ஒரு சிறிய மாத்திரை
என்னை மீண்டும் மழையின் கிசுகிசுப்பைக் கேட்கவைத்தது.
ஒரு பெண் தனது முதல் பட்டுப்புடவையை நீவிவிடுவது போல்
மென்மையான ஓசை.

மனப்பதற்றத்தைக் குறைக்கும் மாத்திரை அது.

ஒரு சிரிப்பானின் முகம் கொண்ட
எக்ஸ்டசி மாத்திரைகளைப் பற்றி
நான் நினைத்துக் கொள்கிறேன்.

அந்தச் சிரிப்பிலும்
இதே போல்
கொஞ்சம் டோபமின் சீறல்
கொஞ்சம் செரடோனின் குழைவு இருக்குமோ?
நரம்புகளில்
தங்க லாவாக் குழம்பு போல
அமைதியும் இன்பமும் பாயுமோ?

நான் தளர்ந்து
நாற்காலியில் சரிந்துகொள்கிறேன்.

இங்கிருந்து பார்க்கத் தெரியும்
தென்னை மரங்களுக்கு
மிதமான மழையுடன் எந்தப் புகாரும் இல்லை.

மிதமான மழை.
மிதமான இன்பம்.
மிதமான வலி.

வாழ்வென்பது இதுதானே?
அல்லது
இப்படி இருந்தால் பரவாயில்லை.

சில மணித் துளிகளில்
இந்த மாத்திரையின் வீரியம்
நீர்த்துவிடலாம்.

ஆம்.
நான் செரடோனின் க்ராஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒளியின் கயிறு
சட்டென்று அறுந்து
அந்தகாரத்துக்குள் விழுந்துவிடுவது..

ஆனாலும்
சறுக்கலுக்கு முன்பு
ஒளிரும் இக்கணங்கள் முக்கியமானவை.

மழை பெய்து ஓய்ந்து
சூரியன் திரும்ப வருகையில்
பூமியெங்கும் நாம் காணும்
ஜ்வலிக்கும் நகைகள் போல
வரும் இக்கணங்கள்..

எது இன்பம்
எது புளகாங்கிதம்
ஒரு சோம்பலான மதியம் ஒன்றில்
நம் தலைகளுக்கு மேலே
அறியாத காடொன்றில்
உறங்கிக் கொண்டிருந்த
வாழ்வின் சூரியன்
விழிக்க முடிவு செய்து
மழையைச் சந்திக்க
கீழிறங்கி வருவதைத் தவிர?
என்று
தோன்றவைக்கும் இக்கணங்கள்..

நான் அரசியல் ரீதியாக
ஒரு சரியான கவிதையை எழுதவில்லை
என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்தானே?

நான்
ஒரு போதை மாத்திரை பற்றி
இந்தக் கவிதையில் எழுதியிருக்கிறேன்.

அது சரியில்லை தான்
முன்பு
நிறைய பேர்
மதுவைக் குறித்து
கவிதை எழுதி இருக்கிறார்கள்.

மகாத்மா காந்திக்கு
கவிதை பற்றி என்ன கருத்து இருந்தது?
தெரியவில்லை.
மது பற்றி
போதை பற்றிக்
கடுமையான கருத்து இருந்தது.

அவர் ஒருவேளை
எனக்காகப் பிரார்த்தனை செய்திருக்கக் கூடும்.
இந்த மறுவாழ்வு மையத்தின்
செவிலி செய்வது போல.

ஆனால் ஒரு விஷயம்..

அவ்வாறு
பிரார்த்திக்கும்போது
அவள் முகம்
ஒரு அபூர்வமான மலர் போல்
ஒளிர்கிறது.
அவள் சொல்லும் பிரார்த்தனையின்
ஒவ்வொரு சொல்லுக்கும்
அம்மலர் இதழ் இதழாய்ப் பிரிகிறது.

நீண்ட சுரங்கப்பாதை வழியே
சென்றடையும்
ஒளியே
விலை மதிப்புள்ளது
என்ற அறிவை
நான் இங்கு தவிர
வேறெங்கும் அடைந்திருக்க முடியாது.

நான் அதறகாக
என் வாழ்வில் கடந்துவந்த
இருளுக்குக் கூட நன்றி சொல்கிறேன்.

நான் பேசுவது தர்க்கப் பூர்வமாக இல்லை
என்பது எனக்கே தெரிகிறது.

விட்டுவிடுங்கள்.

நான் ஒரு கவிஞன்.

ஊருக்கு வெளியே வாழ்பவன்.

 

2

இதோ
ஒற்றை அணில் ஒன்று
துணிவுடன்
என் மனைவி மொட்டை மாடியில்
அளிக்கும்
உணவைத் தேடி வருகிறது.

அதன் துள்ளலான அசைவுகள்
பியானோவில் தானே நகரும் கட்டைகள்
போல் தோன்றுகின்றன.

எதேச்சையில்
நிச்சயமாக ஒரு இசை உண்டு.
ஆனால் எதேச்சையின் இசையை
எப்படி உருவாக்குவது?

அதன் வருகை
நிச்சயமில்லாதது.
நீங்கள் அதற்காக வாழ் நாள் முழுவதும்
காத்திருந்தும்
அது உங்களைப் புறக்கணித்துப் போய்விடலாம்.

அப்போது உங்கள் மனம் தானாகவே
உங்கள் ஊருக்கு வெளியே
வசிக்கும்
என்னை நினைத்துக் கொள்ளலாம்.

அப்போது நிச்சயம்
நான் உங்களை
ஏமாற்ற மாட்டேன்.

நான் எதேச்சைகளின்
மாபெரும் புனல்.

 

3

உங்கள் பிரார்த்தனைப் புத்தகங்களில்
இல்லாத பிரார்த்தனைகள்
கூட என்னிடம் இருக்கின்றன.

ஏனெனில்

உங்கள் மருத்துவப் புத்தகங்களில்
விவரிக்கப்படாத
வலிகளைக் கூட
நான் அனுபவித்திருக்கிறேன்.

சந்தோஷங்களையும்தான்.

நீங்கள்
உங்கள் தெய்வங்களுக்கு
இன்னும் ஆழமான நன்றிகளைச் சொல்லவும் கூட
என்னை அணுகலாம்.

நான் இந்த ஊருக்கு
வெளியே வாழ்கிறவன்.

ஆகவே இந்த ஊர் முழுவதும்
என்னுடையது.

– boganath@gmail.com