மலைவாழ் மக்களின் துன்பங்களைப்பற்றியும், தேயிலைப் பணியாளர்களாய் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவது பற்றியும் கோடைக்காலங்களில் மலையரசிகளின் அழகை ரசிக்க செலவு செய்து கொண்டாட வரும் மலை விரும்பிகளுக்கு யாதொரு பொருட்டுமிருக்காது தான். அவர்கள் விடுப்பில் மலர்களின் அருகில் நின்று புகைப்படமெடுத்துக்கொள்வதிலும், ஆகாரங்களை ரசித்து ருசித்து சாப்பிடுவதிலும், குளிருக்கு வாடகை அறைக்குள் பெட்ஷீட்டினுள் குறுகிக்கிடப்பதிலும் ஆசை கொண்டு வருகிறார்கள்.
சிலர் தேனிலவை அங்கே தான் வைத்துக்கொள்ளவேண்டுமென்ற நிலையிலும் வந்து சேர்வார்கள். போட்டிங் செல்வது அங்கே மகிழ்ச்சியான விசயம் என்பார்கள். குழந்தைகள் குதூகலமாய் சொட்டருடன் தங்கள் மம்மிகளின் கைப்பிடியில் நடுங்கிக்கொண்டே செல்வார்கள். மலைவாசஸ்தலங்களில் எந்த ஹோட்டலில் அறைகள் சுத்தமாகவும், சாப்பாடு நிம்மதியாகவும் இருக்குமென யூடியூப் சேனல்களில் முன்பாகவே கண்டு புக்கிங் செய்து செல்பவர்களும் உண்டு.
வால்பாறையாகட்டும், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, கொல்லிமலை என எதுவாகட்டும் பேருந்துப்பயண தூரம் முதல்கொண்டு டிக்கெட் விலை பற்றி சொல்லிக்கொண்டே பேருந்தில் பயணித்தபடி இடையிடையே வரும் ஊர்களையும், டீக்கடைகளையும், காட்டி விளக்கிச் சொல்லும் வீடியோக்கள் இறைந்து கிடக்கின்றன. அது பார்ப்பவர்களையே அவ்விடத்திற்குக் கூட்டிச்செல்லும் அழகுடனும் இருக்கின்றன.
பைக் ரைடர்ஸ் அனைவரும் ஆசையாய் தங்கள் சேனல்களில் சென்றுவந்த ஊர்களை பைக்கில் பயணித்தபடியே பதிவிடுகிறார்கள். லடாக் சாலையில் பயணிப்பது அவ்வளவு அழகு என்று செல்கையில் மகிழ்ச்சியாய் பேசுகிறார்கள். பார்ப்பவர்கள் கடைசிக்கி தங்களிடமிருக்கும் எக்ஸெல் சூப்பரிலாவது ஒருமுடுக்கு முடுக்கிப்போய் பார்த்து வந்துடலாமா? என்றே யோசித்தும், தங்கள் கையாலாகாத்தனத்தைப்பற்றி யோசித்து காறித்துப்பிவிட்டு நகருகிறார்கள்.
ஏஞ்சலீனாவுக்கு இன்று பிறந்ததினம் என்பதால் அவள் தோழிகளுடன் அடிவாரத்தில் கொண்டாட்டத்தில் இருந்தாள். அவள் இன்னும் மூன்று தினங்களுக்குப்பிற்பாடு மோட்டீசில் நடைபெறும் பைக்ரேசில் கலந்துகொள்ளச் செல்கிறாள். கடந்த இருமாதகாலமாகவே அவள் அதற்காகவே பெரும்முயற்சியெடுத்து தயாராகியிருந்தாள். அவளது புத்தம்புதிய ராயல் என்பீல்டு 350 புலிப்பாய்ச்சலுக்குத் தயாராவது போன்று பூங்காவின் காங்க்ரீட் தரையில் நின்றிருந்தது.
காலை நேரமாகையால் தோழிகள் வொய்ன் மட்டுமே சிப்புச் சிப்பாய் தங்கள் கண்ணாடி கிளாஸை உயர்த்தி உயர்த்திக்காட்டி குடித்தார்கள். ஏஞ்சலீனா கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலைக் கையில் வைத்திருந்தாள். நீலவர்ண ஜெர்கினில் இருந்தாள் அவள். தோழிகள் ஏஞ்சலீனாவின் பிறந்த நாளை அந்த மலையடிவாரத்தில் கொண்டாடிவிட்டு அவளை மகிழ்வோடு அனுப்பி வைக்கவே வந்திருந்தார்கள்.
ஏஞ்சலீனாவின் காதலன் என்றறியப்படுகிற ஜான் பார்ப்பதற்கு திரைப்பட நடிகன் ஆர்யா போன்றிருப்பான். அதனாலேயே ஏஞ்சலீனாவுக்கு அவன் மீது காதல் வந்ததா? என்றால் அதுவெல்லாம் கிடையாது. ஜானுக்கு ஏகப்பட்ட சொத்துகளை அவன் அப்பா சம்பாதித்து வைத்திருக்கிறார். ஒரு பெரிய கம்பெனியின் சீஇஓ ஸ்தானத்தில் இருப்பவன். முதலாக அந்தக்கம்பெனியில் தன் படிப்பு சம்பந்தமான சர்ட்டிபிகேட்டுகளை நீட்டி பணியில் சேர்ந்தவள்தான் ஏஞ்சலீனா. ஏஞ்சலீனாவின் அழகில் ஜான் மயங்கினான் என்றுதான் சொல்லவேண்டும்.
இதோ அங்கே காத்திருக்கும் ராயல் என்பீல்டு கூட இவளது பிறந்தநாள் பரிசாக அவன் வழங்கியது தான். அவனுக்குப் பணிகள் அதிகம் என்பதால் இந்தக் காலைக்கொண்டாட்டத்திற்கு அவன் வரமுடியாத தகவலை இரவு பனிரெண்டு மணிக்கு அலைபேசியில் சொல்லிவிட்டான். பொய்யாய் கோபிக்கும் திறன் மிக்கவளான ஏஞ்சலீனா அதைக்கூட அழகாய்ச் செய்தாள். ஆனாலும் அவன் போட்டி நாள் அன்று அங்கே ‘உனக்கு காணக்கிடைப்பேன்’ என்று அழகாய் சொல்லி வைத்தான்.
கொண்டாட்டங்கள் தீர்ந்த பிறகு தன் புல்லட்டை நோக்கி ஏஞ்சலீனா செல்ல, தோழிகளும் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டு அவளிடம் ஒவ்வொருவராய் கைகொடுத்து குலுக்கி வாழ்த்தைச் சொல்லிவிட்டு தள்ளி நின்றார்கள். ஏஞ்சலீனா அவர்களுக்கு இறுதியாய் பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு தடதடத்துக்கிளம்பினாள் ஆயிரத்தி சொச்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட மோட்டீஸ் மலைப்பாதை நோக்கி.
***
வாஸ்தோ மலைப்பாதையில் பதினைந்தாவது கிலோமீட்டரில் சாலையின் ஓரத்தில் அவனது பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்தியிருந்தான். அவன் கையில் சுருட்டு புகைந்தபடியிருந்தது. அரைமணிநேரமாக அவன் செய்வதறியாமல் இதே இடத்தில் நின்றிருந்தபடி மூன்று சுருட்டுகளை ஊதித்தள்ளிவிட்டான். அவனைக்கடந்து தலா இரண்டு கார்கள் மேலும் கீழுமாகச் சென்றிருந்தன. அவைகளில் பயணித்தவர்கள் இவனை நோக்கித் தங்கள் பெருவிரலை உயர்த்திக்காட்டிச் சென்றார்கள். டேங்கர் லாரியொன்று திணறியபடி இவனைக்கடந்து சென்றது.
இவன் பைக் சொதப்பிவிட்டது. என்ன முயற்சித்தும் கிளம்புவேனா என்று அடம் பிடித்து நின்றுவிட்டது. உதவிக்கு அலைபேசியிலிருந்து கூப்பிடலாம் தான் என்றாலும், அதில் விருப்பமேதும் இல்லாமல் வெறுமனே நின்றிருந்தான். அவன் மனது பைக் ரைடர் யாரேனும் வருகையில் லிப்ட் கேட்டு தொற்றிக்கொள்ளலாம் என்றே இருந்தது. இரண்டு பைக்ரைடர்ஸ் இவனைக்கடந்து சென்றார்கள் தான் என்றாலும் அவர்கள் தங்கள் தோழியுடன் ஜோடியாய் சென்றார்கள்.
அடுத்த அரைமணி நேரக் காத்திருப்பிற்கு பிற்பாடு ராயல் என்பீல்டு புல்லட் ஒன்று தடதடத்து மேலேறி வருவதைக்கண்ட வாஸ்தோ சுருட்டை தூர வீசியெறிந்துவிட்டு அவனை நிப்பாட்டும் விதமாய் பெருவிரலை நீட்டியபடி நின்றான். இவனைக்கவனித்த ஹெல்மெட் அணிந்த உருவம் இவனருகில் வந்து நின்றதும் சாவியை திருகி வண்டியை அணைத்துவிட்டு தன் ஹெல்மெட்டை உயர்த்தி, ‘என்ன பாஸ் பிரச்சனை?’ என்றது.
வாஸ்தோ தன் வண்டி சதி செய்த விசயத்தை அவனிடம் நிதானமாய் சொன்னான். பொறுமையாய் கேட்டவன், ‘இப்ப இந்த வண்டியை என்ன பண்ண பாஸ்?’ என்றான். ‘பண்ணிடலாம்!’ என்ற வாஸ்தோ தன் வண்டியருகே சென்று மிரரில் மாட்டியிருந்த தன் ஹெல்மெட்டை எடுத்து வந்து இவனிடம் தந்துவிட்டு, திரும்பவும் சென்று பைக்கின் ஸ்டாண்டை காலால் உயர்த்திவிட்டு வேகமாய் சாலையில் உருட்டிக்கொண்டோடி, அப்படியே மலைப்பாதையின் கீழாக வண்டியை அனுப்பி வைத்துவிட்டு கையைத்தட்டிக்கொண்டே இவனருகில் நடந்து வந்தான். இவனுக்கு லிப்ட் கொடுக்கப்போகும் அவன் இந்தச் செயலால் சற்று அதிர்ந்தே போனான்.
“பாஸ் என்ன வேலை பண்ணீட்டீங்க! அந்த வண்டியோட விலை உங்களுக்குத் தெரியும்தானே!”
“காலுக்கு ஆகாத செருப்பை நாம என்ன பண்ணுவோம் தெரியுமா..நண்பரே…”
“என் பேரு பீட்டர் பாஸ்.”
“பீட்டர்.. சரி அதை விடுங்க.. என் ஹெல்மெட்டைக் கொடுங்க.. நாம போயிட்டே இருக்கலாம்!’ என்றவன் தன் ஹெல்மெட்டை வாங்கி கையில் பிடித்துக்கொண்டே அவன் புல்லட்டின் பின்னால் அமர்ந்தான்.
“அப்புறம் எங்கிருந்து வர்றீங்க நீங்க பீட்டர்? நான் கட்லாவுல இருந்து வர்றேன்!”
“நான் அடிவாரத்துல தான் பாஸ் இருக்கேன். அப்பப்போ ஜாலி மூடு வந்துச்சுன்னா இப்படி பைகை எடுத்துட்டுக் கிளம்பிடுவேன்!”
“அப்ப நீங்க ரேஸ்ல கலந்துக்க வரலையா பீட்டர்?”
“ரேஸா? நானெங்கீங்க பாஸ் ரேஸ்லல்லாம் கலந்துக்கப்போறேன்? இப்ப நீங்க என்னோட ட்ரெஸ்ஸைப்பார்த்தும் வண்டியைப்பார்த்துக் கேட்டீங்கள்ல.. அதே திருப்திங்க பாஸ்.. உங்க பேரு?”
“என் பேரு வாஸ்தோ.. ஊர்ல எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. ஆண்ட்டன்னு! நீங்க வண்டியை ஓட்டுற விதத்தைப் பார்த்ததுமே நீங்க ஒரு அரைகுறைன்னு தெரியுதுங்க பீட்டர். எப்படி இவ்ளோ நாள் விபத்து ஏற்படாம தப்பிச்சு ஓட்டீட்டு இருக்கீங்க?”
“இந்த வளைவுகள்ல ஓட்டுறப்ப எனக்குக் கொஞ்சம் பயமாத்தான் இருக்குங்க பாஸ்.. லெப்ட் சைடுல ஈஸியா இருக்கும். ஆனா ரைட்சைடுல திருப்பிப்போறப்ப ரொம்ப கவனமாத்தான் திருப்புவேன். நாலு வருசமா ஓட்டுறேன். இன்னும் ஒரு பக்குவத்துக்கு அது வரமாட்டேங்குது பாஸ்! நீங்க என் வண்டியை ட்ரைவ் பண்ணுறீங்களா பாஸ்? நிப்பாட்டவா?”
“நீங்க தைரியமா ஓட்டுங்க! வண்டி நல்லவிதமாத்தான் இருக்கு. ஆமா எதுக்கு வண்டில எக்ஸ்ட்ரா பிட்டிங்ங்ஸ் சைடுல கத்தி கடப்பாறையெல்லாம் வச்சிருக்கீங்க? ஏற்கனவே வண்டி வெய்ட்டு. எங்காச்சிம் வண்டியை நிறுத்தி புதையல் தோண்டப்போறீங்களா? வரைபடம் காட்டுற இடத்துக்குப் போயிட்டு இருக்கீங்களா பீட்டர்?”
“வண்டியில நீங்க ஏறி உட்கார்ந்ததுமே கத்தி கப்படாக்களைப்பத்தி கேப்பீங்கன்னு நினைச்சேன் பாஸ்! ஒரு பந்தாவுக்காக பிட்பண்ணி வச்சிருக்கேன். ஒருவேள அதனோட தேவைகள் நமக்கு எப்ப வேணாலும் வரலாம் பாருங்க! அவசரத்துக்கு தேவைப்படும்ல! என்னை வண்டியோட பாக்குறவங்க டெரரா நினைக்கட்டுமேன்னு தான் பண்ணினேன் பாஸ். என்னோட யூடியூப் சேனலை நீங்க சப்ஸ்கிரைப் பண்ணிப்பாருங்க! செமையா இருக்கும். மோட்டீஸ் மலை உச்சியை அடையுற வீடியோவை பிட்டு பிட்டா போட்டிருப்பேன். லட்சக்கணக்குல வியூவர்ஸ் பார்த்திருக்காங்க!”
“நான் கண்டிப்பா பார்க்குறேன் பீட்டர்! போற வழியில கடைகள் இருக்கா?”
“இருக்குங்க பாஸ்.. அதுக்கு நாம இன்னும் நாற்பது கிலோ மீட்டர் போகணும்!’
வாஸ்தோ தன்னைக் கடந்து செல்லும் மரங்களை இருபுறங்களிலும் பார்வையிட ஆரம்பித்தான். பீட்டரும் பேச்சை நிறுத்தி சாலையில் வண்டியின் வேகத்தைக் கொஞ்சம் கூடுதலாக்கியிருந்தான். ஒரு வளைவில் அவன் வண்டியும் கொஞ்சிக் கொஞ்சிக் குலுங்கி நின்றது!
“இன்னிக்கி கிளம்பின நேரமே சரியில்லபோல பாஸ்! இதுவும் மக்கர் பண்ணுது!”
“மக்கரெல்லாம் பண்ணலை பீட்டர்.. கார்ப்பரேட்டர்ல பிரச்சனை.. கடப்பாறையை எடுத்து ஒரு போடு போடு!”
“பாஸ் தமாஸா பேசாதீங்க பாஸ்! ஸ்பேனர் செட் வண்டீல இருக்கு.. பார்த்துக்குவோம்!” வண்டியை சாலையின் தார்ரோட்டிலேயே ஓரமாய் நிப்பாட்டினான் பீட்டர். ஸ்பேனர் செட் பையை சாவிகொண்டு உயர்த்தி எடுத்தான்.
“பீட்டரு, எனக்கு உன் வண்டியில லிப்ட் குடுத்ததாலதான் உன் வண்டியும் செத்துப்போயிடுச்சு! உருட்டி தள்ளீட்டு நடந்து போவோமா நாம?” என்ற வாஸ்தோ சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.
“நீங்க தமாஸ் பேசுறீங்க பாஸ்” என்ற பீட்டர் சாலையிலேயே சம்மணமிட்டு அமர்ந்து ஸ்பேனரை எடுத்துக்கொண்டான்.
“வண்டிங்க அதிகம் இந்த ரூட்டுல போறதில்லை போல?”
“பாஸ் எப்பயும் இப்படி இருக்காது. இன்னமும் நானூறு கிலோமீட்டருக்கு மேல போயிட்டம்னா வாகனங்களை அதிகம் பார்க்கலாம்! நீங்க வர்றது முதல் தடவையா பாஸ்.. மோட்டீஸ் போயிப்பாருங்க! அங்கயே தங்கிக்கலாம்னு ஆசைப்படுவீங்க!”
தூரத்தே கீழிறங்கும் டேங்கர் லாரியொன்று வந்துகொண்டிருப்பதை வாஸ்தோ பார்த்தான். அது வளைவில் உறுமலோடு திரும்பி தன் முன்முகத்தை வாஸ்தோவிற்கு சிரிக்கும் விதமாய் காட்டியது. இவன் சிரிக்காமலேயே சுருட்டை சுண்டிவிட்டு, ‘முடிஞ்சுதா பீட்டர்!’ என்றான்.
“அவ்ளோதான் பாஸ்! ஸ்டார்ட் பண்ணிப் பார்த்திடுவோம்!” என்றவன் ஸ்பேனரைப் பையில் போட்டபடி சம்மணத்திலிருந்து எழுந்து நின்றான். வாஸ்தோ லாரி நெருங்கும் தூரத்தைக் கணக்கிட்டான். போதாமையாய் இருந்தது. எதிர்ப்புறத்தில் ஓடும் ஒரு சிறிய விலங்கைக் கைகாட்டி, ‘அது என்ன விலங்கு பீட்டர்?’ என்றான். திரும்பிப்பார்த்த பீட்டர், ‘அது முயல் பாஸ்! வாழ்க்கையில இப்பத்தான் முயலை முதன்முதலா பாக்குற மாதிரியே ஏக்ட் பண்ணுறீங்க சார்! இந்த மலையில எல்லா விலங்குகளும் இருக்கு.. ஆனா அதுக்கு இன்னும் மேல போகணும்.” என்றவன் வண்டிக்கு இந்தப்புறமாக வரமுயற்சிக்க, ‘முன்னாடி டயர்ல ஆணி குத்தியிருந்த மாதிரி இருந்துச்சே பீட்டர்!’ என்றான்.
அவன் பதறிக்கையாய் குனிந்து முன் வீல் டயரைப்பார்க்கவும் டேங்கர் லாரி நெருங்கவும் சரியாய் இருக்க, வாகாய் ஒரு உதையை சரியாய் கொடுத்தான் வாஸ்தோ பீட்டருக்கு. லாரியின் முகப்பில் பட்டு தூக்கியெறியப்பட்டான் பீட்டர். லாரிக்காரன் பதறிக்கையில் ப்ரேக் போட முயற்சிக்க, வாஸ்தோ அவனது சைடு மிரர் நோக்கிப் போகச்சொல்லி கைகாட்டினான் நடுச்சாலையில் நின்றிருந்தபடி.
தூரத்தே சென்று நின்ற வண்டி அனத்தத்துவங்கவும், வாஸ்தோ புல்லட்டினருகே சென்று கடப்பாறையை உருவினான். சாலையில் அதன் முனை கீச்சிக்கொண்டே வர கடப்பாறையை இழுத்துக்கொண்டு லாரியை நோக்கி வாஸ்தோ நகரவும், லாரி கிளம்பிற்று. மிக நிதானமாய் கடப்பாறையை வண்டியில் வைத்துவிட்டு எதிர்ப்புற சாலையோரத்தில் ரத்தக்களறியோடு கிடந்த பீட்டர் அருகாமை சென்று அமர்ந்தான். ‘ஏன் பாஸு?’ என்று அவன் விழிகள் கேட்க, அவன் இரு கைகளையும் ஒரு கையால் சேர்த்துப்பிடித்து சாலையில் இழுத்து வந்து மலைப்பகுதியில் இழுத்து வீசினான் வாஸ்தோ.
***
ஏஞ்சலீனா தன் ஹெல்மெட்டைத் தலைக்கு அணியாமல் டேங்க் மீது வைத்தபடி தலைமுடி காற்றில் பறக்க வேகமாய் புல்லட்டில் வந்துகொண்டிருந்தாள். அவள் தூரத்தே கருமை நிற புல்லட் ஒன்று சாலையோரத்தில் நிற்பதும், அதனையொட்டி ஒருவன் மலைவிளிம்பில் நின்று உச்சா போய்க்கொண்டிருப்பதையும் கண்டு வேகத்தைக் குறைக்கலாமா? என்று யோசித்தாள்.
வண்டியின் ஹாரனை அடித்து சமிக்கை செய்தாள். அவன் உச்சா போவதை நிறுத்துவதாய்க் காணோம்! போக ஹாரனை அவன் கவனித்ததாகவும் தெரியவில்லை. அவன் காரியத்தில் கண்ணாய் இருந்தான். அவனை நெருங்குகையில் ஹாரனை அடித்தபடி ‘த்தூ’ என சாலையில் காறித்துப்பிவிட்டு செல்பவளை வாஸ்தோ ஓரக்கண்ணால் பார்த்தான். தன் காரியம் முடிந்ததும் சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு தீக்குச்சியைத் தன் கால்களுக்கும் கீழாகப் போட்டான். குப்பென அந்த இடம் தீப்பற்றியெறிந்தது.
பின்பாக நிதானமாக வண்டிக்கருகில் வந்தவன் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு வண்டியைக் கிளப்பினான். வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஐந்தாவது கிலோமீட்டரில் இரண்டு மூன்று பேக்கரிகள் இருக்க அங்கே மக்கள் நடமாட்டமும் அதிகமிருந்தது. இவன் ஒரு பேக்கரி அருகில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தினான். ஹெல்மெட்டை எடுக்கலாம் என நினைத்து கைகளை உயர்த்தியபோது, பக்கத்து பேக்கரியிலிருந்து ஏஞ்சலீனா படிகளிலிருந்து இறங்கி இவனைப்பார்த்தபடி தன் வண்டிக்கருகில் செல்வதைக்கண்டதும் இவன் மீண்டும் தன் புல்லட்டை உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
அவள் இவன் இறங்கிப்போகாததைக் கவனித்துக்கொண்டே தன் புல்லட்டை சாலையில் கிளப்பினாள். இவனும் அவளைத் தொடர்ந்தான் நிதானமாகவே! சாலையில் ஒரு பெண் தன் அழும் குழந்தையை இழுத்து வருவதைக்கண்ட வாஸ்தோ டேங்க் கவரிலிருந்து சாக்லெட்டை எடுத்து அவர்களருகே நிறுத்தி பாப்பாவிடம் நீட்டினான். அழுதுகொண்டு வந்த பாப்பாவின் முகம் இப்போது புன்னகைத்தது.
தன் அம்மாவை ஒருமுறை பார்த்துவிட்டு இவனிடம் வாங்கிக்கொண்டதும் டாட்டா காட்டியது. இடதுபுறக் கண்ணாடி வழியாக இதைக்கவனித்தபடி நிதானமாய்ச் சென்ற ஏஞ்சலீனா தன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தவுமில்லை. சாலையில் ஆங்காங்கே மனிதர்கள் இப்போது நடந்தவண்ணமிருக்க, அருகில் எங்கேனும் பெரிய கிராமம் இருக்கலாமோ என நினைத்தான் வாஸ்தோ.
இரு வண்டிகளுக்குமிடையில் குறிப்பிட்ட இடைவெளி இருந்தது அப்போது. இருவரின் வேகம் காட்டும் முட்களுமே நாற்பது என்று காட்டியது. சாலையில் ஒரு சுடிதார் அணிந்த பெண் கொஞ்சம் தூரம் வரை வருவதாய் முதலில் வந்த ஏஞ்சலீனா வண்டியை நிப்பாட்ட கைகாட்டினாள். ஏஞ்சலீனா அவளிடம், ‘பின்னால ஒருத்தன் வர்றான் பாரு! கேளு!’ என்று அவளைக் கடக்கையில் சொல்லி விட்டுச் சென்றவள் இன்னும் கொஞ்சம் வண்டியின் வேகத்தைக் குறைத்தாள்.
இடதுபுறக் கண்ணாடியில் அவள் கண்ட காட்சி அவள் இதயத்துடிப்பை வேகப்படுத்திவிட்டது. லிப்ட் கேட்ட பெண்ணை வண்டியில் வர வரவே உதைத்து தள்ளிவிட்டு வந்துகொண்டிருந்தான் அவன். ஏஞ்சலீனாவுக்குப் பீதியாகிவிட்டது. ஒருநிலைப்படுத்தி வண்டியை ஓட்டமுடியவில்லை. பதறிக்கை கூடிவிட வேகத்தை அதிகப்படுத்தினாள். அவனும் வேகத்தைக் கூட்டிக்கொண்டது கண்ணாடி வழியாகவே தெரிந்தது.
அடுத்த இருபது நிமிடம் இருவர் வண்டிகளுமே வேகமாய் வளைவுகளில் சென்றன. ஏஞ்சலீனா பதறிக்கையை மறந்து குழப்பத்தில் இருந்தாள். துரத்துபவன் நினைத்தால் இவளைக்கடந்து முன்னே சென்றுவிடலாம். நூறுமைல் வேகத்தில் இவள் வண்டியை செலுத்தினால் அதே வேகத்தில் தான் அவனும் வருவதை உணர்ந்தாள். அவன் என்ன நினைக்கிறான்? எதற்காகத் துரத்துகிறான்? என்ன வேண்டும் அவனுக்கு? சாலையில் பெண் வருவதை ஹாரனடித்து உணர்த்தியும் அவன் பாட்டுக்குக் கையில் பிடித்துக்கொண்டு நின்றதால் துப்பி விட்டு வந்தது தவறா? அதற்காகவெல்லாம் கோபப்படுவார்களா? என்னைத்துரத்தி வந்து பயமுறுத்தப்பார்க்கிறானா?
சாலையின் ஓரத்தில் சல்லைக்கொக்கிக் கொண்டு இருவர் மரத்திலிருந்து ஏதோ சிறிய பழங்களை இழுக்கும் முயற்சியில் இருந்தார்கள். இருவருமே மரத்தை அண்ணர்ந்து பார்த்து பழத்தை இழுத்து வீசுவதில் குறியாய் இருக்க, வாஸ்தோ அதே வேகத்தில் அவர்களருகே வண்டியை செலுத்தி ஒருவன் கையிலிருந்த சல்லையை இடது கையால் பிடுங்கிக்கொண்டான்.
நடந்தது என்னவென அறியாமல் குச்சியை இழந்தவன் சாலையில் வந்து நின்று கல்லெறிவதாய் இவனுக்குக் காட்டினான். வலது கைக்கு சல்லையை மாற்றிக்கொண்டவன் சாலையில் அதன் கொக்கி முனையை ‘டர்ர்ர்ர்ர்ரென” இழுத்தபடியே வந்தான். ஏஞ்சலீனா, எதற்காக அவன் சல்லையைப் பிடுங்கிக்கொண்டு சாலையில் இழுத்துக்கொண்டு வருகிறான்? எனத் தெரியாமல் முறுக்கினாள்.
ஒரு கட்டத்தில் கொக்கி முனையானது கூரான ஆயுதமாய் மாறிவிட இடதுபுற தோளுக்கு சல்லையை மாற்றிக்கொண்ட வாஸ்தோ வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஏஞ்சலீனா பயத்தில் வேகத்தைக் கூட்டினாள். பயமுறுத்துகிறானா? இல்லை என்ன செய்யப்போகிறான்? என்று நினைக்கையிலேயே இவள் காதில் பாதியைக் கம்மலோடு பிய்த்துக்கொண்டுபோய் சாலையில் குத்தி நின்றது சல்லை. அது இவளுக்கும் முன்னால் பறந்து போய் சாலையில் குத்தி நின்று ஆடியது. இவள் காதிலிருந்து ரத்தம் கொப்பளித்து வழிந்தது.
ஐயோ! இவன் கொலை செய்வதற்காகத் துரத்துகிறான். ஏண்டா காறித்துப்பினதற்கெல்லாமா கொலை செய்வார்கள்? சைக்கோ நாயே! கண்ணாடி வழியே பார்த்தாள். சாலையில் குத்தி நின்றிருந்த சல்லையை வரவரவே அவன் மீண்டும் கைகளில் தூக்கிக்கொண்டான். மீண்டும் இடது தோளிற்கு அதை மாற்றிக்கொண்டதும் தான் இவளுக்குப் பகீரென்றது! இன்னும் வேகம் வேண்டும்! அடுத்து கழுத்துக்கே குறி பார்த்து வீசிடுவான்.
சாலையின் ஓரத்தில் ஒரு பெண் அலைபேசியில, ‘‘உன்கூட நான் பலவருசம் வாழணும்டா!” என்று பேசியபடி வருவதைக்கவனித்து ஏஞ்சலீனா அவளைக்கடந்து செல்ல, வாஸ்தோ தோளில் இருந்த கம்பை பைக்கின் மடியில் வைப்பது போன்று திருப்பி, அந்தப்பெண்ணைக் கடக்கையில் அப்படியே சைடில் வீசினான். கம்பின் முனை சரியாய் அவள் வயிற்றில் பாய்ந்து செல்போன் ஒருபக்கம் தெறிக்க, அப்படியே மலையின் கீழ்ப்புறமாய் சரிந்தாள் அவள். ஏஞ்சலீனாவுக்குப் பதைபதைப்பிலும் அதற்கான காரணம் தெரியவில்லை. சாலையில் வந்தவளை எதற்காகக கொன்றான் இந்த சைக்கோ? பின்பாக அவன் வேகத்தைக் குறைத்துக்கொண்டாற்போல தெரியவே இவள் ஆசுவாசமடைந்து பயணித்தாள் சாலையில்.
நாற்பது கிலோமீட்டருக்கு மேல் சென்றவள் ஒரு தங்கும் விடுதியைக்கண்டாள். அங்கே வண்டியைத் திருப்பி ஏற்கனவே நின்றிருந்த நான்கைந்து கார்களுக்கும் சற்றுத்தள்ளி தன் புல்லட்டை நிறுத்தியவள் அவசரமாய் ரிசப்சனை நோக்கி ஓடினாள். முகப்புக் கண்ணாடிக்கதவை உள்புறமாகத்தள்ளி ஹாலினுள் சென்றவள் ரிசப்சனிலோ, வேறு எங்குமோ ஆட்களே இல்லாது இருப்பதைக்கவனித்தாள். பின்பாக ரிசப்சனில் இருக்கும் யாரோ ஒருவர் ரெஸ்ட் ரூம் கூட சென்றிருக்கலாமென நினைத்து நின்றபடி காத்திருந்தாள். ரிசப்சனில் ஆணியில் அனைத்து அறைச்சாவிகளும் மாட்டப்பட்டிருந்தன. நான்கைந்து சாவிகளைத்தான் காணவில்லை. ஆக அறை இங்கே உறுதி.
அப்போது தடதடத்தபடி ஹெல்மெட் அணிந்திருந்த வாஸ்தோவின் புல்லட் நேராக விடுதிக் கண்ணாடியை நோக்கி வந்து அதை உடைத்துத்தள்ளிக்கொண்டு உள்ளே வந்து அரை வட்டமடித்து நிற்கவே, ஏஞ்சலீனா ஒரு சாவியைக் கைநீட்டி எடுத்துக்கொண்டு படிகளில் ஏறி ஓடினாள். பின்பாக வாஸ்தோ புல்லட்டை வெளியே ஓட்டிக்கொண்டு வந்து ஏஞ்சலீனாவின் புல்லட் அருகே நிறுத்திவிட்டு நிதானமாய் நிசப்சன் வந்து அவனும் ஒரு சாவியை எடுத்துக்கொண்டு படியேறினான்.
***
ஏஞ்சலீனா சாவியில் அறை எண்ணைக் கவனித்தாள். அது நாற்பத்தியிரண்டு என்று காட்டிற்று. இரண்டாம் மாடியில் கடைசி அறையாக அது இருக்கவே உடனடியாக அதை நீக்கி உள்ளே நுழைந்தவள் அறைக்கதவைத் தாழிட்டு விட்டு படுக்கையில் சாய்ந்தாள். தன் காதலன் ஜானுக்கு அழைப்பை அலைபேசியில் போட்டாள். விபரங்களை சற்று விரைவாகச் சொன்னபோது அவன் நிதானமாய் கூறும்படி சொன்னான்.
இவளுக்குக் கதவை யாரோ ஓங்கி ஓங்கித் தட்டுவது போலவும், கோடாரி கொண்டு வெட்டுவது போன்றும் நினைப்புகள் வரத்துவங்கிற்று. இறுதியாக ஜானிடமே கோபம் கொண்டவள், ‘டேய் நாயே! உன்னால இப்ப கிளம்பி வரமுடியுமா முடியாதாடா? என்னை அவன் கொன்னுருவாண்டா! வந்து என் பிணத்தையாவது ஊர் கொண்டு போய் சேர்த்து!’ கத்திக்கொண்டே வைத்தாள் போனை.
ஏஞ்சலீனாவுக்கு கதவை நீக்கி வெளியே எட்டிப்பார்க்கலாமெனத் தோன்றியது. பயம் அவளை அறைக்குள்ளேயே கிடத்தி வைத்திருந்தது. அன்றைய இரவில் துவங்கும் வேளையில் ஜான் தன் காரில் அங்கு வந்து சேர்ந்தான். ஏஞ்சலீனாவின் புல்லட் நின்றிருக்கும் இடத்திற்கு அருகாமையில் இன்னொரு புல்லட் நிற்பதையும் பார்த்துக்கொண்டே ரிசப்சனுக்கு வந்தான். ரிசப்சனில் எப்போதும் போல யாருமில்லை. ஏஞ்சலீனாவை அலைபேசியில் அழைத்தான். ‘அறை எண் நாற்பத்தியிரண்டு’ என்று அவள் சொல்லவே, ஜான் இரண்டாம் மாடி நோக்கி நடந்தான். வாஸ்தோ சுருட்டு பிடித்தபடி படிகளில் அமர்ந்திருந்தான். ஜான் அவனைக் கடக்கையில்,
“மச்சான் யாரு நீயி? எங்கிருந்து வர்றே?” என்று கேட்டான். ஜானோ, இவன் தான் ரிசப்சனில் இருப்பவனோ என நினைத்து, ‘நாற்பத்தியிரண்டாம் எண் அறைக்குப் போகிறேன்.. அங்க என் காதலி இருக்கிறாள்!’ என்று சொல்லி மேலேறினான். வாஸ்தோ சுருட்டை ரிசப்சன் நோக்கி கோபமாய் சுண்டியெறிந்தான்.
அறைக்குள் வந்த ஜானைக் கட்டிப்பிடித்துக் கதறினாள் ஏஞ்சலீனா.
***
வாஸ்தோ மூன்றாம் மாடியில் கைகளை ஊன்றியபடி நின்று கீழே பார்த்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் காலை மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கீழே ஏஞ்சலீனா கிளம்பும் ஆயத்தமாய் தன் பைக்கை நோக்கிச் செல்வது தெரியவே, வாஸ்தோ தன் அறைக்குள் நுழைந்தான்.
பத்துநிமிடத்தில் அறைக்குள் இருந்து வெளிவந்தவன் ஹெல்மெட் அணிந்தபடியே புல்லட் சாவியை விரலில் சுழற்றிக்கொண்டே படிகளில் இறங்கினான். ரிசப்சனில் இப்போதும் யாருமில்லை. நேராகத் தன் பைக் அருகே வந்தவன் அதைக்கிளப்பினான். அடுத்த இருபதாவது நிமிடத்தில் ஜானின் கார் சென்றுகொண்டிருக்க, காரின் முன்பாக ஏஞ்சலீனா தன் புல்லட்டில் சென்று கொண்டிருந்தாள். இப்போது அவளும் தலைக்கவசம் அணிந்தபடி செல்வதை வாஸ்தோ கண்டான்.
கீழே வலது கையை இறக்கி புல்லட்டிலிருந்த கடப்பாறையை வாஸ்தோ தூக்கி தோளின்மீது வைத்துக்கொண்டான். வலது கை தோளில் கடப்பாறை இருக்கவே இடது கையை எக்ஸலேட்டருக்கு கொடுத்து முறுக்கியவன் காரை நோக்கி விரைந்தான். காரிலிருந்த ஜானும் இதைக்கண்டு பதட்டமடைந்தான். அப்போது காரை நோக்கி கடப்பாறை குத்தீட்டி போல் வந்து காரின் பெட்ரோல் டேங்க்கில் துளையிட்டு நுழைந்து செருகி நின்றது.
சாலையில் காரிலிருந்த பெட்ரோல் நேராக கோடு போட்டது போல சிதறத்துவங்கவே வாஸ்தோ புல்லட்டில் அமர்ந்திருந்தபடியே சுருட்டு பற்ற வைத்து தீக்குச்சியை சாலையில் கோடு போட்டது போல செல்லும் பெட்ரோலின் மீது சுண்டினான். கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தீப்பிடிக்கவே காரை சாலையில் தாறுமாறாக ஓட்டிய ஜான் ஒருகட்டத்தில் சாலையின் இடது ஓரமாக நிப்பாட்டிய சமயம் அவனது வலதுகாலின் தொடை எலும்பு சுளுக்கிக்கொண்டது. சிரமப்பட்டு வெளியேற கதவைத்திறந்தான். நிஜமாகவே வலது காலைக் கீழே இறக்கி தரையில் வைக்க முடியவில்லை. அப்படியே உடலைச் சாய்த்து தரை நோக்கி சாய்ந்தான்.
ஏஞ்சலீனா தன் புல்லட்டை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை மிரரில் மாட்டினாள். வேகமாக ஜானை நோக்கி ஓடி வந்தவள், காரைத்தாண்டி ஓரமாய் கைகட்டியபடி ஹெல்மெட் அணிந்த நிலையில் கைகளைக் கட்டி புல்லட்டிலிருந்து இறங்காமல் நிற்பவனைப்பார்த்து மிரண்டாள். இவனைத்தாண்டிச் சென்று தான் ஜானிடம் சென்று அவனுக்கு என்னவானது என்று பார்க்க வேண்டும். வாஸ்தோவின் புல்லட் புடுபுடுத்தபடியே நின்றிருந்தது. ஜான் வலியில் கதறினான். ஆனது ஆகட்டுமென ஏஞ்சலீனா விரைவாய் வாஸ்தோவைக்கடந்து சென்று ஜானின் இரு கைகளுக்குமிடையில் இவள் கைகளை விட்டு வெளியில் இழுத்தாள். இவளின் துணையோடு எழுந்தவன் வலது காலை நொண்டியடித்தபடியே பேலன்சுக்கு இவளைப்பிடித்தவாறு தடுமாறி நின்றான்.
“உன்னை வரச்சொல்லி நான் கூப்பிட்டிருக்கக்கூடாது ஜான்! தப்புப் பண்ணிட்டேன். என்னை அவன் என்ன வேணா செஞ்சாலும் பரவாயில்லன்னு விட்டிருக்கணும். இப்போ உனக்கும் என்னால இடைஞ்சல்! சாரி ஜான்!” என்றாள்.
“பரவாயில்லடி, இப்ப என்ன பண்ணலாம் நாம! அந்த நாயி ஏன் போஸ் குடுத்துட்டு பைக்கிலயே உட்கார்ந்திருக்கு? நம்மள கொல்றதுன்னா இப்ப இறங்கி வந்து கொன்னுட்டுப் போக வேண்டியது தானே!”
“அவன் யார்னு கூட எனக்குத் தெரியல ஜான்! சரி, என் வண்டிக்கி கூட்டிட்டு போறேன் உன்னை. நீ என்னைப்பிடிச்சிக்க! நல்லவேளை உனக்கு இத்தோட போச்சு!” என்றவள் எரிந்து கொண்டிருந்த காரினைப்பார்த்தபடியே இவன் கைகளை தோளில் போட்டுக்கொண்டு தன் புல்லட்டை நோக்கி நடந்தாள். இருவரும் வாஸ்தோவைக் கடந்து செல்கையிலும் வாஸ்தோ அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் பயந்து தான் அவனை இருவரும் கடந்தார்கள்.
பின்பாக வெகு சிரமப்பட்டு ஜான் கால்களை உயர்த்தி புல்லட்டில் ஏஞ்சலீனாவின் பின்புறம் அமர்ந்தவன் அவள் முதுகிலேயே வலியால் சாய்ந்து கொண்டான். ஏஞ்சலீனா புல்லட்டைக் கிளப்பினாள். வாஸ்தோவும் தன் புல்லட்டைக் கிளப்பினான். வானம் திடீரென இருண்ட நிலைக்கு மாறியது. குளிர்காற்று வீசத்துவங்கியது. மெலிதான சாரல் மழை பத்து நிமிடத்தில் பெய்யத்துவங்கிற்று.
“உன்னை ஹாஸ்பிடல்ல உடனே சேர்த்தணும் ஜான்! எதாச்சிம் வழி பண்ணனும். ஐவே பெடரோல் வண்டியைக் கூப்பிடணும். ஆனா பின்னாடி வர்ற சைக்கோ நாம வண்டியை நிறுத்துனா பின்னாடி வந்து சாத்தினாலும் சாத்திருவானே!”
“பரவால்லடி, நீ இன்னும் கொஞ்சம் வேகமா வண்டியை ஓட்டு! மழைத்தூறல் வேற சனியன். இவனுக்கெல்லாம் பயந்துட்டு எங்கேயும் நிறுத்தாம போக வேண்டியிருக்கு பாரு!” என்றான் ஜான். ஏஞ்சலீனா வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினாள். பின்னால் வந்து கொண்டிருப்பவனைத் திரும்பிப்பார்த்தாள். அவனும் வேகமெடுத்திருந்தான். சாரல் மழைத்துளிகள் தார்சாலையை நனைத்து ஈரப்பதமுடன் இருக்க, வளைவொன்றில் வேகமாய் வந்த வாஸ்தோ பேலன்ஸ் செய்ய இயலாமல் வழுக்கிக்கொண்டே சாய்ந்தான். வண்டி தனியாக வழுக்கிச் சென்று மரத்தில் மோதிய சமயம் வாஸ்தோவும் சாலையில் வழுக்கியபடி போய் சாலையை விட்டுக் கீழே பறந்தான்.
“செத்தான் செத்தான் சைக்கோ! கடவுள் இருக்காருன்னு இப்ப நம்புறேன் நான்! செத்தான் சைக்கோ! இனி நாம நிம்மதியா போகலாம் ஜான்!”
“எதுக்கும் வண்டியை திருப்புடி.. போய் செத்தானான்னு பார்த்துட்டு போவோம்!”
“வேண்டாம் ஜான்! நாய் செத்துருக்கும்!” சந்தோசமாய் பைக்கிலிருந்து எழுந்து நின்று மழையை முகத்தில் வாங்கினாள்.
வாஸ்தோ கீழே விழுகையில் பெரிய மரக்கிளையை இருகைகளாலும் பற்றிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தான்.
(இந்த இடத்துல இடைவேளை வச்சா சரியா இருக்கும்றாரு எழுத்தாளர்! சரி நல்ல இடம் தான் சார், என்கிறார் டைரக்டர். இருந்தாலும் வாஸ்தோ சாலையில் சொய்யினு போயி மரத்துல ஹெல்மெட்டோட மண்டை அடிக்கிறாப்ல சீன் வச்சம்னா ஆடியன்ஸ் டீ, சிப்ஸ், ஐஸ்கிரீம் சாப்பிடறப்ப வில்லன் இனி பிழைப்பானான்னு பேசிக்குவாங்க சார்! என்கிறார். எழுத்தாளன் கேமராமேன் அல்லவே!)
அடுத்த அரைமணி நேரப்பயணத்தில் பேட்ரோல் போலீஸ் வண்டி ஏஞ்சலீனாவின் கண்ணில் பட வண்டியை நிப்பாட்டியவள் பேட்ரோல் ஜீப்பை நிப்பாட்டினாள். வண்டியில் மூன்று போலீஸ் இருந்தார்கள். கூடவே டிரைவர் ஒருவர். வண்டியின் முகப்பில் நீளம் வெள்ளை சிகப்பு விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன.
இறங்கி வந்து விசாரித்தவர்களிடம் ஏஞ்சலீனாவும், ஜானும் நடைபெற்ற சம்பவங்களை விளக்கிச் சொன்னார்கள். புல்லட்டை சாலையில் ஓரம் கட்டிவிட்டு ஜீப்பில் அவர்களோடே சம்பவ இடத்திற்கு இருவரும் பிரயாணித்தார்கள். சம்பவம் நடந்த இடத்தில் வண்டியை நிப்பாட்டச் சொன்னவள் முதலாக ஜீப்பிலிருந்து இறங்கி புல்லட் சாய்ந்த பகுதிக்குச் ஓடிச்சென்று பார்த்தாள். அங்கே புல்லட் கிடந்த தடயமே இல்லை. சரியென இந்தப்புறத்தில் எதிராளி விழுந்த பகுதிக்குச் சென்று கீழே எட்டிப்பார்த்தாள். அங்கேயும் எந்த அரவமும் இல்லையென்றான பின் சாலையிலேயே தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.
“என்ன சார் மாயமா இருக்கு! அவனென்ன மனுசனா இல்ல, வேற எதாச்சிமா? விபத்து நடந்து அரைமணி நேரம் கூட இருக்காதுங்களே சார்! மாயமா மறைஞ்சிட்டானே! நமக்கு எதுக்காலயும் அவன் வரலைங்களே சார். அப்ப வந்த வழியிலேயே திரும்பக் கிளம்பிட்டானா?”
ஒருவர் வாக்கி டாக்கியில் கார் ஒன்று சாலையில் எரிந்து கிடக்கும் தகவலை சொல்லிக்கொண்டிருந்தார். கீழிருந்து இத்தனாவது கிலோமீட்டரில் இடம் பற்றி தெளிவாய் அவர் ‘ஓவர் ஓவர்’ சொல்லியபடியே சொல்லி முடித்தார்.
“ஏறுங்க ஜீப்புல எல்லோரும்! நாம இன்னும் பத்திருபது கிலோ மீட்டர் கீழ போயிப்பார்ப்போம்! விழுந்தவனுக்கு அடிபட்டிருந்தா நிச்சயமா வண்டியை அவனால ஓட்டியிருக்க முடியாது. பை சான்ஸ்.. அதனால கூட அவன் உங்களை மறுபடியும் பின்தொடர்ந்து வராம போயிருக்கலாம்ல!” இருக்கலாம்! ஜீப் மீண்டும் பாதை கீழிறங்கும் திசையிலேயே கிளம்பியது.
***
வாஸ்தோ சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஓலைக்கூரை வேய்ந்த பொட்டி டீக்கடை மரபெஞ்சில் அமர்ந்திருந்தான். கடை சற்று மேடான பகுதியில் இருந்தது. கண்ணாடி டம்ளரில் டீயை ருசித்துக் கொண்டிருந்தவனின் புல்லட் கடைக்குப் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. போக, செத்துப்போன பீட்டரின் வண்டிக்கவரில் இருந்த பச்சை வர்ண ஜெர்க்கினும் அதன் பேண்ட்டையும் அணிந்திருந்தான். கடையில் இருந்த பெரியவர் தானும் ஒரு டீ போட்டு எடுத்துக்கொண்டு நின்றபடியே டீ அருந்தினார்.
“ஏன் பெரியவரே, மெயின் ரோட்டை விட்டு இப்படி மேட்டுல தள்ளிக் கடை போட்டிருக்கீங்களே.. யாரு பாப்பா இங்க ஒரு டீக்கடை இருக்குன்னு?”
“தம்பி இது பேருக்குத்தான் டீக்கடை. ஆனா இதான் என் வீடு. முன்ன நான் பேட்டேட்ல பேக்கரி வச்சுத்தான் பொழைப்புத்தனம் பண்ணிட்டு இருந்தேன்! எல்லாம் போச்சு! எல்லாம் போச்சுன்னா என் மகள், மனைவின்னு எல்லோரும் செத்துட்டாங்க! நான் ஒண்டிக்கட்டை. நீ சொன்னாப்புல ரோட்டுக்கும் கிட்டத்தான் ரெண்டு வருசம் முன்ன கடை வச்சேன். ஆனா இங்க வைக்க கூடாதுன்னுட்டாங்க போலீஸ்காரங்க! அதான் இப்படித் தள்ளி வந்துட்டேன். நான் எப்பவும் கடையில் இருக்க மாட்டேன். எனக்கு வேட்டையாடுறதுல தான் மகிழ்ச்சி! எதோ நீ வந்த நேரம் என் வேட்டை முடிஞ்சு வந்து சேர்ந்திருந்தேன். ஆமா, ஏன் உன் புல்லட்டை சாலைக்கி பின்பக்கம் கொண்டு வந்து நிறுத்தினே? போலீஸ் தொறத்துதா உன்னை! ஏக்ஸிடெண்ட் பண்ணிட்டியா?”
“ஆமா பெரியவரே.. ஒரு காருக்குத் தீ வெச்சு கொளுத்திட்டேன்!”
“அப்ப நீ பைத்தியாரப்பயலா? பாக்க அப்படித்தான் இருக்கே!”
“போ பெருசு! எனக்கு உன்னோட கடையை தீ வச்சு கொளுத்தியுட்டுட்டுப் போக மூடே இல்லை! முன்னாடி வச்சிருக்கியே அழகான திருஷ்டி பொம்மை! அதான் நாக்கை நீட்டீட்டு கண்ணாமுழியை திறந்துட்டு முறைக்குதே! அதுக்கும் சேர்த்து பணம் வாங்கிக்க!” என்றவன் தன் பர்ஸிலிருந்து தொகை எடுத்துப் பெரியவரிடம் நீட்டினான். அவரும் மறுக்காமல் வாங்கிக்கொண்டார். அந்த சமயம் தான் பேட்ரோல்ஜீப் சாலையில் கடையைத் தாண்டிச்சென்று நின்று பின்பாக மீண்டும் பின்னாலேயே வந்து நின்று ஹாரன் அடித்தது.
”உன்னை இல்ல தம்பி, நீ உக்காரு அப்படியே! நான் போய் என்னா சார்னு கேட்டுட்டு வர்றேன்!” பெரியவர் இங்கிருந்தே அதிகாரிக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு ஓடினார். ஜீப்பின் அருகே சென்ற பெரியவர் குனிந்தபடியே அதிகாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடித்துவிட, ஜீப் மீண்டும் வட்டமடித்து திரும்பி வந்த வழியிலேயே சென்றது. பெரியவர் இவனை நோக்கி வந்தார்.
அதற்குள் இவன் எழுந்து திருஷ்டி பொம்மையைத் தன் வண்டியின் டூமில் முகச்சரியாய் பொருத்தினான். சற்றுத்தள்ளிப்போய் நின்று கவனித்
தான். புல்லட் இப்போது பயமுறுத்தும் முகவடிவுக்கு வந்ததாய் நினைத்
தான். புல்லட்டைக் கிளப்பிக்கொண்டு கடை வாயிலுக்கு வந்து நிறுத்தி
னான் வாஸ்தோ. ஹெல்மெட்டை எடுத்து முகத்திற்கு அணியும் சமயம் பெரியவர் சொன்னார். ‘தம்பி அவங்க காரை எரிச்சவனைத்தான் தேடீட்டு இருக்காங்க!’ என்றார். அதைக்காதில் வாங்காமல் கிளம்பினான்.
***
ஏஞ்சலீனாவின் புல்லட்டை நிறுத்திவிட்டு வந்த இடத்தில் பேட்ரோல் ஜீப் வந்து நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். ஜானுக்கு காலில் முன்பிருந்த வலி குறைந்திருந்தது போலத்தான் இருந்தது. ஏஞ்சலீனாவின் துணையில்லாமலேயே மெதுவாய் அவனால் எட்டு வைக்க முடிந்தது.
அதிகாரிகள் இருவர் உச்சாப்போக தடுமாறினார்கள் ஏஞ்சலீனா இருப்பதால். இருந்தும் அவசரம் கருதி மரம் செடிகளுக்குள் பிரயாணப்பட்டுப் போனார்கள். டிரைவரும் அவர்களைத் தொடர்ந்து போகவே ஏஞ்சலீனா ஜீப்பின் முன்புறமாக ஓரத்தில் நின்றிருந்த தன் புல்லட் அருகில் சென்று கவரில் இருந்த தன் செல்போனை எடுத்து டவர் இருக்கா என சோதித்தாள். அப்போது தான் ஜான் தன் செல்போனைத் தேடினான் பாக்கெட்டில். அது இல்லை.
“என்னோட செல்போனைக் காணோம் ஏஞ்சலீனா! காரோட சேர்ந்து எரிஞ்சிருக்குமோ! இல்ல வழியில போன யாராச்சும் பார்த்து எடுத்துட்டாங்களோ! எதுக்கும் ஒரு ரிங் அடிச்சிப்பாரேன்! அதுல கம்பெனி டீட்டெய்ல்ஸ்ல இருந்து எல்லா விசயங்களும் இருக்குடி!” என்றான்.
ஏஞ்சலீனா ஜானின் அலைபேசி எண்ணுக்குக் கூப்பிட்டாள். அது ரிங் அடிக்கவே அவுட் ஸ்பீக்கர் போட்டாள். ஆன் ஆனபோது புல்லட் சப்தம்தான் முதலாக கேட்டது அவர்களுக்கு. அதுவும் வேகமாக வருவது போல்!
“டேய் சைக்கோ நாயே! யாரடா நீயி? ஏண்டா இப்படி எங்களை டார்ச்சர் பண்ணுறே?” என்று கத்தினாள். சிரிப்புச் சப்தம் தான் கேட்டது. பின்பாக, ‘‘வந்துட்டே இருக்கேண்டி.. இந்தா வந்துட்டேன்!” சொன்னதும் புல்லட்டின் புடுபுடு சப்தம் திடீரென நின்று போய் காற்றின் சப்தம் மட்டுமே அலைபேசியில் இவர்களுக்கு கேட்டது. இவர்கள் உன்னிப்பாய் அலைபேசியிலேயே கவனமாய் இருக்க.. “ஐயோ!” என்ற சப்தம் பக்கத்திலேயே கேட்டது இருவருக்கும். பார்க்கையில் புல்லட் இவர்களைக் கடந்து தூரம் போகையில் இவர்களைப்பார்த்தபடி வாஸ்தோ பெருவிரல் உயர்த்திக்காட்டி மீண்டும் ஸ்டார்ட் செய்து புடுபுடுத்தபடி சென்றான்.
ஜீப் அருகே கையொன்று ‘தட் தட் தட்டென’ தட்டும் ஒலி கேட்கவே இருவரும் ஜீப்பின் இந்தப்புறம் வந்து பார்த்து அதிர்ந்தார்கள். அலைபேசி கையிலிருக்க அப்படியே சாய்ந்து கிடந்த போலீஸ்காரரின் கழுத்தில் குத்துவாள் செருகி நின்றிருந்தது. மூன்று அதிகாரிகளில் ஒருவர் செத்துப்போனார் அதே இடத்தில். இன்னமும் இரண்டு அதிகாரிகளும், டிரைவரும் பாக்கி!
ஏஞ்சலீனாவுக்கு அலைபேசியில் கேட்ட குரலை எங்கோ எப்போதோ கேட்டது மாதிரிதான் இருந்தது! எங்கே என்றுதான் தெரியவில்லை அவளுக்கு.
***
மாலை நேரம். மழைத்தூறல் கடந்த ஒருமணி நேரமாகவே இவர்கள் பாதையில் தொடர்ந்து பெய்து கொண்டேதான் இருக்கிறது. ஏஞ்சலீனா புல்லட்டை அதிவேகத்தில் ஓட்டிக்கொண்டு வளைவுகளில் ஜானோடு படுத்துப்படுத்து எழுவதுமாதிரியான வேகத்தில் செல்கிறாள். பின்னால் வாஸ்தோவின் புல்லட்டும் அதே வேகத்தில் அவர்களை விடாமல் துரத்துகிறது.
ஒரு கட்டத்தில் பேலன்ஸ் தடுமாறி ஏஞ்சலீனாவின் புல்லட் சாலையில் இங்கும் அங்குமாய்த் தடுமாறி சாலையின் ஓரம் நோக்கி கிறீச்சிட்டபடி கதறிச் சாய்ந்து வழுக்குகிறது. ஏஞ்சலீனா இரண்டு குட்டியாக்கரணமடித்து எழுகிறாள். ஜான் என்னவானான்? என திரும்பிப்பார்க்கையில் பைக்கின் மேல் படுத்துக்கிடக்கும் ஜான் தன் பெருவிரலை உயர்த்திக்காட்டி ‘நான் செளக்கியம்!’ என்கிறான்.
சாலைப்பணியாளர்கள் சாலையை செப்பனிட நீளவாக்கில் குட்டான் குட்டானாய் கருங்கற்களைத் தொடர்ந்து வரிசையாய் சாலையோரத்தில் குவித்திருக்கிறார்கள். கைக்கு வாட்டமாய் இரண்டு கைகளிலும் இரண்டு கருங்கற்களை எடுத்துக்கொண்டு சாலையின் இந்தப்புறமும் அந்தப்புறமும் வாஸ்தோவின் வரவை எதிர்பார்த்துப் பரபரப்பாய் காத்திருந்தாள் ஏஞ்சலீனா.
மாலை விழும் நேரமாகையால் வாஸ்தோ தன் வண்டியின் ஹெட்லைட்டை இயக்கியிருந்தான். அவனது புல்லட் இப்போது ஸ்லோவாகத்தான் இவளை நோக்கி வந்துகொண்டு இருந்தது. ஓரளவு அருகில் நெருங்கிய சமயம் ஏஞ்சலீனா முதல் கல்லை அவனை நோக்கி எறிந்தாள். அது அவன் வண்டியின் விளக்கொளி கண்ணாடியைப் பதம்பார்க்க அது சில்லு சில்லாகத் தெறித்தது. அடுத்த கல் இவனது இடது காலில் வந்து வேகமாய் மோதிவிட, “ஹாஆஆ” என்ற வலியின் சப்தம் கவசத்துக்குள் கேட்கும் சமயம் ஸ்லோமோசனில் ஏஞ்சலீனாவைக் கடக்கும் வாஸ்தோ அவளைத்தாண்டிப்போய் வண்டியை நிறுத்தி தன் ஹெல்மெட்டைக்கழற்றி தான் யார் என்று அவளுக்கு முகத்தை திருப்பிக் காட்டுகிறான்.
ஏஞ்சலீனாவின் முகத்திலும் பெரிய அதிர்ச்சி! ‘இவனா?’ என்ற பார்வை அது. பின்பாக அவன் தன் புல்லட்டைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிடுகிறான்.
***
நான்கைந்து பேட்ரோல் ஜீப்புகள் சாலையில் இருளில் நிற்கின்றன. ஒரு வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஏஞ்சலீனா அதிகாரிகளுக்கு, ‘இப்படி அவன் போய் பத்து நிமிடம் ஆகிறது சார்!’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள், கேமரா அப்படியே அந்த இடத்திலிருந்து மேலே உயருகிறது. உயர்ந்துகொண்டே வருகிறது. அனைத்து வண்டிகளின் விளக்குகளும் இருளில் நின்று நின்று எரிகின்றன. ஒரு குறும்பாறை ஒன்றின் மேல் புல்லட் படுத்திருக்க, அதன்மீது கால் மேல் கால்போட்டபடி படுத்திருந்த வாஸ்தோவின் கையில் சுருட்டு புகைகிறது!
***
டைரக்டர் : அவ்ளோதானா சார்? மிச்சம் மூனு போலீஸ்காரங்களை வாஸ்தோ கொல்லுற சீனெல்லாம் நீங்க இங்க சொல்லவேயில்லையே! உடனே முடிவுக்கு வந்துட்டீங்க?
எழுத்தாளன் : அதை நான் வேணும்னே தான் சொல்லலைங்க!
டைரக்டர் : அப்ப நாம வில்லனை இந்தப்பார்ட்டுல கொல்லப்போறதில்லையா சார்?
எழுத்தாளர் : அவனை வில்லன்னு நான் எங்கேயும் சொல்லலீங்களே! அதனால கொல்லலை.
டைரக்டர் : முகத்தைப் பார்த்ததும் ‘இவனா?’ன்னு நாயகி பார்க்கிறாங்க சார்! அப்ப அவன் யாரு?
எழுத்தாளன் : அது திருப்புக்காட்சியில பத்து நிமிசம் சொன்னா போதுமுங்க!
டைரக்டர் : சார் ஏற்கனவே ஏழு படத்துல நான் பாடல்கள் பண்ணியிருக்கேன்! இதுல அந்தப்பொண்ணு பெர்த்டே கொண்டாடுறப்ப ஒரு சாங் வச்சிக்கலாம். அப்புறம் ஹோட்டல் ரூமுக்கு ஜான் வந்த பிறகு ஒரு டூயட் சாங் வச்சிக்கலாம். திருப்புக்காட்சின்னு சொல்றீங்களே.. அங்க ஒரு சாங் வச்சிக்கலாம். அப்புறம் சாலையில பைக்குகள் சர் சர்னு போறப்ப பேக்ரெளண்டுல ஒரு சாங் வச்சிக்கலாம்!
எழுத்தாளன் :- அப்படியே படத்தை சாவடிச்சிடலாம்! இந்தப்படத்துக்கு முக்கியம் என்னான்னா மியூசிக் டைரக்டரும், கேமராமேனும் தானுங்க! இது முழு ஸ்கிரிப்ட் இல்ல. சும்மா ஒரு முயற்சிதான். இது ஸ்பீல்பெர்க்கின் தி டூயல் படத்தை ஞாபகப்படுத்துதுன்னு ஒருத்தன் சொல்லுவான். சொல்லிட்டுப்போறான். சொல்றவனுங்களுக்கென்ன ஆயிரம் சொல்லுவாங்க! ஆனா இது நம்ம முயற்சிதான்.
டைரக்டர் : அப்ப பண்ணிடலாம் சார்! புரடியூசர்கிட்ட கதையை சொல்லணும். அவருக்குப் பிடிச்சிருந்தா நிச்சயம் பண்ணுறோம்! அதுவரைக்கும் இதை வெளிய லீக் பண்ணிடாதீங்க சார்.
எழுத்தாளர் : பண்ணவே மாட்டேனே!