இரண்டு பெண்களும் என்ன சொல்வதென்று தெரியாமல் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தனர். ஒரு பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அவளின் பிடியிலிருந்து இறங்கத் திமிறிக்கொண்டிருந்தது. அவள் அந்தக் குழந்தையை இறுக்கமாக அணைத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்னால தனியா இருக்க முடியாது சார், புருஷன் இல்லாம ரெண்டு பொம்பள புள்ளங்க வளத்து கல்யாணம் கட்டிக் கொடுத்துருக்கேன், இப்ப இவளுவ என்ன பார்க்க முடியாது, தனியா போனு சொன்னா நான் எங்க போறது?, மாறி மாறி இவளுங்க வீட்லயே இருந்துக்கிறேன். என்ன திருப்பி எங்கேயும் அனுப்ப வேண்டாம்னு சொல்லுங்க” எனச் சொல்லிவிட்டு முந்தானை தலைப்பை எடுத்து கண்களை மூடிக்கொண்டு அழுதாள் அந்த இரண்டு பெண்களின் தாய்.

“எங்க ரெண்டு பேர் வீடும் கூட்டுக்குடும்பம் சார், ஒரு நாள் எங்கம்மா வந்தாவே எங்க மாமியார் கத்தும், கூடவே வச்சிக்க எப்படி ஒத்துக்கும், சொன்னா இது புரிஞ்சிக்க மாட்டேந்து சார், எனக்கு மட்டும் ஆசையா எங்கம்மாவ தனியா அனுப்பணும்னு” என்று இந்த இளைய மகள் சொல்லும்போது,

“நான் என்னடி தொந்தரவு பண்ணப் போறேன், உன் வேலைக்கு அணுசரனையா இருக்கேன், என்ன வச்சுக்கேயேன்டி” என்று இடைமறித்து அந்த தாய் கெஞ்சினாள்

“என்னமா புரிஞ்சிக்காம பேசுற, உன் புள்ளங்க வாழணுமா இல்ல வாழாவெட்டியா உங்கூட இருக்கணுமா? ஒரு அம்மாவா நீயே புரிஞ்சிக்கிட்டுப் போவியா, ஒப்பாரி வைக்கிற?” என்று மூத்த மகள் கத்தினாள்.

அவள் கத்தியதற்குப் பிறகு “நான் எங்கேயும் போகமாட்டேன், போகமாட்டேன்” என்பதைத் தவிர அந்த அம்மா வேறு எதுவும் சொல்லவில்லை.

சென்னையில் வங்கி ஒன்றில் பெரிய பொறுப்பில் அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக சரியாகத் தூங்குவதில்லை, ஏதேதோ பயம், யோசனை என காரணங்களுக்காகத் தனது தாயை அழைத்து வந்திருந்தார். அந்த அம்மாவிடம் பேசியதற்குப் பிறகுதான் புரிந்தது. அந்த மகன் தனது தாயை மேன்சன் ஒன்றில் ஒரு மாத வாடகை இரண்டாயிரம் கொடுத்து தங்கவைத்திருக்கிறார். வேலைக்குப் போகும் ஆண்கள் மத்தியில் தனியறையில் ஒரு முதிய பெண்மணி!. ஒவ்வொரு வேலைக்கும் உணவு ஆர்டர் செய்து தருகிறார். அலுவலகத்திலிருந்து போகும்போது ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்கிறார். அந்த அம்மா அது நாள் வரை கிராமத்து வீட்டில் தனியாகத்தான் இருந்திருக்கிறார், சமீப நாட்களாக அங்கு எல்லோரிடம் சண்டை போடுகிறாள் என அருகிலிருப்பவர்கள் தொடர்ச்சியாகப் புகார் சொன்னதற்குப் பிறகு மகன் அழைத்து வந்து மேன்சனில் தங்க வைத்திருக்கிறார்.

“ஏன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமே?” என கேட்டேன்.

“மனைவி வேலைக்கு செல்கிறாள், குழந்தைகளையே எனது மாமியாரும், மாமனாரும் தான் பார்த்துக்கொள்கிறார்கள், எங்கம்மா வந்தா சும்மாயிருக்காது, அதுல ஏதாவது பிரச்சினைய கொடுத்துட்டே இருக்கும், நல்லாயிருக்காது சார்” என்றார் பாவமாக

அந்த அம்மா விடுவது போல இல்லை. “அவன் பொண்டாட்டியோட அம்மா அப்பாவ பார்க்குறான், பெத்த அம்மாவ பார்க்க மாட்டானா? எனக்கும் பேர புள்ளங்களோட இருக்கணும்னு ஆச இருக்காதா? கல் நெஞ்சக்காரன் சார் இவன், பெத்த அம்மாவ இப்படி தவிக்க விடறவன் உருப்பட மாட்டான் சார்” என கோபமாகக் கத்திக்கொண்டிருந்தாள். அவரது மகன் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்தபடியே அமர்ந்திருந்தார்.

சமீபத்தில் செய்தி ஒன்றைப் படித்தேன். எண்பது வயது முதிய பெண் ஒருவரை அவரது மகனும், மருமகளும் ஓராண்டாக பாத்ரூமில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள். அக்கம் பக்கதினர் புகாரளித்ததற்குப் பிறகு காவல் துறை வந்து அந்த முதிய பெண்ணை மீட்டிருக்கிறது. அங்கும் அந்த மகன் தலை குனிந்தபடிதான் நின்றிருப்பார்.

80 வயது முதியவர் ஒருவரை அவரது மொத்த குடும்பமே கூட்டிக்கொண்டு வந்தனர். “எப்பப் பார்த்தாலும் யாரையோ திட்டிட்டே இருக்கார், மருமகள சந்தேகப்பட்டு பேசுறார், நல்லா சாப்பிட்டுவிட்டுப் பிறகு இன்னும் சாப்பிடவே இல்லனு பொய் சொல்றார், அது மட்டும் இல்லாம படுக்கைல யூரின் போய்டறார், அன்னைக்கு நைட் ஃப்ரிஜ்ல போய் யூரின் போய் வச்சிட்டார், வேணும்னே பண்றார்னு தெரியுது, எதுக்குனு தெரியல” என நீண்ட குற்றசாட்டுகளை அடுக்கினர்.

பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு ‘டிமென்ஷியா’ என்ற மறதி நோய் இருப்பது புரிந்தது. அவர் வேண்டுமென்றே செய்யவில்லை என நோயைப் பற்றி அவர்களது குடும்பத்தில் உள்ளவருக்கு விளக்கினேன். எப்படிக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், வீட்டை விட்டு வெளியே போனால் தனியாக அனுப்பக்கூடாது, யாராவது பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லி அனுப்பினேன். சில நாட்கள் கழித்து கர்னாடகாவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த முதியவரின் பெயரைச் சொல்லி தெரியுமா என கேட்டார்கள். ஆமாம், எனது நோயர் என்று சொன்னேன். அவர் தனியாக அலைந்து கொண்டிருப்பதாகவும் எனது மருத்துவமனை சீட்டு மட்டும் கையில் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். நான் உடனடியாக அவரது மகனுக்கு அழைத்து சொன்னேன். “வேணும்னு தான் தொலைய விட்டோம், எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல” என்றார். பிறகு நானே அந்த எண்ணுக்கு அழைத்து அங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க பரிந்துரை செய்தேன்.

மேலே சொன்னவையெல்லாம் தனிப்பட்ட குடும்பங்களின் பிரச்சினையோ அல்லது பெற்றோரைப் பராமரிக்காமல் விடும் சில பிள்ளைகளின் பிரச்சினையோ மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினை. இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் மிக சவாலானதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஓர் உலகளாவிய பிரச்சினை.

அதிகரித்து வரும் முதியோர்களை நாம் எப்படி பராமரிக்கப் போகிறோம்?

கடந்த பத்து வருடங்களாக முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் அடுத்த இருபது ஆண்டுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2050 ஆம் ஆண்டு 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் 1.5 பில்லியன் இருப்பார்கள் என்கிறது. இது மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம்!

இந்தியாவைப் பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமே முதியோர்களின் எண்ணிக்கை. 2025 ஆம் ஆண்டு 12 சதவீதமாக உயர்ந்துவிடும் என்கின்றன ஆய்வுகள். 2050 ஆம் ஆண்டு 14 வயதிற்குக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையை விட 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கும் என கணக்கெடுப்புகள் சொல்கின்றன.

நவீன மருத்துவ அறிவியலின் வளர்ச்சியின் விளைவாக சராசரி வாழ்நாள் அதிகரித்திருப்பது தான் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கைக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. வாழ்நாள் அதிகரித்திருக்கும் அளவிற்கு முதியோர்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்திருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல முடியும். அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. அதை மனதில் கொண்டு முதியோர்களின் பராமரிப்பிற்கான உள் கட்டமைப்புகளையும், திட்டங்களையும் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்த இருபதாண்டுகளில் இதுவே பிரதான பிரச்சினையாக இருக்கும் என்கின்றனர் முதியோர் நல ஆர்வலர்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 22 ஆம் தேதி முதியோர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு வன்முறையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் இன்னும் அதிர்ச்சியான தகவல், இந்த வன்முறைகள் பெரும்பாலும் குடும்பச் சூழலிலேயே நடக்கிறது என்பதுதான்.

முதியோர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து வந்தாலும், வளரும் நாடுகளில் இந்தப் பிரச்சினை தனித்துவமானது. ஏனென்றால் பெரும்பாலான வளரும் நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களிலும், வறுமைக்கோட்டிற்குக் கீழேயும் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களில் பெரும்பாலோனோர் அன்றாட வாழ்க்கைக்காகப் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள். சமீபத்தில் அதிகரித்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக முதியோர்கள் சராசரி இந்தியக் குடும்பத்திற்கு சுமையானவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே இவர்களின் மீதான வன்முறைகளும் வளரும் நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. இந்த நாடுகளில் இவர்களைப் பராமரிப்பதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டால் மட்டுமே இவர்களின் மீதான இந்த வன்முறை சம்பவங்களும் குறையும்.

முதியோர்களின் பராமரிப்பில் நாம் இந்தியாவின் சவால்களை பற்றிப் பார்ப்போம். முதியோர்களைப் பராமரிப்பதில் இந்தியாவிற்கு முன்பிருக்கும் சவால்கள்:

சுகாதாரக் கட்டமைப்புகளின் போதாமை

பெரும்பாலான மாநிலங்களில் அடிப்படை சுகாதார வசதிகளே கிடைக்காத போது முதியோர்களுக்கான சுகாதார வசதிகளை எப்படிப் பேச முடியும்? இன்றும் நமது மருத்துவமனைகள் முதியோர்களுக்கு வசதியானதாகயில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, அவர்களுக்கான பிரத்தியேகச் சலுகைகள் இல்லாதது,
கிராமப்புற மருத்துவமனைகள் இல்லாதது போன்றவையெல்லாம் மிகப்பெரிய போதாமையாக இருக்கிறது. தமிழ்நாடு போன்ற வளச்சியடைந்த மாநிலங்களில் கூட முதியோர்களுக்கான பிரத்தியேக மருத்துவ சேவைகள் இல்லை. முதியவர்களுக்கான சிறப்பு நிபுணர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள். மேலும் முதியோர் நலன் தொடர்பான பயிற்சிகளும் இங்கில்லை.

தீர்வுகள்:

அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கிராமப்புறம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் முதியோர்களுக்கான பிரத்தியேக சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் போன்றவற்றில் முதியோர்களுக்கான சேவையைப் பிரதானமாகக் கொள்ள வேண்டும். முதியோர் நலன் சார்ந்த படிப்புகளையும், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற அதிக எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்களையும் அடுத்த பத்தாண்டுகளில் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். நவீன சிகிச்சைகள், மருந்துகள், ஆராய்ச்சிகள் என அந்த மருத்துவமனை முதியோர் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்க வேண்டும். முதியோர்களுக்கான சத்தான உணவு, நோய் தடுப்பு வாழ்க்கை முறைகள் போன்றவற்றைப் பற்றியதான தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நீண்டகாலப் பராமரிப்பு சவால்கள்

முதியவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு தற்போது குடும்பங்களிடம் மட்டுமே இருக்கிறது. நீதிமன்றங்களுமே கூட இதை அந்தக் குடும்பத்தின் பொறுப்பாக, பிள்ளைகளின் பொறுப்பாக மட்டுமே இருக்க கட்டாயப்படுத்துகிறது. பெற்றோர்களைப் பராமரிக்காத பிள்ளைகளைத் தண்டித்த தீர்ப்புகளையும் நாம் சமீபத்தில் பார்த்தோம். இவையெல்லாம் முதியோர் பராமரிப்பில் தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற அரசாங்கத்தின் கைகழுவும் முயற்சியே.

இன்றைய பொருளாதார நெருக்கடிகள் குடும்பங்களின் மீது மிகப்பெரிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகின்றன, குடும்பங்கள் சுருங்கியிருக்கின்றன.கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலையே பெரும்பாலும் வளர்ந்த மாநிலங்களில் இருக்கின்றன. இந்த சூழலில் தான் குடும்பங்கள் முதியோர் பராமரிப்பில் தடுமாறுகின்றன. அது குடும்பத்தின் இயக்கத்தை பாதிக்கிறது, அதனால் முதியோர்களைக் கைவிட்டுவிடும் நிலைக்குக் குடும்பங்கள் வந்திருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிது சிறிதாக முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் உருவாகியிருக்கின்றன. முதியோர்களுக்கான எதிரான மிக அதிகமான மனித உரிமை மீறல்கள் இந்த இல்லங்களில் நடப்பதாகத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இவற்றை முறைப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் இதுவரை அரசாங்கங்கள் எடுத்ததாகத் தெரியவில்லை.

தீர்வுகள்:

நீண்ட காலப் பராமரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும்: இந்த சூழலையெல்லாம் அரசாங்கம் கருத்தில் கொண்டு முதியோரைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பராமரிப்பு மையங்களை இப்போதிருந்தே அரசாங்கம் தொடங்க வேண்டும், அரசு சாரா நிறுவனங்களை முழுமையாக அதில் ஈடுபடுத்த வேண்டும், அதில் முதியோர் நலனில் பயிற்சி பெற்ற சமூக நலத்துறையினரை, செவிலியரை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் கூட தற்காலிக தங்கும் முகாம்களை அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவது பற்றி இப்போதிருந்தே அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

பொருளாதார சவால்கள்

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உழைக்கும் மக்களின் வீதம் குறைகிறது, அதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் முதியோர்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருப்பதால் அது குடும்பத்திற்கான பொருளாதார சுமைகளை அதிகரிக்கின்றன, மேலும் சுகாதாரக் கட்டமைப்பிற்கு நிறைய செலவிட வேண்டியிருக்கிறது. அரசு தரப்பில் முதியோர் ஓய்வூதியம், பராமரிப்பு செலவீனங்கள், முதியோர் நலத்திட்டங்கள் என மிகப்பெரிய பொருளாதார சுமையை அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை ஏற்படுத்துகிறது.

தீர்வுகள்:

இப்போதிருந்தே ஒருங்கிணைந்த ஓய்வூதித திட்டங்களை உருவாக்க வேண்டும். முறைசாரா பணியிலிருப்பவர்களுக்கும் பொருளாதார வளங்களை உருவாக்குவதை இப்போதிருந்தே அரசு திட்டமிட வேண்டும். முதியோர்களுக்கான காப்பீட்டை இன்னும் இலகுவாக்கி அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும்.

சமூக மற்றும் உளவியல் சவால்கள்:

தனிமைப்படுத்தப்படுதல்

முதியோர்களுக்கான மனநலப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் பற்றி சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் குடும்ப உறுப்பினர்களால் காட்டப்படும் அலட்சியமும், புறக்கணிப்புமே அவர்களின் மனரீதியான பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாகத் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, நமது குடும்பங்கள் முதியோர்கள் தொடர்பான விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த தவறியிருக்கின்றன. குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் முதியோர்களின் மாண்பும், அவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளும் முற்றிலுமாகத் தெரியாமல் வளர்கின்றனர். இந்த சிறுவர்களால்தான் முதியோர்கள் பெரும்பாலும் அவமானப்படுத்தப்படுகின்றனர். இந்த மாண்புகளையும்,விழுமியங்களையும் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். கல்வி முறையிலேயே கூட முதியோர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றி சேர்க்கலாம்.

முதியோர்களை கவனத்தில் கொள்ளாத சமூக கட்டமைப்புகள்

நமது சமூக கட்டமைப்புகள் அனைத்துமே முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் எதிரானவை. அவர்களுக்கான பிரத்தியேக நடைபாதையோ, வசதிகளோ அற்று தான் பெரும்பாலான கட்டிடங்கள் இங்கிருக்கின்றன. சில நேரங்களில் மருத்துவமனைகளில் கூட இந்த வசதிகள் இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக இவர்களும் செல்ல வேண்டிய நிலைதான் இப்போதும் இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு உள்கட்டமைப்புகள் அத்தனையையும் இவர்களுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டிடத்தில் இரண்டு லிஃப்ட் இருந்தால் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்கும்,முதியோர்களுக்குமானதாக இருக்க வேண்டும். முழு கவனமாக அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் மட்டுமாவது உருவாக்கிட வேண்டும்.

மனநலப் பிரச்சினைகள்

வயது முதிர்வின் விளைவாக வரக்கூடிய உடல் ரீதியான நோய்கள், தனிமை, புறக்கணிப்பு, பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலை, நெருங்கியவர்களின் மறைவு, தூக்கமின்மை என பல காரணங்களின் விளைவாக முதியோர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் வருகின்றன. இந்த மனநலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் கவனம் கொடுக்கப்படுவதில்லை. சிகிச்சையளிக்காத இந்த மனநலப் பிரச்சினைகளின் விளைவாக அவர்களின் உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் வாழ்க்கையின் தரத்தையும் அது பாதிக்கிறது. மேலும் முதுமையில் உருவாகக்கூடிய மறதி நோய் பல்வேறு நடவடிக்கை கோளாறுகளையும், குழப்பத்தையும், வழக்கத்திற்கு மாறான செயல்களையும் உருவாக்குகின்றன. இதன் காரணமாக குடும்பத்து உறுப்பினர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

முதுமையில் உருவாகக்கூடிய மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக பிற துறை சார்ந்த மருத்துவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், மேலும் இளம் மருத்துவர்களிடம் இது தொடர்பான புரிதலை உருவாக்க வேண்டும், அப்போது தான் வழக்கமாக உடல் பரிசோதனையின் போது மனநல பரிசோதனைகளும் நடைமுறைக்கு வரும். இதனால் மனநலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். அதே போல மறதி நோய்க்கென்று பிரத்தியேக மருத்துவமனைகளையும், பராமரிப்பு மையங்களையும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து அரசு தொடங்க வேண்டும். இதற்கான மையத்தை ஒவ்வொரு மாவட்ட, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அரசு தொடங்க பரிசீலிக்க வேண்டும்.

அதிகரிக்கும் முதியவர்களின் தற்கொலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:

இளம் வயது தற்கொலைகளைப் போலவே, முதியவர்களின் தற்கொலைகளிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. தனிமையுணர்ச்சி அதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. முதியவர்களின் சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதன் விளைவாக இந்த தனிமையுணர்ச்சியை குறைக்க முடியும். அவர்களுக்கென்று தனிப்பட்ட சமூக கூடங்களை உருவாக்கலாம். நகர்ப்புற, கிராமப்புறத் திட்டங்களில் அவர்களைப் பங்கேற்க வைக்கலாம். பல்வேறு சமூக நலத்திட்டங்களில் அவர்களை ஆக்கப்பூர்வமாக பங்களிக்கச் செய்து அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போல முதியோர்களுக்கான சமூக கூடல்களையும் அரசு சாரா நிறுவனங்களையும் திட்டமிட்டு நடத்தலாம்.

இணைய உலகில் முதியவர்கள்

சமூக வலைதளங்களின் வழியாக முதியவர்களை இந்த டிஜிட்டல் உலகில் இணையs செய்யலாம். முதியவர்களுக்கான ஏதுவான செயலிகளை உருவாக்கலாம். எளிமையான செலவுகள், வங்கி கணக்குகள் நிர்வாகம், சுகாதார சேவைகள், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுதல் போன்றவற்றிலெல்லாம் முதியவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் பங்களிப்பின் வழியாகப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம்.

அடுத்த சில வருடங்களில், குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கப்போகும் சூழலில், அவர்களுக்கான உலகை இப்போதிருந்தே திட்டமிட்டால்தான் உருவாக்க முடியும். உலக சுகாதார நிறுவனம் இதன் பொருட்டாக இந்தப் பத்தாண்டை (2023-2024) முதியோர்களுக்கான பத்தாண்டாக அறிவித்திருக்கிறது. அனைத்து நாடுகளும், குறிப்பாக வளரும் நாடுகள் இதற்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் நாம் இன்னும் தொடங்கவில்லை என்பது நம்மை அச்சுறுத்துகிறது. இதற்குள் முதியோர்களின் மீதான வன்முறை மிக அதிகமாக நடக்கும் நம் நாட்டில் நாம் இன்னும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இப்போதிருந்தே முழுமூச்சுடன் செயல்பட்டால்தான் எதிர்கால முதியவர்களைப் பாதுகாக்க முடியும். எதிர்கால முதியவர்கள் வேறு யாருமல்ல, அது நாம்தான் என்று உணரும்போது இந்த அச்சம் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

sivabalanela@gmail.com