நாம் பொதுவாக ஒரு வேலைதான் பார்ப்போம். அதையும் ஒழுங்காகப் பார்க்க மாட்டோம் என்பது வேறு விஷயம். ஆனால் சில வேலைகள் பல வேலைகள் இணைந்த காம்போவாக இருக்கின்றன. அப்படியான ஒரு வேலைதான் அமெரிக்காவின் பார்க் ரேஞ்சர் என்ற வேலை. ஒரு ஸ்பூன் கேசரி, ஒரு குட்டி இட்லி, ஒரு சின்ன பூரி, குட்டி தோசை, இரண்டு ஸ்பூன் பொங்கல் என்று சில ஹோட்டல்களில் மினி டிபன் தருகிறார்களே அது போல், கொஞ்சம் போலீஸ், கொஞ்சம் வனக்காவலர், கொஞ்சம் மீட்புப் பணி, கொஞ்சம் ஆம்புலன்ஸ் டிரைவர், கொஞ்சம் மருத்துவ உதவியாளர், கொஞ்சம் சுற்றுச்சூழல் பாதுகாவலா், குதிரைவீரர் என்று பல கொஞ்சம்களின் காம்போவேலை இது. இந்த எல்லா வேலைகளையும் கொஞ்சம் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவோர் இந்த வேலைக்கு வருவார்கள்.

அப்படி வந்தவர்தான் ஆன்ட்ரியா லாங்க்ஃபோர்ட். அமெரிக்காவின் பல தேசியப் பூங்காக்களிலும் வேலை பார்த்த அவரது அனுபவங்களின் தொகுப்பு Ranger Confidential என்று அருமையாக வந்திருக்கிறது. வாழ்வின் மறக்க முடியாத அனுபவத்திற்காக மக்கள் தேசியப் பூங்காக்களுக்குச் செல்கின்றனர். அங்கேயே வேலை பார்ப்பது என்றால் அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்கும்!

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். நம் நாட்டில் காண்டாமிருகம், சிங்கம், புலி, யானை போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் காடுகளை நாம் தேசியப் பூங்கா என்கிறோம். அமெரிக்காவில் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை எழில் கொஞ்சும் எல்லா இடங்களையும் – பனிமலைகள், பாலைவனங்கள், பெரும் மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள், அருவிகள் – தேசியப் பூங்கா என்றே அழைக்கிறார்கள். ஒரு பனிமலையில் பணிபுரியும் ரேஞ்சர் அடுத்த இடமாறுதலில் பாலைவனத்தில் வேலை பார்க்க நேரும்.

ஏற்கனவே சொன்னது போல் இவர்கள் காம்போ பணி செய்வதால் வனக்காவலர் என்பது போல் ஒரு குறிப்பிட்ட பணியைக் குறிக்கும் சொல்லால் குறிப்பிடத் தயக்கமாக இருக்கிறது. எனவே தமிழில் என்ன கூறுவது என்று தெரியாமல் ஆன்ட்டிரியாவின் பணியை ரேஞ்சர் என்றே நான் குறிப்பிடுகிறேன்.

ஆன்ட்ரியா சிறுவயதில் நான் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் பார்க்க ஆசைப்பட்டவள். அதனால் படிப்பை முடித்ததும் இந்த ரேஞ்சர் வேலையில் சேர்ந்தாள். ஒவ்வொன்றிற்கும் கடுமையான பயிற்சி. அடிபட்டவர்களுக்கு முதலுதவி செய்ய நான்கு வார வகுப்பு. 100 மணி நேரம் மருத்துவமனையில் பயிற்சி. பிறகு ஆம்புலன்சில் 100 மணி நேரம் சுற்ற வேண்டும். குதிரையேற்றத்திற்கு ஆறுவாரப் பயிற்சி – குதிரை லத்தியை அள்ளுவதிலிருந்து அனைத்திற்கும் பயிற்சி. பயிற்சிகளும் கடினம். வேலையும் கடினம். புத்தகத்தின் தலைப்பைத்தான் மேலே
சொன்னேன். துணைத் தலைப்பைச் சொல்லவில்லை. துணைத்தலைப்பு Living, Working and Dying in National Parks என்பதாகும். ஒவ்வொரு வேலைக்கும் யார் இந்த வேலைக்குப் போகிறீர்கள் என்று கேட்காமல் திருவிளையாடல் வசனம் மாதிரி யார் சாகப் போகிறீர்கள்? என்று கேட்கும் பணிச்சூழல். மிக மிகஆபத்தான வேலை. பல ரேஞ்சர்கள் பணியின் போது உயிரை விட்டிருக்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களும் பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்கு மார்பிலும், தோளிலும் அறுபத்திநான்கு விழுப்புண்களோடு வேலை பார்க்கிறார்கள்.

இதில் பெண் என்றால் இன்னும் கடினம். உனக்கு ரெண்டும் பெருசா இருக்குன்னு தான் டக்குன்னு செலக்ட் பண்ணிட்டாங்க என்று சக ஆண் ரேஞ்சர்கள் சர்வசாதாரணமாகச் சொல்வார்கள். அவர்களுக்கு நடுவில் வேலை பார்த்து, அவர்களை முந்தி மரியாதையும் பதவி உயர்வும் பெற வேண்டும் என்றால், ஆண்களை விட சரியாகக் குறி பார்த்துச் சுட வேண்டும். ஆண்களை விட அதிகமாக ஓவர்டைம் வேலை செய்ய செய்ய வேண்டும். ஆண்களை விட வேகமாக ஓடி 18 மைல் தூர ஓட்டத்தை அவர்கள் ஓடி முடிப்பதற்கு முன்பாக ஓடி முடிக்க வேண்டும். அவர்களை விட சிறப்பாகக் குதிரையேற்றம் செய்ய வேண்டும். வனங்களில் சட்ட விரோதக் காரியங்களைச் செய்பவர்களை அதிக எண்ணிக்கையில் கைது செய்ய வேண்டும். சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் கொடுங்கரடியை நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்த வேண்டும். ஹெலிகாப்டரில் தொங்கியபடி, மலைமுகட்டில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணியைக் காப்பாற்ற வேண்டும். வண்டி ஓட்டவே முடியாத மலைப்பாதையில் சென்று விட்டு, பல கிமீ தூரம் ரிவர்சிலேயே ஓட்டி வரவேண்டும். எல்லாம் செய்து தன்னை நிரூபித்துத்தான் இந்தப் பணியைச் செய்திருக்கிறார் ஆன்ட்ரியா. இந்த நூல் தேசியப் பூங்காக்கள் பற்றிய டாப் 10 நூல்களில் முக்கியமானது என்று நேஷனல் ஜியாக்ரபிக் குறிப்பிட்டுள்ளது.

பார்க்கை மக்களிடமிருந்து பாதுகாப்பது, மக்களைப் பார்க்கிடமிருந்து பாதுகாப்பது, மக்களை மக்களிடமிருந்து பாதுகாப்பது என்ற மூன்று பாதுகாப்புகள்தான் பார்க் ரேஞ்சர்களின் பணி உறுதிமொழி. இந்த மூன்று பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்துவதற்குள் சமயங்களில் உயிரே போய்விடும். ஆன்ட்ரியா தன் உயிரைக் கொடுத்து வேலை செய்த தருணங்களின் அழகான தொகுப்பு இந்த நூல்.

கடல் ஆமைகள் முட்டை போடுவது, அந்த முட்டைகளைப் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது பற்றியெல்லாம் நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஆன்ட்ரியா இந்த வேலையைச் செய்திருக்கிறார். கடல் ஆமைக்கு இந்த உலகமே ஒரு போர்க்களம்தான். முட்டைகளைப் பிற விலங்குகள், மனிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். எல்லா முட்டைகளும் பொரிந்து விடாது. பொரிந்து பிறந்த குட்டி ஆமையைப் பெரிய பெரிய நண்டுகள் வந்து கவ்விச் சென்றுவிடும். அவற்றிடமிருந்து தப்பித்து, கடலுக்கு மெதுவாய் நடந்து செல்வதற்குள் பெரும் கடற்பறவைகள் வந்து கொத்திச் செல்லும். அதைத் தாண்டி, கடலுக்குள் சென்றால், சுறா மீன்கள்.. மீனவர்களின் வலைகள்.. பிறந்த ஆமைக் குஞ்சுகளில் 1 சதத்திற்கும் குறைவானவை மட்டுமே பெரிய ஆமையாக வளருமாம். ஆன்ட்ரியா ஆமை முட்டைகளை, குஞ்சுகளைக் காக்கும் பணியை விரும்பிச் செய்கிறாள்.

இது போன்ற பார்க்குகளுக்கு ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். கோடை காலங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூடுவார்கள். எல்லோருக்கும் அந்தப் பார்க்கில் உள்ள ஆபத்துகளைக் கூற வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டும். கரடி தாக்க வந்தால் என்ன செய்வது? தேள் கடிக்கு என்ன செய்ய செய்ய வேண்டும்? கிராண்ட் கேன்யான் போன்ற மொட்டை பாலைவனப் பிரதேசங்களில் தாகம் எடுக்கும் போது என்ன செய்வது? பாலைவனத்தில் ஒரே சமயத்தில் நிறைய தண்ணீர் குடித்துவிடக் கூடாதாம். அது உடலில் சோடியத்தின் அளவை குறைத்து விடுமாம். அது மூளையை பாதித்து, கோமாவில் கொண்டு போய் விடக்கூடுமாம். உண்மையில் பார்க் ரேஞ்சர்களின் பணி, வரும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி, காலா காலத்தில் இடத்தைக் காலி செய்ய வைப்பதுதான். அவர்கள் இருக்க இருக்க ஆபத்துதான். குருவாயூரில் யானைகள் இருக்கும் இடமான புன்னத்தூர் கோட்டாவில் பல இடங்களில், யானைகள், வனவிலங்குகள். எந்த நேரம் எப்படி நடந்து கொள்ளும் என்று கணிக்க முடியாதவை. இந்த இடத்தை விட்டு சீக்கிரமாக நீங்கள் வெளியில் செல்வது நல்லது என்று அறிவிப்புகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது போலத்தான். இந்த எச்சரிக்கைகள் எதையும் காதில் வாங்காமல் ஒரு சுற்றுலாப் பயணி சர்வ அலட்சியமாக இருப்பார். அன்று அவர்தான் சரியாக ஆபத்தில் மாட்டுவார். அத்தனை ரேஞ்சர்களும் அவருக்காகப் பாடுபட வேண்டியதாக அமையும் என்கிறாள் ஆன்ட்ரியா.

கிராண்ட் கேன்யான் போன்ற இடங்களில் விமானச் சுற்றுலா இருக்கிறது. அது ஆண்டுக்கு 100 மில்லியன் டாலருக்கு மேல் புழங்கும் பெரிய தொழில். ஆண்டுக்கு சுமார் 50000 விமானச் சுற்றுலா சேவைகள் நடக்கின்றன. 750000 மக்கள் இந்த விமானச் சுற்றுலாவில் இயற்கைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். இதில் சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விமான விபத்து நடக்கிறது. ஆன்ட்ரியா கோஷ்டிகள் ஹெலிகாப்டரில் போய் தொங்கியபடி அடிபட்டவர்களைத் தூக்க வேண்டும். இல்லை, இறந்தவர்களைக் கொண்டு வரவேண்டும். அதற்கு அத்தனை பயிற்சி. அத்தனை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள். காது மறைப்பான் போட்டுக் கொண்டாயிற்றா? ஆயிற்று. கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி? போட்டாயிற்று. தீப்பற்றாத விமானப் பயண உடை அணிந்தாயிற்றா? ஆயிற்று. அதன் காலரைத் தூக்கி விட்டிருக்கிறாயா? தூக்கிவிட்டிருக்கிறேன். உடையின் முழுக்கை கையை முழுவதுமாக மூடியுள்ளதா? மூடியுள்ளது. கையுறை
கள் அணிந்தாயிற்றா? ஆயிற்று.தோல் பூட் ஸ் போட்டுள்ளாயா? போட்டுள்ளேன். பேண்ட்டை பூட்சுக்குள் சொருகியிருக்கிறாயா? சொருகியிருக்கிறேன். வயர்லெஸ் ரேடியோ வேலை பார்க்கிறதா? பார்க்கிறது. அது மார்புக் கவசத்தில் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? உள்ளது. தொங்கும் கயிறு உறுதியாக மாட்டப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. ஸ்டிராப்புகளை எல்லா பக்கிள்களிலும் விட்டு மாட்டியிருக்கிறீர்களா? அவ்வாறே மாட்டியிருக்கிறோம். இது போல் இன்னும் நூறு விஷயங்களை ஒருவருக்கொருவர் கேட்டு, சோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஹெலிகாப்டரிலிருந்து தொங்கி விழுந்து, இவர்களைத் தேட மற்றொரு ஹெலிகாப்டர் வர நேரும்.

ரேஞ்சர்கள் தங்கும் இடங்களிலும் சர்வ ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். தங்களது டெண்டிற்கு வந்ததும் கரடிகள் டெண்ட் கூரையில் ஓட்டை போட்டு இறங்கி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். உடைகளில், ஷூக்களில் தேள் உள்ளதா என்று ஒவ்வொரு முறையும் பார்த்துக் கொண்டுதான் அணிய வேண்டும். தேள்களுக்கு வெளிச்சம் , வெப்பம் ஆகாது. எனவே, இரவு முழுக்க எல்லா விளக்குகளையும் எரிய விட்டபடி தூங்க வேண்டும். என் சிறுவயதில் விகடனில் முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று மதன் ஜோக் போடுவார். அதில் முத்தண்ணா, தேள் வந்துவிடக் கூடாது என்று கட்டில் கால்களை பெரிய பாட்டில்களில் நீர் நிரப்பி, அதில் நிறுத்தியிருப்பதாக ஒரு ஜோக் வந்தது. அது போல் பாட்டில்களில் கட்டில் காலை நிறுத்துபவர்களும் உண்டு. தேள் 113 டிகிரி வெப்பத்தில் இறந்து விடுமாம். எனவே அது பகல் நேரத்தில் வெளியே தலைகாட்டாது. ஆனால், ஆறறிவுபடைத்த மனிதர்கள் சாகசம் என்ற பெயரில் எதுவுமே கிடைக்காத, கொடும் பாலைவனமான கிராண்ட்
கேன்யானுக்கு நல்ல வெயில் காலத்தில் வந்து திண்டாடுவார்கள். நம் ஆட்களுக்கு தேளை விட அறிவு கம்மி என்று திட்டுகிறார் ஆண்ட்ரியா. கிராண்ட் கேன்யானுக்கு தற்கொலை செய்து கொள்வதற்காகவே வருடாவருடம் பெரிய கோஷ்டி வருகிறது. அவர்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலை. கிராண்ட் கேன்யானில் வருடத்திற்கு 300 தற்கொலைக் கேஸ்களைத் தடுத்து, நல்ல புத்தி சொல்லி அனுப்புகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட தினமும் ஒரு கேஸ்.

ஆளரவமற்ற பிரும்மாண்டமான இடங்கள் என்பதால் குற்றங்கள், அதுவும் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும். கடற்கரைகள் கொண்ட பார்க்கு
களில் டாப்லெஸ் பீச், முழு நிர்வாண பீச். தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான பீச், (ஆண் ஜோடிகள், பெண் ஜோடிகளுக்குத் தனித்தனியாக) என்றெல்லாம் உண்டு. ஆனால் மற்ற இடங்களில் டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாணத்திற்கு அனுமதி இல்லை. ஆனால், சர்வசுதந்திர நாடான
அமெரிக்காவில் மக்கள் இயற்கை எழில் கொஞ்சும் ஆளரவமற்ற இடம் என்றாலே, ஆடைகளைக் கழற்றி எறிந்து விடுவார்கள். ஆன்ட்ரியா கோஷ்டியினருக்கு இவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பது, கட்ட மறுத்தால் கைது செய்வது என்று கூடுதல் வேலை. ஒரு நாள் ஒரு மலைச் சிகரத்திலிருந்து ஒரு பெண் தன்னை ஒருவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தகவல் தருகிறாள். ஆன்ட்ரியாவும், மற்றொருவரும் உடனடியாக ஹெலிகாப்டரில் போய் மலையுச்சிக்கு இறங்குகிறார்கள். பார்த்தால், புகார் தந்த பெண் நிர்வாணமாகப் படுத்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ரசித்தபடி யாரோ ஒருவன் சுயஇன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவள் அவன் மீது புகார் தந்தாளே, தவிர, சட்டென்று உடையை அணியவில்லை! அவன் மீது பாலியல் சீண்டல் வழக்கு. இந்தப் பெண் மீது நிர்வாணமாக இருந்ததற்கு வழக்கு. அபராதத் தொகையை விட ஆயிரம் மடங்கு ஹெலிகாப்டர் செலவு!

இத்தனை பாடுபடுவதற்கு ஊதியம் மிகவும் குறைவு. இது போன்ற பார்க்குகளில் அனுமதி பெற்று உணவு விடுதி நடத்துவார்கள் அல்லவா? அங்கே பணிபுரிபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 11 டாலர் சம்பளம். யானையேற்றம், குதிரையேற்றம், ஹெலிகாப்டர் ஏற்றம் கற்ற ஆண்ட்ரியா கோஷ்டிக்கு மணிக்கு மூன்றே முக்கால் டாலர் சம்பளம்! ஆனாலும், இயற்கையை, சுற்றுச்சூழலை, அரியவகை விலங்கினங்களைக் காக்கி
றோம், சுற்றுலா வந்த இடத்தில் ஆபத்தில் மாட்டிக்கொண்டோரைக் காக்கிறோம் என்ற மனத்திருப்திக்காகவே இவர்கள் பலரும் வேலை செய்கிறார்கள். மலையேற்றத்தின் போது. மலை ஏறுபவர்களுக்கு இந்த ரேஞ்சர்கள் சொல்லும் அறிவுரை அத்தனை அற்புதமானது.
கரடிகள் மட்டுமே வனத்தில் மலம் கழிக்கலாம். மனிதர்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. சிறுநீர் கூட கழிக்கக் கூடாது. இங்கு பனியை உருக்கித் தான் சமையல். நீங்கள் மஞ்சள் நீரிலா சமைக்கப் போகிறீர்கள்? மலத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு, உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள். விமானத்தில் சென்று உங்கள் ஊரில் இறங்கி, அங்கே அதைத் தூக்கிப் போடுங்கள். இந்த மலைகளில் நீங்கள் புகைப்படம் தவிர வேறொன்றையும் எடுத்துச் செல்லக் கூடாது. அதே போல், உங்கள் காலடித் தடத்தைத் தவிர வேறொன்றையும் விட்டுச் செல்லவும் கூடாது.

புத்தகத்தைப் படித்த போது, ஆண்ட்ரியா போன்றவர்கள், அவர்களுக்கு அமெரிக்காவில் தரப்படும் பயிற்சி, இது போன்ற இயற்கை எழில்மிக்க இடங்களைப் பார்க்கவும், பாதுகாக்கவுமான ஏற்பாடுகள் எல்லாம் நம் நாட்டில் எப்போது வருமோ என்று ஏக்கமாக இருந்தது. அது வரை இங்கு குரங்கணி விபத்துகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

subbarao7@gmail.com