Obituary: M Karunanidhi, a multi-faceted master of arts and statecraftகலைஞரின் நினைவாக மெரினா கடற்கரையில் 9 மீட்டர் அளவில்  (4.5 மீட்டர் இருபுற வழிகளும்) 4.5 மீட்டர் அளவில் பேனா  நினைவு சின்னம் அமைக்கப் போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்குள்ளாக அந்த நினைவு சின்னத்தைக் கைவிட வேண்டும் என்று சூழலியல் ஆதரவாளர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள் அறிக்கைகளை விடுகிறார்கள். உண்மை நிலை என்ன என்பதை காண்போம்.

ஒட்டுமொத்த மெரினா கடற்கரை என்பது 12 கிலோமீட்டர் நிலம் கொண்டது.மெரினா கடற்கரையே கடந்த 150 ஆண்டுகளில் செயற்கையாக உருவான ஒன்றுதான்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை ஒன்றும் இப்போதுபோல், துறைமுகங்கள் சூழ்ந்த நகரமாக இருக்கவில்லை. அவ்வளவு ஏன், துறைமுகம் அமைப்பதற்கான நிலவியல் அமைப்பே சென்னையில் இல்லை. ஆனாலும், அப்போது ஆங்கிலேய வணிகத்திற்கு சென்னையே முதன்மையான தளமாக இருந்தது. அதனால், அவர்கள் கொண்டுவரும் சரக்குகளை, மற்ற பகுதிகளின் சந்தைகளுக்கு எல்லாம் பிரித்து அனுப்புவதற்கு ஒரு தளம் தேவைப்பட்டது. அதற்காகவே, 1640-இல் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். என்னதான், கடற்கரையிலேயே அதைக் கட்டியிருந்தாலும், கப்பலில் கொண்டுவந்த சரக்குகளைக் கோட்டைக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கியமான சிக்கல் இருந்தது.

முன்னமே சொன்னதுபோல், சென்னை கடலோரத்தில் துறைமுகம் அமைப்பதற்கான வசதியே கிடையாது. துறைமுகம் அமைக்கவேண்டுமெனில், அதற்குக் கடலோரத்தில் ஆழமற்ற கரையாக இல்லாமல், கரை வரைக்கும் கப்பல் வரும் அளவுக்கு நன்கு ஆழமாக இருக்கவேண்டும். ஆனால், சென்னையின் கடலோரம் ஆழமற்றது. அதனால், கப்பல்களைச் சில மைல் தூரத்திலேயே நிறுத்திவிட்டு, கட்டுமரங்களில்தான் சரக்குகளைக் கொண்டுவர வேண்டியிருந்தது. இங்குள்ள கடலோரத்தில் நீரோட்ட வேகமும் அதிகம். ஆகையால் படகுகளும்கூடச் சிரமப்பட வேண்டியிருந்ததால், இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்படுகிற சரக்குகளில் ஒரு பகுதியை, இந்தக் கடைசி இரண்டு மைல்களில் இழக்கவேண்டும்.

சரக்குகள் இப்படியே வீணாகிக் கொண்டிருப்பதைச் சரிசெய்வதற்காக, கப்பல் கரை வரை வருவதற்கான ஒரு திட்டத்தை, 1769-ஆம் ஆண்டு, ஜார்ஜ் கோட்டையில் நடந்த ஒரு வணிகக் கூட்டத்தில் வாரன் ஹாஸ்டிங் பரிந்துரைத்தார். அதாவது, சென்னையின் ஆழமற்ற கடலோரத்தை செயற்கையாக கடலுக்கு அடியிலுள்ள மணலை அப்புறப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பரப்பளவை ஆழப்படுத்திய பிறகு, அதைச் சுற்றி அலை தடுப்புச் சுவர் அமைக்கவேண்டும். அப்படிச் செய்தால், அலைகள் கரை வரை வந்து மோதுவதைத் தடுத்து, கப்பலையும் கரைக்கு அருகிலேயே கொண்டுவந்து நிறுத்த முடியும். அவர் இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்தபோது, அதை யாரும் பெரிதாக முன்னெடுக்கவில்லை. ஆனால், 1861-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் மீண்டும் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 1876-ஆம் ஆண்டில் மெட்ராஸ் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு கிலோமீட்டர் பரப்பளவுக்கு கரைக்கடலை ஆழப்படுத்தி, கடலுக்கு அடியில் நீரோட்ட வேகத்தைத் தடை செய்து, 480 அடி அகலத்தில் அலை தடுப்புச் சுவர் எழுப்பினார்கள். இந்தக் கட்டமைப்பின் மூலம் 17 பெரிய கப்பல்கள் வந்து நிற்பதற்குத் தகுந்த இட வசதியும் கிடைத்தது. எதிர்காலத்தில், கப்பல்கள் வந்து நிற்கும் எண்ணிக்கை அதிகமாகவே அதற்கு ஏற்ப பல்வேறு வகையான வசதிகளும் அதிகமாகின. இந்த அலை தடுப்புச் சுவர் மூலம், சென்னை கடலோரத்தில் 170 ஏக்கர் பரப்பளவில் அலைகளே எழும்பால் இருக்கும் வகையில் செய்தார்கள். அப்போதைய கணக்குப்படி, இதற்கு ஆன செலவு 565,000 ரூபாய்.

வங்கக் கடலில் வடக்கு நோக்கிய நீரோட்டம் இருப்பதால், அலைகள் வலதுபுறமிருந்து சிறிது சாய்வாகவே கரையை வந்து மோதும். தெற்கிலிருந்து வரும் நீரோட்டத்தில் கொண்டுவரப்படும் மணல் மற்றும் இதர படிவுகளில் ஒரு சிறு பகுதியை அது மோதிச் செல்லும் கரைகளிலும் விட்டுச் செல்லும். அப்படி, கடல் நீரோட்டத்தோடு பயணித்து வரும் மணல் படிமங்கள், மெரினா வரைக்கும் இயற்கையான முறையில்தான் வருகிறது. ஆனால், அதற்கு அடுத்ததாக இருக்கும் அலை தடுப்புச் சுவர்களைக் கடந்து செல்ல முடியாமல் போனதால் மெரினாவிலேயே படியத் தொடங்கியது.

இதுதான், கடற்கரை சாலைக்கு அருகிலேயே இருந்த கடற்கரையை மெரினா என்ற மிகப்பெரிய கடற்கரையாக மாற்றியது. அதோடு, இங்கு கட்டப்பட்ட அலை தடுப்புச் சுவர்கள், கரைக்கு வரவிடாமல் தடுக்கப்பட்ட அலைகளின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தியதோடு படிமங்களைத் தொடர்ந்து கொண்டுசெல்ல விடாமல் மெரினாவிலேயே குவித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், படிவுகளே இல்லாமல், வெறும் அலை நீரோட்டம் மட்டும்தான் மெட்ராஸ் துறைமுகத்தைக் கடந்து பயணிக்கிறது. அதற்கு அடுத்ததாக இருக்கும் ராயபுரம், காசிமேடு, எண்ணூர் கடற்கரைகளுக்குச் செல்லும்போது, வெறும் நீரோட்டம் மட்டுமே செல்வதால், அங்கிருந்து படிமங்களைச் சுமந்தவாறு மேற்கொண்டு பயணிக்கின்றது. அங்கு சேர்ப்பதற்கென்று எந்தப் படிமத்தையும் கொண்டு வர முடியாமல் மெரினாவிலேயே விட்டு, இங்கிருந்து எடுத்துக்கொண்டு மட்டும் செல்வதால், வடசென்னை பகுதியிலிருக்கும் கடலோரத்தில் மணல் அரிப்பு அதிகரித்தது.

மெட்ராஸ் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒரு பக்கம் மணல் படிமங்கள் சேர்ந்துகொண்டே போக, இன்னொருபக்கம் குறைந்துகொண்டே போனது.1884-ஆம் ஆண்டு தற்போதைய கடற்கரை சாலையை கிராண்ட் டஃப் (Grand duff) அமைக்கும்போது, கரைக்கு அருகில்தான் கடல் இருந்தது. ஆனால், இப்போது அதன் மொத்த பரப்பளவு சுமார் 6 கிலோமீட்டர்.

தோராயமாக ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சம் கன மீட்டர் மணல் மெரினாவில் படிகிறது. மெரினா கடற்கரை வளர்ந்துகொண்டேயிருக்கிறது.செயற்கையாக அமைக்கப்பட்ட துறைமுகத்தின் விளைவாக “மெரினா விரிவடைந்துகொண்டே இருக்கிறது.”

நிலைமை இவ்வாறாக இருக்க, 12 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கடற்கரையில் 9 மீட்டர் நினைவு சின்னம் வைப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் என்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் நேப்பியர் பாலம் முதல் கடற்கரை வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாக இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள்.

இது குறித்த முழு ஆய்வு அறிக்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 382 பக்கம் கொண்ட அறிக்கை வலைத்தளத்தில் கிடைக்கிறது.

உலகில் 300க்கும் மேற்பட்ட ஆமையினங்கள் இருக்கின்றன.

கடைசியாக நடந்த கணக்கெடுப்பின்படி 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் ஆமைகள் உள்ளன.

இவற்றின் முட்டைகளைச் சேகரித்துப் பாதுகாத்து குஞ்சு பொறிக்க வைத்து, குஞ்சுகளைப் பத்திரமாக கடலுக்குள் அனுப்பி வைக்க என்று ஏராளமான அரசு, தன்னார்வத் திட்டங்கள் செயற்படுகின்றன.

சென்ற ஆண்டு மட்டும் தமி்ழ்நாடு வனத்துறை 50,000க்கு மேற்பட்ட முட்டைகளைச் சேகரித்து 10,000க்கு மேற்பட்ட ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளது. இவை யாவும் பெசன்ட் நகர், நீலாங்கரை ஒட்டிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட முட்டைகள். கலைஞர் நினைவுச் சின்னம் அமையும் மெரினாவில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகள்.

சென்னையில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் இவை குஞ்சு பொறிக்கின்றன. அண்மையில் ஒரு முறை ஒரிசா கடற்கரையில் மட்டும் 5 லட்சம் ஆமைகள் குஞ்சு பொறிக்க வந்துள்ளன. மற்ற குஞ்சு பொறிக்கும் இடங்களைக் காட்டிலும் சென்னைக்கான வரவு குறைவானதே.

தமிழ்நாடு அரசு இந்த ஆமைகளைப் பாதுகாக்க ஜப்பான் உதவியுடன் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டுப் பங்குனி ஆமை மையத்தைச் சென்னையில் அமைக்க முன்வந்துள்ளது.

ஆமைகளையும் அவற்றின் முட்டைகள், குஞ்சுகளை வேட்டையாடும் பிற விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள், கடல் மாசு, மீன் பிடி வலைகள் என்று இவற்றுக்கு அச்சுறுதலாகப் பல்வேறு முதன்மையான காரணிகள் உள்ளன. அவற்றை ஒப்பிடும் போது கடல் கட்டுமானங்களால் எழும் ஆபத்து குறைவே.

ஆக, ஒருபுறம் அரசு தனக்குத் தேவையான கட்டுமானங்களைச் செயற்படுத்தும் வேளையில், மறுபுறம் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

(Ref: https://www.indiatoday.in/cities/chennai/story/chennai-over-12-000-olive-ridley-turtles-hatch-released-into-sea-1931272-2022-03-30?fbclid=IwAR36mUmCSnxeHYrWqrxoFVf5zHAc7LskJHBB4fnFU7YFcqgFy2syz_kG5o4)

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்தான் இந்த ஆமைகளை மொத்தமாக அழித்து விடும் என்பது போலவும் பீதியைக் கிளப்புவது ஏன்?

மீனவர் நலன் பாதிக்கப்படும் என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வலையொளி பேட்டிகளில் பேசும் மீனவர்களோ பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்

* கலைஞர் நினைவுச் சின்னம் கட்டுமானப் பணியின்போது மீன்பிடி பாதிக்கப்பட்டால் அதற்குரிய நிவாரணம் அளிப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது.

* நினைவுச் சின்னம் கட்டி முடித்த பிறகு அப்பகுதியில் மீன்பிடிக்குத் தடை இருக்காது என்று அரசு உறுதி அளித்துள்ளது.

* நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதிகளில் உள்ள நான்கு பஞ்சாயத்துத் தலைவர்களையும் அழைத்து அரசு பேசியுள்ளது.

* தடுப்பாக இல்லாமல் பாலம் போன்ற கட்டுமானம் தான் அமைவதால் கடல் நீரோட்டம் பாதிக்காது.

* பாலத்தின் தூண்களில் பாசி படிவது, பாலத்தின் நிழல் வீழ்வது மீன்களின் மேய்ச்சலை ஊக்குவிக்கும்.

* இந்தப் பகுதியில் பவளப் பாறை எதுவும் இல்லை.

* நினைவுச் சின்னம் வந்த பிறகு கூவத்தையும் தூய்மைப்படுத்தினால் மீன்வளம் பெருகும். சுற்றுலா கூடும்.

முழு நினைவுச் சின்ன வரைபடம்

அயோத்திக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள மீனவர்களும் இந்த சிலைக்கு ஆதரவு தான் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு நாடும் கடலுக்குள் என்னென்னவோ கட்டி வைத்துப் பொருளாதாரத்தை, சுற்றுலாவை வளர்க்கிறது. 1000 கிலோமீட்டர் நீளம் கடற்ரை வளம் கொண்ட தமிழ்நாட்டில், ஒரு சிலைக்குக் கூட சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி நிறுத்தினால் எங்கே போவது.

சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளில் கடலில் மண்ணைக் கொட்டித்தான் குடியிருப்புகளை கட்டுகிறார்கள். அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒரு நினைவுச் சின்னத்தை விட வீட்டில் மனிதர்கள் அதிகம் வருவார்கள், குப்பை போடுவார்கள், ஆனாலும் அரசுகள் தங்கள் பொருளாதாரம் காரணமாக அதை செய்து கொண்டுதான் இருக்கின்றன . ஏன், நான் வசிக்கும் ட்ரோம்சோ நகரில் கூட இப்போது கடலில் மணலைக் கொட்டித் தான் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போதைய மகாராஷ்டிராவில் அண்ணல் அம்பேத்கருக்கும் கடலில்தான் நினைவு மண்டபம் இருக்கிறது. தற்போது சிவாஜி மன்னருக்கும் கடலில்தான் நினைவுச் சின்னம் அமைக்க இருக்கிறார்கள். அங்கே எதிர்ப்பை பதிவு செய்யக் கூட முடியாத ஆட்கள்தான் இங்கே எதிர்த்து அறிக்கை விடுவது.

Chess ஒலிம்பியாட் போட்டிக்காக, நேப்பியர் பாலத்தில் சும்மா paint அடித்து நாலு சீரியல் விளக்கை மாட்டி விட்டதற்கே, சென்னை மொத்தமும் அங்கே குவிந்தது.

அதைப் போலவேதான் கலைஞரின் பேனா சிலை என்பது வரும் நூற்றாண்டுகளைத் தாண்டி பலருக்கும் திராவிட இயக்கம் என்ன செய்தது என்பதை நினைவில் வைத்து இருக்கும்.

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைந்தால் அது இந்திய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறும்.

சென்னைக்கு மிக அருகில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகத்துக்கு எத்தனைப் பேர் போயிருக்கிறீர்கள் என்று எண்ணிப் பார்த்தால்,

கலைஞர் நினைவகத்தை இடம் மாற்றச் சொல்லும் காரணம் புரியும்.

கலைஞர் இறந்த போதுகூட அவரை யாரும் புதைக்காதே என்று சொல்லவில்லை.

மெரினாவில் புதைக்காதே என்றதுதான் அரசியல்.

கலைஞருக்குக் கடலில் நினைவுச் சின்னம் வைக்காமல் வேறு எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்பதிலும்,

அதே அரசியல்தான் உள்ளது.

நல்லவேளை, மகேந்திர பல்லவன் இன்று இல்லை, இருந்திருந்தால் நீ யார்யா கடல் ஓரத்தில் சிலைகளை நிறுவ என்று அதற்கும் கொடி  தூக்கி இருப்பார்கள்?