“என் ஆத்ம தாகத்தை உலகப் பொருட்களால் தணித்துக்கொள்ள முயன்றேன் முடியவில்லை, என் இல்லத்தில் உலகத்துக்குரிய பல சிறந்த பொருட்களிருந்தன. ஆனால் என் ஆன்மாவைத் திருப்திப்படுத்த எதனாலும் இயலவில்லை, உலகத்தினால் இதயத்தைத் திருப்தியாக்க முடியாது.

-சாது சுந்தர் சிங்-

 

 

ஓவியம் – திண்டுக்கல் தமிழ்ப் பித்தன்

 

இயேசுவைப் பற்றிய இரண்டு திரைப்படங்கள்.

நடந்து முடிந்த சில வாழ்க்கை நிகழ்வுகளை மறுபடியும் நினைக்கும் போது விசித்திரமாக உள்ளது. ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதை பிரதியில் நாமெல்லாம் ஒரு நடிகர் என்பது போலவே சில சம்பவங்கள் நம் வாழ்க்கையில் கடந்து விடுவது இந்த வாழ்க்கையில் உள்ள புதிர்தான்.

சினிமாமீதான ஒரு வேட்கை வருவதற்கு அதே சினிமாமீது விலகிச் சென்று வாழ்க்கை பற்றிய மெய்யான சத்தியம் அறிவதற்கும் திரைப்படம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு நெருக்கமாக பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால் எனது வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இன்னும் நினைவுகளில், கனவுகளில் சுற்றிச் சுற்றி  வரும் இரண்டு சினிமாக்கள் இன்று வரை என் நினைவில் ஒளிரும் சினிமாக்களாகவே உள்ளது.

ஒரு நல்ல சினிமா நம்மை நிச்சயமாக சத்திய ஒளியைத் தரிசிக்க செய்யும் என்பதற்கு நானே வாழும் ஒரு சாட்சி. சினிமா பார்ப்பதும், ரசனையை குறித்த நீண்ட பயணத்தில் ஒரு திடீர் திருப்பம் போலவே ஒரு சினிமா என்பது வாழ்க்கைப் பயணத்தில் இப்படி இடைப்பட்டு வாழக்கையைத் திசை திருப்பும் என்று கனவிலும் நான் நம்பவில்லை.

“நசரேத்தூர் இயேசு” ( JESUS OF NAZARETH ) என்ற திரைப்படம் என் உணர்வுகளில் அளவற்ற மாற்றத்தை ஏற்படுத்தியது. இது ஒரு வெறும் திரைப்படம் என்று மட்டும் நினைத்து என்னால் கடந்து போக முடியாத ஒரு அன்பின் சினிமா இது. பாடசாலையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் இந்தப் படத்தை 16 MM புரஜெக்டரில் இரண்டு சகோதரர்கள் பாடசாலை மண்டபத்தில் பெரிய திரையில் (ஸ்க்ரீனில்) திரையிட்டார்கள். வெளியே மெல்லிய மழைத் தூறலில் படம் பாடசாலை மண்டப இருளில் தொடங்கியது.

இயேசுவின் அன்பு பற்றிய அந்த திரைப்படம் எனக்குள் என்ன செய்ததோ தெரியவில்லை, ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வை இந்த சினிமா சின்ன வயதில் எனக்குள் ஏற்படுத்தியது. நமது எல்லா படங்களிலும் இறுதியில் கதாநாயகன் வெற்றி பெறுவான், இதுதான் நமக்கு சொல்லப்பட்ட சினிமா கதைகள். ஆனால் இங்கே அப்படி இல்லை, ஒரு  HERO- வை அதுவும் எல்லோருக்கும் நல்லது செய்யும் ஒரு கதாநாயகனை இறுதியில் மிக பயங்கரமாக, கொடூரமான முறையில் அதுவும் சிலுவை மரத்தில் ஆணிகளைக் கொண்டு அடித்து விடுகிறார்கள். அந்த மனிதனோ அவர்களை எதிர்க்காமல் ஒரு ஆட்டைப் போலவே அவர்களிடம் ஊமையாக நிற்கிறார். ஏன் அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலாது போனார், அவர் நல்லவர் தானே, அவரை ஏன் இப்படி அநியாயமாகக் கொன்றார்கள். அய்யோ அவர் பேசாமல் நிற்கிறாரே.. அவரை நினைத்து அந்த இருட்டில் தேம்பித் தேம்பி அழுதப்படியே மழையில் நனைந்து கொண்டே ஏதோ உலகமே வெறுத்துவிட்ட ஞானியைப் போல் ஒரு மனத்தாங்கலில் வீட்டுக்கு வந்தேன். அம்மாவோ எனது நிலையை பார்த்துவிட்டு ஏன் தம்பி மழையில் நனைந்து கொண்டு வந்தாய் என்று கேட்ட போதுதான் உணர்வு பெற்றவனாக மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்தேன். எப்படியோ எனது அந்தக் கறுப்புக் குடையைத் திரைப்படம் பார்த்த காரணமாக விட்டுவிட்டு வந்தேன் என்பது மட்டும் நினைவில் இல்லாது போனது. அன்று இரவு எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த இயேசுவின் சிலுவைக் காட்சி எனது மனதில் வடுவைப் போல் ஆனது. அதை மறக்கவே முடியவில்லை. அந்த சிலுவை ஞாபகங்கள்  ஏனோ நினைவில் திடீர் திடீர்ரென தோன்றி மறையும். அந்த நாளில் ஏதோ ஒரு இனம் புரியாத அறிவை உணர்வை அந்தக் காடசி எனக்குள் ஏற்படுத்தியது. ஏன் ஒரு நல்ல மனிதனை இப்படி அநியாயமாகக் கொன்று விட்டார்கள் என்ற வினா மட்டும் அந்தக் காலத்தில் என்னோடு வந்தபடியே இருந்தது. ஏன் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?

நசரேத்தூர் இயேசு ( JESUS OF NAZARETH ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையைத் திரைப்படத்துறை நோக்கி அழைத்துச் சென்றது. திரைப்படத் துறை மீது கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது.

இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசுநாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதயக்கிடங்கை வலுவாகத் தாக்க்க் கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பாடசாலைக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம்தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாதபடிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதைத் தாக்கக் கூடியதுதான். ஆனால் ‘திரைப்படம்’ என்ற அளவில் இப்படம் என் மனதைத் தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மனக் கண்ணிலிருந்து பிரிக்க முடியாதபடிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் ரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும்.

இந்தப் படம் வெறும் காட்சியோடு மட்டும் முடியாது. அந்தப் படத்தில் ஏற்பட்ட தாக்கம் எனக்குள் எப்போதும் நிரந்தரமாகத் தங்கிப் போனது. அதன் தொடா்ச்சியாக சினிமா துறையின்மீதும் ஒரு காதல் ஏற்பட்டது. அப்போதும் சரி இப்போதும் சரி, தமிழ் சினிமா மீது எனக்கு என்றுமே ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அந்த நாட்களில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் சில அற்புதமான திரைப்படங்களைப் பார்த்து விட்டு எனது சினிமா பற்றிய ரசனை வளரத்தொடங்கியது. ஏதோவொரு ஈரானிய திரைப்படம் பெயர் இன்று வரை தெரியவில்லை, அதன் பின் சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி, செவன் சாமுராய், ரஸோமோன் மற்றும் கம்பெரலிய போன்ற மிக சிறந்த சினிமாக்களை எனது பாடசாலை நாட்களில் நான் பார்த்த படங்களைப் போலவே படம் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு, தமிழ்நாட்டிற்கு மிக கடினமாக முயற்சிகள் செய்து பயணமானேன். சினிமா எடுக்க வேண்டும், ஒரு இயக்குனராக வர வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. அங்கே சென்ற பின்புதான் இலங்கையில் வைத்துப் பார்த்த அத்தனை படங்களின் விபரம் அதன் இயக்குனர்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். காலங்கள் திரைச் சட்டகம் போலவே ஓடியது. எட்டு வருட காலம் சென்னை வாழ்க்கையில் எனக்குள் தமிழ் சினிமா ஒரு மன நோயாளியைப் போலவே என்னை மாற்றி இருந்தது. அத்தோடு நான் நினைத்து வந்த சினிமா கனவுக்கும் நிலவிய சூழலுக்கும் எந்தவொரு உறவற்ற பாலைவனச் சூழலில் சென்னை வாழ்க்கை எனக்குக் கசப்பான பாடத்தையே கற்றுத் தந்தது. ஆனால் இயேசுவின் படம் மட்டும் சிலுவையில் தொங்கும் இயேசுவின் அந்த அன்பு ததும்பும் முகத்தை சுமந்த கத்தோலிக்க ஆலயத்தை நோக்கி ஏதோ  ஒரு அமைதி தேடி தனிமையில் அலைந்திருக்கின்றேன். அங்கே அந்தப் பெரிய ஆலயங்களில் நான் ஒரு வேண்டாத ஆளாகவே பார்க்கப்பட்டதைப் போலவே யாரிடமும் பேசாமல் எனக்குத் தெரிந்த ஏதோ ஒரு பிரார்த்தனையை செய்துவிட்டுக் கடந்து வந்திருக்கிறேன். தேவாலயத்தை விட எழும்பூர் நகரத்தின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் பைபிள் வசனங்கள் சில நேரங்களில் ஆறுதலாக இருந்துள்ளது.

”நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை.”

”வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

சென்னை வாழ்வின் தனிமையில் இந்த வசனங்கள் என்னோடு பயணிப்பதை அடிக்கடி உணர்ந்துள்ளேன். அந்த நேரத்தில்தான் மெல் கிப்சன் இயக்கிய  THE PASSION OF CHRIST என்ற படம் திரையில் வந்து நண்பர்கள் பார்த்துவிட்டுப் பல்வேறு அபிப்பிராயங்களைப் பகிர்ந்தபடி இருந்தார்கள். நானும் அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து இறுதிவரை படத்தை பார்க்கவே முடியாது போனது. இறுதியில் அந்தப் படம் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. நானும் அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் காலப்போக்கில் மறந்தே போனேன்.

அதன் பிறகு சென்னையில் இருந்து கனவுகள் எல்லாம் அப்படியே இருக்க இலங்கைக்குத் திரும்புகிறேன். இங்கே வந்த பிறகு வாழ்க்கை சூனியமாக மாறுகின்றது. தோல்வியின் விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாத ஒரு மனப் பிறழ்வு நிலையில் இருந்த போதுதான் தற்செயலாக ஒரு சபையின் போதகர் என்னிடம்  THE PASSION OF THE CHIRST படத்தின் குறுந்தகடைத் தந்தார். நான் ஆச்சரியமாக இந்தப் படத்தை எத்தனையோ முயற்சி செய்தும் பார்க்கவே முடியாது போனதே, நானோ ஒரு மன விரக்த்தியில் வாழ்க்கையே வேண்டாம் தற்கொலை செய்து செத்து விட்டால் என்ன என்று நிலையில் இருந்த போது அந்தப் படத்தை அவர் தந்து பார்க்கும்படி சொன்னார். நான் அவரிடம் DVD வாங்கி வந்து வீட்டில் உள்ள DVD PLAYER –இல் போட்டு ஒரு பத்து நிமிடம்தான் பார்த்திருப்பேன். என்ன ஆனதோ எனக்குத் தெரியவில்லை, எனது வாழ்க்கை பற்றிய நினைவுகள் அங்கும் இங்குமாக அலை மோதி இறுதியில் என் வாழ்க்கை ஒரு படக் காட்சி போலவே ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது. திரைப்படக் காட்சி மறைந்து எனது வாழ்க்கையை யாரோ அழைத்துச் சென்று எனது ஆத்மாவில் உள்ள மகா கொடிய துன்பங்களை எனக்குக் காட்டி என்னை எனக்கு அந்நியமாக மாறும் நிலைக்கு நான் மாறிய போது, தரையில் விழுந்து எனது வாழ்க்கை பற்றியும், நான் கடந்த நாட்களில் செய்த பல்வேறு பாவங்களின் தொகுப்பாக அலை வீசும் காற்றாக எனது மனதில் வந்து ஏதோ ஒரு குற்றவுணர்வு ஏற்பட்டு கண்ணீர் சிந்தி அழுத என்னை ஏதோ ஒன்று முற்றிலும் புதிய மனிதனாக மாற்றியது போலவே இருந்ததைக் கண்டு நான் இந்தத் திரைப்படம் ஏதோ ஒன்றை இவ்வளவு  அருகில் இயேசுவின் அன்பைக் காட்சியாக ஒப்புவித்து எனது அந்தரங்க வாழ்க்கையில் திரை மறைவைத் திறக்கும் என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் எதுவெல்லாம் பாவம் இல்லை என்று செய்து வந்தேனோ அவைகளை எல்லாம் என்னிடம் காட்சிகளாக காட்டி இதுதான் நீ.. அது உன்னைக் கொலை செய்யும், உன் ஆத்மாவை சாக வைக்கும். எனக்குள் இருந்து ஒரு மனிதன் என்னை விட்டு வெளியே வந்து நான் செய்த அத்தனை தவறுகளையும் பாவங்களையும் எனக்குக் காட்டியது போலவே இருந்தது. அந்த திரைப்படம் ஓடி முடிந்தது, திரைப்படத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதல் வரும் போது எனது வாழக்கையே தலைகீழாக மாறிப் போனது.

பக்கத்தில் எந்தவொரு உருவமோ அசைவோ இல்லை. ஆனால் இயேசுவின் ரத்தம் சிந்துதல் எனது பாவ வாழ்க்கையைக் கழுவி என்னை சுத்திகரித்தது. புதிய மனிதனாக மாற்றியது என்ற தெளிவு மட்டுமே அந்த சினிமா எனக்குள் ஏற்படுத்திய மகா பெரிய அக மாற்றம். வெளியே எல்லாம் அப்படியேதான் உள்ளது. ஆனால் உள்ளே ஒரு ஆழந்த அமைதி, மகிழ்ச்சி, ஏதுமற்ற ஒரு ஏகாந்த நிலை, ஒரு சமாதானம் என்னை நிரப்பியது. எல்லாம் மிகத் தெளிவாகப் புரிந்தது. ஒரு புதிய நிலை, அதை என்னால் எப்படி எழுதுதென்று தெரியவில்லை. அத்தனை அமைதி, அவ்வளவுதான் அது.

ஓவியம் – கோ.கைலாசநாதன்

 

எப்படி இது சாத்தியம். என்னால் நம்பவே முடியாது போனது, எனது தனிமை, மனபாரம், வேதனை, எல்லாம் நீங்கி யாரோ ஒருவர் என்னைத் தாங்கிப் பிடித்த மாதிரியாகவே இருந்தது. சிந்தனைகள், நினைவுகள் எல்லாம் புத்தம் புதிதாக மாறி விட்டது. தற்கொலை எண்ணமே இப்போது இல்லை, வாழ வேண்டும் என்று தோன்றியது. நான் தேயிலை மலைகளில் அந்த நீல வானத்தின் அடிவாரத்தின் அழகையும், சுகந்த வாசனை வீசும் அந்திக் காற்றையும் இப்போது தான் புதிதாக சுவாசிப்பது போல் எல்லாமே இப்போது எனக்கு அழகாக மாறியது போல இருந்தது. ரம்மியமான மனநிலையில் நடக்க ஆரம்பித்தேன்.  நான் ஒரு சிறு குழந்தையைப் போலவே மறுபடியும் பிறந்த கதையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யார் நம்புவார்கள், இந்த மனதின் புதிய ஓவியங்களை. என்ன ஆனது என்றே தெரியவில்லை, எனக்கு என் உள்ளத்தில் இருந்த ஒரு பெரிய சுமையை யாரோ என்னிலிருந்து வெளியே எடுத்து விட்டதை போல மிகவும் எளிமையாக இலகுவான மனோ நிலையில் எனது மனது இப்போது இருந்தது.

எப்படி இப்படி ஆனேன்? நம்பவே முடியாதபடி எனது வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது. இலவசமாகவே எனக்கு யாரோ எதையோ தந்ததைப் போலவே நான் எனக்குள் உணர்ந்தேன். எல்லாம் அந்த நேரத்தில் அப்படியே புதிதாக மாறிவிட்டது போலவே இருந்தது. எனக்கு இந்த மாற்றம் செய்த காரியம் எது என்று தேடினேன்? இறுதியில் எனக்குப் புரிந்தது. இந்த இயேசுவின் சினிமா என்பது, நான் ஞானமடைவதற்கு இயேசு பாவித்த ஒரு அழகான கருவி மட்டுமே என்பதை உணர்ந்தேன்.

இப்படி எல்லாம் வாழ்க்கையில் நடந்தவை அத்தனையும் எனக்கே நடந்தது. என்பது மட்டுமே உண்மை. இந்த ஆத்ம ரட்சிப்பை பற்றி இனி எழுதவும் எனக்கு வார்த்தைகள் இல்லை. ஏனெனில் அது எனக்குள் சந்தோசமாக சமாதானமாக படர்ந்து பரவியபடியே உள்ளது.

இது எனது சொந்த முயற்சியில் நடந்தது அல்ல, நானாகத் தேடிச் சென்று கண்ட உண்மையும் அல்ல. இது ஒரு மதிய நேரத்தில் சடுதியாக எனக்குள் ஏற்பட்ட மெய்யான ஒளியைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே. இங்கே இதைப் பற்றி இவ்வளவுதான் எழுதத் தோன்றுகின்றது. ஆனால் எனது பாவத்தின் கதையையும் இப்போது நிச்சயமாக எழுத வேண்டும். எனக்குள் இருந்த ஒரு தனிமையை எது செய்தாலும் ஏதோ ஒன்றை இழந்து போன ஒரு அந்நிய மனதின் துயரத்தை நான் பல்வேறு ஆத்மீக வழியில் முயற்சிகள் செய்தும் எனக்கு இறுதிப் பலனாக விரக்தியே மிச்சமாக இருந்ததையும் இங்கே பதிவு செய்து விடத் தோன்றுகின்றது. அப்படி இல்லை என்றால் இந்த இரண்டு சினிமாக்களின் தனிப்பட்ட உறவைக் குறித்து நான் கூறாமல் போவதாக உள்ளது.

ஒரு சிறிய முன் கதை சுருக்கம்:

பாவங்களினால் ஏற்படும் குற்றவுணர்வு என்னைக் கடுமையான முறையில் தாக்கி அழித்துக்கொண்டு இருந்தது. இந்தக் குற்றவுணர்வு என்பது மகா பாரமானது. நான் ஒன்றுக்கும் தகுதி இல்லாதவன். இனி வாழ்க்கை வேண்டாம் என்று பள்ளத்தை நோக்கிப் போகும் அளவுக்கு மனது வேதனையில் வலித்தது. ஏதோவொரு வலி. காரணம் எதுவென்று தெரியாமல் இப்படி ஒரு ஆழமான பாதிப்பில் இருந்த போதுதான் அந்த சத்தியம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.

எனது பாவங்களை மன்னிக்க இயேசுவின் ரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டு பாவ நிவாரணம் செலுத்தப்பட்டு விட்டது. அதை நம்பினால் போதும். பாவம் மன்னிக்கப்பட்டு நிச்சயம் வரும் என்று சொன்னார்கள்.

என்னால் இந்தக் கதையை நம்பவே முடியவில்லை. அது எப்படி சாத்தியம். எனது பாவங்களைப் போக்க இயேசுவின் ரத்தம் மூலமாக சாத்தியம் என்று சந்தேகம் வந்தது. பாவத்திற்கும் ரத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பத்தில் இருந்தேன்.

பாவத்தில் வரும் ஏதோ ஒரு இழந்த நிலையைக் குற்ற மனசாட்சியை மறைக்க நான் நிறைய படங்களைப் பார்த்தேன். ஊர் ஊராக காரணம் இல்லாமல் பயணமானேன். கோயில், மசூதி, தேவாலயம் என்று இல்லாமல் குறி சொல்லும் நபர்களை தேடினேன். காண்டம் ஓமம். விபூதி பிடித்துப் போடுவது. எள்ளு எரிப்பது, ஜாதகம் சோதிடம் பெயரை மாற்றி வைப்பது. கிளி ஜோசியம் எண் சாஸ்திரம் என்று எனது மனதுக்கு ஆறுதலைத் தேடி அலைந்தேன். ம், ஒன்றும் சரியாகவே இல்லை.

கொஞ்சம் நல்லா இருக்கும். ஆனால் மறுபடியும் பழைய குருடி கதவை திறடி கதை போல் திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்பேன்.

கதையை எழுதுவது சினிமா இலக்கியம் மற்றும் பயணங்கள் என்று நினைவுகளை மறக்க நினைத்தாலும் ஒரு பாரம் இடைவிடாது கறுப்பு அறையைப் போல் என்னைத் தாக்கியது. எனது பல முயற்சிகளும் தோல்வி அடைந்து இருளான ஒரு நிலையில் தவித்தேன்.

எனது மனநிலை என்னை வெறுக்கும்படி செய்து. எனது உறவுகள் ஊர் சொந்த பந்தங்கள் விட்டுத் தூரமாக்கியது. தொழில், வருமானம் இவற்றில் கவனம் வைக்கவே முடியாத இறுதி தருணம் நான் தற்கொலை செய்து வாழ்க்கையை முடிக்கலாம் என்று முயற்சி செய்தேன்.

அந்த தருணத்தில்தான் இந்த சத்தியம் எனது புத்தியை வந்து சேர்ந்தது.

இயேசுவின் ரத்தம் எந்தவொரு பாவத்தையும் மன்னித்துக் கழுவி சுத்திகரிக்கும் என்று சொல்லப்பட்டது. நானோ பாவத்தில் இருந்தும் குற்றவுணர்வில் இருந்தும் பல வழிகளில் முயற்சி செய்தவனாக நிற்கிற நிலையில் இது வேடிக்கை போலவும் ஒரு கிறிஸ்தவ மூடநம்பிக்கை போல் எனக்குத் தோன்றியது. இதற்கு இடையில் உளவியல் ரீதியான மருத்துவ உதவிகளை வேறு ஏற்றுக்கொண்டு அதில் தீர்வு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் எல்லாமே பூஜ்யமாக இருந்தது.

அது எப்படி இயேசுவின் ரத்தம் பாவத்தை மன்னிக்கும் என்று தேடினேன். அப்படி என்றால் நான் இதற்கு என்ன செய்ய வேண்டும். மெழுகு திரி கொளுத்தி ஜெபம் சொல்ல வேண்டுமா என்று நினைத்து ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் அதைச் செய்தேன். எல்லாம் அப்படியேதான் இருந்தது, ஒன்றுமே மாறவில்லை. எனது பாவச் சுமை மாறவே இல்லை.

நான் இயேசுவின் ரத்தம் பாவங்களை மன்னிக்கும் ரட்சிக்கும் என்று சொன்னவர்களுடன் இது உண்மை இல்லை என்று சொன்னேன். ஆனால் அவர்களோ என்னிடம் ஒரு ஆச்சரியமான வழியைச் சொன்னார்கள்.

பாவத்தை மன்னிக்க இயேசுவின் முன்பு உங்கள் பாவங்களைச் சொல்லி தனிமையில் ஓரிடத்தில் அமர்ந்து பேசுங்கள். நான் ஒரு பாவி எனக்கு இப்படி இருக்கிறது. இந்த நிலை மாற உதவுங்கள். என்று சொன்னார்கள். நான் நினைத்தேன், இது என்ன மிகவும் இலகுவான முறையாகவும் வழியாகவும் உள்ளது என்று. ஓரு இறுதி நம்பிக்கையில் எனது அறையில் நான் எனது முன்பு இயேசு இருப்பது போல் நினைத்து அழுது புலம்பி எனது நிலையைச் சொல்லி இதிலிருந்து என்னை ரட்சியுங்கள் என்று சொன்னேன். என்ன ஆச்சரியம், அது நிகழ்ந்தது. ஆமாம், நம்பவே முடியவில்லை யாரோ எனது பாவத்தின் பார சுமையை என்னிலிருந்து அப்படியே வெளியே தூக்கி வீசியது போல் இருந்தது.

ஆமாம், ஒரு பிறந்த குழந்தையைப் போல் எனது மனது மாறிபோனது. என்னால் என்னை நம்பவே முடியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒன்றுமே இல்லாமல் இலவசமாக இந்த நிலை எனக்கு எப்படி வந்தது.

இந்த நம்பிக்கை, ஒரு விசுவாசம் எப்படி எனக்குள் வந்தது.

ஒரு மனிதன் ரட்சிப்பு என்ற மெய்யான ஒளியை அடைய வேதம் வைத்துள்ள எளிமையான வழி இதுதான்…

இது மட்டும்தான் மார்க்கம்… இது இவ்வளவு எளிமையாக இருப்பதனால் நமக்கு நம்பவே முடியவில்லை. ஆனால் நம்பும்போது வெளியடையாளமாக ஒரு பேரானந்தம் சமாதானம் நிம்மதி வரும் போதுதான் இது எத்தனை உண்மை என்று உணர்ந்தேன்…

எல்லாவற்றையும் விட இது இயேசுவின் இலவசமான ரட்சிப்பு திட்டம் என்பதுதான் ஆச்சரியம்.

 

“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், ரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. ”

ரோமர் 10:11

இப்படி எனக்கு நடந்தது போல் யாருக்காவது நடந்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டு சினிமாக்களின் மூலமாக ஒரு ஆத்ம ரட்சிப்பை என்னால் எப்படி அடைய முடிந்தது என்று மட்டுமே ரகசியமாகவே உள்ளது. அந்த ரகசியம் கூட பல்வேறு ரகசிய சாவியின் மூலமாக நமக்குள் திறக்க கூடும். ஆனால் எனது ஆத்மாவை ஒரு சினிமா மூலமாகக் கூட இயேசுவால் மட்டுமே திறக்க முடியும் என்று முழுவதுமாக விசவாசிக்கிறேன். இயேசுவின் அன்பு எதையும் சாத்தியமாக்கும்.

00 00

 

The Passion of The Christ  படம் பற்றிய  ஒர் சிறு குறிப்பு.

சில காலங்களுக்கு முன் The Passion of Chirst என்று ஒரு திரைப்படம் வெளியே வந்தது. உலகம் முழுவதையும் அசைத்தது. கிறிஸ்து இயேசுவின் கடைசி 12 மணிநேரத்தில் அவர் பட்டபாடுகளை அப்படம் சித்தரித்தது. இந்தப் படத்தை எடுத்தவரின் பெயர் மெல்கிப்சன். ஏன் அப்படத்தை எடுத்தார் தெரியுமா?  ஆஸ்திரேலியா(Australia) நாட்டில் அவர் ஒரு வாலிபனாக வேலைக்குப் போனார். ஒரு நாள் வேலை செய்துவிட்டுத் திரும்பும்போது சில கொடியவர்கள் அவரை வழிமறித்தார்கள். உன்னிடமிருக்கும் பணத்தைக் கொடு என்றார்கள். அவர் தரமறுத்தார். அதற்காக அவரை ஒரு பிணம் போலச் சாகும்வரை அடித்து உதைத்து அவரிடமிருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

பிணம் ஒன்று இங்கே கிடக்கிறது என்று அக்கம்பக்கத்துள்ள மக்கள் போலீசாருக்குச் சொன்னார்கள். அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தார்கள். அந்தப் பிணத்தை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் அந்த நேரத்தில் ஒரு போலீஸ்காரர் சொன்னார்: கொஞ்சம் மூச்சு வருதே! என்று. உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுப் போய் டாக்டரிடம் மிகவும் கேட்டுக்கொண்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு உயிரைக் காப்பாற்றினார்கள். ஆனால் பலபல வாரங்கள், பலபல சத்திர சிகிச்சைகள். காரணம் உடல் முழுதும் பேன்டேஜ். அந்த நர்ஸ் சொன்னார்:’Where is His Face ?’ ‘அவருடைய முகம் எங்கே? ‘. முகம் முழுவதும் நூல் போல் ஆகிவிட்டது. பல வாரங்கள் பல மாதங்கள், ஏராளமான சர்ஜரி அறுவை சிகிச்சைகள் செய்து உயிரைக் காப்பாற்றினார்கள்.

அவருடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மிருகம் போல இருந்தது. கதறி அழுதார். ஒரு இடத்திலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு சர்க்கஸ் கம்பனியில் அவரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார்கள். அவர் போவார்,அவர் வருவார்,அங்கு அவருக்குப் பெயர் ‘The Man without The Face’ ‘முகமற்ற மனிதர்’  என்று அவருக்குப் பெயர்ச் சூட்டி அறிமுகம் செய்வார்கள். இது மனிதனா மிருகமா? என்று பார்க்கிறவர்கள் ஆச்சரியம்படும்படிக்கு அவருடைய முகம் இருந்தது. Man without the Face.

நாட்கள் கடந்தன.ஒரு நாள் ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்குள் நுழைந்தார். யாருமில்லை,ஒரு பெஞ்சில் முழங்கால் படியிட்டார்,ஓ….வென்று கதறி அழுதார். “Iam a man without the Face, Lord help me” என்று கதறி அழுதார். அழுது முடித்தார். அருகில் யாரோ தன்னை அணைத்திருப்பதைக் கண்டார். அது அந்த ஆலயத்தின் குரு. அவரை அணைத்துக்கொண்டிருந்தார். தன் அறைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவருடைய கதையைப் பொறுமையாகக் கேட்டார். பின்பு ஃபாதர் சொன்னார். ‘நீ, எனக்கு இரண்டு வாக்கு பண்ண வேண்டும். ஒன்று:ஆலயத்திற்கு ஒழுங்காக வரவேண்டும். இரண்டாவது, தேவனுடைய கிருபையின் மீது பூரணமாக நீ நம்பிக்கை வைக்க வேண்டும் ‘ என்றார். செய்கிறேன் என்று தலையை ஆட்டினார். அந்தக் குருவுக்குத் தெரிந்த பெரிய அறுவைச் சிகிச்சை நிபுணர் அவரைச் சரியாக்க முன்வந்தார். பல மாதங்கள் அவருடைய முகத்திற்குப் பல அறுவை சிகிச்சைகள் செய்தார்கள். இறுதியில் அவர் தமது முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபோது பரவசம் அடைந்தார். பழைய முகம் பால்வடியும் முகம்,பற்கள் எல்லாம் அழகிய பற்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் போனார். திரைப்பட உலகில் நுழைந்தார். எல்லாருடைய எதிர்ப்பையும் மீறி எல்லாரும் கொடுத்த அறிவுரையையும் மீறி ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘The Man Without Face’ ‘முகமற்ற மனிதர்’. அந்தப் படம் பல மாதங்கள்

 

ஓடியது. கோடிக்கணக்கான ரூபாய்யைக் கொண்டுவந்தது. அதை வைத்துத்தான் அவர் சொன்னார்:’எனக்கு இந்த முகத்தைக் கொடுத்த என் அருமை ரட்சகரின் முகம்:அய்யோ வேதனையினால் அழுக்குப் படிந்து அகோரமாகக் காணப்படுகிறது. அதை உலகம் அறியவேண்டும்.அவர் அதைக் கடந்துபோனதால் என் முகம் பால் வடியும் முகமாக மாறிவிட்டது.

முகமற்றிருந்த எனக்கு,ஒரு புதுமுகம் வந்தது. எனவே நான் அதை ,அவர் பட்டபாடுகளைப் படம் எடுக்கட்டும்’ என்று சொன்னார். எல்லோரும் சொன்னார்கள், ஒரு நாள்கூட இது ஓடாது அப்பா என்று. ஆனால் முதல் நாளில் மட்டும் 430 மில்லியன் டாலர் லாபம் அவருக்கு வந்தது.

Tha Man without Face                                                    ஆதாரம்   -D.G.S.தினகரன்.

ஆகவே ,

இந்த இரண்டு படங்களையும் உங்கள் வாழ்நாளில்  ஒரேயொரு முறை தேடிப் பார்த்து விடுங்கள்.. ஒரு வேளை, என்னை ரட்சித்தது போல உங்களையும் இரட்சிக்கலாம். படம் மூலமாக அல்ல, இயேசுவின் உன்னதமான அன்பின் மூலமாக.

”தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

யோவான் 3:16

****

 

Mariemahendran134@gmail.com