கோழைகளின் வீரம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் உண்மையில் அவலமான ஒன்று. தமிழ்நாடு அரசே அதிருமளவுக்கான நிகழ்வு அது. அதை மறைக்கவோ, வேறு கதைகளைக் கூறி திருப்பிவிடவோ அரசு முயலவேயில்லை.
சிக்கலான ஒரு வழக்கு அது. கோழைகள் சிலர் சேர்ந்தோ அல்லது வக்கிரம் மிக்க தனி நபர் எவரோ, கும்மிருட்டைக் கேடயமாகக் கொண்டு, மேல்நிலைத் தொட்டிக்கு இரும்பு ஏணியில் ஏறி, வேங்கைவயல் மக்களுக்கான குடிநீரில் மனிதக்கழிவுகளைக் கலந்து தங்களின் வீரத்தைக் காட்ட எண்ணினர் !
எவராலும் சற்றும் சகிக்கமாட்டா இச்செயல் உடனடியாகவெல்லாம் யாருக்கும் தெரிந்துவிடவில்லை. குடிநீரின் நிறமும், மணமும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அதற்குள் அதைப் பருகியிருந்த சில குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது !
குழந்தைகளின் நோய் அறிகுறிகளை உணர்ந்த அரசு மருத்துவர்கள் சொன்ன முதல் சேதி, நீங்கள் உபயோகிக்கும் நீர் அல்லது உணவில் ஏதோ கலந்துள்ளது அது என்னவென்று பாருங்கள்.
வேங்கைவயலின் இளைஞர்கள் சிலர் தொட்டியின் மீது ஏறிப்பார்த்ததில் இந்த அருவருப்பான உண்மை, உலகிற்குத் தெரியவந்தது. மனிதக்கழிவுகளை ஒரு பெருங்கூடையளவு அள்ளிவந்து அதை சில நெகிழிப்பைகளில் கட்டி வைத்து, பின் சார்ந்தோருக்கு புகாரளித்துள்ளனர் !

மக்களுக்கான அரசு

விஷயம் தலைமைச் செயலகத்தை அடைந்த வேகத்தில் அரசின் நடவடிக்கைகள் மளமளவெனத் துவங்கின.
உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முதல் உயர் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் வேங்கைவயல் கிராமத்தை வந்தடைந்தனர் !
வேங்கைவயல் கிராமம் ஒரு குக்கிராமம். முப்பது குடும்பங்கள். தோராயமாக 100 முதல் 130 பேர் வரை வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள்.
கொஞ்சம் தள்ளியிருக்கும் கிராமம் இறையூர். வேங்கைவயலை விட சற்றே வசதியானவர்கள் இருக்கும் பகுதி. இங்கு ஆதிக்க இடைநிலைச் சாதியினரான கள்ளர்
களும், முத்தரையர்களும் வாழ்கின்றனர். வேங்கைவயல் கிராமத்தை ஊருக்கொதுக்குப்புறமான சேரி போலவே இம்மக்கள் பாவித்ததாகப் பேச்சு !
இவ்விரு ஊர்களுக்கும் பொதுவான சில கோவில்களில் அதுநாள்வரை பட்டியலின மக்கள் கோவில் களுக்குள் நுழையத் தடை இருந்தது என்பது உண்மையே !
குக்கிராமங்கள் என்பதால் புகார்களைத் தர எவரும் முன்வருவதில்லை. எளிதில் யார் புகாரளித்தது எனத் தெரிந்து விடுமென்பதால் உயிர் பயம். தெரிந்துவிட்டால் காயமோ, சொத்துக்கள் சேதமோ உறுதி.
இதுவே சாதிமத வெறியர்களுக்கு பலமாகிவிடுகிறது.
எனவே, சார்ந்த அரசு அதிகாரிகளுக்கோ, அரசியல் வாதிகளுக்கோ, அரசுக்கோ, போதிய சரியான புகார்கள் வருவதில்லை !
அது அப்படித்தான் என்று பட்டியலின மக்களும், இது இப்படித்தான் என ஆதிக்கச் சாதியினரும் கடந்து போய்விடுகிறார்கள். யாருக்கும் உறுத்தலோ, நெருடலோ கிஞ்சித்துமில்லை !
நாடு விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டை விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம், 70 ஆண்டு களுக்கும் மேலாக மக்களாட்சி தழைத்தோங்கும் உலகின் ஒரே பெரிய நாடு. அதிலும் தமிழ்நாட்டு மண் என்பது சமூகநீதிக்குப் பெயர் போனது, பெரியார் மண். இந்த மண்ணில் இப்படி நடந்து கொள்கிறோமே என்கிற கூச்சமில்லாமல் இன்றும் பல்லாயிரம் மக்கள் ஆணவத்தோடு வளைய வருகிறார்கள்தான். ஆனால், உரிய புகார்கள், ஆவணங்கள் இல்லாமல் இவை எதையும் தாமாக ஓர் அரசால் தடுக்க முடியாது !
குறிப்பாக, இந்து மதப் பிடிப்புள்ள சனாதன இந்துத்துவ போற்றிகள் சிலர்தான் இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுபவர்கள். தாமாகச் சென்று இவர்களைத் திருத்த முயன்றால் மத ஆயுதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு இந்தியளவில் அரசை அவதூறு சொல்பவர்கள் !
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு அவர்கள், சம்பவ இடத்திற்கு வந்ததும் அவரிடம் அழுதபடி
வேங்கைவயல் பெண்கள் முன் வைத்த தலையாய கோரிக்கை, இறையூர் மக்கள் எங்களைக் கோயில் களுக்குள் விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார்கள். இறைவனைத் தொழ எங்களுக்கும் உரிமை உண்டு. இதைத் தட்டிக் கேட்டதால் எங்கள் குடிநீர்த் தொட்டியில் இப்படி அசிங்கத்தைக் கலந்து எங்களை நோயில் தள்ளிவிட்டு விட்டார்கள் !
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு இயல்பிலேயே முற்போக்கு குணம் கொண்டவர் என்பதால் உடனடி யாக வேங்கைவயல் மக்களை அழைத்துக் கொண்டு, இறையூர் அய்யனார் கோவிலினுள் நுழைந்தார்.
ஆட்சியருக்கு உதவியாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா அவர்களும் தன் படையினரோடு வந்திருந்தும், அவர்கள் அனைவருக்கும் கடுமையான எதிர்ப்பை இறையூர் மக்களில் சிலர் காட்டினர். குறிப்பாக சாமியாடுவது போல் சிலர் மிகக் கொச்சையாக அனைவரையும் வசைபாடினர்.
பட்டியலின மக்கள் நுழைந்துவிட்டதால் கோவிலில் தீட்டு படிந்துவிட்டது, உடனடியாக புனித நீர் கொண்டு கழுவிவிட வேண்டுமென்றெல்லாம் அவர்கள் சாமியாடிக்கொண்டே பேச, பொறுமையாக அவர்கள் அடங்கும் வரை காத்திருந்த ஆட்சியரும், கண்காணிப்பாளரும் சாமியாடிவர்களை வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர் !
ஓர் ஆதிக்கச் சாதி கடைக்காரர் தன் கடையில் இரட்டைக் குவளை முறையைக் கையாளுவதாகக் கேள்விப்பட்டவுடன் நேரடியாகச் சென்று அவரையும் கைது செய்ய உத்தரவிட்டார் ஆட்சியர்.
உங்கள் குடிநீரில் நரகலைக் கலந்தவர்கள் யாராக இருந்தாலும் முறைப்படி விசாரித்துக் கைது செய்து அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டேன் என ஆட்சியர் அம்மக்களுக்கு உறுதியளித்துள்ளார். விசாரணைக்கான படையையும் உடனடியாக அமைத்தார் கண்காணிப்பாளர் வந்திதா !
உடனடியாக அந்த மேல்நிலைத் தொட்டியிலிருந்து நீர் விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இறையூரில் அனைவருக்குமான மேல்நிலைத் தொட்டியிலிருந்தே வேங்கை வயலுக்கும் நீர் இணைப்பு தரப்பட்டது. அந்த இணைப்பு வேலை முடியும் வரை அவர்களுக்கு லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கப்பட்டது. வேங்கைவயல் மக்கள் அனைவருக்கும் முகாம் அமைத்து மருத்துவச் சோதனைகளும், உரிய மருந்துகளும் வழங்கப்பட்டன !
இவையாவுமே முதலமைச்சரின் உத்தரவு இல்லா மலோ, தமிழக அரசின் அறிவுறுத்தலின்றியோவா நடந்திருக்கும்?
ஆனால், இவைகளையெல்லாம் தாம் செய்ததாக முதலமைச்சர் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை!
இதனால், இத்தகைய தரமான செய்கைக்காக உலகளவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆட்சியர் கவிதா ராமுவும், கண்காணிப்பாளர் வந்திதாவும் போற்றப்பட்டனர், சிறப்பாகக் கொண் டாடப்பட்டனர், வரலாற்றில் பதிந்தும் போயினர்!
தாங்குமா நடராஜனின் பிஸ்கட் ருசிகர்களுக்கு?

தொடரும் சாதி வன்மம்

அன்னவயல் ஊராட்சி ஒன்றியத்திற்குள்தான் இறையூரும், வேங்கைவயலும் வருகின்றன. ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பதவி பெண்களுக்கானது. தலைவரின் பெயர் பத்மா. அவருடைய கணவரின் பெயர் முத்தைய்யா. இருவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
இறையூர் மற்றும் வேங்கைவயலின் வார்டு கவுன்சிலராக இருப்பவரின் பெயர் சிதம்பரம். இவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்தான். அனைவருமே ஆதிக்க இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள் !
வேங்கைவயல் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்கிற காழ்ப்பு, முத்தைய்யாவுக்கு இருந்ததாகப் புகார். ஆனால், அதிமுகவைச் சார்ந்தவராக இருந்தும் சிதம்பரம் வேங்கைவயல் மக்கள்பால் பரிவு கொண்டவராகவும், முத்தைய்யாவுக்கு எதிராக இருந்ததாகவும் சொல்கிறார்கள்.
முத்தைய்யாதான் தன் அடியாட்களைக் கொண்டு இந்த தீச்செயலைச் செய்ததாக சிதம்பரம் தரப்பும், தன் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே சிதம்பரம்தான் வேங்கைவயல் மக்கள் சிலரின் துணையோடு இப்படிச் செய்துவிட்டதாக முத்தைய்யா தரப்பும், ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்த …
காவல்துறை ஒட்டுமொத்தமாக 85 பேரிடம் தன் விசாரணையைத் தீவிரமாகத் துவங்கியது.
விசாரணை நீளவே, அரசு வழக்கை குற்றப்பிரிவுத் துறைக்கு மாற்றியது. சிபிசிஐடி விசாரணையில், நமக்குக்
குற்றவாளிகள் யார், ஏன் இந்த இழிவைச் செய்து உலகளவில் நம்மைத் தலை குனிய வைத்தார்கள் என்பது விரைவில் புலப்பட்டுவிடும் !
செய்தது என்ன?
இதற்கிடையில் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்கள் வரவே, பாதிக்கப்பட்ட மக்கள் வாடிக் கிடக்கக் கூடாது என்று அவர்களை ஆற்றுப்படுத்த சமத்துவப் பொங்கல் போன்ற சமூக இணக்க நிகழ்வுகள் பல, அமைச்சர்கள் முன்னிலையில் அங்கு நடந்தேறின !
நாங்கள் அருந்தும் நீரில் இன்னமும் அந்த தீயவாடை வீசுவது போல் குழப்பம். அது இந்தத் தொட்டியைக் காணும்
போதெல்லாம் வருகிறது என்று மக்கள் முறையிட, கம்யூனிஸ்ட்கள் அந்தத் தொட்டியை இடிக்கச் சொல்லிப் போராட்டம் நடத்தினர் !
அரசு அந்தத் தொட்டியை இடிப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால் விசாரணை முடிந்ததும் அதைச் செய்வோம், அதற்கு முன் அனைத்துச் சாதியினருக்கும் பொதுவான புது மேல்நிலை நீர்த்தொட்டியைக் கட்ட நிதி ஒதுக்கி, அதற்கான வேலைகளையும் ஆரம்பித்து
விட்டார்கள். புதுக்கோட்டை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. அப்துல்லா அவர்கள், உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ஏழு லட்சம் ரூபாயை அதற்கென விடுவிக்க, எந்தப் போராட்டங்களும் அங்கு நீடிக்க வாய்ப்பே இல்லாமற் போனது !
நடந்தது பேரவலம்தான். ஆனால் ஆளும் தமிழக அரசு அதைத் தட்டிக் கழிக்காமல், கிராமம்னா இதெல்லாம் சகஜம்தானே என்று ஒதுங்கிக் கொள்ளாமல், சில மதவெறி பீடித்த குணமழுகியவர்கள் செய்த குற்றத்திற்காக, தாம் பொறுப்பேற்றுக் கொண்டு, குற்றவாளி
களைக் கண்டறியவும், மீண்டும் அங்கு தீண்டாமை சார்ந்த எக்குற்றங்களும் நிகழாவண்ணம், அதற்குரிய கடுமையான நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறது !
மாமா பிஸ்கோத்து விக்கெட் வீழ்ந்தபின்னரும் அது நோ பாலாகி, ஃப்ரீ ஹிட் வாய்ப்பும் கிட்டி, அதில் சிக்ஸர் வேறு அடிக்கிறதே ஸ்டாலின் அரசு என்கிற தீராக் காழ்ப்பில், நடராசனாரின் பிஸ்கட் கவ்விகள் சிலர் சமூக வலைத்தளங்களில் பிதற்றி வைப்பது பதட்டத்தையும், எரிச்சலையும் கூட்டுகிறது !
உண்மை கண்டறியும் குழு என்கிற பெயரில் தன்னார்வலர்கள் வேடத்தில் இவர்கள் ஒரு குழுமமாக இதுபோன்ற பிரச்சினைக்குரிய தளங்களுக்குப் படையெடுப்பது வாடிக்கை. ஆளுங்கட்சிகளுக்கேற்ப ஆதரவாகவோ / எதிராகவோ நடந்து கொள்வார்கள்.
ஸ்டெர்லைட், சாத்தான்குளச் சம்பவம் என்றால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், கனியாமூர், வேங்கைவயல் என்றால் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் தகவல்களைக் கட்டமைத்து, புனைந்து, வீசிய பிஸ்கட்டுக்கு தன் விசுவாசத்தை முழுமையாகக் காட்டும் கூட்டமது. ஆனால் இதற்குப் பின் ஒரு பெரிய சுரண்டலும் உள்ளது !
சங்கிகளின் ஆதரவு ஊடகங்கள், சமூகவலைத்தள சேனல்கள் சிலருக்கு செட் ப்ராப்பர்ட்டீஸ் எனப்படும் போலி எழுத்தாளர்கள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள், வலதுசாரிகள் போர்வையில் நிரந்தரமாக உண்டு. உலகில் நடக்கும் எதைப்பற்றியும் அவர்கள் உரையாடுவார்கள். அவர்களுக்குத் தெரியாத தகவல்களே இருக்காது. அவர்களுக்கு பிடிக்காத கட்சி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவை. திக, பெரியார், கலைஞர் என்றால் கடுகடுவென ஆகிவிடுவர். திமுக ஆட்சியில் அமைச்சர் தும்மினாலோ, இருமினாலோ கூட அதில் குற்றங்களைக் காணுவார்கள். அற்பத்தனமான சேதிகளில் கூட தன் கற்பனைகளைச் சேர்த்து, பொய்களைப் பரப்பி விடுவார்கள் !
YouTuber 'Savukku' Shankar released from Cuddalore prison- The New Indian  ExpressSugandhi Nachiyaal Books | சுகந்தி நாச்சியாள் நூல்கள் | Shop Books at Best  Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolksஅப்படிப்பட்ட ஆட்களாக சவுக்கு சங்கர், நாச்சி யாள் சுகந்தி போன்றோரைக் காண முடியும். சில யுட்யூப் செய்தி சேனல்களின் வாசலில் எப்போதும் இவர்களைக் காணமுடியும்.
கனியாமூர் பள்ளி மாணவி மரணம், அதையொட்டி நிகழ்ந்த பள்ளியெரிப்பு பிரச்சினையில், சவுக்கு சங்கர் இறந்த அந்தப் பெண் மீதே குற்றங்களை அடுக்கினார். பாதிக்கப்பட்ட குடும்பம் என்றும் பாராமல் அந்தக் குடும்பத்தை கொச்சை செய்தார். அது தற்கொலைதான், மர்ம மரணம் அல்ல என்று, வழக்கு விசாரணையில் இருக்கும் போதே தன் போக்கில் எதையெதையோ சொன்னார். இதற்காக அவர் எந்தத் தரவுகளையும், யாரிடமும் கொடுக்கவில்லை. இவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருக்கக் கூடும் என்கிற சந்தேகமெல்லாம் தேவையேயில்லை. பிஸ்கட் ஸ்டாக்கிஸ்ட்கள் எவரும் இவரை உபயோகித்துக் கொள்ளலாம். இவர் போன்றோரை Political Pimp என்று அமைச்சர் உதயநிதி வர்ணித்ததுதான் இவர்களுக்கான சான்று. மதுரை நீதிபதியைக் கடுமையாக அவதூறு செய்தார் என ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட இவரை, உச்சநீதிமன்றம் வரை சென்று பிணையிலெடுக்க சில சமூகவலைத்தள ஊடகங்கள் துடித்தன. சிறைக்குள் என்ன பேரம் நடந்தது எனத் தெரியவில்லை, இந்தப் புத்தாண்டில் 15 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை, முழு ரொக்கமாகக் கொடுத்து வாங்குமளவு பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். செய்ய வேண்டிய ஒரே வேலை, ஆளுங்கட்சியான திமுகவை, கீழ்த்தரமாக இவர் தொடர்ந்து அவதூறு செய்ய வேண்டும் !
நாச்சியாள் சுகந்தி என்பவர்தான் வேங்கைவயல் உண்மை அறியும் குழு என்கிற ஒன்றை ஏற்படுத்தி தன் சொந்தச் செலவில் அங்கு சென்று விசாரணை செய்து வந்ததாய் சில பேட்டிகளைக் கொடுத்தார்.

அவருடைய நோக்கங்களாவன:

1) வேங்கைவயல் துர்சம்பவத்திற்கு அங்கிருந்த திமுக அரசியல்வாதிகள்தான் காரணம்.
2) முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலிலுள்ள காவல்துறை, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது குற்றம் சுமத்தி, அவர்கள் மீதே பழியைப் போடத் துடிக்கிறது!
3) போன வேலையைச் செய்யாமல், ஆட்சியர் கவிதா ராமு, அங்கு தேவையேபடாத கோவில் நுழைவு போன்ற வேலையை விளம்பரத்திற்காக மட்டுமே செய்தார்.
4) அங்கு கள்ளர், முத்தரையர், பட்டியலின மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். உறவுமுறை சொல்லி அழைக்குமளவு பாசம் பொழிகின்றனர். கட்சி மோதலே இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படை !
5) அய்யனாருக்கும், பட்டியலின மக்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அது கள்ளர் மற்றும் முத்தரையர்கள் தொழும் குலதெய்வம். பட்டியலின மக்கள் ஒருபோதும் அங்கு போவதில்லை. ஆட்சியர்தான் நிகழ்ச்சியைத் திசைதிருப்ப, இதுபோல் ஸ்டண்ட் அடித்திருக்கிறார் !
இப்படி அவர் பேசிக்கொண்டே போக, ரூட் தமிழ் என்கிற தளத்தில், கவுன்சிலர் சிதம்பரத்தை உங்களால் சந்திக்க முடியவில்லை என்றும், அவரைத் திமுக என்றும் சொல்கிறீர்களே ? ஆனால் அவர் அதிமுகவாமே என்றபோது, அப்படியா ? ஆமாமாம் அவரும் அதிமுகதான், அது டங் ஸ்லிப் என்று துளி நெருடலின்றி ஒத்துக் கொண்டார்.
அடுத்து அந்த அய்யனார் கோயிலுக்கும் பட்டியலின மக்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறீர்களே அதுபற்றிய உண்மையான ஆடியோவைக் கேளுங்கள் என்றதும் ஆடிப்போய்விட்டார், பேட்டியை இடையில் நிறுத்திவிட்டு ஓடியும் போய்விட்டார் !
சொன்ன அவ்வளவும் பொய் ஆனால் திமுக கவுன்சிலர் என்று அவதூறை மிக எளிதாகச் சொல்லி அதைப் பல லட்சம் பேர் பார்த்தும் விட்டார்கள். ஆட்சியர் கவிதா ராமு செய்தது செட்டப்தானோ என்று இடைநிலை ஆதிக்கச்சாதிகளையும், பட்டியலின மக்களையும் ஒருசேரக் குழப்பி விட்டுவிட்டார். இதற்குத்தான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் கெட்டிக்காரன் புளுகிற்கே எட்டு நாள்தான் கெடு, இதுகள் அறிவிலிகள், எட்டு மணி நேரம் கூடத் தாங்கவில்லை !
சுரண்டல் பெருச்சாளிகள் ஸ்டெர்லைட் பற்றி ஓர் ஆவணப்படத்தை இவருடைய கணவரோடு சேர்ந்து தயாரித்ததாகவும், அதற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பணி புரியும் தமிழர்களும் லட்சக்கணக்கில் நிதியளித்து உதவியுள்ளதாகவும் இவர்களே சொல்கிறார்கள்.
இப்போது வேங்கைவயல் பற்றி ஓர் ஆவணப்படத் தொகுப்பிற்கும் நிதி திரட்டவிருப்பதாக நாச்சியாள் சுகந்தியின் கணவரே சொல்கிறார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விசிக சார்பாகப் போட்டியிட்ட திரு.ஆளூர் ஷாநவாஸை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்ய, நிதி தேவையென்று அரபு நாடுகளில் பணிபுரியும் இஸ்லாமியர்களுக்கு வலை விரித்திருந்திருக்கிறார் அம்மணி.
அதற்கு ஒருவர் 25000 நிதி அனுப்பியுள்ளார். உண்மையில் பல லட்சங்கள் வசூலாகியிருக்கலாம். அந்தம்மாவின் தகிடுதத்தங்களைத் தாங்க மாட்டாமல் அவர் இப்போது சொன்னதால் இது தெரியவந்தது.
அந்த நிதியை வைத்து அவர் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நிதி வசூலிக்க இவர் அந்தக் கட்சியில் என்ன பொறுப்பிலிருந்தார், இப்போது எந்தக் கட்சியிலிருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியாது.
ஆனால் இப்படிக் கேட்டவுடன், அதான் பரப்புரை ஆடியோ கேசட்ல உங்க பேரை பிரிண்ட் பண்ணோம்ல, நீங்க பாக்கலீங்களா? அதுதான் ரிசீப்டுன்னாரே பார்க்கலாம்!
ஹைய்யோ ஹைய்யோ, இதுகளெல்லாமாய்யா இப்ப நமக்கு எதிரிகள் என்று கலைஞர் தலையிலடித்துக் கொண்டு சிரிக்கிறார்!

rashraja1969@gmail.com