மூன்று பருவங்கள்

காபி மற்றும் காதலின்
மூன்று பருவங்கள்:

நார்மல் சுகர்
ஹாஃப் சுகர்
வித்தவுட் சுகர்

மயிர் நீங்கும் காலம்

என் மன வீழ்ச்சிக் காலங்களின்
முதல் சாட்சியம்
என் கேசம் நீங்குதல்

என் வீட்டிலிருந்து
வெகு தொலைவில் இருக்கும்
சிறு நகர விடுதியொன்றின்
வெண்ணிற விரிப்பில்
வெண்ணிறத் தலையணையில்
தனிமையின் காலையில்
கண்விழிக்கும்போது
ஊர்ந்துகொண்டிருக்கும்
அவற்றைக் காண்கிறேன்

எப்போதும் ஏதோ ஒன்று
என்னிடமிருந்து உதிர்ந்துகொண்டேயிருக்கிறது
அல்லது யாரிடமிருந்தாவது
நான் உதிர்ந்துகொண்டே இருக்கிறேன்

தலையிலிருந்து மலர்கள் உதிர்வதுபோல
இனிமையானது அல்ல
சிதறிய நம் சொந்தக் கேசங்களைக் காண்பது
அவை என்னை
மிகவும் சஞ்சலமடைய வைக்கின்றன

ஆனாலும் நான்
இந்தக் காலையில்
சற்றே நினைத்துக்கொள்கிறேன்
எப்போதோ
என் படுக்கையில் சுருண்டிருந்த
என்னுடையதல்லாத
நீண்ட கேசச் சுருள் ஒன்றினை
அது என்னை மதிமயங்கச் செய்தது

அப்போது நான்
இப்போதுபோல
இலையுதிர்கால மரமாக அல்ல
வசந்தத்தின் மரமாக இருந்தேன்

தானியத்தால் வரைந்த சித்திரம்

உன்னைப்பற்றி
நான் வரையும் சித்திரம்
நெல் மணிகளால் ஆனது

உன் கைபட்டால்கூட
அது கலைந்துவிடும் என்றுதான்
உன்னிடம் பேசாதிருக்கிறேன்

மேலும்
குருவிகள் வந்து
அம்மணிகளை
எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்று
எங்கும் போகாமல்
இங்கேயே காவலிருக்கிறேன்

பிரியத்தின் பாலைவனங்கள்
இப்போதெல்லாம் யாராவது
காதலால் கனிந்து
ஒரு முத்தமிட்டால்
பதில் முத்தமிட
எனக்குத் தோன்றுவதே இல்லை

மாறாக
” மிக்க நன்றி”
என்றுதான் கூறுகிறேன்

இதில் நீங்கள்
கேலிசெய்ய ஒன்றுமில்லை
இதெல்லாம் நன்றிக்குரியதாகும்படி
அன்பின் பாலைவனங்கள்
பரந்துகிடக்கின்றன

நாளை என்பது நாளையே வரும்

நாளை எனக்காகக் குவிந்துகிடக்கும்
வேலைகளை நினைத்தால்
திகைப்பாக இருக்கிறது

நல்ல வேளை
நாளை என்பது
நாளைக்குத்தான் வரும் என்பதில்
ஒரு சிறிய நிம்மதி

வழியில் கண்ட மலர்கள்
என் வழித்தடங்களில்
நான் இளைப்பாறும் இடத்தில்
மலர்கள் மலர்ந்திருக்கின்றனவா
அல்லது
மலர்கள் மலருமிடத்தில்
நான் நிற்கிறேனா என
எனக்குத் தெரியாது

ஒரு மலரைவிடவும்
சீக்கிரம் மலர்ந்து
சீக்கிரம் வாடும்
இந்த மனதை வைத்துக்கொண்டுதான்
நெடுந்தொலைவு செல்கிறேன்

சொற்களற்ற குரல்

குரல் கேட்கவேண்டும் போலிருந்தது
அதுதான் அழைத்திருந்தேன்

உன் சொற்கள் வேண்டாம்
சொல்லின் பொருள் வேண்டாம்
தடுமாற்றங்கள் வேண்டாம்
உள்ளொன்று விரும்பி
புறமொன்று கூறல் வேண்டாம்
குரல் மட்டும் போதும்

என் தனிமையின் கிண்ணத்தை
நிரப்பிக்கொள்ள
சொற்களற்ற
உனது வெறும் குரல்

பறவைகளின் குரல் போல
சில் வண்டுகளின் குரல் போல

சாத்தியமா அது?

அந்தியின் மஞ்சள் வெளிச்சத்தில்

நான் நிறையப்பேரைக்
காதலித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்
அதெல்லாம்
எப்போது நடந்ததென்றே
எனக்குத் தெரியவில்லை

ஆயினும்
நான் உண்மையில்
யாரைத்தான் காதலித்தேன் என
என்பதை அறிய
ஒரு வழி இருக்கிறது

யாரிடம் நான் மிகவும் பதட்டமடைந்தேனோ
யாரை நினைக்கும்போது
இந்த அந்தியின் மஞ்சள் வெளிச்சத்தில்
இப்போதும் எனக்குப் பைத்தியம் பிடிக்கிறதோ
அவளைத்தான் நான் காதலித்தேன்

ஏனைய காதல்களும் இருந்தன
அவை இருளில் நட்சத்திரங்களாக

எல்லா அந்திகளும்
ஏன் ஒரேமாதிரி மஞ்சள் வெயிலால்
நிரம்புகின்றன?