தமிழ் சினிமாவின் இரண்டு முன்ணணி நாயகர்கள் நடித்த படங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் வெளியாகின. இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் முன்னரே சமூக வலைதளங்களில் அது தொடர்பான சண்டைகளும், விவாதங்களும் தொடங்கிவிட்டன. ரசிகர்கள் மட்டுமில்லை, திரைப்படம் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்களும் கூட போட்டிகளிலும், புகார்களிலும் இறங்கின. ரசிகர்கள் இன்னும் காத்திரமாக சமூக வலைதளங்களில் பரஸ்பர தாக்குதல்களிலும் வன்மங்களிலும் இறங்கினார்கள்.
திரைப்படத்தின் முதல் காட்சி திரையிட்ட அந்த முதல் நாள் இரவு இந்த சண்டைகள் எல்லாம் தீவிர கட்டத்தை அடைந்தன. திரையரங்குகளின் கண்ணாடிக்க் கதவுகள் உடைக்கப்பட்டன, பேனர்கள் கிழிக்கப்பட்டன, எதிர தரப்பு ரசிகர்கள் தாக்கப்
பட்டனர், மூச்சு முட்டும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர். அத்தனைக்கும் மேலாக இந்தக் கொண்டாட்டங்களிலும், வன்முறைகளிலும் ஒரு ரசிகர் மரணமடைந்தார். அவரின் வயது இருபதுக்கும் கீழ்!. தன்னையே நம்பியிருக்கும் ஒரு எளிய குடும்பத்தின் மிகப்பெரிய கனவு அவர். அவரோடு சேர்ந்து அத்தனை பேரின் கனவும் புதைந்து போனது. “யாரின் மீதும் எனக்கு வருத்தமில்லை, எனது மகன் மீதுதான் கோபம்” என்ற அந்த இளைஞனின் அம்மாவிற்கு சொல்வதற்கு எந்த வித ஆறுதலும் நம்மிடம் இல்லை.
தொழில்நுட்பங்களும், அறிவியலும், புதிய சாத்தியங்களும், வாய்ப்புகளும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட எப்படி இந்த ரசிக மனப்பான்மை இத்தனை அதிகமாக இருக்கிறது? மிகவும் சுயநலமாகவும், தன்னிச்சையாகவும் இளைஞர்கள் மாறிவிட்டார்கள் என சொல்லக்கூடிய காலகட்டத்திலும் எப்படி இளைஞர்கள் சினிமா கதாநாயகர்களின் மீது இத்தனை அபிமானத்துடன் இருக்கிறார்கள்?
அவர்களுக்காகத் தங்களது நேரத்தை, அமைதியை, அடையாளத்தை, ஏன் உயிரையே கொடுக்கும் அளவிற்குக் கூட அவர்கள் செல்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளெல்லாம் இந்த சம்பவங்களை ஒட்டி விவாதங்களாக சமூக வலைதளங்களில் எழுந்தன. எப்போதும் போலவே பொத்தாம் பொதுவான பொதுமைப்படுத்தல்களே பதில்களாகக் கிடைத்தன.
சினிமா நாயகர்களின் ரசிக மனப்பான்மை என்பது தனித்த ஒன்று அல்ல, அது மற்ற எல்லா கல்ட் மனப்பான்மையைப் போன்றதே! தன்னை ஒருவருடன் அடையாளப்படுத்தலும், அவரின் அடையாளத்தை தரித்துக்கொள்வதும், அவரின் மீதான உணர்வுப்பூர்வமான ஒட்டுதலை ஏற்படுத்திக்கொள்வதும், அதன் விளைவாக அவர் என்ன சொன்னாலும் அதை நம்ப விழைவதும் அதனால் தூண்டப்பட்டு விபரீதங்களில் ஈடுபடுவதும் எல்லா கல்ட் மனப்பான்மைக்கும் பொதுவானது, அதுவே தான் இந்த ரசிக மனப்பான்மையிலும் வெளிப்
படுகிறது. சினிமா நடிகர்களின் மீதான இந்த ரசிக மனோபவம் தமிழ் ரசிகர்களுக்கென்று தனித்த பண்பு இல்லையென்றாலும் கூட அதனால் நடக்கக்கூடிய வெறுப்புகளும், வன்மங்களும், வன்முறைகளும் தமிழ் ரசிகர்களுக்கே உரியன.
“ஒரு வேலை நாள் ஒன்றின் அதிகாலையிலும், அதற்கு முந்தைய நாள் இரவிலும் இவ்வளவு இளைஞர்கள் ஒரு திரைப்படத்திற்காகத் திரள்கிறார்களே இவர்களுக்கெல்லாம் செய்வதற்காக எந்த வேலையும் இல்லையா? ஆச்சர்யமாக இருக்கிறது!. சினிமா என்பதே ஒரு பொழுதுபோக்கு தானே! வார நாட்களில் பொழுதை சினிமாவிற்காக இளைஞர்கள் போக்குகிறார்கள் என்பது நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார் வெளி மாநில நண்பர் ஒருவர்.
தமிழ்நாட்டிலும், ஆந்திர தேசத்திலும்தான் இந்தியாவிலேயே திரைப்படங்களின் மீதான மோகங்களும், ஈடுபாடும் அதிகம் என நினைக்கிறேன். வாரயிறுதியில் சினிமா என்பது உலகளவில் அருகி வருகிறது, ஓடிடி போன்றவற்றின் வருகைக்குப் பிறகு சினிமாவிற்காக வெளி அரங்கிற்குச் செல்வது மட்டும் குறையவில்லை, உலகளவில் சினிமாக்களின் வடிவங்களும் மாறியிருக்கின்றன, முழுமையான திரைப்படங்களை விட வெப்சீரீஸ் வகையறாக்கள் உலகளவில் பெருமதிப்பை பெற்று வருகின்றன. கொரியா போன்ற சினிமா சார்ந்த நாடுகளில் கூட வெப்சீரீஸின் சந்தை அதிகமாகயிருக்கின்றன. இந்த ஓடிடியும், வெப்சீரீஸ் வகை திரையாக்கங்களும் சினிமா நாயகர்களின் மீதான கவர்ச்சியையும், அதி நாயக பிம்பத்தையும் சிதைத்து விடும் என்பதை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், அதனால் தான் அவர்கள் ஓடிடி மற்றும் வெப்சீரீஸ் வகைமைகளின் வளர்ச்சியையும் விரும்புவதில்லை.
கொரோனா காலகட்டத்தில் நோய்த் தொற்று அச்சமிருக்கும் போதுகூட தியேட்டரில் தான் எனது படம் வெளியாகும் என ரசிகர்களை பற்றிக் கவலைப்படாமல் தியேட்டரில் படத்தை வெளியிட்ட நடிகர்களை நாம் பார்த்துதான் வந்தோம். ஓடிடி தங்களது அதிநாயக பிம்பத்தை சிதைத்து விடும், அதன் வழியாகத் தங்களது ரசிகர்களை இழந்து விடுவோம் என்ற அச்சமே அவர்களின் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட்டதற்கு காரணம். தங்களின் மீதான அளவுகடந்த வெறியில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைகளின் கடமைகளை மறந்து, இவர்களுக்காக சண்டையிட்டுக் கொள்ளும், காயப்படுத்திக்கொள்ளும், உயிரை மாய்த்துக்கொள்ளும் ரசிகர்கள் இவர்களுக்கு எப்போதும் வேண்டும். அதற்காக எத்தனை எளிய குடும்பங்கள் அழிந்து போனாலும் கவலையில்லை என்ற மனநிலையில் இருக்கும் இந்த அதிநாயக புருஷர்கள்தான் சினிமாவிலும், பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் நல்லவர்களாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வளரிளம் பருவத்தின் குணாதிசயங்களும், ரசிக மனோபாவ நடவடிக்கைகளும் பொதுவாகவே வளரிளம் பருவம் பல்வேறு வகைகளில் தனித்துவமானது. பெற்றோர்களை சார்ந்த குழந்தை பருவத்திலிருந்து யாரையும் சாராத தன்னிச்சையான நடுத்தர பருவத்திற்கு இடையேயான வளரிளம் பருவம் எப்போதும் ஊசலாட்டத்துடனே இருக்கக்கூடிய பருவம். அதாவது முழுமையாக யாரையும் சார்ந்தும் இல்லாமல் அதே நேரத்தில் முற்றிலும் சுதந்திரமாகவும் இல்லாத நிலையே இந்த வளரிளம் பருவம். சில தனித்துவப் பண்புகள் இந்த வளரிளம் பருவத்தின் உளவியல் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன, அவை:
* சுயஅடையாள தேடல்
* கவனயீர்ப்பு நடவடிக்கைகள்
* எதிர்பாலின அங்கீகாரம்
* கட்டுப்பாடுகளை மீறல்
* சுதந்திர உணர்வு
* நிதானமற்ற, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலான அணுகுமுறை
* ஏராளமான ஆற்றல் மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்குதல்
பதின்ம வயதில் தனித்த அடையாளத்தை உருவாக்குவது சவாலானது. பெரும்பாலான நேரங்களில் பதின்ம வயதினரைப் பொறுத்த வரையில், எந்த அடையாளம் மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுகிறதோ குறிப்பாக எதிர்பாலின கவனத்தை ஈர்க்கிறதோ அதையே அடையாளமாக கொள்ள நினைப்பார்கள், அதையே அடையாளமாக நம்பவும் செய்வார்கள். ஆனால் இவையெல்லாம் காலப்போக்கில் உதிர்ந்து போகக்கூடிய பண்புகள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். தனது அடையாளத்தை தானே உருவாக்குவது என்பது எளிதான ஒன்று கிடையாது, தனிப்பட்ட பிரயத்தனங்கள் அதற்குத் தேவை, ஆனால் ஏற்கனவே தனக்கிருக்கக்கூடிய அடையாளங்களான சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றை வலிந்து திணித்துக்கொண்டு அதன் பெருமிதங்களைத் தனது பெருமிதங்களாக அங்கீகாரம் கோருவது சுலபமானது, அதுவும் சமூக வலைதள காலகட்டத்தில் இந்த அடையாளங்களால் மிக சுலபமாக கவனத்தைக் கோர முடிகிறதென்பதால் இந்த அடையாளங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சாதிய, மொழி, மதப்பெருமைகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக சொல்லப்படுவதற்கு இதுவே காரணம்.
சினிமா மோகங்கள் அதிகமாக இருக்கும் சமூகங்களில், சினிமா நாயகர்களின் அடையாளங்களையே தங்களின் அடையாளங்களாகத் தரித்துக்கொள்ளும் போக்கும் இளைஞர்களிடம் காணப்படும். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை ஒருவரின் அடையாளம் என்பது எந்த சினிமா நாயகரைப் பிடிக்கும் என்பதிலிருந்து சினிமா இயக்குனர், இசையமைப்பாளர் என்றெல்லாம் நீள்கிறது. ஒரு நாயகனைத் தனது அடையாளமாகக் கொள்வதன் மூலம் அந்த நாயகனின் பிம்பத்தின் மீது ஒரு தீவிர அபிமானம் ஏற்பட்டு விடுகிறது. அந்த பிம்பம் பிறரால் சிதைக்கப்படும்போது தனது அடையாளம் சிதைக்கப்பட்டதைப் போன்ற கோபம் ஏற்பட்டு அதன் விளைவாக எதிர் நபரைத் தாக்கும் நிலை வரைகூட சென்றுவிடுகிறார்கள். வளரிளம் பருவத்தின் தனித்த குணாதிசயங்களான கட்டுப்பாடுகளை மீறுவது, எல்லையற்ற சுதந்திர உணர்வு, நிதானமற்ற, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலான அணுகுமுறை, ஏராளமான ஆற்றல் மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்குதல் போன்றவையெல்லாம் இதையொட்டியே வெளிப்படுகின்றன. இந்த வலிந்த அடையாளத் திணிப்பே தங்களது அபிமான நடிகருக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்ற மனநிலையை இளைஞர்களுக்குக் கொடுக்கிறது.
இந்த தனிப்பட்ட குணாதிசயங்கள்தான் வளரிளம் பருவத்தின் போக்கை தீர்மானிக்கின்றன. உதாரணத்திற்கு ‘ஆபத்துகளுக்கு அஞ்சாத பண்பை’ ஒரு சமூகம் ஆரோக்கியமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். சமூகத்தின் பொருட்டு இளைஞர்களைத் திரட்டுவதும், அவர்களை ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைப்பதும், சக மனிதர்களுக்காக அவர்களின் போராட்ட குணத்தை உருவாக்கவும் இந்தப் பண்பு மிக அவசியமானது. பெரும்பாலான இளைஞர்களை உள்ளடக்கிய போராட்ட வடிவங்கள் வெற்றி பெற்றதற்கு இந்தப் பண்பே காரணம். தமிழ்நாட்டில் அறுபதுகளில் நடந்த மொழிப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு இளைஞர்களின் இந்தப் பண்பை சமூகத்தின் பிரதானமான தலைவர்கள் பயன்படுத்திக்கொண்டதே!. பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இளைஞர்களைக் கொண்டே தங்களது போராட்டங்களை நடத்தினார்கள். இளைஞர் களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தினார்கள், அதன் வழியாக அவர்களை சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைத்தார்கள். ஆனால் இன்றைய சூழலில் அப்படிப்பட்ட தலைமைகள் இல்லாதாதல்தான் இளைஞர்களின் இந்தப் பண்பு சினிமா நடிகர்களுக்கு அலகு குத்திக்கொள்வதற்கும், உயரமான கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதற்கும், ஓடும் லாரியின் கூரையில் நின்று ஆடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
சமூகத்தின் மிகப்பெரிய சவால் வளரிளம் பருவத்தின் இந்த தனிப்பட்ட குணாதிசயங்களை ஆரோக்கியமாக கையாள்வதற்கான நெறிமுறைகளை வகுப்பதே. ஏனென்றால் இந்த குணாதிசயங்களை முறைப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியமின்மை பெருகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமற்று இருக்கும் வளரிளம் பருவத்தினர் எதிர்கால சமூகத்திற்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார்கள், அதனால் தான் இவர்களின் இந்தக் குணாதிசயத்தை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அதற்காக சமூகத்தின் அத்தனை பிரிவினருக்கும் இருக்கிறது.
சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்கள் இன்றைய இளைஞர்களின் அன்றாட வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட சமூக வலைதளங்களினாலே நிர்ணயிக்கப்படுகின்றன. அவர்களின் நேரம், ஆற்றல், ஆர்வம் என அனைத்துமே சமூக வலைதளங்களிலேயே செலவிடப்படுகிறது. நிஜ வாழ்க்கையில் சக மனிதர்களிடமிருந்து முற்றிலுமாக விலகி இருக்கும் அவர்கள், சமூக வலைதளங்களில் எப்போதும் சக நண்பர்களிடன் அங்கீகாரத்தை வேண்டிக் காத்துகிடப்பது அத்தனை முரணாக இருக்கிறது. சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை அங்கு பார்வையாளராக இருப்பவர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை. செயல்படவேண்டும், அதுவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு செயல்பட்டால்தான் அங்கு ஒருவரது இருப்பை உறுதி செய்ய முடியும். நிஜவாழ்க்கையில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் ஏதாவது செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்னும் நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு கிடைக்கும் சுலபமான வழி ரசிக மனோபாவத்தை வெளிப்படுத்துவது. ரசிக மனோபாவத்தை இரண்டு வகைகளில் வெளிப்படுத்தலாம். ஒன்று, தங்களின் அபிமான நடிகரைப் பற்றி மேன்மையாகப் பேசலாம். இரண்டாவது, எதிர் தரப்பு நடிகரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கலாம், அவதூறு செய்யலாம். இதில் இரண்டாவதிற்கே சமூக வலைதளங்களில் மதிப்பும், அதிர்ச்சியும் அதிகம். அதனால் தான் எதிர்தரப்பு நடிகர் மீதான மோசமான, கீழ்த்தரமான கிண்டல்களையும்,கேலிகளையும் செய்யும் வேலையில் இரண்டு தரப்பினரும் பரஸ்பரமாக இறங்குகிறார்கள். இவர்கள் நிஜவுலகத்தைப் பற்றி எந்தக் கவலையுமில்லை, தங்களது அன்றாடங்களின் மீது, அதன் போதாமைகளின் மீது, அங்கு சந்திக்கும் தோல்விகளின் மீது அவமானங்களின் மீதெல்லாம் எந்தக் குற்றவுணர்ச்சியும், அசிங்கமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் நிஜவுலகின் பிரச்சினைகளுக்கும் சுரணையற்று இருக்கும் இவர்கள்தான் சமூக வலைதளங்களில் காத்திரமாக கொந்தளிக்கிறார்கள்.
நடிகர்களின் சுயநலம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலுக்கு வருவதற்கான மிக எளிமையான வழியாக சினிமா இருக்கிறது. சினிமா கதாநாயகர்களின் சினிமா வெற்றிகளுக்குப் பின்பான இலக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலி இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கதாநாயகர்களும் ‘அடுத்த முதலமைச்சர் நானே!’ என்ற எண்ணங்களுடன் தான் சினிமாவிலே நடிக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அரசியல் அதிகாரத்தின் மீதிருக்கும் ஆர்வம் அரசியலைப் பழகுவதிலும் இருக்க வேண்டும் தானே? “கொள்கை என்றவுடனே தலை சுத்திடுச்சி” என்ற வகையில் அரசியல் புரிதலை வைத்துக்கொண்டு “போராட்டம் பண்ணி நாடு கெட்டுப் போயிடுச்சி” என ஆளும் சக்திக்கு ஆதரவான நிலைப்பாடுகளை வைத்துக்கொண்டு நேரடியாக முதலமைச்சர் பதவி தான் வேண்டும் என்றால் இவர்களின் போதாமைகளை என்ன சொல்வது? இப்படிப்பட்ட நடிகர்களை முன்மாதிரியாக கொண்டு இளைஞர்கள் வன்முறைகளிலும், வெறுப்பிலும், வன்மங்களிலும் இறங்கும்போது அவர்களுக்கு யார் தெளிவைக் கொடுப்பது?
நடிகர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறை அவர்களின் திரைப்படம் வெளிவரும் போதும் சாலைகளை மறிப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, உயரமான கட் அவுட்டுகளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது என்று மற்றவர்களையும் துன்புறுத்தி, தனக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையெல்லாம் கவனித்து வரும் நடிகர்கள் தங்களக்குள் மெலிதாகப் புன்முறுவல் செய்து கொண்டு ரசித்து வருகிறார்கள். தங்களின் மீது அபிமானமாக இருக்கும் தங்கள் ரசிகர்களின் நல்வாழ்வின் மீதே கவலையில்லாமல் அவர்களைப் பலிகொடுக்கும் இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்?
ஒரு நடிகரை முழுமூச்சாகப் பின் தொடரும், அவரின் மீது பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் எளிய குடும்பத்து இளைஞர்களே!. இன்றைய சூழலில் இப்படிப்பட்ட பின்தங்கிய குடும்பச் சூழலிலிருந்து வரும் இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இளவயதில் இருக்கும் கிளர்ச்சியின், குதூகலத்தின் விளைவாக வெளிப்படுத்திக்கொள்ளும் இந்த ரசிக மனோபாவம் அவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் வீணடித்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களை இந்த மனோபாவத்திலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதைக் குறைந்தபட்சம் அந்த நடிகர்கள் உணரவாவது வேண்டும்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்களுக்காக உருகி உருகிப் பேசும் நடிகர்கள் திரைப்படம் வெளியான பின்பு அதே ரசிகர்கள் லாரியில் இருந்து விழுந்தபோதும் வாய் திறக்காமல் இருப்பது உண்மையில் அவர்களின் சுயநலத்தையே காட்டுகிறது. இப்படி இல்லாமல் தங்களின் திரைப்பட வெளியீடோ அல்லது அது நிமித்தமான வணிக ஏற்பாடுகளோ ஏற்படுத்தும் விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து அதைத் தடுப்பதற்குண்டான செயல்களில் நடிகர்கள் இறங்க வேண்டும். பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களிலும், ஆபத்தான நடவடிக்கைகளிலும் ரசிகர்கள் இறங்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் நடிகர்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து அதைத் தடுப்பதற்குண்டான முயற்சிகளில் நடிகர்கள் இறங்க வேண்டும்.
சினிமா நடிகர்களின் மீதான இளைஞர்களின் இந்த மோகத்தை எப்படி குறைப்பது?
* முதலில் கல்வி என்பது சூழலைப் பொறுத்து மாற வேண்டும். இன்றைய சூழலில் இளைஞர்களும், மாணவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் தனித்துவமானவை, அதற்கான முன்மாதிரிகள் முந்தைய காலங்களில் இல்லை. இந்தக் காலத்தின் புதிய சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை இன்றைய கல்வி முறை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்
பட்ட கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும்.
* இளைஞர்களின் ஆளுமைப் பண்பை வளர்ப்ப
தற்குண்டான, அவர்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கல்லூரிகளில் அரசு ஏற்படுத்த வேண்டும்.
* சமூக வலைதளங்களினால் இளைஞர்கள் பெரும்
பாலும் சமூகத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள்.அவர்களை சமூகத்துடன் பிணைக்கும் புதிய பொறுப்புகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு கிராமத்திலும் கூட தமிழ்நாட்டு அரசியலின் பரிணாமத்தை, அதன் வளர்ச்சியை அதனால் தமிழ்நாடு அடைந்த மேம்பாடுகளை இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும், அதற்காக அவர்களுக்கு ஏதுவான திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.
* இளைஞர்களைக் கவரும் புதிய விளையாட்டு திட்டங்களையும், அதற்கான கட்டுமானங்களையும் தமிழ்நாடு முழுக்க உருவாக்க வேண்டும். மாணவர்
களையும், இளைஞர்களையும் பல்வேறு விளை
யாட்டுகளில் இணைவதை சிறு வயதில் இருந்தே ஊக்கப்படுத்த வேண்டும், அதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
* விளையாட்டு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பண்பாட்டு திருவிழாக்களை, கலை, இலக்கிய விழாக்
களை தமிழ்நாடு முழுமையாக உருவாக்கி அதில் ஏராளமான இளைஞர்களைக் கலந்து கொள்ள வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
* இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும், பல்வேறு துறை
களில் சாதித்த, சமூகத்தின் நலனில் அக்கறையோடு இருக்கக்கூடிய நிகழ்கால ஆளுமைகளை இளைஞர்
களுக்கு அடையாளப்படுத்த வேண்டும்.
* இளைஞர்கள் தங்களது சுய அடையாளத்தைப் பெறுவதையும், அவர்களுக்கென்று தனி கருத்து
கள்,சிந்தனைகள், மதிப்பீடுகள் உருவாவதையும் கல்விமுறை ஊக்கப்படுத்த வேண்டும்.
* பதின் பருவ இளைஞர்களின் பொதுவான குணாதிசயங்களை ஆக்கப்பூர்மாகப் பயன்
படுத்தக்கூடிய திட்டங்களை மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களோடு இணைந்து உருவாக்க வேண்டும்.
* இறுதியாக அவர்களுக்கு வெறுப்புகளற்ற, பாகுபாடு
களற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கித்தர வேண்டும். குறைந்தபட்சம் அதை உருவாக்குவதற்கான முயற்சிகளையாவது வெளிப்படையாக எடுக்க வேண்டும். வெறுப்பும், வன்மமும், வன்முறைகளும் தவறு என்ற சிந்தனையையாவது இந்த சமூகம் அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
நாயகர்களின் பின்னால் நெஞ்சில் வெறுப்புகளையும், வன்மங்களையும் சுமந்து வன்முறையில் இறங்கும் இளைஞர் கூட்டம் நம்மிடம் சொல்வது ஒன்றைத்தான். அவர்கள் இன்னும் அரசியல்படுத்தப்படவில்லை. அவர்களை அரசியல்படுத்தி சமூகத்தோடு பிணைப்பதே அவர்களை இவை போன்ற செயல்களில் இருந்து மீட்பதற்கான ஒரே ஒரு வழி.
அரசியல்படுத்துவது என்றால் அரசியல் பலியாடுகளை உருவாக்குவதல்ல, அரசியல் தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்துவது. அடிமைகளாகவும், உணர்ச்சிவசப்பட்டு வெற்றுக் கூச்சல் போடும் கூட்டங்களாகவும் இருக்கும் இளைஞர்களை சுய சிந்தனை உடையவர்களாகவும், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் மாற்றுவதுதான் அரசியல்படுத்துவது. அந்த அரசியல்படுத்தும் வேலையை திராவிட அரசாங்கம் உடனடியாகத் தொடங்குவது தான் நமது இளைஞர்களை மீட்பதற்காக நாம் மேற்கொள்ளும் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்கும்.

sivabalanela@gmail.com