நள்ளிரவு நெடுஞ்சாலைகள்

ஆயினும்
வீடுகளில் நான் தனிமை உணரும் அளவு
நள்ளிரவுப் பயண
நெடுஞ்சாலைகளில் உணர்வதில்லை

நெடுஞ்சாலை
ஒளிரும் ஒரு நடன மேடை போலிருக்கிறது
நூறு நூறு வண்ணவிளக்குகள் ஒளியில்
நூறு நூறு வாகனங்கள்
ஒத்திசைவுடன் ஒரு சாகசத்தை
நிகழ்த்தியவண்ணம் இருக்கின்றன

நெடுஞ்சாலைகள்
சிறு வீதிகள் தூங்குவதுபோல
ஒருபோதும் உறங்குவதில்லை
மனிதர்கள் விழிப்புடனும் உறுதியுடனும்
மென்மேலும் முன்னேறிச் செல்கிறார்கள்

நள்ளிரவு நெடுஞ்சாலையோர
தேனீர்கடைகளும் உணவகங்களும்
வெய்யில் நிரம்பிய பகல்களைக் காட்டிலும்
மனிதர்கள்பால் பரிவையும் இதத்தையும்
வெளிப்படுத்துகின்றன

லாரிகள் சோம்பலான கரடிகள்போலவும்
கார்கள் மான்களைப்போலவும்
நள்ளிரவு நெடுஞ்சாலைகளில்
மினுங்கும் கண்களுடன் செல்கின்றன

தார்ச்சாலையெங்கும்
மஞ்சள் ரைங்கள்.
ஒளி வீசுகின்றன
ஆகாயத்தில்
வெள்ளிகளின் ரத்தினங்கள்

நள்ளிரவு நெடுஞ்சாலைப் பயணத்தில்
நாம் கேட்கும் பாடல்களில்
அதுவரை கேட்டிராத
ஒரு புதியவரி ஒன்று
எப்படியோ வெளிப்படுகிறது

நெடுந்தொலைவு செல்கிறோம்
நாம் சிலரை முந்திக்கொண்டும்
நம்மை சிலர் முந்திக்கொண்டும்

என்னைப்போன்ற
மனச்சுமை மனிதர்களுக்கு
வீடுகளைவீடவும்
நள்ளிரவு நெடுஞ்சாலைகள்
ஏற்றதாக இருக்கின்றன

நீ என்னைத் தீண்டும் விதம்

உனக்கொரு புத்தம் புதிய
வாசனைத் திரவியத்தைக்
கொண்டு வந்தேன்
‘‘இது எனக்கு வேண்டாம்
நீ பயன்படுத்திய
பாதித் திரவியத்தைக் கொடு’’ என்கிறாய்

‘‘இந்தப் பிறந்த நாளில்
என்னதான் உனக்கு வேண்டும்?’’ என்றேன்
‘‘நீ அணிந்து கழற்றிய
இன்னும் துவைக்காத
உன் வாசனை நீங்காத
ஆடை ஒன்றைக் கொடு’’ என்கிறாய்

இந்தக் கடற்கரையில்
நான் எப்போதும்
ஒரே இடத்தில்தான் அமர்வேன் என்பதை
என் கடற்கரை புகைப்படங்களில் காணலாம்
ஒரு முறைகூட
நீ அங்கே என்னைத் தேடிவந்ததில்லை
ஆனால் நீ அதே இடத்தில் அமர்ந்து
ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்புகிறாய்

என்னை நீ ஒரு முறைகூட
அணைத்துக்கொண்டதில்லை
ஆனால் என்னை
அணைத்துக்கொண்ட ஒருத்தியை
நீ பிரியமாய் அணைத்துக்கொள்கிறாய்

உனக்குத் தேவை
நான் அல்ல
என்னைப் பற்றிய நினைவுகள் மட்டுமே
நீ தீண்ட விரும்புவது
என்னையல்ல
என் நீட்சிகளை

இப்படித்தான்
என் மீதான பிரியங்கள்
எப்போதும்
எனக்கு வெளியே இருக்கின்றன

நினைவிருப்பதும் நினைவில்லாததும்

“என்னை உனக்கு
நினைவிருக்குமா தெரியவில்லை
அதுதான் என் புகைப்படத்தை
அனுப்பியிருக்கிறேன்” என்றாள்

“உன்னை நன்றாக நினைவிருக்கிறது
ஆனால் நமக்கிடையே
என்ன இருந்தது
என்பதைத்தான் மறந்துவிட்டேன்” என்றேன்

அன்பின்மை

குறைகாண்பதை நிறுத்திவிட்டாய்
குற்றம் காண்பதில்லை இப்போதெல்லாம்
கடிந்துகொள்வதில்லை எதற்காகவும்
நிழலாக வாழ்வில் நுழைபவர்களை
‘யாரது’ என சந்தேகமாய்
இப்போதெல்லாம் கேட்பதில்லை
பின்னிரவில் வெகு நேரம்
‘ஆன் லைனி’ல் இருப்பதைப்பற்றி
எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை.

அன்பில்லாமலாகிவிட்டாய் என்பதை
ஒருவாறாகப் புரிந்துகொள்கிறேன்

ஆண் குரல்

ஒரு பெண்ணை
அலைபேசியில் அழைக்கும் போது
அந்த அழைப்பை
ஒரு ஆண் எடுத்தால்
தலைக்குள் ஒரு சிறிய புயல் உருவாகிறது

அந்தப் பெண்ணிற்கும் எனக்கும்
அந்தரங்கமாய் ஏதுமில்லை
நான் ஆண் என்பதோ
அவள் பெண் என்பதோகூட
அவ்வளவாக நினைவில் இருந்ததில்லை
அது ஒரு எண்ணிற்கான அழைப்பு
அவ்வளவுதான்

ஆனால் ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து
ஒரு ஆணின் குரல் ஒலிக்கும்போது
ஒரு புராதன மிருகமொன்று
நெஞ்சின் ஆழத்தில் விழிக்கிறது
அது ஒரு வேட்டைக்குத் தயாராகிறது
அல்லது
வேட்டைக்கு அஞ்சி புதரில் பதுங்குகிறது

என் திருமணமான சிநேகிதிகளை
நான் ஒருபோதும் அழைக்காததற்குக் காரணம்
அவர்களின் குரல்
திடீரென ஒரு ஆண்குரலாகக்கூடும் என்ற
பதற்றத்தினால்தான்.
” நீங்கள் யார்?” என்று
அந்த ஆண் குரல் கேட்கும்போது
உண்மையிலே
எனக்குப் பதில் தெரியவில்லை
சில திருமணமாகாத சிநேகிதிகளின் குரலும்கூட
சில சமயம் ஒரு ஆண்குரலாக மாறிவிடுகிறது
பெண்களின் எண்களிலிருந்து வெளிப்படும்
எல்லா ஆண் குரல்களும்
சந்தேகத்தையும் வன்மத்தையும்
ஒன்றுபோலவே வெளிப்படுத்துகின்றன

ஒரு பெண்ணிற்கும் எனக்கும் இடையே
ஒரு ஆண் குரல் உள்ளே நுழையும்போது
நான் அந்தப் பெண்ணை ஏனோ
அக்கணம் மனதால் இழக்கிறேன்
அவன் அவளுக்கு
எவ்வளவு நெருக்கமானவன் என்றபோதிலும்
அது ஒரு விரும்பத்தகாத குறுக்கீடு
அது ஏதோ ஒன்றை இல்லாமலாக்குகிறது

ஒரு பெண்
ஒரு ஆணின் எண்ணை அழைக்கும்போது
மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டால்
அவளும் இப்படித்தான் உணர்வாளா என்ன?

என்னுடையவை அல்ல

நான் உணரும் தனிமைகள்
என்னுடையவைல்ல
நான் வாழும் காலத்தினுடையவை

நான் உணரும் வலிகள்
என்னுடையவல்லை
இந்த நிமிடம் அவை
லட்சோப லட்சம்
மனிதர்களுடையவையும் கூட
என்னைத் தகிக்கும் காமம்
என் உடலினுடையவையல்ல
எந்தெந்த உடல்களிலிருந்தோ
என் மீது விழும் நிழல்கள் அவை

எனது இந்தக் கண்ணீர் மட்டும்
ஏனோ எனக்கு மட்டும் உரிய
ஒரு அந்தரங்கம் என்று தோன்றிவிடுகிறது
அதன் வெதுவெதுப்பு
என் பனிப்பாறைகளை
எப்போது உருக வைக்கிறது
மேலும்
என் கண்ணீரை யாரும்
துடைக்க வரவில்லை
அது எனக்குள் துவங்கி
எனக்குள்ளேயே முடிவடைகிறது

கல் நெஞ்சம்

கல் நெஞ்சம் என்கிறார்கள்

மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
ஒவ்வொரு முறையும்
விடைபெறவேண்டியிருக்கிறது

மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
அணைத்த கரங்களை
விலக்கி நடக்க வேண்டியிருக்கிறது

மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
உன்னிடம் பாராமுகமாய்
இருக்க வேண்டியிருக்கிறது

மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
உன்னை மறந்தாற்போல
இந்த வேலைகளையெல்லாம்
செய்ய வேண்டியிருக்கிறது
மனதைக் கல்லாக்கிக்கொண்டுதான்
நீ இருக்கும் இந்த உலகத்தில்
நீ இல்லவே இல்லாததுபோல
வாழவேண்டியிருக்கிறது

கண்ணீர் இல்லாமலிருக்கவேண்டும் என்றால்
கல்லாகத்தான் இருக்கவேண்டும்

தேவையான மழை

“நான் இருக்கும் இடத்தில்
மழை பெய்கிறது
நீ இருக்கும் இடத்தில்
மழை பெய்கிறதா ?”

அவ்வளவு மழை
எனக்கு வேண்டாம்
எவ்வளவு நனைந்திருக்கிறாயோ
அவ்வளவு மழை போதும்

சீக்கிரம் வா

உன்னை அணைத்துக்கொள்ள முடியாதபோது

உன்னை அணைத்துக்கொள்ளமுடியாதபோது
உன் சொல்லை அணைத்துக்கொள்கிறேன்
உன் கண்ணீரை அணைத்துக்கொள்கிறேன்
உன் வாசனையை அணைத்துக்கொள்கிறேன்
உன் குரலை அணைத்துக்கொள்கிறேன்

நீ யாரையாவது அணைத்துக்கொண்டால்
ஒரு கணம் அவர்களை
நான் அணைத்துக்கொள்கிறேன்

இருவேறு உலகங்கள்

நான் நெரூதாவைவிட
சிறந்த கவிஞன் என்ற உண்மை
எனக்கு மட்டுமாவது உறுதியாகத் தெரியும்

என் மகத்தான கவிதையை
அரங்கில் வாசிக்கிறேன்
என் குரல் போதையூட்டுவது என
என்னை நேசித்த
எல்லாப் பெண்களுமே சொல்லியிருக்கிறார்கள்
அந்தக் குரலால்தான்
என் கவிதையை வாசிக்கிறேன்

அரங்கில் சவக்கூடத்தின்
அமைதி நிலவுகிறது
உணர்ச்சியற்ற முகங்களை
எங்கும் காண்கிறேன்
நான் பாலைவனத்தில்
கைவிடப்பட்டவனாக உணர்கிறேன்
அறிவிப்பாளினி கெஞ்சுகிறாள்
‘‘கைதட்டுங்கள்…கை தட்டுங்கள்’’
யாரோ சிலர் கை தட்டுகிறார்கள்
அது கொசுவைத் துரத்துவதுபோல இருக்கிறது

வேறொரு மேடையைக் காண்கிறேன்
பல்லாயிரம் ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள்
நாலாபுறம் ஆரவாரத்தின்
கடல்கள் குமுறுகின்றன
நடிகன் மேடையில் தோன்றுகிறான்
ஆரவாரத்தின் கடல்களிலிருந்து
சுனாமிகள் எழுகின்றன
அது ஒரு பிரமாண்டமான பிரார்த்தனைக்கூடமாகிறது
ஆயிரம் ஆயிரம் கரங்கள் எழுகின்றன
அங்கும் ஒரு அறிவிப்பாளினி இருக்கிறாள்
ஆர்ப்பரிப்பகளினூடே கெஞ்சுகிறாள்
‘கொஞ்சம் அமைதியாக இருங்கள்
அவர் பேசட்டும்’

நான் இரு பெரும் உலகங்கள் நடுவே வாழ்கிறேன்
இரண்டு கலாச்சாரங்கள் நடுவே வாழ்கிறேன்

இன்று உலகக் கவிதைகள் தினம் என்கிறார்கள்
ஒரு மலரில் ஒரு இதழ் விரிவதற்கும்
இன்னொரு இதழ் விரிவதற்கும்
இடையில் இருக்கும் பேரமைதியில்
ஒரு கண்ணாடிக் கோப்பை உடையும் ஓசைபோல
என் கவிதையின் ஓசை ஒன்றை எழுப்புகிறேன்

அவ்வளவுதான் முடியும்
அவ்வளவு போதும்

manushyaputhiran@gmail.com