இத்தாலியின் மிலான்நகர் சிறைச்சாலையை நோக்கி அந்த ரயில் புறப்பட்டது.பகலில் கொடூரமான வெயில்.இரவில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்.எந்த விதமான அடிப்படை வசதியும் அந்த ரயிலில் இல்லை. குளிக்கவும் முடியாது.நல்ல நீரைக் குடிக்கவும் முடியாது.
ஆடு மாடுகளைப் போல அடைத்துக் கொண்டு செல்லப்பட்டார்.

கடுமையான வயிற்றுவலி,உடல் முழுவதும் தடிப்புகள், சிறுநீரகக் கோளாறு, மோசமான காய்ச்சல்,ஜீரணசக்தி முழுமையும் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல்,பனிரெண்டு பற்கள் விழுந்துவிட்டன.கை விலங்குகள் மாட்டப்பட்டு, கூன் விழுந்த அந்த புரட்சிக்காரன் 19 நாட்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்து சிறைச்சாலையை அடைந்தார்.

தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனிதர்களுக்கு மத்தியில்,தன் தேசத்து மண்ணைப் பற்றி மட்டுமே சிந்தித்த மகத்தான மனிதர்.முசோலினியின் பாசிச அரசு அவருக்கு வழங்கிய பரிசு 20 ஆண்டுகள் 4 மாதங்கள்,5 நாட்கள் சிறைத்தண்டனை.அவர் தான் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் அந்தோணியோ கிராம்சி.

பலத்த ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முசோலினியின் ராணுவத் தளபதியைக் கொண்ட நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது.1928 மே 28 முதல் ஜூன் 4 வரை விசாரணை நடைபெற்றது. பாசிசத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய, சமரசமற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் விசாரிக்கப்பட்டனர். கோப ஆவேசத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அரசு வழக்கறிஞர்.

நாட்டில் சீர்குலைவு வேலைகளை செய்யக் கூடியவர்.சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்.அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்யக் கூடியவர்.உள்நாட்டுப் போரைத் தூண்டிவிடக் கூடியவர்.வர்க்க வெறுப்பை மூட்டி விடக்கூடியவர்.குற்ற நடவடிக்கை களை நியாயப்படுத்திப் பேசக்கூடியவர்.இறுதியாகக் கேட்கிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தளபதியே!

ராணுவத்தன்மை வாய்ந்த எல்லா சர்வாதிகாரிகளும்,இன்றோ நாளையோ தூக்கியெறியப்பட்டு, சர்வாதிகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்
படும் என நான் நம்புகிறேன்.அப்படி நிகழும் போது பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கத்தை அகற்றிவிட்டு,அதிகாரத்தின் கடிவாளங்களைக் கையில் எடுத்துக் கொண்டு தேசத்தை மீண்டும் நிர்மானிக்கும் என்றார் கிராம்சி.

ஜியோவானி ஜியோலிட்டி என்பவர் 1904 ம் ஆண்டுகளில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். சோசலிசக் கருத்துகளுக்கும்,அதன் இயக்கத்தினருக்கும் பரம எதிரியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தியவர். இத்தாலியின் தென் பகுதியிலிருந்த சார்டினியாத் தீவில் 1904 முதல் 1910 வரை பல்வேறு போராட்டங்கள் நடந்தது. சுரங்கத் தொழிலாளர்கள்,விவசாயிகள், பல தரப்புமக்களின் போராட்டங்களை சார்டினியா சந்தித்தது.

1910இல் இத்தாலி மீது லிபியா போர் தொடுத்தது.லிபியப் படையெடுப்பால் போர்ச்செலவுகள் அதிகமாயின. விலைவாசி விசம் போல் ஏறியது. தொழிலாளர்கள் திண்டனர். மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. டூரிங் நகரத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் தாக்கத்தை தேசம் முழுமையும் ஏற்படுத்தியது.

தனது சகோதரர் ஜென்னாரோ,ஆசிரியர் ராஃபா கார்சியா,இத்தாலி கம்யூனிஸ்ட் தலைவர் பல்மிரோடோல்யாட்டி ஆகியோருடன் நடத்திய விவாதங்களும், தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் தாக்கங்களும்,கல்லூரி படிப்பில் இருந்த கி்ராம்சியின் அரசியல் பார்வையில் தீரமானகரமான முடிவுக்கு வரவழைத்தது. ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் ஒரு மனம்.ஒரு பிரக்ஞை.அதாவது அவன் வரலாற்றின் விளை பொருள்தானேயன்றி இயற்கையின் விளை பொருள் அல்ல. சுரண்டுவோர், சுரண்டப்படுவோர்,செல்வத்தைப் படைப்போர்,தன்னலத்துடன் அதை நுகர்வோர் ஆகயோர் எப்போதுமே இருந்து வந்துள்ளனர். எனினும் சோசலிசம் ஏன் உருவாகவில்லை என்பதை விளக்குவதற்கு வேறொரு வழியுமில்லை.

மனிதன் தனது மதிப்பைப் பற்றிய உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணர முடிந்துள்ளது. இத்தகைய உணர்வு பௌதீக ரீதியான உடல் தேவைகளிலிருந்து பிறப்பதல்ல. மாறாக, அறிவார்ந்த சிந்தனையிலிருந்து பிறக்கிறது. முதலில் ஒரு சிலரும், பிறகு அனைத்து சமூக வர்க்கங்களும் இதைப் பெறுகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட சமூக உண்மைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, ஒடுக்கு
முறை கட்டமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் புரிந்து கொண்டவர்கள்.

இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு புரட்சிக்கு முன்பும்,சமூகம் பற்றிய விமர்சனம், பண்பாட்டு மாற்றங்கள் ஆகியன தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதாகும். பண்பாடு என்பது முற்றிலும் வேறானது. அது ஒருவன் தன் ஆன்மாவை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்துவது. ஆளுமையை முழுமையாக உணர்ந்து கொள்வது. உயரிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வதாகும். வரலாற்றில் தான் வகிக்கும் இடம், வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய பணி, தனக்குள்ள கடமைகள், உரிமைகள் ஆகியவற்றை அவன் புரிந்து கொள்ள உதவக்கூடியதாகும் என்றார் கிராம்சி.”புதிய அமைப்பு” என்ற பத்திரிகையில் கட்டுரைகள், கலை, இலக்கியம்,பண்பாடு குறித்த குறிப்புகள், விமர்சனங்கள், ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதினார்.

1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு உலகமெங்கும் அதன்தாக்கம் எழுந்த நேரம்.இத்தாலியிலும் அது போன்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தொழிற்சாலை கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை அதிகாரமாக தொழிற்சாலை கவுன்சில்கள் செயல்படும் என்று கிராம்சி எழுதினார்.புதிதாக உருவான சோசலிச நாடுகளை ஒழிப்பதற்கென்று 144 முதலாளித்துவ நாடுகள் களமிறங்கின.

இதை எதிர்த்த போராட்டம் இத்தாலியிலும் நடைபெற்றது. கிராம்சி முதன் முறையாக கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தாலி சோசலிஸ்ட் கட்சி பொறுப்பாளராக செயல்பட்ட கிராம்சிக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பாசிசத்தைப் பற்றி, சர்வதேச நிலைமைகளைப் புரிந்து கொள்வதைப் பற்றி, தீவிர இடதுசாரி கொள்கைகள் பற்றி, மாற்றத்திற்கான நடைமுறை தந்திரங்களை உருவாக்குவது பற்றியே கருத்து மாறுபாடு ஏற்பட்டது.

1920 மாஸ்கோவில் நடைபெற்ற மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. கட்சி புனரமைப்பு குறித்த கிராம்சியின் கருத்திற்கு தோழர் லெனின் ஆதரவு தெரிவித்தார். கிராம்சியின் கருத்துகளோடு தோழர் லெனின் உடன்பட்டிருந்தார். கருத்து வேறுபாடுகள் தொடர்ந்ததன் காரணமாக சோசலிஸ்ட் கட்சியிலிருந்து விலகி 1921இல் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 1922இல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிற்கு இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கிராம்சி பங்கேற்றார்.
“முன்னேறுக” என்ற சோசலிஷ்ட் பத்திரிகையின் ஆசிரியராக, இளம் புரட்சியாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் தான் முசோலினி. அதே முசோலினியால் 1919 ல் பாசிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. ரோமர்கள் காலத்தில் இத்தாலியை ஆட்சி செய்த சர்வாதிகாரி சிஞ்சினாத்தி (CINCINNATI). அவன் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாகக் கையாண்டது கோடாரி.

கோடாரிக்கு லத்தீன் மொழியில் பாசெஸ் (FASCES) எனப் பெயர். இந்த பாசெஸ் என்ற ஆயுதத்திலிருந்து தான் பாசிசம் என்ற சொல் உருவானது. இத்தாலியின் முசோலினி தனது கட்சிக்கு பாசிசக்கட்சி என்றே பெயர் வைத்தான். பாசிசத்தின் கோட்பாடு யாதெனில் ஒரு போலித்தனமான தேசிய உணர்வை வெகு மக்களுக்கு ஊட்டி, பிற தேசிய இனங்களை ஈவு இரக்கமின்றி வெட்டி அழிப்பது.

முசோலினி பாசிசம் என்பதை தேர்வு செய்யக் காரணம் யாதெனில் மன்னர்களுக்கு எதிராக மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆட்சியாகவும்,பழம் பெருமை பேசும் தேசியமாகவும் அவரது கட்சி இருந்தது. ரோமர்கள் காலத்தில் எமது இத்தாலியர்கள் உலகையே ஆண்டார்கள்.லத்தீன் மொழி தான் மூத்தமொழி. பிற மொழிகள் அதிலிருந்தே உருவானது. அத்தகைய இத்தாலி இனம்
மீண்டும் எழ வேண்டும் என்ற சிஞ்சினாத்தியின் கருத்தே முசோலினியின் கருத்தாகவும் இருந்தது.இதுவே இத்தாலி மக்களுக்கு வெறியூட்டும் பிரச்சாரமாகவும் செய்யப்பட்டது.

1922இல் அதிகாரத்திற்கு வந்த முசோலினியால் ஜனநாயக சக்திகள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன.அரசு ஆதரவுடன் பாசிஸ்ட் வெறியாட்டம் நடந்தது. எல்லை தாண்டுவோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அரசை எதிர்த்தால் இத்தாலியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பத்திரிகைகள் மிரட்டப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் மாட்டியோட்டி என்பவர் முசோலினியைத் தாக்கிப் பேசியதால் கொலை செய்யப்பட்டார்.

சோசலிஸ்ட்,கம்யூனிஸ்ட் தலைவர்கள் தாக்கப்பட்டனர்.பலர் கைது செய்யப்பட்டனர். முசோலினியின் காட்டு தர்பார் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தொடர்ந்தது. பாசிசத்திற்கு எதிராக கிராம்சியின் கடுமையான முயற்சியால் சோசலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் இணைந்த கூட்டுக் கமிட்டி உருவாக்கப்பட்டது. கிராம்சிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல் படி ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் தங்கி,இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை வழி நடத்தினார்.

முசோலினியின் பாசிஸ்ட் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட கம்யூனிஸ்ட்கள் மட்டுமே முன் வந்தனர்.சிலர் பாசிசத்தோடு சமரசம் செய்தனர். பாசிசம் தன் கூட்டாளிகளுக்கு எப்போதும் சம உரிமை வழங்காது. அதனுடைய அமைப்பும் அதற்கு இடம் கொடுக்காது. பாசி
சத்திற்குத் தேவை விலங்குகள் பூட்டப்பட்ட அடிமைகள் தான் என்றார் கிராம்சி.

இத்தாலி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.ஆஸ்திரியா நாட்டில் இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யக்கூடாது என சட்டம் இருந்தது.1924 வியன்னாவிலிருந்து இத்தாலி புறப்பட்டார் கிராம்சி.இத்தாலிய சமூகத்தின் சீரழிவைக் குறிக்கும் ஒரு அரசியல் போக்காகவே பாசிசம் அங்கு மாறியிருந்தது.

பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தொடங்கினார். 1925 மே 26 நாடாளுமன்றத்தில் முசோலினியும் கிராம்சியும் நேரடியாக மோதினர்.நீங்கள் அரசை வென்றுவிடலாம். சட்டப் புத்தகங்களை மாற்றி எழுதிவிடலாம். இந்நாள் வரை எந்த வடிவங்களில் அமைப்புகள் நிலவி வந்தனவோ அந்த வடிவங்களில் தொடர்ந்து அவை நிலவாமல் செய்துவிடலாம்.

ஆனால் உங்களின் நடவடிக்கைகள் கூட நிர்ணயிக்கிற யதார்த்த நிலைமைகளை வெற்றி கொண்டுவிடலாம் எனக் கனவு காணாதீர்கள். இந்த தேசத்தின் புரட்சிகர சக்திகளை யாராலும் ஒரு போதும் தகர்த்துவிட முடியாது. பாசிஸ்டுகளே! உங்கள் தீய கனவுகள் ஒரு போதும் நனவாகி
விடாது என்று கர்ஜனை செய்தார் கிராம்சி. அவரது நாடாளுமன்ற முதல் பேச்சும், கடைசிப் பேச்சும் இதுதான். அவரது பேச்சிற்காக முசோலினி கை குலுக்க முயன்றார். இழிவான கரத்தோடு இடர்நீக்கும் கரம் கை குலுக்க மறுத்தது. இவரை வெளியே விட்டால் பேராபத்து என பாசிசம் உணர்ந்தது.1926 நவம்பர் 26 இரவு 10.30 மணிக்கு கிராம்சி கைது செய்யப்பட்டார்.அவனின் சிந்திக்கும் ஆற்றலை சிதைத்துவிடுங்கள் என்பதே முசோலினி இட்ட உத்தரவு. தோழர்.கிராம்சி சிறையில் இருந்தபோது 32 குறிப்பேடுகள், 2848 பக்கங்கள்,தட்டச்சில் 4000 பக்கங்கள் எழுதினார்.சிறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே எழுத அனுமதிக்கப்பட்டது. அதில் சமூக அடித்தளம்- மேற்கட்டுமானம் குறித்த அவரது ஆய்வுகள் முக்கியமானது.

பொருளியல் என்பது அடித்தளம்.

சாதி மதம் மொழி அறம் கல்வி போன்றவை மேற்கட்டுமானம். ஆளும் வர்க்கத்தின் பொருளியல் தளத்தைப் பாதுகாக்கவே மேற்கட்டுமானம் செயல்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினருக்கானதாய் மாற்ற வேண்டுமெனில் இவை அதற்கேற்ப தகர்த்தெறியப்பட வேண்டும் என்பதே அவர் ஆய்வு.

அரசு என்பது தனது ஆட்சியை வன்முறை,அடக்குமுறை, பலவந்தம் ஆகியவற்றின் மூலமே சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, தனது மேலாண்மைக்கான ஏற்பையும்,இசைவையும் அது மக்கள் மத்தியிலிருந்தே பெற்றுக் கொள்கிறது என்று வரையறுத்தார் கிராம்சி.சிறை அதிகாரிகளின் தணிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மறைமுகமான வார்த்தைகளைத் தனது குறிப்புகளில் பயன்படுத்தினார்.
தோழர் லெனினை ‘இலியச்’ என்றும் வர்க்கங்களை ‘சமூக குழுக்கள்’ என்றும், செயல் திட்டத்தை ‘நவீன இளவரசன்’ என்றும் மார்க்சியத்தை ‘நடைமுறை தத்துவம்’ என்றும் குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்துப் பணிக்கு சிறையில் காவலர்களால் தொடர்ந்து இடையூறுகள் செய்யப்பட்டது. சிறிது நேரம் கூட தூங்கவிடாமல் பெரும் ஒலி எழுப்பி தூக்கத்தைக் கெடுத்தனர். அவர் எழுதிய குறிப்புகள் அனைத்தையும் பாதுகாத்தவர் அவருடைய மனைவியின் சகோதரி டாட்டியானா.

1937 ஏப்ரல் இறுதியில் அவருடைய தண்டனை காலம் முடிகிறது. பாசிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி அவருடைய தண்டனை 12 வருடங்கள் 4 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.அவரை சிறையிலிருந்து தப்பிக்க வைக்க இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்தது.ஆனால் தொடர்ந்து வேறு வேறு சிறைகளுக்கு அவர் மாற்றப்பட்டதால் இயலாமல் போனது.

கிராம்சியின் விடுதலைக்கான போராட்டம் தேசம் எங்கும் நடந்தது. தொழிலாளர்கள் ஆலைகளில் விடுதலை கோரிய வாசகங்களை தினந்தோறும் எழுதினர். சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் அவர் விடுதலைக்கான இயக்கத்தை நடத்தியது. போதிய மருத்துவ வசதி தரப்படவில்லை.பற்கள் அனைத்தும் விழுந்தன.காசநோய் பாதிப்பால் முதுகெலும்பு அரித்துக் கொண்டிருந்தது. முதுகு தசைகளில் கட்டிகள்,ரத்த நாளங்கள் தடித்துவிட்டன. ஒரு புழுவைப் போல் துடித்தார்.இருப்பினும் மன உறுதி தளரவில்லை. எழுதிக் கொண்டே இருந்தார்.

அவரது விடுதலையை உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த நேரம்.1937 ஏப்ரல் 30 விடுதலை செய்யப்பட வேண்டும். மூன்று நாட்களுக்கு முன்பாக 1937 ஏப்ரல் 27 காலை 4.10 க்கு ரத்தநாளங்கள் வெடித்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 46. அவரது மரணம் இயற்கையானதல்ல என்று பிறகு தெரிய வந்தது.

சிறையில் இருந்த போது அவர் தாய் இறந்தார்.தாயின் இறப்புச் செய்தி அவர் இறக்கும் வரை தெரிவிக்கப்படவேயில்லை. தன் மனைவியையும்,இரண்டு மகன்களையும் பார்க்க முயன்றார். அவரது கைதுக்குப் பிறகு அவர்கள் மாஸ்கோவில் இருந்ததால் கடைசிவரை பார்க்க முடியவில்லை. தம்பி கார்லோவும்,அவரது மனைவிடாட்டியானா மட்டுமே உடலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவரது இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது தந்தை அடுத்த இரண்டு வாரங்களில் இறந்தார். கிராம்சி இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகே அவரது சிறைக்குறிப்புகள் 1957இல் வெளியிடப்பட்டது.

1937 ஏப்ரல் 27 கிராம்சி சிறைக்குள் கொல்லப்பட்டார்.

தோழர்கள் பாசிசத்தைப் பலி தீர்க்கும் காலத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

அது தனிநபர் பகை தீர்த்தல் அல்ல.

வர்க்கப் பகை தீர்த்தலுக்கான வாய்ப்பாகவும் இருக்க வேண்டும். தோழர் கிராம்சி கொல்லப்பட்ட அதே ஏப்ரல் 27 /1945 அன்று கம்யூனிஸ்ட்களால் முற்றுகையிடப்பட்ட முசோலினி தனது காதலியுடன் தப்பினான். ஒரு ட்ரக்கரில் தப்பிச் செல்வதாக தோழர்களுக்குத் தகவல் பறந்தது. இருவரும் சிக்கினார்கள்.

தைரியமிருந்தால் என்னைச் சுடுங்கள் என்றாள் முசோலினியின் காதலி.
அவள் வேண்டுகோளை உடனே நிறைவேற்றினர் தோழர்கள்.

அடுத்து உலகையே மிரள வைத்த முசோலினி தோழர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். இருவரையும் சுட்டுக் கொன்று தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டனர். 17,000 பேரைச் சிரச்சேதம் செய்தவன் முசோலினி.

ஒரு கொல்லனின் மகன்.

உலகையே மிரட்டிய ஹிட்லரும் முசோலினியும் அடுத்தடுத்து கொல்லப்பட இந்திய விடுதலைப் போரையும் முடிவுக்குக் கொண்டுவர வெள்ளை ஏகாதிபத்தியம் திட்டமிட்டது.

ஏகாதிபத்தியமும் இந்தியப் பெரு முதலாளிகளும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்திய விடுதலையாகவும் அமைந்தது. இந்தியப் பெரு முதலாளித்துவம் காந்தியக் கப்பலில் பயணித்தது. அக்கப்பல் கறை ஒதுங்கிக் கிடக்கிறது.

இந்தியாவில் இப்போது பாசிசப் பனிக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்தியப் பெரு முதலாளிகள் பாசிசப் படகில் தங்கள் பயணத்தை தொடர முயற்சிக்கிறார்கள். அது பார்ப்பனீய ஆதிக்கச் சிந்தனையை மீட்டெடுக்கும் பனிப்புயலாக மாறும் வாய்ப்பும் அதிகம் உண்டு.ஏனெனில் பெரு முதலாளித்துவத்தால்தான் சமூகத்தில் எல்லா வகையான சீரழிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

அதை எதிர்கொள்ளும் புதிய ஆற்றல் இங்கு புறப்படும்.

ஹிட்லருக்கும் முசோலினிக்கும் பரிசளிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளின் மிச்சம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்திய பாசிஸ்டுகளுக்கு அது பரிசாக நிச்சயம் வழங்கப்படும். அதற்கான இளம் புரட்சியாளர்கள் இந்திய சமூகத்தில் உருவாகுவார்கள்.

ஏழு வயதிலேயே கூன் விழுந்த உடல்.கூன் நிமிர்வதற்கு தினமும் சில மணி நேரம் வீட்டின் விட்டத்தில் தொங்கவிடப்படுவார். வறுமையில் வாடிய குடும்பம்.படிப்பதில் ஆர்வம் உள்ள அவரால், அரசியல் காரணங்களுக்காக தன் தந்தை சிறைப்பட்ட நிலையில் 11 வயதிலேயே பதிவாளர் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றார். தந்தையின் விடுதலைக்குப் பிறகு 1911இல் டூரிஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

தந்தை பிரான்செஸ்கோ.தாய் பெப்பினோ மர்சியாஸ்.இரு சகோதரிகள்.ஒரு அண்ணன்.இரண்டு தம்பிகள். ஐந்து பேரில் நான்காவது பிள்ளை அவர்.தன் உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் எந்தப் பெண்ணிடமும் காதல் வயப்பட்டதில்லை. மாஸ்கோவில் கிராம்சியைக் கவர்ந்தவர் ஜூலியா. இத்தாலியின் சார்ட்டினியா தீவிலுள்ள அலெஸ் எனும் கிராமத்தில் 1891 ஜனவரி 23இல் பிறந்தவர்.

கிராம்சிகள் ஆயிரமாயிரமாய் இவ்வுலகில் தினமும் பிறப்பார்கள். இந்தியப் பாசிசம் வீழ்வது இந்தியாவில் வீழும் தனி நிகழ்வாக இருக்காது. உலக அரசியலின் ஒரு அங்கமாகவே நிகழும். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் இந்தியா விடுதலை பெற்றதைப் போல.

xaviersuji@gmail.com