‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பெருந்தொடரை ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ எனத் திருவள்ளுவர் கல்விக்கு உரியதாக்கினார்.  ‘எந்த நாடாக இருந்தாலும் நம் நாடுதான்; எந்த ஊராக இருந்தாலும் நம் ஊர்தான்’ என்கிறார் வள்ளுவர். அப்படி ஆக்கிக் கொண்டால் வாழ்நாள் முழுதும் கற்றுக் கொண்டேயிருக்கலாம். கற்க வேண்டும் என எண்ணுபவர்கள் எந்த நாட்டுக்கும் சென்று கற்கலாம்; எந்த ஊருக்கும் சென்று கற்கலாம் என்பது வள்ளுவர் எண்ணம். கல்விக்கு இடப்பெயர்ச்சி அவசியம். கற்க வேண்டியவை எல்லாம் நாமிருக்கும் இடத்திலேயே கிடைத்துவிடாது. கல்வி இருக்கும் இடம் நோக்கிச் செல்ல வேண்டும். வயிற்றுப்பாட்டுக்காக மனித இனம் இடம்பெயர்வதுண்டு. கல்விக்காக இடம்பெயர்தல் பற்றிய எண்ணமும் பழங்காலத்திலேயே உருவாகிவிட்டது. தொல்காப்பியம் சொல்லும் பிரிவு வகைகளில் ஒன்று ‘ஓதல் பிரிவு.’ கல்வி கற்பதற்காக உற்றார் உறவினரைப் பிரிந்து இடம்பெயர்தலைத் தமிழ் நூல்கள் பதிவு செய்திருக்கின்றன. தம் நாட்டை விட்டும் ஊரை விட்டும் வெளியே செல்ல விரும்பாதவர்களை நோக்கித்தான் திருவள்ளுவர் ‘யாதானும் நாடு; யாதானும் ஊர்’ என்று சொல்கிறார்.

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பலர் தம் ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல விரும்பாதவர்கள். அவர்கள் விரும்பினாலும் குடும்பம் அனுமதிக்காது. உள்ளூரில் என்ன இருக்கிறதோ அதைப் படித்துவிட்டு ஏதேனும் வேலை செய்து சம்பாதித்தால் போதும். இருபது வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். இதுதான் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். கல்விக்குச் செலவு செய்வதை விரயம் என்றும் நினைப்பார்கள். மாணவர்கள் தம் சுயசம்பாத்தியத்தில்தான் படித்துக் கொள்ள வேண்டும். அதிலும் மாதாமாதம் வீட்டுக்கு ஒரு தொகையும் கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்விக்கெனச் சிறிய தொகை செலவழித்தால் போதும். அதற்குக்கூட இயலாத அல்லது இயன்றும் இணங்காத குடும்பங்களே மிகுதி.

அதுவும் பெண் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பவே மாட்டார்கள். உள்ளூரில் தொடக்கக் கல்விதான் இருக்குமென்றால் அத்துடன் நிறுத்தி விடுவார்கள். நடுநிலைக் கல்வி என்றால் அத்தோடு சரி. உள்ளூரில் உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி இருந்தால் அதுவரைக்கும் அனுப்புவதுண்டு. வயதுக்கு வந்துவிட்டால் உடனே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இப்போது  ‘அயலி’ தொடரில் வரும் நிலைமை ஒரு கிராமத்தில் அல்ல, பல ஊர்களிலும் இதுதான் நிலைமையாக இருந்தது. தமிழ்நாடு அரசின் சமூக நலத் திட்டங்கள் இந்நிலையை மாற்ற உதவின. பத்தாம் வகுப்புப் படித்த பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம் என்பது பட்டதாரிப் பெண்களுக்கு என மாற்றப்பட்டதால் கல்லூரி வரைக்கும் பெண்கள் எட்டிப் பார்க்க முடிந்தது. இப்போது உயர்கல்வி பயில மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அரசு அறிவித்திருப்பது பெரும்பயனைக் கொடுத்திருக்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் இவ்வாண்டு பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. உதவித்தொகை, மாதந்தோறும் ஆயிரம், நலத்துறை விடுதிகள் என அரசுத் திட்டங்களால் இந்நிலை படிப்படியாக மாறி அனைவரும் உயர்கல்வி கற்கக் கல்லூரிப் படியை மிதிப்பதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் ஆகலாம்.

பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த என் நிலையும் அப்படித்தானிருந்தது. கல்லூரியை எட்டியது என் பிடிவாதத்தால்தான். ‘படிச்சுக் கலெக்டரா ஆகப் போற?’ என்னும் சொற்களை எத்தனையோ வாய்களில் கேட்டுக்கேட்டே வந்தேன். நம்பிக்கை கொடுத்த வாய் ஒன்றுகூட இல்லை. 1980களின் இறுதியிலும் 1990களிலும் உயர்கல்வி கற்ற நான் ஊராரை எதிர்கொள்ளப் பெரும்பாடு பட்டேன். ‘இன்னுமா படிக்கிற?’ என்று ஏளனம் செய்வார்கள். ‘உன் வயசுப் பசங்கெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொழந்த பெத்துட்டாங்க. உனக்கு இன்னமே யாரு பொண்ணுக் குடுப்பா?’ என்று அக்கறை காட்டுவார்கள். ‘எத்தனாவது படிக்கற?’ என்று கேலி செய்வார்கள். இந்தத் தொந்தரவுகளுக்குப் பயந்தே இரவிலே ஊருக்குப் போவேன். வேளாண் நிலத்திற்குள் தனியாக இருந்த எங்கள் வீட்டிலேயே பெரும்பாலும் இருந்துவிட்டு இரவில் திரும்பிவிடுவேன். எனக்குக் கல்வி மீது அப்படி ஓர் ஈடுபாடு உருவாக இரண்டு காரணங்கள்.

முதலாவது, நான் பயின்ற கல்லூரிகளின் சூழல். இளங்கலை பயின்ற ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் தமிழ்மீது ஈடுபாடு கொண்ட பேராசிரியர்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் ஆர்வத்தீக்கு விசிறியாயினர். முதுகலை படித்த கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரிச் சூழலோ தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. இவையல்லாத இன்னொரு காரணம் பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் நான் வாசித்த உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல். தமிழ்க் கல்வி கற்பதற்கு அவரும் அவர் குடும்பமும் எத்தகைய முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதை வாசித்து வியந்து போனேன். அப்படி ஒரு குடும்பம் நமக்கு இல்லையே என மருகியதுண்டு.

உ.வே.சாமிநாதையருக்கு ஐந்து வயதான போது ‘வித்தியாப்பியாசம்’ செய்தார்கள். அவருடைய பாட்டனார்தான் அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது தந்தையும் சித்தப்பாவும் கற்பித்தனர். குடும்பத்திலிருந்தே மூன்று ஆசிரியர்கள். உத்தமதானபுரத்தில் நாராயண ஐயர் என்பவர் நடத்திய தெற்குத் தெரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சில மாதங்கள் கற்றார். பின்னர் வடக்குத் தெருவில் சாமிநாத ஐயர் என்பவர் நடத்திய பள்ளியில் சில ஆண்டுகள் பயின்றார். இவை சொந்த ஊரிலேயே கற்க அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள். அப்பள்ளிகளில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானவப் பிள்ளைகளும் படித்தார்கள் என்று உ.வே.சா. சொல்கிறார். உடன் பயின்ற அக்கிரகாரத்துப் பிள்ளைகளில் யார்யார் மேலும் படித்தார்கள் என்பதை அவர் சொல்லவில்லை.  சிலரேனும் அக்காலத்தில் பார்ப்பனர்கள் பெரிதும் பயில விரும்பிய ஆங்கிலக் கல்வியைக் கற்றிருக்கலாம். குடியானவப் பிள்ளைகள் நிலை தெரியவில்லை. பெரும்பாலும் உள்ளூர்க் கல்வியோடு உழவு வேலை பார்க்கச் சென்றிருப்பார்கள்.

இளவயதில் அவருக்கு ஐந்து ஆசிரியர்கள். பாட்டனார், தந்தை, சித்தப்பா, நாராயண ஐயர், சாமிநாத ஐயர் ஆகியோர். ஆறாம் வயதில் அவரது சித்தப்பா சங்கீதம் கற்றுக் கொடுத்தார். சித்திரம் வரையவும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதற்கும் குடும்பத்தினர் உதவினர். சூரியமூலை என்னும் ஊரில் வசித்த அவரது தாய்வழிப் பாட்டனாரிடம் சுலோகங்கள் பலவற்றைக் கற்றார். தம் ஆசிரியராகிய சாமிநாத ஐயர் வீட்டுக்கு வரும் உறவினர் சிவஸ்வாமி ஐயரிடம் ஆங்கில எழுத்துக்களைக் கற்றார். அடுத்து அவர் குடும்பம் பிழைப்புக்காக அரியலூர் சென்றது. அங்கே கிருஷ்ண வாத்தியார் என்பவரிடம் ஓராண்டு படித்தார். அக்காலத்தில் சங்கீத வித்வான்கள் பலரும் தெலுங்கு கற்றிருந்தார்கள். தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடுவதற்கு அது தேவையாக இருந்தது. சங்கீதத் துறையில் தம் மகனைப் பயிற்சி பெற வைக்க வேண்டும் என நினைத்த உ.வே.சா.வின் தந்தையார் தெலுங்கு கற்பதற்காக அரியலூரில் முத்து வேலாயுத பண்டாரம் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளிக்கு அனுப்பினார். தெலுங்கு கற்பது உ.வே.சா.வுக்கு இயலவில்லை. ஆகவே பள்ளியிலிருந்து மகனை நிறுத்திவிட்டுத் தாமே சங்கீதத்தையும் தமிழ் இலக்கிய நூல்களையும் கற்பிக்கத் தொடங்கினார். இதற்கிடையே சமஸ்கிருதமும் கற்றுத் தர முயற்சி நடந்திருக்கிறது. அதைப் பற்றி உ.வே.சா. விரிவாக எழுதவில்லை. தனக்குச் சமஸ்கிருதமும் ஒத்துவரவில்லை என்று மட்டும் தெரிவிக்கிறார்.

இந்தக் கல்வியில் எல்லாம் திருப்திப்படாத அவர் தந்தை  அரியலூரில் இருந்த தில்லைக் கோவிந்தப் பிள்ளை என்பவர் மூலமாகக் கணக்கு கற்பிக்க முயன்றார். கிராமத்துக் கணக்கெழுதிப் பிழைத்துக்கொள்ளாமல் என்பதால் அந்த முயற்சி. அதுவும் உ.வே.சா.வுக்குச் சரிவரவில்லை. சங்கீதத்திலும் தமிழிலும் ஆர்வம் இருப்பதைக் கண்ட தந்தை, அரியலூர் சடகோபையங்கார் என்பவரிடம் கற்க அனுப்பினார். அவரிடம் இரண்டையும் உ.வே.சா. கற்றார். இவையெல்லாம் அவரது ஏழாம் வயதுக்குள் நடந்தவை.

அடுத்துக் குடும்பத்துடன் குன்னம் என்னும் ஊருக்குச் சென்று சிதம்பரம் பிள்ளை என்பவரிடம் கல்வி கற்றார். கணக்கு வேலையும் அவரிடம் பழகினார். குன்னத்தில் ஆசிரியராக இருந்த வேறொருவரிடமும் சில தமிழ்ச் செய்யுட்களைப் பாடம் கேட்டார். அப்போது குன்னத்திற்கு வந்த கஸ்தூரி ஐயங்கார் என்பவர் தம் ஊராகிய கார்குடிக்கு வந்தால் தமிழையும் சங்கீதத்தையும் கற்பிப்பதாகச் சொன்னார். உடனே குடும்பமே கார்குடிக்குக் கிளம்பியது. இவ்விடத்தில் உ.வே.சா. சொல்கிறார், ‘என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்திற்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்’ (என் சரித்திரம், ப.112). கார்குடியில் கஸ்தூரி ஐயங்கார், சாமி ஐயங்கார் ஆகிய இருவரிடம் பாடம் கேட்டார்.

இவையெல்லாம் அவரது பதின்மூன்றாம் வயதுக்குள் நடந்தவை. அவ்வயதில் அவருக்குத் திருமணம் ஆயிற்று. தீபாவளிக்காக மாமனார் வீடு சென்றவர் அங்கே பாபநாசம் என்னும் ஊரில் இருந்த இராகவையர் என்பவரிடம் சில நாட்கள் பாடம் கேட்டார். பின்னர் தம் ஊரிலேயே இருந்த உ.வே.சா.விடம் ‘செங்கணம் என்னும் ஊருக்குச் சென்றால் அங்கே விருத்தாசல ரெட்டியாரிடம் பாடம் கேட்கலாம்’ என்று சிலர் கூறினர். உடனே உ.வே.சா.வின் குடும்பமே செங்கணம் செல்லத் தயாராயிற்று. சென்று விருத்தாசல ரெட்டியாரிடம் கற்கலானார். விருத்தாசல ரெட்டியாரின் நண்பர் பெருமாளையர் என்பவரிடமும் சிலவற்றைக் கற்றார்.

இதற்கு மேல் கற்க வேண்டும் என்றால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தான் செல்ல வேண்டும் என்று எல்லோரும் கூறினர். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து செங்கணத்திலிருந்து குடும்பமே கிளம்பியது. உத்தமதானபுரம் வந்து சில நாட்கள் தங்கியபோது அவர் பெற்றோருக்குக் குழப்பம் ஏற்பட்டது. மகாவித்துவான் மாயூரத்தில் இருந்தார். அங்கே அனுப்பினால் குடும்பமாகப் போயிருக்க இயலாது. தனியாக மகனை எப்படி அனுப்புவது என்று யோசித்தனர். அவர் தந்தை ‘இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலட்சேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போயிருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள ஜனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே!’ (என் சரித்திரம், ப.165) என்று கவலைப்பட்டார்.

குடும்பம் மாயூரத்திற்குச் செல்ல இயலவில்லை என்றாலும் தங்குவதற்கும் உண்பதற்கும் உரிய ஏற்பாடுகளை அவர் தந்தை செய்தார். கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் மகாவித்துவானுடன் இருந்து கற்றார். அதன் பின்னர் திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடம் சில ஆண்டுகள் கற்றார். அக்காலத்தில் எல்லாம் அவர் குடும்பம் வந்து போய்க்கொண்டும் உடன் தங்கியும் இருந்தது தனிக்கதை. உ.வே.சாமிநாதையரின் கல்விக்காக அவர் குடும்பம் இடம்பெயர்ந்து செய்த பயணத்தை வரைபடமாகவே உருவாக்கலாம். கல்வி நிறுவனங்கள் பெரிதும் உருவாகாத பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்க் கல்விக்காகக் குடும்பமே இடம் மாறி மாறிப் பயணம் செய்ததை எப்படிப் புரிந்து கொள்வது?

இப்படி ஒரு குடும்பத்தை என் பின்னணியில் வைத்துப் பார்க்கவே முடியாது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்வி கற்க வந்த முதல் தலைமுறை நான். அப்போதே பல்வேறு எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்துதான் பள்ளிக் கல்வியை முடித்தேன். ’என் சரித்திரம்’ படித்துப் பெற்ற உந்துதலால் பிடிவாதம் கொண்டு உயர்கல்விக்குச் சென்றேன். வேறு வழியில்லாமல் என் குடும்பம் ஒத்துக்கொண்டது. நான் பயின்ற கல்லூரிகளை என் குடும்பத்தில் எவரேனும் வந்து ஒருமுறைகூடப் பார்த்ததில்லை. என்ன கற்கிறேன் என்பதைப் பற்றி குடும்பத்தினருக்கு ஒன்றும் தெரியாது. இப்படித்தான் கற்று வந்தேன். உ.வே.சாமிநாதையர் பத்து வயதுக்குள் படித்து முடித்துவிட்ட பல நூல்களை என் இருபது வயதுக்கு மேல்தான் ஒவ்வொன்றாகக் கண்ணால் பார்த்து அறிந்தேன். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இதுதான் என் நிலைமை. என்றால்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி என்றால் என்னவென்றே தெரியாத குடும்பமாக என் முன்னோர்கள் இருந்திருக்கக் கூடும். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வருவோர்தான் என் மாணவர்களில் பெரும்பாலோர். இதுதான் சாதிய சமூகத்தின் படிநிலையோ? இதைப் போல எனக்குள் எத்தனையோ கேள்விகள்.

பார்ப்பனக் குடும்பம் என்பதால்தான் உ.வே.சா.வுக்கு கல்வி வாய்ப்பு சாத்தியமாயிற்றா? ஓதலும் ஓதுவித்தலும் பார்ப்பனர்களுக்கு உரியது என்று நம் இலக்கணங்கள் கூறுகின்றன. கல்விக்காக இடம்பெயர்வது பார்ப்பனர்களுக்கு இயல்பானதா? எந்த நிலையிலும் கற்க வேண்டும், கல்விதான் எதிர்காலம் என்பதை உ.வே.சாமிநாதையரும் அவர் குடும்பமும் தெளிவாக உணர்ந்திருந்தனர். ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ என்பதை நடைமுறையில் கடைபிடித்தோர் அவர்கள். பார்ப்பன சாதியில் எல்லோருமே கல்விக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்களா? அதனால்தான் நவீனக் கல்வி வந்தபோது கிராமங்களை விட்டு முதலில் வெளியேறிய சாதியாகப் பார்ப்பனர்கள் இருந்தனரா?

வேறு சாதியினரிடம் கல்வி பற்றி எத்தகைய பார்வை இருந்தது? கிராமத்தில் கிடைத்த திண்ணைப் பள்ளிக் கல்வியை எத்தனை பேர் கற்றார்கள்? அதுவே போதுமென்று இருந்துவிட்டார்களா? நவீனக் கல்வி வாய்ப்புகள் பெருமளவு வந்துவிட்ட போதும் அதற்காக இடம்பெயர்ந்து செல்வதைப் பிற சாதியினர் ஏன் விரும்புவதில்லை? சாதிப் பிரிவினைகள் துலக்கமாக இயங்கும் இடமாகக் கிராமம் இருந்தபோதும் அதை விட்டு வெளியேற விடாமல் தடுப்பவை எவை? பிற சாதியினர் இன்று கல்விக்காக இடம்பெயர்தல் எந்த அளவு நடக்கிறது? கல்வி பற்றிப் பெருமளவு விழிப்புணர்வு வந்துள்ளதா?  திருவள்ளுவர் சொன்ன ‘யாதும் நாடே; யாதும் ஊரே’ என்னும் கல்விப் பார்வையை எப்போது நம் சமூகம் முழுமையாக உள்வாங்கிப் போற்றும்?

—–