ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு 2025-ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகளை 2024-ஆம் ஆண்டோடு நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முன்றாம் உலகப்போர் ஒன்றை சந்திக்கவில்லை என மகிழ்ச்சி கொள்ளலாம்.

ஆனால் உலக மக்களிடம் அப்படி ஒரு மகிழ்ச்சிக்கான காரணம் ஏதுமில்லை. இந்தியாவில் இந்துத்துவம் மிக முக்கியமான காலகட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ்.துவங்கப்பட்ட அதே காலகட்டத்தில் இத்தாலியும், ஜெர்மனியும் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

“பாசிசத்தை இன்னும் பொருத்தமாக அழைத்தால் அதை கார்ப்பரேட்டிசம் (கூட்டுழைப்புவாதம்)என்றே அழைக்க வேண்டும். ஏனென்றால் அரசையும் கார்ப்பரேட்டிசத்தையும் இணைக்கும் புள்ளிதான் பாசிசம்”- என்பார் பாசிசத்தின் தந்தை பெனிட்டோ முசோலினி. இந்துத்துவ தேசியவாதம் கார்ப்பரேட்டிசத்தோடு தோளோடு தோள் நிற்பதை இன்று நாம் இன்று பார்க்கிறோம். இது போன்ற வெற்றிகரமான இணைவு இந்தியாவை இதற்கு முன் ஆட்சி செய்த எவருக்குமே வாய்த்ததில்லை.

இத்தாலியில் முசோலினி முன்னெடுத்த பாசிசமும், ஜெர்மனியில் ஹிட்லர் முன்னெடுத்த நாஜியிசமும் வெவ்வேறானவை. வெறுப்பு ஒன்றுதான் அதன் அடிப்படை. மற்றபடி பாசிச, நாஜி சிந்தனையை அவர்கள் செயல்படுத்திய விதமும் அதை செயல்படுத்துவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலகட்டமுமே மிக முக்கியமானது. ஆஸ்திரியாவில் வளர்ந்த ஹிட்லர், ஜெர்மனைத் தனது தந்தை தேசம் என கனவு கண்டார். என்றேனும் ஒரு நாள் தனது ஆரிய தேசத்தை மீட்க எண்ணிய ஹிட்லர் இரண்டாம் உலகப்போர் உருவாக்கிய அவலத்தை தனது நாஜி அரசியல் கொள்கைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். பேரழிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திய ஹிட்லர் சுமார் 12 ஆண்டுகளில் ஜெர்மனை நாஜி மயமாக்குவதில் வெற்றி கண்டார். அதன் பின்னர்தான் ஹிட்லர் இனப்
படுகொலையை நோக்கி நகர்ந்து 60 லட்சம் யூதர்களைக் கொன்றொழித்தார்.

நாஜியிசம் தேசியவாதத்தோடு இணைக்கப்பட்டு வெற்றி பெற 12 ஆண்டுகள் ஹிட்லருக்குப் போதுமானதாக இருந்தது. இந்துத்துவம் தேசியவாதத்தோடு இணைக்கப்பட்டு நீண்டகாலமான போதும் கடந்த 2014-க்குப் பின்னர் அது வெற்றிகரமாகத் தன் இலக்கை அடைந்துள்ளது. இத்தாலி பாசிஸ்டுகள் மீதான பேரார்வத்தில் 1924-ஆம் ஆண்டு உருவான ஆர்.எஸ்.எஸ்.கடந்த 9 ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் இந்தியா முழுக்க வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 766 மாவட்டங்கள் தோராயமாக 4123 சட்டமன்றத் தொகுதிகளாக உள்ளது. இதில் 5 ஆயிரத்து 683 மண்டலங்களை ஆர்.எஸ்.எஸ்.நிறுவியுள்ளது. 766 மாவட்டங்களில் எல்லா மாவட்ட தலைமையகங்களிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.இல்லாத நிலப்பகுதியே இல்லை என்ற நிலையைக் கீழிருந்து மேலாக கட்டி எழுப்பிவிட்டது.எத்தனையோ அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நூற்றாண்டுகளை தொட்டு விட்டன. ஆனால், உலகிலேயே உறுப்பினர் அட்டை கூட இல்லாத ரகசிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாபெரும் இயக்கம் நூறு ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 2014 முதல் ஒன்பது ஆண்டுகளில் சாதித்திருக்கிறது. அது வெறும் இயக்கம் கட்டுவதில் மட்டும் வெற்றி பெறவில்லை. சிந்தனை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்து வேர்களைக் கொண்டவர்கள். அவர்களைத் தூய்மைப்படுத்தி இந்து மதத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.தனது சிந்தனையைப் பொதுப்புத்தியாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான மாட்டிறைச்சி கொலைகள், பிலிகிஸ் பானோவுக்குக் கிடைக்காத நீதி, பொதுவெளியில் கொடுக்கல் வாங்கத் தகராறில் பொது மக்களால் அடித்துக் கொல்லப்படும் முஸ்லீம்கள், நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் மீதான தாக்குதல், தாக்குதலுக்கு அஞ்சி ரயில் முன்னால் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முஸ்லிம் இளைஞன், புர்ஹா அணியக்கூடாது என்ற பொதுவான எண்ண ஓட்டம் என இந்துத்துவம் பொதுப்புத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது.

2014 மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனையை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி “நாம் அனைவரும் கடவுள் கண்ணனைப் பற்றி படிக்கிறோம். கண்ணன் தன் தாயின் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை என்கிறது மகாபாரதம். அதற்கு என்ன அர்த்தம். அக்காலத்திலேயே மரபணு அறிவியல் தொழில்நுட்பம் இருந்ததால்தான் கர்ணண் தன் தாயின் வயிற்றுக்கு வெளியில் பிறந்திருக்க வேண்டும்” என்றார். அத்தோடு நிறுத்தாமல் “நாம் விநாயகப் பெருமானை வணங்குகிறோம். யானையின் தலையை மனித உடலில் பொருத்தும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் அக்காலத்தில் நம்மில் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

அறிவியலையும் சனாதன வேதங்களையும் இணைக்கும் இந்த முயற்சிக்கு இந்தியாவில் பெரிய எதிர்ப்புகள் எதுவும் உருவாகவில்லை.

அகண்ட ஜெர்மனியை உருவாக்குவதை நாஜிக்கட்சி சாதித்துக் காட்டியது போல அகண்ட இந்து பாரதத்தை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ்.அதன் இறுதி இலக்குகளை அடையத் துடிக்கிறது. அரசின் அத்தனை அலகுகளையும் இந்து மயமாக்குவது, அரசு இயந்திரத்தை தங்களின் கட்சி நலனுக்காகப் பயன்படுத்துவது. தங்களின் எதிரிகளை அரசு சிவில் உரிமைகளில் இருந்து விலக்கி வைப்பது, என ஜெர்மனியில் நடந்தவைதான் இந்தியாவில் நடக்கிறது. ஆனால் இன ரீதியாக தன்னை ஒருவர் மாற்றிக் கொள்ள முடியாது. யூதர்களை ஆரியர்களாக மாற்ற முடியாது. ஆனால் முஸ்லிம்களை இந்துக்களாக மாற்ற முடியும். நாஜி ஜெர்மனிக்கும் ஆர்.எஸ். எஸ் இந்தியாவுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான்.

சிலுவைப் போர் காலத்தில் ஐரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் வெற்றி கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு கத்தோலிக்க படையெடுப்பாளர்கள் இரண்டு வாய்ப்பை வழங்கினார்கள். ஒன்று, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கத்தோலிக்கர்களாக மதம் மாற வேண்டும். இதே வாய்ப்புகள்தான் இன்று இந்திய முஸ்லிம்கள் மீது முன் வைக்கப்படுகிறது. எந்த ஒரு முஸ்லிமும் இந்தியரா என்பதைக் குடியுரிமை திருத்தச் சட்டம் முடிவு செய்யும். அவர்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான ஒரே வாய்ப்பு “கர்வாப்சி” மட்டும் என்கிறது சங்கப்பரிவார் அமைப்புகள்.

காரணம், ஜெர்மனியில் யூதர்களை அழித்தொழித்தது போன்று இந்தியாவில் முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக அழித்தொழிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், மொழியில் சொன்னால் “ இந்தியா என்றென்றும் இந்து நாடு.இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பொதுவான மூதாதையர்கள் காரணமாக இந்தியாவில் பிறக்கும் எவரும் இயற்கையாகவே இந்துக்கள்’’ என்கிறார்.

ஆக, முகாம்களை உருவாக்கி யூதர்களைக் கொன்றது போல முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாகக் கொல்ல முடியாது. ஆனால், வட்டார அளவில் முஸ்லிம்களைக் கொன்று பரவலான அச்சுறுத்தலை ஏற்படுத்துவது. நீங்கள் பாதிக்கப்பட்டாலும் உங்களுக்கு நீதி கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்குவது. முஸ்லீம்கள் அனைத்தையும் இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இரண்டாம் தர மக்களாக அவர்களாகவே நடந்து கொள்ள வேண்டும். கல்வி,வேலைவாய்ப்பு, இதர சிவில் உரிமைகளுடன் இந்துக்களுக்குப் போட்டியாளராக இருக்கக் கூடாது என்ற எண்ணம் பா.ஜ.க.வின் தேர்தல் கோஷமாக இருக்கிறது. இது தெற்கில் தோல்வியடைந்தாலும் வட இந்தியாவில் செல்வாக்கோடு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே அதை அனுசரித்து அரசியல் செய்யும் நிலைதான் உள்ளது.

ரகசிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நாடு முழுக்க பல்லாயிரம் கிளை அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் மிக முக்கியமானது சனாதன் சாஸ்தா. அந்த அமைப்பு இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியா இந்து நாடாக மாறும் என கணித்திருக்கிறது. இது போன்று எண்ணற்ற இந்துத்துவ அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் திறந்த பின்னர் இந்து இந்தியா அதிகாரபூர்வமாக உருவாகும் என பேசுகிறார்கள். ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என நாம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். திட்டவட்டமான முறையில் சமூகத்தை இந்துத்துவத்தை நோக்கி மாற்றி அமைத்துள்ளது.

இந்துத்துவா என்பது இந்து மதத்தை விட உயர்வானது என்ற சாவர்க்கரின் கருத்து தேசம், இனம், கலாச்சாரம் என்ற மூன்று அலகுகளை ஒருங்கிணைக்கிறது. நீதித்துறை, ஊடகத்துறை,கல்வித்துறை மட்டுமல்லாது அரசின் அத்தனை அலகுகளில் இருந்தும் முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். துயருற்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மோடி பிரதமரான பின்னர் இந்து ராஷ்டிரத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றன. எண்ணற்ற புதிய சட்டங்கள், புதிய வாக்குறுதிகள், புதிய புதிய கோவில்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடம், சாமியார்களுக்குக் கிடைத்த அளவு கடந்த முக்கியத்துவம் என இந்து தேசம் அதன் முதிர்ந்த நிலையில் இருப்பதை இந்துக்களுக்கு செய்தியாகச் சொல்கிறது.

இவை எல்லாம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். தனக்கென தனித் திட்டங்களையும் வைத்திருக்கிறது.அது இந்து மயமாதல் அல்ல, ஆரியமயமாதல் கல்வி, சுகாதாரம்,சிந்தனை முறை தெளிவான ஆரிய சிந்தனைகளோடு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி வருகிறது. அவர்களே நாளை இந்தியாவை ஆளப் போகிறார்கள்.

2023 ஜூன் மாதத்தில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பின் ஒரு பிரிவான சம்வர்தினி நியாஸ் அமைப்பு நடத்தும் ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத்தை தனது அரசு அலுவலகத்தில் வைத்து துவங்கி வைத்தார். இது ஹிட்லரின் “லெபன்ஸ்
பார்ன்” திட்டத்தின் தழுவல். தூய்மையான இந்து இனம் ஒன்றை உருவாக்க இரண்டு திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கிறது ஒன்று ‘கர்ப்ப சனஸ்கார்’ இன்னொன்று ‘உத்தம் சந்ததி’ அழகான, உயரமான, நேர்மறை எண்ணம் கொண்ட, குழந்தைகளைப் பெற்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டத்தை நாடு முழுக்க செயல்படுத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இந்த திட்டம் பா.ஜ.க.வின் செல்வாக்கு மண்டலமான குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்திலேயே செயல்படுத்தப்பட்டு நாடு முழுக்க விரிவாக்கப்பட்டுள்ளது. குள்ளமான கருப்பான பெற்றோர்கள் கூட சிகப்பான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அதற்குரிய உணவுகளையும், நம்பிக்கைகளையும் பரிந்துரைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சுகாதாரப்பிரிவு.

இதற்கு முன்னோட்டமாக இந்திய இனங்களின் தூய்மையைக் கண்டறிய மரபணு சோதனைக்காக இந்திய கலாச்சார அமைச்சகம் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியதை நாம் நினைவுகூர வேண்டும். ஒரே இந்து ஒரேமரபணுவை நோக்கிய பயணத்தில் அவர்கள் நாஜி ஜெர்மனை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார்கள்.

மொத்தத்தில் இந்துத்துவம் இந்தியாவில் கனிந்து விட்டது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து நாடாக மாறும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்த “ஒரே நாடு ஒரே குரல்” அவசியம். அதில் அரசு மட்டத்தில் அவர்கள் இணைந்துள்ளார்கள். ஊடகங்களின்,நீதித்துறையின், விசாரணை அமைப்புகளின், சிவில் நிறுவனங்களின் குரலும் பா.ஜ.க.வின் குரலும் வேறு வேறு அல்ல.அவை அனைத்தும் ஒன்றிணைந்து நிற்கிறது. தங்களின் அகண்ட பாரத கனவுக்கு இடைஞ்சலாக இருப்போரைஅகற்றுவதும், இந்து இந்தியாவுக்காக களத்தை தூய்மைப்படுத்துவதுமே இப்போது நடந்து கொண்டிருக்கும் போர்.

பி.பி.சி. ஜனவரி 17-ஆம் தேதி வெளியிட்ட குஜராத் பைல்ஸ் ஆவணப்படம் வேறு குரலில் இருந்ததால் அவர்கள் பி.பி.சி. மீது ரெய்ட் அடித்தார்கள்.அடுத்து ஹிண்டன் பர்க் அறிக்கை அதானியின் பங்கு வர்த்தக மோசடிகளை அம்பலப்படுத்தியது. அது பற்றி பா.ஜ.க.வினர் வாயே திறக்கவில்லை.

எதிர்ப்புகள் திரண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்களின் கனவுகளுக்கு பங்கம் வந்து விடுமோ என்று ரெய்டுகளை நடத்துகிறார்கள். மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்து கைதும் செய்தது. கெஜ்ரிவால் அமைச்சரவையின் இன்னொரு அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் பதவியை ராஜினாமா செய்து விட்டார். சிசோடியாவும், சத்யேந்திர ஜெயினும் பா.ஜ.க.வில் இணைந்திருந்தால் இந்த நடவடிக்கைகள் இருந்திருக்காது.

சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ப.சிதம்பரம், டி.கே. சிவக்குமார், சஞ்சய் ராவத், அஜித் பவார், மம்தா
பானர்ஜி என அமலாக்கத்துறையால் வேட்டையாடப்பட்ட தலைவர்களின் பட்டியல் நீளம். கேரள முதல்வர் பினராயி விஜயன் தங்கம் கடத்தினார் என்பது தனி நாடகம்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 85ஆவது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களை சுற்றி வளைத்தது அமலாக்கத்துறை. இப்படி சுமார் 3 ஆயிரம் ரெய்டுகளை எதிர்க்கட்சிகள், எதிர்க்குரல் கொண்ட ஊடகங்கள் மீது நடத்தியுள்ளது பா.ஜ.க.. பெரும்பான்மை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை.

இதுதான் இன்று தமிழ்நாட்டில் நடக்கிறது. செந்தில் பாலாஜி ஜெயலலிதா தலைமையிலான அமைச்ச
ரவையில் இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு இப்போது வழக்கு கைது. கொங்கு மண்டலத்தை பா.ஜ.க.வுக்குக் கொடுத்து விட்டு செந்தில்பாலாஜி பா.ஜ.க.வில் இணைந்து விட்டால் இந்த வழக்குகள் எதுவும் இருக்காது. காரணம், அமலாக்கத்துறை இப்படி ஒரு அரசியல் வேலைத் திட்டத்தோடு இந்தியா முழுக்க செயல்பட்டும் வருகிறது.

இந்த ரெய்டுகள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பாட்னா கூட்டம் உணர்த்தும் யதார்த்தம் அதுவே. ஆனால் ஒரு தெளிவான திட்டத்தோடு எதிர்க்கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் பல ஆலோசனைகள் தேவைப்படலாம். எது எப்படி என்றாலும், இந்துத்துவம் தனது இறுதி வாசலை அடைய 2024 நாடாளுமன்றத் தேர்தலை நம்பியிருக்கிறது.

அதை அடைய திரைப்படங்கள், விர்ச்சுவல் உலகம், அரசு நிறுவனங்கள் என அனைத்தையும் பயன்படுத்தவே செய்யும். இதே சமகாலத்தில் இந்துத்துவ அடையாள அரசியல் தோல்வியடைவதையும் நாம் பார்க்கிறோம். கர்நாடக மாநிலத்தில் மதவாதம் ஊழலின் முன்னால் தோற்றுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற மோடிக்கு வரலாறு காணாத அளவு வரவேற்பை அளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் போர், சீன அமெரிக்க பனிப்போர் இந்தியாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடி தனக்கானது என மாற்றிக் கொண்டார். ஆனால் அவரது பயண படாடோபங்களுக்கு மத்தியில் “Hey Joe! Ask Modi!” என்ற பிரச்சார இயக்கமும் கவனத்தை ஈர்த்தது.

ஓபாமா இந்திய முஸ்லிம்கள் பற்றி தன் கவலையை வெளிப்படுத்தினார். முன்னணி ஊடகங்கள் அனைத்தும் மதச்சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பின. இது மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே நடந்தது.

ஹிந்துத்துவ ‘ஆதி புருஷை’ அனுமனே காப்பாற்றவில்லை. படு தோல்வியடைந்துள்ளது திரைப்படம். எதிர்ப்பின் காரணமான கவனம் பெற்ற ‘கேரளா ஃபைல்ஸ்’ போன்று இந்தப் படத்திற்கு எந்த கவனமும் கிடைக்கவில்லை. அவர்கள் நினைப்பதை எல்லாம் செய்து காட்டும் சூழல் முழுக்க வெற்றி அளிக்காத நிலையில் இன்னொரு முறை அவர்கள் வென்றால் இந்தியாவில் பொதுத் தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும்.

இன்னொரு பக்கம் பா.ஜ.க. ஆட்சி செய்யாத அரசுகளும் விழித்துக் கொண்டுள்ளன. ஒன்றிய புலனாய்வுத்
துறை மாநில அரசின் அனுமதியின்றி இனி எவர் ஒருவரையும் விசாரிக்க முடியாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மேற்குவங்கம், தெலங்கனா,பஞ்சாப், ராஜஸ்
தான் என பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இதை அறிவித்துள்ளது.

பா.ஜ.க.வைத் தன்னந்தனியே ஒரு கட்சியாக எதிர்கொள்ளும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.பா.ஜ.க.வும்கூட காங்கிரஸ் கட்சியைத் தனியாக எதிர்கொள்ளவில்லை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அது வலிமையான கூட்டணி வைத்துதான் வென்றது. அதன் பின்னர் எதிர்க்கட்சிகளைப் பிளவுப்படுத்தி ஒரு அணியாகத் திரள விடாமல் தடுத்து வெறும் 35 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. 65 சதவீத மக்களின் எதிர்ப்பைக் கொண்டுள்ள பா.ஜ.க. இந்துத்துவம் என்ற பொதுக்கருத்தியலை நம்பியிருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இணைந்தால் நூறு தொகுதிகளில் கூட தன்னால் வெல்ல முடியாது என்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும்.

இதே உண்மையை இம்முறை எதிர்க்கட்சிகளும் உணர்ந்திருபப்தாக தெரிகிறது.

 

arulezhilan@gmail.com