“தண்ணீர் ஒருசொட்டு இல்லாத/பிரான்சேரி குளத்தில்//தவளைக்கல் விடுகிறான்//ஞாபகங்களால் நிரம்பியவன்”
– கல்யாண்ஜி

சென்ற கட்டுரையில் எண்ணங்கள் எப்படி உருகின்றன, எங்கு உருவாகின்றன என்பன போன்ற விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்தோம். இன்னும் கொஞ்சம் விரிவாக என்ணங்கள் என்றால் என்ன எனப் பார்ப்போம். மொழி என்பது பிறருடன் தகவல் தொடர்பு செய்வதற்காகவே உருவானது என்பது தவறான கருத்தாகும். புற உலகைப் பற்றி நம் மனதுக்குள் நினைத்துப்பார்த்து அதற்குத் தகுந்தவாறு நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதற்கு உருவானதே மொழியும் அதன் நீட்சியாக எண்ணங்களும். ஆதிமனிதன் ஒரு புலி இல்லாதபோதுகூட அதைப் பற்றி நினைத்து அது வருமா இல்லையா என யோசித்துத் தன் திட்டங்களை அமைக்க வேண்டும். வெளிஉலகைத் தன் அக உலகில் பிரதிநிதிப்படுத்தும் (Metarepresentation) குறியீடே மொழி .
மொழியியல் அறிஞர் சசூர் இதை குறிப்பான் (signifier), குறிப்பீடு (signified) என்கிறார். புலி என்ற ஒலி ஒரு குறிப்பான். மஞ்சள் நிறத்தில் வரிகளுடன் காட்டில் உலவும் ஒரு மிருகம் குறிப்பிடப்படுகிறது. புலி என்ற ஒலி ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறாக இருந்தாலும் குறிப்பிடப்படும் பொருள் ஒன்றுதான். புலி என்று நாம் சிந்திக்கும்போது அந்த ஒலிக்கு உண்டான மூளையின் செல்களான நியூரான்கள் மட்டும் அல்லாமல் அதன் உருவம் தொடர்பான காட்சி தொடர்பான நியூரான்களும் தூண்டப்படுகிறது. அத்துடன் மூளையில் புலி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கும் வெர்னிக்கி பகுதி, ஆங்குலர் கைரஸ் பகுதிகள் (Wernicke area, angular gyrus) தூண்டப்படுகின்றன.
சென்ற கட்டுரையில் எப்படி ஐம்புலன்களும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்குகிறது எனப் பார்த்தோம். புலன்களால் நேரடியாக உணரமுடியாத வெறும் அறிவால் உணரக்கூடிய கருத்தாக்கங்களும் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் உருவாகின்றன. உதாரணமாக வேகமான புலி, அமைதியான புலி, ஆபத்தான புலி என்றெல்லாம் நமக்கு கருத்தாக்கங்கள் தோன்றுகின்றன. இதில் புலி என்பது புலன்களால் நேரடியாக உணரமுடிந்த பொருள். வேகம், ஆபத்து , நன்மை போன்ற கருத்துகள் நாம் உலகின் காணும் பொருட்களின் குணங்களைப் பற்றிய கருத்துகள். இவை நமது நேரடி அனுபவத்தாலும் சமூகத்தில் பிறர் சொல்வதாலும் உருவாகின்றன.
எண்ணங்கள் என்பவை மூளையில் குளத்தில் எறிந்த கல் அலைகளை எழுப்புவது போலவே எழுகின்றன. ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கும்போது அதன் புறத்தன்மைகளுடன் தொடர்புடைய நியூரான்கள் மட்டுமின்றி அதன் குணங்களோடு தொடர்புடைய நியூரான்களும் தூண்டப்படுகின்றன. அந்த விஷயத்தைப் பற்றிய நினைவுகள், அவை எழுப்பும் உணர்வுகள் என ஒவ்வொரு இடத்திலும் உள்ள மூளை செல்கள் தூண்டப்படுகின்றன, இந்த எல்லா செல்களுக்கும் இடையே இணைப்புகள் இருக்கின்றன.ஒவ்வொரு முறை ஒரு விஷயத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதும் மூளையில் இந்த இணைப்பிலுள்ள எல்லா நியூரான்களும் தூண்டப்படுகின்றன.
இப்படி ஒரு விஷயத்தைப் பற்றிய பல கருத்துகள், நினைவுகள் உணர்வுகள் நமக்கு ஒரே நேரம் வருவதைத்தான் எண்ணம் அல்லது சிந்தனை என்கிறார்கள். இது மூளையின் செல்களில் ஏற்படும் இயக்கம். இந்த இடத்தில் கொஞ்சம் டேக் டைவர்ஷன் ஆகிக் கொஞ்சம் வரலாற்றைப் பார்ப்போம். நமது நியூரான்களில் மிகக் குறைந்த அளவு மின் ஆற்றல் (Electrical charge) இருக்கிறது. நாம் சிந்திக்கும் போது மூளையில் உள்ள நியூரான்களில் மிக மிகக் குறைந்த அளவு மின்சார இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இருதயத்தின் துடிப்புகளினால் ஏற்படும் மின்சார மாற்றங்களை அளவீடு செய்யும் ஈ.ஸி.ஜி. மிகப் பிரபலம். அதே போல் மூளையில் ஏற்படும் மின்சார மாற்றங்களை அளக்கும் பதிவிற்கு ஈ.ஈ.ஜி. (Electro Encephalo Gram) என்று பெயர். இதைக் கண்டறிந்தவர் ஹான்ஸ் பெர்கர் என்ற ஜெர்மானிய மனநல மருத்துவர். 1924 இல் இதைக் கண்டறிந்தார். இதன் பிறகுதான் தூங்கும் பகுதிகள் செயல்படுகின்றன என்றெல்லாம் கண்டறிந்தனர்.
எழுபதுகள் வரை ஈ.ஈ.ஜி.தான் மூளையைப் பற்றி ஆய்வு செய்வதில் முக்கிய இடம் வகித்தது. (அதற்குமுன் மூளையைப் பற்றி ஆய்வு செய்ய இன்னொரு வழிமுறைதான் இருந்தது – இறந்தவர்களின் மண்டை ஓட்டை உடைத்து மூளையை ஆராய்வது).
எக்ஸ்ரே படங்கள் மூளை ஆய்வில் பயன்பட்டாலும் எழுபதுகளில் சி.டி.ஸ்கேன் கண்டறியப்பட்ட பின்னரே மூளையின் பகுதிகள் பற்றிய ஆய்வுகளில் பெரும் பாய்ச்சல்கள் ஏற்பட்டன.அதிலும் எஃப்.எம்.ஆர்.ஐ. (f MRI )ஸ்கேன் கண்டுபிடித்த பிறகு பல புதிய திறப்புகள் ஏற்பட்டன. மூளையின் செல்கள் இயங்கும்போது அந்தப் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ;ஆக்ஸிஜன் உபயோகம் அதிகரிக்கும்; க்ளுக்கோஸை அதிகமாகச் செல்கள் உபயோகிக்கும்; இந்த மாறுதல்களை எல்லாம் ஆராய்ந்தால் எந்தெந்த செயல்கள் செய்யும் போது மூளையின் எந்தெந்தப் பகுதிகள் இயங்குகின்றன எனக் கண்டறிய முடிந்தது. அதனால்தான் எண்ணங்கள் உருவாகும்போது என்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை ஆராய முடிந்தது.
அப்படித்தான் குளத்தில் எறியும் கற்கள் உருவாக்கும் அலைகள் போல் நியூரான்களிலும் அலைஅலையாக இயக்கங்கள் எழுகின்றன. தொடர்ந்து இணைந்து செயல்படும் மூளை செல்களுக்குள் உள்ள இணைப்பு நாளடைவில் பலம்பெறுகிறது. இதை “Neurons that fire together soon wire together” என்கிறார்கள். ஒரு திரைப்படப் பாடலைக் காதலன்/லி உடன் சேர்ந்து பார்த்திருந்தால் மீண்டும் பல வருடங்கள் கழித்து அப்பாடலைக் கேட்டவுடன் அப்பாடலின் ஒலிகள் மட்டுமல்ல, அந்தப் பாடலின் காட்சிகள், அந்தத் திரையரங்கம், பாப்கார்ன் அல்லது மல்லிகை மணம், அந்தக் காதல் தொடர்பான இனிய (அந்த நபரையே திருமணம் செய்திருந்தால் துன்ப) நினைவுகள் , மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகள் எல்லாம் ஒரு நொடியில் ஏற்படுவதற்குக் காரணம் இவை அனைத்துடனும் தொடர்புடைய நியூரான்கள் ஒரே நேரத்தில் தூண்டப்படுவதால். இந்தச் சங்கிலித் தொடர் போன்ற அலைகளால்தான் பல நேரங்களில் தேவையற்ற எண்ணங்கள் உணர்வுகள் எழுகின்றன. முதலில் சொன்ன கல்யாண்ஜியின் கவிதை போல் நினைவுக்குளத்தில் கற்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன. எண்ண அலைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
சரி! இவையெல்லாம் மூளையில் மட்டும் ஏற்படும் விளைவுகள்தானே ! ஏன் “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டை “உருள வேண்டும்? ஏன் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும்? இருதயம் படபடக்க வேண்டும்? மனதுக்கும் உடலுக்கும் என்ன தொடர்பு?” இவற்றுக்கெல்லாம் விடை காணலாம் வரும் கட்டுரைகளில்.
(தொடரும்)

ramsych2@gmail.com