கிரேக்க தொன்மத்தில் மினோட்டர் என்று ஒரு அரக்கன் வருகிறான். அவனைக் கட்டுப்படுத்துவதற்காக அவனை பாதாளச் சிறையில் அடைத்து, அவன் வெளியேவர முடியாத அளவுக்கு ஒரு சிக்கலான வழிகளைக் கொண்ட Labyrinth என்கிற சுருள் வழியை உண்டாக்கி வைப்பார்கள். லாப்ரிந்துக்குள் இருந்து மினோட்டரும் தப்ப முடியாது, அதில் நுழைந்த யாரும் வெளியே வரவும் முடியாது.
அத்தகைய சிக்கலான ஒரு லாப்ரிந்தைப் போல இருந்தது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி! (அதென்ன கண்காட்சி? புத்தகங்கள் எல்லாம் அருங்காட்சியக பொக்கிஷங்களா…) இந்தப் புத்தக லாப்ரிந்துக்குள் நுழைந்து ஒரு மணிநேரத்திற்குள் தனக்கு வேண்டிய கடையைத் தேடி கண்டடைகிறவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என போட்டியே வைக்கலாம். கடை எண்களில் அத்தனை குழப்பம். விழாவின் அத்தனை நாள்களும் சுற்றிய என்னாலேயே கடைசிவரை எந்தக்கடை எந்த பக்கம், எந்த எண்ணில் இருக்கிறது என்பதைச் சொல்லமுடியாத அளவுக்கு குழப்பங்கள்!
46ஆவது ஆண்டாக சென்னையில் புத்தகத் திருவிழா (அப்படியே சொல்வோம்) நடக்கிறதாம். ஆனால் இந்த முறையும் கழிப்பறை சரியில்லை. நாம் நடக்கும்போது பாதையும் சேர்ந்து நடக்கிறது. நடனமாடுகிறது. குதிக்கிறது. தடுக்கிவிடுகிறது. குப்புறக் கவிழ்க்கிறது. பார்க்கிங் குழப்பங்கள். எது என்ட்ரன்ஸ் என்பதில் குளறுபடிகள். ஒருநாள் பார்த்தால் வாசலில் சாக்கடை அடைப்பெடுத்து மலம் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த ஆண்டாவது இதையெல்லாம் மேம்படுத்தலாம்!
சர்வதேச புத்தகத் திருவிழாக்கள் எல்லாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனையோ முன்னேறிவிட்டன. ஆனால் நாம் இன்னமும் சாணிக்காயிதத்தில் கடைகளுக்கு வரிசை எண் போட்டு அச்சடித்துக் கொடுக்கிறோம். விழாகமிட்டி ஒரு ஆன்ட்ராய்ட் செயலியை உருவாக்கலாம். அதில் எழுத்தாளர் பெயரைப் போட்டால் இந்தக்கடையில் அவர் நூல்கள் கிடைக்கிறது என்று விபரம் தரலாம். பதிப்பகத்தின் பெயரைக்கொண்டு, என்ன மாதிரி ஜானர் என்பதைக் கொண்டு தேடும் வாய்ப்புகள் உண்டாக்கலாம். உதாரணத்திற்கு குழந்தைகள் நூல்கள் என்று தேடினால் என்னென்ன பதிப்பகங்கள் குழந்தைகள் நூல்கள் போட்டிருக்கிறார்களோ அத்தனையும் கடை எண்களோடு பட்டியலாக வந்தால் எத்தனை சுலபமாக இருக்கும்! கூடவே மேப் ஒன்றும் இணைக்கலாம். என்னென்னவோ செய்யலாம். ஆனால் இன்னமும் செட்டியார் கடையில் ரொட்டி விற்பது போல விற்றால் எப்படிஜி!
அடுத்து நேரம், இன்னும் அதே பழங்காலத்துக் கால அட்டவணையையே பயன்படுத்துகிறார்கள். காலை 11 முதல் இரவு 8-30 வரை! வேலைநாட்களில் வேலை முடிந்து வருகிற ஒருவனுக்கு இது நிச்சயம் எவ்வகையிலும் உபயோகப்படாத நேரம். மதியம் மூன்று மணிக்குத் தொடங்கி இரவு பதினொரு மணிவரை நீட்டிக்கலாம். அடுத்த தலைமுறை மிட்நைட்டில் பிரியாணி சாப்பிடுகிறது, பீச்சில் ட்ரைவ் போகிறது, நள்ளிரவில் மாரத்தான் ஓடுகிறார்கள். புத்தகங்கள் வாங்க வரமாட்டார்களா. இரண்டு சனிக்கிழமைகளில் மட்டும் நள்ளிரவு திருவிழாவை நடத்தலாம். புது அனுபவத்திற்காகவே கூட்டம் அலைமோதும். அந்த நேரத்தில் யாரும் தூங்கிவிடாமல் இருக்க ஆட்டம் பாட்டம் என நாட்டுப்புறக் கலைஞர்களை அழைத்துக் கொண்டாட்டமாக்கலாம்! புத்தகம் என்றாலே வளவளா கொளகொளாதானா? கொஞ்சம் மசாலாவும் சேர்க்கலாமே மாமே!
ஆயிரம் கடைகள் போடப்பட்டிருந்தது! சென்ற ஆண்டைவிட இது மிக அதிகம். ஆனாலும் நிறைய சிறு பதிப்பகங்களுக்கு கடை கொடுக்கவில்லை என்கிற குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. சிசிடிவி கேமரா விற்கிற கடைக்கு இடம் இருக்கிறது, சாமியார்களுக்கு இடம் இருக்கிறது, மதம் பரப்புகிறவர்களுக்கு, சொப்பு சாமான் விற்கிற கடைக்கு இடம் இருக்கிறது. ஒரே ஒரு புத்தகம் போட்ட மசாலா கம்பெனி தொழிலதிபர் கடைக்கு இடம் இருக்கிறது, ஆனால் பதிப்பகங்களுக்கு இல்லை! சால்ட் பதிப்பகம் போராடிப் போராடி கோபமாகி புத்தகத் திருவிழாவிற்கு உள்நுழைகிற நடைபாதையில் கடைபோட்டு அமர்ந்துவிட்டனர். அவருக்கு ஆதரவு தரும் வகையில் இலக்கியவாதிகளும் வாசகர்களும் கலைஞர்களும் குவிந்துவிட, அங்கே ஆட்டம் பாட்டம் என ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது. நல்ல வியாபாரம் ஆனதாகவும் பபாஸிக்குதான் நன்றி சொல்லவேண்டும் என்றும் சொன்னார் எழுத்தாளர் நரன்!
சிறைத்துறை புத்தக தானம் கேட்டு ஒரு கடை போட்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுக்க இருக்கிற சிறைகளில் நூலகங்களுக்கு நூல்களைக் கொடையாகத் திரட்டுவதற்காக போடப்பட்ட கடைக்கு நல்ல வரவேற்பு. ஒரு லட்சம் நூல்கள் இலக்கு வைத்திருந்தார்கள். அனேகமாக அதை எட்டி இருக்கலாம். அருமையான முன்னெடுப்பு. முன்னெடுத்தோர்களுக்கு வாழ்த்துகள். இதுபோல அரசுப்பள்ளி நூலகங்களுக்கும் புத்தக தானம் பெற்றால் பள்ளிக்குழந்தைகளுக்கும் நிறைய புதிய நூல்கள் கிடைக்கும்! சிறைத்துறைக்கு முன்னெடுத்தோர் அதற்கும் எடுங்கள்.
முந்தைய ஆண்டுகளை விட கூட்டம் குறைவு தான். கடைசி இரண்டு நாள் தவிர்த்து மற்ற நாளெல்லாம் சிலந்திகள் புத்தகங்களின் இடையே தூரி ஆடிக்கொண்டிருந்தன. ஆனாலும் 16கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக பபாஸியார் தெரிவித்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு விற்பனை 15 கோடி. ஒருகோடி கூடுதல்தான். இதற்குக் காரணம் புத்தக விலை ஏற்றமாகவும் இருக்கலாம். இம்முறை புத்தகங்கள் எல்லாமே அநியாய விலை. அதற்கு முக்கியமான காரணம், காகிதவிலையின் ஏற்ற இறக்கம், ஜிஎஸ்டி, பாஜகவின் குளறுபடிகள் அது இது என்று நிறைய காரணம் சொன்னார்கள். எதுவாக இருந்தாலும் புத்தகங்கள் மலிவாகக் கிடைக்க வேண்டும். அது எல்லோ
ருக்கும் கிடைக்கவேண்டும். காட்சிவழி உலகைக் காணும் அடுத்த தலைமுறைக்கு நூல்களை எவ்வழியிலேனும் நூல்களைக் கொண்டு சேர்க்கவேண்டும்.
மலிவாகப் புத்தகம் கிடைக்க அடையாளம் ஸ்டாலில் ஒரு டெக்னிக் பண்ணி இருந்தார்கள். அவர்களுடைய முக்கியமான நூல்களை எல்லாம் சாம்பல் காகிதங்களில் அடித்து 50% விலையில் விற்றுக்கொண்டிருந்தார்கள். அ.மார்க்ஸின் தலித் அரசியல் 500+ விலை. அது 250க்கே கிடைத்தது.
சாம்பல் காகிதம் என்கவும்தான் நினைவுக்கு வருகிறது. என்னுடைய தமிழ் இலக்கிய பட்டப் படிப்புக்காக சில பாடநூல்கள் வாங்க கடைகடையாகத் தேடி அலைந்தேன். சில பதிப்பகங்கள் மட்டும்தான் இதைப் பதிப்பிக்கிறார்கள். அப்படித் தேடியபோதுதான் தெரிந்தது, தமிழ்ப் பாட நூல்கள் எல்லாமே இப்படி சாணிக்காயிதத்தில்தான் அச்சடிக்கிறார்கள். ஆனால் விலை மட்டும் தரமான காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூலின் விலையில் (300 – 500) என விற்கிறார்கள். அரசு பாடநூல் நிறுவனமே இந்த நூல்களை நல்ல தாளில் அச்சடித்து விற்கலாம். தமிழ் பட்டப்படிப்பு படிக்கிறவர்களை ஊக்குவிக்கும்படி இருக்கும். இந்தக் காலத்தில் என்னைப் போல தமிழ்படிக்கிறவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கூட கொடுக்கவேண்டாம். இலவசமாக நூல்கள் தரலாம்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் சும்மா இருக்கவில்லை. சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டு நூல்களைத் தரமாகக் கொண்டு வந்திருந்தார்கள். விலையும் மலிவாக இருக்க மொத்த நூல்களும் விற்று தீர்ந்துவிட்டது. அதே கடையில் சற்றே பத்து வயதுக்கு மேலே இருக்கிற பெரிய சிறார்களுக்கான கதை நூல்களையும் போட்டிருந்தார்கள். அதில் சமூக நீதி, பாலின சமத்துவம் மாதிரி விஷயங்களைக் கற்றுத்தரும் சிறப்பான கதைகள் இருந்தன. அதுவுமே நல்ல விற்பனை ஆகி இருக்கிறது!
உணவு பற்றி சொல்லவேண்டும். பத்து மில்லி டீயை இருபத்தி ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். தியேட்டர்காரர்களின் கொள்ளைக்கு இணையான கொள்ளை இது. ஞானாம்பிகாவில் உணவு தரமாக இருந்தாலும் விலை எட்டாக்கனியாக இருந்தது. புத்தகம் வாங்க வருகிற ஏழை எளிய மக்கள் சாப்பிடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு மலிவு விலையில் புளிசாதம், சாம்பார் சாதம் விற்கிற கடைகளைப் போட அரசு முன்வரவேண்டும்! இரண்டு கடைகளில் அசைவ உணவுகள் விற்றது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இரண்டுமே சுவையாக இல்லை. அடுத்த முறை சுக்குபாய் பிரியாணிக்குக் கடை கொடுக்கலாம்.
எங்கு பார்த்தாலும் தமிழ் நூல்கடைகளும் ஆங்கிலமும் மட்டும்தான் இருந்தன, மற்ற இந்திய மொழிகள் குறிப்பாக மலையாளம், தெலுங்கு நூல்கள் விற்கிற கடைகளுக்குத் தனி இடம் ஒதுக்கலாம்.
எப்போதும் மூத்திர சந்தில் இருக்கிற சிற்றரங்கத்தை வெளியே வைத்தது பாராட்டுகளுக்குரியது. ஆனால் உள்ளே யார் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் எதற்குப் பேசுகிறார்கள் என்கிற விபரம் தெரியாமல் என்னத்த கூட்டம் நடத்துவது. வாசலில் ஒரு கறும்பலகை வைத்து அதில் என்ன ப்ரோகிராம், எத்தனை மணிக்கு யார் பேசுகிறார்கள் என்பதை எழுதிவைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
பெரிய அரங்கத்தில் எப்போதும் போல எழுத்தாளர்களை விட அதிகமாகப் பேச்சாளர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். நடப்பது புத்தகத் திருவிழா. இதிலாவது எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கலாம். அவர்களுடைய படைப்புகளைக் கொண்டாடலாம். அதை நாடகம், கவிதைவாசிப்பு, பாடல் என கொண்டு சேர்க்கலாம். நட்சத்திரப் பேச்சாளர்களுக்குத் தரப்படும் லட்சங்களை பற்றிக் கேள்விப்பட்டபோது மலைப்பாக இருந்தது. தமிழ் எழுத்தாளனுக்கு அது ஐந்தாண்டு ராயல்டி! அந்தப்பணத்தைக் கொடுத்தால் இரண்டு ஆண்டு நிம்மதியாக எழுதுவான். அடுத்த ஆண்டாவது வெறும் பேச்சுகளாக இல்லாமல் இசை, நாடகம் மாதிரி விஷயங்களைப் பெரிய அரங்கில் நடத்தலாம். அது இன்னும் கூட்டத்தை வரவழைக்கும். கண்காட்சியைத் திருவிழாவாக மாற்றுவது இசையும் நடனமும்தான்.
அரங்குக்கு உள்ளே நுழையும்போதே ஊறுகாய் கடை ஒன்று இருக்கிறது. யாரோ வடக்கர் போட்டிருக்கிறார். அருமையாகத் தமிழில் பேசுகிறார். இருபது முப்பது வகை ஊறுகாய்களை பக்கெட்டுகளில் அடுக்கிவைத்திருந்தார். மாங்காய் ஊறுகாய்களிலேயே ஏழெட்டு வகை அவரிடம் இருக்கிறது. எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, கத்தரிக்காய், மாதுளம்பழம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் என எதை எதையோ பண்ணி ஊறுகாய் போட்டிருக்கிறார். மூங்கில் ஊறுகாய் கூட இருந்தது. இனிப்பு ஊறுகாய்கள் இருக்கின்றன. நம்மூரில் அதைப் பஞ்சாமிர்தம் என்போம். எல்லாவற்றிலும் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பண்ணத்தந்தார். எல்லாமே சுவையாக இருந்தது. புத்தகங்களை விட அது அதிகமாக விற்றது!
இந்த முறை ஏராளமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பார்க்க முடிந்தது. அவர்களில் இரண்டுவகையினர் இருந்தனர். ஒருவகையினர் புலம்பெயர்ந்தவர்கள். இன்னொரு வகையினர் இலங்கையிலேயே வாழுகிறவர்கள். இருவருக்குமான வேறுபாடு அவர்களுடைய ஆடம்பர உடை, ஆங்கிலம் கலந்த பேச்சு அதிகார உடல்மொழியிலேயே தெரிந்துவிடுகிறது. இவர்களிலும் இரண்டுவகையினர் உண்டு. புத்தகம் போட்ட எழுத்தாளர்கள், புத்தகம் போடாத வாசகர்கள். இந்த இரண்டு பேரில் புத்தகம் போடாத வாசகர்கள்தான் உற்சாகம் குன்றாமல் சுற்றிக்கொண்டிருந்தனர். இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள எழுத்தாளரையும் சந்தித்தேன். அவரும் கூட புத்தகம் போட்டிருக்கிறார். அது தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி இருக்கிறது. அவருக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை. பாவப்பட்ட மனுஷன்!
பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தார் கடையில் ஒரு அஞ்சல் பெட்டி வைத்து இலவசமாக போஸ்ட்கார்ட் கொடுத்தார்கள். நமக்குப் ப்ரியப்பட்டவர்களுக்கு கடிதம் எழுதிப்போடலாம் என்றனர். கடிதம் என்கிற வடிவத்தைக் காக்கும் முயற்சி என்றார்கள். ஆர்வமாக வாங்கினேன். ஆனால் யாருடைய முகவரியும் நினைவில் இல்லை!
இஸ்லாமிய நூல்கள் பதிப்பிக்கிற சீர்மை கடையில் ஒட்டுமொத்த முல்லா கதைகளையும் அதன் அசல் பதிப்பிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்து ஐந்து வால்யூம்களில் போட்டிருந்தார்கள். மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் இடம்பிடித்திருக்கும்.
ஒரு கடையில் நின்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் மிகவும் ஈர்த்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வாழைமர நோட்டு’. அந்நூலின் எழுத்தாளரையும் நான் ஏற்கனவே முகநூல் மூலம் அறிந்திருந்தேன். அவருடைய ஆராய்ச்சிகள் குறித்தும் தெரியும் எனக்கு என்பதால் நூலைப் புரட்டி சில பக்கங்கள் வாசிக்கத்தொடங்கினேன்.
அந்தக் கடையில் இருந்த ஒரு பெண் என் அருகில் வந்து அந்நூலின் சிறப்புகள் பற்றி விளக்கி சொல்ல ஆரம்பித்தார். ‘‘இது சிங்கப்பூரை ஜப்பான் ஆக்கிரமித்தபோது அவங்க வெளியிட்ட கரண்சிங்க…’’ என்று அவர் சொல்லச் சொல்ல, நான் இடைமறித்தேன். ‘‘மேடம் எனக்கு இந்தப் புத்தகம் பத்தி தெரியும்ங்க, இந்த எழுத்தாளரை நான் பேஸ்புக்ல பாலோ பண்றேன், அதான் ஆர்வமா எடுத்துப் பார்த்தேன். நல்லா எழுதுவாங்க’’ என்று சொல்லவும் அவர் முகம் மலர்ந்துவிட்டது. ‘‘அந்த எழுத்தாளர் ஹேமாவே நான்தாங்க’’ என்றார். இதுபோன்ற ஸ்வீட் சர்ப்ரைஸ்கள் எப்போதாவதுதான் நடக்கும்! குறிப்பாக அதிகமும் அறியப்படாத எழுத்தாளர்களை அடையாளம் கண்டு பேசும்போது அவர்கள் நெகிழ்ந்துபோய்விடுவார்கள். ஹேமாவோடு நிறைய உரையாடினேன். நூலை வாங்கி வாசிக்கவேண்டும்.
கடைகளில் நின்று புத்தகங்களைப் புரட்டும்போது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை சந்திப்பது ஒருவகையில் மகிழ்ச்சியானது என்றாலும் இன்னொருவகையில் ஆபத்தானது. சில எழுத்தாளர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்றால், அவர் எழுதிய சமீபத்திய புத்தகத்தை எடுத்து நம் கையில் திணித்து ‘‘இதைப் படிச்சிட்டுக் கட்டாயம் நீங்க எப்படி இருக்குனு சொல்லணும், உங்க முகநூல் பக்கத்துலயும் இரண்டு வரி எழுதணும்’’ என்பார்கள். இதுவரை ஓகே. ஆனால் அதை அப்படியே தூக்கி பில் போடக் கொடுத்துவிடுவார்கள்.
நமக்கு அந்த நூல் தேவையா, வாங்கவிருப்பமா என்பதெல்லாம் சாய்ஸில் விடப்படும். இதில் பெரிய கூத்து என்னவென்றால், ‘‘ஏப்பா இவரு நம்மாளு’’ என்று பில் போடுபவரிடம் கூடுதல் டிஸ்கவுன்ட் கொடுக்கச் சொல்லிவிடுவார்கள். என்ன ஒரு பெருந்தன்மை!
ஒரு புத்தக அரங்கில் யாரோ யாரையோ அடித்துவிட்டார்கள் என்று சொல்லக்கேட்டேன். விசாரித்தபோது ஜெயமோகனைப் பற்றி யாரோ தரக்குறைவாகப் பேச அதைத் தட்டிக்கேட்ட ஓர் எழுத்தாளரை அந்த வெறுப்பு நபர் தாக்குதல் நடத்த, கைகலப்பு ஆகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கவிஞர் வேல்கண்ணன், கார்த்திக் புகழேந்தி உள்ளிட சிலருக்குக் காயமேற்பட்டதாக அறிகிறேன். அவர்கள் இப்போது குணமடைந்துவிட்டார்கள்.
ஜெயராணியின் நூல் வெளியிட்டுவிழா எதிர் பதிப்பக அரங்கில் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலும் கலந்துகொண்டு வெளியிட, ஏகப்பட்ட கூட்டம். பதிப்பாளரையே பிதுக்கி வெளியே தள்ளி ஓரமாக உட்கார வைத்துவிட்டனர். கடையில் அத்தனை கேமராக்கள், வாசகர்கள் என சூழ்ந்துவிட்டனர். இதுமாதிரி பிரபலங்களை வைத்து நடத்துகிற வெளியீடுகளை சிற்றரங்கில் அல்லது பெரிய அரங்கில் பண்ணலாம். இது மற்ற வாசகர்களுக்குத் தொந்தரவில்லாமல் இருக்கும். சிறிய கடைக்குள் நூறுபேர் நுழைந்துவிட்டால் கடைக்காரர்களுக்கும் சிரமம். யாராவது என்னைப்போன்றவர்கள் நாலு புத்தகத்தை லவட்டிக்கொண்டு போகவும் வாய்ப்புள்ளது.
கனிமொழி போலவே கடைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி விசிட் அடித்தார். மூன்று நாட்கள் வந்திருப்பார் போலிருக்கிறது. யாரைக்கேட்டாலும் எங்க கடைக்கு வந்தாப்டி இந்த புக் வாங்கினாப்டி என்று கதை சொல்கிறார்கள். அமைச்சர் மா.சுப்ரமணியம் ஓட்டம் பற்றி ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் போட்டிருக்கிறார். உடல்நலம் உடற்பயிற்சி சார்ந்த நூல்கள் என்றால் ஐபிஎஸ் அதிகாரிகளும், மனநலம் ஆராய்ச்சி மாதிரி நூல்களை ஐஏஎஸ் அதிகாரிகளும் வெளியிடுகிறார்கள் என்பதை இந்தமுறை அவதானித்தேன்.
முன்பெல்லாம் சிறார்களுக்கான தமிழ்நூல்களுக்கு நிறைய தேடவேண்டி இருக்கும். ஆனால் இப்போது நிறைய பதிப்பகங்கள் வந்துவிட்டன. புக்ஸ் ஃபார் சில்ரன், குட்டி ஆகாயம், வானம், துளிர், நம் பதிப்பகம் என ஏகப்பட்ட தமிழ் நூல்கள்!
புத்தகத் திருவிழாவில் சமையல் நூல்கள் விற்பனை பெருமளவு குறைந்துபோய் இருக்கிறது. சில பதிப்பாளர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ, எது எடுத்தாலும் பத்து என்றெல்லாம் சமையல் விற்கிறார்கள். சீந்த ஆள் இல்லை. மல்லிகா, கோமளா, பரிமளா என யார் யாரோ எழுதிய கொங்குநாட்டு சமையல், செட்டிநாட்டு அசைவ சமையல் புத்தகங்கள் எல்லாம் யாருமே கண்டுகொள்ளப்படாமல் கிடக்கிறது. யூடியூப் சமையல் புத்தகங்களுக்கும் அழகு குறிப்பு புத்தகங்களுக்கும் முடிவுரை எழுதிவிட்டது. இணையத்தால் விற்காமல் போன ஜானர்கள் நிறைய உண்டு, பிரபலமானவர்களின் விலாசகங்கள், ஜோதிட நூல்கள், முடிவளர்ப்பது எப்படி, ப்ரபோஸ் செய்வது எப்படி, மனைவியைக் கட்டுப்படுத்துவது எப்படி மாதிரி நூல்கள் என நீண்ட பட்டியல் போடலாம்.
இளையான் குடியான் மடல் என்று ஒரு இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடை. அங்கே நிறைய நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். ‘‘புத்தகம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, கால்வலித்தால் உட்காருங்கள்’’ என்று போர்ட் வைத்திருக்கிறார்கள். அந்தக்கடையில் நிறைய பேர் இளைப்பாறுகிறார்கள். நானும் சற்று நேரம் இளைப்பாறினேன். நல்ல கடை!
மார்க்ஸிம் கார்க்கியின் தாய் காவியம் வெறும் 150 ரூபாய்க்கு சவுத் இந்தியா பப்ளிகேஷன் கடையில் தரமான தயாரிப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். சீர் வாசகர் வட்டம் முன்னெடுப்பு! ஆயிரக்கணக்கில் விற்றுத்தீர்ந்தது. தமிழ்பிரபாவின் கோசலை நாவலும் ஆயிரம் காப்பிகள் விற்றது. சாரு நிவேதிதாவின் புதிய நாவலான ஒரு பின்நவீனத்துவ வாதியின் மறு சீராய்வு மனு 500க்கு அதிகமாக விற்றது. ஷான் கருப்பசாமியின் மூன்றாம் ஜூடியும் அதே அளவுக்கு விற்றுள்ளது. மொழிபெயர்ப்பில் அதிகமான விற்பனை ஆனது நேமிசந்திரா எழுதிய யாத்வஷேம் (எதிர்வெளியீடு, கே.நல்லதம்பி மொழிபெயர்ப்பு).
திருவிழாவில் ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். பொன்னியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. இந்த முறை 158 பதிப்பகங்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் பொன்னியின் செல்வன் பதிப்பித்திருக்கிறார்கள் என்றார். ஒவ்வொரு கடையாக எண்ணி இருக்கிறார்கள். நான் அதிர்ச்சி ஆவேன் என நினைத்திருக்கிறார். ‘‘ஆச்சர்யப்படவோ அதிர்ச்சி ஆகவோ ஒன்னுமில்லை சித்தப்பா… எப்பவும் 125பேர் போடுவாங்க. திரைப்படமாக வந்திருப்பதால் 25பேர் கூடி இருக்கிறார்கள்’’ என்றேன். 158 தவிர பொன்னியின் செல்வன் சுருக்கப்பட்ட பதிப்பு என்று ஒரு பத்திருபது பேர் புக்கு போட்டிருக்கிறார்கள். பொ.செ. காமிக்ஸ் வடிவிலும் ஆடியோபுக்காகவும் கிடைக்கிறது.
இத்தனை பேர் பதிப்பித்தும் எப்போதும் விற்பனை ஆவதைக்காட்டிலும் பொ.செ. குறைவாக விற்பதாக நிருபர் சொன்னார். அனேகமாக எல்லோருமே புத்தகம் வாங்கிவிட்டார்களாயிருக்கும் அல்லது படம் பாத்துக்கலாம் போதும், என்னத்த படிச்சு என எண்ணி இருக்கலாம்.
பொ.செ. இடத்தைப் பிடித்திருப்பது சு.வெங்கடேச னின் வீரயுக நாயகன் வேள்பாரி. இந்த தலைமுறைக்கு அதுதான் பொ.செ. விற்றுத்தள்ளுகிறது. மக்களுக்கு இந்த வால்யூம் வால்யூமாகப் புத்தகம் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்வதில் ஒரு பெருமிதம் இருக்கிறது!
பபாஸி நடத்தும் புத்தகக் கண்காட்சி அரங்குக்கு சற்று முன்னால் பெரிய மைதானத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தியது தமிழ்நாடு அரசு.
சமஸ்கிருத நூல்கள் விற்க கடை கூட போடப் பட்டிருந்தது. சமஸ்கிருத பாரதி என்கிற அந்தக்கடையில் சமஸ்கிருத மொழியின் அடிப்படைகளை கற்றுத்தருகிற நூல்கள் இருந்தன. கடைக்கார அக்கா என்னிடம் வந்து சமஸ்கிருதம் கிளாஸஸ் ஆரம்பிக்கப் போகுது. ப்ரீதான், சேர்றதுன்னா அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் பண்ணி பதிவு பண்ணிக்கோங்க என்றார். க்யூஆர் கோடை
ஸ்கேன் பண்ணினால் 350 காசு கட்டச்
சொன்னது, என்னடா இது சோதனை என்று விசாரித்தேன். அது புக்ஸ்க்கு, புக்ஸ் இல்லாம எப்படி படிப்பீங்க என்றார். ஸ்போக்கன் சமஸ்கிருதமாம்! அதைக் கற்றுக்கொண்டு யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. கடவுளோடு நேரடியாக உரையாடலாமோ என்னவோ. ஒரு நோட்டீஸ் கொடுத்தார்கள். அதில் இப்படி போட்டிருந்தது. ‘’learn Sanskrit , An opportunity to earn punyam”.
ஸ்ருதி டிவி கபிலன் கையில் கேமராவோடு சுற்றிச் சுற்றி என்ன நூல்கள் வாங்கலாம், எங்கே வாங்கலாம் என தேடித்தேடி பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அவருடைய சேவையை இலக்கிய உலகம் கொண்டாடித் தீர்க்கவேண்டும்.
மனுஷ்ய புத்திரன் இந்த முறையும் 13 கவிதை தொகுப்புகளைக் கொண்டுவந்திருந்தார். கிட்டதட்ட 2000+ கவிதைகள். அது ஒருபக்கம் தனித்தனியாக விற்க, இந்த ஆண்டும் மக்கள் மிஸ்யூவை வாங்கிச்சென்றதைப் பார்க்க முடிந்தது. உயிர்மையில் சுஜாதா, மனுஷ் கவிதைகள் தாண்டி சூர்யா சேவியரின் காவிரி நீரோவியம் விற்றுத்தள்ளியது. எஸ்ரா தன்னுடைய தேசாந்திரி கடையிலும், ஜீரோ டிகிரியில் சாருவும், தன் பதிப்பகக் கடையில் ஜெயமோகனும் வாசகர்களை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஷோபா சக்தி கறுப்புபிரதிகள் கடையில் பார்க்க முடிந்தது. அவர் நடந்து கொண்டே இருந்தார். நிறைய நூல்களை வெளியிட்டார். எல்லோரிடமும் அணுக்கமாகப் பேசினார். சந்தியாவில் வண்ணதாசன் அமர்ந்திருந்தார். புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ மக்கள் தயங்காமல் எழுத்தாளர்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த செல்ஃபிகளை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!
ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் அமர்ந்திருந்த சாருவிடம் அவருடைய பேன்ஸியான புதுமாடல் சட்டைகள் பற்றிக் கேட்டேன். ஜாராவில் வாங்கினேன் என்றார். அந்த ஜாராவைக் கண்டுபிடித்து நாலு சட்டைகள் வாங்கவேண்டும். ஜாரா என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த முறை இரண்டு தாராக்கள் புத்தகத் திருவிழாவில் இறங்கி இருக்கிறார்கள். ஒரு புத்தகம் ‘‘ஸ்மாஷன் தாரா’’ என்கிற கவிதை தொகுப்பு, இன்னொன்று ‘‘தாராவின் காதலர்கள்’’ என்கிற நாவல். எப்போதும் கவிதைகளை லாரி லாரியாக கன்டெயினர் கன்டெயினராக எழுதிக்குவிக்கிற மனுஷ் இந்த வருஷம் போட்டிருக்கிற நாவல்தான் தாராவின் காதலர்கள். எப்போதும் நாவல் நாவலாக எழுதுகிற சாரு போட்டிருக்கிற கவிதை தொகுப்புதான் ஸ்மாஷன் தாரா!
இரண்டு இளம் நவநாரீமணிகள் ஒரு கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருபெண், ஹேய் திஸ் லுக் இன்ட்ரஸ்டிங்… ஆனா எனக்குத் தமிழ் தெர்யாதுடி என்கிறார். அதற்கு இன்னொரு பெண் ஏன் இவங்க தமிழ் ஃபான்ட்ல புக் போடறாங்க இங்கிலீஸ்பான்ட்ல போட்டா நாமளும் படிக்கலாம்ல என்கிறார். ஆமா, தமிழ் புக்லாம் இங்கிலீஸ் லெட்டர்ஸ்ல போடலாம் அட்லீஸ்ட் போயம்சையாச்சும் என்றார். நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தங்கிலீஸ் தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. அது தங்கிலீஸில்தான் உலகத்தை வாசிக்கிறது. சினிமாவில் கூடப் பலரும் திரைக்கதைகளை தங்கிலீஸில்தான் டைப் பண்ணுகிறார்கள். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்து தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தியிலும் கூட இதே நிலைமைதான். கிண்டிலில் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட இந்தி நூல்கள் வரத்தொடங்கிவிட்டன. அடுத்த புக்பேருக்குத் தமிழிலும் அப்படி யாராவது முயற்சி பண்ணலாம்.