தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணிமூப்பு அடிப்படையில் முதல்வர் பதவி உயர்வு வழங்கப்படும். ஓய்வு பெறச் சில ஆண்டுகள் இருக்கும் போதுதான் பெரும்பாலோருக்கு முதல்வர் பதவி கிடைக்கும். அவர்கள் ஓராண்டு, ஆறு மாதம் எனக் குறுகிய காலம் மட்டுமே முதல்வர் பதவி வகிப்பர். கடைசி ஒருமாதம் மட்டும் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற சிலரும் உண்டு. நான் பணியாற்றிய கல்லூரி ஒன்றில் ஒருவர் யாருக்கும் தெரியாமலே முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார்.

ஏப்ரல் 30 அன்று அவருக்குப் பதவி உயர்வு ஆணை வந்தது. மே ஒன்றாம் நாள் வந்து கல்லூரிப் பணியில் சேர்ந்தார். அப்போது கோடை விடுமுறை. ஆசிரியர்களும் இல்லை; மாணவர்களும் இல்லை. விடுமுறைக் காலம் என்பதால் அவர் கல்லூரிக்கு வரவேயில்லை. மே 31ஆம் நாள் அவர் ஓய்வு பெறும் நாள். அன்று வந்து தம் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டார். அப்படி ஒருவர் முதல்வராக இருந்தார் என்பது பட்டியலில் மட்டுமே இருக்கும்.

மிகக் குறைந்த காலமே முதல்வர் பதவி வகிப்போர் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான செயல்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். அவர்களின் ஓய்வூதியப் பலன்களைப் பெற்றுச் சிக்கலில்லாமல் ஓய்வு பெறுவதிலேயே கவனம் செலுத்துவர். வழக்கமான கோப்புகளில் கையொப்பம் இடுவதைத் தவிர வேறெதிலும் ஆர்வம் இருக்காது. சில ஆண்டுகள் பதவி வகிப்போர் பலரும் அப்படித்தான் இருப்பார்கள். தம் காலத்தைப் பிரச்சினை இல்லாமல் ஓட்ட வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். ‘நாற்காலி தேய்த்தல்’ என்பதற்கு நல்ல சான்றுகளாக இப்படிப் பல முதல்வர்களை நான் கண்டிருக்கிறேன்.

வெகுசிலரே தம் பதவிக் காலத்தில் நினைவில் இருக்கும்படி ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார்கள். புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்தல், புதிய பட்டப் படிப்பைப் பெறுதல் ஆகியன அவர்களின் திட்டத்தில் முன்னிலை வகிக்கும். நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் நிதி பெற்றுப் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டிவிட்டால் அது சாதனை. அரசிடம் கோரிக்கை வைத்துப் புதிய கட்டிடம் ஒன்றைக் கொண்டு வந்துவிட்டால் அது பெருஞ்சாதனை. முன்னாள் மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் வழியாக நிதி பெற்றும் சில கட்டிடங்களைக் கொண்டு வருவோர் உண்டு. கல்லூரிக்குப் புதிய படிப்பு ஒன்றைக் கொண்டு வரவும் சிலர் முயல்வார்கள். தம் காலத்தில் இந்தப் படிப்பு வந்தது என்று பெயர் விளங்க வேண்டும் அல்லவா? எதுவுமே செய்யாதோர் நடுவில் இப்படி இயங்குவோர் முக்கியமானவர்கள்தான். ஆனால் என் பார்வை வேறாக இருந்தது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி முதல்வராக நான் பணியேற்ற போது எனக்குக் கட்டிடங்களில் ஆர்வம் வரவில்லை. பிற கல்லூரிகளோடு ஒப்பிடும்போது போதுமான அளவு கட்டிட வசதி அக்கல்லூரியில் இருந்தது. இருக்கும் கட்டிடங்களை முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தாலே போதும். கல்லூரிக்குக் கட்டிடம் வேண்டும் என்று யாரிடமும் போய்க் கையேந்தி நிற்கவும் எனக்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டின் போது அதன் நினைவாக அரசு கல்லூரிகளுக்குக் கட்டிடம் கட்டம் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. அதுபோன்ற சந்தர்ப்பங்கள் அவ்வவ்போது அமையும்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஆளுங்கட்சிக்குத் தேர்தல் நிதி தேவைப்பட்டபோது பல்வேறு கட்டிடம் கட்டுதல், சாலை வசதி செய்தல் ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தல் நிதி திரட்டக் கட்டிடம் கட்டுதலும் சாலை வசதி செய்தலுமாகிய திட்டங்களை அருமையாகப் பயன்படுத்தலாம் என வழிகாட்டிய வகையில் அப்போதைய அதிமுக அரசு மிக முக்கியமானது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை எப்படியும் தேர்தல் வரும். ஆளுங்கட்சிக்குத் தேர்தல் நிதி தேவைப்படும். ஆகவே கல்லூரிக்குக் கட்டிட வசதி வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு நாம் முயல வேண்டியதில்லை என முடிவு செய்தேன். நான் நினைத்தது போலவே, என் முயற்சி இல்லாமலே சில கட்டிடங்கள் கல்லூரிக்கு வந்தன. பொதுப்பணித்துறை சும்மா இருக்காது. ஏதாவது கட்டிடம் வந்தால்தானே அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்? அதனால் பலவிதமான கட்டிடங்களுக்குத் திட்டம் தீட்டி அரசுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள்.

புதிய படிப்புகளைக் கல்லூரிக்குக் கொண்டு வரலாமா? அரசுக்குச் செலவில்லாத வகையில் புதிய படிப்புகள் வேண்டும் எனக் கேட்டால் கிடைத்துவிடும். செலவு என்பது என்ன? புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால் செலவு. செலவில்லாத வகையில் ஆராய்ச்சிப் படிப்புகளைக் கேட்டால் அரசு கொடுத்துவிடும். நான் முதல்வராக இருந்த காலத்தில் விலங்கியல் துறைக்கு முனைவர் பட்டப் படிப்பு அப்படிக் கிடைத்தது. வேறு பட்டப்படிப்புகளைக் கேட்கவும் கொண்டு வர முயலவும் எனக்கு விருப்பமில்லை. அரசே எல்லாக் கல்லூரிகளுக்கும் பொதுவில் சில படிப்புகளை வழங்கும் திட்டம் அவ்வவ்போது வரும். அந்தச் சமயத்தில் பொதுப்போக்கில் நாம் இணைந்து கொண்டால் சில படிப்புகள் கிடைத்துவிடும். தனி முயற்சி தேவையில்லை.

மாணவர் கல்வியிலும் கல்வி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளிலும் கவனத்தைச் செலுத்துவது என்று முடிவு செய்து செயல்பட்டுக் கொண்டிருந்தேன். 2020 – 2021ஆம் கல்வியாண்டு கொரோனா காலமாக இருந்தது. கல்லூரி மாணவர் சேர்க்கை முதன்முதலாக இணைய வழியில் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு கலைக்கல்லூரிகளைப் பற்றிய முழுமையான தகவல் மாணவர்களுக்குக் கிடைக்கவும் அவற்றில் உள்ள படிப்புகளைப் பற்றி அறியவும் அது வழிவகுத்தது. கல்லூரி இருக்கும் மாவட்டத்தின் உள்ளிருந்தும் அருகமை மாவட்டங்களில் இருந்தும் மட்டுமே மாணவர்கள் வந்து சேர்வர் என்னும் நிலை மாறியது. தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரிக்கு விண்ணப்பங்கள் வந்தன. தென்காசி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி முதலிய மாவட்டங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததைக் கண்டு வியந்து போனோம். விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

மாணவர் சேர்க்கையின் போது தம் மகள்களை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் வந்தனர். சேர்க்கைக்கு முன் என்னைத் தேடி வந்த பெற்றோரின் ஒரே கேள்வி ‘ஐயா, மகளிர் விடுதி எங்கே இருக்கிறது?’ என்பதுதான். அரசின் நலத்துறைகள் நடத்தும் இலவச விடுதியைத்தான் அவர்கள் கேட்டார்கள். அரசு கல்லூரிக்கு வருவோர் கட்டண விடுதியில் சேர்க்கும் அளவுக்கு வசதி பெற்றவர்கள் அல்ல. நாமக்கல் கல்லூரியில் மாணவர்களுக்கு என்று தொடக்க
காலத்தில் கட்டிய கட்டண விடுதி ஒன்று, மாணவர்கள் சேர வராத காரணத்தால் மூடப்பட்டுப் பாழடைந்து கிடக்கிறது. ஆண்களுக்கு என்று ஆதி திராவிடர் நலத்துறை நடத்தும் விடுதி ஒன்றும் பிற்பட்டோர் நலத்துறை நடத்தும் விடுதி ஒன்றும் கல்லூரி வளாகத்தை ஒட்டிச் செயல்பட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் ஏறத்
தாழ முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.

ஆனால் எங்கள் கல்லூரி மாணவியருக்கு என்று தனியாக விடுதி வசதி இல்லை. நாமக்கல் நகரத்தில் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. அங்கிருக்கும் விடுதியில் எங்கள் கல்லூரி மாணவியருக்கு மிகச் சில இடங்களே ஒதுக்குவார்கள். என்னை வந்து கேட்ட பெற்றோருக்கு அந்த விடுதியைச் சொன்னேன். உடனே அவர்கள் அடுத்த கேள்வியைக் கேட்டனர். ‘அங்கே என் மகளுக்கு இடம் கிடைக்குமா?’ அதற்கு உறுதியான பதிலை என்னால் சொல்ல முடியவில்லை. கிடைக்கலாம், கிடைக்கவில்லை என்றால் கல்லூரிக்கு அருகில் கோழிப்பண்ணைகளை ஒட்டி வாடகைக்கு அறைகள் கிடைக்கும், அவற்றில் சில பெண்கள் தங்கியுள்ளனர், அங்கே அறையெடுத்துக் கொடுக்கலாம் என்று விளக்கம் சொன்னேன். அது பெரும்பாலான பெற்றோருக்கு திருப்தி தரவில்லை. வெகுதூரத்திலிருந்து வந்து படிக்கும் பெண்ணுக்கு முதலில் பாதுகாப்பான இடம் வேண்டும். அடுத்து மாதந்தோறும் கல்விக்கெனச் சில ஆயிரங்களை அவர்களால் செலவிட முடியாது. மாணவியர் பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என்று சொன்னாலும் புதிய ஊரில் தம் பெண்ணை வேலைக்கு அனுப்பப் பெற்றோருக்கு விருப்பமில்லை. அவ்வாறு அறை எடுத்துத் தங்கிப் படிக்கும் மாணவியர் சரியான சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் நிலையை நானறிவேன். இளமையில் நல்ல சாப்பாடு இல்லையென்றாலும் வயிறாரச் சாப்பிட வாய்க்க வேண்டும்.

தம் பெண்ணோடு பெற்றோர் முதல்வர் அறைக்குள் நுழைந்தாலே எனக்குச் சங்கடமாகி விடும். ஒரே கேள்வி; திருப்தி அளிக்காத ஒரே பதில். பலர் தம் பெண்களைக் கல்லூரியில் சேர்க்காமலே அழைத்துச் சென்ற காட்சிகளைத் துயரத்தோடு கண்டேன். படிக்க இடம் கிடைத்தும் அப்பெண்களால் பயன் கொள்ள முடியவில்லையே. பெண் கல்விக்கு எத்தனையோ தடைகள். அந்தக் காலகட்டத்தில்தான் கல்லூரிக்கென்று மகளிர் விடுதி ஏற்படுத்த நாம் ஏன் முயலக் கூடாது என்று தோன்றியது. அதிகார வர்க்கத்தையோ அரசியல்வாதிகளையோ அணுகும் முன் அலுவல் ரீதியாகச் செய்ய வேண்டியவை எவை என யோசித்தேன்.

கல்லூரியில் ‘மகளிர் மன்றம்’ என்னும் அமைப்பு இருந்தது. அதன் ஒருங்கிணைப்பாளராகப் புள்ளியியல் துறைத்தலைவர் முனைவர் சா.சுஜாதா இருந்தார். அவரிடமும் கல்லூரியில் விரல் விட்டு எண்ணத்தக்க வகையில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் பேராசிரியர்களிடமும் விடுதி விஷயத்தைப் பேசினேன். எல்லோரும் ஆர்வமாக ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தனர். அலுவலகத்தில் விடுதி தொடர்பான பிரிவைக் கவனித்துக் கொண்டிருந்த இளநிலை உதவி
யாளர் முனைவர் இரா.பிரபாவும் என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கோப்புகளைத் தயாரிக்க உதவினார். மாணவியரிடம் ‘மகளிர் விடுதி வேண்டும்’ எனக் கோரிக்கை மனு பெற்றோம். அதை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒரு விண்ணப்பம், பிற்பட்டோர் நலத்துறைக்கு ஒரு விண்ணப்பம் என விரிவாகத் தயார் செய்து அனுப்பினோம்.

அச்சமயத்தில் ‘சிறுபான்மையினர் நலத்துறை’யிடம் இருந்து ‘உங்களுக்கு விடுதி வேண்டுமா?’ என்று கேட்டு ஒரு கடிதம் வந்தது. அது ஆண்டுதோறும் வரும் கடிதம் தான் என்பது தெரிந்தது. ‘சிறுபான்மையின மாணவர்கள் இங்கே கணிசமான எண்ணிக்கையில் இல்லை. ஆகவே விடுதி தேவையில்லை’ என்று பதில் எழுதி அனுப்புவது வழக்கமாம். நான் அப்படிப் பதில் எழுத விரும்பவில்லை. ‘இப்போது சிறுபான்மையின மாணவர்கள் குறைவு என்றாலும் விடுதி வசதி கிடைத்தால் அவர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிற மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்’ எனப் பதில் கொடுத்தேன். அதில் ஆண்களுக்கு ஒரு விடுதியும் பெண்களுக்கு ஒரு விடுதியும் வேண்டும் என்று கேட்டோம். இப்படி ஒரு பதிலை அத்துறை எதிர்பார்க்கவில்லை. ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு வேலை இல்லை. வேண்டும் என்றால் கோப்புகள் தயார் செய்ய வேண்டும், அதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வேலையைத் தவிர்ப்பதற்காக எங்கள் கடிதம் கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை என்றே பதில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சுணங்கிக் கிடக்கும் துறை அது என்பது புரிந்தது.

ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையும் பிற்பட்டோர் நலத்துறையும் சாதகமாகப் பதில் கொடுத்தனர். விடுதி தொடங்கினால் எத்தனை மாணவியர் சேர்வர், விடுதிக்குக் கட்டிடம் கட்டக் கல்லூரி வளாகத்திலேயே இடம் தர முடியுமா என்றெல்லாம் கேட்டுக் கடிதங்கள் அனுப்பினர். நேரிலும் சில அலுவலர்கள் வந்தனர். அரசின் கவனத்திற்கு ஒரு விஷயத்தை எடுத்துச் சென்றால் காலம் சென்றாலும் அது படிப்படியாக முன்னேறிச் சென்று நல்ல பலனைத் தரும் என்பது என் அனுபவத்தால் பெற்ற நம்பிக்கை. இவ்விஷயத்திலும் அப்படியே ஆனது.

ஏதாவது காரணத்தைக் காட்டி இதைத் தவிர்க்க முயன்ற அலுவலர்களுக்கு நான் சிறிதும் இடம் தரவில்லை. எல்லாவற்றுக்கும் சாதகமான பதில்களையே கொடுத்தேன். விடுதி கட்டுவதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன். வரைபடம் கேட்டார்கள். பொதுப்பணித்துறைப் பொறியாளர் சதீஷ் உதவினார். விடுதி தொடர்பாக எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதற்கு உதவுவோரிடமே அதைப் பற்றிப் பேசினேன். எதிர்மறையாகக் கருத்துச் சொல்பவரைத் தவிர்த்தேன். கேட்கும் எல்லாவற்றையும் கொடுத்த பிறகு மகளிர் விடுதிக்கான திட்ட வரைவைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியாக வேண்டிய நிர்ப்பந்தம் நலத்துறை அலுவலகங்களுக்கு ஏற்பட்டது.

திட்ட வரைவு மேலே சென்றுவிட்டால் எல்லாம் நடந்துவிடாது. இன்னும் அந்த அளவு நம் அரசமைப்பு முன்னேற்றம் பெறவில்லை. என்னால் இயன்ற வகையில் உயர்கல்வித்துறையின் பார்வைக்கும் நலத்துறைகளின் பார்வைக்கும் எடுத்துச் சென்றேன். நேரில் பலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. என் சென்னைப் பயணத்தின் போதெல்லாம் இதையும் ஒரு வேலையாக வைத்துக் கொண்டேன். அரசியல் ரீதியான முயற்சியையும் செய்தேன். முக்கியமாக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) பெ.இராமலிங்கம் அவர்கள் பார்வைக்கு இதைக் கொண்டு சென்றது நல்ல விளைவை ஏற்படுத்தியது. தம் தொகுதிக்கான தேவைகள் பற்றிச் சட்டமன்றத்தில் அவர் பேசிய போது ‘அறிஞர் அண்ணா அரசு கல்லூரிக்கு மாணவியர் விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்பதை முக்கியக் கோரிக்கையாக வைத்தார். அதை எங்கள் மாணவர்கள் நிலைத்தகவலாகப் புலனம் உள்ளிட்டவற்றில் வைத்து மகிழ்ந்தனர்; பரப்பினர்.

இரண்டு நலத்துறை மகளிர் விடுதிகள் வந்துவிடும் என்னும் நம்பிக்கை உருவாயிற்று. ஆனால் ஏனோ தெரியவில்லை, ஆதிதிராவிடர் நலத்துறையில் பின்தங்கியது. அதன் இயக்குநராக அப்போது இருந்தவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். ஏனோ அவர் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் கிடைத்தது. ஆனால் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பாக ஒரு விடுதி கிடைப்பது உறுதியாயிற்று. அத்துறையின் இயக்குநரை நேரில் சந்தித்த எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அவரை என்னிடமே பேச வைத்தார்.

இயக்குநர் கேட்டார், ‘இந்த ஆண்டே விடுதி தொடங்கினால் மாணவியர் தங்குவதற்கு நீங்கள் கட்டிடம் ஒதுக்கித் தர முடியுமா?’ நான் சிறிதும் யோசிக்க
வில்லை. ‘ஒதுக்கித் தருகிறோம்’ என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாளே அத்துறை அலுவலர்கள் நேரில் வந்துவிட்டனர். மேலிருந்து வரும்போது கீழே இருப்பவர்கள் சுறுசுறுப்பாகி விடுவார்கள். கீழிருந்து மேலே எடுத்துச் செல்வதுதான் நம் அமைப்புமுறையில் பெருங்கஷ்டம். ஏராளமான அலுவலக நந்திகள் வழிமறித்துக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு நந்தியையும் அகற்ற ஏதாவது சிவனைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

கல்லூரியில் பல கட்டிடங்களையும் பரிசீலித்தோம். தாவரவியல் துறை வகுப்பறைகளை ஒதுக்கலாம் என்று தோன்றியது. மகளிர் கழிப்பறை அருகிலேயே இருந்ததால் அது தோதாகத் தோன்றியது. அந்தத் துறையின் அனுமதி வேண்டுமே. எவரையும் நிர்பந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை.

ஒரு திட்டத்தைப் புரிந்துகொண்டு அவர்களாக அதில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்ப்பேன். தாவரவியல் துறைத்தலைவர் க.வசந்தாமணி அவர்கள் மூத்த பேராசிரியர். கல்லூரியில் முதல்வர் பொறுப்பு வகித்தவர். இதே கல்லூரியின் முன்னாள் மாணவர். அவரிடம் கேட்டபோது ‘எடுத்துக்கங்க சார். பொண்ணுங்களுக்கு ஹாஸ்டல் வர்றதுதான் முக்கியம். லேப்ல அட்ஜஸ்ட பண்ணி வகுப்பு நடத்திக்கறோம். எங்க துறை ஆசிரியர்கள்கிட்ட நான் சொல்லிக்கிறேன்’ என்று உடனே ஒப்புதல் கொடுத்தார்.

ஆனால் துறை அலுவலர்களுக்கு அவ்விடம் பிடிக்கவில்லை. வேறொரு கட்டிடத்தில் இருந்த அறைகள் பொருத்தமாக இருக்கும் என்றார்கள். அங்கே இரண்டு வகுப்பறைகள் புள்ளியியல் துறைக்கானது. விடுதி வருவதில் என்னை விடவும் அதிகம் ஆர்வம் காட்டிய அத்துறைத்தலைவர் சா.சுஜாதா உடனே தம் வகுப்பறைகளை விட்டுக் கொடுத்தார். ‘எங்களுக்குக் கொஞ்சம் பேருதான் மாணவர்கள். மரத்தடியில கூட வெச்சு வகுப்பு நடத்திக்குவம் சார்’ என்றார் அவர். இன்னும் இரண்டு வகுப்பறைகள் விலங்கியல் துறைக்கானவை. அத்துறைத்தலைவர் முனைவர் மோ.இராஜசேகர பாண்டியன் நல்ல கல்வியாளர்; நிர்வாகி. அவரிடம் கேட்டதும் ‘நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும். எடுத்துக்கங்க சார். நாங்க பாத்துக்கறோம்’ என்றார். என் மீது அந்த அளவு நம்பிக்கை கொண்டவர் அவர்.

இப்படிப் பலருடைய ஒத்துழைப்போடு விடுதி வருவதற்கான வேலைகள் நடந்தன. இதற்கிடையில் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து விட்டேன். ஓய்வு
பெறுவதற்குள் விடுதியைத் தொடங்கிவிட வேண்டும் என்பதே என் ஒரே விருப்பமாக இருந்தது. அது நடக்கவில்லை. அரசாங்க கோப்புகள் என் வேகத்திற்கு நகருமா? எனக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற பொருளியல் துறைத் தலைவர் முனைவர் மா.குமாரவேலு அடுத்தடுத்த முயற்சிகளைத் தொடர்ந்தார். இதோ அதோ என்று போக்குக்காட்டிக் கடைசியாக வந்தே விட்டது.

நான் ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு விடுதி தொடக்க விழா நடந்தது. விழா கல்லூரி நிர்வாகம் சார்ந்ததல்ல; மாவட்ட நிர்வாகம் சார்ந்தது. விழாவுக்கு எனக்கு அழைப்பில்லை. ஏன், சட்டமன்ற உறுப்பினருக்கே அழைப்பில்லை. மாவட்ட நிர்வாகத்திலும் பிற்பட்டோர் நலத்துறைக்குள்ளும் என்ன
பிரச்சினையோ தெரியவில்லை. பெரிதாக என்ன இருக்கப் போகிறது, வெற்று அகந்தையைத் தவிர. எனக்குக்கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் முயற்சி நிறைவேறியது என்னும் மகிழ்ச்சியே போதும் என்று சமாதானம் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினருக்கு இது ஒரு சாதனை. அவரது அரசியல் வாழ்வில் தம் தொகுதிக்கு ஏற்படுத்திக் கொடுத்த முக்கியமான சாதனைத் திட்டம். ஆனால் அவருக்கும் அழைப்பில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

அவ்வருத்தத்தைச் சரி செய்யும் பொருட்டுக் கல்லூரி நிர்வாகம் எங்கள் இருவரையும் ஆண்டு விழாவிற்கு அழைத்து அதனுடன் பாராட்டு விழா ஒன்றையும் நடத்தியது. சட்டமன்ற உறுப்பினருக்கும் எனக்கும் மாணவியர் கொடுத்த வரவேற்பும் ஆரவாரமான கைத்தட்டலும் இன்னும் என் காதுகளில் நிறைந்திருக்கின்றன.
நூறு மாணவியருக்கு இடம் ஒதுக்கியிருந்தனர். இன்னும் ஐம்பது மாணவியர் சேர இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர் என்பதை அறிந்து அதற்கும் சட்டமன்ற உறுப்பினர் முயன்றார். அவர் முயற்சியால் கூடுதலாக ஐம்பது இடங்களை அரசு ஒதுக்கியது.

இப்போது நூற்றைம்பது மாணவியருக்கான இடத்துடன் மகளிர் விடுதி கல்லூரிக் கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ளது. இன்னும் ஓராண்டில் விடுதிக் கட்டிடம் சகல வசதிகளுடன் தனியாகக் கட்டப்படும். இப்போது கல்லூரி முதல்வராக என் நண்பரும் இக்கல்லூரியில் சில ஆண்டுகள் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றியவருமான முனைவர் அ.இராஜா இருக்கிறார். அவர் இலக்கிய ஆர்வலர். திராவிட இயக்க அரசியல் பின்னணி உடையவர். தலித் அரசியல் குறித்த நல்ல புரிதல் கொண்டவர். பாராட்டு விழாவிற்குச் சென்ற போது அவரிடம் ‘இந்தக் கல்வியாண்டில் பெற்றோர் வந்து கேட்டால், மகளிருக்கான விடுதி கல்லூரிக்குள்ளேயே இருக்கிறது, தாராளமாக இடம் கிடைக்கும், கல்லூரியில் உங்கள் பெண்ணைத் தைரியமாகச் சேருங்கள் என்று நீங்கள் சொல்லலாம்’ என்று சொன்னேன். அவர் மகிழ்ச்சியோடு ‘சொல்கிறேன்’ என்றார்.

பாராட்டு விழா மாணவியர் சூழ்ந்து கொண்டனர். விடுதி வந்துவிட்டது, மாணவியர் சேர்ந்துவிட்டனர். மிகவும் பிற்பட்டோர் நலத்துறை விடுதி என்றாலும் அதில் ஆதிதிராவிட மாணவியருக்கும் இடமுண்டு. கிட்டத்தட்ட பாதிப்பேர் ஆதிதிராவிட மாணவியர் சேர்ந்திருந்தனர்.

விடுதிக் காப்பாளராக இருக்கும் பெண்மணியைப் பற்றி மாணவியர் கடுமையான புகார்களைத் தெரிவித்தனர். அரசு ஒதுக்கீட்டின்படி சாப்பாடு தருவதில்லை, ஏக வசனத்தில் திட்டுகிறார், விடுதியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று மிரட்டுகிறார், இரண்டு நாள் விடுமுறைக்குக் கூட வீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டுகிறார் எனப் பல வகைப்பட்ட புகார்கள். ஒரு மாணவி மெல்லச் சொன்னார், ‘ஐயா, அந்தம்மா சாதி பாக்கறாங்கய்யா.’

எனக்கு அதிர்ச்சியாக இல்லை. படித்தவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களில் பலர் அற்பர்கள். அந்தப் பெண்மணியும் கீழ்நிலையிலிருந்து கஷ்டப்பட்டுப் படித்து இந்தப் பணிக்கு வந்தவராகவே இருப்பார். அடிநிலையிலிருந்து வரும் மாணவியரிடம் சற்றே ஈரத்துடன் நடந்து கொள்ளத் தெரியவில்லை. அணையா அடுப்பு உருவாக்கிப் பசி போக்கிய வள்ளலார் இருநூறாவது ஆண்டு இது. மாணவியருக்கு உரிய உணவு ஒதுக்கீட்டில் லாபம் பார்க்கும் நிலையைக் கேட்டு மனம்
வாடியது. ‘நான் இப்போது பணியில் இல்லைம்மா. நம்ம எம்.எல்.ஏ.விடம் சொல்றம்மா’ என்று அவர்களுக்குப் பதில் சொன்னேன். அவரிடம் தகவல் தெரிவித்தேன். எல்லாம் நல்லபடி நடந்த பிறகும் கடைசியில் ஒரு நந்தி வந்து வழி மறிக்கிறது. சிவனே தஞ்சம்.

புகார்களைக் கடந்து பல மாணவியர் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன். பலர் நன்றி சொன்னார்கள். ஒரு மாணவி ‘ரொம்ப நன்றிங்க ஐயா. இப்ப நிம்மதியா இருக்கறங்கய்யா’ என்று சொன்னார். அவர் கண்களில் நெகிழ்ச்சியுடன் துளிர்த்த கண்ணீரைக் கண்டேன். கல்வி கற்கும் காலத்தில் தங்க இடமும் உணவும் கிடைத்தால் நிம்மதி தானாக வந்து சேர்ந்துவிடும். ‘நிம்மதி’ என்று அம்மாணவி சொன்ன சொல்லும் கலங்கிய நீரும் என் நெஞ்சில் ஆழ விழுந்தன. நான் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த சாதனை இது என்று சொல்லிக்கொள்ள அந்தச் சொல்லும் கண்ணீரே சாட்சிகள்.

murugutcd@gmail.com