30 செப்டம்பர் 2022 அன்று கல்லூரிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அன்று வெள்ளிக்கிழமை. அவ்வாரத் திங்கள்கிழமையன்றுதான் உறுதியான தகவல் தெரிந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டம் இருந்தது.   ‘கல்லூரி முதல்வராக நான் பங்கேற்கும் கடைசி வழிபாட்டுக் கூட்டம் இது’ என்று தொடங்கிச் செய்தியை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவித்துச் சிறிது நேரம் உரையாற்றினேன். இன்னும் ஓரிரு மாதம் இருப்பேன் என்று  நினைத்திருந்தனர். இன்றிலிருந்து நான்காவது நாள் ஓய்வு என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. உடனே ஒவ்வொரு துறையிலும் எனக்கு விடை கொடுக்கும் விதத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்று சொல்லி அழைத்துக் கொண்டேயிருந்தனர். செவ்வாய் அன்றே மூன்று நான்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அடுத்தடுத்த நாளும் நிகழ்ச்சி அழைப்புகள். ஒவ்வொன்றுக்கும் நேரம் பார்த்து முடிந்தவரை ஒதுக்கினேன்.

புதன் காலை மாணவர் கூட்டம் ஒன்று முதல்வர் அறை நோக்கி வந்தது. ‘ஆசிரியர்கள் அழைத்தால்தான் செல்வீர்களா? மாணவர்கள் அழைத்தால் வர மாட்டீர்களா?’ என்று முன்னால் வந்த மாணவர் ஒருவர் கேட்டார். ‘அப்படியா? மாணவர்கள் யாரும் அழைத்து நான் வர மாட்டேன் என்று சொல்லவில்லையே?’ என்றேன். ‘சரி. நாங்கள் அழைக்கிறோம். எங்களுக்கும் நேரம் கொடுங்கள்’ என்றார் ஒருவர். ‘மாணவர்களுக்குத்தான் வழிபாட்டுக் கூட்டத்தில் பேசிவிட்டேனே, போதாதா?’ என்றேன். ‘மாணவர்கள் உங்களோடு பேச  விரும்புகிறார்கள். ஒரு கலந்துரையாடல்’ என்றார் அவர். ‘அப்படியா? சரி, பேசலாமே’ என்றேன்.  மறுநாள் காலை  பத்து மணி தொடங்கி பதினொன்று வரைக்கும் ஒருமணி நேரம் ஒதுக்கினேன். கல்லூரி தொடங்கும் நேரமான ஒன்பதரை மணிக்குக் கௌரவ விரிவுரையாளர்களைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்திருந்தேன். அதனால்  ‘நேரம் முக்கியம். எனக்குப் பல நிகழ்ச்சிகள் இருக்கின்றன’ என்று மாணவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்தேன்.

கல்லூரி அரங்கில் அதிகபட்சமாக முந்நூறு பேர் மட்டுமே அமர முடியும். அதற்கேற்ற வகையில் ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன். வரும் மாணவர்களுக்கு வடையும் தேநீரும் என் செலவு என்று சொல்லி அந்தப் பொறுப்பையும் அவர்களிடமே கொடுத்தேன். தேசிய மாணவர் படை மாணவர்கள் சிலர் நிகழ்ச்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தயக்கத்தோடு ஒருவர் சொன்னார், ‘ஆசிரியர்கள் யாரையும் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் ஐயா.’ சிரித்துக்கொண்டே ‘நிகழ்ச்சி உங்களுடையது. நீங்கள் விரும்பியவர்களை அழையுங்கள். நான் உங்கள் விருந்தினராக வருகிறேன்’ என்றேன். மகிழ்ச்சியோடு சென்றார்கள்.

பொறுப்பை எடுத்துக்கொண்டால் மாணவர்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி விடுவார்கள் என்பது என் நம்பிக்கை. பொதுவாக ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் பொறுப்பாசிரியராக ஒருவரையோ சிலரையோ அமர்த்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு அப்படியில்லை. எல்லாமே மாணவர்கள்தான். தொடர் நிகழ்ச்சிகளிலும்  கடைசிக்கட்டப் பணிகளிலும் அன்றைய நாள் ஓடிவிட்டது. ஓய்ந்திருந்த மாலை வேளையில் மாணவர்கள் வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று கேட்டுக் கல்லூரி முதல்வரோடு உரையாட ஆர்வமுள்ள மாணவர்கள் பட்டியல் தயார் செய்திருந்தனர். காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் அரங்குக்கு வந்துவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அரங்குக்குள் நுழையும்போதே எல்லோருக்கும் தேநீர் வழங்கப்படும். வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, நன்றியுரை உள்ளிட்ட சடங்குகள் ஏதுமில்லை. கால் மணி நேரம் தொடக்கவுரையாக என் பேச்சு. தொடர்ந்து மாணவர்கள் கேள்வி கேட்பர், நான் பதில் சொல்ல வேண்டும். ஒலிவாங்கி, மேடையமைப்பு எல்லாம் தயார். இத்தனை தெளிவுடன் ஏற்பாடு நடந்திருந்தது. மகிழ்ச்சி, காலையில் பார்க்கலாம் என்று அனுப்பி வைத்தேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று சில ஆசிரிய நண்பர்களிடம் சொன்னேன். ‘ஆசிரியர்கள் யாருமில்லீயா? பசங்க ஏதாச்சும் கலாட்டாப் பண்ணீரப் போறாங்க’ என்றனர். கலாட்டா செய்பவர்கள் மாணவர்கள்; கட்டுப்படுத்துவர்கள் ஆசிரியர்கள். சட்டம் ஒழுங்கைக் கையிலெடுத்துக் கொள்ளும் கலாச்சாரக் காவலர்கள் அல்லவா? அவர்களின் கவலையைப் போக்க ‘நிலைமை கட்டுக்கடங்காமல் போனால் உங்களை அழைக்கிறேன்’ என்று சொன்னேன். ஆசிரியர்களைத் தவிர்த்துவிட்டு மாணவர்கள் மட்டும் இருந்து அப்படி என்ன கேட்கப் போகிறார்கள் என்னும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது. எனக்குமே. ஆர்வமுள்ள மாணவர்கள்; ஆசிரியர்கள் அற்ற கூட்டம். கிட்டத்தட்ட முப்பதாண்டுக் கல்லூரி வாழ்வில் சந்திக்காத புதுமை.

மறுநாள் ஒன்பது இருபது மணிக்கு என் அறைக்கு வடையும் தேநீரும் வந்து சேர்ந்தன. கொடுத்த மாணவர் ‘ஐயா, எல்லாம் தயார். நீங்கள் சொன்னால் அரங்குக்குப் போலாங்கய்யா’ என்றார். நீங்கள் சொன்னபடி நேரத்தைப் பின்பற்றுகிறோம் என்பதை இதைவிட நயமாகச் சொல்ல முடியுமா? அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தேன். கௌரவ விரிவுரையாளர் நிகழ்ச்சியை உரிய நேரத்தில் முடித்துக்கொண்டு மாணவர் அரங்குக்குச் சென்றேன். தேசிய மாணவர் படை மாணவர்கள் நாற்புறமும் சூழ்ந்து வீரநடை போட்டனர். ‘வேண்டாம்’ என்றால் கேட்க மாட்டார்கள். ‘இது எங்கள் சம்பிரதாயம்’ என்பார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். முந்நூறு பேரில் கிட்டத்தட்ட எண்பது பேர் மாணவியர்.  மேடையில் நான் மட்டும். கீழிருந்து சிறுஅறிவிப்போடு நிகழ்ச்சி தொடங்கியது. ‘மாணவர்களை மையப்படுத்திய வகுப்பறை’ குறித்தும் கேள்விகள் கேட்பது பற்றியும் கால்மணி நேரம் பேசினேன். பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.

முதலில் ஒரு மாணவர் தொடங்கினார், ‘ஐயா, ஒரு வேலையைச் செய்யும்போது எனக்குப் பலவிதமான குழப்பம் வருது. மனப் பிரச்சினையாவே இருக்குது. இந்த வயசுல இப்படியெல்லாம் வருங்களா? என்னங்கய்யா செய்யறது?’ முதல் கேள்வி இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கொரோனா முடக்கக் காலம் இரண்டு கல்வியாண்டுகளைக் காலி செய்துவிட்டது. முடிந்து கல்லூரிக்கு மாணவர்கள் வந்ததும் பல்வேறு பிரச்சினைகள். அம்மாணவர்களைப் பரிவோடு அணுகும்படி ஆசிரியர்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். அப்புறம் பார்த்தால் ஆசிரியர்களுக்கும் கலந்தாலோசனை தேவை எனப் பட்டது. மனநல மருத்துவர் ஒருவரை வர வைத்து ஆசிரியர்களுக்கு உரையாற்றச் செய்தோம். ‘எங்களுக்கு எதற்கு மனநல மருத்துவர்?’ என்று ஆசிரியர்கள் கேட்டனர். ஆசிரியர்களிடம் ஒன்றை ஏற்றுக்கொள்ளச் செய்வது சாதாரணமல்ல. எல்லா வயதினருக்கும் மனநல ஆலோசனை தேவை. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றபடி மனப்பிரச்சினை வரத்தான் செய்யும். வாராவாரம் மனநல மருத்துவர் ஒருவரை வர வைத்தோ சில ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தோ மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றொரு திட்டம் எனக்கிருந்தது. அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. இதையெல்லாம் இணைத்து அம்மாணவருக்கு ஒருவாறு பதில் சொன்னேன்.

‘சமூக உணர்வுங்கறது என்னங்கய்யா? அது எல்லோருக்கும் இருக்கணுமா?’ என்று மாணவி ஒருவர் கேட்டார். கல்லூரிச் சூழலையே உதாரணமாக்கி அங்கே நாம் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளைப் பற்றிய உணர்வைச் சொல்லி அவருக்கு விளக்கினேன். ‘குப்பையை உரிய இடத்தில் போடுவது, உண்ட உணவுக் கழிவுகளை மறக்காமல் எடுப்பது, நட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என அன்றாட நடைமுறைகளில் கவனம் கொள்வதே சமூக உணர்வுதான்’ என்றேன். ‘நம்மைப் பற்றி மட்டும் யோசிக்காமல் மற்றவரைப் பற்றியும் யோசிப்பதுதான் சமூக உணர்வு’ என்று சொன்னேன். ‘உங்களுடைய மாணவர்களில் சிறந்த மாணவர் என்று யாரைச் சொல்வீர்கள்?’, ‘உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார்?’ என்பதான வினாக்கள் வந்தன.

‘நம்ம கல்லூரியைப் பற்றி வெளியில் நல்ல பெயர் இல்லையே. கரட்டுக் காலேஜ் என்கிறார்கள். அரசு கல்லூரி என்றாலே இழிவாகப் பார்க்கிறார்களே, ஏன் ஐயா?’ என்பது ஒரு மாணவியின் கேள்வி. நாமக்கல் கல்லூரியைக் ‘கரட்டுக் காலேஜ்’ என்றே மக்கள் குறிப்பிடுவார்கள். அது ஒரு அடையாளம். அருகில் ‘சந்நியாசி கரடு’ இருக்கிறது. அது வரலாற்றுத் தொன்மை வாய்ந்தது. சமணப் படுகைகள் உள்ளன; பாழியும் உண்டு. அதைப் பற்றித் தெரியாமல் எல்லோரும் ‘கரட்டுக் காலேஜ்’ என்றால் இழிவு என்றே கருதுவார்கள். வரலாற்றைச் சொன்னேன். இங்கிருந்து கற்று மிகச் சிறப்பான பணிகளில் இருப்பவர்கள், கல்லூரியில் உள்ள வசதிகள் ஆகியவற்றை ஆதாரங்களோடு சொல்லிக் கல்லூரியை நாம் உயர்வாக நினைக்க வேண்டும் என்றேன். இது இருபாலர் கல்லூரி; நாமக்கல்லில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் வெளியில் ஒரு கிராமத்தில் இருக்கிறது. கல்லூரி மாணவர்களாகிய ஆணும் பெண்ணும் சேர்ந்து செல்வதையும் பேசிச் சிரித்துக்கொண்டு போவதையும் ஏற்றுக்கொள்ள இயலாத மனோபாவம் கொண்டவர்கள் மக்கள். இந்தக் காரணங்களை எல்லாம் சொல்லி ‘நம் கல்லூரி நல்ல கல்லூரி. கரடு என்பது நம் அடையாளம். அதைக் குறிப்பிட்டுச் சொல்வதில் தவறில்லை. தவறாகச் சொல்பவர்கள் அறியாதவர்கள்; மன்னித்துவிடலாம்’ என்றேன்.

அடுத்தடுத்துக் கேள்விகள் வந்த வண்ணமிருந்தன. ‘மாதொருபாகன் பிரச்சினை ஏற்பட்ட போது உங்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த சக ஆசிரியர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?’ என்றொரு மாணவர் கேட்டார். எழுத்தாளர்களின் எதிர்வினை, கட்சிகளின் எதிர்வினை பற்றியெல்லாம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் உடனிருப்போர் எதிர்வினை பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர் ஒருவரிடமிருந்து கேள்வி. நெகிழ்ந்து போனேன். அம்மாணவர் மாதொருபாகன் பிரச்சினை பற்றியெல்லாம் தேடி அறிந்து வந்திருக்கிறார். அதில் அவர் யோசிக்கும் கோணம் வியப்பானது. மாதொருபாகன் பிரச்சினையின்போது சக ஆசிரியர்கள் பலவிதமாக நடந்துகொண்டார்கள். உண்மையில் சக ஆசிரியர்கள் ஆதரவு காட்டியிருந்தால் நான் ஊரை விட்டு வெளியேறியிருக்க நேர்ந்திருக்காது. ஆதரவு காட்டியவர்களும் இருந்தார்கள். விரிவாக விளக்காமல் மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் சிலவற்றை மட்டும் சொன்னேன். மாதொருபாகன் பிரச்சினையின் பரிமாணங்களைப் பேச இன்னும் தயக்கமாகவே இருக்கிறது. அது தெரியாதவாறு சமாளித்து மாணவர்களுக்குப் பதில் சொன்னேன்.

கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் சிமிட்டி அட்டை போட்ட பழைய வகுப்பறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மின்விசிறிகள் குறைவு; அவற்றிலும் சில ஓடுவதில்லை. இதைக் குறித்து ‘முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்?’ என்றொரு கேள்வி. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கல்லூரியின் மொத்த மாணவர் எண்ணிக்கையே அறுநூறுதான். இப்போது ஐந்து மடங்கு கூடி மூவாயிரம் ஆகியிருக்கிறது. அப்போது சில துறைகளின் எல்லா வகுப்புகளுமே சிமிட்டி அட்டை போட்ட வகுப்பறைகளில்தான் நடைபெறும். மின்னிணைப்பு கிடையாது. இன்று பல கட்டிடங்கள் வந்துவிட்டன. முதலாண்டு மாணவர்கள் மட்டுமே அந்த வகுப்பறைகளில் உள்ளார்கள். புதிதாகச் சில கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முதலாண்டு மாணவர்களுக்கும் நல்ல வசதியான வகுப்பறைகள் கிடைத்துவிடும். தனியார் கல்லூரி வகுப்பறைகளில் ஆசிரியர் இருப்பிடத்திற்கு நேராக மட்டும் மின்விசிறி இருக்கும். மாணவர்களுக்கு மின்விசிறி இருக்காது. அரசு கல்லூரியில் மாணவர்களுக்கும் மின்விசிறி இருக்கும். இதுதான் தனியாருக்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடு. அரசு என்பது எல்லோரையும் உள்ளடக்கியது. தனியார் என்பது சுயலாபத்தையே மையமிட்டது. அரசிடம் நாம் கேட்டுப் பெற முடியும். தனியாரிடம் அவர்கள் கொடுப்பதை மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் அம்மாணவருக்குப் பதில் சொன்னேன்.

அரசு நிறுவனங்களில் கட்டணம் இல்லை. சுதந்திரம் இருக்கிறது. இவ்வளவு இருந்தாலும் அரசு நிறுவனங்களை மோசம் என்று சொல்லும் பார்வை எப்படி வருகிறது? இதை உருவாக்குவோர் யார்? பரப்புவோர் எவர்? நாமும் இந்தக் கருத்துக்கு ஆளாவது எதனால்? சொந்தமாகச் சிந்திக்க வேண்டாமா? என்றபடி மாணவர்களிடம் நான் கேள்வி கேட்டு முடித்தேன். இப்படியே மாணவர்கள் மாறிமாறிக் கேட்டுக் கொண்டேயிருந்தனர். கேள்விகள் முடிவனவாக இல்லை. ஒருமணி நேரத்தைக் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அடுத்துத் துறைத்தலைவர்கள் எல்லோரும் பங்கேற்கும் ஆட்சிக்குழுக் கூட்டம் இருந்தது. மாணவர் அரங்கில் என்ன நடக்கிறது என்பதை அறிய அரங்கின் முற்றத்தில் சில தலைகள் தென்பட்டன. மாணவர்களின் கேள்விகள் என் உற்சாகத்தை அதிகரித்தன. என்னாலும் முடிக்க இயலவில்லை. சரி, எப்படியாவது முடித்துத்தானே ஆக வேண்டும்? கடைசியாக ஒரு கேள்வி என்று அறிவித்தேன்.

கணினி அறிவியல் படிக்கும் மாணவர் ஒருவர் தயக்கத்துடன் எழுந்தார். அவர் முகத்தில் சிரிப்பும் வெட்கமும் இருந்தன. வார்த்தை வரவில்லை. ‘என்னப்பா, கேளு’ என்றேன். என் தூண்டுதலால் உந்தப் பெற்றுத் ‘தப்பா இருந்தா மன்னிச்சுருங்கய்யா’ என்றார். ‘எந்தக் கேள்வியும் தப்புக் கெடையாதுப்பா. எதுவாக இருந்தாலும் கேட்பது நல்லது. எனக்குத் தெரிஞ்சதச் சொல்றன், கேளு’ என்றேன். அவர் கேட்டார், ‘காதல்னு சொன்னாலே பெற்றோரும் திட்டறாங்க, ஆசிரியர்களும் திட்டறாங்க. காதலிக்கறது தப்பாங்கய்யா?’ அரங்கில் பெருத்த சலசலப்பு. அந்த மாணவர் சட்டென்று உட்கார்ந்து கொண்டார். ‘இந்தக் கேள்வியில என்ன தப்பு இருக்குது? ரொம்பச் சரியான கேள்வி இது. இப்படி ஒரு கேள்வியக் கேட்ட இந்த மாணவருக்குக் கைத்தட்டல் கொடுங்கப்பா’ என்றேன். அம்மாணவர் எழுந்து நின்று அரங்கைப் பார்த்தார். கைத்தட்டல் அதிர்ந்தது. என் பதிலை நேரடியாகத் தொடங்கினேன். என்ன சொல்லப் போகிறேன் என்று கேட்க அரங்கம் அமைதி காத்தது. ‘காதலிக்கறது தப்பில்ல. காதல் என்பது மனிதருக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் உரிய அடிப்படை உணர்வு. அதைத் தப்புன்னு யார் சொல்ல முடியும்? அது தப்புன்னா உலகம் எப்படி இயங்கும்?’ என்றேன்.

சிறுஇடைவெளி விட்டு ‘நான் காதல் திருமணம் செய்து கொண்டவன்’ என்றதும் அமைதி குலைந்தது. அவர்களில் ஒருவனாக நானாகிவிட்டேன். மாணவர்கள் முகத்தில் சிரிப்பைக் கண்டேன்; ஆரவாரத்தைக் கேட்டேன். ‘என்னுடையது காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி மறுப்புத் திருமணமும்கூட’ என்றதும் மாணவர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். என் சொந்த விஷயத்தைப் பெரும்பாலும் மாணவர்களிடம் சொல்வதில்லை. இதை நோக்கத்தோடே சொன்னேன். கிராமப்புற மாணவர்களிடம் சாதி எதிர்ப்புணர்வை எந்தெந்த வழிகளில் எல்லாம் உருவாக்க முடியுமோ அவற்றை எல்லாம் தவறவிட மாட்டேன்.

காதல், சாதி மறுப்பு ஆகியவை அவர்களின் மனநிலையோடு முழுமையாக ஒத்துப் போயிற்று. அவர்களுக்கும் எனக்கும் வயது, பதவி, அதிகாரம் ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த இடைவெளி முற்றிலுமாக அழிந்தது. இளைஞர்கள் சாதிக்கு ஆதரவானவர்கள் அல்ல. அவர்களைக் கல்வி நிறுவனங்களும் முற்போக்குக் கட்சிகளும் கைவிட்டு விடுவதால் ஏதோ சந்தர்ப்பத்தில் சாதியோடு கைகோக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். அது இத்தருணத்திலும் உறுதியாயிற்று. ஆண், பெண் எல்லோரும் காதல் திருமணத்திற்கு ஆதரவான மனநிலை உள்ளவர்களே. காதலை ஆதரிப்போர் சாதியை ஆதரிக்க முடியுமா? இயல்பாகவே சாதிக்கும் எதிரானவர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்த மனநிலையை மேலெடுத்துச் செல்ல நம்மிடம் வழிகள் இல்லை. இருந்தால் சாதி விரைவில் ஒழிந்துவிடும். மாணவர்களை அந்த இடத்தில் வைத்து அமைதிப்படுத்தி என் பதிலை விரிவாகச் சொன்னேன்.

காதல் தப்பு என்னும் கருத்து எங்கிருந்து வருகிறது என்பதை விளக்கிச் சிற்றுரை ஆற்றினேன். நகர வாழ்வில்  ‘இணைந்து வாழ்தல்’ நடைமுறைகள் எல்லாம் சாதாரணமாகிவிட்டன. நிர்ப்பந்தம் என்றால்தான் திருமணம். என் மாணவர்கள் கிராமத்திலிருந்து வருபவர்கள். அங்கே காதல் தப்புதான். காதல் சரி என்றால் சாதி தப்பு. சாதி சரி என்றால் காதல் தப்பு. இதுதானே ரகசியம். காதலுக்கும் சாதிக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அந்தப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு இப்போதும் ‘காதலிக்கலாமா?’ என்பதே ஐயமாக இருக்கிறது. ‘காதலிக்கலாம்’ என்பதே என் பதில். விளக்கமாகச் சொல்லி விடைபெற்றேன். காதலிக்க அனுமதி கிடைத்த உற்சாகத்தில் என்னை வழியனுப்பி வைத்தனர். என் கல்லூரி வாழ்வின் கடைசியில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு நிகராக வேறெதையும் சொல்ல முடியாது. என் மாணவர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் எப்படியெல்லாம் சிந்திப்பார்கள் என்பதைப் பற்றி நான் கொண்டிருந்த நம்பிக்கை வலுப்பட்டது. கல்லூரி முதல்வரிடம் இதையெல்லாம் கேட்கலாமா என்னும் தயக்கத்தைக் களைந்து உரையாட அவர்கள் முன்வந்தார்கள் என்பது என் கல்வி வாழ்வை நிறைவாக்கியது.

மாணவர்களுக்கு அதிக இடம் கொடுக்கிறேன், அதீத செல்லம் தருகிறேன், மிகுந்த நம்பிக்கை வைக்கிறேன் என்று என்மேல் குறைபட்டுக் கொள்ளும் ஆசிரியர்களுண்டு. அவையெல்லாம் உண்மைதான் என்பது உறுதிப்பட்ட தருணம் அது.