மதுரையின் புறநகர் ஒன்றில் என் வீடு. அத்தனை எளிதில் யாரும் வரவியலாதபடிக்கு அதன் சிக்கலான பாதை. பிரதான சாலையிலிருந்து இறங்கி இடம் வலம் இடம் வலம் என்று ஒரு சிப்பாயின் நடை ஒழுங்கைக் கோரும் அநேக திருப்பங்கள். நூறு ரூபாய்க்குப் பேரம் படிந்து ஆட்டோவில் வந்தால் ஒவ்வொரு திருப்பத்திலும் உக்கிரம் கூடும் ஓட்டுநரின் வதனம். இறங்கும்போது இருபதோ முப்பதோ சேர்த்துக் கொடுத்து அந்தத் துடியான தெய்வத்தைக் குளிரச் செய்வதே என் ஆன்மீக அன்றாடம்.

வரும் வழியில் அறியப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அந்தப் பிள்ளையார் மட்டும் இல்லையெனில் இங்கு யாரும் யாருக்கும் வழி சொல்ல முடியாது. பேருவாதி சிரமத்தை அவர் எடுத்துக் கொள்வார். ஒரு வகையில் எங்களுக்கு வழி சொல்லும் விநாயகர் அவர்.

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எளிய கட்டுமானம் கொண்ட ஒரு பிள்ளையார் கோவில் அது . பூசாரி எப்போதாவது வருவார். பக்தர்கள் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்டு ஆண்டுக்கு ஒன்றிரண்டு வைபவங்கள் மட்டுமே. அவையும் ஆர்ப்பாட்டமில்லாமல் நிகழும். அந்த அரச மர நிழலும் பிள்ளையாரின் நண்பகல் நேரத்து அநாதித் தனிமையும் கடந்து போகும் யாருக்கும் அவர்மீது பரிவையும் அன்பையும் கொண்டுவந்து விடும்.

இப்போது நிலைமையே வேறு. பக்தர்கள் பல்கி விட்டனர். முகப்பில் ஓர் அறிவிப்புப் பலகை. வாரத்துக்குப் பத்துப் பதினைந்து பூசைகள் பற்றிய விபரங்கள். அதில் பலவும் கேள்விப்படாதவை. புதிய புதிய சமஸ்கிருதச் சொற்கள். அமைதியின் நிழலில் இருந்த பிள்ளையாருக்கு இந்த இரைச்சல் உவப்பானதா தெரியவில்லை.

தவிர, பிள்ளையார் வசமிருந்த இறையாண்மை போயே போயிற்று. கோவிலுக்குள் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனர். அத்து மீறி அனுமன் வந்தார். “யார் யாரோ வருகிறார்கள்; உடன்பட்ட நாங்கள் வரக்கூடாதா ” என்றபடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்தனர். அவர்களைத் தொத்தியபடி முருகனும் வந்தனர். தட்சிணாமூர்த்தி நைசாக நுழைய கால பைரவனும் வந்து தனது துண்டைப் போட்டார். ஸ்ரீதேவி, பூதேவி என சிறிய இடத்தில் தெய்வ அடர்த்தி கூடிவிட்டது. இதில் உற்சவ மூர்த்திகளுக்கென தனி ஓய்வறை வேறு. தத்தமது காட்சிகளுக்கு அம்பலத்தாடக் காத்திருக்கும் நாடகக் கலைஞர்களின் பாவத்துடன் அந்த உற்சவ மூர்த்திகள்.

இந்த நெரிசலின் அசெளகர்யத்தைப் பிள்ளையார் விரும்புகிறாரா தெரியவில்லை. இன்று ஒரு பல்பொருள் அங்காடியாக அக்கோவில் மாறிவிட்டது. கணபதி அதிலொரு பண்டம். ஓர் அர்ச்சகர் நிரந்தரமாக அங்கே இருக்கிறார்.

எடுத்தும் கொடுத்தும் உதவ துணை அர்ச்சகர் வேறு. சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம், சதுர்த்திகள், ஜெயந்திகள் என நாளெல்லாம் திருக்கோலங்கள். நடந்து போனால் நாலு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறாள் மதுரை மீனாட்சி. இந்தப் புறநகரில் வைத்தே மீனாட்சி திருக்கல்யாணத்தையும் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். ஸ்விகி, ஸொமேட்டோ செயலி வழியாக, இருக்கும் இடத்திற்கே உணவு தருவித்துப் பழகிய மத்திய தர வர்க்க செளகர்ய ஆன்மீகம் இது. ஒரு குதிரை பொம்மையைத் தயார் செய்து சாக்கடையாகப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கொண்டமாரி வாய்க்காலில் அழகரை அடுத்த வருடம் இறக்கி விடுவார்களோ என்று மெய்யாகவே அஞ்சுகிறேன்.

நண்பர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய ஒரு ட்ரஸ்ட் இந்தக் கோவிலை மேலாண்மை செய்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு மற்றும் வங்கி ஊழியர்கள். அடிப்படையில் நல்லவர்கள். தன்மையானவர்கள். இப்பகுதி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் சம்பாதித்தவர்கள். மத்திய தர வர்க்க பலமும் பலவீனமும் கொண்டவர்கள். அரசியலற்றவர்கள்.

இந்தப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இங்கு ஒரு வழிபாட்டு வெளி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெருந்திரளான மக்களுக்குக் கோவிலுக்கு வந்து போவதுஒரு பழக்கமாகியிருக்கிறது. சிலருக்கு அன்றாடமாகி இருக்கிறது. இந்தக் கூடுகையும் இது வழியாகத் திரண்டு வந்திருக்கும் மன அமைப்பும் உள்ளீடற்ற ஆன்மீக வெளியும் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் ஆகப்பெரும் அரசியல் கேள்வி.
இரண்டு பத்தாண்டுகளில் பல இடங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த மத்தியதர நுகர்வு ஆன்மீக வெளியை இந்து மத அடிப்படைவாதிகள் கபளீகரம் செய்து விட்டார்கள். நைச்சியமாக அவர்கள் செய்திருக்கும் வேலைகள் பிரமிக்கத்தக்கவை. நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படையில் பொறுப்பான ஆரவாரமற்ற திடமான அஸ்திவாரப் பணிகள் அவர்களுடையவை. இந்த அஸ்திவாரத்தின் மீது தமக்கு விருப்பமான எந்தக் கட்டுமானத்தையும் இனி எழுப்பலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மக்கள் ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பேரழிவுக்கான பூர்வாங்கப் பணிகளை அவர்கள் முடித்துவிட்டதாக நம்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு தலைமுறைக் காலம் பண்பாட்டு வெளியில் கலாசாரத் தளத்தில் ஆன்மீகப் புலத்தில் தாம் செய்து வந்த உழவடைக்கு அறுவடைக் காலம் வந்து விட்டதாக அவர்கள் மகிழ்கிறார்கள். ஒரு வகையில் அது உண்மையுந்தான். என் அம்மா ஓர் ஆசிரியை. பிரதோஷம் என்ற சொல்லை அவர் அறிந்திருக்கவில்லை. பெரிய கார்த்திகை, தைப்பொங்கல் உள்ளிட்ட ஓரிரு நாட்கள் தவிர அசைவம் உண்ணத் தடையில்லை எங்கள் வீட்டில். இப்போது எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் பிரதோஷத்திற்கு விரதம் இருக்கிறார்கள். திங்கள், செவ்வாய், வியாழன், சனி என ஆளுக்கொரு நாளில் விரதம் கடைப்பிடிக்கிறார்கள். ஏதேதோ காரணங்கள். ஏதேனுமொரு சுபகாரியத்தின் நிமித்தம் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு தேதியைத் தீர்மானிக்க நாக்கு தள்ளுகிறது. புதன்கிழமையை விட்டால் வேறு கிழமையேயில்லை என்றாகி விட்டது. மத்திய தர வர்க்கம் பண்பாட்டுத் தளத்தில் நவ பார்ப்பனீயத்தின் அடையாளம் ஆகியிருக்கிறது.
மத்திய தர வர்க்கம் என்றில்லை. எல்லாத் தரப்பு மக்களிடமும் இந்த நோய்க்கூறு தென்படுகிறது. கிட்டத்தட்ட எல்லா தினசரிகளும் பொக்கு ஆன்மீகத்தைப் பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள். வாரத்திற்கொரு ஆன்மீக மலரையாவது பூக்கச் செய்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களும் ஆளுக்கொரு கைப்பிடி மண்ணையாவது அள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்த நிலத்தின் அசலான அடையாளங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், தொல்குடி மரபுகள், நம்பிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், படையல் என ஆயிரமாயிரம் வகைமைகள் கொண்ட வழிபாட்டுப் பன்மைத்துவத்தைக் கிட்டத்தட்ட முடித்து வைத்திருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே போடுதான்.
முதலாளித்துவம் நுகர்வு வெறியைப் பரிசளிக்கிறது. மனிதர்கள் தனித்தனித் தீவுகளாகி வருகிறார்கள். நிச்சய
மற்ற பொருளாதார வாழ்க்கை. முற்றும் நெருக்கடிகள். நிம்மதியிழப்பு. சக மனிதன்மீதான அவநம்பிக்கை. இந்தச் சூழலில்தான் மனிதனுக்குப் பற்றிக் கொள்ள ஏதோவொன்று தேவையாயிருக்கிறது.

விளைவு ? வருடத்திற்கு வருடம் பழனிக்குப் பாதயாத்திரை போவோர் எண்ணிக்கை எகிறுகிறது. சாமிகளின் அதீதப் படையெடுப்பால் சபரிமலை அதிர்கிறது. மேல்மருவத்தூர் கன்னாபின்னாவெனச் சிவக்கிறது. சாய்பாபா அநேகரின் வியாழக்கிழமையைக் கைப்பற்றி விட்டார். இதுவல்ல பிரச்சனை. ஈரப்பதமான ரொட்டியில் பூஞ்சை வளர்வதைப்போல் இப்படிப் பெரிய அளவில் அணிதிரளும் ஆன்மீக வெளியில் இந்துத்துவவாதிகள் ஊடுருவி நஞ்சூட்டும் நற்காரியத்தை முடுக்கி விடுகின்றனர்.

வழிபாட்டு இடங்களில் திரள்பவர்களைத் தமது வெறுப்பு அரசியலுக்குப் பழக்க அவர்கள் மெனக்கெடுகிறார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சீனாவின் வூகான் மாகாண ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவி பிற நாடுகளுக்குப் பரவிக் கொண்டிருந்த திகிலான நாட்கள் அவை. தமிழகத்தில் முதல் கொரோனா நோயாளி மதுரை அண்ணாநகரில் திரிவதாகப் பீதியூட்டுகிறார்கள். அவர் எனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவிலிருக்கும் மசூதிக்குத் தொழுகைக்காக வந்து போயிருக்கிறார் என்ற செய்தி கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களிலும் வருகிறது. நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்த வாரத்தில் எனது பகுதியில் இஸ்லாமிய வெறுப்பு கொழுந்து விட்டு எரிந்ததைப் பதைப்புடன் பார்த்திருந்தேன். நின்று எரிந்த அந்த வெறுப்பின் கச்சா எண்ணெய் மனித மனதுக்குள் திடீரென வந்ததல்ல என்பதை உணர்ந்தேன். நூற்றுக்கணக்கான வருடங்களாக உருவாகி வந்த ஒரு காடு எரிந்தழிய சிறு பொறியொன்று போதாதா என்ன. வெறுப்பரசியலை முன்னெடுப்பவர்களுக்கான அனுகூலமது.
வழிபாட்டுத் தலங்களில் திரளும் அரசியலற்ற ஜனத்திரளுக்கு வெறுப்பின் நோய்த்தொற்றை உருவாக்க இந்துத்துவா சக்திகளிடம் நேர்த்தியான வேலைத் திட்டம் உள்ளது. கோவில்களைப் பிராமணியமயமாக்குவதில், சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்
களின் அல்லக்கை ஆக்குவதில் அவர்கள் ஏறக்குறைய வெற்றி பெற்று விட்டார்கள். தினுசு தினுசான அமைப்புகளின் பெயர்களில், வேறுவேறு முகமூடிகளில் ஊடுருவியிருக்கிறார்கள். வேறு வேறு குரல்களில் ஒருமித்துப் பேச முடிகிறது அவர்களால். வேலைப்பாடுள்ள சதி வலையை நுட்பத்துடன் பின்னிக்கொண்டிருக்கிறார்கள். பொதுப்புத்தி என்பது தேர்தல் அரசியலுக்கு அணுக்கமானது. தேர்தல் வெற்றி
என்பது அதைச் சொரிந்து கொடுப்பதுதான் . அப்பாவித்தனமான ஆன்மீகத் திரளே மதவெறியர்களின் விளையாட்டுத் திடல். அங்கே அவர்கள் பொதுப்புத்தியின் உடலைத் தமக்குத் தோதான வகையில் பயிற்றுவிக்கிறார்கள் . இது முன்னே நகர விரும்பும் ஜனநாயகத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது. இதன் கோர விளைவுகள் வடக்கில் நிகழ்த்தப்பட்டு விட்டன.

பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் படுகொலைகளை இந்துத்துவா மதவெறி கும்பல் திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் ஒரு பெருந்திரள் மக்கள் அமைதியான பார்வையாளர்களாய் இருந்தார்கள்தானே. அதன் பிறகு வந்த தேர்தல்களில் எத்தனை பெரிய ஆதரவு. மிருக பலத்துடன் மீண்டும் மீண்டும் குற்றமிழைத்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் அல்லவா. வடக்கில் அதிகாரத்தை விரும்பும் தேர்தல் அரசியல் கட்சிகள் எதுவாயினும் இதை அனுசரிக்கும் நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனால்தான் வட மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் கொஞ்சம் நீர் விளாவிய இந்துத்துவாவைப் பாவித்து வருகின்றனர். ஆம் ஆத்மியோ இளஞ்சூட்டில் இந்துத்துவாவைக் கிண்டி அதிகாரத்தைத் தக்க வைக்கப் பார்க்கிறது.

இன்று இந்தியா முழுக்க இதே நெருக்கடிதான். இந்தத் தட்ப வெப்பத்திற்கு வெளியே தனித்ததொரு காலநிலையைத் தமிழ்நாடு பராமரித்தே வந்துள்ளது.தமிழ் மொழியும் தமிழர்களின் நீண்ட பண்பாட்டுப் பாரம்பரியமுமே அதற்கான திணை வளமாக இருந்திருக்கிறது.

இன்று இங்கேயும் இந்த நெருக்கடி நைச்சியமாய் நுழைந்திருக்கிறது. இன்று தேர்தல் பரப்புரையில் பெரியாரை முன்னிறுத்துவது தேர்தல் வாக்கு வங்கிக்கு எத்தனை சாதகமானதாக இருக்கும் என்பது ஆய்வுக்குரியது. இடதுசாரிக் கட்சிகளுக்கு, அதன் வெகுஜன அமைப்புகளுக்குக் கோவில் திருவிழாக்களில் பக்தகோடிகளை வரவேற்றுப் பதாகை வைக்க வேண்டிய நெருக்கடி தமிழகத்தில் எப்படி வந்தது? தமது வேலையை நீண்டகாலத் திட்டமிடலின் அடிப்படையில் செய்யத் தவறிய பாவத்திற்குத்தான் இந்தத் தண்ணீர்ப் பந்தல். கலாச்சார, பண்பாட்டுத் தளத்தில் கோட்டை விட்ட தண்டனைக்குத்தான் இந்த மோர்ப் பந்தல்.

இந்து அறநிலையத்துறை களத்தில் எதிர்கொள்ளும் புதிய நெருக்கடிகள் புதிய தடுமாற்றங்களை உருவாக்குகிறது. அதை நாம் சமரசம் என்று சொல்லலாம். தேர்தல் அரசியலில் அதற்குப் பெயர் நடைமுறைத் தந்திரம். பொதுப்புத்தியை அனுசரிக்கும் தந்திரம். ஆனால் நமது தந்திரத்தை நமது எதிரிகளே வடிவமைத்துத் தருவார்களேயானால் அது தந்திரமல்ல, தரித்திரம்.

உடனடி அரசியல் லாபத்திற்கான நடவடிக்கைகள் மட்டுமே பிரதானமான வேலைத்திட்டமாக முற்போக்கு ஜனநாயக சக்திகளிடம் இருக்கிறது. ஆனால் எதிரிகளோ நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படையில் அர்ப்பணிப்புடன் ஆரவாரமற்று தமது துர்காரியங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்து வருகிறார்கள். இந்தப் பெரும்பள்ளத்தை யார் எப்படி இட்டு நிரப்புவது?

libiaranya@gmail.com