1
தாத்தாவின் உடல் நடுக்கூடத்தில்
கிடத்தப்பட்டிருந்தது
எல்லாரும் சுற்றி நின்று அழுதார்கள்
உடல் சூடு அதிகரிக்கும்போதெல்லாம்
யாருக்கும் தெரியாமல்
அவர் பன்றிக் கொழுப்பை
வாழைப்பழத்தில் வைத்து சாப்பிடுவார்
அம்மாவுக்கு அடுத்துப் பிறந்த சித்தி
சிட்டுக்குருவியின் குரலில் அழுது தீர்த்தாள்
அவளுக்கடுத்த பிறந்த மாமனோ
பூனைக் கண்களால் கசிந்துகொண்டிருந்தான்
வீட்டின் தோட்டத்தில்
லேகிய டப்பாக்களும்
சூப் கோப்பைகளும் கவனமாய் புதைக்கப்பட்டிருக்கின்றன
வள்ளலார் பெருமானே
எல்லா உயிரும் இன்புறுக
சிவாய நம

2
பரிமாறத் தெரியவில்லையென தாத்தா
பாட்டியை விளார் கொண்டு அடித்ததுண்டு
நிழல்படக்கூடாதென்று
எந்தத் தெருவைச் சொல்லுவாரோ
நிழல் மறைந்த வேளையில்
அதே தெருவில் அவரது செருப்புகள்
இரவுக்கு காவல் காத்ததுண்டு
அவர் ரொம்பவே சாந்தமானவர்
நல்லவரென பாட்டி சொல்லும்போது
மாமா சிரித்ததை நான் மட்டும் பார்த்தேன்
தூரத்தில் ஒருத்தியின்
ஒப்பாரி மட்டும் தனி ஸ்வரத்தில் இருந்தது

3
ஒரு எறும்புக்குக்கூட ஊறு நினைக்காத மகராசன்
இப்படியா போகணுமென
ஊரார் பேசிக்கொண்டார்கள்
நான் வீட்டிற்குள் அவசரஅவசரமாய் ஓடிச்சென்று
எறும்புப் பவுடரை ஒளிய வைத்தேன்
அன்றே தாத்தாவை
முடிந்தளவிற்கு எரித்துத் திரும்பினார்கள்
மறுநாள் எலும்பெடுத்து ஆற்றில் கரைக்க
சுடுகாட்டிற்குப் போய் வந்தார்கள்
பாதி எரிந்த நெஞ்சை
காகங்கள் கொத்திக்கொண்டிருக்க
சிரித்த முகத்துடன் தாத்தா படுத்திருந்ததாகவும்
பின்னர் மறுபடியும் எரித்ததாகவும்
ஒரே ஒருத்தி மட்டும் தூரத்திலிருந்து பிதற்றிக்கொண்டிருந்ததாகவும்
நள்ளிரவில் சுடுகாட்டுக்கதையை
மாமா பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்
தாயோளி சவமே என்றபடி
பெரிதாக காரித் துப்பி முடித்து
திருநீறு பூசிக்கொண்டாள் பாட்டி

4
மூணாம் நாள் காரியத்தில்
பெரிய திருநீரோடு
நல்ல மனுசனுக்கு
நெஞ்சு எரியாதபடிக்கு
என்ன குறையோ
வள்ளலார் பெருமானே
ஓதி உணர்ந்த பிரணவமே
அந்த மனசு சாந்தியடைய
அருள் புரியணும் என்றபடி
பாட்டி சிவாய நம என்றாள்
நாங்களும் சிவாய நம என்றோம்
மயானத்தில் பிதற்றிய
அந்த ஒருத்தி யாரெனவும்
அவள் என்ன ஆனாளெனவும்
வளர்ந்த பிறகு மாமாவிடம் கேட்டேன்
அவர் சிவாய நம என்றார்
நானும் திருநீறை பூசிக்கொண்டு
சிவாய நம என்றேன்

5
மாமா இறந்து மூன்று நாள் ஆகிறது
அவர் கதை பெரிதாய் ஒன்றுமில்லை
அவரது தொடைச் சதையை
ஒரு நாய் கவ்விக்கொண்டு போனது
நெற்றியில் பெரிதாய் திருநீறு பூசிய
சிறுவனொருவன் அந்நாய்க்கு
பிஸ்கட் போடுவதற்காக தூரத்தில்
நின்றுகொண்டிருந்தான்
மற்று அல்லாதார் யாரோ
யாமறியேன் பாராபரமே
சிவாய நம

vijayakumarklk96@gmail.com