குறத்தி டான்ஸ் காட்சி

காளிதாஸ் பட ஆய்வு தொடர்பாக முன்பு உயிர்மையில் எழுதப்பட்ட 2 கட்டுரைகளின் தொடர்ச்சியே இந்தக் கட்டுரை. எனவே, விரிவாக எழுதப்படவில்லை.

மேலேயுள்ள படங்களில் காணும் ஆண்கள் இருவரும் ஒருவரே என்பது என்  நம்பிக்கை. உருவ ஒற்றுமையும் மற்ற சில குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஆர்டி என்று சுதேசமித்திரனில் குறிப்பிடப்பட்ட எஸ்.எம்.ஹாடி என்கிற முகம்மது ஹாடி இவர்தான். ஹாடியுடன் நடனமாடிய ஜான்சிபாய் டி.பி.ராஜலக்‌ஷ்மிதான் என்பது மேற்காணும் குறவன் குறத்தி ஆடல் காட்சியிலிருந்து வெளியாகிற உண்மை.

டி.பி.ராஜலக்‌ஷ்மிதான் ஜான்சிபாய் என்று அறந்தை நாராயணனும் எழுதியிருந்தார் (சுதந்தரப் போரில் தமிழ் சினிமா). முடிவு என்னவோ ஒன்றுதான். எனினும், அறந்தை நாராயணன் எழுதியிருப்பதிலிருந்து சற்று வேறுபாடு உள்ளது. படத்தைக் கண்டு எழுதிய கல்கியின் கூற்றுப்படி, ராட்டினமாம் காந்தி கை பாணம் பாடல் இடம் பெற்றது முதல் துண்டுப் படத்தில். அதாவது தேசபக்தி பாடல்கள், அன்பிற்கினிய பாடல்கள், தெலுங்கு கீர்த்தனங்கள் ஆகியவை அடங்கிய 3 ரீல்கள் கொண்ட படம். ராஜலக்‌ஷ்மி மட்டுமே இடம்பெற்றிருந்தார். அறந்தை நாராயணன், பாட்டுப் புத்தகத்தை வைத்து குறத்தி நடனப் பாடல் என்று முடிவு கொண்டிருந்தார். மேலும், முதல் துண்டுப் படத்தில் டி.பி.ராஜலக்‌ஷ்மி பல்வேறு தோற்றங்களில் தோன்றி ஆடிப்பாடினார் என்று கல்கி எழுதியிருக்கிறார். அதில் குறத்தி தோற்றமும் இடம்பெற்றதா என்ற ஐயம் தவிர்க்கவியலாதது.  கல்கி கூற்றுப்படி, 2ஆவது துண்டுப்படம் காளிதாஸ். ராஜலக்‌ஷ்மி உட்பட அனைவருமே தெலுங்கில் பேசிய கதைப்படம்.

குறத்தி டான்ஸ் என்பது 3ஆவது துண்டுப் படம். அதில்தான் ஹாடியும், ஜான்சிபாய் எனப்பட்ட ராஜலக்‌ஷ்மியும் ஆடினார்கள். குறவன் தொந்தியோடு குண்டாக இருந்தார் என்கிறார் கல்கி. அந்தத் துண்டுப்படம்தான் சாகர் மூவிடோன் என்ற வேறொரு நிறுவனத்தில் படம் பிடிக்கப்பட்டது. அப்போது ஜான்சிபாய் என்கிற பெயரை சினிமாவிற்காக சூட்டியிருக்க வேண்டும். எனினும், ராஜலக்‌ஷ்மி என்கிற பெயர் நாடகமேடை, மௌனப்படம் போன்றவைகளில் அப்போதே பிரபலமாகவே இருந்தது. இம்பீரியல் மூவிடோன் தயாரித்த காளிதாஸ் கதைப்படத்திற்கும் முன்பாகவே எடுக்கப்பட்டது. 4 ரீல்கள் நீளத்தில் எடுக்கப்பட்ட குறத்திப் பாட்டும் டான்சும் என்ற படம்தான் 2 ரீல்களாக சுருக்கப்பட்டு, காளிதாஸ் கதைப் படத்துடன் இணைத்துக் காட்டப்பட்டது.

காளிதாஸ் படம் பற்றிய 2ஆவது கட்டுரை எழுதியபோதுதான் குறவன் குறத்தி ஆடல் காட்சி கிடைத்தது. அதற்கும் முன்னரே ஹாடியின் புகைப்படம் கிடைத்திருந்தது. ஹாடியின் உருவ ஒற்றுமை 2ஆவது கட்டுரை எழுதப்பட்டபோதே உறுத்தினாலும், தயக்கம் இருந்தது.

தமிழில் பேசும்படம் தயாரிக்கும் முதல் முயற்சி பம்பாயிலிருந்த சாகர் மூவிடோன் எனும் கம்பெனியால் 1931-இல் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக ஜான்சிபாய் என்ற பெண் நடித்த குறத்தி பாட்டும் டான்சும் என்ற நான்கு ரீல் கொண்ட குறும்படம் தமிழில் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டதுஎன்று தியடோர் பாஸ்கரன் எம் தமிழர் செய்த படம் எனும் நூலில் எழுதியுள்ளார். அவருடைய குறிப்புகள் உறுதியான சான்றுகளின் வலு கொண்டவை. எனவே ஜான்சிபாய் என்று வேறொருவர் இருக்கலாமோ என்ற ஐயம் நீடித்தது. ஜான்சிபாய் என்பவரைப் பற்றிய குறிப்புகள், ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்காத  நிலையில் மெசேஜ் பேரர்ஸ் என்ற நூலில், தியடோர் பாஸ்கரன் அளித்துள்ள குறிப்பே தயக்கத்தை நீக்கி வழிவிட்டது. அதில், சாகர் மூவிடோன் தயாரித்துள்ள குறத்தி பாட்டும் டான்சும் என்ற துண்டுப்படத்தில் டி.பி.ராஜலக்‌ஷ்மி நடித்தார் என்பதே அந்தக் குறிப்பு ஆகும். காளிதாஸ் எனும் கதம்பப் படத்தில் குறத்தி டான்ஸ் ஆடினேன் என்று பிற்காலத்தில், டி.பி.ராஜலக்ஷ்மி சொன்ன குறிப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கொண்டு விரிவாக விளக்க விரும்பவில்லை. மொத்தத்தில், கிடைத்த தரவுகளின் அடிப்படையிலும், கணிப்புகளின் அடிப்படையிலும் ராஜலக்‌ஷ்மிதான் ஜான்சிபாய் என்பது நமது துணிபு. ஏற்பதும், மறுப்பதும் மேற்கொண்டு சான்றாவணங்கள் கிடைத்தால் நடக்கலாம்.

muthuvelsa@gmail.com