பனியால் ஒரு ப்ரபோஸல்
மலைமுகடுகளுக்குச்
செல்ல வேண்டியதில்லை
மொட்டை மாடியில் வந்தமர்ந்திருக்கிறது
பனிமூட்டம்
ஆகாய விமானங்களிலிருந்து
காண வேண்டியதில்லை
பாலத்தின் மேல்
பாதை தெரியாமல்
கண்களை மறைக்கிறது பனிக்கோளம்
இன்று ‘ ப்ரபோஸல்’ தினம் என்பது
நினைவுக்கு வந்தது
எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை
பனியைப் புகைப்படம் எடுத்து அனுப்பிவிட்டு
பதிலுக்குக் காத்திருக்கிறேன்
மெதுவாக முன்னேறும் அன்பு
ஒரு சிறிய அன்பு
அது படிப்படியாக முன்னேறுகிறது
காதலை நோக்கி
ஒரு நத்தை சுவரில் ஏறுவதுபோல
மிக மெதுவாக
மிக மிக மெதுவாக
ஆனால் மிகவும் உறுதியாக
உரையாடலில்
ஒவ்வொரு சொல்லாக மாறுகிறது.
பேசும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கூடுகிறது
மௌனங்கள் அழகாக இருக்கின்றன.
நினைத்துக்கொள்வது
கிணற்றில் நீர் உயர்வதுபோல படிப்படியாக அதிகரிக்கிறது
சூசகமான வாக்கியங்களின்
அர்த்தங்கள் பிடிபடுகின்றன
அழைப்பின் ஒருமைக்கும் பன்மைக்கும் நடுவே
ஒரு பெண்டுலம் மாறி மாறி ஆடிக்கொண்டிருக்கிறது
பேசாப் பொழுதுகள் ஒரு மலர்போல வாடிவிடுகின்றன
செல்போன் அழைப்பை எடுக்க முடியாத இடங்களில்
மின் திரையில் ஒளிரும் பெயர்
கூண்டுக்கிளியினைப்போல
மனதைப் படபடக்கச் செய்கிறது
ஒரு அன்பு
ஒரு காதலாக
அடிமேல் அடிவைத்து
மெல்ல முன்னேறிக்கொண்டே இருக்கிறது
அது தன் இலக்கை அடைய
இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை
ஒரு ஜென்மமாக இருக்கலாம்
ஒரு மின்னல் பொழுதின் தூரமாகவும் இருக்கலாம்
சட்டெனத் தோளில் வந்தமரும்
வண்ணத்துப் பூச்சிகள்
மிகவும் ஏமாற்றமடையச் செய்கின்றன நகரும்
இந்தக் காதலை
மணிக கணக்கில்
நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருப்பது
நன்றாக இருக்கிறது
உன்னைத் தேடும் அன்பு
எப்போதும்தான்
என் மனம் உன்னைத் தேடும்
அப்போதெல்லாம்
உன் நினைப்பை மடைமாற்ற
ஒரு தேநீர் குடிப்பேன் எங்காவது சுற்றித் திரிவேன்
 ஒரு புத்தகத்தைப் பிரித்துப்
படிக்கத் துவங்குவேன்
யூ ட்யூப்பில் யாராவது பொய் சொல்வதைக்
கேட்டுக்கொண்டிருப்பேன்
உன்னை விட அழகான ஒருத்தியை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்
பகல் பொழுதில்
சிறு பொழுது தூங்கிப்போகையில்
உறக்கத்திலேயே
உன்மீதான ஏக்கம்
சட்டென சுடராகிக் கனல்கிறது
என் ஞாபத்தின் திரைச்சீலையை
அச்சுடர் பற்றி மேலேறுகிறது
தூக்கக் கலக்கத்தில்
உன்னை அழைத்து
என்ன பேசினேன்
என இப்போது நினைவில்லை
தூக்கத்தில் உன்னை நினைத்துக்கொண்டேன்
எனச் சொன்னது மட்டும் நினைவிருக்கிறது
இந்த உலகில்
நேசிப்பவர்கள் மட்டுமே
பிரிந்திருக்கிறார்கள்
முதல் சந்திப்பிற்கான ஆயத்தம்
முதல் சந்திப்பிற்கான ஆயத்தங்களில்
இன்னும் எத்தனை நாள்தான்
கழிவது?
சீராக சிகை திருத்தியாயிற்று
நல்லுடை ஒன்றைத் தேர்ந்தாயிற்று
இந்த நறுமணத் தைலம்
ஒரு கணநேர காமத்தை
தூண்டாமற் போகாது
தேடித் தேடி வாங்கிய பரிசை
யார் கண்ணிலும் படாமல்
ஒளித்து வைத்தாயிற்று
முதல் சந்திப்பின் கவித்துவ வசனங்களை
ஒத்திகை செய்தாயிற்று
ஒரு அணைப்போ முத்தமோ
அற்புதம்போல நிகழும் எனில்
அதை எப்படி அழகாக எதிர்கொள்ளவேண்டும் என
மனத்திரையில் கண்டாயிற்று
எத்தனை கோணத்தில்
கண்ணாடியில் கண்டாலும்
ஏதோ ஒரு கோணத்தில்
அழகாக இருப்பதுபோலத்தான் இருக்கிறது
உடலில் எந்த துர்வாசனையும் இல்லை என்பதை
துல்லியமாக உறுதிப்படுத்தியாயிற்று
காணாத காட்சி ஒன்றைக்
காணத்தான் எவ்வளவு ஏற்பாடுகள்
எல்லாம் எவ்வளவு சீராக இருந்தாலும்
ஏதோ ஒன்று
பிடிக்காமல் போகச்செய்துவிடும்
என்ற பதட்டம்தான்
மனம் வாடச் செய்கிறது
அன்னியனின் ஆடை
யாரோ ஒரு ஆளாகத்தான்
உன் முன்னால் வந்தேன்
அன்பின் பெயரால்
சில மயக்கங்கள்
சில குழப்பங்கள் நிகழ்ந்தன
இப்போது நான்
மறுபடியும்
யாரோ ஒரு ஆளாக மாறவேண்டிய
நிர்பந்தம்
நான் உன்னிடம் வந்த
நாளில் அணிந்திருந்த
அன்னியனின் ஆடையை
எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை
நானும் நீயும் பார்த்த நிலா
‘நான் பார்த்த நிலவை
நீ பார்த்தாயா ?’ என்று கேட்பது
எத்தனை பழையதிலும் பழைய கேள்வி
ஆனால் அது கேட்கப்படுகிறது
இன்று மாலைகூட கேட்கப்படுகிறது
இனியும் ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகள்கூட கேட்கப்படும்
எங்கெல்லாம் பிரிவு இருக்கிறதோ
அங்கெல்லாம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது
பார்த்துக்கொள்ள முடியாத
தொலைவுகளில் இருப்பவர்கள்
நிலவைப் பார்க்கிறார்கள்
நான் உன்னை நினைக்கிறேன்’ என
நிலவிடம் சொல்லி அனுப்புகிறார்கள்
நிலா அவற்றை ஏந்தி
தவழ்ந்து தவழ்ந்து
ஏக்கம் கொண்ட கண்களை வந்தடைகிறது
நமக்கிடையே பொதுவில் எதுவும் இல்லை
ஒரு வாழ்க்கை இல்லை
ஒரு இடம் இல்லை
ஆனால் ஒரு நிலா இருக்கிறது
அந்த நிலாவைப் பார்த்தால்
நிலாவைக் கண்ட அன்பிற்குரியவரைக்
கண்டதுபோலாகிவிடுகிறது
நிலா என்பது
ஒரு நம்பிக்கை
ஒரு உணர்வு
ஒரு சிறிய கருணை
ஒரு சிறிய பற்றுக்கோடு
நீ கண்ட நிலவை
நானும் கண்டேன் என்பதைக் காட்டிலும்
உன்னைக் கண்ட நிலா
என்னையும் கண்டது
தனிமையின் மேகக்கூட்டங்களில்
எங்கோ சென்று மறைகிறது
அங்கேயே அமர்ந்திருப்பவர்
எல்லா இடங்களிலும்
“போ…போ…”
என துரத்துபவர்கள் இருக்கிறார்கள்
எல்லா இடங்களிலும்
“போ…போ…”
என துரத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள்
ஏதோ ஒரு இடத்தில்தான்
யாரோ ஒருவர்
‘போகமாட்டேன்’ என
அங்கேயே பிடிவாதமாய்
உட்கார்ந்திருக்கிறார்
கூடுதலாக நேசிப்பவர்களும் குறைவாக நேசிப்பவர்களும்
“நான் உன்னை
அவ்வளவு நேசிக்கிறேன்”
“நானும் உன்னை
கொஞ்சம் நேசிக்கிறேன்”
அதிகம் நேசிப்பதற்கும்
குறைவாக நேசிப்பதற்கும் இடையே
ஏதேனும் இருக்கிறதா?
இருக்கிறது
முடிவற்ற ஒரு பிரார்த்தனை இருக்கிறது
தீராத ஒரு மனக்குறை இருக்கிறது
எந்நேரமும் கைவிடப்படுதலுக்கான
ஒரு பதட்டம் இருக்கிறது
அவலமான பிரார்த்தனை
ஒரு காதலின்
அவலமான கடைசிப் பிரார்த்தனை
ஒன்றுண்டு:
“அவன்தான்
உன்னைவிட்டுப் போய்விட்டானே
இப்போதாவது
என்னிடம் திரும்பி வந்துவிடேன்
குற்றத்தின் நகரம்
இந்த நகரம் குற்றங்களால்
நிரம்பியிருக்கிறது
நட்சத்திரங்கள்
இருளில் ஒளிந்திருப்பவர்களின்
கண்கள்போல இருக்கின்றன
நிலவில் விழும் நிழல்கள்
மர்ம மனிதர்களின் நிழல்களேதான்
பெரிய மனிதர்கள்
பெரிய குற்றங்களை செய்கிறார்கள்
மத்தியதர மனிதர்கள்
மிதமான குற்றங்களை
எளிய மனிதர்களுக்கு என்று
எளிய குற்றங்கள் இருக்கின்றன
சில சமயம்
இந்த எல்லைகள் மீறப்படுகின்றன
அப்போது மீளமுடியாமல்
சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது அவமானமடைகிறார்கள்
எந்தக் குற்றத்திற்கும் வாய்ப்பற்ற
ஏராளமான மனிதர்கள்
இந்த நகரத்தில் வசிக்கிறார்கள்
அவர்கள் எப்போதும்
ஒரு குற்றத்தின் சாகசத்தை
வியப்புடன் கனவு காண்கிறார்கள்
பிறகு தங்கள் நேர்மையான வாழ்வு குறித்து
சமாதானம் அடைந்தபடி தூங்கி விடுகிறார்கள்
நகரமெங்கும் குற்றம்
நடனமாடியபடி விழித்திருக்கிறது
போதை மிகுந்த கண்களுடன்
பணத்தின் வாசனையுடன்
உடலின் வாசனையுடன்