பத்தாயிரம் ஆண்டு (!) கால பெருமையுள்ள சனாதன தர்மத்தின் உச்சம் வள்ளலார் என்று அண்மையில், அருட்பிரகாச இராமலிங்க அடிகளாரின் (5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இருநூறாவது ஆண்டுவிழாவில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சைக்குள்ளானது. ஒரு மாநிலத்தில் ஆட்சியே நடந்துவிடக்கூடாது என்பதற்காகவென்றே தில்லியால் அனுப்பப்பட்ட ஆளுநர், இவ்விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்வது புதிதல்ல. ஆனால், தமிழ்நாடு அரசு மிகச்சரியாகவே வள்ளலாரின் இருநூறாவது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், ஆளுநரின் இந்தக் கருத்துகளை
விமர்சித்து எதிர்கொள்ளாமல் நாம் கடந்து சென்றுவிடமுடியாது. அவரது கருத்துக்கு தமிழ்நாட்டு அமைச்சர்களும் அரசியல் தலை
வர்களும் ஏற்கனவே பதில் கூறியிருந்தார்கள். வள்ளலாரை சனாதனி என்று கூறமுடியாது என ஒரு வாக்கியத்தில் சொல்லி நாமும் கடந்துசென்றுவிடமுடியும். தமிழ்நாடு அதை நன்கு அறியும்.

ஆனால் வள்ளலாரை மீள்வாசிப்பு செய்யும் காலமாகவும் இது இருக்கிறது. இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைத்துவிடுவதென திட்டமிட்டு செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் குரலாக மட்டுமே தொடர்ந்து ஒலித்துவரும் ஆளுநரின் கருத்துகளை வழக்கம் போல, ‘ஏதோ அவர் விஷயம் தெரியாமல் பேசுகிறார்’ என்று ஒதுக்கிவிடமுடியாது. சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து தொடர்ந்து தமிழ்நாட்டில் அவர் பேசிவருகிறார். சனாதன தர்மம்
தான் இந்து ராஷ்டிரம் என்று அண்மையில் ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கூறியிருந்தார். இந்தப் பின்னணியில்தான் ஆளுநரின் கருத்தை நாம் பார்க்கவேண்டும்.

சனாதன தர்மம் என்ற சொல், ஓர் அழகு மிக்க நச்சுப்பாம்பு போன்றது. அது ஏதோ ஒரு மாபெரும் தத்துவம் என்று நம்மில் பலரும்கூட மயங்கிவிடுகிறார்கள். ஆனால் அதன் பொருள் என்ன? – தர்மம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு அறம் என்று தவறாகத் தமிழில் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதை நாம் நிறுத்தவேண்டும். தர்மம் என்று சொல்லுக்கு பல அர்த்தங்கள் அகராதியில் இருக்கலாம். ஆனால் சனாதன தர்மம் என்று பேசும்போது, தர்மம் என்றால் கடமை என்று பொருள், சனாதனம் என்றால் நித்தியமானது, நிரந்தரமானது, நிலையானது என்று பொருள். சனாதன தர்மம் என்றால் நிரந்தர கடமை. ஒவ்வொருவரும் அவரவர்க்கென, அவரவர் பிறந்த வர்ணம் அல்லது சாதியின் அடிப்படையில், விதிக்கப்பட்ட இந்த மாறாக் கடமைகளைச் செய்வதன் மூலமாகவே இந்த உலகின் ஒழுங்கைக் நிலைநாட்டமுடியும் என்று சனாதனிகள் கூறுகிறார்கள். ஒவ்வொரு சமூகப் பிரிவுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது என்று பேசுவதும் அனைத்து உயிர்களுக்கும் ஒரே அறம் என்று பேசுவதும் முற்றிலும் வெவ்வேறு உலகப் பார்வைகள். ஆரிய தர்மமும் தமிழ் அறமும் ஒன்றல்ல.

கேட்பதற்கு இயல்பாகவும் தர்க்க நியாயம் இருப்பதாகத் தோன்றும் இந்த சனாதன தர்மத்தின் சமூக வரலாற்று அடிப்படைதான் என்ன? வேறொன்றுமில்லை. ஆரிய சமூகத்தின் ஒரு பிரிவினராக இருந்த பிராமணர்கள், சமூகத்தில் தங்கள் நிரந்தர ஆதிக்கதை நிலைநிறுத்திக்கொள்வதற்காக உருவாக்கிய ஒரு முறைதான் இந்த சனாதன தர்மம். சமூகம் வர்ணங்களாக ஆக்கப்பட்டு, ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒரு கடமை உருவாக்கப்பட்டு, அவரவர் அந்தந்தக் கடமையை மாறாமல் மீறாமல் கடைபிடிக்கவேண்டும் என்பது அதன் அடிப்படை. மீறுவது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். சம்புகர்கள் மீறினால் ராமர்கள் தலைவாங்குவார்கள். ஏகலைவர்கள் மீறினால் துரோணாச்சாரியர்கள் விரல் வாங்குவார்கள்.

‘இந்து சமயம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (a way of life), அல்லது நிரந்தர நியதி (eternal law)’ என்று இந்து மதத் தலைவர்களும் நவீன கார்ப்பரேட் சாமியார்களும் சொல்வது உண்மைதான். அவர்களைப் பொறுத்தவரை கடவுள் அல்ல, மதம் அல்ல, தர்மம்தான் அடிப்படையானது. மதம் என்கிற பெயரிலான அமைப்பு முறைகளின் நோக்கம் இந்த தர்மத்தை நிலைநாட்டுவதே. மதத்துக்காக சனாதன தர்மம் இல்லை, சனாதன தர்மத்துக்காகவே மதம் இருக்கிறது. கடவுள், வழிபாடு, கலாச்சாரம் எல்லாம் தர்மத்தைக் காப்பாற்றவே இருக்கின்றன. இதை எந்த சனாதனியும் மறுப்பதில்லை. கடவுளை அடைய நீங்கள் இன்னின்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கூறுவதைவிட, தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதரிக்கிறார் என்பதுதான் சனாதன தர்மிகளின் கோட்பாடு. சனாதனத்தைக் காப்பாற்றுவதே கடவுளுக்கான கடமை. அந்தக் கடமையிலிருந்து அவரும் மீளவியலாது. தர்மத்தைக் காப்பாற்றும் பணி இல்லாத சமயங்களில், அவர்கள் திருவிளையாடல்களைச் செய்துகொண்டிருக்கலாம். மற்றபடி அசுரர்களிடமிருந்தும் அனாரியர்களிடமிருந்தும் ஆரிய மூவர்ணத்தாரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கடவுளர்களின் எண்ணிக்கை முப்பத்து முக்கோடியாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து காக்கவேண்டியது ஒன்றை மட்டுமே. அது சனாதன தர்மம்.

வேதங்களிலும் உபநிடதங்களிலும் பிந்தைய சமஸ்கிருத நூல்களிலும் காணப்படும் எண்ணற்ற சுவாரஸ்யமான கருத்துகளையும் தத்துவ வாசகங்
களையும் பட்டியலிட்டு, இதெல்லாம்தான் சனாதன தர்மம் என்று பரப்பும் ஒரு போக்கு இருக்கிறது. சத்குருக்களும் ஸ்ரீஸ்ரீகளும் உற்பத்திசெய்யும் வெகுசன ஆன்மீக சரக்குகளான இவை எளிய மனங்களில் ஆர்வத்தைக் கிளர்த்துகின்றன. அந்தக் கருத்துகள் நமக்கு சனாதன தர்மம் என்கிற சொல்லின் மீது குழப்பத்தையோ மயக்கத்தையோ வரவழைக்கின்றன. ஆனால் மனுஸ் மிருதியும் கீதையும் மிகத்தெள்ளத் தெளிவாகவே சனாதனக் கடமைகளை நம்முன் வைக்கின்றன.
நிஜம் மிகவும் தெளிவானது. வருணாசிரம தர்மமே சனாதன தர்மம். அதாவது வர்ணங்களின் கடமையே, நிரந்தரக் கடமை. கடமை ஒருபோதும் மாற்றப்படமுடியாதது. பிராமண, சத்திரிய, வைசியர் ஆகிய இருபிறப்பாளர்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் சமூகப் பிரிவுகளுக்கென வரை
யறுக்கப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவர்கள் அந்தந்தக் கடமைகளைச் செய்யவேண்டும். அந்தப் பிரிவுகளுக்காக உழைத்து மடிவதே நான்காம் வர்ணம் என்றழைக்கப்படும் சூத்திரர்களுக்கான கடமை. கடமைகளிலேயே மிகவும் புறக்கணிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காகவே வர்ணர்கள் என்றொரு பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆதிக்கவாதிகள் இட்ட கடமையை மீறி உரிமையைக் கேட்டு, அதனால் பொது உரிமைகளிலிருந்து விலக்கப்பட்ட மக்கள்தான் அவர்கள்.
இந்தப் பிரிவினர் அனைவரும் அவரவர் பிறந்த வர்ணம் அல்லது அதன் ஒரு பகுதியாக உள்ள சாதியின் வேலைகளை மட்டுமே வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும், நிலையாக, நிரந்தரமாக அவற்றைச் செய்யவேண்டும், பரம்பரை பரம்பரையாக அவர்கள் அதை மட்டுமே செய்யவேண்டும் என்பதுதான் நிரந்தரக் கடமை என்பதன் பொருள். இது பிராமண, சத்திரிய, வைசியர்களின் என்றென்றைக்குமான நிரந்தர ஆதிக்கத்தை உருவாக்குகிறது, சூத்திர, அவர்ண மக்களுக்கு காலகாலத்துக்குமான நிரந்தர அடிமைத்தனத்தைக் கட்டமைக்கிறது.

சனாதன தர்மத்தையும் வர்ண-சாதிய முறையையும் பிரிக்கமுடியாது. அதனையும் ஆணாதிக்கத்தையும் பிரிக்கமுடியாது. அதனையும் கர்மவினைக் கோட்பாட்டையும் பிரிக்கமுடியாது. கர்மவினைக் கோட்பாட்டையும் அடிமைத்தனத்தையும் பிரிக்கமுடியாது.

சனாதன தர்மம் என்கிற இந்தக் கோட்பாட்டை மரபுவாதிகள் உயிராகப் பிடித்துக்கொண்டுவருகிறார்கள். ஆனால் காலனிய காலத்தில் சமூகத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றபோது, இந்த நிரந்தர அடிமைத்தனத்திலிருந்து மக்கள் விடுபட முயற்சி செய்வதைக் கண்டு சனாதனிகள் அதிர்ந்துபோனார்கள். அப்போது பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் – பிரம்மசமாஜம், இராமகிருஷ்ணா மடம் போன்றவை- இதில் நெகிழ்வை கோரின. ஆனால் இறுதியில் அவை சனாதன தர்மத்திடம் சரணடைந்தன.

ராஜாராம் மோகன் ராய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, சுப்பிரமணிய பாரதி போன்றார் அதை முழுமையாகக் கடந்துவிடவில்லை. அவர்கள் சனாதனத்தின் கொடூரத்தை உணர்ந்து பிறகும், அதைத் தீர்க்கமுயலாமல், அதன் வரையறைகளை சற்று மாற்றி அமைக்க முயன்றுதோற்றார்கள். இந்தியாவில் நல்ல நோக்கமுள்ள பல சமய சீர்திருத்தவாதிகளைப் பொறுத்தவரை, சனாதன தர்மம் என்கிற அழகிய பாம்பு அவர்களை எப்போதும் அச்சுறுத்திக்
கொண்டேதான் இருந்தது.எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டு சமயச் சீர்திருத்தவாதிகள் எப்போதுமே அந்த எல்லைக் கோட்டைக் கடக்க அஞ்சினார்கள்.
ஆனால் அருட்பிரசாக இராமலிங்கர் அவர்களில் ஒருவர் அல்லர். அவர் வெறுமனே சமயச் சீர்திருத்தம் செய்தவர் அல்லர். அவர் சனாதன தர்மத்தை நேரடியாக நிராகரித்தார். ஆன்மீகம், கடவுள், வழிபாடு போன்ற “மேம்போக்கான” விஷயங்களைப் புதுப்பித்தவாறே, இந்து சமூகத்தின் அடிப்படையான ஏற்பாடான சனாதன தர்மத்தை அவர் கேள்விகேட்டார். அவரது கதை பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். (வைகுந்த சுவாமிகள், ஜோதிபா புலே, நாராயண குரு போன்றோரும் இந்த மரபில் வருபவர்களே).

இராமலிங்க அடிகளாரின் பிற்காலத்திய கோட்பாடுகளில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது, பழமைவாதம், மூட நம்பிக்கை, சாதி சமயப் பாகுபாடுகள் போன்றவற்றைக் கேள்வி கேட்பது.

இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் காணப்பட்ட ஒரு பொதுப்போக்குதான். இரண்டாவது சைவம், வைணவம் போன்ற வைதீக
சமயங்களை முற்றிலும் எதிர்த்து, வருணாசிரமக் கோட்பாட்டை முற்றிலும் நிராகரி்ப்பது. ஆன்மீகர்களாக இருந்து இந்த நிலையை நோக்கிச் சென்றவர்கள் இந்தியாவில் வெகுசிலரே. அவர்களில் ஒருவர் இராமலிங்கர். அவர் அதைச் சொல்லமட்டும் செய்யவில்லை, அதைச் செய்துகாட்டுவதற்கான அமைப்புகளையும் ஏற்படுத்தினார், ஓர் இயக்கத்தையும் நடத்தினார்.

தருமமிகு சென்னை என்று அவரால் அழைக்கப்பட்ட சென்னையில் தன் இளமைப் பருவத்தைக் கழித்து, நடுத்தரவயதுவரை தீவிரமான சைவராக விளங்கினார் இராமலிங்கர். ஒரு சைவ ஞானியாகவே முதலில் அறியப்பட்டார். அக்காலத்தில் அவர் எழுதியவை அனைத்தும் திருவருட்பாவின் முதல் ஐந்து திருமுறைகளாக இன்று அறியப்படுகின்றன. ஆனால், தன் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் அவர் அந்த அடிப்படையிலிருந்து விலகி. சைவம் உள்ளிட சமய மரபுகளை நிராகரித்துத் துறந்தார். இந்த இரண்டாம் பருவத்தில் அவர் முன்வைத்த கேள்விகளும் எடுத்த முயற்சிகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதிசயங்களாகும். அவரது கலக சிந்தனைகளின் தொகுப்புதான் ஆறாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது.ஐம்பது வயதிலேயே அவர் மறைந்தார் என்பது நம் துயரம்.

அவர் விமர்சனமாகவும் சுயவிமர்சனமாகவும் முன்வைத்துப் பாடிய விஷயங்களில் சீர்த்திருத்தக் கருத்துகள் எவை, அடியோடு மாற்றம் கோரும் கருத்துகள் எவை என்று நாம் பிரித்தறிய வேண்டும் (பின்வரும் பகுதிகளுக்கு நான் பெரிதும் ராஜ் கெளதமனின் ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்கிற நூலையும் அண்மையில் புது மலர் இதழ் வெளியிட்ட இராமலிங்கர் சிறப்பிதழையும், அதில் பொதிகைச் சித்தர், பொழிலன், கண.குறிஞ்சி ஆகியோரின் கட்டுரைகளையும் பேராசிரியர் வீ. அரசின் கட்டுரைகளையும் பெரிதும் துணைகொள்கிறேன்).

“கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் / கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்று அவர் பாடியது அந்த நூற்றாண்டின் மறுமலர்ச்சிப் போக்கின் எதிரொலிப்பு. சாதி, மத பிரிவுகளைச் சாடியும் பெண்களை முன்னேற்றுவதற்காகப் பேசியும் தான் சமய சீர்த்திருத்த இயக்கங்கள் வளர்ந்தன. இந்த அளவுக்கு மட்டுமே வள்ளலார் நிறுத்தியிருந்தால், இன்று ஆதிக்கவாதிகளால் அவர் பெரிதும் கொண்டாடப்பட்டிருப்பார் – விவேகானந்தரும் பாரதியும் கொண்டாடப்படுவது போல.

ஆனால் அவர் “சாதி சமயச் சழக்கெலாம் அற்றது / சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது” என்கிற
நிலையை நோக்கி நகர்ந்துவிட்டார். சாதியையும் மதத்தையும் அவர் பொய் என்று கூறினார். மதம் என்பதை பாவ நெறி என்றார். அது அவரது காலத்தி
லிருந்த சனாதனிகளையும் சைவ பீடங்களையும் அதிரவைத்தது. “சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி” என்று அவர் அறிவிக்கும்போது, அவர்சனாதனிகளி்ன் முதல் எதிரி ஆனார்.

“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு / மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழி கொட்டி மண்மூடிப் போட்டு” மூடுவதற்கு அவர் தயாராகிவிட்டார். “சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே / சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே / ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர் /அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே” என்று அறிவுரை கூறினார்.

சனாதன தர்மத்தின்மீது நேரடியாகத் தன் எதிர்ப்பைக் காட்டினார்: “நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா / நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே / மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார் இலைநீ” என்றார். வேதங்கள் சூட்சுமமாக தங்கள் உள்நோக்கத்தை மறைத்துவிடுகின்றன என்கிறார் அருட்பிரகாசர். “வேதாக மங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் / வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச் / சொன்னஅலால் உண்மைவெளி தோன்ற உரைக்
கவிலை / என்ன பயனோ இவை”. என்றார். உண்மையைச் சொல்லமல் மறைக்கும் சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் காட்டும்படி செய்யாமல், எளிய உண்மையை எளிய மக்களிடம் பேசுவதற்குரிய தமிழின் மீது நாட்டம் கொள்ளச் செய்தற்காக அவர் இறைவனுக்கு நன்றி சொன்னார்.

வேதங்கள் என்றும் ஆகமங்கள் என்றும் பேயாட்டம் போட்டவற்றை அவர் தூக்கியெறிந்தார். அவர் மனத்தில் நிகழ்ந்த மாற்றம் சமூகத்திலும் நிகழ்வதற்கு அவர் தன்னைத் தயார் செய்துகொண்டார். “மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது / வருணாச் சிரமம் என்னும் மயக்கமும் சாய்ந்தது / கொதித்த லோகாசாரக் குதிப்பெல்லாம் ஒழிந்தது / கொலையும் களவும் மறைப்புலையும் அழிந்தது / குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” என்றார். வேதாகமக் கூச்சல்! – எவ்வளவு கடுமையான வார்த்தைகள்!!

பாடல்களில் மட்டுமல்ல, நேரடியாகத் தன் குழுவினரிடம் பேசும்போதும் அவர் தன் மனமாற்றத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “ சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனெனில் அவைகளிலும் — அவ்வச் சமய மதங்களிலும் — அற்பப் பிரயோஷனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.

அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாக்ஷி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாவில் அடங்கிஇருக்கிற – ஸ்தோத்திரங்களே – போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.”

சைவம் வீற்றிருந்த அவர் மன அம்பலத்தில் இப்போது ஜீவ காருண்யமும் சமத்துவமும் குடிகொண்டது. “ஆண்மக்கள், பெண்மக்கள் முதலிய யவர்களிடத்திலும், சாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்திற்கொள்வது ஜீவ ஒழுக்கமாகும்” என்கிறார் அவர்.

இராமலிங்கரின் இந்த மனமாற்றம் இயக்கமாக உருக்கொள்ளும்போது, வைதீகர்களையும் மரபு சைவர்களையும் அது அதிர்ச்சியிலாழ்த்தியது. ஈழத்தின் ஆறுமுக நாவலர் முதற்கொண்டு, தமிழ்நாட்டின் சைவ சனாதனிகள் வரை வள்ளலாருக்கு எதிராக இயக்கமே நடத்தினார்கள். அவரது கருத்துகளை அருட்பா அல்ல மருட்பா என்று வைதீகச் சைவர்கள் மறுத்து பிரசுரங்களாக வெளியிட்டுத் தள்ளினார்கள்.. அவரை களங்கப்படுத்த நீதிமன்றங்கள்வரை சென்றார்கள். இறுதிவரை இராமலிங்கர் இந்த பாரம்பரியவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்தவாறேதான் இருந்தார்.

இராமலிங்கர் சைவ சமயத்தை அல்லது சைவ சித்தாந்தத்தை சீர்திருத்த முயலவில்லை. அது வீண் முயற்சி என்று என அவர் கருதியிருக்கிறார். அதே சமயம் அதை அவர் வெறுமனே கண்டும்காணாமல் கடந்துசெல்லவும் இல்லை. மாறாக அந்த மரபிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக்கொண்டார். சைவத்தை உடைத்து வெளியேறினார். அவர் சைவமும் தமிழும் என்று பேசவில்லை. மாறாக, விமர்சகர்கள் பலர் குறிப்பிட்டிருப்பதுபோல சைவத்தை விட்டு வெளியேறி, தமிழ் மரபிலொரு புதுமையைச் செய்தார். அவர் அதைத் தமிழாகச் செய்தார். அவரது ஞான சபையும் சன்மார்க்க சங்கமும் அந்தச் சிந்தனையினால் விளைந்தவை.
சமய சீர்த்திருத்தமல்ல வள்ளலாரின் நோக்கம். அதனால் அவர் தான் வாழும் காலத்தின் சமூகச் சவால்களை எதிர்கொள்வதை நோக்கி நகர்ந்தார். அது பஞ்ச காலமாயிருந்தது. அவர் பசியைப் பற்றி கவலைப்பட்டார். அனைவருக்கும் உணவளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். என்றும் அணையாத அவரது ஜோதி என்பது பசி உணர்வை நீக்குவதற்கானது. ஜீவ காருண்யத்தின் அடிப்படையிலான அவரது இயக்கம் கொல்லாமையையும் புலால் உண்ணாமையையும் வலியிறுத்தியது. ஆனால் அதை அவர் இழிவு, தீட்டு என்பதாக வரையறுக்கவில்லை. மாறாக, வெறுமனே உயிர் வதை வேண்டாம் என்கிற அடிப்படையில்தான் அதை முன்வைத்தார். அதனால் தான் தன் சபையில் சேருவதற்கு புலால் உண்ணாமையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறினாலும், பசி என்று வருவோருக்கு உணவளிப்பதில் அப்படியொரு பாகுபாடு காட்டக்கூடாது என்றும் கூறினார். அவர் ஒரு புதிய அடிப்படைவாதத்தை உருவாக்கவில்லை (ஆனால் எல்லா இயக்கங்களிலும் பிறகு உருவாகும் திரிபுகள் அவரது இயக்கத்திலும் உருவாகிவிட்டது என்பது வேறு விஷயம். அந்தப் போக்கைப் பிறகு திருவிகவும் அண்ணாவும் விமர்சித்தார்கள்).

பசிக்கு எதிரான அவரது போராட்டம் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினாலும், அவர் அந்த வாட்டத்தோடு அமர்ந்துவிடவில்லை. மாறாக, அதை மாற்ற முயற்சி செய்தார். இதுதான் சனாதனிகளுக்கு கோபமாக இருந்தது. நாம் அறிந்தவரை தொடக்க கால கம்பெனியார் ஆட்சிக்கு எதிரான முதல் இலக்கியப் பெருங்குரலும் அவரிடமிருந்துதான் வந்தது: கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக என்று எதிர்க்
குரலெழுப்பினார் அருட்பிரகாசர்.

ஒரு சைவ பக்தராகத் தொடங்கி, சீர்திருத்தவாதியாக முகிழ்த்து, பிறகு முற்றிலும் புதிய தத்துவத்தை நோக்கி நடைபோட்டார் இராமலிங்கர். அந்தப் புதிய தத்துவம் என்பது சாராம்சத்தில் சனாதன தர்மத்தை உடைத்தெறிவதுதான். வருணாசிரம் ஆதிக்கத்தை உடைத்தெறியும் பொருட்டே அவர் சமரச சன்மார்க்கத்தை நாடினார் என்பது இன்னமும் பொருத்தமான விளக்கமாகும்.

சன்மார்க்கம் என்பது யாரையும் யாருக்கும் தாசரகவோ கீழ்படிந்தவராகவோ துணை நிற்பவராகவோ ஆக்காமல், அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டை உட்கிடையாகக் கொண்ட சொல்லாகும். சனாதன தர்மத்தின் நேரெதிர்ச் சொல் சன்மார்க்கம். அதற்கான அமைப்பே சமரச சுத்த சன்மார்க்க சங்கம். அவரது சத்திய ஞான சபை, சத்தியதருமச் சபை, சித்தி வளாகம் அனைத்தும் இதற்கானவேயே.
“பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.” என்று தனது ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அவர் வரையறுத்தார்.

அவரது சன்மார்க்கம் சாதி மதம் கடந்தது. அகச்சமயம், புறச்சமயம் எல்லாம் ஒன்றுதான் என்றார். அருகனை புத்தனை சிவனை நாராயணனை ஒன்றுதான் என்றார். அவரது கவனம் சமயச் சழக்கைத்தாண்டி உயிர்களிடம் சென்றது. ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தலை நோக்கிச் சென்றது. தனித்திருந்து பசித்
திருந்து விழித்திருந்து அவர் ஓர் மரணமிலாப் பெருவாழ்வை நோக்கி நகர்ந்தார். திரு.வி.க. அவரைப் பற்றிச் சொன்ன ஒரு வாக்கியம் மிகவும் முக்கியமானது: வள்ள
லார் ஞானியர் என்பது மட்டுமின்றி, அவர் குரு, தீர்க்கதரிசி – நபி – சித்தர்.

பல திராவிட இயக்கத் தலைவர்கள், ஆய்வாளர்களின் கருத்துகள்படி திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் என்பவை வானத்திலிருந்து விழுந்தவை அல்ல. அவை வரலாற்றுத் தொடர்ச்சி உடையவை. அவ்வியக்கமே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தொடங்கிய ஒரு நாகரீகத்தின் நீள்வளர்ச்சி. அதன் சமூக நீதிக்கொள்கைகளின் மீதும் தமிழ் அரசியலின் மீதும் சங்க காலம் முதல் அவ்வியக்கம் தோன்றிய தருணத்தில் நிலவிய சமகால ஜனநாயக, முற்போக்கு அரசியல் கோட்பாடுகள் வரை பல சித்தாந்தங்களின் தாக்கம் உண்டு. தமிழ்நாட்டின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருவான சிந்தனைகளில் வைகுந்தர், அயோத்திதாசர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை உள்ளிட்டோரின் தாக்கம் திராவிட இயக்கத்தின் தோற்றப் பருவத்தில் இருந்தது. அந்த ஆணி வேர்களில், ஆதிக் கோட்பாடுகளில், வள்ள
லாரின் சிந்தனைகளும் ஒன்று. அது வள்ளுவர், சித்தர் வழிக்கோட்பாடாக வள்ளலார் மூலமாக வந்த, ஆரியத்துக்குக்கெதிரான நீண்டதொரு அறிவுப் பரம்பரையாகும்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கத்திலேயே வள்ளலாரின் இடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. பெரியார் தொடக்கத்தில் சைவர்களிடம் நல்லுறவு கொண்டிருந்தார். ஆரிய வைதீகத்துக்கு எதிராகத் தமிழ்ச் சைவர்கள் சிலரிடம் அவர் ஆதரவு கேட்டிருந்த காலம் அது. சுந்தரனார், மறைமலை அடிகள் போன்றோரின் ஆரிய எதிர்ப்பு தமிழ்க் கோட்பாடுகள் அந்த எண்ணத்தை அவரிடம் விதைத்திருக்கமுடியும். அதே சமயம், சைவர்கள் அனைவரும் ஆரிய எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல. அப்போது பெரியார் எழுதினார்: ‘சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தித்துத் தெளிவடைய முடிகிறதா என்று பாருங்கள்!’ – ‘சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்த லைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே’ என்று உங்கள் மனநிலைக்கு இரங்குபவர் யார் தெரியுமா? இவ்வாறு கூறுகின்றவர் சுயமரியாதைக் கவிஞரல்ல. ஆஸ்திகராகிய உங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான ‘வடலூர் இராமலிங்க சுவாமிகள்’ ஆவார்.

மக்கள் மத்தியிலும் வள்ளலாரை எடுத்துச்சென்றார் பெரியார். ‘‘இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார்.உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டோமா?’’ என்று அவர் கேட்டிருக்கிறார்.

1935 இல் வள்ளலாரின் ஆறாம் திருமுறையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களைத் தனி வெளியீடாக குடியரசுப் பதிப்பகம் வெளியிட்டு மக்களிடம் பரப்பியது என்பதைப் பார்க்கும்போது, ஏதோ ஆன்மீகவாதிகளை வாதத்தில் மடக்குவதற்காக பெரியார் இப்படியெல்லாம் செய்தார் என்று சொல்லிவிடமுடியாது. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடாகவே வள்ளலார் மாற்று திருவுருவாக முன்னிறுத்தப்பட்டார் என்று கருதவே இடமிருக்கிறது.

சுயமரியாதை இயக்கத்தில் தனக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்கிற கருத்தை வலியுறுத்தியபோது, திரு.வி.க. பெரியாரின் சுயமரியாதை இயக்கமே தன்னுடைய வள்ளலார் வழி சன்மார்க்க இயக்கத்தின் நீட்சிதான் என்று 1933 இல் பேசியிருந்தார். இதை நாம் அப்படியே ஏற்க இயலாது என்றாலும், பெரியார் இயக்கத்தின் மீதான சன்மார்க்கச் சங்கத் தாக்கத்தை நாம் புரிந்துகொள்ள இயலும்.

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபுகள் பல காட்டாறுகள் போல ஓடிக்கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவை அனைத்தும் பெரியார் என்கிற பெரும்பாறையைத் தாண்டியபோது, ஒற்றைப் பேரருவியாக விசைகொண்டு இறங்கின. அந்த சுயமரியாதை ஐந்தருவியைத்தான் தமிழ்நாடு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்த்தது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள், சித்தர் இலக்கியம் எனத் தொடர்ந்த தமிழ் மரபில், மரபு சார்ந்த விவகாரங்களில் பெரியாருக்கு ஒரு கடும் விமர்சனம் இருந்தது என்பது உண்மமைதான். ஆனால் அந்த மரபுகளிலிருந்தே அவர் முகிழ்த்தார். பெரியார் தன் காலத்தில் அல்லது அதற்கு சற்று முன்பு தோன்றிய வள்ளலார், அயோத்தி தாசர் உள்ளிட்டோரின் கோட்பாடுகளின் நீட்சியைத் தன்னிடத்தில் கொண்டிருந்தார். பிறகு தமிழ் பெளத்தம், தனித்தமிழ் இயக்கம். பொதுவுடைமை இயக்கம் ஆகியவற்றின் கூறுகளையும் மேலை அறிவியல், பகுத்தறிவு விமர்சன இயக்கம், இந்தி
யாவில் உதித்துக்கொண்டிருந்த அரசியல்சாசன குடியாட்சிவாதத்தின் தாக்கங்களையும் அவரது இயக்கம் தனக்குள் கொண்டிருந்தது. அதுதான் அந்த இயக்கத்தை பேரியக்கமாக ஆக்கியது. சுயம்புவாக இருந்தார் பெரியார் என்றாலும், அவர் தனியாக இல்லை. அவர் ஒரு வரலாற்றுச் சங்கமம். அந்த இடத்திலிருந்து புதிய தொடக்கத்தை நிகழ்த்திக்காட்டினார் அண்ணா.

இந்த நீட்சி பேரறிஞர் அண்ணாவிடமும் அவரது தோழர்களான கலைஞர், பேராசிரியர் அன்பழகனிடமும் காணப்பட்டது. வள்ளலாரின் சீடர்கள் எப்படி சன்மார்க்கச் சங்கத்தை மேலும் ஒரு சடங்கு இயக்கமாக மாற்றிவிட்டார்கள், வள்ளலாரின் கோட்பாடுகளை மறந்துவிட்டு விழாக்களை மட்டுமே கொண்டாடுகிறார்கள் என்பதை விமர்சிக்கும் ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார் அண்ணா. அருட் பெருஞ்சோதி எனும் தலைப்பிலான அந்தக் கட்டுரை, வள்ளலாரின் உண்மை அரசியலை வள்ளலாரின் பக்தர்களுக்கே மீண்டும் எடுத்துக்கூறியது. மதமெனும் பேய் பிடிக்கக்கூடாது என்பதற்காக வள்ளலார் முயன்றதையும், மதத்தை அவர் ஒரு பாவ நெறி என்றே வரையறுத்ததையும் அண்ணா மீண்டும் வள்ளலாரின் பக்தர்களுக்கு நினைவூட்டினார்..

“ஜாதியும் போலிச் சமயமும் நால்வருணமும் அதன் ஆச்சார அனுஷ்டானங்களும் சாத்திரமும் வேதமும் ஆகமமும், அடிகள் எவை எவை தவிர்மின் என்று எடுத்துரைத்தாரோ, அவைகள் எல்லாம் விழா கொண்டாடுவோரை நோக்கி, சிரித்துவிட்டு, வீணர் விழா இன்று, எமது வெற்றி விழா என்றும் உளது. இன்று அவர்கள் அருட்பா படிப்பர், நாளை முதல் எமதடி பணிவர், இன்று இராமலிங்கரின் பக்தர்களாயினர். நாளை முதல் எமது அடிமைகள் என்று
ரைத்து இடிக்கும்! – அந்தோ, அந்தோ, எத்தனை எத்தனை நன்னெறிகள் இந்நாட்டிலே நாவாரப் பேசிப் பேசியே மங்கி மடிந்தன! எத்துணைப் பெரியார்கள், அடியார்கள் இங்கு பூஜிக்கப்பட்டே கொல்லப்பட்டனர்! எந்தெந்த அருள் மொழிகள் புகழப்பட்டு மறைக்கப்பட்டன!” என்று அண்ணா அதில் மிகவும் துயரத்தோடு குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டின் வடபகுதியில், சைவர்கள் மத்தியில், வள்ளலார் எப்படிச் வெறும் சம்பிரதாயமாகிப்போனார் என்பதை அவர் நிச்சயம் நேரில் பார்த்திருப்பார்.

திராவிட இயக்கத்தின் அடித்தளங்களில் ஒன்று வள்ளலாரின் இயக்கம் என்று பேராசிரியர் க. அன்பழகனும் வே. ஆனைமுத்துவும் வேறு பல அறிஞர்கள், ஆய்வாளர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இது ஆச்சரியமானதல்ல. குறிப்பாக வடக்கு, மத்திய மாவட்டங்களில்தான் முதலில் திராவிட இயக்கம் பெருவளர்ச்சி கண்டது என்றால், வள்ளலார் உழுதுச்சென்ற நிலத்தில், சுயமரியாதை விதைகள் நன்கு முளைத்திருக்கவே வாய்ப்புண்டு.

திராவிட இயக்கத்தின் ஆணிவேர்களைப் பற்றிய ஒரு நீண்ட வரலாற்றுச்சுருக்கம்தான் பேராசிரியர் க.அன்பழகனின் வளரும் கிளர்ச்சி என்கிற நூல். ஆரிய நெறிக்கும் தமிழர் நெறிக்கும் இடையிலான முரண்பாடகவே வரலாறு வளர்ந்து செல்வதை அவர் வரிசைப்படுத்துகிறார். “எந்நாளும் எவ்வகையிலும் வேறு எந்த இனத்தவரினும் தாழ்வுறாத தமிழர் – திராவிட இனத்தவர் – இன்று பலவகையினும் தாழ்ந்துள்ள நிலையை எண்ணலாயினர், ஏக்கமுங்கொண்டனர்… இந்நிலைக்குக் காரணமான ஆரிய மத மூடநம்பிக் கைகளே முதன் முதலில் வெளிப்படையாகக் கண்டிக்கப்படலாயிற்று. சென்ற நூற்றாண்டினிறுதியில் வாழ்ந்த வடலூர் வள்ளலார், இராமலிங்க அடிகளார், பக்தி துறையில் நின்றபடியே ஆரிய (அ)தர்மத்தை முதன் முதலில் கண்டிக்கலானார்.” என்கிறார் அன்பழகன்.

தமிழ்த்தேசிய அரங்கில் இன்று பெரியாரியத்தின் தீவிர எதிரியாக முகிழ்த்திருக்கும் பெங்களூர் குணா, தனது தமிழர் மெய்யியல் என்கிற நூலில், “பெரியாரின் நாத்திக வழித் திராவிடர் இயக்கம் வள்ளலாரின் பார்வையையே தம்மில் உள்ளடக்கி இருக்கிறது. திராவிட இயக்க வரலாற்றில் வள்ளலார் தவிர்க்க முடியாத சக்தி. அண்மைக்காலத் தமிழகத்திலான அறிவு வரலாற்றில் வள்ளலார் ஓர் எல்லைக்கல்லாகும். அவரை அடுத்து எழுந்த தந்தை பெரியாரின் சமய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு இயக்கங்கள் யாவும் வள்ளலார் துவக்கிவைத்த கருத்தோட்டத்தின் ஒரு புதிய நிலையேயாகும்” என்று குறிப்பிட்டிருந்ததை புதுமலர் இதழின் வள்ளலார் சிறப்பிதழில் பொதிகைச் சித்தர் மேற்கோள் காட்டியிருந்தார். (பெரியாரியம் வள்ளலாரிடமிருந்து பிறந்தது என்று காலையில் பேசி
விட்டு, பெரியார் சிந்தனை வடுகர்களின் நலன்களுக்கானது என்று மாலையில் பேசுவார் குணா என்பது வேறு கதை.)

தமிழியச் சிந்தனையாளர்களின் மிகவும் மதிக்கத் தக்கவரான க. நெடுஞ்செழியனின் கருத்தும் பெரியாரியல் எதன் தொடர்ச்சி என்பதைச் சுட்டுகிறது: “வள்ளுவர் விதைத்த இவ்விதை கபிலரகவலாக, பதினெண் சித்தர் பாட்டு மரபாக, வள்ளலராக வளர்ந்து பின் பெரியாரியலாகச் செழித்துள்ளது” – (‘தமிழர் இயங்கியல் தொல்காப்பியமும் சாரக சாம்கிதையும்’ – மேற்காண் கட்டுரை)

தி.மு.க. எப்போதுமே வள்ளலார் மரபை கொண்டாடிவருகிறது. சென்னையில் வள்ளலார் நகரை உருவாக்கியது கலைஞர்தான். வடலூரில் தொடர்ந்து வள்ளலாரின் அமைப்புகளுக்கு திமுக அரசுகள் உறுதுணை செய்துவருகின்றன.இன்றைய தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளலாரின் இருநூறாவது ஆண்டை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவெடுத்ததில் ஆச்சரியமும் இல்லை. அதைக் கண்டு ஆளுநர் ரவிகள் சந்தேகப்படுவதிலும் ஆச்சரியமில்லை.
பெரியார் தமிழர்களின் பகுத்தறிவு பேராயுதம் என்றால் வள்ளலார் தமிழர்களின் ஆன்மீக பேராயுதம். இவ்விரு பேராயுதங்களும் நமக்குத் தேவை. எனவேதான், வள்ளுவருக்குத் திருநீறுபூசி அவரை அபகரிக்கமுயன்ற சனாதனிகள் அதில் தோல்வியடைந்தனர். வள்ளலாருக்கும் அதையே செய்து பார்த்தனர். இன்று உச்சகட்டமாக சனாதன எதிர்ப்புப்போராளியான வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்றே சொல்லிப்பார்க்கிறார்கள்.

வள்ளலார் தொடக்கத்தில் மிகவும் மென்மையாகவே பாடிக்கொண்டிருந்தார். உருக்கமும் அச்சமும் நெகிழ்வும் தன்னிரக்கமும் அவரிடம் அதிகம் குடிகொண்டிருந்தது. பிறகு அவரிடமிருந்து ஒரு நெருப்பு வெளிப்பட்டது. மடங்களுக்கு பதில் சங்கம் வைத்த, காவிக்குப் பதில் வெண்மை உடுத்திய, பாதுகைகளுக்குப் பதில் ஷூ போட்டுக்கொண்ட வள்ளலாரின் தீ முதலில் சுட்டது சிதம்பரத்தைத்தான் – சிதம்பரம் என்கிற குறியீடு இன்றளவும் தொடரும் ஒரு யுத்தகளம்.

இந்து சமயத்தின் அத்தனை அடையாளங்களையும் சம்பிரதாயங்களையும் அவர் தூக்கியெறிந்தார். பிறகு பாடினார்:

‘கங்கையிலே காவிரியிலே நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேற சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளித் தந்து
பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்.’’

‘பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்ணும்’ சனாதனிகளால் வள்ளலாரை நெருங்கக்கூட முடியாது. அண்ணாவின் எச்சரிக்கையை நாம் கேட்போமானால், அவரை ‘பூஜித்துக்கொண்டே கொல்லும்’ சதிக்கு நாம் உடந்தையாகமுடியாது.

zsenthil@gmail.com