பிப்ரவரி 16, 2023 அன்று “collapse and recovery” என்ற தலைப்பில் உலக வங்கி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில், ‘2020’ ஆம் ஆண்டு ஏற்பட்ட லாக்டவுன் கால சூழ்நிலை, மனித “வாழ்க்கை சக்கரத்தின்” சில முக்கிய பற்களை அகற்றி விட்டிருக்கிறது. இதனால் socialization எனப்படும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் போக்கில் இருந்து மனித குலம் சற்றே தடம் புரண்டிருக்கிறது என அந்தக் கட்டுரை தெரிவித்திருக்கிறது. முக்கியமாக குழந்தைகள் சமூகத்துடன் கலப்பது குறைந்திருக்கிறது என அந்தக் கட்டுரை ஒரு அலாரம் அடித்திருக்கிறது.

சமீபமாக நிறைய குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள், “படிப்பில் கவனமின்மை, உற்றார் உறவினர்களிடம் பேசுவதில்லை, வெளியே போய் விளை
யாடுவது கிடையாது, எல்லாவற்றிற்கும் அடம் பிடிக்கிறான், அவங்க அம்மாவை அடிக்கிறான், போன் இல்லேன்னா சாப்பிடுறது கூட இல்ல, எந்நேரமும் போனும்
கையுமா இருக்கிறான்”னு பல புகார்களை சொல்வதைக் கேட்கிறேன். உங்க வீட்லகூட ஒரு குட்டி வாண்டு இதே போல இருக்கிறதை நீங்க கவனிச்சிருக்கலாம்…!
குழந்தைகளோட வளர்ச்சி படி நிலைகளில் மூன்று விசயங்கள் முக்கியமானது. ஒன்று, தன்னைத் தானே பேணிக் கொள்வது, இரண்டு, அடிப்படை கல்வி கற்றுக்
கொள்ளும் ஆற்றல், மூன்று, சமூகத்துடன் கலந்து இருப்பது. (social inclusion). ஒரு குழந்தை இயல்பாக இயங்குவதற்கு சமூக கலப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்றுஆகும். “திருமண வீட்டில் சிரிக்க வேண்டும், எழவு வீட்டில்சோகமாக இருக்க வேண்டும்” என்ற நுண்ணுனர்வு சமூக கலப்பின் மூலம்தான் சாத்தியமாகும். அப்படி இல்லாமல் அதை மாற்றி, சிரிக்க வேண்டிய இடத்தில்அழுவது, அழ வேண்டிய இடத்தில் சிரிப்பது என இருக்கும் ஒருவனை மனநலம் பிறழ்ந்தவனாகத் தான் சமூகம் பார்க்கும். இந்த சமூக கலப்பு குறித்த புரிதல்தான் ஒரு ஒழுங்கை சமூகத்தில் கொண்டு வரும். உதாரணமாக ஸ்கூலில் வாத்தியாருக்குக் கீழ்படியும் குழந்தைதான் சட்டத்துக்குக் கீழ்படிந்து சமூகத்தில் சராசரி மனிதனாக உலா வருவான். கீழ்படியாமல் அடம் புடிக்கும் குழந்தைகள் social harmony எனப்படும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க வாய்ப்புண்டு.

கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட தனித்திருத்தல் என்ற மாற்றமானது வளரும் குழந்தைகளின் வளர்ச்சிப் படியில் மூன்றாவது நிலையான சமூக கலப்பில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்ற சந்தேகம் இந்த மாதிரி குழந்தைகளைப் பார்க்கும் போது இருந்து வந்தது. அதை இந்தக் கட்டுரை உறுதிப்படுத்தி இருக்கிறது.

லாக்டவுனுக்குப் பின் 3 வருடங்கள் நடந்த 25 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் கட்ட ஆராய்ச்சியில், பல நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான வளரும்
குழந்தைகள், இளம் சிறார்கள் மத்தியில் வளர்ச்சிப் படிகளில் பாதிப்புகளைக் கண்டறிந்து இருப்பதாக அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

கட்டுரையில் இருந்த மேற்கோளில், “the cognitive deficit intoday’s toddlers could translate into a 25% decline in earnings when these children are adults”. – இப்போதைய 3-5 வயது வரை உள்ள கொரோனா காலக் குழந்தைகளின் “அறிவாற்றல் குறைபாடு” காரணமாக அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது அவர்களின் வருமானம் 25% வரை பாதிக்கப்படும். என்கிறது கட்டுரை. இதில் வருமான விசயம் இரண்டாம் பட்சம்… லாக்டவுனால் ஏற்பட்ட “அறிவாற்றல் குறைபாடு” என்ற வார்த்தை கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான ஒன்றாகும்…!

மனித மூலதனத்தில் அறிவு, திறன் மற்றும் ஆரோக்கியம் என மூன்றும் சீராக இருக்க வேண்டும். அதுதான் ஒரு குழந்தையின் வளர்ச்சியையும் அது மூலமாக ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும். ஆனால் லாக்டவுன் காலம் உருவாக்கிய வெற்றிடம், சமூக கலப்பில் இருந்து ஒரு தரப்பு நபர்களை விலக்கி வைத்திருக்கிறது என்பது நமது குழந்தைகளுக்கும் நாட்டின் எதிர்காலத்துக்குமே சவாலான ஒன்றாகும்.
“கொரோனா பேபி” குழந்தைகளுக்கு உள்ள அறிகுறிகள் என்ன?

கவனக்குறைபாடு
மறதி
எளிதாக கவனம் சிதறுவது
பேசுவதைக் காதில் வாங்குவதில்லை
போனில் அதிக நேரம் செலவழிப்பது
பொருட்களை மறந்து எங்காவது வைத்து விட்டு வருவது
பள்ளிப் பாடங்களில் ஆர்வமின்மை
தனக்கென ஒரு உலகை உருவாக்கி அதில் வாழ்வது.
பெற்றோர், சகோதரர்களுடன் தொடர்பு கொள்வதில் தடுமாற்றம்,
பிடிவாதம்,
படபடப்பு,
யோசிக்காமல் செயல்படுவது,
ஓரு டார்கெட்டை முடிக்க இயலாமல் தடுமாறுவது,
அளவுக்கு அதிகமாகப் பேசுவது,
தீர்மானமில்லாத உடல் அசைவுகள், ஓடிக்கொண்டே இருப்பது.
பயமின்மை,
அடுத்தவரைப் பேச விடாமல் நடுவில் பேசிக்கொண்டே இருப்பது.

இத்தகைய செயல்பாடுகளை உங்கள் குழந்தைகளிடம் கவனித்தால் அவர்கள் சமூக கலப்பு படிநிலையில் பலவீனமாக இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
பயப்படத் தேவையில்லை…! இதற்கு என்ன தீர்வு என்பதைப் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு மேற்கண்ட தொந்தரவுகள் இருப்பதைக் கவனித்தால் அவர்களை ஒரு குழந்தைகள் மருத்துவரை மதிப்பீடு செய்யச் சொல்லவும். மருத்துவர், உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிப்படி நிலையில் குறைபாடு இருப்பதை உறுதி செய்தால் குழந்தைக்குப் பிரச்சனைக்குத் தகுந்தவாறு மருந்துகள் அல்லது தெரபிகளைப் பரிந்துரைப்பார்கள்.

தெரபி என்பதில் முக்கியமானது behavioral therapy என்பதாகும். அதாவது குழந்தையை சமூகத்துடன் கலக்கப் பழக்குவது.

ஸ்டெப் 1: தனித்திருப்பதைத் தவிர்ப்பது. குழந்தையைக் கோயில், பார்க், பள்ளிகள் என அதிக நபர்கள் இருக்கும் இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வது, மற்ற குழந்தைகளுடன் விளையாட விடுவது என அவர்களின் சமூக கலப்பை உறுதி செய்வது அவசியம்.
ஸ்டெப் 2: கெஜட்களில் இருந்து குழந்தைகளை விடுவித்தல். மொபைல், ஆன்லைன் கேம் உட்பட குழந்தைகள் தனித்திருக்க உதவும் கெஜட் பயன்பாடுகளில் இருந்து குழந்தைகளை விடுவித்தல் அவசியம். இதற்காக அவர்களின் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் சின்னச் சின்ன விளையாட்டுக்கும் பரிசுகள் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
ஸ்டெப் 3: பெற்றோரை சார்ந்திருக்கும் தன்மையில் இருந்து விலக்குதல். அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவேன் என்ற நிலையில் இருந்து மாற்றுவது அவசியம். அம்மா இல்லாமல் வெளியே செல்ல மாட்டேன். நண்பர்களுடன் பழக மாட்டேன் போன்ற மன நிலையை மாற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
தனியாக டேபிளில் உட்கார்ந்து உணவு அருந்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். தனியாகக் கடைக்குச் செல்வது, மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு எல்லாம் பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்தலாம். எக்காரணம் கொண்டும் 4 வயதுக்கு மேல் உணவை ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
Social Skill Training: சமூக கலப்பை உறுதி செய்யும் வகையில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் எடுக்கச் சொல்வது, போஸ்ட் ஆபீஸ், பேங்க் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிகாரிகளிடம் பேசவிடுவது, திருமண வீடு, விசேஷ வீடுகளுக்கு அழைத்து சென்று அந்தச் சூழலில் இயங்க விடுவது, பெரியவர்
களிடம் பேச விடுவது, ஹோட்டலில் ஆர்டர் செய்யச் சொல்வது என குழந்தைகள் தயக்கத்தைக் களைந்து சமூக கலப்பில் ஈடுபடுவதையும் பிற மனிதர்களிடம் உரையாடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

உணவுகள்: ஒரே மாதிரியான உணவுகளைத் தொடர்ந்து எடுக்கும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்க்க மெதுவாக வெவ்வேறு உணவுகளைக் கொடுத்துப் பழக்குவது அவசியம். 3 வயதிலும் பால் மட்டும் அருந்தும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக வாய்ப்புண்டு. காய்கறி, மாமிசம், தானியங்கள், நார்சத்து, பழங்கள் என அனைத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

மேற்கண்ட செயல்களைச் செய்வதில் உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைகள் உங்களுக்குக் கீழ்படியவில்லை என்றாலோ parent training education programs எனப்படும் பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு பயிற்சிகளை நீங்கள் சிறப்பு மனநல ஆலோசகர்களிடம் கலந்து எடுக்கலாம். இத்தகைய ஆலோசகர்கள் உங்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மாற்றுவதற்கு cognitive behavioral therapy எனப்படும் சிந்திக்கும் திறனை மாற்றும் பயிற்சிகளையும் அளிப்பார்கள்.

குழந்தைகளின் அறிவு, திறன், ஆரோக்கியத்தில் எந்த சமரசமும் இல்லாமல் அவர்களை வளர்த்துக் கொண்டு வருவதே வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும். குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நாம் கண்காணிப்பதும் அதை ஒழுங்குபடுத்துவதும் பெற்றோராக நம் முக்கிய கடமையாகிறது. மேற்கோள் காட்டிய கட்டுரையின் முடிவில் உலக வங்கியின் தலைவர்David Malpass,“ அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் ஆரோக்கியம் குறித்த ஒரு அதிர்ச்சி ஏற்படாமல் காக்க புதிய பாதையை வகுத்து தகுந்த முதலீட்டினை இன்றே தங்கள் மக்களின் அறிவுத்திறனை வளர்க்கச் செய்து கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தி இருக்கிறார். நாடுகள் திட்டம் வகுக்கிறதோ இல்லையோ நாம் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கவனத்துடன் திட்டங்கள் தீட்ட வேண்டிய முக்கிய தருணம் இது.

sarav.dr2@gmail.com