கிழவியின் காதுகள் பேரொளி பொருந்தியவையாக இருந்தன.

இளங்கோவன் உடல் எடை மொத்தத்தையும் பாதங்களில் நிறுத்திகைகளை முழங்கால்கள் மீது போட்டபடி வெறும் மண் தரையில் குந்தியிருந்தான். அவனுக்கு முன்னால் கெட்டிக் காகிதத்தாலான நனைந்த அட்டை பெட்டிக்குள்அமர்ந்து கிழவி அவன் கொடுத்த வறுத்த கோழியைக் கூர்மையான சிறியவெள்ளை வெளேரென்ற பற்களால் இழுத்தும் பலமாகக் கடித்துக் குதறியும் தின்று கொண்டிருந்தாள்.

கிழவியின் கண்களின் முன்னால் கட்டையாய் வெட்டிய நரைமுடி திரைபோல் கலைந்து கிடந்தது. குழந்தை போன்ற சிறிய முகம். உள்ளங்கை அளவுள்ள ஜோதி
மிகுந்த தகடுபோன்ற நெற்றி. பழைய செய்தித்தாள்களின் நிறத்தில் இருந்த தோலில் அள்ளித்தெளித்ததைப் போல பழுப்பு நிறப்புள்ளிகள்.

இளங்கோவனின் காலணிகளுக்கடியில் சிவப்பநிற மண் அப்போதுதான் வெட்டிப்போட்ட மாமிசத்துண்டம் போல் வெதுவெதுப்பாக கிடந்தது. முந்தைய நாள் இரவு பெய்த மழையின் வாசம் சுற்றியிருக்கும் தாவரங்களிலிருந்து லேசாய் எழுந்தது. தின்பதற்கு இடையில் அவனை நிமிர்ந்து பார்க்கும் கிழவியின் கண்கள் மஞ்சள் நிறமாய் இருந்தன.

சில நிமிடங்களுக்கு ஒருமுறை மழை ஈரத்தின் கனத்தால் லேசாய் உள்நோக்கித் தொங்க ஆரம்பித்திருந்த அட்டைப் பெட்டியின் மேல் பகுதியை இடது கையால் ஏற்றி விட்டுக் கொண்டாள்.

– புதுசா வேற ஒரு பெட்டி தேடணும்.

கோழியின் கடைசி துண்டைத் தின்றுவிட்டு நாக்கில் புரண்ட சின்ன எலும்புத் துண்டை உதடு குவித்து மண்மீது துப்பினாள். இளங்கோவனின் வலது காலணிக்கு முன்னால் எலும்புப் பகுதி செந்நிறச் சேற்றில் வெள்ளை முக்கோணமாக, கூர்மையான வெள்ளைப் பல்லாய்ச் சிரித்தது. அவனுக்கென்று கொண்டு வந்திருந்த உணவு. பள்ளிச் சுற்றுலாவுக்குத் தானே கட்டி எடுத்து வந்திருந்த மதிய உணவின் மிச்சம்.

இளங்கோவனின் முதுகுக்குப் பின்னால் வெகு தூரத்தில் ஆறடிக்கு மேல் மெல்லிய வாள்களைப்போல் உயர்ந்து வளர்ந்திருந்த லாலாங் புற்களின் திசையிலிருந்து ஆறாம் வகுப்பு மாணவர்களின் உற்சாகமான குரல்கள் கேட்டன. இடையிடையே புக்கிட் டிமா குன்றின் பழைய கருங்கல் குவாரியைப் பற்றிப் பாடம் நடத்த அவர்
களை அங்கு அழைத்து வந்திருந்த புவியியல் ஆசிரியரின் குரல்.

உயர்நிலைப்பள்ளிக் கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியனாக வேலைபார்த்த இளங்கோவனை அவருக்குத் உதவியாக அனுப்பியிருந்தார்கள்.

குவாரியின் சிறப்பம்சங்களைச் சுட்டிக் காட்டப் புவியியல் ஆசிரியர் கேட்டார் என்பதற்காக இளங்கோவன் லாலாங் புதர்களைத் தாண்டி நல்ல நீளமான குச்சியைத் தேடி வந்த நேரத்தில் அட்டைப் பெட்டிக்குள் கைகளை மார்புக்குக் குறுக்காய் வைத்தபடி குளிர் ஜுரம் வந்ததுபோல் நடுங்கிக் கொண்டிருந்த கிழவியைப் பார்த்தான்.

இளங்கோவனுக்குப் புவியியலைப் பற்றி ஒன்றும் தெரியாது. தலைமையாசிரியரிலிருந்து மற்ற ஆசிரியர்கள் வரை அவனைக் கல்வி அமைச்சால் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்ட அடியாள் என்றே நினைத்தார்கள்.

மிஸ்டர் இளங்கோ இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சவுடன டிடென்ஷன் பிள்ளைங்கள மூணு மணி நேரத்துக்குப் பார்த்துக்கிறிங்களா?

மாணவர்களே! கொஞ்சம் கவனியுங்க, ஏய் – மூணாவது வரிசையில் இருக்கிற அந்தப் பையன்… அங்க வந்தேனாபாரு. கொஞ்சம் கவனியுங்க. இன்னையிலிருந்து மிஸ்டர் இளங்கோ ஸ்கூல் டிசிப்பிளின் மாஸ்டரா இருப்பாரு. முதுகெலும்பில் படாமல் பிருஷ்டச் சதையில் மட்டும் தழும்பு விழும்படி எப்படி பிரம்பால் அடிப்பது என்று அதற்கப்புறம் இளங்கோவனுக்குச் சொல்லித் தந்தார்கள். பள்ளிக்கூடத்தைப் பொறுத்தவரையில் பிரம்படிக்குரிய தண்டனைகள்: சண்டைபோடுவது, ஆசிரியர்களை அசிங்கப்படுத்துவது, சக மாணவர்களிடமிருந்து திருடுவது, பள்ளிக்குப் போர்னோ எனப்படும் நீலப்படங்களைக் கொண்டுவருவது.

இதில் மாணவிகளுக்கு பிரம்படி கிடையாது. மாணவிகளுக்கும் மேற்கூறிய குற்றங்களைவிட குறை வான குற்றங்களைச் செய்த மாணவர்களுக்கும் பள்ளிக்கூடப் பாடங்கள் முடிந்த பிறகு சிலமணி நேரங்கள் ஒரு வகுப்பறைக்குள் அமரச் செய்யும் டிடென்ஷன் வகுப்புதான் அதிகப்பட்ச தண்டனை.

இளங்கோவன் விரைவிலேயே மிக நேர்த்தியான முறையில் பிரம்படிவாங்கும் மாணவனின் பிருஷ்டத்தில் பிசிறில்லாமல் கருஞ்சிவப்பு வரிகள் ஏற்படுமாறு அடிக்கக்கற்றுக் கொண்டான். ஆனால் மிஸ்டர் இளங்கோ அடிப்பது வலிக்கவே இல்லை என்றுதான் அடிபட்ட மாணவர்கள் பிறகு பேசிக்கொண்டார்கள்.

முட்டாள் ஆசிரியர்.

மற்ற மாணவர்கள் வீட்டுக்குப் போன பிறகு டிடென்ஷன் வகுப்பு வாரம் இரு முறை மூன்று மணி நேரத்துக்கு நடக்கும். செய்த குற்றத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட எண்ணிக்கை டிடென்ஷன் வகுப்புகளைத் தண்டனையாகப் பெற்ற மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து வீட்டுப்பாடங்களைச் செய்யவோ, பாடப் புத்தகங்களை வாசிக்கவோ வற்புறுத்தப்படுவார்கள். வகுப்பறையின் முன்பகுதியில் இருக்கும் ஆசிரியருடைய நாற்காலியில் அமர்ந்து இளங்கோவன் மாணவர்களை மூன்று மணி நேரத்துக்குப் பாடப் புத்தகங்களைத் திருத்தியபடி பார்த்துக் கொண்டிருப்பான்.

பசியுள்ள பாம்பு தன் இரைகளைப் பார்ப்பதைப் போல.

சில நேரங்களில் டிடென்ஷன் மாணவர்கள் தலைமையாசிரியரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கூட நடைபாதைகளில் குப்பைகளைப் பொறுக்கவோ, வரப்போகும் முக்கிய பள்ளிக் கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாக பள்ளிக்கூடத்தைச் சுற்றித் தோரணங்களைக் கட்டவோ அனுப்பப்படுவார்கள். மொட்டை வெயிலில் மாணவர்களோடு நின்றபடி அவர்களுக்கு இந்த வேலைகளில் ஈடுபடுவதினால் எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பதும், அதே சமயம் தலைமையாசிரியர் தந்த வேலை சிறப்பாகச் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதும் இளங்கோவனின் பொறுப்பு.

ஒரு சமயம் தேசிய நாளுக்காக்கப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தோரணங்கள் கோணலாக இருந்ததற்காகத் தலைமையாசிரியர் அவனைக் கையால் ஆகாதவன் என்று மற்ற ஆசிரியர்களின் முன்னால் திட்டினார். அன்று டிடென்ஷன் வகுப்பு இல்லை. கொத்தாய் ஐந்து நட்சத்திரங்களும் ஒரு பிறை நிலவும் அச்சிடப்பட்டிருந்த பல வண்ண முக்கோணத் தோரணங்களை இளங்கோவனே அன்று தனியாளாய் நின்று சரி செய்தான்.

அன்று இரவு தன் கைகளில் மாட்டியிருந்த தோரணக் கயிறு தன் கழுத்தைச் சுற்றி அவனை நெருக்குவதாகவும் நேரம் ஆக ஆக இறுகிக் கொண்டிருந்த கயிற்றை விடுவிக்க அவன் தவிப்பதாகவும் கனவு கண்டான். மூச்சிறைக்க இளங்கோவன் படுக்கையில் எழுந்து அமர்ந்த போது தலையணை வியர்வையில் தொப்ப
ரையாய் நனைந்திருந்தது. இருட்டில் அவன் கண்களுக்கு முன்னால் ஜ்வலிக்கும் வெள்ளி நிற நட்சத்திரங்களும் பிறை நிலவுகளும் தோன்றித் தோன்றி மறைந்தன.

கால்சட்டைக்குள் திண்ணென்று வீங்கியிருந்த தொடைகளின் மீது விழுந்திருந்த புல் விதைகளை இளங்கோவன் கையால் தட்டிவிட்டுக் கொண்டான்.கிழவியின் நடுக்கம் குறைந்திருந்தது. கீழிறங்கிப் பழுத்திருந்த அவளது உதடுகள் மட்டும் ஓயாமல் காற்றை மென்று கொண்டிருந்தன. போலீசாரை அழைத்து அவளை ஒப்படைத்து விடலாமா என்று இளங்கோவன் யோசித்தான். பிறகு மெல்லத் திரும்பி லாலாங் புதர்களுக்குப் பின்னால் கேட்ட குரல்களை உன்னிப்பாகக் கவனித்தான். அவன் தொண்டை காய்ந்து போயிருந்தது. முட்டாள் ஆசிரியன் என்று மீண்டும் ஒரு முறை பெயர் எடுக்க வேண்டுமா என்று இளங்கோவனுக்குத் தோன்றியது.

– உனக்குக் காது குத்தியிருக்காங்களா?

என்று கேட்டபடியே கிழவி இளங்கோவனின் காது மடலை நீவி விட்டாள். கறுப்பாய் அந்த தழுப்பு இன்னமும் இருக்கத்தான் செய்தது. ஆனால் துவாரம் எப்போதோ மூடி போயிருந்தது.

– உங்களுக்கு யாரும் சொந்தக்காரங்க இல்லையா பாட்டி?

கேட்டுவிட்டு கிழவியின் உறவினர்கள் எந்நேரமும் அங்கு வந்துவிடலாம் என்பதுபோல் இளங்கோவன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்
கிழவி இரண்டு கைகளையும் உயரப் பிடித்துத் திருப்பிக் காட்டினாள்.

– பிள்ளைங்க?

– பெத்துக்கல.

– கணவர்?

– ரெண்டு வருஷத்துக்கு முன்னால போயாச்சு,

கிழவியின் குரலில் கைநிறைய கிளிஞ்சல்களைக் கல்தரையில் உருட்டி விட்டதைப்போன்ற குதூகலம். அந்தச் சத்தத்தின் விரசம் தாக்க இளங்கோவனின் தொண்டை மேலும் வற்றிப் போனது. செறுமியபடியே கால்சட்டையை தளர்த்திவிட்டு எழப் போனான். இப்படிப்பட்ட ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட கிழவிகள் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

முட்டாள் ஆசிரியன் நடத்தி வைத்த மற்றொரு கேலிக்குரிய சம்பவமாய் நடுக்காட்டில்வந்து முட்டாள் தனமாகச் செத்துப்போனான் என்று பள்ளிக்கூடத்தில் பேசிக் கொள்வார்கள். ஆனால் எழப் போனவனை அவள் தடுத்து நிறுத்தினாள்.

– நான்தான் அந்த ஆள அனுப்பி வச்சேன்.

தூரத்தில் புவியியல் ஆசிரியரும் மாணவர்களும் நடத்திக் கொண்டிருந்த உரையாடலின் லயம் மாறாமலே இருந்தது. பஞ்சு போன்ற லகுத் தன்மையைக் கொண்ட ஏதோஒரு தரைத் தாவரத்தின் பூக்களைப் பிய்த்துக் காற்றில் பறக்கவிட்டதுபோல் அவ்வப்போது இன்னதென்று சொல்ல முடியாத வாக்கியங்களிலிருந்து சில அசைகள் மட்டும் தெளிவாகக் காற்றில் மிதந்து வந்து அவன் மீது தெறித்தன.அவற்றை இளங்கோவன் ஆர்வத்தோடு தலைதூக்கி முகர்ந்து பார்த்தான்.
அவன் இல்லாததை அவர்கள் இன்னமும் உணரவில்லை என்றே இளங்கோவனுக்குத் தோன்றியது.

– நீங்க மட்டும் தனியா எல்லா ஏற்பாடுகளும் பண்ணினது கஷ்டமாத்தான் இருந்திருக்கும் இல்லையா பாட்டி?

கிழவி அட்டைப் பெட்டிக்குள் சிதறிக்கிடந்த பழைய தாள்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை இங்கும் அங்கும் மாற்றி வைத்தபடியே தோள்களை லேசாகக் குலுக்கினாள். அவள் நிமிர்ந்து பார்த்தபோது இளங்கோவனுக்கு அவளது மஞ்சள் நிறக்கண்களுக்குள் மிதந்த குங்குமப்பூப் போன்ற மெல்லிய சிவப்புத் துகள்கள் தெளிவாகத் தெரிந்தன.

– எல்லாருக்கும். நடக்குறதுதான. அந்த ஆளுக்கும் சிரமம் இல்ல. எனக்கும் சிரமம் இல்ல. பதினாலாவது மாடியில இருந்து சவப்பெட்டிய கீழ நிக்குறவேனுக்குக் கொண்டு போகத்தான் பொடியனுங்க தவிச்சுப் போயிட்டாங்க. லிப்ஃட்டுல சவப்பெட்டி பூரல. கடைசியா தாங்காப் படியிலதான் எடுத்துட்டுப் போனாங்க. தாங்காப் படியும் குறுகலா இருந்துச்சா. சவப்பெட்டியத் திரும்ப ரொம்பவே சிரமப்பட்டாங்க.

கிழவி காலையில் காய்கறிவாங்கச் சந்தைக்குப்போய் வந்ததை விவரிப்பதைப் போல் விவரித்தாள்.

– கணவர் போன பிறகு நீங்க அந்த வீட்டிலயே தங்கியிருக்கலாமே பாட்டி. இப்படி வந்து ஏன் கஷ்டப் பட்டுகிட்டு?

கிழவி மீண்டும் தாள்களையும், பிளாஸ்டிக் பைகளை யும் மிகத் தீவிரமாக மாற்றிவைக்க ஆரம்பித்திருந்தாள்.

– அந்த ஆள் எங்க இருக்க விட்டான்? ஊரெல்லாம் கடன். அதத் தீர்க்கவே வீட்டவிக்க வேண்டியதாயிடுச்சு.

இளங்கோவனின் கற்பனையில் பலவிதமான காட்சிகள் விரிந்தன.

– கணவர் தண்ணி போடுவாரா? சூதாட்டமா? சேமநிதி பணத்தை எல்லாம் யாராவது பிலிப்பைன்ஸ்காரிகிட்ட தொலச்சுட்டாரா?

அவன் கண்கள் சுடர் விட்டன. மீண்டும் கிழவி தோள்களைக் குலுக்கினாள்.

– அது எல்லாம் இல்லை. அந்த ஆளுக்குச் சாமர்த்தியம் போதல. அறுபத்திரண்டு வயசு வரைக்கும் அரசாங்க வேலையில இருந்தும் ஒண்ணத்தையும் சேமிச்சு வைக்கல. ஆனா நல்லாதிம்பான். கொழம்புல உப்புகாரம் கொஞ்சம் கொறஞ்சாலும் சோத்த கைநெறைய அள்ளி எம்மூஞ்சியிலேயே விட்டடிப்பான்.
கிழவியின்முகத்தில்இப்போதுஊதாநிறநிழல்கள்பரவியிருந்தன. புதுவிதமான வேகத்தோடு பெட்டிக்குள் இருந்ததாள் மடித்தும் விரித்தும் வைத்துக் கொண்டிருந்தாள்.

– கட்டாய ஓய்வு வாங்கிகிட்ட அஞ்சு வருஷத்துலேயே பக்கவாதம் வந்து வாய்கோணிகிச்சு. அதுக்கப்புறம் சாகுற வரைக்கும் படுத்த படுக்கையாத்தான் கெடந்தான். நான்தான்அந்த ஆளப் பார்த்துக்கிட்டேன். பத்து வருஷம். ஆஸ்பத்திரி செலவுலேயே சேமிச்சப் பணம் பூரா காணாமப் போச்சு.
குழந்தையைப் போல் கலகலவென்று சிரித்தாள். பிறகு அவளது தலைமேல் மீண்டும் சாயப்பார்த்த அட்டைப் பெட்டியின் கூரையை இரண்டு விரல்களால் பலமாகக் குத்தி நேராக்கினாள். கிழவி அணிந்திருந்த சாயம்போன மேலாடையையும் தொளதொளப்பான கறுப்புக்
கால் சட்டையையும் சட்டென்று எங்கிருந்தோ பிரிந்து வந்த வெயில் நனைத்தது.

– அந்த ஆளக் கடைசியா நான்தான் அனுப்பிவச்சேன்.

கிழவிக்கு நினைவு தப்பியிருக்குமோ என்று இளங்கோவன் யோசித்தான். தூரத்திலிருந்து கேட்ட மாணவர்களின் குரல்கள் இப்போது சின்னச்சின்ன சத்த வளையங்களாய்ச் சிதறியிருந்தன. விரைவில் அவனைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.

– சரிபாட்டி, நா-

– அந்த ஆள நான்தான்அனுப்பிவச்சேன். முடியல. பத்து வருஷமா அந்த ஆளோட ஓடம்ப வேளா வேளைக்குத் தொடச்சு விடுறதும், அசையாமப் படுத்திருந்ததால சீழ்கட்டிப் போன புண்ணை இன்பெக்ஷன் வராம சுத்தம் செய்யுறதும், அந்தாளு பேண்டு வச்சத அள்ளிக்கிட்டுப் போய் டாய்லெட்ல கவுத்து அந்தாளுக்கும் கழுவி விடறதும், சாப்பாடு ஊட்டுறதும், கண்ணுலர்ந்து மெல்லிசான குச்சியால பீளை எடுக்குறதும். அந்தாளோட வீட்டுக்குள்ளாறயே அடைஞ்சுக் கெடந்தேன். எனக்குனு ஒரு வாழ்க்கை இல்ல. எனக்குனு ஒரு சந்தோஷம் இல்ல. கடைவீதி, கோவில், சொந்தக்காரங்க கல்யாணம், சாவு எதுவும் இல்ல.

கை அருகில் இருந்த அழுக்கான பிளாஸ்டிக் குவளையிலிருந்த நீரைத் தாகத்தோடு குடித்தாள்.

– அவனால ஒடம்ப அசைக்க முடியாததால கையோரமா ஒரு கைத்தடி வச்சிருந்தேன். என்னைக் கூப்பிடணும்னா கைய லேசாஅசைச்சு படுக்கையோட இரும் புஃபிரேமுல கைத்தடிய அந்தாளு அடிப்பான். கைத்தடியோட சத்தம் டங்குடங்குனு கேக்கும். அந்தப் பத்து வருஷத்துல சமையல் ரூமுல வேலையா இருந்தப் படங்டங்னு அந்த சத்தம் கேக்குறதா நெனச்சுகிட்டு அடிக்கடி மூச்சிரைக்கப் படுக்கையறைக்கு ஓடி வந்திருக்கேன். அந்த ஆளு அமைதியா தூங்கிகிட்டு இருப்பான்.

– அரசாங்கத்துக்கிட்ட ஏதாவது உதவி கேட்டிருக்க லாம் இல்லையா.

– கேக்கலாம்தான். ஆனா அங்கிருக்குற குட்டிங்கபேசுற இங்கலீஷு எனக்குச் சரியாப் புரிப்படல. இப்படியே எதாவது அடுக்குமாடி கட்டடதாங்காப் படியிலயும், அங்கயிருந்து தொரத்தி விட்டா இந்த மாதிரி எடத்துலயும் இருக்கப் பழகிகிட்டேன்.

இளங்கோவனின் கண்களைச் சந்திக்க விரும்பாதது போல் கிழவி தனது கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

– நாலாவது வருஷத்துலேயே அந்த ஆளு தூங்குற நேரத்துல எல்லாம் வீட்டுல சாமி படங்களுக்கு முன்னால நின்னுகிட்டு இந்த ஆளக் கூட்டிக்கிட்டுப்போகக் கூடாதானு கேட்க ஆரம்பிச்சேன். ஒரு நா ரொம்ப முடியாம அந்த மனுஷன் சீக்கிரம் சாகணும்னு கொஞ்சம் துணியக் கிழிச்சுக் காசும் முடிஞ்சுவச்சேன். ரயில்வே வேல பார்த்தாலும் அந்த ஆளுக்கு கொஞ்சம் தமிழ்ப் பைத்தியம் எல்லாம் இருந்தது. பொழுதன்னைக்கும் எதாவது பாட்டுப் பொஸ்தகத்தை வச்சுப்படிச்சுக்கிட்டே இருப்பான். அதுல ஒரு பாட்டு. ‘சாகாவரம் தாராய் ராமா சதுர்மறை பாதா’னு. ஆனா நாகேட்டது அந்த ஆளு சாகுற வரம்.

மீண்டும் கெக்கலிப் போடு சிரித்தாள். இளங்கோவன் உதடுகள் பிரிந்திருக்க அவளை லேசான வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

டிடென்ஷன் வகுப்பின்போது கோபிக்கு வலிப்புவந்து தரையில் சாய்ந்தபோது அவனோடு இருந்து முதலுதவி செய்யாதது தவறுதான். அன்று டிடென்ஷன் வகுப்பில் மிகச்சில மாணவர்களே இருந்தார்கள். அவர்களைக் கோபிக்கிக் காவலாக வைத்துவிட்டு பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து முதல்மாடிக்குப் போய்ப் பள்ளி அலுவலகத்திலும் ஆசிரியர் அறையிலும் ஆள்சேர்த்துக் கொண்டு மீண்டும் நான்காவது மாடிக்கு வருவதற்குள் கோபி தன் நாக்கையே விழுங்கி மூச்சுத்
திணறி நண்பர்கள் புடைசூழச் செத்துப் போயிருந்தான்.

ஆம்புலன்ஸ்காரர்கள் கோபியின் உடம்பைத் தூக்கிக்கொண்டு போனபோது எல்லோரும் இளங்கோவனின் கையிலிருந்த கைத்தொலைபேசியை ஏளனத்தோடு பார்த்தார்கள். விபத்து என்று நீதிமன்ற அறிக்கை சொன்னாலும் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே இளங்கோவனுக்கு முட்டாள் ஆசிரியன் என்ற பட்டம் ஒட்டிக் கொண்டது.

பெரிய பதவியிலிருந்த கோபியின் பெற்றோர்கள் பள்ளிக்கூட அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் இளங்கோவனை நாகரிகமான சொற்களால் தூற்றினார்கள். பாம்பைப்போல எம்மகன முழுங்கிட்டு நிக்கறாம் பாரு என்று கோபியின் அம்மா சொன்னாள்.

ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல.

இளங்கோவனுக்கு அவர்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாகப்பட்டது.

சாகாவரம் அருள்வாய், ராமா சதுர்மறை பாதா.

லாலாங் புதர்களின் பின்னாலிருந்து ‘-ஸ்டர்கோ, -ஸ்டர்கோ” என்ற குரல்கள் எழ ஆரம்பித்திருந்தன. இளங்கோவன் சுற்றியிருந்த இடத்தில் நீளமான குச்சி எதேனும் கிடைக்குமா என்று தேடினான்.

– சரிபாட்டி. நான் போகணும். இந்த பிஸ்கட் பாக்கெட்டையும் நீங்களே வச்சுக்கிங்க. நான் வேற எதாவது உதவி செய்யணுமா?

கிழவி மஞ்சள் நிறக்கண்களால் இளங்கோவனை வெறித்துப் பார்த்தாள். பின்பு ஒரு பிளாஸ்டிக் பையைக் கிளறி ஏதோ ஒரு அட்டையை எடுத்து நீட்டினாள்.

– இந்த அட்டையில என் பேரு சரியா இருக்கானு பார்த்துக் கொடு தம்பி. அந்த ஆளோட இன்சூரன்ஸு காசு எதாவது வருமானு பார்க்கணும். முன்ன மாதிரி பழைய பேப்பரும் அட்டை பெட்டியும் கெடைக்க மாட்டேங்குது.

அடையாள அட்டை நீலநிறமாக இருந்தது. கிழவி மலேசியாவில் பிறந்தவள். இங்கு நிரந்தரவாசி. பெயர் பொன்னம்மா மாசிலாமணி என்று அச்சிடப்பட்டிருந்தது.

அடையாள அட்டையின் முன்னாலிருந்த புகைப்படம் பழதானதால் தேய்ந்துமுகத்தின் அடையாளமே தெரியாமல் போயிருந்தது. எதைக்கொண்டு இவள்
பெயர்தானா என்று அறிந்து கொள்வது? பின்னாலிருந்து மாணவர்களின் குரல்கள் இன்னும் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருந்தன.

முட்டாள் ஆசிரியன்.

– எல்லாம் சரியா இருக்கு பாட்டி. ஆனா இன் சூரன்ஸுக்கு இதுபத்தாது. மரணச் சான்றிதழும் வேணும்.

உங்க கணவர் சீக்குமுத்திப் போய்தான் செத்தாரா?

கிழவி அடையாள அட்டையை வாங்கி அதைக் கையில் இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

– யாருக்குத் தெரியும்? சாகுறதுக்கு முன்ன கொஞ்ச வாரத்துக்கு முன்னால இருந்தே நெஞ்சு வலிக்குது வலிக்குதுனு மார்பப் பிடிச்சுகிட்டுக் கிடந்தான். அந்த ஆளு செத்துப் போனநாள் காலையில ரொம்ப மோசமாச்சு போல. மூச்சுவிட ரொம்பச் சிரமப்பட்டான். நான் சமையல் ரூமுல வேலையா இருந்தப் பகைத்தடி படுக்கைய அடிக்குற சத்தம்ரொம்ப நேரமா கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நான் போகல. அதுகொஞ்சமா அடங்குனதுக்கு அப்புறமாத்தான் போனேன். நான் போய் நின்னப்ப அவன் செத்துப் போயிருந்தான்.

கிழவி அடையாள அட்டையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பெரும் குரலெடுத்து அழுவாளோ என்று இளங்கோவன் கொஞ்ச நேரம் காத்திருந்தான். ஆனால் அவள் முகத்தில் சொல்லில் அடக்க முடியாத பெரும் கருணையே குடிகொண்டிருந்தது.

இளங்கோவன் தட்டுத் தடுமாறி லாலாங் புதர்களைக் கடந்து போனபோது பழைய கல் குவாரி நிறைய ஊமை வெயில் சிரித்தது.

writersithurajponraj@gmail.com