2014 வரை கௌதம் அதானி என்பவர் பற்றி குஜராத் மாநிலத்தைத் தாண்டி இந்தியாவில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் மோடியின் நண்பராகத்தான் அவர் அறிமுகமானார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முழுக்க முழுக்க அதானி நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில்தான் மோடி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அப்போதே மோடி-அதானி உறவுகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது.
மோடி பிரதமரானதும் அதானி குழுமம் அசுர வளர்ச்சி கண்டது. ஒன்பதே ஆண்டுகளில் உலகின் மூன்றாம் பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதாகச் செய்திகள் வந்தது. பல பத்தாண்டுகள் உழைப்பில் முன்னுக்கு வந்த பல நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத்
தள்ளி அதானி குழுமம் தேசமெங்கும் பரவி விரவியது. மோடியால் அதானி வளர்ந்தாரா, அதானியால் மோடி வளர்ந்தாரா என்று பிரித்துப் பேச இயலாதபடி பின்னிப் பிணைந்தது அவர்களின் வளர்ச்சி.
அப்படிப்பட்ட குழுவில் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அரசல் புரசலாக விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. அதற்கெல்லாம் மூல காரணம் ஹின்டன்பர்க் ரிசர்ச் எனும் பங்கு வர்த்தக மற்றும் ஆய்வு நிறுவனம். சந்தேகங்கள் யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் 109 பக்க இரண்டாண்டு புலனாய்வு அறிக்கை.
அதானி குழுமப் பங்குகளின் மதிப்பும், அதன் அடிப்படையில் அமைந்த சொத்துக்களின் மதிப்பும் பன்மடங்கு ஊதிப் பெருக்கப்பட்டவை என்ற ஐயம் சத்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கையாண்ட தில்லுமுல்லு வழிமுறைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகி இருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதன் நிறுவனர்(குடும்பமும் சேர்த்து) 75% சதவிகிதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது செபி விதி. மீதி பங்குகளை FII எனும் அந்நிய முதலீட்டாளர்கள்,DII உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் வைத்திருக்கலாம். இது கார்ப்பரேட் ஜனநாயகம் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலான அவரது நிறுவனங்களில் 74.8% பங்குகளை வைத்திருக்கிறார்.15-18% முதலீடு செய்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் யாரென்று பார்த்தால் மொரீஷியஸ் தீவுகளில் கெளதம் அதானி குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பினாமி நிறு
வனங்கள். ஆதாரங்களைத் தோண்டி எடுத்திருக்கிறது ஹிட்டன்பர்க். உள்நாட்டு முதலீட்டாளர்கள் அற்ப சொற்பம். அவர்களும் கூட நீண்ட நாள் குடும்ப நண்பர்களாக இருக்கக்கூடும். எனவே 95% அதானி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது பங்குகளை இயல்பு மதிப்பை (Intrinsic value) விட பத்து மடங்கென்ன, கூடுதலாகவே பெருக்க வைக்க முடியும். இந்த கைங்கரியங்களை செய்த அதானியின் சகோதரர்கள், மைத்துனர் வேறு சில மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது தனிக்கதை. முன்னாள் பங்குச் சந்தை மோசடி மன்னன் கேத்தன் பரேக்கின் கையும் இருக்கிறது என்கிறது ஹிண்டன்பர்க் ஆவணம். ஹிண்டன்பர்க் ஆவணத்தின் சில முக்கிய அம்சங்கள் இவை.
அதானி குழுமம் தங்களது அக்கவுண்டிங்கில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி இருக்கிறது. அவர்களது
நிதி அறிக்கைகள் நம்பத்தகுந்தவை அல்ல.
* அதானி குழுமத்தின் பங்கு விலை செயற்கை முறைகளில் அதிகரிக்கப்பட்டு வைத்திருக்கப்
பட்டிருக்கிறது. 2007இல் கேதன் பரேக்குடன் இணைந்து பங்கு வர்த்தகத்தை முறைகேடாக நடத்தியது பற்றி செபியே குறிப்பிட்டு இருக்கிறது. பின்னர் இந்திய அரசின் தலையீட்டின் மூலம் வெறும் அபராதத்துடன் தப்பித்தது.
* அதானி குழுமத்தின் கடன் விகிதம் அவர்களது நிறுவனத்தின் அளவுக்கு மீறி அதீதமாக இருக்கிறது. ஏதாவது ஒரு சிறிய, பெரிய பங்கு வீழ்ச்சியில் கடனை திருப்பும் கட்டாயம் நேரிட்டால் நிறுவனம் திவால் ஆகி விடலாம்.
* சில குறிப்பிட்ட அந்நிய தேசங்களில் லெட்டர் பேட் நிறுவனங்களை நிறுவி அவற்றின் மூலம் தங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிதியை சுழற்சி செய்கிறார்கள்.
* ஐக்கிய அமீரகத்தில் ஒரு சின்ன குடியிருப்பில் இயங்கும் நிறுவனம் ஒன்று அதானி குழுமத்துக்கு ஒரு பில்லியன் டாலர் வரை கடன் அளித்துள்ளது.
* Wash Trading என்று அழைக்கப்படும் பங்கு வர்த்தக முறைகேட்டை பயன்படுத்தி பங்கு விலையை தங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி கையாள்கிறார்கள்.
* பல்வேறு அந்நிய தேசத்து லெட்டர் பேட் நிறுவனங்கள் மூலம் பொய்யான ஆர்டர்களை தருவித்து
அவர்கள் மூலம் பெற்ற நிதியைக் கொண்டு பொய்யாக அதிக வருவாயை அதிகரித்துக் காட்டு கிறார்கள்.
* வினோத் அதானி அல்லது அதானிக்கு நெருக்கமான கூட்டாளிகளால் இயக்கப்படும் 38 மொரீஷியஸ் ஷெல் கம்பெனிகள் பட்டியலும் இருக்கிறது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது. அதில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் தெரியாது. முகவரி கிடையாது. டெலி
போன்கள் கிடையாது. இணையத்திலும் தகவல்கள் கிடையாது. ஆனால் பல்லாயிரம் கோடி டாலர் பணத்தை அக்கம்பெனிகள் இந்தியாவில் அதானி கம்பெனிக்கு மாற்றி விட்டிருக்கிறார்கள்.
* தங்களது public limited நிறுவனங்களில் ஏற்படும் நஷ்டங்களை தங்கள் private limited நிறுவனங்களுக்கு கைமாற்றி அவற்றை அங்கே கழட்டி விட்டு தப்பிக்கிறார்கள்.
* எட்டு ஆண்டுகளில் அதானி குழுமத்துக்கு ஐந்து நிதி மேலாளர்கள் (CFO) வந்து போயிருக்கிறார்கள். அதாவது யாராலும் நின்று எதிர்கொள்ள இயலாத அளவுக்கு நிலைமை பயங்கரமாக இருக்கிறது.
* தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக எழும் விமர்சனங்களை இந்திய ஒன்றியஅரசின் உதவியுடன் அடக்குமுறைகள் கொண்டு நிறுத்துகிறது அல்லது தடுக்கிறது.
இன்னும் இப்பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதன் விளைவு,இரண்டு நாட்களில் அதானி குழுமத்தின் பங்குகள், பங்குச்சந்தையில் சுமார் 18.3% வீழ்ந்திருக்கிறது. அந்நிறுவனத்தில் சமீபத்தில் 75 ஆயிரம் கோடியுடன் உள்ளே வந்த எல்ஐசி போன்றவற்றின் பங்குகளும் விழுந்திருக்கின்றன.
ஹிண்டன்பெர்க்கின் அறிக்கைக்கு அதானி குழுமம் ஒரு எதிர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அதில் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. பொத்தாம் பொது
வான விளக்கங்கள். தான் இருக்கின்றன. சட்டரீதியில் புகார்களை எதிர்கொள்வோம் எனும் மோடியைப் போன்றே வாய்ச்சவடால் மட்டுமே இருக்கிறது. அதைத்
தான் எதிர்பார்க்கிறோம். தயவு செய்து வழக்குப் போடுங்கள் எனக் கூறிக் கிண்டலடித்து ஹிண்டன்பர்க் பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதானிகள் வழக்குப் போடமாட்டார்கள். ஏனெனில், ஹின்டன்பர்க்கின் வரலாறு நெடியது.
அதானி நிறுவனம் தொடங்கிய 2017 காலம் தொட்டு பல்வேறு நிறுவனங்களை அடித்து காலி செய்திருக்கிறது. வழக்கு என்று போட்டால் ஹிண்டன்பெர்க் குறிப்பிடும்
குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்க தங்கள் நிதி அறிக்கைகளை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி வரும். அப்போது அனைவரும் அந்த அறிக்கைகளை பரிசீலிப்பார்கள். மடியில் கனம் இல்லாதவர்கள் உடனடியாக ஒரு வாரத்துக்குள் ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருப்பார்கள். ஆனால் அதானி குழுமம் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இது ஒரு புறமிருக்க, இந்த சர்ச்சையில் குறிப்பிட வேண்டிய ஒன்று இருக்கிறது. இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பாஜகவினர் பலரும் கனத்த அமைதி காக்கிறார்கள். அல்லது பொதுவாக ஏதாவது பேசுகிறார்கள். ‘தீர விசாரிக்கணும்’, ‘அமெரிக்க சதி’ இது உள்நாட்டு விவகாரம் ‘ஹிண்டன்பெர்க் ஒரு பங்கு சந்தை
manipulator. அவன் சுயநலத்துக்கு ஏதாவது சொல்வான்!’ என்றெல்லாம் பேசுகிறார்கள். அதாவது இந்தியாவின் ஆகப்பெரிய நிறுவனம் தடையற்ற முறையில் சட்டவிரோதமாக நடந்திருக்கிறது. நிதி மோசடிகள் செய்திருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு அதிர்ச்சிகரமாகவே இல்லாதது போலத் தோன்றுகிறது.
கறுப்புப் பொருளாதாரத்துக்கு எதிராக மாபெரும் போரை அறிவித்து கூலித் தொழிலாளி முதல் நடுத்தர வியாபாரிகள் வரை தெருவில் நிற்க வைத்தது பாஜக அரசு. இப்போது அவர்களின் உடனிருந்த ஒருவரே கறுப்பு சாம்ராஜ்யமே நடத்தி வந்துள்ளது அம்பலப்பட்டுள்ளது. அது குறித்து இவர்களுக்கு சிறிதளவு கூட கோபம் கூட வரவில்லை. தீர விசாரிக்க வேண்டுமென மழுப்புகிறார்கள். தீர விசாரித்து, வழக்கு நடத்திதான், பாமர இந்தியர்களை, நீங்கள் சொன்ன அவர்களது கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள கியூவில் நிற்க வைத்தீர்களா? இக் கேள்விகளுக்கு பதில் வராது.
இவர்களை விட முக்கியமாக இது குறித்து அதிர்ச்சி அடைய வேண்டியவர் அதானியின் உற்ற நண்பரும் தேசத்தின் அதிகார மையத்தில் அமர்ந்திருப்பவருமான பிரதமர் மோடி தான். அதானி குழுமம் பிரதமரின் நேரடி ஆசியில் மற்றும் கண்காணிப்பில் இயங்கும் நிறுவனம். உலகத் தலைவர்கள் தங்களது பயணங்களில் தங்கள் மனைவியரை கூடவே அழைத்துச் செல்வார்கள். ஏறக்குறைய ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகள் தன் அந்நியப் பயணங்களில் எல்லாம் மோடி அதானியை கூட்டிச் சென்றிருக்கிறார். அறிக்கை குறிப்பிடும் அதானியின் முறைகேடுகள் எதுவுமே பிரதமருக்குத் தெரியாது என்றால் அவரது அறிவுத் திறன் மற்றும் மேலாண்மைத் திறன் இரண்டையுமே சந்தேகிக்க வேண்டி இருக்கும்.
எனவே, தனது உற்ற நண்பர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அவரது கடமை. அவருக்காக இந்திய அரசின் கஜானாப் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மோடியோ அதானி குறித்து எதுவுமே பேச மாட்டார். சீனா, ஜிடிபி சரிவு போன்ற அரசாங்க விவகாரங்கள் பற்றியே அவர் பேசியதில்லை. இது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட விஷயம் எனக் கடந்து செல்லவே முயற்சிப்பார்.
ஆனால் யாரும் எங்கும் எதுவும் பேச வேண்டிய அவசியம் இன்றி இனிமேல் காய்கள் நகர்த்தப்படும். அதானி குழுமம் கண்டிப்பாக ஹிண்டன்பெர்க் மீது வழக்குத் தொடர மாட்டார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சி இன்னும் சில நாட்கள் தொடரும். அதற்குப் பின் அமைதியான சில பல நடவடிக்கைகளில் அதானி குழுமம் காப்பாற்றப்படும். ஓரிரு மாதங்களில் ‘பார்த்தாயா, வெள்ளைக்காரனின் அந்நிய சதியை முறியடித்து
விட்டோம்!’ என்று தேச பக்தர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள். அதன் பின்னர் வழக்கம் போல தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கவில்லை, மசூதியில் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்றெல்லாம் இதர அதிமுக்கிய விஷயங்களில் நாட்டு மக்களிடையே தேசபக்தியை ஊட்டும் செயலைச் செவ்வனே தொடர்வார்கள்.
உலக கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் அதானி நிறுவன ஊழல்தான். மூன்று வருடத்தில் அதானி கம்பெனிகளுடைய பங்கு மதிப்பு சராசரியாக 819% அதிகமாயிருக்கிறது.
SEBI- என்றால் ஏதோ பெரிதாக நினைத்திருந்தோம். ஆனால் அது சும்மா வேடிக்கை பார்த்திருக்கிறது. தப்பு செய்தவனை தண்டிப்பதற்கு பதிலா SEBI அவனைக் காப்பாற்றுவதில் தான் முக்கியமாக செயல்பட்டிருக்கிறது என ஹிண்டன்பெர்க் அறிக்கை சொல்கிறது.
ஒரு பக்கம், ஆட்சியை பிடிக்க இக்காலிக் கூட்டம் சிறுபான்மை இன மக்களுக்கு செய்த கொடுமைகளை BBC படம் பிடித்துக் காட்டுகிறது. இன்னொரு பக்கம் ஆட்சிக்கு வந்த பின் இவர்கள் ஊரை அடித்து உலையில் போட்டு, கார்ப்பரேட்டுக்கு கால் கழுவி விடும் கைக்கூலி வேலைய ஹிண்டன்பெர்க் சல்லி சல்லியாகப் போட்டு நொறுக்கி இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல அதானி குழுமத்தின் பங்குகளில் LIC மற்றும் STATE BANK OF INDIA மிக பெரும் அளவிலான மக்கள் பணத்தை முதலீடு செய்து இருக்கின்றன என்பதுதான். அதனால் பங்கு சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் விலை வீழும்போது இவைகளுடன் சேர்ந்து மூழ்கப் போவது பொதுமக்களான நம்முடைய பணம்தான்.
உழவர் சந்தையில் காய்கறி வாங்கும் சாதாரண உழைப்பாளிகளுக்கு பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து என்ன அறிய முடியும்? ஆனால் அதன் வீழ்ச்சியெல்லாம் உழைப்பவர்களின் தலையில் வரியாய் விடியும் என்பதை அறியாத மக்கள். பங்குச் சந்தை என்றால் என்ன? பங்கு மதிப்பை எப்படி கணக்கிடுவது? ஒரு பங்கின் விலை நியாயமானதா? அதிகமானதா? எப்படி கண்டறிவது?
பங்கு மதிப்பை ஆராய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட அளவுகோல்கள் இருந்தாலும் P/E விகிதம் ஒன்றுதான் முக்கியமானது. Price/ Earning ratio. ஒரு பங்கின் மார்க்கெட் விலைக்கும் ஒரு பங்கின் வருடாந்திர சம்பாத்தியத்திற்கும் உள்ள விகிதம். வங்கி வைப்புத் தொகை ரசீதை எடுத்துக் கொள்வோம்.8% வருடாந்திர வட்டி .8 ரூபாய் சம்பாதிக்க 100 ரூபாய் முதலீடு. 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறது? 100/8= சுமார் 13 ரூபாய். ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறதோ அதுதான் P/E Ratio.
வங்கி வைப்புத் தொகையின் P/E விகிதம் 13 என்று கொள்வதாக ஒரு பங்கின் P/E விகிதம் 13 க்கு மேல் தான் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர் வங்கி டெபாசிட்டை விட கூடுதல் ரிட்டன் எதிர்பார்க்கக் கூடியவர். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர். ஆக P/E 26
இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ப்ளூ சிப் நிறுவனங்களுக்கு P/E 30, 35 கூட இருக்கலாம். அதிகம் தான், ஆனாலும் ஏற்றுக்கொள்ளலாம். ரிலையன்ஸ் P/E = 25. TCS P/E = 31. L&T P/E 32. இந்துஸ்தான் யூனியன் லீவர் P/E= 62 (அதிகம்). மாருதி சுசுகி P/E 36.
ஸ்டேட் வங்கி P/E =12 (வங்கிகளின் விகிதம் குறைவாகத்தான் இருக்கும், வாராக்கடன் பிரச்சினை). ஏசியன் பெயிண்ட்ஸ் P/E 70 (அதிகம்) ஆகவேதான் விலை இறங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மணி கண்ட்ரோல் வெப்சைட்டில் நீங்களே தேடி அறிந்து கொள்ளலாம். சரி, நாம் இப்போது அதானி பங்குகளுக்கு வருவோம். அதானி எண்டர்பிரைசஸ் P/E = 258.
அதானி கேஸ் P/E= 635. அதானி கிரீன் எனர்ஜி P/E =442. அதானி ட்ரான்ஸ்மிஷன் P/E= 252. அதானி வில்மர் P/E= 97(மிகச் சிறிய கம்பெனி). அதானி துறைமுகம் P/E= 25 (இது தேறும்).
ஏசிசி, அம்புஜா சிமெண்ட் சமீபத்தில் கைப்பற்றப்பட்டவை. ஒரு பைசா அதானி காசு இதில் கிடையாது. 100 % கடன். அதானி குழுமங்களின் சராசரி P/E விகிதம் சுமார் 300 என்று எடுத்துக் கொள்ளலாம். நியாயமான P/E 30 என்று வைத்துக் கொண்டால் பத்து மடங்கு விலை ஊதிப் பெருக்கப்பட்டதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் அதானி குழுமங்களின் மதிப்பு 17 லட்சம் கோடி ஆக உண்மையான மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி என்ற ஹிண்டன்பெர்க் மதிப்பீடு சரியே என்கிறார் வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர்.
இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இவ்வளவு பெரிய மோசடிப் பேர்வழியான அதானியை ஏன் மோடி தூக்கிச் சுமந்தார் என்பது தான். அதற்கான பதில் எளியது.
ஆர்.எஸ்.எஸ்-பாஜக கொள்கையின் அடித்தளமே வெள்ளையர்கள் காலம் முதல் இன்று வரை ஏகாதிபத்திய ஆதரவும், தனியார்மயக் கொள்கையும் தான். விமான நிலையங்கள், துறைமுகங்களை அதானியிடம் ஒப்படைப்பதற்கு உரிமம் பெற, நிலக்கரி இறக்குமதி உரிமம் பெற, வங்கிக்கடன் கோடிக்கணக்கில் பெறுவதற்கு, எல்லாவற்றிற்கும் உலக பணக்காரர் என்கிற அந்தஸ்து தேவைப்படுகிறது. நாங்கள் என்ன தகுதி இல்லாதவருக்கா கொடுத்து விட்டோம் என்று சுலபமாகப் பதில் சொல்வதற்கும், உலக பணக்காரர் ஒருவரால் தானே இவற்றையெல்லாம் வெற்றிகரமாக நடத்த முடியும்,வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று ஆட்சியாளர்களும் சொல்லிக் கொள்ளலாம்.
சொத்து மதிப்பு 85% மிகை மதிப்பீடு என்றும் உண்மை மதிப்பு 1.5 லட்சம் கோடி தான் என்கிறது ஹிண்டன்பெர்க் அறிக்கை. 2021 அக்டோபர் மாதம் முதல் தேதி எனது பதிவில் 1.5 லட்சம் கோடி தான் உண்மைமதிப்பு. 1.5 லட்சம் கோடி மட்டுமே மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் கடன் எவ்வளவு தெரியுமா? 2.30 லட்சம் கோடி. இதில் சுமார் 75 ஆயிரம் கோடி இந்திய வங்கிகளின் பணம். எல்ஐசி முதலீடு 75,000 கோடி. என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. என்ன செய்யப் போகிறது செபி? என்ன வகையான கலவரத்தை தூண்டப் போகிறது மோடி அரசு?

xaviersuji@gmail.com