இடும்பன் மலை அடிவாரத்தில் அருவா பாண்டி, வினிதாவைச் சந்திப்பதற்காகக் காத்து நின்றிருந்த போதுதான், அவனை ஏழுபேர் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அந்த முற்றுகை நடந்து சுமார் நான்கு வருடங்கள் இருக்கலாம். கருப்பு வெள்ளை காட்சியாகவே அது பலரது நினைவுகளில் இருந்து அகன்று விட்டது. ஆனால் அந்தச் சமயத்தில் ஊரே அதைப் பற்றித்தான் பேசியது.

“ஏழு பேரு சுத்தி வளச்சுட்டாங்க. இவன் அன்னைக்கு பார்த்து பொருளைக் கொண்டு போகலை. முடிந்த மட்டுக்கும் கீழே கிடந்த கட்டையொன்னை எடுத்து வீசிப் பாத்துருக்கான். அதெல்லாம் அருவாள் முன்னாடி நிக்க முடியுமா? காலுல மூணு வெட்டு. முகத்தைப் பிளக்கற மாதிரி வெட்டு விழறப்ப அவன் நல்ல நேரம் தலையைப் பின்னுக்கு இழுத்துக்கிட்டான். அதுனால தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு. முகத்தில வலது பக்கத்தில கண்ணுக்கு கீழ ஆழமா ஒருகோடு. அந்தத் தழும்பு அவம் வாழ்க்கை வரைக்கும் தொடரும். அந்த தழும்பு இல்லாட்டி உசுரு போயிருக்கும்” என்றார் மருத்துவமனையில் நின்ற பெரியவர் ஒருத்தர்.

இந்தக் கதை அருவா பாண்டி படுத்திருந்த படுக்கையில் இருந்து கிளம்பி அவரை வந்து சேர்ந்திருந்தது. இந்த வெட்டுத் தழும்பிற்கு முன், அவனைப் பற்றிய அரிவாள் கதைகளும் ஏராளமாகஊருக்குள் புழங்கின.

கொலை வழக்கு வாங்கவில்லையே தவிர, அடிவாரத்தில் நிறைய அடிதடிகளில் அருவா பாண்டியின் பெயர் காவல்நிலைய ஆவணங்களில் இருக்கிறது. அடிவாரத்தில் கடை எடுத்தவர்களுக்கு இடையே நிறையத் தொழில் பிணக்குகள் வந்தபடியே இருக்கும். அதைத் தீர்க்க எந்நேரமும் காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருக்க முடியாது. அது வியாபாரத்திற்குப் பிடித்த சீக்கு என்பதால், சண்டைகள்,தீராப் பிணக்குகளில் உடனடி தீர்வை கோரிக் குறுரௌடி
களைப் பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அப்படி ஒரு ஆள்தான் அருவா பாண்டி. ஆள் பார்ப்பதற்கு அந்தக் காலத்து விஜயகாந்த் மாதிரி இருப்பான். கருகருவென இருந்தாலும், வட்டமான, வடிவான முகம் அவனுக்கு. அடிவாரத்தில் பெண்கள் அவன் நடந்து போகையில் திரும்பிப் பார்ப்பார்கள். ஆளும் கொஞ்சம் குள்ளம்தான், ஆனாலும் செக்கு செய்யும் வாகை மரக் கட்டையைப் போல நெஞ்சு பலம்கொண்டு விரிந்திருக்கும். சண்டை என்று வந்துவிட்டால், அவன் எதிரே வரும் ஆட்களை ரெண்டாயிரம் கிலோ எடையிருக்கிற காட்டு மாடு முட்டுவதைப் போல மோதித் தூக்குவான் என எல்லோரும் சொல்வார்கள்.

சிவகங்கையில் இருந்து குடிவந்த குடும்பம், வளையல் பாசிக் கடையைப் போட்டது. அதில் இரண்டாவது பையன்தான் பாண்டி. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாகத்தான் கடையில் ஒத்தாசையாக இருந்தான். ஆனால் சேர்க்கை யாரை விட்டது? பன்னெண்டு வயது இருக்கும் போதே பான்பராக் போடப் பழகிக்
கொண்டான். அருவாவிற்கும் அவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நியாயமாக அவனுக்குப் படங்களில் வைப்பதைப் போல, பான்பராக் பாண்டி என்றுதான் வைத்திருக்க வேண்டும்.

எவனோ கிளப்பி விட்ட வகையில் அருவா பாண்டி என்ற பெயரே நிலைத்து விட்டது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஏழை எளியவர்களைப் பார்த்தால், “இந்தாண்ணே போயி ரொட்டி வாங்கி சாப்பிடு” எனக் கையில் இருப்பதைக் கொடுத்து விட்டே போவான். இந்த மாதிரி விஷயங்களில் அவன் தன்னை விஜயகாந்த் மாதிரியே பாவித்துக் கொண்டான். கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால், கட்டியணைத்துக் கண் கலங்குவான்.

இந்தக் காட்சியைப் பேருந்தில் போய்க் கொண்டிருந்த அந்த வினிதா பிள்ளை பார்த்திருக்குமோ என்னவோ? அவன்தான் வேண்டும் எனக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டது. அடிவாரத்தில் தோழிகள் வழியாக அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டு அலைந்திருக்கிறது. இந்தச் செய்தி அருவா பாண்டியின் வட்டாரத்தை அதிர்ச்சியுறச் செய்து விட்டது. ஆமாம், அதிர்ச்சியுறத்தான்.

ஊரிலேயே பணக்கார வீட்டுப் பெண். அதுவும் வெளியூரில் மருத்துவப் படிப்புப் படிக்கிறது. அடிவாரத்தில் போக்கிரித்தனம் பண்ணுகிற பாண்டியோடு காதல் என்று சொன்னால் நன்றாகவா இருக்கும்? அப்படித்தான் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டார்கள். ஆனால் பாண்டியும் ஒற்றைக் காலில் நின்று அவளைத்தான் காதலிப்பேன் என முடிவு எடுத்து விட்டான். “ஏன் நானென்ன கொலைகாரனா? வியாபாரிகளுக்கு காவல்காரந்தானே? நாளைப் பின்னே அவங்க வியாபாரத்துக்கு சிக்கல் வந்தாலும் நாந்தானே போயி நிக்கணும்? எதுவந்தாலும் பாத்துக்கலாம். தேடி வர்றதை வெறுங்கையோடு திருப்பி அனுப்பற பழக்கம் என் வம்சத்திலேயே இல்லை” எனக் கண்கள் சிவக்க வசனம் பேசினான்.

வினிதாவின் தோழிகளுமே இதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டனர். “அவண்ட்ட அப்படி என்ன இருக்கு?” என்றாள் ஒருத்தி. பேருந்து சன்னலோரம் காற்று தலைமுடியைக் கோதிக் கலைத்த வேளையில் தோழியைத் திரும்பிப் பார்த்து, “கருணை” என்றாள் வினிதா. அவளொரு கவிதைக் கிறுக்கு என்பதால் தோழி
அதற்கு மேல் பேசாமல், கொஞ்ச நாளில் அது, அதுபாட்டிற்கு இறங்கி விடும் என நினைத்து அப்படியே விட்டு விட்டாள்.

பாண்டியோடு அடிவாரத்தில் தலையில் துப்பட்டாவைப் போட்டு மூடிக் கொண்டு அலைவாள் வினிதா. பாண்டியின் கூட்டாளிகளுக்கு அவளைக் கண்டால், அவ்வளவு பிரியமாக இருக்கும். பணக்கார வீட்டு நாய்க்குட்டி குடிசைக்கு வந்தால், கையில் கிடைக்கிற பொட்டுக் கடலையைப் பாசமாகக் கொடுப்போமே, அப்படி? ஏதோ மகாலட்சுமியே படியேறி வீட்டுக்குள் வந்தமாதிரி கையெடுத்துக் கும்பிடுவார்கள். அவளது வருகையை அடிவாரப் போக்கிரி சமூகத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதினார்கள்.

பாண்டி அவளை மலைக்குக் கீழே நிறுத்தி, கண்களைக் கூர்ந்து பார்த்து, “சும்மா வெளாட்டுக் காரியம் இல்லை இது. இதயத்தில ஆணியில கீறி எழுதறது. ஒருநாளும் நான் மாற மாட்டேன். எந்நாளும் என் கூட இருப்பீயா? மலைமேல இருக்க அந்தசாமி சாட்சி” என்றான். கண்கள் கலங்க அவனது கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள். என்ன சொல்வது என்று தெரியாமல் பாண்டியும் கண்கலங்கினான். சற்றே விசும்பவும் செய்தான். பின் தன்னைத் தேற்றிக் கொண்டு, “எண்ட்ட எது உனக்குப் பிடிச்சது ரெம்ப” என்றான். அவனது தோளில் சாய்ந்து கண்களை உயர்த்திப் பார்த்து, “உன்னோட முகம்” என்றாள். பாண்டிக்கு அந்தச் சூழல், அன்றுமலர்ந்த மல்லிகையைப் போலப் புதிதாகவும் பரவசமாகவும் இருந்தது. ஒருநாளும் அம்மலர்ச்சியைத் தவறவிடலாகாது எனத் தீர்மானம் எடுத்தான்.

அதற்கடுத்து நடந்தது எல்லாமே வழக்கமான பஞ்சாயத்துகள்தான். விஷயம் தெரிந்த பிறகு, பணக்கார வீடு என்றால், சும்மா இருப்பார்களா? பெரிய பெரிய ஆட்களை அழைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். “தம்பிகளா, நல்லா யோசிச்சு பாருங்க. உங்களுக்கே சிரிப்பு வரலீயா? உச்சியும் அடிவாரமும் ஒண்ணா? கட்டிப் போட்டிருக்க நாய் எலும்புத் துண்ட கண்டு தெருவுக்கு வந்துருச்சு. ஒருநாள் குண்டி காஞ்சிருச்சுன்னா மறுபடியும் வீட்டுக்கு ஓடிப் போயிரும். பழைய மாதிரி ரசத்தையும் சோத்தையும் திங்க பழகிக்கும். அடிமட்டத்தில இருந்து அடிபட்டு வந்தவங்க உங்களுக்கு அது தெரியாதா?” என்றார் பாண்டிக்கு மிகவும் வேண்டப்பட்ட, பஞ்சாமிர்த கடை வைத்திருக்கிற முக்கியமானவரே.

“ஏன் குடிசையில நல்ல சோறு கிடைக்காதா? கூப்டு வாடா. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்” என்றான் வடைக் கடை போட்டிருக்கும் பாண்டியின் அண்ணன். அவன் அதற்கு முன்வரை ஊரில் அப்பு ராணி எனப் பெயர் எடுத்தவன். அவனே சீறியதில், வந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள். கடைசியில் பெண்ணின் அப்பாவே நேரில் வந்தார். நாளைப் பின்னே மாமனார் முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும் என்பதால், பாண்டி பேசப் போக மறுத்து விட்டான். “காசு பணத்துக்கெல்லாம் நான் ஆசைப்படலை. நம்பி வந்திருக்க பொண்ணு. என்னைக்கும் கைவிட மாட்டேன். நானே படிக்க வச்சிருவேன்” என்று சொல்லி அனுப்பினான்.

வழக்கம் போலவே அது அவளது வீட்டிலும் நடந்தது. வீட்டிலிருந்து வெளியே போவதற்கு அனுமதிக்கவில்லை. கல்லூரிக்குக் கூட காரில்தான் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் வீட்டிற்குள் ஒரு புழுவைப் போலத் துடித்துக் கொண்டிருந்தாள் புனிதா. அம்மா இல்லாத பெண் என்பதால், ஏகப்பட்ட உணர்வு ஏற்ற இறக்கக் கோளாறுகள்வேறு அவளுக்கு. அதெல்லாம் அவளது தந்தைக்கும் தெரிந்ததுதான். வேறு யாரைக் காட்டினாலும் கட்டி வைத்திருப்பார். போயும் போயும் ஒரு ரௌடிப் பயலையா? அவரது உள்ளமுமே கொதித்தது.

எது அவளை அப்படிச் செய்ய வைத்தது என இரவுகளில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே யோசிப்பார். அம்மா இல்லை என்பதைத் தவிர வேறு எதுசார்ந்தும் குறை வைத்தது இல்லையே? என நெஞ்சைத் தடவிக் கவலை கொள்வார். கடைசியில் ஒரு ஆணாகவும் அந்தக் கேள்வி வந்தது அவருக்குள். எதற்காக இந்தப் பெண்கள் எல்லாம் இந்த ரௌடிப் பயல்களையே விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள்? சினிமா கெடுத்து வைத்திருக்கிறதா அல்லது இவர்களைப் பார்த்து சினிமா கெட்டு விட்டதா? இதுமாதிரி நாலைந்து கதைகளை வெவ்வேறு வீடுகளில் கேட்டு விட்டார். அவர் பொண்ணும் அதில் விதிவிலக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டார்.

கொஞ்சநாள் தாக்காட்டினால், யாரையாவது பெரிய தலையைச் சிபாரிசு பிடித்து அவனிடம் பேசி வெட்டி விட்டு
விடலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான் பாண்டியின் முகத்தில் வெட்டு விழுந்தது.

அந்த ஏழுபேர் யார்? அந்தக் கேள்வி அடிவாரத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வெளியேறியது. நிச்சயம் பெண் வீட்டார்தான் ஆட்களை ஏற்பாடு செய்து சம்பவம் பண்ணியது எனப் பாண்டி தரப்பு உறுதியாக நினைத்தது. ஆனால் பாண்டி அப்படி எண்ணவில்லை. கொலை அளவிற்கெல்லாம் போகிற தைரியம் நிச்சயம் வினிதா குடும்பத்திற்குக் கிடையாது என வலியில் முனகிக் கொண்டே சொன்னான்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்பாவின் முன் நின்று கொந்தளித்து ஆடிவிட்டாள் வினிதா. கோபப்படுவாள்தான், ஆனால் பக்கத்தில் போனால் இழுத்துப் பிடித்துக் குரல்வளையைக் கடித்து விடுகிற நிலையில் இருப்பதை முதல்தடவையாகச் சந்தித்தார். அந்தச் சூட்டைத் தாங்கமுடியாத அவளுடைய அப்பா நடுங்கினார்.

அத்தைகளுட்பட எவர் தடுத்தும் கேளாமல், மருத்துவமனைக்கு பாண்டியைப் பார்க்கக் கிளம்பினாள். போவதற்கு முன்பு, “இப்ப நடிக்கிறீங்க. நீங்கதான் செஞ்சீங்கன்னு எனக்குத் தெரியும். அவனோடவே போயிடறேன். கொல்லணும்னா என்னையும் சேர்த்துக் கொன்னுடுங்க” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.

படுக்கையில் இருந்த பாண்டி கைக்கு அடக்கமான, பச்சை ப்ளாஸ்டிக் சட்டகம் போட்ட கைக்கண்ணாடியை வாங்கி முகத்தைப் பார்த்தான். நிறையக் கோடுகளை நிறைய பேருக்கு போட்டவன் என்பதால், தன்னுடைய முகத்தில் விழுந்த கோட்டின் ஆழத்தை எடை போட்டான். வலது கண்ணிற்குக் கீழே இருந்து கழுத்து நுனிவரை அரிவாளின் நுனி அரை அங்குலத்துக்கு இழுத்துக் கொண்டு போயிருக்கிறது.

தையல் போட்டது அவனுக்கு நன்றாகத் தெரியும். நிச்சயம் அந்தத் தழும்பு, வலது பக்கத்தில் நரம்பு இழுத்துக் கொண்டது போல அரை கன்னத்தை மறைத்து முகம் காட்டும் எனப் பாண்டிக்குத் தெரியும். நன்றாக விளைந்த தென்னங்காயில் குறுக்காக சொறி விழுந்த பட்டைக்கோடு ஒன்று இருப்பதைப் போல. சந்தையில் அவற்றை அடிவாங்கிய காய் என்பார்கள். அதைப் போலத்தானே அவனும் வாங்கி இருக்கிறான்? வாழ்நாள் முழுக்க இனி அந்தத் தழும்பு அவனை விடாமல் துரத்தும். அவனுக்கு அவனுடைய முகத்தைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. யார் செய்திருப்பார்கள் அதை என்கிற துப்பு அவனுக்கும் துலங்காமலே போனது.

மருத்துவமனையில் வினிதா வந்து நின்ற போது எல்லோரும் கூடி அழுதார்கள். ஆனால் அவள் கண்ணில் இருந்து துளிக் கண்ணீர் வரவில்லை. நேரே
போய் அவனது கட்டிலில் போய் அமர்ந்ததும் எல்லோரையும் வெளியே போகச் சொன்னான் பாண்டி.

அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “நல்லா இருப்ப. நான் சொல்றதைக் கேளு. காலம் பூரா நெஞ்சு அழுத்தத்தோட வாழற மாதிரி வச்சுராத என்னை. நீயி பூ மாதிரி இருக்க. என்கூட வெளியிலகூட உன்னால நடந்துகூட வர முடியாது. இந்த மூஞ்சியை அதுவும் இந்த வெட்டுத் தழும்போட பார்க்கறவங்க, நிச்சயமா
குரங்கு கையில பூமாலைன்னுதான் சொல்வாங்க. முன்னால அடிக்கப் பாஞ்சிருவேன். இப்ப சரியாத்தானே சொல்றாங்கன்னு நினைக்கத் தோணுது. தயவுசெஞ்சு உன் வீட்டோடயே போயிரு” என்றான்.

“உன் பழைய முகம் என் நெஞ்சிலயே பதிஞ்சிருக்கு. நான் அதைத்தான் லவ் பண்ணேன். இனியும் அதைத்
தான் லவ் பண்ணுவேன். இதுக்கு மேல உன்னை மாதிரி எல்லாம் எனக்கு பேசத் தெரியாது” என்றாள். அவளது முகத்தில் இருந்த தீர்மானம் பாண்டியை அசைத்துப் போட்டது.

அவன்மீது விழுந்த வெட்டு குறித்து அவனாகப் போய்த் தோண்ட வேண்டாம் என முடிவு எடுத்தான். அவளுமே அதை ஒரு கெட்ட நேரமாகக் கருதி விட்டொழிக்கச் சொன்னாள். சொல்லிவைத்த மாதிரி அந்த வெட்டிற்குப் பிறகு பாண்டியைச் சுற்றி அபாயங்களே எழவில்லை. வினிதா படித்து முடிக்கிற வரையிலான கல்லூரிக் கட்டணத்தை வட்டிக்கு வாங்கி கட்டி முடித்தான். “நாளைப் பின்ன நம்ம சூழல் மாறினாலும் மாறிடும். இப்பயே முழுத் தொகையையும் கட்டிரணும். பீஸுக்கு பயம் இல்லைன்னு தோணிட்டா படிக்கிறவங்களால நல்லா இன்னும் தெம்பா படிக்க முடியும். முடிச்சிட்டா அவளும் சொந்தக் கால்ல நிப்பாள்ல” என அவளை மறுபடி அத்தனை ஆசை ஆசையாகப் படிக்க அனுப்பினான்

“அண்ணி ஏதோ வரையுறீங்களே. தவளை மாதிரி தெரியுது? ஓ அதுதான் கல்லீரலா? எனக்கெல்லாம் அது கரைஞ்சே போயிருக்கும். நான் வரைஞ்சு தரவா?” என பாண்டியின் அடிப்பொடிகள் எந்நேரமும் அவளைச் சுற்றிக் கொண்டு நிற்பார்கள். ஏற்கனவே சொன்னமாதிரிதான். பாசக்காரப் பயல்கள் மத்தியில் விலைகூடின பொமேரியன் நாய்க் குட்டியைப் போல. பாண்டியின் அம்மா அவளைத் தன் பேத்தியைப் பார்த்துக் கொள்வதைப் போலப் பார்த்துக் கொண்டாள்.

பாண்டியுமே படிப்பு முடிந்து அவள் வேலைக்குப் போன பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருந்தான். அவன் அவளிடமிருந்து தள்ளி அலைவதைப் பார்த்த ஊர்க்காரர்களே, “சும்மா சொல்லக் கூடாதுப்பா. நல்ல ஒழுக்கமான பையன். நமக்குன்னு இருக்கற சீனிக்கட்டிதானேன்னு நெனைச்சு விழுந்து புரண்டு நக்கலை. நிதானமா இருக்கான்” என்று அவனுக்குப் புகழ்மாலை சூட்டினார்கள். அதையுமே ரசித்துச் ருசித்து அவளிடமிருந்து அநியாயத்திற்கு விலகலைக் கடைபிடித்தான்.

ஆனால் அவள்தான் கல்லூரிக்கெல்லாம் போய் படிக்கிற பெண்ணாயிற்றே? போடா இவனே எனச் சொல்லி இவனைத் தூக்கிக் கட்டிலில் போட்டு விட்டாள். “ஏன் குழந்தையை சுமந்துகிட்டு காலேஜூக்கு போகக் கூடாதா? வயித்துக்குள்ள இருந்துகிட்டு இப்பவே டாக்டருக்கு படிக்கட்டும் அது. என்ன ரெண்டு செமஸ்டர் பாடம் முடிஞ்சிருச்சு” என்றாள் அவனைக் கட்டிக் கொண்டு. படித்து முடித்த பிறகுதான் குழந்தை எனச் சத்தியம் வாங்கினான் பாண்டி.

ஒருநாள் சம்போகத்தின் கடைசியில் வியர்வை வழிய மல்லாக்கப் படுத்திருந்த பாண்டி, முத்தம் தருகையில், கண்மூடி அவளிருந்ததை உணர்ந்துவிட்டு, “உண்மையைச் சொல்லு. ரெம்ப பக்கத்தில பாக்கிறப்ப என்னோட முகம் அகோரமா தெரியுதா? எதுக்காகப் பொறுத்துக்கற?” என்றான். அவள் எழுந்து அவன்மீது ஒருகாலைத் தூக்கிப் போட்டு, கையை தலைக்கு முட்டுக் கொடுத்து, “எத்தனை தடவை எந்தந்த மாதிரிகேட்டாலும் இதையேதான் சொல்லுவேன். உன்னோட அந்த முகம் எனக்குள்ள நெறைஞ்சு கிடக்கு. அப்புறம் என்னைக்கும் என்மேல நீ கருணையாத்தான் இருப்பேன்னு எனக்குத் தெரியும். உன்னை மாதிரி எனக்கு நீளமா பேசத் தெரியாது” என்றாள் தீர்மானமாக.

அதற்கடுத்து அந்தக் கேள்வியை அவளிடம் பாண்டி கேட்கவே இல்லை. ஜோடி போட்டுக் கொண்டு அடிவாரத்தில் நடக்கும் போது, பாண்டிக்குக் கூச்சமாக இருக்கும். போகப் போகச் சரியாகி விடும் என்பதைப் போலல்லாமல், சாகிறவரை தன்நிழலைப் போலத் தொட்டுத் தொடர்கிற கூச்சம் அது.

என்றைக்குமே அவனை எதிர்ப்படும் மனிதர்கள் விநோதமாகத்தான் உற்றுப் பார்க்கப் போகிறார்கள் என்பது அவனுக்கு ஆழமாகப் புரிந்தது. இந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு, இந்த கண்டத்தை விட்டு வேறு எந்தக் கண்டத்துக்குச் சென்றாலும், முகத்தில் மாட்டினுடைய எலும்புத் துண்டின் நீளத்திற்கு ஆழமான தழும்போடு இருக்கும் மனிதனை, இன்னொரு மனிதன் எப்படி எதிர்கொள்வான்?

ஒருமனிதனைப் பார்த்ததும் எழுகிற முதல் எண்ணத்தை, எதைக் கொண்டும் அழிக்க முடியாது. அதுவுமே கற்காலத்தில் செதுக்கிய ஒரு தழும்பைப் போலத்
தான் என்பதை உணர்ந்தான் பாண்டி. அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள் எனப் பாண்டி நினைத்தான் ஆரம்பத்தில். ஆனால் அவளுக்கு உள்ளேயுமே இப்போதைய அவனது முகம் படும் பாடுகள் குறித்த சங்கடங்கள் இருந்தன. சங்கடம் என்று சொன்னால், அதைக் குறித்த எண்ணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அவனுக்காக அந்த எண்ணத்தை ஆழமாகப் புதைத்துக் கொள்கிறாள் என்று தோன்றியது பாண்டிக்கு. அவளைக் காணக் காண அவனுக்குள் கருணை பொங்கி வழிந்தது. ஏசுநாதரின் கையில் இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போல மலங்க விழித்தாள் வினிதா.

தன் முகத்தை மற்றவர்களின் பார்வையில் இருந்து ஒளித்துக் கொள்ள ஆரம்பத்தில் படாதபாடு பட்டான் பாண்டி. ஒருகட்டத்தில் அவனுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. அதெல்லாம் ஒருநாளும் சிலேட்டில் எச்சில் தொட்டு அழிப்பதைப் போல, அத்தனை எளிதாக நடக்காது. இவர்களோடு கூடமாட அலைந்தால் மட்டுமே வாழ முடியும். அதனால் முகத்திற்கு மேலாகத் தொப்பி மாதிரி ஒன்றைப் போட்டுக் கொண்டால்தான் தப்பிக்க முடியும் என்று முடிவெடுத்தான்.

திடீரென தானதரும காரியங்களை அதிகமாகச் செய்யத் துவங்கினான். மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அந்தத் தெருவிலேயே பெரிய அன்னதானத்தை மக்களைக் கூட்டிப் போட்டான். முதல் கரண்டி குழம்பை வினிதாவை வைத்துத்தான் ஊற்ற வைத்தான். ஆனாலும் சொன்னார்கள், “ஆளு பார்க்க கரடு முரடுதான். ஆனா உள்ளம் அவருக்கு சீனிக்கட்டி மாதிரி” என்றார்கள். இச்செயல்களால் விளைந்த நன்மை ஒன்று உண்டெனில், அது அகோரமாக என்று சொல்வதை விடுத்து கரடு முரடு என்று மாறிக் கொண்டதுதான்.

அந்தளவிற்கு அவர்கள் இறங்கி வந்ததிலேயே திருப்தி அடைந்து விட்டான் பாண்டி. வினிதாவுமே படிப்பை முடித்து வேலைக்குப் போகத் துவங்கினாள். ஆரம்பத்தில் வேண்டாம் என்று விரும்பியே ஒத்திப் போட்டார்கள் குழந்தையை. நினைத்த நேரத்தில் தேதி, நேரம் பார்த்து முயன்றும் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. இனி கிட்டாது என்கிற எண்ணத்திற்குச் சுற்றி இருப்பவர்களும் வந்து சேர்ந்த பிறகுதான் தாம்பத்தியத்தில் நாட்கள் நொண்டியடிக்கத் துவங்கின. காதலியாக, இளம்மனைவியாக இருந்த போது வினிதா வேறு மாதிரியாக இருந்தாள். ஆனால் நிறைய இட்லிகளை சுட்டுமுடித்து களைத்துப் போன, மனைவியாக மாறியதும் நிறையக் கட்டுப்பாடுகளைப் போட்டாள். அவ்வாறு இருப்பதையே தன்னுடைய ஆதார உணர்ச்சியாகவும் ஒன்றின்மீதான பிடிமானமாகவும் உணர்ந்தாள்.

சிகரெட் குடிக்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தான். குடியைக் கூட அவனால் விட்டு விடமுடிகிறது. ஆனால் அந்த சிகரெட் சனியனை எவ்வளவு முயற்சித்தும் விட முடியவில்லை. வீட்டுக்கு போவதற்கு முன்பு சரக்சரக்கென மூன்று சிகரெட்டுகளை இழுத்து விட்டு, கொய்யா இலைகளை மென்று விட்டு வீட்டுக்குப் போவான். வினிதாவிற்கு முதல் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பான்பராக் போடும் பழக்கத்தை நிறுத்தி விட்டான்.

சிகரெட் மணம் வந்துவிடக் கூடாது என்கிற கவனத்திலேயே அவளிடம் இருந்து விலகி அலைந்தான். சீக்கிரம் விட்டு விடலாம் என்கிற நம்பிக்கையும் இருந்தது. அன்றைக்கு வழக்கத்தை விட கொஞ்சம் லகுவான மனநிலையில் இருந்த வினிதா, அவனை இழுத்துக் கொஞ்சப் போன போது, சிகரெட் மணத்தைக் கண்டு கொண்டாள். ஏதோ கொலையே செய்ததைப் போலச் சுருண்டு அமர்ந்து அழுதாள். “நீ என்ன சொன்ன? சத்தியம் பண்ணிட்டா வாக்கு தவற மாட்டேன்னு சொன்ன? அதெல்லாம் பொய்யா? அப்ப ஒருநாள் சத்தியத்தையும் மீறி என்னையும் கைவிட்டிருவ. அப்படித்தானே? நான் ஒருநாளும் அப்டீ செய்ய மாட்டேன்” என்று அழுதபடி சொன்னாள்.

அதற்கடுத்து அவனோடு பேசுவதை நிறுத்திக் கொண்டாள். மீறிப்பேச முனைந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள். பாண்டிக்குப் பயமாகப் போய்விட்டது. அவளது தந்தை குறித்து அப்போது சிந்தித்தும் பார்த்தான். அவள் போக்கிலேயே சிக்கன் குழம்பு வேண்டும் என இவன் பேப்பரில் எழுதி வைத்துவிட்டுப் போவான். அவள் சமைத்து வைத்து விட்டு, பாண்டி சாப்பிடுவதைக்கூட கவனிக்காமல் இன்னொரு அறைக்குள் நுழைந்து கொள்வாள். அவளிடம் பேசாமல் மட்டும் அவனால் இருக்கவே முடியாது. காலில் விழுந்து கெஞ்சி, மறுபடி அவளது நெஞ்சில் கைவைத்து சிகரெட் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த பிறகு மறுபடியும் பேசத் துவங்கினாள்.

சிகரெட்டை விடத் துவங்கிப் போராடிக் கொண்டிருந்த போது பழைய பாண்டியாகவே மாறிப் போனான். எதற்கெடுத்தாலும் கோபம் முந்திக் கொண்டு வந்தது. அதை அவளும் உணர்ந்தே இருந்தாள் என்பதால், அவனுக்கு அதிகமும் வெள்ளரிக்காயில் சாறு எடுத்துக் கொடுத்தாள். மருத்துவர் ஆயிற்றே? ரத்தத்தைச் சுத்திகரிக்கும் நடவடிக்கையில் இருந்தாள். பாண்டிக்குள் புதுரத்தம் பாய்ந்தாலும், ரத்தம் சுண்டிப் போன பழைய ரௌடியைப் போலவே வீட்டுக்குள்ளும் வெளியிலும் சுற்றுவது அவனுக்கு வெறுப்பாக இருந்தது. ஒரு மிதப்பைத் தேடியது உடலும் மனமும். அடிவாரத்திலும் புதிய ரௌடிகள் உதித்து, வருமானத்தில் பங்கு போட்டார்கள். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற மாதிரி சம்பவம் ஒன்றைச் செய்ய விரும்பினான். கூடவே அயர்ச்சியாக இருக்கும் வாழ்வில், எதையாவது மீறலாகச் செய்து பார்க்கவேண்டுமென தனிப்பட்ட வகையிலும் தோன்றியது பாண்டிக்கு.

“பாண்டி. தான தருமம்லாம் ஒரு எல்லை வரைக்கும்தான். அப்புறம் சாமியாரு ஆயிட்டான்னு ஒரு பய பஞ்சாயத்துக்கு வர மாட்டான். ஏதோ எளந்தாரி பய கொஞ்ச காலத்துக்கு இப்படிச் சுத்துவேன்னு பார்த்தா, நீ முழுநேரமும் அதுலயே முடங்கிடுவ போல இருக்கு. சுதாரிப்பா இல்லாட்டி அடிவாரத்தில நம்ம
பருப்பு நல்லா வேகாது பாத்துக்க” என்றார் பாண்டியோடு உடன் இருக்கும் சண்முகப்பாண்டி அண்ணன்.

பாண்டிக்குமே அதுதான் சரியெனப் பட்டது. கொஞ்சம் வினிதாவின் கையிலிருந்து விலகுவது, அவனுக்கு மூச்சை இழுத்து விடுகிற மாதிரி ஆசுவாச
மாகவும் இருந்தது. சதா தொழில் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே சுற்றத் துவங்கினான். நாய்க்குட்டி கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது என்பதை வினிதாவும் உணர்ந்தாள் என்றாலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன் என்பதை ஏற்று, ஆனால் அவனைக் குறுகுறுப்பாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதுவே அவனுக்குத் துயரமாகவும் இருந்தது.

“என்ன அப்படிப் பாக்குற. அதெல்லாம் எந்த சபைக்கு போனாலும் போதைய தொடறதில்லை. சத்தியத்துக்கு கட்டுப்பட்டுதான் இருக்கேன். நம்ம பிள்ளைன்னு ஒண்ணு வராமலா போகும். அதுக்கு ஓடியாடி சம்பாதிக்க வேணாமா” என்றான். “ம்ம்ம்” என்றாள் அவள். அதுவே அவனுக்கு விட்டால் போதும் எனத் திருப்தியாகவும் இருந்தது.

அவளின் மீதான பரிவு தன்னிடம் இன்னும் இருக்கிறதா என ஒருநாள் வண்டியோட்டிக் கொண்டு வருகையில் யோசித்தான் பாண்டி. ‘‘அதென்ன அப்படி பொசுக்குன்னு கேட்டுட்ட” என்றது அவனுடைய மனசாட்சி. தன்னளவில் திருப்தியாக உணர்ந்தான். அவனுக்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். ஆனால் அதையெல்லாம் அமர்ந்து பேச முடியாத தூரத்திற்கு வினிதா சென்று விட்டதாக நினைத்தான். “காதல் பண்றப்ப வேறப்பூ. பொண்டாட்டின்னு வந்தா அடக்கி ஆளத்தான் நெனைப்பாங்க. அதான் சகஜமானது. நீ கொஞ்சம் குனிஞ்சு பணிஞ்சு போயேன்” என்றார் முருகேசன் மாமா.

ஆனால் அப்படி வீட்டுக்குள் எலியாகவும் வெளியில் புலியாகவும் மாறி மாறி நடிக்க முடியாது பாண்டியால். ஏற்கனவே அப்படித்தான் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு பல்வேறு முகமூடிகளைப் போட்டுத் திரிகிறான். இருந்தால் ஒரே மாதிரி இந்த முகத்தோடேயே இருந்து விட்டுப் போகிறேன் என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தான். கத்தி, அரிவாள் இவற்றில் இருந்தெல்லாம் விலகி இருந்த அவன் மறுபடியும் பல்வேறு காரணங்களைச் சொல்லி அதைத் தூக்கத் துவங்கினான்.
மோசமான சண்டையொன்றில் ஒருத்தனை மல்லாக்கப் படுக்கப் போட்டு, அரிவாள் நுனியால் அவனது கன்னத்தை வருடி, “வாழை மட்டையை வெட்டுறாப்புல ஒரே கூரா போட முடியும். ஆனா இப்படி ஒரு தழும்ப சுமக்கிற வலி எனக்குத்தான் தெரியும். அதான் உன்னை விடறேன். இனிமே என் எல்லையிலயே உன் மொகம் தட்டுப்படக்கூடாது” என்றான். தன்னிடமும் கருணை இருக்கிறது எனப் பிறகு மெச்சியும் கொண்டான்.

இடையில் வினிதாவின் அத்தையொருத்தி பாண்டிக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனாள். “நம்ம அடையாளம் கடைசி வரைக்கும் நம்மளைத் தொடரும். ஒரு ரௌடி கடைசி வரைரௌடியாத்தான் இருப்பான். அதான் பார்க்கிறல்ல. மறுபடி கத்தியை தூக்கிட்டான். வேண்டாம், நம்ம வீட்டுக்கு வந்திரு. வயித்தில குழந்தை உருவாகாம இருக்கறதுக்கு நாங்க எல்லாம் உக்காந்து வேண்டிக்கிறோம். என்னத்தை சொல்ல முருகா?” என்று முனகிவிட்டுக் கிளம்பிப் போனாள். ஒருவார்த்தைகூடப் பேசாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு வினிதா அமர்ந்திருந்ததாக வீட்டில் போய்ச் சொன்னாள். பாண்டிக்கும் அந்தச் செய்தி காதிற்கு வந்து சேர்ந்தது.

வினிதாவோடு மெல்லவொரு விலகல் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம் அது. மற்ற நேரமாக இருந்தால் போய் என்ன நடந்தது என இயல்பாகக் கேட்டு விடுவான். ஆனால் அப்போது அப்படிக் கேட்க அவனுக்குத் தோன்றவில்லை. தான் செய்வதுமே தவறு என்பதை அடியாழத்தில் உணர்ந்திருந்தான். ஆனால் அப்போதைக்கு பற்றிக் கொள்ள அவனுக்கு அரிவாள் மட்டுமே இருந்தது.

வெளியூர் சம்பவங்களுக்கும் கிளம்பிப் போகத் துவங்கினான் பாண்டி. வேண்டாம் என்று தடுக்கும் நிலையிலும் தன்னை வைத்துக் கொள்ளவில்லை வினிதா. வேண்டாம் என்று அவள் தன்னைத் தடுப்பாள் என்று வேண்டி விரும்பி எதிர்பார்த்தான் பாண்டி. தன்னைக் கைகழுவுகிற முடிவுக்கு அடியாழத்தில் வந்துவிட்டாளோ என்கிற எண்ணமும் பாண்டிக்கு இருந்தது. இத்தனைக்கும் ஒரு சண்டை சச்சரவும் இல்லை. ஆனால் கனத்த மௌனம் ஒன்று இருவருக்கு இடையிலும் நிலவியது.
பாண்டிக்குமே அவளோடு போய் பழைய மாதிரி பேசத் தோன்றவில்லை. ஒருமாதிரியான குற்றவுணர்வும் அவனுக்குள் அரித்தது. ஒருவேளை குழந்தை இருந்தால் கவனம் அங்கே திசை மாறி இருந்திருக்கும். அதுவும் இல்லையென்பதால், அவளை மகிழ்விக்கும் படியான உத்திகள் எல்லாமும் காலியாகி இருந்தன பாண்டியிடத்தில். இனி புதிதாக எதையாவது கண்டுபிடித்துக் கொண்டு வந்தால்தான் உண்டு என்கிற நிலை.

சட்டியில் ஒரு பருக்கை இல்லாமல் எல்லாமும் காலியாகி விட்டது. எதைக் கொண்டு போய்க் காட்ட? என்று தோன்றியது பாண்டிக்கு. காலிச் சட்டியில் எதைக் கொண்டாவது போட்டு நிரப்ப வேண்டும் என்கிற ஒருவித சூன்ய நிலையில் இருந்த போதுதான், வெளியூர் போன வகையில் யாருக்கும் தெரியாமல் அந்தச் சம்பவத்தைச் செய்தான். ரகசியமாக அதுவும் ஒரு ஓரத்தில் இருந்து கொள்ளட்டும், அதைப் பற்றிய தகவல் எதற்கு தேவையில்லாமல் மற்றவர்களுக்கு? என்றே நினைத்தான்.

ஆனால் ஒன்றை மறைப்பதனால் வரும் தடுமாற்றம் கொண்டவனாக மாறிப் போனான். அவனது நடைகூடக் கொஞ்சம் தளர்ச்சியாக மாறிப் போனதைப் போலக்கூட உணர்ந்தான். மாம்பழத்திற்குள் புகுந்து கொண்ட சிறுவண்டு ஒன்று உள்ளே சாவகாசமாக அமர்ந்து அவனை அரித்துத் தின்று கொண்டிருந்தது. அவனிடம் இருந்த கவச குண்டலம் அதுபாட்டிற்குக் கழன்று கொண்டதைப் போலவும் தோன்றியது. அதுவரை அரைச் சட்டி சோறு சாப்பிடுகிறவன், இரண்டு இட்லியையே துழாவிக் கொண்டு இருந்தான். “எதுக்கும் மருகாத? ஒரு கட்டிங்க போடு. சாப்பிட்டுத் தூங்கு. அவளுக்குத் தெரியவா போகுது” என்றான் மயில்சாமி.
“இல்ல பங்கு. செஞ்சா தலையவா எடுக்கப் போறாங்க? ஆனாலும் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்க லாம்னு இப்ப இன்னும் நெறைய தோணுது. ஏற்கனவே ஒண்ணை செஞ்சுட்டுதான் இப்ப நெஞ்சுக்கூடு நடுநடுங்க அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்” என்றான் பாண்டி.

“அப்படியென்ன எங்களுக்குத் தெரியாம செஞ்ச” என்றான் சுருக்கென மயில்சாமி. ’கொசுவுக்குக்கூட இந்த பூமியில ஒளிஞ்சுக்க இடம் இருக்கு” என்று பாண்டி சொன்னதைக் கடைசிவரை மயில்சாமியால் புரிந்து கொள்ள முடியாது. அதைப் பாண்டியுமே நன்றாக அறிவான். காலத்துக்கும் இப்படி வண்டு குடைகிற பழம் போலவே இருந்துவிட்டுப் போகலாமா? குழப்பத்தின் உச்சியில் நின்றான் பாண்டி.
அவன் நடையுடை பாவனைகள் மாறுவதை வினிதாவும் அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீமைக் கத்தரியாகவே இருந்தாலும் ஒருநாள்

முற்றத்தானே வேண்டும்? அவள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தால்கூட நிலைமை சகஜமாக இருந்திருக்கும். வேறொரு அற்பக் காரணத்திற்காக அப்போது சண்டை போட்டுப் பேசாமலும் இருந்தாள்.

நாள்பட நாள்பட வண்டு தனது குடைச்சலை உள்ளுக்குள் அதிகரித்தபடியே இருந்தது. அதை உதறாவிட்டால் இனி நடமாடவே முடியாது என்கிற நிலைக்கு வந்து விட்டான் பாண்டி. சாதாரணமானவர்களுக்கு ஏதாவது மனக் கோளாறு வந்து முகத்தில் அதைக் காட்டாமல் மறைத்தால், முகம் ஓரளவிற்குத்தான் வாட்டமாகும். அதிகம் போனால் கல்லைப் போல இறுகிப் போன மாதிரி மட்டுமே தெரியும்.

ஆனால் பாண்டியைப் போன்றவர்களுக்கு? கூர்மையான துயரச் சிந்தனையில் இருக்கையில், முகத்தில் தழும்பைத் தாங்கிப் பிடிக்கிற நரம்பு இழுத்துக் கொண்டு, உதடு மடிந்து ஒற்றைக் கண் சுருங்கி இன்னும் கோரமாகத் தெரியும். கண்ணாடியில் அதைப் பார்க்கும் போதே பாண்டிக்கு மேலும் மேலும் வெறுப்பு கூடியது
அந்தச் சிந்தனையே வராதவாறு அமர்ந்திருப்பதாகத் தான் நினைத்துக் கொண்டிருப்பான். “என்னண்ணே திடீர்னு முகம் சுருங்கி உதடெல்லாம் இழுக்குது” என்பான் உடனிருப்பவன். அமைதியாக யோசித்தால் கவனம் கலைவதற்கு முன்பு வரை வண்டு குடைந்து கொண்டிருந்தது உறைக்கும்.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என ஒருநாள் கொஞ்சமாக தண்ணியடித்துவிட்டு, ஆனால் சிகரெட்டைத் தொடவே இல்லை, வீட்டிற்குப் போனான் பாண்டி. வினிதா புடவைகளை எடுத்து மடித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் போய் அமர்ந்த அவன் பிறகு கட்டிலில் சாய்ந்தவாறு தலையணையை இழுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டான். உள்ளுக்குள் ஏற்பட்டிருக்கிற நடுக்கத்தை மறைக்கவே பிடிமானமாக இருக்கட்டுமென அவ்வாறு செய்தான்.

“உண்ட்ட ஒண்ணு பேசணும்” என்றான்.

“அதான் மூஞ்சியே சொல்லுதே” என்றபோது அவனுக்குச் சுருக்கென இருந்தது.

“இந்த மூஞ்சிதானே உனக்குப் பிடிச்சது. இப்ப இப்படிச் சொல்ற?” என்றான் சிரிக்க முயன்று.

“அலோ நான் எப்ப அப்டீ சொல்லிருக்கேன்? நீ எப்டீ கேட்டாலும், புதுப் பழக்கத்தைக் கத்துக்கிட்டு அடிச்சுக்கூட கேட்டாலும் என் வார்த்தைல இருந்து விலக மாட்டேன். எனக்குள்ள உன்னோட பழைய முகம்தான் நெறைஞ்சு கிடக்கு. நீ சொல்றதை சொல்லு. உன்னை மாதிரி என்னால பேச முடியலை” என்றாள்.

பேசும் முனைப்பில் எழுந்து அமர்ந்து, கைகளைப் பிசைந்து, கன்னத்தைப் பிடித்து வருடி, தலைமுடியை இழுத்து என என்னவெல்லாமோ அவன் செய்வதை, உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் வினிதா. வண்டை உடனடியாகக் கொன்றுவிட வேண்டுமெனத் தோன்றியது பாண்டிக்கு. அப்படித் தோன்றியதற்கு எதிரான எண்ணம்கூட அப்போது வரவில்லை. மூச்சு முட்டியவனைப் போல மூச்சை இழுத்து பலமான சத்தத்தோடு விட்டான்.

எப்படிச் சொல்வது அதை என்கிற கூர்மையான சிந்தனையில் இருந்த போது வலிப்பு வந்ததைப் போல அவனது வலது பக்கம் இழுத்தது. அதைக் கையால் நீவி விட்டான். கண்களில் நீர் பூக்கத் துவங்கிய நிலையில், விழியசைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வினிதா.

அதைப் பார்த்ததும் அவனுக்குள் இருந்த கருணை பொங்கி அழுகையாக முட்டிக் கொண்டு வெளியே வந்தது. தன்னைமீறி அழுதால் சின்னப் பையனைப் போல இருப்பான். அதை எதிர்பார்த்துக் காத்திருந்த வினிதா அவனை நோக்கி என்ன என்பதைப் போலத் தலையசைத்ததும் ஏங்கி அழத் துவங்கினான் பாண்டி.
கையை ஊன்றி நகர்ந்து போய் அவளது மடியில் பொதித்து முகத்தை மறைத்துக் கொண்டு அழுதபடி, “நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன். மன்னிச்சு விட்டிரு” என்றான்.

மிகநீண்ட மௌனம் நிலவியது அங்கே. பெருமூச்சு விட்டு விட்டு, அவனது தலையில் கைவைத்து முடியைக் கோதியபடி வினிதா, “என்னை மீறி அப்படி என்ன செஞ்சிட்டா உனக்கு” என்றாள் குரல் உடைந்து.

தலையைத் தூக்கிப் பார்க்க அஞ்சி, இருந்த வாக்கிலேயே சொன்னான் பாண்டி.

“அவ இந்த முகத்தை லவ் பண்ணாளாம்.”

Saravanamcc@yahoo.com