ரெங்கராஜன் வாத்யார் யாரையும் அடித்து நான் பாரத்ததேயில்லை. எவ்வளவு கோபம் வந்தாலும் அவர் மாணவர்களை நோக்கிக் கையைக் கூட ஓங்கியதில்லை. வகுப்பறைக்கும் பிரம்பைத் தூக்கி வந்ததில்லை. பிற ஆசிரியர்கள் ஓய்வறையில் நொச்சிக் கம்பை ஒடித்து வைத்திருப்பார்கள். சில பிரம்புகள் ஆடை சுழற்றிய நிர்வாண உடல்கள் மாதிரி பளபளவென்று வெள்ளையாக இருக்கும். ரெங்கராஜன் சார் மேஜையில் பகவத் கீதைக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு.. சாருக்குக் கோபம் வந்து அது உச்சகட்டத்தைத் தொடுகிற போது ‘தொலைச்சிடுவேன் ராஸ்கல்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு கீச்சுக்குரலில் கத்துவார். அது ஓர் அணில் விசிலடிக்கிற தோரணையில் இருக்கும்..ஆனால் சொல்லி முடித்ததும் கொஞ்ச நேரம் உடம்பெல்லாம் வியர்த்து கை கால்கள் நடுங்கும். சாக்பீஸை வீசி எறிந்து விட்டு மௌனமாக வெளியேறி விடுவார்.
அவருக்கு ஒல்லியான உடம்பு. ரோஜா நிறத்தில் இருப்பார். கன்னங்களே இல்லாத நீள் முகம். நேர் நாசி. அளவான சிறிய கண்கள். நெற்றியில் நீளமாகத் தலையின் உச்சி வரை சிவப்பு நிறத்தில் நாமம் போட்டிருப்பார். அவருக்கு வழுக்கைத் தலை என்பதால் அந்த நாமம் ஒரு நீண்ட சாலையில் விழுந்த சிவப்பு சிக்னலின் கானல் நீர் பிம்பம் மாதிரி இருக்கும்.
ஆசிரியர் அறையில் அவர் பெரும்பாலும் யாரோடும் பேச மாட்டார். அவர் மேசையும், நாற்காலியும் கூட சற்று விலகித்தான் இருக்கும். அழுக்கான மஞ்சள் பையில் தண்ணீர் பாட்டிலும், சோற்று டப்பாவும் கொண்டு வருவார். தினந்தோறும் தயிர் சாதமும், அதற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் மட்டும்தான். அவரைப் பிற ஆசிரியர்களோடு சவுந்தர் அண்ணன் தேநீர்க் கடையிலோ, மைதானத்திலோ, மரத்தடியிலோ நாங்கள் கண்டதில்லை.
பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மைதானத்தில் கூடி நின்று ‘ஓடுறா’, ‘புடிறா’, ‘சூப்பர்ரா’, ‘வந்துர்றா’, ‘பாத்துடா பாத்துடா’ என்று கலவையான குரல்களில் கத்திக் கொண்டிருக்கும் போது அவர் ஓய்வறையில் உட்கார்ந்து இந்துவையோ, தினமணியையோ விரித்து வைத்து அதற்குள் ஒளிந்திருப்பார்..
‘ஐயரு கிரவுண்டுக்கு வந்தா மாமி கோச்சுக்குமா மாப்ள?’
‘அந்தம்மா கோச்சுக்குதோ இல்லியோ ஐயர்னு நீ சொன்னத கேட்டா அவரே கோச்சுக்குவார்பா. மேற்படி ஆளு ஐயரில்ல.. அக்மார்க் ஐயங்கார்.’
‘ரெங்கராஜங்கிறது ஒங்க பேரு. ஐயங்கார்ங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமான்னு?’ குடுமிய பிடிச்சு கேக்க ஒரு சின்னப் பயல பட்டை போட்டு அக்ரஹாரத்துக்கு அனுப்பி வப்பமா?’
‘ஆமா இவரு பெரிய பாரதிராசா. கேமராவ ஆட்டியே சாதிய ஒழிக்கப் போறாரு போயா.’
‘அவரு நம்ம ஸ்டாஃப் பாத்ரூம்ல ஒரு தடவை கூட ஒண்ணுக்கு கூடப் போனதில்ல தெரியுமா?’
‘ஏனாம்?’
‘அது சூத்திரன் மோள்ற மூத்திரப்பொறையில்ல.’
‘நம்ம ஹெச். எம் சூத்திரந்தானே. அவருக்குக் கீழ எப்புடி வேலை பாக்குறாரு?’
‘அவரு சூத்திரன் இல்லை மாப்ள.விதேசி.’
‘அப்படின்னா! ‘
‘சுதேசிக்கு ஆப்போசிட். விடுங்க பி.டி.’
‘சரி ஒண்ணுக்கு வந்தா என்னா செய்வாரு?’
‘ஸ்கூல்ல இருக்கப்ப ஒண்ணுக்கு வராம இருக்க மந்திரம் சொல்லுவாரா இருக்கும்.திருமலை சொன்னான். டிராஃபிக் கான்ஸ்டபிள் கை காட்டுனா ஹை ஸ்பீட் லாரி டக்குன்னு பிரேக் போட்டு நிக்கிற மாதிரி மூத்திரம் ஒடனே நின்னுரும் போல. சாயங்காலம் அஞ்சு மணிக்கு டிபன் பாக்ஸை மாமிட்ட கொடுத்துட்டு பேன்ட்ட புடிச்சுட்டே போயி புழக்கடைல நின்னு பைப்பைத் தொறந்து விட்ருவார்.’
‘அப்பிடி ஒரு மந்திரம் இர்ந்தா நம்ம பி.டி.ய உக்கார வச்சு மர்ம ஸ்தானத்துல ஓதி விடனுமப்பா. கண்ட இடத்துல கோவணத்தை அவுக்காம கற்புக்கரசனா இருப்பாப்லைல.’
‘ஆமா பி.டி. நல்லா ஊதுவார்னு கேள்விப்பட்டேனே.’
‘எதை?’
‘விசிலுயா.. நீ எத நினைச்ச?’
‘யே பின்னாடி பெஞ்சுல லேடிஸ் ஸ்டாஃப் இருக்காங்கப்பா.’
‘அவுஹ பேசாத பேச்சா. அதெல்லாம் ஒண்ணு விடாம கேட்டுட்டு அங்க போயி நம்மள வடச்சட்டில போட்டு வறுத்து எடுப்பாஹ.’
‘என்னடா வாயி பாக்குற. அங்குட்டு போயி ஒக்கார்றா.’
ஆசிரியர்கள் மைதானத்தில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ஓய்வறையில் ‘இந்து பேப்பர்’ நழுவி விழ தூங்கிப் போயிருப்பார்.
ஆசிரியர்கள் பேசுவதை வாய் பார்த்து வாய் பார்த்து நாங்களும் ரெங்கராஜன் சார் பள்ளி கக்கூஸில் ஒண்ணுக்குப் போகாததைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். வாத்தியார் கக்கூஸ் பக்கம் அவரைப் பார்த்ததேயில்லை. இடிந்த கட்டிடங்களுக்குப் பின் வேட்டியைத் தூக்கி நிற்கிற போது மாணவர்களைப் பார்த்து விட்டால் ‘இங்க என்ன மொந்தை வாழப்பழமா கூறு கட்டி விக்கிறாங்க. அங்குட்டு போங்கடா’ என்று சில வாத்யார்கள் எங்களை விரட்டிக்கொண்டே ‘சர்சர்ரென்கிற’ சத்தத்தோடு விடுதலை உணர்வை அடைவார்கள்.சாரை அந்தக் கோலத்திலும் நாங்கள் பார்த்ததேயில்லை. அவரின் அடக்கும் திறன் குறித்து எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முத்துச்சாமியெல்லாம் ரீசஸ் பீரியட் வரை கூட தாக்குப் பிடிக்க மாட்டான். வகுப்பே நாறி விடும். பத்துக்குப் பிறகு இருபாலர் கல்வி என்பதால் வகுப்பு நடக்கும் போது இடையில் முட்டிக் கொண்டு வந்தால் கூட பெண் பிள்ளைகள் முன்னிலையில் ‘சார் ஒண்ணுக்கு’ என்று கேட்க கூச்சப்பட்டு வெறுமனே எழுந்து நிற்போம் . அதற்கே சுப்ரமணி சார் ‘என்னடா மோளப் போறீங்களா?’ என்று கேட்டு பெரிய நகைச்சுவையை உதிர்த்தது போல் ‘ஹெஹெஹெ’ என்று ஆபாசமாகச் சத்தம் கொடுப்பார். பிள்ளைகளெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க எங்களுக்கு அவமானமாகி விடும். அந்தச் சிரிப்பைக் கேட்ட அடுத்த நொடியில் மூத்திரப்பையே உலர்ந்து விடும்.
‘ஏண்டா ! சார் நிசமாவே மந்திரம் வச்சிருக்காராடா?’
‘இல்லடேய்..அவரு யோகா பண்ணி மூத்திரத்தை முதுகெலும்பு வழியா மேல ஏத்திருவார்டி.’
‘போடா லூசு. அப்பிடி ஏத்துறது மூத்திரத்தை இல்லடா. அதடா. புரியுதா அது… விவேகானந்தர் புஸ்தகத்துல எங்க மாமா படிச்சாராம்.’
அவரைப் பற்றி விதவிதமான கற்பனைகளை நாங்களே உருவாக்கிக் கொண்டோம். ‘அவர் கோவணம் கட்டி அதற்கு மேல்தான் கால்சட்டை போடுகிறார்’என்று மாருதி குல தெய்வத்தின் மீது சத்தியம் செய்தான். அதை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்து உறுதி செய்து விட வேண்டும் என்று பலரும் எங்களுக்குள் யோசித்து வைத்திருந்தோம். ஆனால் அந்த விஷப்பரீட்சைக்கு எவரும் துணியவில்லை.
மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் ரெங்கராஜன் சார் யாரையும் திட்ட மாட்டார்.
‘பத்தாதுடா’
‘பகவான் காப்பாத்தட்டும்.’
‘பெருமாளே.’
இவ்வளவுதான். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டார். பாடம் நடத்தும் போது யாராவது பேசிக் கொண்டிருந்தால் திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். அவருடைய உதடு நடுங்க ஆரம்பிப்பதற்குள் நாங்களே அமைதியாகி விடுவோம். வகுப்பறைக்கு வெளியே வணக்கம் சொல்லாவிட்டாலோ ,தெருக்களில் ஏதாவ தொரு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ அவர் மற்ற ஆசிரியர்களைப் போல் ஒருபோதும் எங்களை விசாரித்ததில்லை. யாரோ போல் பாவனை செய்தபடி போய் விடுவார். அதே மாதிரி நிஜமான காரணங்கள் இருந்தாலும் யாரையும் வகுப்பிலிருந்து சாதாரணமாக வெளியே விட மாட்டார். மாதாந்திர வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த தனலட்சுமியை அவர் கடைசி வரை ஓய்வறைக்கு விடவேயில்லை. அன்று மாலை தலைமையாசிரியரோடு சேர்ந்து அத்தனை பெண் ஆசிரியர்களும் கூட்டமாக வந்து திட்டிய போது மௌனமாகவே நின்றிருந்தார். ‘வலின்னா லீவு போட்ருக்கலாம்ல. அதானே ரூல்.’ இதை மட்டும் சொல்லி விட்டு ஒன்றுமே நிகழாதது போல் கிளம்பி விட்டார். ஆனால் அவரும் அப்படித்தான். எந்த வகுப்பிலும் இடையில் போனதேயில்லை. மணியடிக்கும் வரை விடாமல் பாடம் நடத்துவார். வகுப்பு தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே சாக்பீஸ், அழிப்பானைக் கையில் பிடித்தபடி வாசலில் வந்து நிற்பார். உள்ளிருந்து வெளியே போகும் ஆசிரியர் ‘குட்மார்னிங் சார்’ கூறினால் தலையை மட்டும் அசைப்பார். பதில் கூற மாட்டார். சில நேரங்களில் மூக்கை விநோதமாக உறிஞ்சிக் கொண்டே மோப்ப நாய் மாதிரி உள்ளே நுழைந்து அடுத்த நொடியே ஏதாவதொரு பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டு நாற்காலியில் உட்காருவார்.
‘அவருக்கு யாருக்கு பீரியட்னு கூட தெரிஞ்சிரும்டா. எல்லாம் மந்திரத்தோட பவர்’
கலீலுல்லாஹ் இப்படித்தான்.. திடீரென்று பயங்கரமான அணு குண்டைத் தூக்கி எங்கள் நடுவே போட்டு அவ்வப்போது மிரள வைத்து விடுவான்..
ஆனால் பாடம் நடத்துவதில் அவருக்கு நிகர் யாருமில்லை. எத்தனை முறை மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டாலும் சலிப்படையவோ, கோபப்படவோ மாட்டார். அவர் இயற்பியல் நடத்தினால் வீட்டிற்குப் போய்த் திரும்பப் படிக்க வேண்டிய அவசியமே இருக்காது. அப்படியே மனதில் பதிந்து விடும். செய்முறைப் பயிற்சி வகுப்புகளும் அப்படித்தான். ஆனால் மாணவர்களை விலகி நிற்க வைத்தே சொல்லித் தருவார். யாராவது ஒட்டி நிற்க முனைந்தாலும் தோளைப் பிடித்து மென்மையாகத் தள்ளி விடுவார்.
பிற ஆசிரியர்கள் முருகனுக்கோ, ஐயப்பனுக்கோ மாலை போட்ட மாணவர்களை என்ன செய்தாலும் திட்டாமல் ‘சாமி’ என்று கேலி கலந்த மரியாதையோடுதான் விளிப்பார்கள். ரெங்கராஜன் சார் யாரையும் ‘சாமி’ என்று கூப்பிட மாட்டார். மாலை போட்டவர்களைப் பார்த்தால் கடுகடுவென்றிருப்பார். வழக்கத்தை விடக் கூடுதலாக ‘ டேய் ‘ என்ற சொல்லை அழுத்திச் சொல்வார். ஆனால் வெள்ளிக்கிழமை மதியம் ஜூம்ஆ தொழுது விட்டு இஸ்லாமிய மாணவர்கள் சற்று நேரம் தாமதமாக வந்தால் அவர் பிறரைப் போல் திட்டியதே இல்லை. ‘நமாஸ்தானே பண்ணிட்டு வர்ற. கெட் இன்’ என்று வகுப்பில் உட்கார வைத்து விடுவார். நோன்புக் காலத்திலும் அப்படித்தான். மதியங்களில் முஸ்லிம் மாணவர்கள் பெஞ்சில் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தால் ‘ஃபாஸ்டிங்காடா?’ என்று கேட்டு விட்டு ஒன்றுமே சொல்லாமல் கரும்பலகையை நோக்கி நகர்ந்து விடுவார்.
அவருக்கு ராஜீவ் காந்தி மீது அபாரமான பிரேமை உண்டு. ராஜீவ் படத்தை ஆசிரியர் அறையில் ஒட்ட முயல ராஜா சார் ‘அப்ப நான் பெரியார் படத்தை ஒட்டவா ?’ என்று கேட்க , கோபமாக வெளியேறியவர் மாலையே ராஜீவ் காந்தி படத்தைத் தன் சைக்கிளின் பின்புறம் பெயிண்டில் அடிக்கச் சொல்லி விட்டார்.ஆனால் அது பார்ப்பதற்கு ராஜீவ் காந்தி மாதிரியே இல்லை. ஒல்லியாக வேறு யாரோ மாதிரி இருந்தது. ‘ஒத்தக்கண் சிவராசனாவது ராஜீவ் காந்திய ஒரேயடியா கொன்னுட்டான். இந்தாளு ஒரு எக்ஸ் பிரைம் மினிஸ்டர சோறில்லாம பட்டினி போட்டு படமா வரைஞ்சு வச்சிருக்காப்ல.’ ராஜா சார் கிண்டல் செய்தார்.மறுநாளில் இருந்து சைக்கிளை வீட்டிலேயே நிறுத்தி விட்டு நடந்து வர ஆரம்பித்து விட்டார். எப்போதாவது பாடத்திற்கு நடுவே ராஜீவ் காந்தி பற்றிப் பேசுகிற போது மட்டும் கண்களில் லேசாக நீர்த்துளி எட்டிப் பார்க்கும். ஆனால் அழ மாட்டார். அடுத்த நொடியே முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு ‘தமிழ்நாட்ட பெருமாள் மன்னிக்க மாட்டார்றா. நாமெல்லாம் பாவிகள்.. பெரும் பாவிகள்’ என்று எங்கோ பார்த்தபடி கூறுவார். அது ஒரே நேரத்தில் சாபம் போலவும், பிரார்த்தனை போலவும் ஒலிக்கும்.
எதைப் பற்றி நடத்தினாலும் பாடத்தில் அவருடைய ஆன்மீகம் எப்படியோ உள்ளே நுழைந்து விடும்..
‘பெருமாள் கடல்ல படுத்துருக்கிற மாதிரி நியூட்ரான் அமைதியா இருக்குடா. கண்ணன் குழல் ஊதி கோபியர்களை மயக்குற மாதிரி நேர்நிலையான ஆளு புரோட்டான். எலெக்ட்ரான் இருக்கானே அந்த படுவா சங்கு, சக்கரத்தோட நிக்கிற சண்டைக்காரப் பய. சம்ஹாரம் பண்ற வேகத்தோட வட்டத்தைச் சுத்தி சுத்தி வாரான்.’
அணு குறித்துப் பாடம் நடத்தினாலும் நியூக்ளி யஸூக்குள் பெருமாளைப் படுக்க வைத்து விடுவார். ஆனால் அதற்கு யாராவது சிரித்தால் பயங்கரமாய் கோபம் வந்து விடும். உதடுகள் துடிக்க சாக்பீஸை எடுத்து விடுவார்.
ராஜா சாரின் சிஷ்யப் பிள்ளையான குமரன் சார் அடிக்கடி ரெங்கராஜன் சாரிடம் நேரில் போய் வம்பிழுப்பார்.
‘சார் எம்பேரு என்ன?.. சொல்லுங்க பாப்போம்.’
‘தமிழ் சார்.’
‘அது தொழில் சார்..எம்பேரு என்ன?’
‘தமிழ் சார்.’
எத்தனை முறை கேட்டாலும் இதே பதில்தான். மறந்தும் ‘குமரன் ‘ என்று கூறி விட மாட்டார். ‘குமரன்’ என்று உச்சரித்தால் பயங்கர கோபத்தோடு பெருமாள் வைகுண்டத்தின் கதவைச் சாத்துகிற மாதிரி அவர் கண் முன்னால் காட்சி ஓடுமோ என்னவோ? இதற்காகவே வருகைப் பதிவேடு எடுக்கும்போதும் எண்களைக் கூறியே மாணவர்களை அழைப்பார். யாரையாவது அழைப்பதாக இருந்தாலும் கூட எண் மட்டும்தான். ‘டேய் ஃபார்ட்டி நைன் இந்த டஸ்டரை தட்டிட்டு வாடா’ என்றுதான் ஆணைகள் பறக்கும். வெளியில் வணக்கம் சொன்னால் கூட ‘என்ன தர்ட்டி எய்ட். நாளைக்கு எக்ஸாம் இருக்கு. படிக்காம இப்டி கடைவீதில சுத்திட்டு இருக்க’ என்று ஞாபகம் பிசகாமல் கேட்பார். சிவப்பு நாமத்தைப் பூசிய
கையோடு மந்திரம் சொல்லி மனிதர்களை எண்களாக்கி ஊரெங்கும் அலைய விட்டிருக்கிற கால்சட்டை அணிந்த பிரம்மாதானோ அவர்? என்றெல்லாம் எனக்கு யோசனை வரும்.
பியூன் திருமலையை மட்டும் மணிக்கொருமுறை கூப்பிடுவார்.. அவரிடம் யாருக்காவது ஏதாவது காரியம் வேண்டியிருந்தால் திருமலையைத்தான் அனுப்பி வைப்பார்கள். பியூன் திருமலை மண்டையைச் சொறிந்து கொண்டு வாசலில் நிற்கும் போதே ‘வாங்க திருமலை’ என்று உற்சாகமாக வரவேற்பார். அவர் பத்து முறை மண்டையைச் சொறிந்து முடிப்பதற்குள் சார் மனம் இளகி விடும். ‘ஒனக்காக திருலை.. ஒனக்காண்டிதான் திருமலை’ என்று பத்து திருமலை போட்டு விடுவார். யாராவது பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி வந்தால் கூட வெளியே அனுப்ப மாட்டார். நிர்தாட்சண்யமாக ‘இப்ப பார்க்க முடியாது. இன்டர்வல் வரை ஆபிஸ் ரூம்ல இருங்கோ’ என்று கடுமையாகக் கூறி விட்டு வெளக்கெண்ணெய்க்குள் குண்டைப் போட்டு viscosity யை விளக்க ஆரம்பித்து விடுவார். தேர்வுகள் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் வரை மற்ற ஆசிரியர்கள் தேர்வறைக்குள் மாணவர்களை அனுமதிப்பார்கள். ஆனால் ரெங்கராஜன் சார் ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் கொலைக் குற்றவாளியைப் போல் திட்டி விட்டு வெளியே துரத்தி விடுவார். தலைமையாசிரியரே பரிந்துரைக்கு வந்தாலும் ‘அப்ப நீங்க ஹாலைப் பாருங்கோ. நா ஆத்துக்குப் போறேன்’ என்று கிளம்பத் தயாராகி விடுவார்.
‘அவருக்குப் புள்ள இல்ல மாப்ள. அதான் பசங்க கிட்ட இப்படி கொடூரமா நடந்துக்குறார் போல’
‘அது அப்டி இல்லய்யா.. புள்ள பத்து வருஷம் லேட்டா வந்துச்சாம்.. இவரு நர்ஸை வெளில போகச்
சொல்லிட்டு மாமி பக்கம் குனிஞ்சு’ ஓ மை சைல்ட்.. ஒய் ஆர் யூ லேட் நவ்.. யூ நோ.. ஐ யாம் எ ஸ்ட்ரிக்ட் டீச்சர்.. ஐ டோண்ட் அலவ் யூ. கோ பேக் வைகுண்டம்னு ‘விரட்டி விட்ருப்பார்.’
‘யே இது ரொம்ப கொடூரமான சிந்தனை பி.டி. இதுக்கு அந்தாளே பரவால்ல’
ஆனால் அவரை இப்படிக் கலாய்த்த ஆசிரியர்களெல்லாம் பள்ளிக்கூடத்து வாசலில் கொய்யாப்பழம் விற்கும் மாரியம்மா மகனின் ஆபரேசன் செலவுக்குக் காசு கேட்ட போது ஒரு காசு கூட தரவில்லை. இவர் மட்டும்தான் யாரிடமோ ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். ஆபரேசன் முடிந்த மறுநாள் கொய்யாக்காரக்கா நன்றி சொல்ல வந்த போது ‘வகுப்பு எடுக்கறச்ச வந்து டிஸ்டர்ப் பண்ணாத. வெளில போ’ என்று ஈரமேயில்லாமல் விரட்டியடித்தார். ஆனால் கொய்யாக்காரம்மா மூலமாக விஷயம் தெரிந்த பிறகு ஆசிரியர்கள் அவரைக் குறை பேசுவதைக் குறைத்துக் கொண்டனர்.
ஒரு தடவை வேண்டுமென்றே மாணவர்கள் கூடிப் பேசி அவரிடம் ஏதோ பாடத்தில் சந்தேகம் கேட்பதைப் போல் இதைக் கேட்டோம்..
‘சார் யூரின் வர்றப்ப உடனே போகாம அதை அடக்கி வைக்கிறது சரியா? தப்பா சார்? கலீலுல்லா ஒண்ணுக்கு வந்தாலும் ஸ்கூல் பாத்ரூம்ல போகவே மாட்டேங்கறான் சார்.’
இயற்பியல் ஆசிரியராக இருந்தாலும் அவரிடம் எல்லாப் பாடத்திலும் சந்தேகம் கேட்போம். அவருக்கும் அதில் சந்தோஷம். பெருமிதத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இயந்திரம் போல் பதில் சொல்வார்.
ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் பதில் பேசாமல் உறைந்து நின்று விட்டார். கோபம் வருகிற போது உதடுகள் துடித்து சாக்பீஸை எடுக்கும் ரங்கராஜன் சாரை அங்கே பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் எங்கள் அத்தனை பேரையும் உற்றுப் பார்த்தார். கண்களில் கடுமையான சீற்றம் தெரிந்தது. ஆனால் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் நிதானமாகப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார். அதற்கடுத்த ஒரு மாதமும் அவர் எங்கள் வகுப்பிற்கு வரவில்லை. அவருக்குப் பதிலாக சுப்ரமணியம் வாத்யார்தான் வந்து இயற்பியல் எடுத்தார். வகுப்பறைக்கு வெளியில் கூட எங்களைக் கண்டால் தூரத்திலேயே விலகிப் போக ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் எந்த ஆசிரியர்களுடனும் ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை என்பதை வழக்கம் போல் வாத்யார்களின் வாய் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.
அடுத்த மாதமே முழு ஆண்டுத் தேர்வு வந்து விட்டதால் அவரை எல்லோரும் சுத்தமாக மறந்து விட்டோம். இயற்பியலில் யாருமே தோல்வி அடையவில்லை. அனைவருமே நல்ல மதிப்பெண்கள் வேறு பெற்றிருந்தோம். ஆனால் அப்போதும் அவரைப் பற்றி யோசித்து மானசீகமாகவாவது அவருக்கு நன்றி கூறுவதற்கான அவகாசமோ , சூழலோ எங்களுக்கு வாய்க்கவில்லை. மாற்றுச் சான்றிதழ் , மதிப்பெண் பட்டியல் , கல்லூரி சேர்க்கை என்று வயதுக்கு மீறிய அலைச்சல்களில் எதையும் யோசிக்க முடியவில்லை. இளங்கலையில் நான் இயற்பியல் சேர்ந்தேன். அவரை விடச் சிறந்த ஆசிரியர்களைக் கல்லூரியில் சந்தித்ததால் ரெங்கராஜன் சாரை மறந்தே போனேன். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் முதுகலை படித்த போது ஒரு பேச்சுப் போட்டிக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தேன். சக பேச்சாளனான நண்பன் பிரசன்னாவுடன் ரெங்கநாதர் கோவிலுக்குப் போன போதுதான் மின்னல் வெட்டியது போல் சாரின் ஞாபகம் வந்தது.
அன்று மாலையே நண்பன் சிவநேசனின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். அவன்தான் எடுத்தான். வணக்கம் கூடச் சொல்லாமல் ‘மாப்ள ரெங்கராஜன் சாரு நல்லா இருக்காரா?’ என்றுதான் ஆரம்பித்தேன்..
‘என்னடா ஏதோ கோடாங்கி கிட்ட குறி கேட்டவன் மாதிரி எடுத்த எடுப்பிலேயே இதைக் கேக்குற . அப்ப விஷயம் தெரியுமா ஒனக்கு?’
‘ஏன் ? என்னாச்சு?’
‘சார் இன்னைக்கு காலைதேண்டா செத்….ஸாரி வைகுண்டப் பதவி அடைந்தார்.’
‘…………………………………..’
‘ஆறு மாசமா படுக்கைல இருந்துருக்கார். ரிட்டயர்டானதில இருந்தே ஒடம்பு சொகமால்ல போல.’
‘என்னவாம்?’
‘வேறென்ன? கிட்னில பெரிய ப்ராப்ளமாம்..’
அவன் வைத்து விட்ட பிறகும் நான் அந்தத் தொலைபேசி ரிசீவரோடு கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். அவரை யோசிக்கிற போது கடைசியாக நெற்றியில் பூசியிருந்த நாமத்தின் வாசனையை இங்கிருந்தே நுகர முடியுமா ? என்று விநோதமாக யோசித்தேன். நிஜமாகவே பின்னால் ஏதோ வாசனை அடித்தது.
அறைத்தோழன் முரளி பாதி கடித்த கொய்யாப் பழத்தோடு என் தோளில் கை வைத்தான்..

maanaseegan24@gmail.com