பிரியாவிடை

பூங்காவிலிருந்து கிளம்ப யத்தனம் ஆகிறார்கள் இருமுதியவர்கள்.
நாளை நான் என் மகன் இருக்கும் ஊருக்குச் செல்கிறேன்
இனி திரும்புவேனோ மாட்டேனோ என்றார் மிகவும் மெலிவாக
இருந்தவர்
டக் என்று அந்த சந்திப்பு
கடைசி சந்திப்பாகி விட்டது
டக் என்று இலைகளில் மெளனம் வீறிடத்தொடங்கியது
விருட் என்று ஓடிய ஓணானின் தலை திரும்பியபடியே உறைந்தது
சிமிண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த 2000 வயதுக்காதலர்கள் ஒரு நொடியில் 20 வயது காதலர்கள் ஆனார்கள்
இலையின் நுனியிலிருந்து
சொட்டத்
தொடங்குகிறது
கடைசி விநாடிகளின்
மது

காற்று

ஒரே நேரத்தில்
உதிரும் இலையையும்
உதிர்க்கும் மரத்தையும்
கடந்து செல்கிறது காற்று
துடைப்பதற்கு ஆளில்லாமல் வழியும் சிறுவனின் கண்ணீர் வழியே, அவனது
கையில் அசையும்
புல்லாங்குழல் வழியே

அல்லிக்குளம்

மேகங்களே,
விடுமுறை ததும்பும் பள்ளிக்கூடத்தின் மேல்,
பழையஜன்னல் வழியே
பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்குமேல்,
தாகத்தோடு
வாட்டர் டேங்கில் அமர்ந்திருக்கும் காகத்தின் மேல்
இடிந்துகிடக்கும் பள்ளித்தோழன் முத்துச்சாமி வீட்டின்மேல்
என் தந்தை எரிந்த சுடுகாட்டின்மேல்
எப்போதும் பகல்கனவு
கண்டுகொண்டிருக்கும் அல்லிக்குளத்தின் மேல்
ஏன் ஒரு
வினோத மௌனத்தில்
இருக்கிறீர்கள்
இன்று என்
பிறந்தநாள் என்பதாலா

கைகள்

எனக்கு நான்கு கைகள்
மூன்றாவது கை தந்தையுடையது
நான்காவது தாயினுடையது
மூன்றாம் கையால் நீ ரயிலில் போகும்போதும்
வரும்போதும்
கையசைப்பேன்
நான்காவது கையால் உன் விரல்களைப் பற்றியபடி நடந்து செல்வேன்
முன்னிரண்டு கைகளும்
கையாலாகதவை
எப்போதும் நீர்க்குமிழிகளில் வானவில்லையும்
கற்கோட்டைகளையும் வரையப் பார்ப்பவை

பரவாயில்லை

ஹேட்டலுக்குள் ஆர்வமாய் நுழைகிறாள்
பிடித்த உணவு இரண்டும்
விலை உயர்ந்த குளிர்பானம் ஒன்றையும் ஆர்டர் செய்தாள்
பெரிய ஆஸ்பத்திரியில்
சிறப்புச் சிகிச்சை மருத்துவர் சொல்லி விட்டார்:
இருதயத்தில் கோளாறு ஏதும் இல்லை.
அவளுக்கோ
ஒரு வாரமாய் அதே கவலை
நடைப்பயிற்சி மட்டும் போதும் என்றும் சொல்லிவிட்டார்
மேஜையில் டம்ளரை வைத்த பையன் , தண்ணீரை
அவள் மேல் தெறித்து விட்டான்
நிறையவே சிந்தியும் விட்டான்
குளிரும்
புன்னகையோடு
அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்னாள்:
பரவாயில்லை ,பரவாயில்லை.
மேஜையெங்கும் பரவியது
பரவாயில்லையின் சங்கீதம்
மேஜைகளெங்கும்

காலைநேரத்துச்சாலைகள்

விடியற்காலையில்
வேறு மாநிலத்துக்காரன்
பேருந்திலிருந்து இறங்கி
தேநீர் கடை நோக்கிச் செல்கிறான்
தன்பையை
மடியில் வைத்தபடி ஒரு பாலில்லாத தேநீர் வாங்கி அருந்துகிறான்
கண்ணாடி டம்ளரில் இருக்கும் தேநீர் காலியாகும்வரை,
அவன்
தேநீர் கடையை நோக்கி
நடந்து கொண்டிருக்கலாம்

இரட்டைவால் குருவி

1
Greater racket-tailed drongo by Febin Raj for Fireart Studio on Dribbbleஜன்னல் வழியே ஒரு
இரட்டைவால் குருவி தெரியும் மருத்துவமனை நாற்காலியில்
சரிந்திருந்தேன்
அறையெங்கும்
ஏகப்பட்ட
வினோதமான கருவிகள்
ஒல்லியான இளைஞன் ஒருவன்
ஏதேதோ கருவிகளை
என் உடலெங்கும் பொருத்தினான் எடுத்தான்
பொருத்தினான் எடுத்துவிட்டான் பிறகு
எனக்கான மருத்துவ அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தான்:
“ரொம்ப கஷ்டமா இருக்கு”
என்று சொன்னேன்
அவனிடமா
கடவுளிடமா
என்னிடமா
இல்லை
மேஜையிலிருந்த
தர்மாமீட்டரிடம் அதன்
அருகிலிருந்த
தண்ணீர் பாட்டிலிடம்

2
மருத்துவமனை நாற்காலியில்
சரிந்திருந்தேன்
அறையெங்கும்
ஏகப்பட்ட
வினோதமான கருவிகள்
ஒல்லியான இளைஞன்
ஒருவன்
ஏதேதோ கருவிகளை
என்உடலெங்கும் பொருத்தினான் எடுத்தான்
பொருத்தினான்
எடுத்துவிட்டான் பிறகு
எனக்கான மருத்துவ
அறிக்கையை
எழுதிக்கொண்டிருந்தான்
“ரொம்ப கஷ்டமாயிருக்கு”
என்று சொன்னேன்
கணினித் திரையைப்
பார்த்தபடி
என் தோளைத்
தொட்டான்
இரண்டு விநாடி
நித்யத்துவம்
கிடைத்ததெனக்கு

கண்ணீர்

கண்ணீர்
உடலிலிருந்து வருவதில்லை
உடல் எங்கிருந்து வருகிறதோ-
அங்கிருந்தோ,
அதன் அருகிலோ
அதற்கு முன்னாலோ
ஊற்றுக் கொண்டிருக்கிறது
அதன் அடியில் எப்போதும்
மூழ்கியிருக்கின்றன
தந்தையின்
சுவடுகள்
நிராகரிக்கப்பட்ட
தந்தைகளின்
சுவடுகள்

முதியவன்

வெகுமுதியவன் உன் அருகில் இருந்தாலும்,
அருகில் இல்லை.
அவன் எங்கிருந்தோ உன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறான் அவனது
நடுங்கும் விரல்கள் உன்னைத் தீண்டுகையில்
நினைவின் கற்களுக்கிடையே ஒரு சிற்றோடை என ஓடத்தொடங்குகிறாய்
அவன் கட்டில் அருகில்
நிற்க வரும்
உன்மேல் மினுங்கத்தொடங்குகிறது
எப்போதும் இருளில் இருக்கும் நிலவு