எமக்குத் தொழில் எனும் இந்தத் தொடருக்கான புத்தகத் தேடல் எனக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவி பாடுவது போல, பெரிய மனிதர் வீட்டுப் பணிப் பெண்ணும் புத்தகம் எழுதுகிறாள். இடமும், மொழியும் வேறு என்றாலும், எஜமானியம்மாள் அமெரிக்காவிலும் எஜமானியாகத்தான் இருக்கிறாள். பணிப்பெண்ணும் அவ்விதமே. எவராயினும், எத்தேசத்தவராயினும், மனித இயல்பு ஒன்றே என்பதை திரும்பத் திரும்ப எனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும் மற்றொரு புத்தகமாக கேத்தி மெக்கியான் எழுதிய Jackie’s Girl என்ற புத்தகம் அமைந்தது. அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவியான ஜாக்குலின் கென்னடி, கணவர் மறைந்த பிறகு, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, அவர் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தவர் கேத்தி. கேத்தியின் பணிக்காலத்தில்தான் ஜாக்குலின் கென்னடி ஜாக்குலின் ஓனாசிஸாக மாறுகிறார். எந்த சமயத்தில் எஜமானி, எந்த நேரத்தில் சிநேகிதி என்று கணிக்க முடியாத வகையில் பழகும் ஜாக்குலின் பற்றிய அருமையான சித்திரம் இது. மத்திய காலத்தின் அரச குடும்பங்களின் ராஜ வாழ்க்கையை 20ஆம் நூற்றாண்டிலும் வாழக் கொடுத்து வைத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு. கூடவே, வேறு பல சுவாரஸ்யமான தகவல்களும்.

கேத்தி அயர்லாந்தைச் சேர்ந்தவள். அமெரிக்காவில் பணிப்பெண்கள் அனைவருமே அயர்லாந்திலிருந்து வந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வேலை வாங்கித் தரும் தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன என்பது வியப்பூட்டும் செய்தி. கேத்தி தனது 19ஆவது வயதில் தன் அக்காவுடன் அமெரிக்கா வருகிறாள். அங்கே அவளது சித்தப்பா, சித்தி இது போன்று ஏதோ வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். அக்கா ஒரு உணவகத்தில் சர்வராகச் சேர, கேத்தி ஒரு பணக்காரப் பெண் வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாகச் சேர்கிறாள். அந்தப் பெண் கேத்தியைப் பாடாய்ப் படுத்துகிறாள். ஏஜென்சியிடம் வேறு இடத்தில் வேலை வாங்கித் தரும்படி கேத்தி சொல்லி வைத்திருக்கிறாள். அவர்கள் மூலம்தான் ஜாக்கி வீட்டு வேலை கிடைக்கிறது. முதல் சந்திப்பில் ஜாக்கி பற்றிய கேத்தியின் மனப்பதிவு அருமை.  ஜாக்கி என் உயரம்தான் இருப்பார். ஆனால், அவரது பணக்காரத் தோரணை அவரைச் சற்று அதிக உயரமாகக் காட்டியது என்கிறாள் கேத்தி.

ஜாக்கியின் செயலாளர் போன்ற பெண் ஒருத்தி பணி தொடர்பான விஷயங்களைச் சொல்கிறாள். வேலை என்று தனியாக எதுவும் கிடையாது. அம்மாவிற்கு அடுத்தடுத்து என்ன தேவைப்படும் என்பதைப் பார்த்து செய்து வைக்க வேண்டும். வாரா வாரம் வியாழக்கிழமை விடுமுறை. வார இறுதிநாட்களில் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும். எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் அவ்வாறே. கிறிஸ்துமஸ் அன்று மதிய உணவிற்குப் பிறகு அரை நாள் லீவ். ஒவ்வொரு கோடை காலத்திலும் இரண்டு வார விடுமுறை உண்டு. அயர்லாந்து சென்று குடும்பத்தினரைப் பார்த்து வர, போக வர விமான டிக்கெட் எடுத்துத் தந்து விடுவார்கள்.  சமையல்காரிகள், பரிமாறுபவர்கள், குழந்தைகளுக்கான ஆயாக்கள் ஆகியோருடன் ஜாக்கியின் மாளிகையில்தான் தங்க வேண்டும். திருமதி.கென்னடி எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் உடன் செல்ல வேண்டும். கோடை காலத்தில்  விடுமுறையைக் கழிக்க,  ஓரிரு வாரங்கள் ஜாக்குலின் கேப் காட் செல்வார். வார இறுதிகளில் குதிரை சவாரி செய்ய நியூ ஜெர்சி செல்லது வழக்கம். பனிக்காலத்தில் பனிச் சறுக்கு செய்து விளையாட கலராடோ போவார். வேலைப்பளுவிலிருந்து சற்று விடுபட அவ்வப்போது பாம் பீச் போவதுண்டு. அது போக, ஏகப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள். அமெரிக்காவில் எல்லோரையும் பெயர் சொல்லி அழைப்பதுதான் பழக்கம் என்றாலும், ஜாக்குலினை ஜாக்கி என்றெல்லாம் அழைக்கக் கூடாது. மேடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி.. என்னென்ன வேலைகள்?  மேடத்தின் படுக்கை, தலையணைகளைத் தினமும் மாற்ற வேண்டும்.  இரவு போட்டுக் கொள்ளும் நைட் கௌனைத் தினமும் மாலையில்அயர்ன் செய்து வைக்க வேண்டும். மேடம் போட்டுக் கொள்ளும் கையுறைகளைப் பராமரிக்க வேண்டும். அதற்கு கேத்திக்குத் தனியாகவே வகுப்பு எடுக்கிறார்கள். அந்த பன்றித் தோல் கையுறைகளை சுத்தம் செய்வதற்கான திரவத்தை வைத்து நன்றாகத் துடைக்க வேண்டும்.  அது கடினமான வேலை. அந்த திரவம் ஏதோ திராவகம் போன்றது. துடைக்கும்போது புகையாக வரும். கைகள், கண்கள், நெஞ்சு எல்லாம் எரியும். அப்படித் துடைக்கும் போது பக்கத்தில் உள்ள ஜன்னல் ஒன்றைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஃபேனை வைத்து அந்த திரவத்தின் புகையை வெளியேற்ற வேண்டும். பின்னர் அந்தக் கையுறைகளை நன்றாகத் துடைத்து, ஒரு வெள்ளைத் துண்டில் அந்த திரவத்தின் வாடை நீங்கும்படி ஆற விடவேண்டும். பின்னர் கையுறையின் உள்ளேயும், வெளியேயும் பேபி பவுடரைப் போட்டுக் கை எரிச்சல் ஏதேனும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வேண்டும்.  மேடத்தின் படுக்கையறை முழுக்க பெரிய பெரிய அலமாரிகள், பீரோக்களில் அவரது அன்றாட ஆடைகள் இருக்கும். பேண்டுகள், ஸ்கர்ட்டுகள், மேல்சட்டைகள். டீசர்ட்டுகள், ஸ்வெட்டா்கள் என்று பல தினுசுகளில். எல்லாவற்றையும் நிற வாரியாக அடுக்கி வைக்க வேண்டும்.  ஒரு அறை முழுக்க செருப்புகள். ஷூக்கள். ஜாக்கிக்கு ஒரு கால்  மற்ற காலை விட சற்று குட்டை. அதை சரிசெய்ய விசேஷமாக ஒரு காலில் அரைக்கால் அங்குலத்திற்கு ஹீல்ஸ் கூடுதலாக வைக்கப்பட்டிருக்கும். புது காலணி வாங்கி வந்ததும், அதன் கீழ் பாகத்தில் ஒரு விசேஷக் கத்தியை வைத்து எக்ஸ் போல் ஆழமாக வெட்டி வைக்க வேண்டும். பளிங்குத் தரைகளில் அம்மாவிற்கு வழுக்கி விடாமல் இருக்க இந்த ஏற்பாடு. ஆயிரக்கணக்கான டாலர் போட்டு வாங்கிய ஷூவை இப்படிக் கத்தி கொண்டு வெட்டும் போது கேத்திக்கு ரத்தக் கண்ணீர் வரும்.  வெளிநாட்டுப் பயணங்களின் போது ஆயாக்கள் வரமாட்டார்கள். கேத்திதான் குழந்தைகளையும் மேய்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் சேர்த்து வாரம் 75 டாலர் சம்பளம்.

அம்மா வெளியே செல்லும் போதெல்லாம் எந்தக் கைப்பை எடுத்துச் செல்கிறாரோ, அந்தக் கைப்பையில் ஒரு புது சிகரெட் பாக்கெட்டை வைப்பது கேத்தியின் வேலை. மறுமுறை அவர் வெளியே செல்லும்போது, அந்தப் பாக்கெட்டில் பாக்கி சிகரெட் இருந்தாலும் கூட, அதை எடுத்து விட்டு புது பாக்கெட்தான் வைக்க வேண்டும். மிஞ்சின சிகரெட் எல்லாம் கேத்திக்கு ! சிகரெட் மட்டுமல்ல, உதட்டுச் சாயம், சின்ன பிரஷ், அவசரமாக ஏதேனும் போன் செய்ய வேண்டும் என்றால் தேவைப்படும் சில்லரைக் காசுகள் எல்லாம் வைக்க வேண்டும்.

சென்ட்டும் அப்படித்தான். ஜாக்கி பயன்படுத்தும் ஜாய் என்ற சென்ட் மிக அபூர்வமானது.  ஒரு அவுன்ஸ்  ஜாய் சென்ட் தயாரிக்க பத்தாயிரம் மல்லிகைப் பூக்களும், முன்னூறு ரோஜாப்பூக்களும் வேண்டும்.இந்த சென்ட் பாட்டிலை ஞாபகமாக எடுத்து வைப்பது கேத்தியின் அன்றாடக் கடமைகளில் ஒன்று.  அம்மா ஊருக்குக் கிளம்புகிறார் என்றால் கேத்திக்கு மூச்சுவிட நேரமில்லாமல் அவ்வளவு கடுமையாக வேலை இருக்கும். ஊருக்கு எடுத்துச் செல்லும் ஆடைகளில் லேசான சுருக்கம் கூட இருக்கக் கூடாது என்று, நாம் கடையில் வாங்கி வரும் போது உள்ளே அட்டை எல்லாம் வைத்து பேக்கிங் செய்து தருவார்களே, அது மாதிரி, ஒவ்வொன்றிலும் உள்ளே அட்டை வைத்து பேக் செய்து பெட்டியில் அடுக்க வேண்டும். திடீரென்று சர்ச்சிலின் புதல்வர் ராண்டால்ஃப் சர்ச்சில் விருந்துக்கு வருவார். ராபர்ட் கென்னடி வருவார்.  ஒரு நாள் எலிசபெத் டெய்லரும். ரிச்சர்ட் பர்ட்டனும் வந்து ஜாக்கி வீட்டின் விருந்தினர் அறையின் விசேஷமான ஸ்டூலில் அமர்ந்து மது அருந்துவார்கள்.  அந்த ஸ்டூல்கள் திமிங்கலத்தின் ஆணுறுப்பின் மென்மையான தோலில் செய்யப்பட்டவை. அதில் உட்கார்ந்தால் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும் என்று ஒரு நம்பிக்கை.  மிக முக்கியமான விருந்தினர்கள் மட்டுமே அதில் அமர முடியும். அன்றெல்லாம் உட்காரவே முடியாத அளவிற்கு கேத்திக்கு வேலை இருக்கும்..

பெரும் பணக்காரப் பெண்களின் இயல்புகள் அத்தனையும் ஜாக்கிக்கு உண்டு. ஒருபுறம் வேலைக்காரிகள் மீது பாசத்தைப் பொழிவது. மறுபுறம் வேலைக்காரிகளை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டது போல் நடந்து கொள்வது என்ற இரண்டும் உண்டு. கேத்திக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது ஜாக்கிக்கு நினைவே இருக்காது.  அன்றும் ஏதேனும் வேலை சொல்லிக் கொண்டே இருப்பார். இதிலிருந்து தப்பிக்க கேத்தி வார விடுமுறை நாளில் நாள் முழுக்க தெருத் தெருவாகச் சுற்றுவாள்.  சினிமா தியேட்டரில் உட்காருவாள். பிறகு வார விடுமுறை நாளைக் கழிப்பதற்காகவே ஒரு சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்தாள். அவளது காதலன் வந்து போகவும் வசதியாக இருக்கிறது. இந்தத் தகவல் ஜாக்கிக்குத் தெரிந்துவிடவும், ஏன்,உன் காதலனை நம் வீட்டிற்கே வரச் சொல்லேன் என்கிறார். அவன் எலக்ட்ரீஷியன், பிளம்பர். கேத்தியைச் சந்திக்க வரும் போதெல்லாம் அவனும் ஜாக்கி வீட்டில் ஏதாவது வேலைகள் செய்ய நேர்கிறது.  கேத்தியின் காதலன் இருக்கும் போதே, கவனக் குறைவாக, ஜாக்கி, உடம்பு முழுவதும் தெரியும் வண்ணம் மெல்லிய உடையோடு தடதடவென்று வந்துவிட்டு, “தம்பி, பார்க்காதே, பார்க்காதே, கண்ணை மூடிக் கொள்,“ என்று கத்திக் கொண்டே தடதடவென்று திரும்பத்தன் அறைக்கு ஓடும் கூத்தும் அவ்வப்போது நடக்கும்.

மற்றொருபுறம் பெரும் செல்வந்தர்களுக்கு திடீர் திடீரென்று ஏழைகள் பால் இரக்கம் பொங்குமே – அப்படியான இரக்கமும் ஜாக்கிக்கு கேத்தி மேல் பொங்கும். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி வீட்டுச் சாப்பாடு அல்லவா? கேத்தி 20 -22 வயதில் 85 கிலோ குண்டம்மாவாக ஆகிவிடுகிறாள். ஜாக்கி ஒரு நாள் தலைமை சமையல்காரியிடம், இனி மேல் கேத்திக்கு எனக்குத் தரும் அதே டயட்டைக் கொடு என்று உத்தரவிடுகிறார்.  வேலைக்காரிக்கு இரண்டாவது டிகாஷனில் காபி தரும் நம் ஊர் ஆண்டிகளின் வழக்கம் ஜாக்கிக்குத் தெரியாது போலும் ! காலையில் ஒரு அவித்த முட்டையும், டீயும். மதியம் ஆப்பிள் போன்ற பழங்களும். பாலாடைக்கட்டிகளும்.  இரவு சிக்கன், ஒரு துண்டு மீன், வேக வைத்த காய்கறிகள், சாலட்.  சில நாட்களிலேயே கேத்தி ஜாக்கியின் தங்கை போன்று ஆகிவிடுகிறாள்.

ஒரு நாள் கோடீஸ்வரர் ஓனாசிஸ் ஜாக்கி வீட்டுக்கு வருகிறார். கேத்தி தான் அவரது பெட்டியை அவருக்கான அறையில் எடுத்துச் சென்று வைக்கிறாள். ஓனாசிஸ் இந்தா என்று டிப்ஸ் தருகிறார். பார்த்தால் அது 100 டாலர் நோட்டு. வாரச் சம்பளத்தை விட அதிகம்! சில நாட்களிலேயே ஜாக்கி அவரைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறார். ஜாக்கியின் மூத்த மகள் சற்று பெரியவள்.விபரம் தெரியும் வயது. அவள் கோபப்படுகிறாள். ஜாக்கி கேத்தியிடம் நீதான் பெரியவளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கெஞ்சுகிறாள்.  உலகின் மிக முக்கியமான 40 பேர் மட்டுமே கலந்து கொண்ட ஜாக்குலின் – ஓனாசிஸ் திருமணத்தில் கேத்தியும், அவளது காதலனும் முக்கிய விருந்தினர்கள் . மாப்பிள்ளை, பெண்ணுக்கு ஆரஞ்சுப் பூக்களில் கிரீடம்.  இருவரும் இணைந்ததைக் குறிக்க கிரேக்க முறைப்படி இருவரது கைகளையும் இணைத்து ஒரு ரிப்பனால் கட்டியிருக்கிறார்கள்.  நம் ஊர் போலவே அரிசியை மணமக்கள் மீது தூவி வாழ்த்துகிறார்கள். வாழ்வில் அதிருஷ்டம் என்றும் நிலைத்திருக்க சர்க்கரையும், பரம்பரை தழைக்க பாதாம் பருப்பும் மணமக்களுக்குத் தருகிறார்கள். ஓனாசிஸ் தாத்தா யோகக்காரர்தான். கல்யாணத்திற்குப் போக, வர ஓனாசிஸின் சொந்த விமானம், அவரது சொந்தக் கப்பலில் இறங்குகிறது. கப்பலில் அவரது சொந்தத் தீவிற்குச் செல்கிறார்கள். அங்குள்ள அவரது சொந்த தேவாலயத்தில் திருமணம் !

அது போலவே கேத்தியின் திருமணத்திற்கு ஜாக்கிதான் முக்கிய விருந்தினர். ஜாக்கி வரமாட்டார் என்றுதான் கேத்தி நினைக்கிறாள். ஆனால் ஓனாசிஸ், குழந்தைகள் என்று குடும்பத்தோடு வந்துவிடுகிறார். கேத்தியின் திருமண உடையைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். திருமண மோதிரத்தின் டிசைனைப் பார்த்து வியக்கிறாள். வந்தவர்கள் அனைவரின் கவனமும் தன் மீது விழுவதை தாமதமாகப் புரிந்து கொண்டு, பரிசைக் கொடுத்து விட்டு ஓடிவிடுகிறார்.

கால ஓட்டத்தில் கேத்தியின் கணவன் பெரிய கட்டிடக் காண்டிராக்டராகி விடுகிறான். வசதிகள் பெருகுகின்றன. ஜாக்கியின் குழந்தைகளும் பெரியவர்களாகி விடுகிறார்கள். ஜாக்கியும் ஓனாசிஸோடு அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் பறந்து கொண்டிருக்க, கேத்தி வேலையை விட்டு விட்டுத் தன் குடும்பத்தைக் கவனிக்கச் சென்று விடுகிறாள். ஆனால் இன்றளவும் ஜாக்கி குடும்பத்துடன் தொடர்பிருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்திக்கிறார்கள். நல்லது, கெட்டதுகளுக்குத் தகவல் சொல்லிக் கொள்கிறார்கள். வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறார்கள்.

ஜாக்கியின் வீடு, அதன் பிரும்மாண்டம், ஒவ்வொன்றிற்கும் தனித் தனி வேலையாட்கள் ,  ஆயிரக்கணக்கில் உடைகள், ஆயிரக்கணக்கில் செருப்புகள், ஏராளம் ஏராளமான நகைகள். வேலை செய்பவர்களுக்கு வெளியில் இருக்கும் செல்வாக்கு, அவர்களது எளிய பின்னணி சிறிது சிறிதாக மாறுவது எல்லாமே எங்கோ வேறொரு கண்டத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை என்றாலும் அனைத்துமே நமக்கு ஏற்கனவே  தெரிந்தவைகளாகத்தான் இருக்கின்றன. மிகப் பெரிய செல்வந்தர்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.  வேலைக்காரிகளைத் தாம் நிறைய  விலை கொடுத்து வாங்கிய விலையுயர்ந்த வளர்ப்புப் பிராணி போல் நடத்துகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று இருக்கும், தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனாலும், அவர்கள் தன் அளவற்ற செல்வத்திலிருந்து லேசாகத் தம் வேலைக்காரிகள் மீது தெளித்து விடும் செல்வத் திவலைகளே இந்த வேலைக்காரிகளுக்குப் போதுமானதாக இருக்கிறது. இதை கேத்தி மிக நன்றாகவே பதிவு செய்திருக்கிறாள்.

படித்து முடித்தவுடன் எனக்கு ஜெயா‘ஸ் கேர்ள் என்று சின்னம்மா எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

ஆர்வம் உள்ளோர் வாசிக்க – Jackie’s Girl by Kathy McKeon.