பத்து வயது வரை பள்ளிக்குப் போகாமல், அகதியாய் வாழ்ந்து. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி விமானப்படை விமானியாக, நிஜமாகவே உயரே பறந்த பெண்ணின் கதை இது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி, அதுவும் விமானப்படையில் முதல் பெண் விமானியான நிலோஃபர் ரஹ்மானி தன் அனுபவங்களை, – அவற்றை அனுபவங்கள் என்று சொல்லக் கூடாது – துன்பங்களை Open Skies என்று விரிவாகப் பதிந்திருக்கிறார். படிக்கும்போது, உலகம் ஒரு பக்கம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது, மறுபக்கம் மிக வேகமாக இரண்டு, மூன்று, நான்கு என்று நூற்றாண்டுக் கணக்கில் பின்னாலும் போய்க் கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. முன்னால் போகப் போக மேட்டுக்குடியினரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டே போகிறது. பின்னால் போகும்போதோ, விளிம்பு நிலையில் உள்ளவர்கள், குறிப்பாக பெண்களின் நிலை மிக மிக மோசமாகிறது. ஆனாலும் நிலோஃபர் போன்ற பெண்கள் போராடி தமக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த இடத்தில் அவர்களால் மிகக் குறுகிய காலம் மட்டுமே இருக்க முடிகிறது என்றாலும் கூட, வெற்றி வெற்றிதானே?

நிலோஃபரின் தந்தை பொறியியல் படித்தவர். விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டவர். ஆப்கானில் அந்நாளில் விமானிகளுக்கான பயிற்சிப் பள்ளியே கிடையாது. சோவியத் ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில் இருக்கிறார். ஆட்சி தாலிபான் கையில் வந்ததும் அந்த வேலை காலி. நான்கு பைகளில் சாமான் செட்டுகளோடு, அகதியாய் குடும்பத்தோடு பாகிஸ்தான் போகிறார். அகதி முகாம் வாழ்க்கை. குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடம். பொறியாளரான அவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புகிறார்கள். இப்போது அந்த நான்கு பைகளோடு. மூன்று சட்டிகளும், ஒரு கேஸ் அடுப்பும் கூடுதல் சொத்தாக சேர்ந்துள்ளன.

ஆப்கானில் தாலிபான் அராஜகம் உச்சத்தில் இருக்கிறது. எந்தத் தொழிலும் கிடையாது. இங்கும் நிலோஃபரின் அப்பா கிடைக்கும் கூலி வேலைதான் செய்கிறார். தாலிபான் சொல்வதைக் கேட்காவிட்டால் சவுக்கடி. திருடி மாட்டிக் கொண்டால் கையை வெட்டுவார்கள். பெண் தனியாக வெளியே போகக் கூடாது. அப்படிப் போனால் ரத்தம் வரும் வரை சவுக்கடி. அப்படித் துணையோடு போகும் போதும், உடலின் ஒரு சிறு பாகமும், பாதம் கூட வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் ரத்தம் வரும் வரை சவுக்கடி. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்கப் படைகள் தாலிபான்களை விரட்டுகின்றன. லேசான மாற்றங்கள் வர ஆரம்பிக்கின்றன. ஆனாலும், அதற்குள்ளாகவே தாலிபான்கள் என்னுடைய குழந்தைமையை, அமைதியை, கல்வி கற்கும் உரிமையை, அச்சமின்றித் தெருவில் நடக்கும் உரிமையை, எனது எல்லாவற்றையும் பறித்து விட்டார்கள் என்கிறார் நிலோஃபர். இனி என்ன செய்தாலும் அவை எனக்கும், என் காலத்துப் பெண்களுக்கும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்று வேதனைப்படுகிறார் அவர்.

தாலிபான்கள் வெளியேறிய அன்று பெண்கள் சாதாரணமாக வெளியே வந்த போது நகரமே வண்ணமயமாக இருந்தது என்கிறார் நிலோஃபர். ஊரில் இத்தனை பெண்கள், விதவிதமான வயதுகளில், விதவிமான உயரத்தில், விதவிதமான பருமனில், விதவிதமான நிறத்தில், விதவிதமான உடைகளில் இருக்கிறார்களா என்ன? என்று எல்லோருக்குமே வியப்பாக இருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் சிரிப்பொலி கேட்கிறது. பெண்களின் சிரிப்பொலி இல்லாத ஒரு தேசத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. ஆனால் இருந்திருக்கிறது. மற்றொரு வியப்பான விஷயம் எல்லா இடங்களிலும் இந்தியாவிலிருந்து வந்த இசை ஒலிக்கிறதாம் – அதாவது, பாலிவுட் திரையிசைப் பாடல்கள்!

அமெரிக்க நிர்வாகம் பள்ளிகள் திறக்கிறது. ஒரு நுழைவுத் தேர்வு வைத்து எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறார்கள். இது வரை பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத ஆப்கான் சிறுமிகள் நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள். வீட்டில் சொல்லிக் கொடுத்ததை வைத்து எழுதிய நிலோஃபர், அவரது அக்கா இருவருக்கும் ஆறாவது வகுப்பில் இடம் கிடைக்கிறது. பள்ளியில் சேர்ந்து முறையான படிப்பு என்பது ஆரம்பித்துவிட்டாலும் கூட, ஆப்கானில் நிலைமை வேறு. தொலைக்காட்சி, போன், இணையம், ஏன் பொது நூலகம் கூட இல்லாத நிலையில் குழந்தைகள் பிற நாட்டுக் குழந்தைகளின் அறிவு மட்டத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருந்தார்கள். நிலோஃபரின் வீட்டில் தந்தை பொறியியல் படிப்புப் படித்தவர். தாயாரும் பள்ளி இறுதி வரை படித்தவர். எனவே, சூழல் சற்று சாதகமாக இருந்தது. தினமும் அவரது தந்தை இரவு உணவின் போது ஏதேனும் ஒரு விஷயம் பற்றி பல தகவல்களைச் சொல்வார். சாப்பிட்ட பிறகு அவர் சொன்னதை வைத்து குழந்தைகள் அது குறித்து சுருக்கமாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். ஆனால் பல வீடுகளில் இந்த மாதிரியான சூழல் இல்லை. தாலிபான்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். ஆனால், மக்களின் மனதிலிருந்து, குறிப்பாக ஆண்களின் மனதில் இருந்து வெளியேறவில்லை. எல்லா ஆண்களும் மனதளவில் தாலிபானாகத் தான் இருந்தார்கள். பல பெண் குழந்தைகள் அப்பா, அண்ணன்களுக்குத் தெரியாமல்தான் பள்ளிக்கு வந்தார்கள். இயல்பாகவே விஷயம் அப்பாக்களுக்குத் தெரிய வந்தபோது, அடி வாங்கிக் கொண்டு, பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொண்டு போனார்கள். யார் செய்த புண்ணியமோ. நிலோஃபரின் படிப்பு தடைபடவில்லை.

ஒரு நாள் அவள் தந்தை ஒரு பட்டம் வாங்கிக் கொண்டு வந்தார். மொட்டை மாடியில் போய் பட்டத்தைப் பறக்க விட்டார்கள். என்னது, பொம்பளப்பிள்ளை பட்டம் விடுவதா? என்று அக்கம் பக்கத்தினர் தாடியை உருவிக் கொண்டு சீறியதைப் பொருட்படுத்தாது, அ்ப்பா இந்தப் பட்டம் போல் நானும் விமானியாகி வானில் பறக்க ஆசைப்பட்டேன் என்றார். ஆப்கானிஸ்தானின் முதல் விண்வெளி வீரரான அப்துல் அஹத் முகமது சோவியத் ஆட்சிக்காலத்தில் வான்வெளியில் 8 நாட்கள், 20 மணி நேரங்கள் வசித்ததைப் பற்றிச் சொன்னார். நிலோஃபருக்கு நான் விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்னாள். நடக்குமா என்று தெரியவில்லை. அன்று வரையிலும் கூட அங்கு விமானிப் பயிற்சிக் கூடங்கள் இல்லை. இருந்தாலும், பெண்களைச் சேர்ப்பது சந்தேகம்தான். ஆனால், எனக்கும் ஆசைதான் என்றார் அப்பா.

நிலோஃபர் கல்லூரி சென்றாள். இருபாலர் கல்லூரி. ஆசிரியர்கள் ஆண்கள். எல்லாமே புதுமை. வழக்கத்தையும் விடமுடியவில்லை. பெண்கள் கல்லூரிக்கு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு வரவேண்டும் என்றார்கள். இப்படியான ஒரு நாளில்தான் விமானப் படையில் ஆள் சேர்ப்பு பற்றி அறிவிப்பு வந்தது. அதில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள். வீட்டில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அனுமதித்தார்கள். ஆனால், வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். சொன்னால் குடும்ப மானம் போய் விடும் என்று பயந்தார்கள். நிலோஃபரின் சிறுமிகளான இரு தங்கைகளிடம் கூட சொல்லவில்லை. அவர்கள் அக்கம்பக்கத்தில் உளறிவிட்டால்?

ஆள் சேர்ப்பு மையத்தில் காத்திருக்கும்போது பெண்கள் கழிப்பறை இருக்கிறதா? என்று கேட்டாள் நிலோஃபர். விமானப்படை அது பற்றி எல்லாம் யோசித்திருக்கவே இல்லை. நிலோஃபர் விமானப் படையிலிருந்து விலகும் வரை தனிக் கழிப்பறை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம் ! பொதுவாக அன்று குடும்பக் கஷ்டத்திற்காகத் தான் பெண்கள் விமானப் படையில் சேர வந்திருந்தார்கள். ஆள் சேர்ப்பு அதிகாரி, நீதான் கல்லூரியில் படிக்கிறாயே? பேசாமல் டீச்சர், நர்ஸ் என்று போக வேண்டியது தானே? இதெல்லாம் வேறு வழியே இல்லாதவர்கள் பார்க்கக் கூடிய வேலை என்கிறார். இல்லை, எனக்கு விமானி
ஆக வேண்டும் என்று ஆசை. நான் ஒரு லட்சியத்தோடு வந்திருக்கிறேன்,என்கிறார் நிலோஃபர். என்ன பெண்ணுக்கு லட்சியமா? ஏம்மா, கெட்ட வார்த்தை
யெல்லாம் பேசற? என்கிறார் அந்த மூத்த ராணுவ அதிகாரி.

விமானப் படைப் பயிற்சியில் ஒவ்வொன்றும் சிக்கல்தான். உடல் தகுதிக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஓட வேண்டும். குதிக்க வேண்டும், தாவ வேண்டும். முந்தாநாள் வரை பெண்கள் தெருவிலேயே நடமாடக் கூடாது என்று அடைத்து வைத்திருந்த ஆப்கானில் இன்று பெண்களுக்கு ஜிம் வசதி வேண்டுமோ? தாலிபான் மனதினர் கொந்தளித்தார்கள். ஆனால், சோறும், துப்பாக்கியும் தரும் அமெரிக்காக்காரன் சொல்வதைக் கேட்டுத் தானே ஆகவேண்டும்? பெண்களுக்கு உடற்பயிற்சி நடக்கிறது. சர்வதேச விமானப் போக்கு வரத்தின் தகவல் தொடர்பிற்காக சர்வதேசத் தரத்திலான ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து வரும் வழிகாட்டுதல்கள் ஹெட்போனில் அல்லவா கேட்கின்றன? அவற்றிற்கு ஏது சப்டைட்டில்?
நிலோஃபர் உட்பட எட்டுப் பெண்கள் விமானிப் பயிற்சிக்குத் தேர்வாகிறார்கள். தாலிபான் மனதுக்கார டாக்டர் எட்டு பேருக்கும் உடல் தகுதி இல்லை என்று அறிக்கை தருகிறார். நிலோஃபருக்கு இதயம் பலவீனமாக இருக்கிறது என்று எழுதி வைத்து விடுகிறார். நிலோஃபர் அமெரிக்கப் படைகளின் தலைமை தளபதியைச் சந்தித்து இந்தத் தகவலைச் சொல்கிறாள். அவர் எட்டுப் பேருக்கும் அமெரிக்க மருத்துவரை வைத்து மருத்துவப் பரிசோதனை செய்ய இப்போது எல்லோருக்கும் உடற்தகுதி இருக்கிறது. இந்தப் பெண்களைத் தேர்வு செய்கிறீர்களா? இல்லை

உங்கள் சோற்றில் கைவைக்கவா? என்று அந்த தளபதி மிரட்ட, ஐயா சொன்னீங்கன்னா சரிதான் என்று எட்டுப் பெண்களையும் விமானிப் பயிற்சிக்குத் தேர்வு செய்கிறது ஆப்கான் விமானப் படை. ஆண்கள் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டே அத்தனை பயிற்சிகளையும் நல்லபடியாக முடித்து ஆப்கானிஸ்தான் விமானப்படையின் முதல் விமானியாகிறார் நிலோஃபர். இதற்குப் பிறகு தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.

பழைய தாலிபான்கள், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஏழெட்டுத் தீவிரவாத அமைப்புகள் என்று நாடு முழுவதும் பிரச்சனை. அமெரிக்கப் படைகளின் துணையோடு ஆப்கான் ராணுவம் எல்லோரையும் வேட்டையாடுகிறது. அதற்குத் துணைபுரியும் பணி நிலோஃபருக்கு. போரிடும் துருப்புகளுக்கு வேண்டிய ஆயுதங்கள், உணவு ஆகியவற்றைக் கொண்டு போய் தருவது, படைவீரர்களை சாலை வசதி இல்லாத மலைப் பிரதேசங்களில் இறக்கி விட்டு வருவது, காயம்பட்ட வீரர்களைப்ப் போர்க்களத்திலிருந்து மருத்துவமனைக்குத் தூக்கி வருவது போன்ற வேலைகள். அதிலும் இறந்த உடல்களை எடுத்து வரும் பணிக்கு அனுப்ப மாட்டார்கள். பிணத்தை அதன் குடும்ப உறுப்பினர் அல்லாத பெண் தொடக்கூடாது என்ற மதக் கட்டுப்பாடு. பார்க்கக் கூடக் கூடாதாம். பொதுவாக ஆப்கான் ராணுவம் பெண்களை ஒரு விளம்பரத்திற்காக, வெளிநாட்டு ஆதரவு பெறத்தான் சேர்த்துக் கொண்டதே தவிர, பெண்களுக்கு அதிகாரம் தருவதில் அதற்கு விருப்பமில்லை. சோவியத் காலம், அதற்கு முந்தைய காலத்து ஆண்களுக்கு இருந்த பரந்த மனப்பான்மை, புரிதல் தாலிபான் காலத்து இளைஞர்களிடம் இல்லை. சீனியர் ராணுவ அதிகாரிகள் ஒரு பெண் விமானி ஓட்டும் விமானத்தில் பயணிக்கத் தயங்க மாட்டார்கள். பெண்ணுக்குத் துணை பைலட்டாக இருக்க சங்கடப்பட மாட்டார்கள். அது தாலிபானுக்கு முந்தைய சோவியத் காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்களின் மனநிலை. ஆனால் தாலிபான் காலத்தில் வளர்ந்து அதிகாரிகளான இளைஞர்கள் பெண்களைத் துச்சமாகவே நினைத்தார்கள்.

இதனிடையே நிலோஃபர் அமெரிக்காவில் ஒரு பயிற்சிக்குச் செல்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வருகின்றன. நிலோஃபர் விமானப்படையில் இருக்கும் விஷயம் வெளியில் தெரிந்து விடுகிறது. அமெரிக்க ஆண்களோடு வேலை பார்க்கும் வேசி என்றெல்லாம் இணையத்தில் அவரது படங்களுக்கு கமெண்ட்டுகள் வருகின்றன. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. திருமணமான அக்காவை மாமியார் வீட்டில் உன் தங்கையால் எங்கள் கௌரவம் குறைந்து விட்டது என்று சொல்லித் துரத்தி விடுகிறார்கள். நம் தமிழ்ப் படங்களில் வருவது போல் அக்கா குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு, மூக்கைச் சிந்திக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்து என் வாழ்க்கையே உன்னால் பாழாகி விட்டது என்கிறாள். அப்பா வேலை பார்க்கும் இடத்தில் வேலையை விட்டு நீக்குகிறார்கள். அவரும் பல வேலைகள் மாறுகிறார். எல்லா இடங்களிலும் என்ன உங்க மக பொம்பளயா லட்சணமா ஒரு டீச்சர் வேல, நர்ஸ் வேல பாக்காம, பிளேன் ஓட்டறா? சரி, நீங்க நாளைலேர்ந்து வேலைக்கு வர வேணாம் என்கிறார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வீடு மாற நேர்கிறது. கொலை மிரட்டல்கள். தொலைபேசியில் ஆபாச அழைப்புகள். அண்ணன் மீது இரண்டு முறை கொலைத் தாக்குதல். நிலோஃபர் மீதும். சலசலப்பு சிறிது அடங்கட்டும் என்று சில காலம் இந்தியாவில் கூட தலைமறைவாக இருக்கிறார் நிலோஃபர். இந்திய உளவுப்பிரிவு அவருக்கு இந்தியக் குடியுரிமை தருவதாகச் சொல்கிறது. நிலோஃபருக்கு அதற்கும் மனமில்லை. திரும்பவும் நாடு திரும்புகிறார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் அளிக்கும் சர்வதேச வீரப் பெண்மணி விருது நிலோஃபருக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்கா சென்று விருது வாங்குகிறார். ஒபாமாவின் மனைவியோடு விருந்து. அமெரிக்க கப்பற்படையின் ப்ளூ ஏஞ்சல்ஸ் என்ற அதி நவீன போர்விமானத்தை ஓட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. சாண்டியாகோ நகரத்தின் மேயர் மார்ச் 10ஆம் தேதியை நிலோஃபர் நாளாக அந்நகரம் கொண்டாடும் என்று அறிவிக்கிறார். ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானப்படை விமானியை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஊர் தூற்றுகிறது. அம்மாவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறது.

இந்த ஆப்கான் சமூகம் இன்னும் பல தலைமுறைகளுக்குத் திருந்தாது என்று மனம் வெறுக்கிறார் நிலோஃபர். ஒரு பயிற்சிக்காக அமெரிக்கா செல்லும் அவர் அங்கு தன் அமெரிக்க ராணுவ நண்பர்கள் உதவியுடன் அரசியல் அடைக்கலம் கோருகிறார். அமெரிக்க பிரஜை ஆகிறார். இன்று ஒரு தனியார் விமான ஓட்டும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக இருக்கிறார்.

புத்தகத்தைப் படித்து முடித்தபோது நம் ஊர் ஆணாதிக்கத் தாலிபான்கள் எவ்வளவோ தங்கம் என்று தோன்றியது. மிக அபூர்வமான நிகழ்வாக கோவையில் பஸ் ஓட்டும் டிரைவரான குட்டிப் பெண் ஷர்மிளாவை இதுவரை யாரும் கொலை செய்துவிடுவதாக மிரட்டவில்லை…

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Open Skies : My life as Afganistan’s First Female Pilot by Niloofar Rahamani.

subbarao7@gmail.com