்கத்தினராக இருந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனார். குழந்தையாக இருந்த பழனியையும் அழைத்துக் கொண்டு வெளியே போனவர்

எப்படிக் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டுக் காணாமல் போயிருக்க முடியுமென்று தெரியவில்லை. குழந்தை மயங்கித் தெருவில் விழுந்திருந்தான் என்று கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவன் அப்பா போன இடம் தெரியவில்லை. மகனை அப்படித் தனியாக விட்டுவிட்டுப் போகக் கூடியவரும் அவரில்லை. போலீஸ் அலுவலகத்தில் சில ஆண்டுகள் அவர் ஃபைலாகக் கிடந்ததுதான் மிச்சம். அப்புறம் ஃபைலையும் மூடிவிட்டார்கள்.

பழனியின் அம்மாவுக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அலுவலகப் பிரிவில். செந்திலின் அப்பாவுக்குப் பழ வியாபாரம். அவருடைய தள்ளுவண்டி ஆஞ்சனேயர் கோயில் பக்கத்திலிருந்தது. செந்திலின் அம்மா அவன் அப்பாவுக்குப் பழ வியாபாரத்தில்  உதவியாக இருந்து வந்தாள்.

செந்தில் அங்கு அப்பொழுது வந்த ஆட்டோவை நிறுத்தினான்.

“என் சிநேகிதன் இவன். மயக்கம் போட்டு விழுந்துட்டான். இவனோட அம்மா ஆஸ்பத்திரிலே வேலை செய்யறாங்க. இவனைக் கூட்டிக்கினு போகணும்”

என்றான் செந்தில் ஆட்டோக்காரரிடம்.

ஆட்டோக்காரர் சற்று வயதானவர். இரண்டு சிறுவர்களையும் ஏற இறங்கப் பார்த்தார். மயக்கமுற்றிருந்த பழனியைப் பார்த்து சிலுவையிட்டுக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி வந்தார்.

பழனியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார்.

“ பசியா இருக்கலாம்”, என்று தமக்குத் தாமே சொல்லிக்கொண்டு பழனியைத் தூக்கி, வண்டியில் படுக்க வைத்தார்.

“ நீயும் வர்றியா?” என்றார் ஆட்டோக்காரர்.

“ நான் வராமெ இவன் அம்மாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்

செந்தில்.

சற்றும் சிந்திக்காமல் தாம் கேட்ட  கேள்வியை ஒரு பொடிப்பையன் சுட்டிக்காட்டியது அவர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

“சரி, நீ புத்திசாலிப் பயதான், வண்டியிலே ஏறு” என்றார் அவர்.

ஆட்டோ ஆஸ்பத்திரி வாசலில் நின்றது.

“சரி, நான் இவனைத் தூக்கிட்டு வாரேன், நீ போய் இவன் அம்மாவைக் கூட்டிக்கினு வா..” என்றார் ஆட்டோக்காரர்.

ஆஸ்பத்திரியில் ஒரே கூட்டம். செந்திலுக்கு பழனியின் அம்மா பெயர் உடனே நினைவுக்கு வரவில்லை. அவன் அவளை ‘அக்கா, அக்கா’ என்றுதான் கூப்பிட்டுப் பழக்கம். அக்கா எங்கே இருக்கிறாள் என்று எப்படி விசாரிப்பது? அவன் அதிர்ஷ்டம் குறுக்கே வந்தது, பழனியின் அம்மாவே எதிரே வந்தாள்.

“இங்கே எதுக்குடா வந்தே?” என்றாள் அவள் செந்திலிடம்.

அக்காவின் பெயர் அவன் நினைவுக்கு வந்துவிட்டது.

சொர்ணம்.

“நாங்க விளையாடிக்கினுருக்கிறப்போ பழனி மயக்கம் போட்டு விழுந்துட்டான் அக்கா” என்றான் செந்தில்.

இதற்குள் ஆட்டோக்காரர் பழனியைத் தோள்மீது சார்த்தி அங்கு வந்தார்.

“என் மவனுக்கு என்ன ஆச்சு? ஐயோ கடவுளே! பழனி! பழனி!” என்று ஆட்டோக்காரர் தோள் மீதிருந்த தன் மகனை உலுக்கினாள் சொர்ணம்.

“ பதட்டப்படாதேம்மா. நீ இங்கே வேலை செய்யறே, எந்த டாக்டர்கிட்டே கூட்டிக்கினு போகணும்னு தெரியுமில்லே? முதல்லெ அதெ செய்” என்றார் ஆட்டோக்காரர்.

சொர்ணம் உள்ளே போனாள். சிறிது நேரத்துக்குப்பிறகு ‘ஸ்ட்ரெச்சரை’த் தள்ளிக் கொண்டு ஒருவன் வந்தான். சொர்ணமும் வந்தாள். பழனி அதில் படுக்க வைக்கப்பட்டான். ‘ஸ்ட்ரெச்சரை’வேகாமாகத் தள்ளிக் கொண்டு போனவன் நடைக்கு ஈடு கொடுக்கும் வண்ணம், சொர்ணமும் ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தாள். ஆட்டோக்காரருக்குப் பணம் கொடுக்கவில்லை என்பது செந்தில் நினைவுக்கு வந்தது.

“ நான் உள்ளே போய் அக்காகிட்டே பணம் வாங்கிட்டு வரேன்” என்றான் அவன்

ஆட்டோக்கரரிடம். அவர் புன்னகை செய்தார். “நீ போய் முதல்லெ உன் சிநேகிதனைக் கவனி. பணத்தைப் பத்தி அப்புறம் பாத்துக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியில் போனார்.

சொர்ணத்தைத் துரத்திக் கொண்டு வேகமாகப் போனான் செந்தில்.

பழனியை அவசரச் சிகிச்சை அறைக்குள் எடுத்துச் சென்றார்கள்.

சொர்ணத்தைப் பின்பற்றி அந்த அறைக்குள் நுழைந்தான் செந்தில்.

அங்கே ‘ஸ்டெதாஸ்கோப்பை’க் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு இளம் வயது டாக்டர் நின்றுகொண்டிருந்தான்..

“ என்ன சொர்ணம், உங்க மகனா?” என்றான் அவன்.

“ஆமாங்க” என்றாள் அவள் அழுகை கலந்த குரலில்.

“ என்ன ஆச்சுது? எப்படி மயக்கம் போட்டுவிழுந்தான்?” என்று கேட்டுக்கொண்டே பழனியைப் பரிசோதிக்கத் தொடங்கினான் டாக்டர் ரவி.

சொர்ணம் செந்திலைப் பார்த்தாள்.

உண்மையைச் சொல்வதா என்று ஒரு கணம் யோசித்தான் செந்தில். அப்படிச் சொல்லாமலிருந்த காரணத்தால் பழனிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது.

“ நாங்க விளயாடிக்கினுருந்தோம், சார். இவன் என்னைக் கிண்டல் செய்தான்.

நான் விளையாட்டா ஒரு பொடிக்கல்லை எடுத்து, அது வெறும் மண்கல்தான்

சார், அவன் மேலே வீசினேன். அது அவன் நெத்திலே பட்டதும் அப்படியே கீழே விழுந்துட்டான், சார். நெத்திலே காயமோ, சிராய்ப்போ ஒண்ணுமில்லே,

நீங்களே பாருங்க, சார். சத்தியமா சொல்றேன், அது வெறும் மண் கல்தான்,

சார்”, என்றான் செந்தில்.

“ அட,ப்பாவி, இதை ஏண்டா என்கிட்டே சொல்லலே?” என்றாள் சொர்ணம்.

நெற்றியைத் தடவிப் பார்த்த ரவி சொன்னான்:” கல்லு பட்டதினாலே எதுவும் இல்லேம்மா. அடியே சுத்தமா அவனுக்குப் படலே. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். சரி, முன்னாலே அவன் இந்த மாதிரி மயக்கம் போட்டு விழுந்திருக்கானாம்மா?” சொர்ணம் தயங்கினாள்.

“சொல்லுங்கம்மா, டாக்டர்கிட்டேயும், வக்கீல்கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாது,” என்றான் ரவி.

“இவன் குழந்தையாருக்கிறப்போ, இவன் அப்பா இவனை வெளியிலே கூட்டிக்கினு போனாரு.. அப்போ போனவர்தான்.. “அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

ரவிக்கு அவளைப் பற்றிய விவரங்கள் தெரியுமென்பதால், அவன் பேசாமலிருந்தான்..

“இவன் மயக்கமா இருந்தான்னு, இவனை வீட்டுக்குக் கூட்டிக்கினு வந்தாங்க தெரிஞ்சவங்க. இவனைத் தனியா விட்டுட்டு இவன் அப்பா எங்கே போனார்னு யாருக்கும் தெரியல,” என்று தொடர்ந்து சொன்னாள்.

“அப்பொ டாக்டர்கிட்டெ காண்பிச்சிங்களா?”

“ இல்லே. கொஞ்ச நேரந்தான் மயக்கமா இருந்தான், அப்புறம் சரியா போயிடிச்சி”.

“ இது நடந்து எத்தனை வருஷமாறது?”

“ அவனுக்கு அப்போ நாலு வயசு. இப்போ பனிரெண்டுங்க.”

ரவி சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்:“சரி, நீங்க ரெண்டு பேரும் வெளியிலே இருங்க. ‘டெஸ்ட்’ செய்திட்டுக் கூப்பிடறேன்..”

அவர்கள் இருவரும் வெளியே சென்றார்கள்.

“அரசியல், அரசியல்னு இவன் அப்பன் என் கழுத்தை அறுத்திட்டுப் போயே போயிட்டான். இவனை நம்பித்தான் நான் இருக்கேன். கடவுளே! இவனுக்கு என்ன ஆச்சோ தெரியலியே!” என்றாள் சொர்ணம்.

“ஒண்ணும் ஆகலெக்கா. பள்ளிக்கூடத்திலேந்து வந்து சோறு தின்னானா,” என்று கேட்டான் செந்தில்.

“தெரியலியே! நான் ஆஸ்பத்திரியிலெல்லெ இருக்கேன்…வழக்கமா சாப்பிடுவான்.

இன்னிக்கு என்ன செய்தானோ தெரியலே”

“ ஆட்டோக்காரரு பசியாருக்கலாம்னாரு.”

“அடக் கடவுளே, அவரை மறந்துட்டோமே, அவருக்குப் பைசா கொடுக்க வேணாம்?” என்றாள் சொர்ணம்.

“அவரு ரொம்ப நல்லவரு, அக்கா. ‘பைசா வேணாம், உன் சிநேகிதனைக் கவனி’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.”

“இப்படி நல்லவங்கள்லாம் உதவி செய்திருக்காங்க, என் மகனுக்கு ஒண்ணும் ஆகிய்ருக்காது,” என்றாள் சொர்ணம்.

“ என்னை மன்னிச்சுடுங்கக்கா. என்னால்தான் பழனிக்கு இப்படி..” என்று சொல்லிக் கொண்டே சொர்ணத்தின் கைகளைப் பற்றிக் கொண்டான் செந்தில்.

“ பைத்தியம்! உன்னாலே ஒண்ணுமில்லேடா, டாக்டர் சொன்னாரில்லே, கேட்டுக்கினுத்தானே இருந்தே?  சரி, நீ வீட்டுக்குப் போ, உங்கம்மா தேடிக்கினு இருப்பா.. போ, போ..” என்றாள் சொர்ணம்.

“டாக்டர் என்ன சொல்றார்னு கேட்டுக்கிட்டுப் போறேன்,அக்கா..”

சொர்ணம் அவனை அணைத்துக் கொண்டாள்

சிறிது நேரம் கழித்து ஒரு நர்ஸ் வெளியே வந்து, டாக்டர் அவளைக் கூப்பிடுவதாகச் சொன்னாள

சொர்ணமும் செந்திலும் உள்ளே விரைந்தனர்.

பழனியின் கண்கள் திறந்திருந்தன. ஆனால் அவன் யாரையும் குறிப்பிட்டுப் பார்த்ததாகத் தெரியவில்லை.சொர்ணம் அவன் அருகில் சென்று அவனைக் குனிந்து பார்த்தாள்

“ பழனிக்கண்ணு, என்னம்மா ஆச்சு?” என்று குரல் உடைந்த நிலையில் கேட்டாள்

சொர

பழனி தொடர்ந்து உத்தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவனுக்கு நினைவு இல்லீங்களா, டாக்டர்?” என்று கேட்டான் செந்தில்

“ நினைவு இருக்குன்னுதான் நினைக்கிறேன்.. திடீர்னு கண்ணைத் திறந்து

‘அப்பா’ன்னான்..”

சொர்ணம் திடுக்கிட்டு டாக்டரைப் பார்த்தாள். “ ‘அப்பா’ன்னானா?” என்றாள்

அவள் வியப்புடன்.

“ என் காதிலே அப்படித்தான் விழுந்தது. அது தப்பாகவுமிருக்கலாம். அவன்

‘அம்மா’ன்னு சொன்னதுதான் என் காதிலே அப்படி விழுந்ததோ என்னவோ” என்றான் ரவி.

“ இல்லே டாக்டர், என் காதிலேயும் ‘அப்பா’ன்னுதான் விழுந்தது” என்றாள்

நர்ஸ்.

“ நான்தான் இவனுக்கு இப்போ அப்பா, அம்மா எல்லாம்.. அப்படியிருக்கிறப்போ

அவன் அப்பாவைக் கூப்பிட்டது ஆச்சர்யமாயிருக்கே, டாக்டர்”

“ அதான் எனக்குப் புரியலே.. அவனுக்கு உடம்பைப் பொறுத்த வரைக்கும்

ஒண்ணுமில்லே.. ஹி ஈஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.. “என்றான் ரவி.

சொர்ணம் மறுபடியும் குனிந்து,” பழனிக்கண்ணு” என்றாள் பரிவுடன்.

பழனியின் பார்வை அவள் பக்கம் திரும்பியது.

சிறிது நேரத்துக்குப் பிறகு,“அம்மா” என்றான் சன்னமான குரலில்.

சொர்ணம் அவன் முகத்தை இரு கைகளினாலும் பற்றி, “ கண்ணு, உனக்கு

என்னடா ஆச்சு?” என்றாள்.

“சொப்பனம்மா, அப்பாவைப் பாத்தேன்..” என்றான் பழனி.

“ அப்பாவைப் பாத்தியா? என்னடா சொல்றே?”

அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். “ இது ஆஸ்பத்திரியாம்மா?” என்று கேட்டான்.

“ஆமாம்..ஏன் கேக்கறே?”

அவன் பதில் கூறாமல் கண்களை மூடிக்கொண்டான்.

“ உங்ககிட்டே தனியா பேச விரும்பறான் போலிருக்கு..” என்றான் ரவி சொர்ணத்திடம்.

“ ஆமாம்மா, வீட்டுக்குப் போகலாமா, டாக்டர்?” என்றான் பழனி கண்களைத் திறந்து.

“ உன் உடம்பைப் பொறுத்த வரைக்கும் ஒரு பிரச்னையும் இல்லே..நீ தாராளமா வீட்டுக்குப் போகலாம். ஆனா, உன் ‘ஃப்ரெண்ட்’ உன் மேலே விட்டெறிஞ்சதோ ஒரு பொடிக்கல்லு..அதனாலெ உனக்கு அடியும் படலே, அப்படியிருக்கிறப்போ,ஏன் மயங்கி விழுந்தேங்கிறதுதான் ஆச்சர்யமாயிருக்கு. பயத்திலே விழுந்திருக்கலாம். என்ன பயம்? உங்கப்பா காணாம போனப்போ, மயக்கதிலே இருந்த உன்னை,

மத்தவங்க உங்க வீட்டுக்குக் கொண்டு வந்ததா உங்கம்மா சொன்னாங்க.. இப்போ உனக்கு உங்கப்பாவைப் பத்திய சொப்பனம்.. உனக்கு விருப்பமிருந்தா என்ன சொப்பனம்னு விவரமா என்கிட்டேயும் சொல்லலாம்.. டாக்டர்ங்கிற முறையிலே உன் பிரச்னையை நான் புரிஞ்சுக்கலாமான்னு பாக்கறேன்.. ஆனா நான் உன்னைக் கட்டாயப்படுத்தலே…” என்றான் ரவி.

பழனி அம்மாவைப் பார்த்தான்.

“ டாக்டர்கிட்டே எதையும் மறைக்கக் கூடாது, சொல்லு” என்றாள் சொர்ணம்.

ரவி, நர்ஸையும், செந்திலையும் வெளியே போகும்படி சைகை செய்தான்.

“செந்தில் இருக்கட்டும்” என்றாள் சொர்ணம்.

நர்ஸ் வெளியே சென்றாள்.

“ஒரு பயங்கரமான சொப்பனம்மா.. நானும் அப்பாவும் போயிட்டிருக்கோம். அப்போ திடீர்னு ஒரு கார் வந்து எங்க பக்கத்திலே நிக்குது. கார்லேந்து ஒருத்தர் இறங்கறாரு. அப்பாகிட்டே கோபமா பேசறாரு. அப்பாவும் கோபமா பதில் சொல்றாரு. அப்போ கார்லேந்து இரண்டு முரடங்க கீழே இறங்கறாங்க.

ஒருத்தன் அப்பாவைக் காருக்குள்ளார தள்றான். நான் கத்தறேன். இன்னொரு முரடன், செந்தில் எறிஞ்ச கல்லு என் மேலே பாஞ்சு வந்தமாதிரி என் மேலே பாஞ்சு, வாயைப் பொத்தித் தல மேலே ஓங்கி அடிக்கறான்.. நினைச்சாலே பயமாருக்கும்மா…” என்று சொல்லிவிட்டு அவன் கண்களை மூடிக்கொள்கிறான்.

 

சொர்ணம் கட்டிலில் உட்கார்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.

பிறகு ரவி சொன்னான்:“செந்தில் எறிஞ்ச கல்லு பாஞ்சு வந்த வேகத்திலே உங்க மகனோட அடிமனத்தைக் கிளறி, பழைய நினைவெல்லாம் சொப்பனமா வந்திருக்கு. உங்க புருஷன் காணாமப் போகலே.. கடத்திக்கிட்டுப் போகப்பட்டிருக்கலாம். கார்லேந்து இறங்கி வந்தவர் முகம் இப்போ உனக்கு நினைவிருக்கா தம்பி?”

 

“சொப்பனத்திலே அவர் தெரிஞ்சவர் மாதிரி எனக்கு ஒரு உணர்வு இருந்தது.

இப்போ முகம் நினைவுக்கு வல்லே” என்றான் பழனி.

“அப்போ அவரு உயிரோட இருக்காருங்கிறீங்களா, டாக்டர்?” என்றாள்

சொர்ணம் நம்பிக்கையுடன்.

“காணாமப் போயிருந்தா உயிரோட இருக்கக்கூடிய சாத்தியமுண்டு. கடத்திக்கிட்டுப் போயிருந்தா.. … என்னம்மா சொல்றது? இது அரசியல் விவகாரம்,

எது வேணுமானாலும் நடந்திருக்கலாம்..”

சொர்ணம் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டு, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அப்பொ நான் கண்டது சொப்பனமில்லே, நிஜமாகவே நடந்ததுதான் என் ஞாபகத்துக்கு வந்திருக்குதுங்கிறீங்களா, டாக்டர்?” என்றான் பழனி.

“இருக்கலாம். மனித மூளையைக் காட்டிலும் ஆச்சர்யமான விஷயம் உலகத்திலே வேறு எதுவுமே கிடையது. உன் ‘ஃப்ரென்ட்’ விட்டெறிஞ்ச அந்தச் சின்ன கல்லு உன் மனசிலே இருந்த இருட்டான பகுதிக்கு விளக்கேத்தி, சொப்பனமா வந்திருக்கு,பாரேன்.. இது எப்படி நடந்ததுங்கிறது ஆராயப்படவேண்டிய விஷயம்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய ‘நியூராலிஜிஸ்ட்’ இருக்காரு, அவருக்கு ‘சைக்காலஜியும்’ அத்துப்படி..நான் உன்னை அவர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறேன்.. பணம் ஒண்ணும் கொடுக்க வேணாம்..” என்றான் ரவி.

“அப்பா கிடைச்சிடுவாரா, டாக்டர்?” என்று கேட்டான் பழனி.

“ உனக்கு இப்போ அப்பா, அம்மா ரெண்டு பேருமே உன்னோட அம்மாதான்.

அப்பா கிடைச்சிட்டார்னா, போனஸ் “ என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ரவி.

செந்தில் பழனியருகில் வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு, “ஸாரிடா பழனி..” என்றான். பழனி அவனைப் பார்த்து,” நீ இங்கேயா இருக்கே இத்தனை நேரம்? வீட்டிலே உங்கம்மா தேடுவாங்கடா..” என்றான்.

“நாம போறபோது அவனை வீட்லே விட்டுட்டுப் போகலாம்..” என்றாள் சொர்ணம்.

“ நான் போய்க்கிறேன் அக்கா, நீங்க வர வேணாம்.. பழனியை நேரே வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.. அவன் ‘ரெஸ்ட்’ எடுக்கட்டம்.. நான் வரேன்  பழனி” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான் செந்தில்.

 

“ இந்தமாதிரிப் பசங்களைப் பாக்கறதே மனசுக்கு சந்தோஷமாயிருக்கு..தன்னாலே ஏதானும் ஆயிடிச்சோன்னு என்ன கவலை, கரிசனம்.! சரி சொர்ணம், நான் டாக்டர் கிருஷ்ணன்கிட்டே ‘அப்பாய்ட்மென்ட்’ ‘ஃபிக்ஸ்’ செய்திட்டு உங்ககிட்டே சொல்றேன்.. இவனைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்..” என்றான் ரவி.

 

வீட்டுக்கு வந்தபிறகு, பழனி இயல்பாக இல்லாமலிருப்பது போல் சொர்ணத்துக்குப்பட்டது. அவன் அடிக்கடி எதைப் பற்றியோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவது போல் அவளுக்குத் தோன்றிற்று.

“ என்னடா யோசனை எப்போ பார்த்தாலும்” என்று அவள் அவனைக் கேட்டும் பார்த்தாள்.

“ஒண்ணுமில்லேம்மா” என்று சொன்னானே தவிர, அதைப் பற்றி விவாதிக்க அவன் விரும்பவில்லை என்பது போல் அவளுக்குப் பட்டது.

“உனக்கு எப்படிம்மா ஆஸ்பத்திரிலே வேலை கிடைச்சுது?” என்று ஒரு நாள் திடீரென்று  கேட்டான்.

“ஏன் எதுக்குக் கேக்கறே?”

“சும்மாத்தாம்மா.. அப்பா காணாமப் போயிட்டார்னு அரசாங்கத்திலே, கருணையினாலே வேலை போட்டுக் கொடுத்தாங்கன்னு நீ சொன்னதா ஞாபகம்..”

“ ஆமாம், அதுக்கு இப்போ என்ன?”

“அப்பா, கட்சிச் சண்டையிலே காணாமப் போனா, அரசாங்கம் எதுக்காக உதவி செய்யணும்னு எனக்குப் புரியலே..”

“ உங்கப்பா எந்தக்கட்சிலே இருந்தாரோ அந்தக் கட்சி அப்பவும் சரி, இப்பவும் சரி, பதவியிலே இருக்குது.. புரியுதா? ”

பழனி பதிலைக் கேட்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்..

“ என்னனடா.. யோசிக்கறே?.. ”

பழனி பதில் சொல்லவில்லை. பள்ளிக்கூடம் போய்விட்டான்..

அன்று பள்ளிக்கூடம் விட்டதும், அவன் செந்திலிடம் சொன்னான்,” நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்.. ‘பார்க்’ பக்கம் போகலாம், வறீயா?”

செந்தில் அவனை வியப்புடன் பார்த்தான்..“ எதைப் பத்தி?”

“ வாயேன் சொல்றேன்..”

‘பார்க்’கில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள்.

பழனி சொன்னான்: “அன்னிக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா? ஒரு பெரிய டாக்டர் கிட்ட போனா அவர் செய்யற பரிசோதனையிலே, எங்கப்பாவைக் கடத்திக்கிட்டுப் போனவர் முகம் என் ஞாபகத்துக்கு வரலாம்னு..”

“ஆமாம். அந்த டாக்டர்கிட்டே போனியா?”

“இன்னும் இல்லே.. ஆனா  என் சொப்பனத்திலே வந்தவர் யார்னு எனக்கு இப்பொ தெரிஞ்சு போச்சு.. திடீர்னு மூஞ்சியிலே அறையற மாதிரி நினைவுக்கு வந்தது. அந்த முகம்.. ஏன்னா அவர் முகம் அநேகமா தினம் ‘பேப்பர்’லே வந்துக்கிட்டிருக்கு”

“யாருடா அவர்?”

பழனி சொன்னான்.

“அடப்பாவி” என்று உரக்கக் கூவினான் செந்தில்.

“ஆஸ்பத்திரியிலேந்து வந்த அடுத்த நாள், ‘ பேப்பரை’ப் பாக்கறப்போ, எனக்குப் புரிஞ்சுது.. என் அப்பா காணாம போறப்போ அந்த ஆளு கட்சியிலே பெரிய புள்ளி.. இப்போ.. ? உனக்குத் தெரியும் என்னவா இருக்கார்னு. என் அப்பாவைக் கடத்திக்கிட்டுப் போகிற அளவுக்கு என் அப்பா அவருக்கு என்ன செய்தார்னு எனக்குத் தெரியலே.. அரசியல்லே இருக்கிறவங்க  யாருமே யோக்கியங்க இல்லேடா, செந்தில்” என்றான் பழனி.

“இப்பொ நீ என்ன செய்யப் போறே?”  என்று கேட்டான் செந்தில்.

“ஒண்ணும் செய்யப் போறதில்லே.. அந்த ‘ஸ்பலிஸ்ட்’ டாக்டர்கிட்டே

வரல்லேன்னு டாக்டர் ரவிகிட்டே சொல்லப் போறேன்”

“ஏன்?”

“எனக்கு இப்போ அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சு போச்சு. என் கனவிலே அவர் வந்தார்ங்கிறதை வச்சிட்டு அவர் மேலே ‘கேஸ்’ போடமுடியுமா? கனவைச் சாட்சியா கூப்பிடமுடியாதில்லே? அவரு இப்போ அதிகார ரீதியா உச்சாணிக் கொம்பிலே இருக்காரு.. டாக்டர் ரவி சொன்ன  மாதிரி, எங்கப்பாவைக் கடத்திக்கிட்டுப் போயிருந்தாங்கன்னா, அவருக்கு என்ன வேணுமானாலும் ஆகியிருக்கலாம். எங்கப்பாவுக்குச் செய்த  துரோகத்துக்காக, எங்கம்மாவுக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்காங்க.. இது இந்தக் காலத்துக்கேற்றமாதிரி, நம்ம மாதிரி ஏழைகளுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்சமான நியாயம்னு பேசாம இருக்க வேண்டியதுதான்..” என்றான் பழனி.

“உங்கப்பாவை ஏன் கடத்திக்கிட்டுப் போனாங்கன்னு நீ தெரிஞ்சுக்க விரும்பலியா?” என்று கேட்டான் செந்தில்.

“இல்ல. எங்கம்மா சொல்ற மாதிரி, அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைன்னு

தெரிஞ்சும் அதிலே விழுந்தவர்தான் என்னோட அப்பா.. எலி, பெருச்சாளி எல்லாந்தான் இருக்கும்..  ஜீவிக்கணும்னா அந்தச் சாக்கடையிலே   ஒண்ணோட ஒண்ணு  சண்டை போட்டுத்தானே ஆகணும்? என்ன சண்டைன்னு ஆராயறதிலே யாருக்கு என்ன லாபம்?” எங்கப்பாதான் வந்துடப்போறாரா? நான் படிச்சு டாக்டரா ஆகப் போறேன்” என்றான் பழனி.

பழனியை ஒரு புது மரியாதையுடன் ஏறிட்டு நோக்கினான் செந்தில்.