அவனுக்கு முப்பது வயதிருக்கும். தூக்கமில்லாத கண்கள். கலைந்த தலையும் வெளிறிய உதடுகளும் கொண்டிருந்தான். அரைக்கை சட்டை. அதுவும் சாம்பல் நிறத்தில். அதற்குப் பொருத்தமில்லாது ஊதா நிற பேண்ட் அணிந்திருந்தான். காலில் ரப்பர் செருப்பு. அதன் ஒரங்கள் தேய்ந்து போயிருந்தன. அவனது கையில் ஒரு துணிப்பை. அதற்குள் அரிய பொருள் எதையோ வைத்திருப்பவன் போல மடியில் கவனமாக வைத்திருந்தான்.

தாலுகா அலுவலகத்தில் இப்படியானவர்களை அன்றாடம் காண முடியும் என்பதாலோ என்னவோ அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை. அவன் முகத்தில் கடன் கேட்க நினைப்பவனின் தயக்கம் கூடியிருந்தது. வலதுகாலை அழுத்தி ஒருபக்கமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

மதிய உணவு நேரத்தில் தாலுகா அலுவலகத்தின் இயல்பு மாறிவிடுகிறது. அரசு அலுவலகத்திற்கான விறைப்பு கலைந்து சற்றே பொது நூலகத்தின் சாயல் கொண்டதாகிறது. அந்த நேரத்தில் ஊழியர்கள் புன்னகைக்கிறார்கள். அவர்களுடன் எளிதாக உரையாடலாம். ஒருவேளை அதற்காகத்தான் அவனும் காத்திருந்தானோ என்னவோ.

மேம்பாலம் முடியும் இடத்திலிருந்து வலதுபக்கமாகச் செல்லும் துணைசாலையில் புதிதாக்க் கட்டப்பட்டிருந்தது தாலுகா அலுவலகம். மூன்று மாடிகள் கொண்டது.

தாலுகா அலுவலகம் என்றாலே மனதில் தோன்றும் தூசி படிந்த வேப்பமரமும், அழுக்கடைந்த படிக்கட்டுகளும் பாதி இருள் படிந்த அறைகளும் அங்கே யில்லை. ஆனால் வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும் ஜீப்பும் ஆங்காங்கே விடப்பட்ட பைக்குகளும் பழைய தாலுகா அலுவலகத்தின் மிச்சமாகத் தோன்றின.

பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் லிப்ட் இருப்பதில்லை. இருந்தாலும் வேலை செய்வதில்லை. இந்த அலுவலகத்திலும் பெரிய படிக்கட்டுகள் மட்டுமே இருந்தன. படியேறிச் செல்லும்போது எதிர்படும் சுவரில் அரசு விளம்பரம் ஒன்றைப் பெரிதாக ஒட்டியிருந்தார்கள்.

அலுவலகத்தில் கல்யாண மண்டபங்களில் இருப்பது போன்ற பெரிய ஜன்னல்கள் வைத்திருந்தார்கள். அதிக வெளிச்சத்தை விரும்பாத ஊழியர் ஒருவர் தனது இருக்கையை ஒட்டிய ஜன்னலில் பாதியை மட்டுமே திறந்து வைத்திருந்தார்.

தாலுகா அலுவலகத்தின் உணவுவேளையில் வந்து போகும் சிறுவணிகர்கள் அதிகம். சில்வர் தூக்குவாளியில் சூடாக முறுக்கு கொண்டு வரும் பாக்கியத்தம்மாளும், அதிசரம், சீடைபாக்கெட், விற்கும் முத்துவும், லுங்கி, டவல்கள் விற்க வரும் காசிமும், நைட்டி, காட்டன்புடவைகள் விற்க வரும் கலைவாணிக்கும் அந்த அலுவலக ஊழியர்கள் அன்பான வாடிக்கையாளர்கள்.

தாலுகா ஆபீஸ் இடம்மாறினாலும் அவர்களின் வருகை தடைபடுவதில்லை. அதிலும் சூடான தேங்காய் போளி விற்கும் கேசவன் யார் உள்ளே இருந்தாலும் கவலையின்றி நேரடியாக தாசில்தார் டேபிளில் இரண்டு தேங்காய் போளிகளை துண்டிக்கப்பட்ட நியூஸ் பேப்பரில் வைக்கும் அளவிற்கு சுதந்திரமாக செயல்படுவான்.

பாக்கியத்தமாளுக்கு கனத்த உடம்பு. அதிலும் ஆணி உள்ள கால் என்பதால் மெதுவாகவே படியேறி வருவார். தூக்குவாளியைப் படிக்கட்டில் வைத்து ஏறும் சப்தத்தை வைத்தே அவர் வருவதை அறிந்து கொண்டுவிடுவார்கள். மதிய சாப்பாட்டிற்குப் பின்பு அவரது முறுக்கை கொறித்தால்தான் பலருக்கும் பசியாறும்.  பழைய தாலுகா அலுவலகம் போலின்றி இங்கே குளிர்ந்த தண்ணீர் குடிப்பதற்காக கூலிங் மெஷின் பொருத்தியிருந்தார்கள். அந்த தண்ணீரை காசிம் எப்போதும் தனது பச்சை நிற பாட்டிலில் பிடித்துக் கொண்டுவிடுவார். குளிர்ந்த தண்ணீரைக் குடிக்கும்போது அவரது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அலாதியானது.

இவர்களைத் தவிர எதிரேயுள்ள டீக்கடையிலிருந்து வரும் பையனையும் ஜெராக்ஸ் கடை சுப்பையாவையும் தவிர்த்தால் அந்த அலுவலகத்திற்கு சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் நில உடைமைச் சான்றிதழ் வாங்க வருகிறவர்கள் தான் அதிகம்.

அவர்களின் முகத்தைப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடலாம். பதற்றத்தில் தான் கொண்டுவந்துள்ள சர்டிபிகேட்டுகளை கண்முன்னே நழுவவிடுவார்கள். சிலரால் கேட்ட கேள்விக்குப் பதில் பேசமுடியாது. ஒரே அளவில் மரமேஜைகள் இருந்தாலும் மனுவைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரியின் முன்னுள்ள மேஜை மட்டும் மிகப்பெரியதாக அவர்களுக்குத் தோன்றும். சுவரில் தொங்கும் தலைவர்களின் புகைப்படங்களில் கூட புன்னகையைக் காண முடியாது.

மதிய உணவு நேரம் முடிந்தாலும் உடனே பலரும் இருக்கைக்கு திரும்பிவிடுவதில்லை. சிலர் புகை பிடிப்பதற்காக படிகளில் கீழே இறங்கி போவதுண்டு. அப்படிக் கீழே இறங்கிய ராகவன்தான் அந்த மனிதனைக் கவனித்தான்.

“என்ன வேணும்’’. என்று போகிற போக்கிலே கேட்டான்.

“அது வந்து சார்.. நானு’’. என்று தயக்கத்துடன் அந்த ஆள் சொன்னதைக் கேட்ட ராகவன் “உள்ளே போயி பாருங்க’’ என்றபடியே கீழே நடந்தான்.

மதிய உணவை முடித்துவிட்டு சிலர் இருக்கைக்குத் திரும்பியிருந்தார்கள். ஜெயந்தி கழுவிய டிபன்
பாக்ஸை ஜன்னல் ஓரம் வைத்துக் கொண்டிருந்தாள். அந்த ஆள் சபாபதி மேஜையின் முன்பாக நின்றபடியே “சார்’’ என்று அழைத்தான்

பல்குத்துவதற்காக குண்டூசியைத் தேடிக் கொண்டிருந்த சபாபதி அவன் ஏதோ தின்பண்டம் விற்க வந்தவன் என நினைத்துக் கொண்டு “என்ன கொண்டு வந்துருக்கே?’’ என்று கேட்டார்.

அவன் தனது பையிலிருந்து பழைய புகைப்படம் ஒன்றை வெளியே எடுத்து அவர் முன்பாகக் காட்டியபடியே சொன்னான்.

“முகமது அலி போட்டோ சார்.’’

புரியாமல் திகைத்துப் போன சபாபதி கேட்டார்:

“என்னப்பா இது?’’

“முகமது அலி சார். வேல்டு பேமஸ் பாக்சர். பக்கத்துல நிக்குறது எங்க அப்பா.. கீழே முகமது அலி கையெழுத்து இருக்கு. பாருங்க.’’

“சரிப்பா. அதை ஏன்கிட்ட ஏன் காட்டுறே’’ என சபாபதி புரியாமல் கேட்டார்.

“முகமது அலி மெட்ராஸ் வந்திருக்கப்போ எடுத்த போட்டோ.’’

“அதெல்லாம் இருக்கட்டும். ஏதாவது மனு குடுக்க வந்தியா?’’ எனக்கேட்டார் சபாபதி.

“முகமது அலியோட கையெழுத்தை விக்க வந்துருக்கேன் சார்’’ என்று தயக்கத்துடன் சொன்னான்.

சபாபதிக்கு அவன் கேட்டது புரியவில்லை.

“கையெழுத்தை விக்குறதா.. இதை வாங்கி என்ன செய்றது?’’ என்று நக்கலாகக் கேட்டார்.

அவன் தலைகவிழ்ந்தபடியே சொன்னான்:

“ரொம்ப மதிப்பான கையெழுத்து சார்.. வீட்டு கஷ்டம் அதான் விக்கலாம்னு வந்துருக்கேன்.

சபாபதி பொழுது போவதற்கு சரியான ஆள் கிடைத்துவிட்டான் என்பது போல நமட்டு சிரிப்போடு “நமக்கு பாக்சிங் எல்லாம் ஒத்துவராது.. அந்தா.. கார்னர் சீட்ல இருக்கான் பாரு சேகர். அவன்கிட்ட காட்டு’’ என்றார்.

சேகர் அந்த அலுவலகத்தில் யாருக்குக் கடன் தேவை என்றாலும் வாங்கித் தருவான். யாரிடமிருந்து பணம் வாங்குகிறான் என்று தெரியாது. ஆனால் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் எடுத்துக் கொள்வான். அவனிடம் பலரும் அவசரத்திற்குக் கடன் வாங்கியிருக்கிறார்கள். சம்பள நாளில் கொடுத்த கடனைக் கறாராக வசூல் செய்துவிடுவான்.

சேகர் முன்பாகப் போய் நின்ற ஆள் பழைய புகைப்படத்தை நீட்டினான்.

நிமிர்ந்து அதைப் பார்த்த சேகர் ஏதோ யோசனையோடு கேட்டான்.

“டெத் சர்டிபிகேட் வேணுமா?’’

“இல்லை சார்.. இவர் முகமது அலி’’ என்றான்.

“முகமது அலின்னா’’ என்று புரியாமல் கேட்டான் சேகர்.

“பேமஸான குத்துச் சண்டை சேம்
பியன். 1980இல் மெட்ராஸ் வந்துருந்தார்.. அப்போ எம்ஜிஆர் முன்னாடி ஜிம்மி எல்லிஸோடு பாக்சிங் மேட்ச் நடந்துச்சி. எங்கப்பா அந்தக் காலத்தில பெரிய பாக்சர்.. அவருக்கு பாக்சிங்ல ஒத்த கண்ணு போயிருச்சி. ஆனாலும் சூப்பரா பாக்சிங் பண்ணுவார். முகமது அலியே எங்கப்பாவைப் பாராட்டியிருக்கார்.. இது அவரோட எடுத்த போட்டோ.. கன்னிமாரா ஹோட்டல்ல முகமது அலி தங்கி இருந்தாரு.. அவரைப் பார்க்க ஒரே ஜனத்திரள். இந்த போட்டோல கையெழுத்து வாங்க எங்கப்பா நின்னுக்கிட்டு இருக்கிறதைப் பாத்து முகமது அலி ரூமுக்குள்ளே கூட்டிக்கிட்டு போயி கையெழுத்து போட்டு குடுத்துருக்காரு.. எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்’’ எனக் கதை போல சொல்லிக் கொண்டிருந்தான்.

“இப்போ உனக்கு என்ன வேணும், அதை மட்டும் சொல்லு’’ என்றான் சேகர்.

“முகமது அலி கையெழுத்தை வாங்கிக்கோங்க சார் . ஐநூறு ரூபாய் குடுத்தா போதும்’’ என்று சொன்னான்.

இதை சேகர் எதிர்பார்க்கவில்லை.

“இதை வச்சி நான் நாக்கு வழிக்கிறதா?’’ என்று கோபமாகக் கேட்டான்

“அப்படி சொல்லாதீங்க சார். முகமது அலி கையெழுத்துக்கு மதிப்பு இருக்கு.’’

“நம்ம ஆபீஸ்ல எத்தனை பேருக்கு இந்த முகமது அலி யாருனு தெரியுதுனு இப்போ பாத்துருவோம்.’’ என ஏதோ சவாலை முன்னெடுப்பவன் போல அவனிடமிருந்த போட்டோவைப் பிடுங்கிக் கொண்டு அனைவரையும் தன் முன்னால் அழைத்தான்.

சேகர் கேலியான குரலில் சொன்னான்.

“இந்த போட்டோவுல இருக்கிறது யாருனு கரெக்டா சொல்லிட்டா.. நூறு ரூபாய் தர்றேன்.’’

“நடிகரா?’’ என ஒரு பெண் கேட்டார்.

“இவரை மாதிரி எங்க தெருவுல ஒரு டெய்லர் இருக்கார். காது அப்படியே அவரைப் பாக்குற மாதிரி இருக்கு’’ என்றாள் ஜெயந்தி.

“இவரு புட்பால் சேம்பியன் தானே?’’ என கேட்டான் மணி.

ரங்காசாரி மட்டும் கரெக்டாக சொன்னார்.

“இது முகமது அலி. பாக்சிங்ல வேல்டு ஹெவிவெயிட் சேம்பியன். ஒரிஜினல் பேரு காஸ்சியுஸ் கிளே.. பின்னாடி முகமது அலினு பேரை மாத்திகிட்டான்.’’

“கரெக்ட் சார்.. அவரோட கையெழுத்து இது.. நீங்களாச்சும் வாங்கிக்கோங்க’’ என்றான் அந்த மனிதன்.

“வொய்ப்போட பாக்சிங் போடவே எனக்கு நேரம் பத்தலை. இதை வாங்கிட்டுப் போயி என்ன செய்றது. ஏதாவது பாரீன் ஸ்டாம்ப்னா கூட என் மகளுக்குக் குடுக்கலாம்’’ என கேலியாக சொன்னார் ரங்காசாரி

“அப்படி சொல்லாதீங்க சார்.. எங்கப்பா படத்தை வேணும்னா கட் பண்ணிட்டு தர்றேன். ஐநூறு ரூபா குடுங்க’’ என அவன் மன்றாடினான்.

“ஒரு கையெழுத்துக்கு ஐநூறு ரூபா ரொம்ப ஜாஸ்தி’’ என்றார் ரங்காசாரி .

“நீங்களும் அப்படி கேட்குறவங்க தானே’’ என சொல்ல நினைத்து மனதிற்குள் அதை விழுங்கி விட்டு “எங்கப்பா இருந்தா இதை விக்க விடமாட்டார் சார்’’ என்றான்.

“நீ விக்க வந்தது தப்பில்லை. தாலுகா ஆபீஸுக்கு ஏன்பா கொண்டு வந்தே’’ என்று கேலியான குரலில் கேட்டார் ரங்காசாரி.

“நீங்க எல்லாம் படிச்சவங்க. இதோட மதிப்பு தெரியும்னு நினைச்சேன்’’ எனச் சொன்னான்.

“முகமது அலி கையெழுத்து இல்லே, முகமது அலியோ வந்தாலும் இங்க ஒரு மதிப்பும் கிடையாது பாத்துக்கோ’’ என்று ஜோக் அடித்தவர் போல தானாகச் சிரித்தார் ரங்காசாரி.

இதற்குள் படியில் யாரோ ஏறிவரும் சப்தம் கேட்டு ப்யூன் முனுசாமி தாசில்தார் வந்துட்டார் என்று அறிவித்தார்

சபாரி சூட் அணிந்திருந்த தாசில்தார் ரத்தினசாமி தனது இருக்கைக்குப் போகையில் அந்த மனிதன் அலுவலகத்தினுள் நிற்பதைக் கவனித்திருக்க கூடும். இருக்கையில் அமர்ந்தவுடன் பெல்லை அடித்தார்.

ப்யூன் முனுசாமி வேகமாக உள்ளே சென்றார்.

“வெளியே யாரோ நிக்குறாங்களே.. சென்ட் விக்குற ஆளா… அப்படி யாரையும் உள்ளே வரவிடக்கூடாதுனு சொன்னனே’’ என்று கோபமாகச் சொன்னார்

“சென்ட் விக்கிற ஆள் இல்லே சார். இது ஏதோ போட்டோ விக்க வந்துருக்கார்’’ என்றார் முனுசாமி.

“அந்த ஆளை உள்ளே கூப்பிடு’’ என கோபமாகச் சொன்னார் தாசில்தார்.

செய்வதறியாமல் நின்ற அந்த மனிதனை ப்யூன் தாசில்தார் கூப்பிடுவதாக அழைத்தார்.

மெதுவாக நடந்து தாசில்தார் அறைக்குள் சென்றான். அவர் கடுகடுப்பான முகத்துடன் கேட்டார்.

“இது என்ன சந்தைக் கடையா.. கண்ட ஆட்களும் உள்ளே வந்து பொருள் விக்குறதுக்கு. நீ யாரு.. எதுக்கு வந்துருக்கே?’’

அவரது கோபத்தைக் கண்டு பயந்து போன அந்த மனிதன் தயங்கித் தயங்கிச் சொன்னான்

“முகமது அலி கையெழுத்து.. போட்டோ.’’

“எஸ் ஒன்னை வரச்சொல்லு’’ என்று கோபமாக சொன்னார் தாசில்தார்.

சபாபதி உள்ளே சென்றார்.

“இது கவர்மெண்ட் ஆபீஸா இல்லே.. பொருட் காட்சியா.. இந்த ஆளை எப்படி உள்ளே விட்டீங்க..?’’

“மனு கொடுக்கவந்தவருனு நினைச்சிட்டோம் ஆனா.. இவன் ஏதோ போட்டோவை வச்சிக்கிட்டு கதை விடுறான்.’’

“இதை இப்படி விடக்கூடாது. நீ போலீஸுக்கு போன் பண்ணு. ஒரு ஆளை பிடிச்சி குடுத்தா அடுத்தவன் வர பயப்படுவான்’’ என்று சப்தமாகச் சொன்னார்.

அந்த மனிதன் கலக்கமான முகத்துடன் “சாரி சார். நான் கிளம்புறேன்’’ என வெளியே நடக்க திரும்
பினான்.

“கையில என்ன வச்சிருக்கே. காட்டு’’ என்று தாசில் தார் அதே கோபத்துடன் கேட்டார்.

முகமது அலியும் அவனது அப்பாவும் உள்ள போட்டோவை காட்டினான்.

“டொனேஷன் கேட்டு வந்தியா’’ எனக் கேட்டார் தாசில்தார்.

“இல்லை சார். முகமது அலி கையெழுத்தை விக்க வந்தேன்’’ என்று அவன் மெதுவான குரலில சொன்னான்.

“அதுக்கு வேற இடம் கிடைக்கலையா’’ என அந்த போட்டோவை அலட்சியமாக மேஜை மீது போட்டார்.

“பரவாயில்லை சார். போட்டோவைக் குடுங்க நான் கிளம்புறேன்’’ என்றான்.

இதற்குள் அந்த அறைக்குள் வந்த ரங்கசாரி சரளமான ஆங்கிலத்தில் முகமது அலியைப் பற்றி சொன்னார். பாதி புரிந்தும் புரியாமல் தாசில்தார் கேட்டார்.

“இத யாரு வாங்குவா.. சாரி?’’

“இதுக்குனு கலெக்டர்ஸ் இருக்காங்க சார்.. ஐந்தாயிரம் பத்தாயிரம் போகும்.’’

“அப்படியா சொல்றீங்க..!’’

“வீட்ல கஷ்டமான சூழ்நிலை. அதான் விக்க வந்தேன்’’ என்று மறுபடியும் சொன்னான் அந்த மனிதன்.

“இதை வாங்கி நான் என்ன செய்றது.. நம்ம போட்டோவை மாட்டவே வீட்ல இடம் இல்லை’’ என்று தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார் தாசில்தார்.

இதற்குள் சேகர் அறைக்குள் வந்து சொன்னான்.

“இது எல்லாம் புதுமாதிரி பிராடு சார். நெட்ல இருந்து போட்டோவை எடுத்து பிரிண்ட் போட்டு கிளம்பி வந்துருறாங்க.’’

“இல்லை.. சார். இது எங்க அப்பாதான்.’’

“அதுக்கு ஏதாவது சர்டிபிகேட் வச்சிருக்கியா?’’ என்று கேட்டான் சேகர்

“நான் ஏன் சார் உங்களை ஏமாத்துறேன்’’ என்று பரிதாபமாகக் கேட்டான் அந்த மனிதன்.

“சேகர் சொல்றது கரெக்ட். இந்தக் காலத்துல யாரையும் ஆளை பாத்து நம்ப முடியாது. நாம தான் கவனமா இருந்துக்கிடணும்’’ என்றார் ரங்காசாரி.

“இந்த ஆளைத் துரத்திவிட்டுட்டு வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லைனு ஒரு போர்ட் மாட்டிவையுங்க’’ என்றார் தாசில்தார்.

அவரது மேஜையில் கிடந்த போட்டோவை எடுத்து தனது பைக்குள் வைத்துக் கொண்டு அந்த மனிதன் படியிறங்கி நடந்தான்.

ஏதோ சான்றிதழ் வாங்க காத்திருந்த கிழவர் “தாசில்தார் வந்துட்டாரா’’ என்று அவனிடம் கேட்டார்.

“இருக்கார்’’ என்றபடியே வெளியே நடந்தான்.

மணி மூன்றைக் கடந்திருந்தது. பசியில் காது அடைத்தது. கண்களில் பூச்சி பறக்க மயக்கம் வருவது போலிருந்தது. உக்கிரமான வெயிலில் சாலை சூடேறியிருந்தது. மரங்களில் அசைவேயில்லை.

அவன் தனது வீட்டிற்குப் போவதற்காக புறநகர் பேருந்தைப் பிடிக்க பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

திடீரென அவனது கையிலிருந்த பை கனப்பது போலாகியது. யாரோ சிரிக்கும் சப்தம் போல கேட்டது.

சிரிப்பது முகமது அலி தானா!

அவன் கைகள் கனம் தாங்காமல் கீழே இழுப்பது போல தோன்றியது.

புகைப்படத்தை வெளியே எடுத்து பார்த்தான். முகமது அலியின் பக்கத்தில் நின்றிருந்த அப்பாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அபூர்வமாகத் தோன்றியது.

இதை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு போய் என்ன செய்வது என்ற கேள்வி மனதில் எழுந்தது.

சாலையோர புளியமரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் டின் ஒன்றில் தார் கசிந்து ஒழுகிக் கொண்டிருந்தது. தனது பையிலிருந்த போட்டோவை வெளியே எடுத்து அந்த தாரில் ஒட்ட வைத்தான். தார் டின்னில் ஒட்டிய போட்டோவிலிருந்தபடி முகமது அலி கானல் ததும்பும் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தனது கோபத்தைக் காட்டுவது போல காலில் போட்டிருந்த செருப்பை உதறிவிட்டு வெறும் காலோடு விடுவிடுவென தனது வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். விநோத மிருகம் ஒன்றின் நாக்கைப் போல சாலை நீண்டு கிடந்தது.

writerramki@gmail.com