மக்களாட்சியை முடியாட்சியாக தோன்றச் செய்யும் முயற்சியா இந்தச் ‘செங்கோல்’ விவகாரம். இல்லை, நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் அவசரமாக மேலாண்மை செய்ய வேண்டியவற்றில் இருந்து கவனத்தைத் திருப்பும் திட்டமிடலா? பலரும் இந்த ‘செங்கோல்’ சங்கதியைப் பேசி பாஜகவின் திசைதிருப்புதலுக்கு உடன்படுகிறோம் என அறிவுரை சொல்வதும் கேட்கிறது. திமுக அரசு வந்தாலே ‘அறிவுரை’ சொல்ல ஆயிரக்கணக்கான ‘வாய்கள்’ உண்டு. இந்த அறிவுரையாளர்கள் இரண்டு விதம். முதல் ரகம் தங்களது திராவிட விரோதக் கொதிப்பிலிருந்து மீளப் போடும் ‘நடுநிலை’ வேடம். இன்னொரு தரப்பு தன்மூப்பான அதிகப்பிரசிங்கத்தனப் பேச்சின் மூலம் முன்னிலை பெற முயலும் சுயமோகிகள். இவர்கள் ஒரு ஓரமாகக் கிடக்கட்டும்.

உண்மையாகவே உச்சபட்சமான சுயமோகவெறியர் மோடியின் ‘வரலாற்று நாயகன்’ அடையாளத்தைப் பெற்றிட அனாவசியமாக செலவழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் என்ற இந்த நிகழ்வினைக் குறித்த பார்வை சரியானதா? மையக் கருவை விடுத்து அவர்கள் விரித்த வலையில் விழுந்து வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறோமா? இல்லை, இல்லவே இல்லை. உலகின் முதன்மையான மக்கள் தொகை கொண்ட நாட்டின் ஆட்சிமுறையில் பாரிய வேறுபாடுகளை உருவாக்க ஆரியப் பார்ப்பன- பனியா அரசு முயலும் போது அதன் ‘ மையக் கருத்தாக்கமான’ ‘ இறையாண்மையைப் பற்றிப் பேசாமல் அதன் விளைவுகளைப் பேசப் புகுவதுதான் வீண்வேலை. அதிலும் இந்தச் தமிழ்ச் செங்கோல் இந்திய இறையாண்மையின் குறியீடாக மாறும் போது அந்த விவாதம் தொட்டு நகர்ந்த புள்ளிகளில் இந்த விடயத்தின் விபரீதம் ஒளிந்துள்ளது..

புனையப்பட்ட வரலாற்றுப் பிதற்றல்கள்

முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சரும் பனியா சாணக்கியருமான அமித் ஷா இந்தச் செங்கோலை தமிழ்ப் பேரரசர்களான சோழர்களின் ‘செங்கோல்’ எனும் மரபின்படியானது என்றார். இதற்காக அவரும் அவரது எடுபிடிகளும் சொன்ன கதைகள் ஏராளம். 1947 ஆம் ஆண்டின் இந்திய ஆட்சி மாற்றத்தைக் குறிக்க என்ன செய்யலாமென பலவாறாக யோசிக்கப்பட்டதாம். ஒருநிலையில் மவுண்டபேட்டன் ‘ஒருபிடி’ மண்ணை எடுத்துக் கொடுக்கலாமா என்றெல்லாம் யோசிக்கப்பட்டதாம். இந்த ஆலோசனையின் போக்கில் பங்கேற்ற ராஜகோபாலாச்சாரி தமிழ் சோழர் ஆட்சிமரபில் அரசுமுறை செய்யும் மன்னன் தனக்கு அடுத்து வரும் வாரிசுக்குத் தனது ‘செங்கோலை’ வழங்கும் முறை இருந்தது என்பதைத் தெரிவித்தாராம். உடனே அதற்கான வேண்டுகோள் அவரிடம் வைக்கப்பட்டதாம். அவரும் மாயூரம் திருவாடுதுறை ஆதீனத்திடம் சொல்லி ‘செங்கோல்’ செய்து அதை நேருவுக்கு வழங்க ஏற்பாடு செய்தாராம். ஆதீனமும் உம்மிடி பங்காரு செட்டியிடம் சொல்லி ஐந்து அடி உயரம் இரண்டு அங்குலம் அகலத்தில் ஒரு ‘செங்கோல்’ செய்தாராம். அதை ஆட்சிமாற்ற நாளான்று முதலில் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து, அதைத் திரும்பப் பெற்று, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் கொடுத்தாராம். இந்தக் கதையின்
‘ஆதீனம் கொடுத்த செங்கோல்’ தவிர்த்த அனைத்துத் தகவல்களும் ஆதாரமற்ற பொய்கள். இன்று கூட மவுண்ட்பேட்டன் அவர்களிடம் ‘செங்கோல்’ கொடுத்ததற்கான ஆதாரம் திருவாடுதுறை ஆதீனகர்த்தரிடம் இல்லை என அவரே தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்பான இப்போதுபுனையப்பட்ட ஆவணப்படமொன்றில் ஆதீனம் மவுண்ட்பேட்டனிடம் ‘செங்கோலைக்’ கொடுத்து, அதனைத் திரும்பப் பெற்று நேருவிடம் கொடுப்பதாக காட்சிப்படுத்தப்படுகிறது. அநேகமாக இந்திய செய்தி தொலைக்காட்சிகள் அனைத்திலும் இந்த
‘ஆவணப்படம்’ ஒளிபரப்பப்படுகிறது.

வரலாறும் மரபும்

இப்போது மரபையும் வரலாறையும் பார்ப்போம். நானறிந்த ‘பொன்னியின் செல்வன்’ தர ‘வரலாற்றில்’ கூட ‘செங்கோல்’ மாற்றும் நிகழ்வு இல்லை. ஆதாரம் இருந்தால் சோழ நேசர்கள் சுட்டிக் காட்டலாம். அப்படியே ‘செங்கோல்’ மாற்றம் நடந்திருந்தாலும் அதைக்கொடுக்கும் நிகழ்வு மன்னர் மரணத்திற்குப் பின்னரே நிகழ முடியும். பல சோழர்களின் கதை அதுதான். ஒரு சோழனுக்கு வாரிசே இல்லாமல் ஒரிசாவிலிருந்து (கஞ்ஜம் ) மகள் வயிற்றுப் பேரன் அரசுரிமை பெற்று தமிழ் தெரியாமலே ஆட்சி நடத்தியதாகத் தகவல் உள்ளது. இதுதான் சோழர் வரலாற்றின் தடம். சரி போகட்டும். அந்தச் ‘செங்கோலை’ யார் வழங்க முடியும். கண்டிப்பாக சோழர்களின் குருக்கலான வேதபிராமணர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும். அதாவது கடவுளின் பிரதிநிதிகளான வேதபிராமணர்கள் மட்டுமே அந்த உரிமை பெற்றவர்கள். அப்படியானால் அந்த ‘செங்கோல்’ வழங்கும் உரிமையை ராஜாஜி சூத்திர திருவாடுதுறை ஆதீனகர்த்தருக்கு எப்படி வழங்கியிருக்க முடியும், ஆதீனம் என்னதான் பிராமணர் கொத்தடிமை என்றாலும், கொடுத்திருக்க முடியாது. ஒருவேளை வைஷ்ணவ ஐயங்காரான ராஜாஜி ஸ்மார்த்த பிராமண ஐயர்கள் மீதிருந்த கோபத்தில் சொல்லியிருந்தாலும் சாஸ்திரத்தில் அதற்கு இடமில்லை. இதோ இப்போது கூட மைலாப்பூர் பிராமண ‘குரு’
மூர்த்தி காஞ்சிமட சங்கராச்சாரியாருக்குத்தான் அந்தத்தகுதியென அறைகூவல் விடுத்திருக்கிறாரே. சாவர்க்கர் போற்றிய மராட்டிய சிவாஜியின் ‘சூத்திர இழிவு நீக்க’ வாரணாசியிலிருந்து காகபட்டர் வந்த கதை நமக்கு அத்துப்படியாயிற்றே (அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’). அப்படியானால் திருவாடுதுறை ஆதினம் ‘ செங்கோல்’ கொடுத்தது தன்னிச்சையானதும், சாஸ்திர மீறலுமாகும்.

வாக்கிங் ஸ்டிக் எனும் செங்கோல்

modi: Sengol symbol of transfer of power, but was kept as walking stick at  Anand Bhawan: PM Narendra Modi - The Economic Timesஇதைவிடப் பெரும் தவறு திருவாடுதுறை ஆதீனம் சம்பிரதாயமாக ஆங்கிலேய கிறித்தவனான மவுண்ட்பேட்டனிடம் ‘செங்கோல்’ வழங்கியதாகச் சொல்லப்படுவது. ஆதீனத்திற்கு கொடுக்கும் உரிமையும் இல்லை, மவுண்ட்பேட்டனுக்கு அதைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் இல்லை.மவுண்ட்பேட்டன் பிரிட்டிஷ் அரசரின் பிரதிநிதி மட்டுமே, அவர் ‘ செங்கோல்’ பெறுவதும், ஏந்துவதும் பிரிட்டிஷ் அரசருக்கெதிரான ராஜதுரோகம். எனவே இந்தக் கற்பனைக் கதையின் விபரீதமான பகுதி இது. அப்படியே இதை ஒரு குறியீட்டு நிகழ்வாகக் கொண்டாலும் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானுக்கு என்ன வழங்கப்பட்டது. ஒரு கிறித்தவ அரசு ஒரு புதிய இஸ்லாமிய அரசு உருவாக்கத்திற்கு என்ன வழங்கியிருக்க முடியும்? முகமது அலி ஜின்னாவும் பெரும் மதநம்பிக்கையாளர் இல்லையென்றே தகவல்கள் சொல்கின்றன. எனவே ஒரு பாதுஷாவிற்கான அதிகார மாற்றத்திற்கான அடையாளமாக எதையும் அவரிடம் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இங்கேயும் ஆதீனம் கொடுத்த செங்கோலை நேரு அவர்கள் ‘வாக்கிங் ஸ்டிக்’ என்றே கருதிப் பயன்படுத்தியிருக்கிறார். அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அந்தச் செங்கோலை ‘வாக்கிங் ஸ்டிக்’ என்றே பதிவு செய்திருக்கிறார்கள்.

கிடைக்கும் ஆவணங்களின்படி அதிகார மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணம், பிரிட்டிஷ் அரசால் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே. அதுவும் இரண்டு நாடுகளுக்கும் சேர்த்து ஒன்றாக உருவான அறிவிப்பாணையே. அதைத் தவிர்த்த கற்பனைக் கதைகள் தற்போதைய பாஜகவினர் கட்டுவிக்கும் கதைகளே. இதில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் ராஜகோபாலாச்சாரி, நேரு ஆகிய இருவரும் இதைப்பற்றி எந்தக் குறிப்பும் எழுதவில்லை. அப்படியானால் எதற்காக இந்தச் செங்கோல் நாடகம்? ஏன் இந்தியாவின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரான திரௌபதை முர்மு அவர்களுக்கு அழைப்பே இல்லை? ஒரு பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருக்கலாம். அவரே முப்படைகளின் தளபதியாகவும் இருக்கலாம். இந்திய நாடாளுமன்றமே அவரை முதன்மையாகக் கொண்டே இயங்குகிறது. ஆனால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பிற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. பூரி ஜெகந்நாதர் கோவிலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனுமதிக்கப்படாததற்கும் இதற்கும் ஒரு தொடர்பை காண முடியவில்லையா? நாக்பூர் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சனாதனக் கட்டளைதானே இது. இந்தியாவை எந்நாளும் மனுநீதியும் சனாதன தர்மங்களுமே ஆளவேண்டுமென்பதே திட்டம். சனாதனம் சாஸ்திரங்களின்படியே நடக்க முடியும். புதிய நாடாளுமன்றக் கட்டிட உருவாக்கத்தின் நோக்கமே இந்தியாவின் இறையாண்மை இருப்புக் கொண்டுள்ள நிலையை வேறுடன் அறுத்துச் சாய்த்து , அரசியலமைப்புச் சட்டத்தை திரும்பப் பெற்று அல்லது காலாவதியாக்கி விட்டு மனுநீதியாட்சியை நிறுவுவதான ஆவல் காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கனவெல்லாம் நனவாகிவிடுமென்ற அச்சம் ஒரு தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடு மட்டுமே. அவர்களின் பேராவல் நிறைவேற வழியுண்டா? நாடாளுமன்ற இருக்கைகளின் எண்ணிக்கையைக் கூட்டலாம் , ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2026 ல் 1000 ஆக ஆக்கிவிடுவது அவ்வளவு சுலபமல்ல. அப்படிக் கூட்ட அவைகளில் அறுதிப் பெரும்பான்மை மட்டும் போதாது. எந்த விவாதங்களுமில்லாமல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வரும் சட்டங்கள் போன்றதல்ல இந்தத் திருத்தம். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளையே மாற்றும் சட்டப் பிரிவு. பாஜக வேளாண் சட்டங்க எதிர்கொண்ட எதிர்ப்பை மறந்திருக்காது. கொடுஞ் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத இடியாப்பச் சிக்கலை அமித் ஷா குடியுரிமை மசோதா (CAA) மற்றும் தேசிய மக்கள் ஏடு (NRC) விவகாரத்தில் எதிர்கொண்டிருப்பது கண்கூடு. வங்காளத்தில் இஸ்லாமியர் வெளியேற்றம் சாதகமாகுமென எண்ணினால் அசாமில் வங்காளி இந்துக்களை வெளியேறச் சொல்லும் நிலையை
எதிர்கொள்ள வேண்டி தொங்குகிறது சட்டங்கள். ஒரே ஒரு தவறான/ அயோக்கியத்தனமான நீதிமன்ற ஆணை பாஜக ஆளும் மணிப்பூரைத் தீக்கிரையாக்கியுள்ளது. எனவே மோடியும், அமீத் ஷாவும் அவர்களது நண்பர்(?!) அதானிக்கு இந்தியாவை ‘பட்டா’ போட ஆசைப்படலாம். ஆனால் ஆபத்து அவர்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவிற்கும் அதன் இறையாண்மைக்கும்தான். இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படும் வரைதான் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை சனாதனிகள் உணரும் நாள் வந்தே தீரும்.

இறையாண்மையும் அரசியல் சாசனமும்

ஒரு குடியரசு நாட்டின் இறையாண்மை மக்களிட மிருந்தே பெறப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மட்டும் மாண்புமிகு அல்ல. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இறையாண்மை பெற்றவர். இந்தியக் குடியரசிற்கான முன்மொழிதல் அறிவிப்பு தெளிவாகச் சொல்லுகிறது. ‘இந்தியர்களாகிய நாமனைவரும் சேர்ந்து நமக்கு நாமே வழங்கிக் கொண்ட அரசியல் சாசனம் ‘ என்று. ஒரு குடியரசு நாட்டில் அரசியல் சாசனமே முதன்மையானது. அதனை ஏற்றுக் கொள்வது என்பதே குடியுரிமையின் முதல் கடமை. மக்களின் இணைவில் உருவான நாட்டின் இறையாண்மை மீளவும் குடிமக்களுக்கு வருவதுதான் இந்தச் சுற்றின் அருமை. அதாவது இறையாண்மையின் மூலமான குடிமக்கள் இறையாண்மையை அங்கிருந்து பெறுவது என்ற நுட்பமே அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அரசின் / ஆட்சியின் சாராம்சம். இதில் எங்கே வருகிறது ‘ செங்கோல் ‘? செங்கோல் முடியாட்சியின் சின்னம். அது சோழர் மரபானால் என்ன குப்தர்/ மௌரியர் மரபானால் என்ன? அதிலும் நீதிவழுவாச் செங்கோல் எனும் சாதனம் குஜராத் கொடுங்கோலர்கள் கையில் என்பதுதான் விபரீதம். மோடிக்கு முடி சூட்டப்படப் போகிறதா? இனி இந்தியாவில் தேர்தல் கிடையாது என அறிவிக்கப் போகிறார்களா? அதற்கெதற்கு ஆயிரம் கோடியில் கட்டிடம். அந்தப்புரத்துடன் மன்னருக்கு மாட மாளிகைகளும் கூடக் கோபுரங்களும் கட்டியிருக்கலாமே? விநாச காலே விபரித புத்தி என்பது இவர்களுக்கே பொருந்தும்.

பேரறிஞர் அண்ணாவும் ஆதீனச் செங்கோலும்

இந்தச் செங்கோல் விவகாரத்தில் ‘டைம்’ பத்திரிகைச் செய்தி விலாவாரியாக அந்த நிகழ்ச்சியை விவரித்திருக்கிறது (25.08.1947) ஆகஸ்ட் 15க்கு முந்தைய தேதியில் நடந்த பலவகையான கொண்டாட்ட நிகழ்ச்சிகளில், மதராஸ் மாநிலம் தஞ்சாவூரிலிருந்து திருவாடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு ‘செங்கோலை’ ஊர்வலமாக எடுத்து வந்தார். நேரு அவர்களின் இல்லம் இருந்த சாலையில் அந்திசாயும் வேளையில் ஊர்வலத்திற்கு முன்னே நாதஸ்வரம் இசைப்பவர்கள் ஆங்காங்கே சாலையோரத்தில் நின்று இசைத்தனர். பதினைந்து நிமிடங்கள் வரைகூட நீண்ட இந்த இசைநிகழ்ச்சி பலமுறை நடந்தது. ஒருவழியாக நேரு அவர்களின் இல்லத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஆதீனகர்த்தர் நேரு அவர்களுக்கு நெற்றியில் விபூதி பூசி விட்டுச் செங்கோலை அவரிடம் கொடுத்தார். இந்தச் செய்தியோடு உள்ள புகைப்படத்தில், நேரு அவர்கள் அந்த செங்கோலை தலைகீழாக நெஞ்சுக்கு நேராக பிடித்தபடி நிற்கிறார் அவரருகில் அப்போதைய தருமை ஆதீனம் நிற்கிறார். இந்த நிகழ்வில் செங்கோல் கொடுப்பது பெறுவது என்ற எந்தவித அரசர் காலக் குறியீடுகளும் இல்லை. தனக்கு வழங்கப்பட்ட பரிசைப் பெறுவதான போக்கிலேயே அது நிகழ்ந்தது என்றாலும் அதன் குறியீட்டுத் தன்மையை எளிதில் புறந்தள்ளி விட முடியாதுதான். அந்தக் குறியீட்டை நுட்பமாக கணித்த அரசியல் மேதை பேரறிஞர் அண்ணா அப்போதே எச்சரித்து, 24.08.1947 திராவிடநாடு வார ஏட்டில் எழுதுகிறார்.

செங்கோல்- ஒரு வேண்டுகோள்

புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாடுதுறை ஆதினகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார். அது ஐந்தடி உயரமாம்! அசல் தங்கத்தால் செய்யப்பட்டதாம்! அழகாகவும் இருக்கிறதாம்! செங்கோல் அளித்தது ஏன்? பரிசா? காணிக்கையா? பாகமா? லைசென்சு கட்டணமா? ஏதும் விளங்கவில்லை.

எதிர்பாரதது! அம்மட்டோ! அவசியமற்றது! அவசியமற்றதாக மட்டும் இருந்தால் பரவாயில்லையே. அதனுள் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளைச் சிந்தித்தால் ஆபத்தன்றோ மெள்ள மெள்ளத் தெரிகிறது.

பண்டிதர் அந்த செங்கோலைக் கண்டு என்ன எண்ணினாரோ, நாமறியோம். ஆதீனகர்த்தா, கோலுடன் வெறென்ன ஓலை தந்தனுப்பினாரோ நாமறியோம். நாம் கூற ஒன்றிருக்கிறது பண்டித நேருவுக்கு. அந்தச் செங்கோலைப் பெற்றுக் கொண்ட உமக்குச் சில சொற்கள்.

பாரிலே உள்ள பல நாட்டு வரலாறுகளை நீர் அறிவீர். முடி அரசன் அவனைச் சுற்றிக் குடிமக்களை உழைக்க வைத்து, அதன் பலனை உண்டு கொழுக்கும் சீமான்கள் பரிவாரம் இந்தத் தங்கக் கோட்டையினுள்ளே, தாராளமாக உலவும் அனுமதியும் வசதியும் பெற்ற மதத்தை முதலாகக் கொண்டோர் உள்ளனர் எனபதை அறிவீர். மக்களாட்சி மலருவதற்கு இத்தகையவர்கள் நீக்கப்பட வேண்டும் என்னும் உண்மையையும் அறிவீர்கள். அறிந்ததை ஆட்சிமுறையிலே புக வைக்க முயலுவீரோ என்கிற அச்சம் கொண்ட ஆதீனகர்த்தாக்கள் செம்பொன்னால் செய்யப்பட்டது மட்டுமல்ல; நவரத்னங்கள் இழைத்த செங்கோலையும் தர முன் வருவர் – தற்காப்புக்காக! அண்ணாவின் இந்த மடலில் செங்கோலின் புனிதமோ, முடிசூட்டும் முறைமையோ பேசப்படவில்லை. மாறாக, மதவாதமும் மதவாதிகளும் தள்ளி வைக்கப்பட்டால்தான் மக்களாட்சி மலரும் என்ற எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் அண்ணாவிற்குத் தெரியும், முடிசூட்டும் தகுதி சூத்திர ஆதீனகர்த்தருக்குக் கிடையாது என்பது. அந்தக் குறியீடு தென்பட்டிருந்தால் அன்றே நேருவைச் சுற்றியிருந்த பார்ப்பனர் கூட்டம் அதைத் தடுத்திருக்கும். அப்படியானால் நேருவிடமிருந்து செங்கோலைப் பறித்து விடும் மோடியின் இழிசெயலும் தோற்றுப் போகிறது. நேருவின் புகழை வீழ்த்தி சாவர்க்காரையும் தன்னையும் அந்த இடத்தில் இருத்திக் கொள்ளும் ஆவல் வியர்த்தமாகவே முடியும்.

பாஜக செல்வாக்கு உயருமா?

இந்தச் செங்கோல், சோழர் மரபு போன்ற சில்லறைப் பேச்சுகள் தமிழ்நாட்டில் பாஜக வின் செல்வாக்கை உயர்த்தி விடுமா? ஒரு போதும் நடக்காது. சோழர்களுக்கும் ஆதீனத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சோழர்கள் வீழ்ந்து இருநூறு ஆண்டுகள் கழிந்தே திருவாடுதுறை உருவானது. சொல்லப் போனால் சோழப் பேரரசு பார்ப்பனர்களைக் கொண்டாடிப் போற்றிய அரசு என்பதை தமிழ்நாடு நன்றாக அறியும். இன்றைய ஜாதிமுறைகள் தீர்க்கமான நிலையை அடைந்தது சோழர்கள் காலத்திலேயே என்பதும் நாடறிந்த செய்தி. தமிழ்நாட்டுக் கடைசிக் குடிமகனுக்கும் அது தெரியும். சைவ ஆதீனங்கள் சோழர்களின் அழிவில் உருவானவை, ஒரு வகையில் பார்ப்பன எதிர்ப்பில் முகிழ்ந்தவை. முதன்மையான ஆதீனமாகக் கருதப்படும் மதுரை ஆதீனம் அசலான பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டது ( இப்போதைய ஆதீனம் மோடி தாசர்தான்). ஆனால் திருவாடுதுறை ஆதீனம் எந்நாளும் பார்ப்பன தாசர்களே. தங்கள் மடத்திலேயே சங்கராச்சாரியாருக்கு தங்கள் இருக்கையைக் கொடுத்து விட்டு அவர்கள் காலடியில் வாலாட்டியபடி அமரும் பிறவிகள். இப்போது பெரும்பான்மை ஆதீனங்கள் மோடியிடம் சரணடைந்தவை. இந்த இழிவுகளிடமிருந்து பெறப்படும் ‘ செங்கோலுக்கு’ வரலாறும் இல்லை, புனித உரிமை ஒருபோதும் பார்ப்பன மதம் அனுமதிக்காது. எனவே அந்தவகையிலும் பயனில்லை. இருப்பிடமான மாயவரத்திலேயே செலவாக்கற்ற சோதாக்கள் இவர்கள். ரம்மி ரவி போன்ற சதிகாரக் கூட்டம் போட்ட மந்திராலோசனையின் விளைவாக இந்த ‘செங்கோல்’ நாடகம் அரங்கேற்றப்படுகிறது. எல்லாம் அம்பலப்பட்டுப் போனதுதான் பரிதாபம்.

உச்சநட்சத்திரம் மோடியும் செங்கோலும்

இனி தற்காலத்து நாடாளுமன்றத் திறப்பு நிகழ்வில் பழைய ‘செங்கோலை’ சூத்திர திருவாடுதுறை ஆதீனம் கொடுக்க ‘ஓபிசி’ ஷத்திரியரல்லாத மோடி பெற்றுக் கொள்வது நடக்குமா? திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பத்தொன்பது ஆதீனகர்த்தர்கள் ஏற்கனவே 27.05.2023 அன்றே தில்லி சென்று இறங்கிவிட்டனர். இன்றைய (27.05.2023 இந்தியன் எக்ஸ்பிரஸ்) நாளிதழில் உம்மிடி பங்காரு செட்டியாருக்கு அழைப்பு வந்திருப்பதாகச் செய்திஉள்ளது. தேவார ஓசை முழங்க இந்த ஆதீனகர்த்தர்கள் ‘செங்கோலை’ மன்னர் மோடிக்கு மகுடம் சூட்டிக் கையில் கொடுப்பார்களா அல்லது நேரடியாக சபாநாயகர் இருக்கையருகே கொண்டு போய் நிறுத்துவார்களா? அதெப்படி முடியும். நம் உச்சநட்சத்திர நடிகர் மோடி அந்தச் செங்கோலை கையில் ஏந்தியபடி, ராணுவ படையணி இசையின் பின்புலத்தில், கம்பீர நடை போட்டு அந்தப் புதிய நாடாளுமன்றத்தின் நடையில் நெடுக நடந்து அதனை அங்கே நிறுத்தினால்தானே வரலாறு உருவாகும். என்ன எதிர்க்கட்சி வரிசையில் இருக்கைகள் காலியாக இருக்கும். அதுவும் வரலாறுதானே.

மே 28 அன்று வேதமந்திரங்கள் முழங்க பிராமண புரோகிதர்களால் அவையில் பிரதிஷ்டை நடந்தது. தமிழ்ப் பெருமையின் சின்னங்களான ஆதீனங்கள் பார்வையாளர் வரிசையில் இருந்து பிரதமர் விழுந்து வணங்கி இந்து ராஜ்ஜியத்தை செங்கேலை நிறுவினார்.

subagunarajan@gmail.com