நாங்கள் ஆறுகளைக் கடந்தோம், மலைகளைக்கடந்தோம். பள்ளத்தாக்குகளையும் இருண்ட கானகங்களையும் கடந்து சென்றோம். மாநிலங்களின் எல்லைகளைத் துடைத்து அழித்தோம். தடையாக நின்ற மொழிகளை வசப்படுத்தினோம். அந்தக் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் போலவே கோண்டு மொழியும் எங்களுடன் தோழமை பூண்டது. அந்த மக்களின் உள்ளங்களைப் படிக்கக் கற்றுக் கொண்டோம். அவர்களோடு ஒன்று கலந்தோம்.

மக்கள் எங்களுக்குக் காடுகளின் புவியியலையும், பழங்குடிப் பண்பாட்டையும், மொழிகளையும், கலைகளையும் கற்றுத் தந்தனர். அவர்கள், தங்கள் துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்புகின்றனர். வில் அம்புகளைப் போருக்குத் தயார் செய்கின்றனர். தண்டகாரண்யத்தில் முன்னேறும் ஒவ்வொரு அடிக்கும் எதிரி தனது ரத்தத்தை விலையாகத் தரவேண்டுமென்பதைத் தங்கள் வீரஞ்செறிந்த எதிர்ப்பால் காட்டிவருகின்றனர்”.

பழங்குடி மொழிகளில் புரட்சிகர இலக்கியம்
(முன்னோடி வெளியீடு 1994)

நக்சல் இயக்கம் மாவோவைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட இயக்கம். அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலினுக்கு அடுத்த தலைவராக மாவோவை ஏற்றுக் கொண்ட இயக்கம்.

மார்க்சியத்துக்கு மாவோவின் பங்களிப்பைத் தெரிந்துகொள்வது இக்கட்டுரையில் பேசப்படும் விஷங்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மாவோ தலைவராவதற்கு முன்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யக கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையை அப்படியே பின் பற்றி வந்தது.

ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சங்க இயக்கங்கள் கட்டுவது, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, போராட்டங்கள், கிளர்ச்சிகள் மூலம் அரசை பலவீனப்படுத்துவது, ஒரு பெரும் மக்கள் எழுச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் இயங்கின. பெரும்பாலான மக்கள் நகரங்களில் தொழிலாளர்களாக இருந்த நாடுகளில் இது பொருத்தமானதாக இருந்தது.

சீனா அன்று மாபெரும் விவசாய நாடு. எண்ணிக்கையில் மிகக் குறைவானதாகவிருந்த நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தால் மட்டும் புரட்சியை சாதிக்க முடியாது. பெரும்பான்மை விவசாயிகளும் புரட்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதினார் மாவோ. நகரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் நிலையில் நகர்ப்புற எழுச்சி மட்டுமே ஒரு அரசைக் குலைத்து விடாது என்றார் மாவோ.

கிராமங்கள் பரந்து விரிந்த நிலப்பரப்பில் இருப்பதால் அங்கே ஒரே நேரத்தில் எழுச்சி என்பது சாத்தியமில்லை. அரசுக்கு அவசியமான போக்குவரத்து வசதிகள் இல்லாத, அரசானது நேரடியாக இல்லாமல் நிலப்பிரபுக்கள் மூலம் ஆட்சி நடத்தும் நிலப்பகுதிகளில் கெரில்லாக் குழுக்களைக் கொண்டு தளப் பிரதேசத்தை உருவாக்குவது, அந்தப் பகுதியை முழுமையாக அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது, அங்கிருந்து விரிவுபடுத்தி நகரங்களைச் சுற்றி வளைத்து இறுதியாக அரசைக் கைப்பற்றுவது என்பது மாவோ வகுத்த செயல்திட்டம். அரசின் பலம் அதிகமாக இருக்கும்வரை ஒருபோதும் ஒரு கெரில்லா படை நேரடி யுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றார் மாவோ. எதிரி முன்னேறும்போது பின்வாங்குவதும், எதிரி பின்வாங்கும்போது முன்னேறுவதும், எதிரியை அலைக்கழித்து அவர்களின் பலத்தை வீணடிக்கச் செய்வதும் கெரில்லா படையின் தந்திரமாகயிருக்க வேண்டும் என்றார் அவர்.

எதிரியின் பத்து விரல்களையும் காயப்படுத்துவதைவிட ஒரு விரலை வெட்டியெறிவது பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எதிரி பலவீனமாக இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கெரில்லா தாக்குதல்கள் நடத்தி அதன் மூலம் அந்தப் பகுதியை விடுவிக்க பகுதியாக மாற்ற வேண்டும். அதே நேரம் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் பலம்வாய்ந்த எதிரியால் தாக்கப்பட்டால் அவற்றைக் கைவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் மாவோ.

போரின் இறுதிக் கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சீன கம்யூனிஸ்ட் படை மிகுந்த பலத்துடன் இருந்தபோது சியாங்கை ஷேக்கின் படை அதைத் தாக்கியது. இந்தப் பகுதி மீதும், அழகிய நகரின் மீதும் உணர்வுபூர்வமான நேசத்தைக் கொண்டிருந்த செம்படைத் தோழர்கள் தங்களால் சியாங்கை ஷேக்கின் படைகளை எதிர்த்துத் தாக்க முடியும், அதைக் கைவிட வேண்டாம், உயிரைக் கொடுத்து செந்தளப் பிரதேசத்தைக் காப்போம் என்று மாவோவிடம் மன்றாடினர்.

மாவோ சிரித்துக் கொண்டே நாம் சியாங்கை ஷேக்குக்கு ஒரு நகரைக் கொடுப்போம். அவர் நமக்கு சீனாவைக் கொடுப்பார் என்றார். புரட்சி என்பது ஒரு நிதானமான அறிவுச் செயல்பாடு. வீரம் தியாகத்தை மட்டும் சார்ந்ததல்ல என்பதில் நம்பிக்கை கொண்ட வராக இருந்தார் மாவோ.

இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸின் காலனியாகவிருந்த வியட்நாமை ஜப்பான் கைப்பற்றியது. அதை எதிர்த்துப் போரிட்டு வந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பான் உலகப் போரில் சரணடைந்ததும் வியட்நாமை மிச்சம் மீதியிருந்த ஜப்பானிய படைகளிடமிருந்து விடுதலை செய்து சைகோனில் ஆட்சியை நிறுவியது. ஆனால் ஜப்பான் சரணடைந்ததும் வியட்நாம் மீது திரும்பவும் உரிமை கொண்டாடிய பிரான்ஸ் அதை ஆக்கிரமிக்கத் தன் படைகளை அனுப்பியது. இந்த நேரத்தில் ஹோசிமின்னுக்கும் வியட்நாம் செஞ்சேனையின் தலைமைத் தளபதி ஜெனரல் கியாப்புக்கும் நடந்ததாக ஒரு உரையாடலைச் சொல்வார்கள்.

ஹோசிமின்: தலைநகர் சைகோனில் நம்மால் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?

ஜெனரல் கியாப்: ஒருவாரம்.

ஹோசிமின்: நகருக்கு வெளியே உள்ள கிராமங்களுக்குப் பின்வாங்கினால் எவ்வளவு நாள் போரிட முடியும்?

ஜெனரல் கியாப்: ஒரு மாதம்.

ஹோசிமின்: அதற்கும் அப்பால் உள்ள காடுகளுக்கும் மலைகளுக்கும் பின்வாங்கினால் நாம்மால் எவ்வளவு காலம் போரிட முடியும்?

ஜெனரல் கியாப்: உலகம் உள்ளவரை.

இது பெரும்பாலும் கற்பனையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும் சாராம்சத்தில் இதுதான் மாவோ முன்வைத்த நீண்டகால மக்கள் யுத்தக் கோட்பாடு.

அதே போல விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் மட்டுமே புரட்சியை சாதித்துவிட முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். நடுத்தர வர்க்கம், சிறு முதலாளிகள், சிறு, நடுத்தர விவசாயிகள், வெளிநாட்டு மூலதனத்தால் பாதிக்கப்படும் உள்ளூர் முதலாளிகள் (தேசிய முதலாளிகள்) ஆகியோர் இணைந்தே பன்னாட்டு மூலதனத்தோடு உறவு கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுத்துவரும் தரகு முதலாளிகளையும், மிகவும் பிற்போக்கான நிலப்பிரபுக்களையும் ஒழித்து புரட்சியை சாதிக்க முடியும். அது சோஷலிசப் புரட்சி அல்ல. பல்வேறு வர்க்கங்கள் இணைந்து நடத்தும் புதிய ஜனநாயகப் புரட்சி என்றார்.

இந்தியாவில் மா லெ இயக்கம் மாவோவைத் தலைவராக ஏற்றுக் கொண்டதாக இருந்த போதிலும் அதீத உணர்வெழுச்சியுடன் தன்னிலை மறந்து இயங்குவதாகவும் இருந்தது. மாவோ குறிப்பிட்ட முக்கியமான ஒரு அம்சம் ஆளும் வர்க்கங்களுக்குள்ளும் முரண்பாடு இருக்கிறது. அதை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி பயன்படுத்த வேண்டுமென்பதாகும். மற்ற வர்க்கங்களையும் இணைத்து செயல்பட வேண்டும் என்றும் மாவோ கூறினார்.

இவையனைத்தும் மா லெ இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டன. கெரில்லாத் தளமாக மாற்றவும் ஆயுதப் போராட்டம் நடத்தவும் ஏதுவான இடங்களா என்ற கவலை இல்லாமலேயே வாய்ப்புக் கிடைத்த இடங்களில் ஆயுதப் போராட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சங்கங்கள், மாணவர், இளைஞர் அமைப்புகள் ஆகியவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. Expand anywhere and everywhere என்பதே சாருவின் முழக்கமாகும்.

சாரு மஜும்தாரின் மரணத்துக்குப் பிறகு கட்சியில் இது குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன. மகாதேவ் முகர்ஜியின் தலைமையில் சாருவின் பாதையை அப்படியே தொடர விரும்பியது ஒரு பிரிவு.சத்யநாரயண் சிங் தலைமையிலான பிரிவு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மக்களைத் திரட்டும் வழியில் செல்ல முடிவு செய்தது. இரண்டுக்கும் நடுவே ஒரு பாதையைத் தேர்வு செய்தது சர்மாதலைமையிலான குழு. இக்குழுவில்தான் கொண்ட
பள்ளி சீத்தாராமையா இருந்தார்.

கொண்டபள்ளி சீத்தாராமையா பழைய ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். தெலங்கானா புரட்சியின்போது கிருஷ்ணா மாவட்ட செயலராக இருந்து எழுச்சியில் தீவிரபங்காற்றினார். 1964 ஆம் ஆண்டு கட்சி உடைந்த போது சீதாராமையா அரசியலில் இருந்து விலகி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். நக்சல்பாரி எழுச்சி தொடங்கியதும் அதில் இணைந்து கொண்டார். நக்சல்பாரி இயக்கம் பல துண்டுகளாக உடைந்ததும் சென்ட்ரல் ஆர்கனைசிங் கமிட்டி சி.பி.ஐ.எம்.எல். என்ற அமைப்பில் இணைந்து அதன் மூன்று மாநிலக்குழு உறுப்பினர்களில் ஒருவரானார்.

இக்குழுவின் தலைவர் ஜகஜித் சிங் சோஹல் மக்கள் திரள் போராட்டங்கள், ஆயுதப்போராட்டம் இரண்டையும் இணைக்கும் வழியை முன்மொழிந்தார். சீனாவின் தலைவர் எங்கள் தலைவர் என்பதைப் போன்ற முழங்கங்களை மறுதலித்தார். இந்தக் குழு பலவேறு மாநிலக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு கட்சியை சீரமைக்க முயன்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நக்சல் குழுக்கள் இத்துடன் இணைந்தபோதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வல்லமையை இந்தக் குழு பெற்றிருக்கவில்லை. அப்பலசூரி போன்ற தலைவர்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டுமென்றும் கோரினர்.

1977 ஆம் ஆண்டு இக்குழுவிலிருந்து கொண்டபள்ளி சீத்தாராமையாவும் ஏராளமான தோழர்களுடன் வெளியேறினார். ஆந்திர கமிட்டியும், கொண்ட பள்ளி சீத்தாராமையாவும், தமிழ்நாட்டில் இயங்கிய கூட்டக் குழு என்ற குழுவும் இணைந்து சி.பி.ஐ.எம்.எல். மக்கள் யுத்தம் என்ற கட்சி உருவானது.

நிற்க நேரமின்றி காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்த நக்சல் அமைப்புகளில் நின்று நிதானித்து ஆழமாகச் சிந்தித்து இயக்கத்தை வேர்பிடிக்கச் செய்தவர் கொண்டபள்ளி சீத்தாராமையாதான். எழுச்சி, அழிவு பிளவு என்று மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நக்ஸல்பாரி அமைப்புகளின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டவரும் கொண்டபள்ளி சீத்தாராமையாதான்.

வாய்ப்புக் கிடைந்த இடத்திலெல்லாம் அமைப்பு உருவாக்குவது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற நிலையை மாற்றி ஆயுதப் போராட்டத்தில் இறங்குவதற்கு ஏற்ற சூழல் எங்கே இருக்கிறதோ அங்கே அமைப்பு உருவாக்குவது என்ற திசைவழியை அவரே முன்வைத்தார். தேர்தெடுக்கப்பட்ட பகுதி (Perspective area), கெரில்லா மண்டலம் (guerrilla zone), விடுவிக்கப்பட்ட பகுதி (Liberated zone ) என்று திட்டமிட்ட முறையில் அமைப்பு இயங்க வேண்டும் என்று வரையறுத்தார். கெரில்லாக் குழுக்களும்கூட முதலில் சிறு தாக்குதல்களில் ஈடுபடும் பின்பு பல குழுக்கள் இணைந்து நகரும் போர்முறைக்கு (Mobile warfare)க்கு மாறிச் செல்லும், அதன் பின்பு ஒரு பகுதி விடுவிக்கப்படும், புரட்சி அலையலையாகவே முன்னேறும், முன்னேறும்போதே பின்வாங்கவும் தயாராக இருக்க வேண்டும், உடனடித் தீர்வுகள் சாத்தியமில்லை. விடாப்பிடியான நீண்டகால மக்கள் யுத்தமே இறுதி விடுதலையைத் தரும் என்றார் கொண்டபள்ளி சீத்தாராமையா. இது மாவோயிச போர்த்தந்திரங்களின் டெக்ஸ்ட் புக் வடிவம். இதை இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தியதில் கொண்டபள்ளி சீத்தாராமையாவின் தனித் திறன் வெளிப்பட்டது.

ஆயுதப் போராட்டம் என்பது நோக்கமாக இருந்தாலும் உள்ளூர் சட்டங்களும் அரசு அமைப்பும் அனுமதிக்கும் எல்லைவரை சட்டபூர்வமான போராட்ட வடிவங்களைப் பயன்படுத்துதல் மக்கள் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற புதிய வடிவங்களை பரிசீலித்துப் பார்க்கும் முறையையும் அவர்தான் உருவாக்கி
னார். முடிந்தவரை அரசுடனான நேரடி மோதல்களைத் தவிர்ப்பது, அரசின் அதிகாரம் எட்டாத, நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் உள்ள கிராமங்களில் முதலில் அமைப்புகள் உருவாக்குவது என்று சீத்தாராமையா உருவாக்கிய மக்கள் யுத்தக் கட்சி இயங்கியது.

கொண்டபள்ளி சீதாராமையா இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஒத்த கருத்துடைய இயக்கங்களை சந்தித்து ஒற்றுமைக்கான முயற்சிகளை தொடங்கினார். கட்சியின் அரசியலை விட்டு விலகாமல் புதுப்புது வடிவங்களையும், பிரச்சார முறைகளையும் பரீட்சித்துப் பார்க்க இடமளித்தவர் கொண்டபள்ளி சீத்தாராமையா. அதுவரை விவசாயிகளின் காதுகளில் கிசுகிசுப்பது, துண்டுப்பிரசுரம் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று இருந்த நக்சல் பிரச்சார உத்திகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் இவர்.

கத்தார் போன்றவர்கள் தெலங்கானா கிராமங்களில் மக்களிடையே வழக்கத்திலிருந்த புர்ர கதா, கேல் என்ற நாட்டிய நாடக வடிவம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் மூலம் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்யும் உத்தியை பரீட்சித்துப் பார்த்தபோது அதை ஆர்வத்துடன் ஆதரித்து ஊக்குவிக்கும் நெகிழ்வுத் தன்மை கொண்டபள்ளி சீதாராமையாவிடமிருந்தது. நக்சல்பாரி இயக்கம் ஒற்றைப் பரிமாணம் கொண்ட வறட்டு இயக்கம் என்ற தோற்றத்தை மாற்றியது மக்கள் யுத்தக் கட்சி. புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் வரவர ராவ், கல்யாண் ராவ் உள்ளிட்ட பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் முக்கிய பங்காற்றினர். எண்ணற்ற நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் வெளியாகின. சாகேத் ராஜன் போன்ற அற்புதமான வரலாற்றறிஞர்களும், அறிவியலாளர்களும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்க முடிந்தது.

 

ஸ்ரீ காகுளத்தில் ஆயுதப் போராட்டம் முழுமை யாகத் தோற்கடிக்கப்பட்டதும் கொண்டபள்ளி சீத்தாராமையா இருந்த சி.பி.ஐ.எம்.எல் ஆந்திர மாநிலக் குழு தெலங்கானா பகுதியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அந்தப் பகுதி கெரில்லா மண்டலமாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி என்று கருதப்பட்டது. இந்தப் பகுதிகளில் ஜமீந்தார்கள் சாதாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருந்தனர். விவசாயம் வணிகமயமாகி விளைபொருட்களை பெருநகரங்களில் விற்று லாபம் ஈட்ட வாய்ப்புகள் அதிகரித்ததும் நிலப்பிரபுக்கள் பண்ணையாட்களின் வேலை நேரத்தை அதிகரித்தனர். ஆண்டையின் நிலத்தில் கூலி இல்லாமல் வேலை செய்யும் வெட்டி என்ற முறை ஏற்கனவே குத்தகை விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து வந்தது. தவிர பசுமைப் புரட்சியின்போது அரசு பல நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கியது. எனவே நிலப்பிரபுக்களின் பாசன நிலங்களின் பரப்பு அதிகரித்தது. அவர்களுக்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நிலப்பிரபுக்கள் உரிய ஊதியம் கொடுக்க பிடிவாதமாக மறுத்து வந்தனர்.

ஏற்கனவே இருந்து வந்த அடக்குமுறையுடன் இந்தப் புதிய கொடுமைகளும் ஒரு வெடிப்புக்கான சூழலை ஏற்படுத்தியிருந்தன. தெலங்கானாவில் ஏற்கெனவே ஒரு மாபெரும் எழுச்சி நடந்த அனுபவமுமிருந்தது. இரண்டாவது, மூன்றாவது தலைமுறை பொதுவுடமையாளர்கள் இங்கே ஏராளமாகவிருந்தனர். மக்களுக்கு அரசியல் உணர்வூட்டவும், அவர்களைப் போர்க்குணம் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவும் சாதகமான சூழ்நிலை நிலவியது. நக்சல்பாரி இயக்கத்தின் ஆந்திர மாநிலக் கமிட்டி ஏற்கனவே தெலங்கானா பகுதிகளில் வேலை செய்து வந்தாலும் கொண்டபள்ளி சீத்தாராமையா அந்தப் பகுதியை கெரில்லாப் போராட்டத்துக்கான தளமாக வளர்த்
தெடுக்கவும், மக்கள் ஆதரவுத் தளத்தை விரிவு படுத்தவும் திட்டவட்டமான முயற்சிகள் மேற்கொண்டார். அப்பகுதி மக்களை அணிதிரட்ட ரயத்து கூலி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அடிலாபாத், கரீம்நகர் மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் கூலி, ஏழை விவசாயிகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. இயக்க ஆதரவாளர்களும் அரசியல் பயிற்சியளிக்கப்பட்டவர்களுமான பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு கிராமங்களுக்குச் செல்வோம் இயக்கம் நடத்தப்பட்டது. அங்கே தீவிரமாக இயங்கி வந்த முற்போக்கு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறு குழுக்களாக கிராமங்களுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி விவசாயிகள் நடுவே புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்தனர். ரயத்து கூலி சங்கத்தில் இணையும்படி விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜன நாட்டிய மண்டலி என்ற கலை இலக்கிய அமைப்பு தனது பாடல்கள், நிகழ்ச்சிகள் மூலம் புரட்சிகர அரசியலை கிராமம் கிராமமாக மக்களிடம் எடுத்துச் சென்றது. வங்கபந்து, கத்தார் நரசிங்கராவ் ஆகியோர் இணைந்து ஜன நாட்டிய மண்டலியை உருவாகினர். ஜன நாட்டிய மண்டலி பின்பு இந்திய புரட்சியின் முன்னணிப்படை என்றழைக்கப்பட்டது. புரட்சிகர அழகியல் என்ற ஒரு தனி வகைமையே தெலுங்கு இலக்கியத்தில் உருவானது. ஜனநாட்டிய மண்டலி கலைஞர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தி மக்களை புரட்சிகர அரசியலின்பால் ஈர்த்தனர்.

செக்கச் சிவந்த நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேட்டியும், விவசாயிகளின் போர்வையும், தடியுமாக தோன்றி “கொண்டலு பகலேசினம்- மலைகளையே பிளந்துட்டோம், பாறைகளைப் பிழிந்திட்டோம், ரத்தத்தையே கலவையாக்கி அணைகளையே கட்டினோம், உழைப்பு யாருது செல்வது யாருது என்று இடிக்குரலில் முழங்கும் கலைஞனின் உருவம் நக்ஸல்பாரி பிரச்சாரத்தின் அடையாளமானது.

இந்தப் பாடல்கள் மக்களுக்கு மிக அறிமுகமான மொழியில் எளிமையான கேள்விகளை வைத்தன. அவர்களை அமைப்பாக செயல்படத் தூண்டின. அமைப்பை மக்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றன. நிகழ்வின் இறுதியில் சுற்றி நின்று மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போலீஸ்காரர்களுக்கும் கத்தார் சில பாடல்கள் வைத்திருப்பார்.

எஸ்.பி.க்கும் டிஸ்பிக்கும் அழகழகா பங்களா இருக்கு

குதிரலாயம் போன்ற குவார்ட்டார்ஸில் உங்குடும்பம்

ஓண்டிக் கெடக்குது

நீயும் நானும் ஒண்ணா சேர்ந்துட்டா ஓ போலீசண்ணா…

என்ற பாடல் உள்ளூர் காவலர்களை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்தி வந்த காலங்களில் மிகவும் பிரபலமாகவிருந்தது. அந்தக் காலங்களில் மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் பரப்பி வந்த சத்ய சாய்பாவைக் கிண்டல் செய்தும் அம்பலப்படுத்தியும் ஜனநாட்டிய மண்டலி நிகழ்வுகளை நடத்தியது. புரட்சிக்காக உக்கிரமாக அறைகூவி அழைப்பதற்கு எந்த அளவுக்கு ஜன நாட்டிய மண்டலி முக்கியத்துவம் கொடுத்ததோ அதே அளவுக்கு சற்றே குறும்பும் வேடிக்கையும் விளையாட்டும் கலந்த மொழியில் உள்ளூர் அரசியல் பேசுவதற்கும் இடமளித்தது.

ஜகித்யாலா தாலுக்காவில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. கட்சி முதலில் நிலப்பிரபுக்கள் மேல் நேரடித் தாக்குதல் நடத்தவில்லை. புறம்போக்கு நிலங்கள், நிலப்பிரபுக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த நிலங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி நிலமற்ற மக்களுக்கு வினியோகிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது. இது அப்ராம் ஜோஹ் அதாவது பலாத்கார விவசாயம் என்று அரசால் அழைக்கப்பட்டது. ஆனால் அந்த சிறிய அளவு சமரசத்தைக்கூட நிலப்பிரபுக்கள் செய்து கொள்ள மறுத்தனர். தங்கள் எண்ணற்ற அடியாட்களைக் கொண்டு மக்கள் மீதும் கட்சித் தோழர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர்.

நிலப்பிரபுக்களின் அடக்குமுறையையும் சுரண்டலையும் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் ஆயிரமாயிரம் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். அடியாட்படைகள் துவம்சம் செய்யப்பட்டன. போலீஸ் இந்தப் பெருங்கோபத்தைக் கண்டு தலையிடத் தயங்கி தங்கள் காவல் நிலையங்களுக்குள் முடங்கியது. இது போன்ற கோபத்தையும், ஒற்றுமையையும் முன்கண்டிராத அடியாட்கள் கிராமங்களை விட்டு ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட அடியாட்கள் மக்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தங்களை துரைகள் என்றழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களைப்போல நடமாடி வந்த ஆண்டைகளின் ஆதிக்கம் தவிடுபொடியானது. துரைகளை மக்கள் கிராமங்களை விட்டு விரட்டியடித்தனர். பெரும் பண்ணைகளின் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. பிரம்மாண்டமான மாளிகைகள் வெறிச்சோடிப் போயின.

ஜகித்யாலா எழுச்சி சிர்சில்லா, லோட்டனூரு, மாத்தனூரு, சின்ன மேட்டுப்பள்ளி என்று விரித்து பரவியது. அதுவரை துரைகளின் வீடுகளில் கொத்தடிமையாக இருப்பது அல்லது தண்டம் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதையும் அறியாதிருந்த மக்கள் துரைகளை சமூகப் புறக்கணிப்புச் செய்தனர். அவர்களுக்கு உணவும் நீரும் மறுக்கப்பட்டன.

“ஜகித்யாலா விவசாயிகள் போராட்டத்தில் ஒரு மைல்கல்லானது. தெலுங்கு இலக்கியம் ஜகித்யால் இயக்கத்தால் செழுமைப்பட்டது. நவீன படைப்பிலக்கியத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது ஜகித்யால்” (பழங்குடி மொழிகளில் புரட்சிகர இலக்கியம்).

அரசு இன்னொரு காகுளம் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளதென்று பயந்து விரைந்து இயங்கியது. ஜகித்யாலா, சிர்சில்லா தாலுக்காக்கள் கலவரப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. புதுப்புது காவல் நிலையங்களும், முகாம்களும் திறக்கப்பட்டன. போலீஸ் கிராமங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு துரைகளை மீண்டும் அவர்களின் மாளிகைகளில் அமர்த்த முயன்றது. ஆனால் கோபம் கொண்ட மக்கள் மீண்டும் மீண்டும் மாளிகைகள் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் மக்கள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தியது.

துரைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்ப நகரங்களுக்கு ஓடினர். அரசு மேலும் போலீஸ் படைகளைக் குவித்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கூட்டக் குழுவுடன் இணைந்து ஆந்திரமாநிலக் கமிட்டி தன்னை இந்திய பொதுவுடமைக் கட்சி (மா லெ) (மக்கள் யுத்தம்) ஆக மாற்றிக் கொண்டிருந்தது. எழுபதுகளில் நக்சல்பாரி எழுச்சியின்போது கலகம் மையம் கொண்டுள்ள கிராமங்களை அரசப் படைகள் தாக்கும்போது பதிலுக்குத் திருப்பித் தாக்கி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே வழக்கமாகவிருந்தது. இது பேரழிவை விளைவித்தது.

மக்கள் யுத்தக் கட்சி தெலங்கானாவிலும், தமிழ் நாட்டிலும் வேறுவிதமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. சரியான தயாரிப்பு இல்லாமல், சூழல் இல்லாமல் அரசப் படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்துவது என்பது அழிவையே கொண்டு வரும். அதற்கு பதில் மேலும் பல தளப்பிரதேசங்களை உருவாக்கி அடக்குமுறையை சிதறடிப்பதே சிறந்த வழி என்று கட்சி கருதியது. பீடம்பள்ளி, மந்தனி, ஹுசூராபாத், பரகலா, ஜனகம், காமாரெட்டி, பத்ராசலம், சிங்கரேணி, லக்ஸேத்திபெட், கானாபூர், சிர்பூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கத்தை விரிவுபடுத்தியது.

சிங்கரேணி என்பது மிகப் பெரிய நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதியாகும். சுமார் ஒரு லட்சம் மக்கள் இங்கே பணி செய்து வந்தனர். மக்கள் யுத்தக்கட்சி இங்கே சிங்கரேணி கார்மிக சமக்யா (Singareni Karmika Samakya) என்ற தொழிற்சங்கத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியது. இது பழைய நக்ஸல் பாதையிலிருந்து மிகப் பெரிய முறிவு ஆகும். சாரு தொழிற்சங்கங்கள் அமைப்பதை எதிர்த்தார். அவை பொருளாதாரப் போராட்டங்களுக்கானவை என்ற கருத்தே இருந்தது.

சிகாஸா தனது முதல் மாநாட்டை கோதாவரிக்கனி என்ற இடத்தில் 1982 ஜூனில் நடத்தியது. சிகாஸா சுரங்கங்களில் அதுவரை புறக்கணிப்பட்ட பணிப்பாதுகாப்பு, வேலை செய்யும் நிலைமைகளில் முன்னேற்றம், கூலி, ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடியது. 56 நாட்கள் நடந்த வேலை நிறுத்தம் மிக முக்கியமானதாகும். சுரங்கப்பகுதிகளில் மது விற்பனையை தடை செய்யவும் சிகாஸா தொடர்ந்து போராடியது. ஒப்பந்ததாரர்கள் சுரங்கத் தொழிலாளர்களை கொள்ளையடிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுவது ஆகியவற்றுக்கு முடிவு கட்டியது சிகாஸா.

சிகாஸா 1992 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

கட்சி ஆயுத நடவடிக்கைகளைத் தவிர்க்க முயன்றாலும் மக்கள் எழுச்சிகளின்போது அழித்தொழிப்புகள் தவிர்க்க முடியாதவையாகவிருந்தன. அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம் பேரலையாக வெடித்து சுற்றிலுமிருந்த அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கியது.

அரசால் கிராமங்களில் தனது அதிகாரம் தகர்வதை நீண்டநாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, இது நிச்சயம் அரசு அடக்குமுறையைக் கொண்டு வந்தே தீரும் என்பதை கொண்டபள்ளி சீத்தாராமையா உணர்ந்திருந்தார். அதுவரை ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்து வந்தாலும் அது இனிமேலும் தவிர்க்க முடியாத கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் துலக்கமாகத் தெரிந்தது. நிலப்பிரபுக்களின் அடியாட்படைகள் ஏறக்குறைய முறியடிக்கப்பட்டு விட்டன. நிலப்பிரபுக்கள் முழுமயாக அரசையும் போலீசையும் சார்ந்து இருக்கத் தொடங்கினர். ஒவ்வொரு போராட்டத்திலும் போலீஸ் தலையிட்டது. கிராமங்களைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

மக்கள் யுத்தக் கட்சி கிராமங்களில் உருவாக்கியிருந்த ஊர்சபைகள், பகிர்ந்து அளித்திருந்த நிலங்கள், எழுச்சியின் போது எட்டப்பட்ட சுதந்திரம், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டியிருந்தது. எனவே அரசப் படைகளை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்தே விட்டது.

எழுச்சி நடந்து மக்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட இடங்களில் அரசு போலீஸ், துணைராணுவப் படைகள் ஆகியவற்றைக் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தும்போது கெரில்லாக் குழுக்களால் அவற்றைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை. எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் பெரும் வலிமை கொண்ட படைகளை நேரடியாக எதிர்த்து நிற்பது என்பது பேரழிவையே ஏற்படுத்தும். எனவே குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரும்பாலான ஆயுதக் குழுக்கள் போர்ப் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதே ஆயுதப் போராட்ட அமைப்பு தனது பலத்தையும் அணிகளையும் காத்துக் கொள்ளும் வழியாகும். வெற்றி அல்லது வீர மரணம் என்ற மரபுரீதியிலான போர் முழக்கம் கெரில்லா போராட்டத்துக்கு பொருந்தாததாகும். அரசின் தாக்குதல் கடுமையாக இருக்கும்போது அந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதும், பின்பு சாதகமான சூழல் ஏற்பட்டதும் முன்னேறுவதும் உலகம் முழுவதும் கெரில்லா இயக்கங்கள் கடைப்பிடித்து வரும் செயல் தந்திரமாகும்.

நக்சல்பாரி, காகுளம், போஜ்பூர், கோபிபல்லப்பூர் போன்ற இடங்களில் தோன்றிய எழுச்சிகள் அடக்கப்பட்டதற்குக் காரணம் அரசு பதில் தாக்குதல் நடத்தும் போது புரட்சிகர குழுக்களும், கட்சியும் பின்வாங்க பாதுகாப்பான இடமில்லாதிருந்ததாகும் என்ற முடிவுக்கு சீத்தாராமையா வந்தார். 1940க்களின் இறுதியில் நடந்த தெலங்கானா புரட்சியின்போது இதே போன்ற சூழலை இந்தியப் பொதுவுடமைக் கட்சி எதிர்கொண்டிருந்தது.

இதன்படி தெலங்கானா புரட்சியின்போது இந்திய பொதுவுடமைக் கட்சி வடக்கு நோக்கி, அதாவது காடுகள் நிறைந்த மத்தியப் பிரதேசத்தின் பஸ்தர் மாவட்டத்தை நோக்கிப் பின்வாங்குவது என்று முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் அந்தப் பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட குழுவானது அங்கே உள்ள மக்கள் மிக மிகப் பின்தங்கி உள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாத, ஆடைகூட அணியாத பழங்குடி மக்கள். சமவெளிப் பகுதி மக்களுக்கு அறிமுகமற்ற பல்வேறு மொழிகள் பேசுபவர்கள்.

அவர்களுடன் தொடர்பு கொள்வது சாத்தியமற்றது. தவிர மலேரியா போன்ற நோய்கள் நிறைந்ததாக உள்ளது அந்தப் பகுதி. எனவே அங்கே கட்சி அமைப்புகள் உருவாக்குவதும், அங்கு பின்வாங்கும் தோழர்கள் தாக்குப் பிடித்து நிற்பதும் சாத்தியமில்லை என்று அறிக்கையளித்தது. (வீரத் தெலங்கான்- சுந்தரய்யா). எனவே இந்தியப் பொதுவுடமைக் கட்சியானது தெற்கு நோக்கி அதாவது கிழக்கு கோதாவரி காடுகளுக்குப் பின்வாங்குவது என்று முடிவு செய்தது.

கிழக்கு கோதாவரி காடுகள் பல ஆயிரம் கெரில்லா வீரர்கள் நிலைகொள்வதற்கு ஏற்றவையல்ல. அரசு படைத்தளங்களுக்கும், சாலை வசதியுள்ள இடங்களுக்கும் அருகேயுள்ளது அந்தப் பகுதி. எனவே கட்சி கடும் சேதத்தை சந்தித்தது.

இதை ஆய்வு செய்த கொண்டபள்ளி சீத்தாராமையா என்ன விலை செலுத்தியாவது வடக்கே பஸ்தர் உள்ளிட்ட தண்டகாரண்யக் காடுகளை நோக்கிப் பின்வாங்கியே வேண்டும் என்று முடிவு செய்தார். என்ன காரணங்களால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி பஸ்தர் பகுதிக்கு பின்வாங்குவது சாத்தியமில்லை என்று கருதியதோ அதே காரணங்களால்தான் அது பின்வாங்க ஏற்ற பகுதி என்று மக்கள் யுத்தக் கட்சி தீர்மானித்தது.

பஸ்தர் மாவட்டம் கேரளா அளவுள்ளது. 67 சதவீதப் பகுதி காடுகளால் நிரம்பியது. கோண்டு பழங்குடி மக்களே அங்கு வாழ்ந்து வந்தனர். பஸ்தர் முழுவதும் ஐந்து சிறிய நகரங்களே அப்போது இருந்தன. பழங்குடி மக்கள் பீடி இலை சேகரித்து ஒப்பந்தக்காரர்களிடம் விற்பனை செய்வது வழக்கம். இந்தத் தொழிலில் கடுமையான சுரண்டல் நிலவியது. நூறு மூட்டை பீடி இலைகளை சேகரித்தால் இரண்டுரூபாய் மட்டுமே கூலி என்ற நிலை இருந்தது. பெண்கள் வனத்துறையாலும், மாபியா கும்பல்களாலும், சுரங்கங்கள், மரம் வெட்டும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் அடியாட்களாலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். பழங்குடி மொழிகளும், கலை வடிவங்களும் அழிந்து வந்தன. எனவே பஸ்தரில் மட்டுமல்லாமல் தண்டகாரண்யம் என்றழைக்கப் பட்ட மத்திய இந்திய காட்டுப் பகுதி முழுவதிலும் புரட்சிகர பணி செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. அது அந்த மக்களின் நலனில் இருந்தும், சமவெளிப் போராட்டத்துக்கும் அவசியமானது என்று மக்கள் யுத்தக் கட்சி முடிவு செய்தது.

தெலங்கானா பகுதிகளில் கட்சி ஊழியர்கள் தனி நபர்களாகவோ, சிறு குழுக்களாகவோ இயங்குவது வழக்கம். தேவையானால் மட்டுமே உள்ளூரில் கிடைக்கும் ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்வதும் வழக்கம். மக்கள் நடுவே கலந்து மறைந்து கொள்வது சாத்தியம் என்பதால் அதற்கு மேல் தேவைப்படவில்லை. ஆனால் பலநூறு கிலோமீட்டர் பரந்து விரிந்துள்ள அடர் காடுகளுக்குள் அமைந்திருக்கும் வெளியுலகத் தொடர்பற்ற பழங்குடி கிராமங்களுக்கு தனித்தனி கட்சி ஊழியர்களை அனுப்புவது என்பது சாத்தியமில்லை என்பதை கட்சி உணர்ந்திருந்தது.

எனவே தண்டகாரண்யத்தில் கட்சிப்பணி செய்ய மக்கள் யுத்தக் கட்சி பச்சை சீருடையும், துப்பாக்கியும், தொப்பியும், கெரில்லா முதுகுப் பையும் தாங்கிய குழுக்களை உருவாக்கியது. இவை பின்பு தளங்கள் என்று அழைக்கப்பட்டன. கட்சி இந்தக் குழுக்களை செஞ்சேனையின் முன்னோடிகளாகக் கருதியது.

முதலில் தண்டகாராண்யத்தின் ஒரு பகுதியான கட்சிரோலி மாவட்டத்தில் நுழைந்த கெரில்லாக் குழுக்கள் பழங்குடி மக்களை உணர்வூட்டி அணிதிரட்ட ஜன நாட்டிய மண்டலியின் தெலுங்கு பாடல்களைப் பயன்படுத்தினர். அது அந்த மக்களுக்குப் புரியவேயில்லை. கடும் முயற்சிக்கும் போராட்டத்துக்கும் பின்பு கெரில்
லாக்கள் அப்பாடல்களைக் கோண்டு மொழியில் மொழிபெயர்த்தனர். இந்த போதிலும் சமவெளிப்பகுதிகளில் மக்களிடையே மிகவும் புகழ்பெற்றிருந்த பாடல்கள் பழங்குடி மக்களுக்கு அன்னியமாகவே இருந்தன.

ஏன் என்று தேடியவர்களுக்கு விசித்திரமான பதில்கள் கிடைத்தன. பழங்குடி மக்கள் ஒருவர் பாட அடுத்தவர் அமர்ந்து ரசிக்கும் வழக்கம் இல்லாதவர்கள். அவர்களது பாடல்கள் நடனத்துடன் இணைந்திருக்கும். எல்லா மக்களும் நடன நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். பார்வையாளர்கள், பங்கேற்பவர்கள் என்ற வேறுபாடு அங்கே இருக்கவில்லை. இந்த சிக்கலைப் புரிந்து கொண்டதும் நக்சல் தோழர்கள் கோண்டு மக்களின் இசையையும், பாடல்களையும் புரிந்து கொள்ளும் கடுமையான பணியில் இறங்கினர். நீண்ட கோரசிலோ, உரையாடல்களிலோ தொடங்கும் அவர்களின் பாடல்களைப் புரிந்து கொள்ள நீண்ட காலம் பிடித்தது. இதிலிருந்த சிரமங்கள், காட்டு வாழ்க்கையின் கடுமை சில முக்கியமான தோழர்களை அமைப்பிலிருந்து விலகிப் போகச் செய்தாலும் மற்றவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.

“நாங்கள் ரிலோ என்றோம். ரெலோ என்றோம். (பழங்குடி பெண்கள் ரிலோ என்றும் ஆண்கள் ரெலோ என்றும் பாடல்களைத் தொடங்குவார்கள்) பழங்குடி இளைஞர்களும் யுவதிகளும் எங்களோடு இணைந்து கொண்டார்கள். அவர்கள் இயற்கை உருவாக்கிய கலைஞர்கள். கவிதை அவர்களின் குருதியில் கலந்திருந்தது. புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி, நோக்கங்கள், மக்கள் வாழ்க்கை பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் தண்டகாரண்ய வானில் எதிரொலிக்கத் தொடங்கின.” (people’s struggles- a perspective. RWA publication).

தண்டகாரண்யாத்தில் நுழைந்த கெரில்லாக்கள் ‘ஆதிவாசி கிஸான் ஸெட்மஜூர் சங்காதனா’ என்ற பழங்குடி விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அமைப்பை மிக விரைவில் கட்டியெழுப்பினர். முதலில் மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் தொடங்கிய இந்த அமைப்பு விரைவில் பஸ்தர், பண்டாரா, பால்காட், கோராபுட், சந்திரபூர், மாண்டலா, ராஜநந்தகம், கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டணம் என்று பங்களாதேஷைப் போல இரண்டு மடங்குள்ள பகுதிக்கு விரிந்து பரவியது.

1980 லிருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களில் 100 மூட்டை பீடி இலைக்கு 2 ரூபாயாக இருந்த கூலி பதினேழு ரூபாயாக உயர்ந்தது. வனத்துறையும், பல்வேறு ஒப்பந்தக்காரர்களும் பழங்குடி மக்கள் மேல் செலுத்தி வந்த அதிகாரம் பெருமளவு சிதைந்து போனது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் தண்டகாரண்யப் பகுதி முழுவதும் இயங்கி வந்த மக்கள் யுத்தக் கட்சியின் அமைப்புகள் தண்டகாரண்யப் பழங்குடி விவசாயிகள், தொழிலாளர்கள் சங்கம் (DAKMS) என்ற பெயரில் ஒன்றிணைந்தன.

1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிஅடிலாபாத் மாவட்டம் இந்திரவல்லி என்ற கிராமத்தில் ஒரு பழங்குடி மக்கள் மாநாடு நடத்தப்பட இருந்தது. அதற்கு ஒருநாள் முன்பு மாநாடு தடை செய்யப்பட்டது. அதை அறியாமல் அடர்காடுகளிலிருந்து மாநாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர். நக்சல் வரலாற்றில் இந்திரவல்லிப் படுகொலை என்று இது அழைக்கப்படுகிறது. இது பழங்குடி மக்களை பயந்து விலகச் செய்வதற்கு பதில் மேன்மேலும் மக்கள் யுத்தக் கட்சியுடன் இறுகப் பிணைத்தது.

நக்சல்பாரி இயக்கம் அதுவரை கண்டிராத அளவுக்கு விரிந்த பகுதியில் ஆழமாக நிலைகொண்டது. அரசும் துணைராணுவப் படைகள் உள்ளிட்ட பெரும் படைகளைக் குவித்து, தயாரிப்புகளைச் செய்து முடித்து தாக்குதலுக்கு தயாரானது. அதுவரை மக்கள் யுத்தக் கட்சிக்கு நக்சல் அமைப்புகளின் வழக்கப்படி உள்ளூர் தயாரிப்புகளான துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள் போன்றவை மட்டுமே பிரதான ஆயுதங்களாக இருந்தன. கட்சியில் இணைந்து கொண்டிருந்த சில முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் அளித்த ஆரம்ப கட்டப் பயிற்சிகள் இருந்தன. இவை மரபுரீதியிலான ராணுவத்துக்கான பயிற்சிகளாக மட்டுமே இருந்தன. எண்ணிக்கையிலும், பயிற்சியிலும், ஆயுத பலத்திலும் மேம்பட்ட அரசுப் படைகளுடன் போரிடுவதற்கான பயிற்சிகளாக இவை இருந்திருக்கவில்லை. அரசு நடத்த இருந்த தாக்குதலை இவற்றை மட்டுமே கொண்டு கட்சி எதிர்கொண்டிருந்தால் விளைவு என்னவாகியிருக்குமோ தெரியாது. ஆனால் வரலாறு வேறு வழியில் இழுத்துச் சென்றது.

1983 ஜூன் மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த பெரும் படுகொலைக்குப் பிறகு தமிழ் ஈழத்தின் விடுதலைக்குப் போராடும் ஈழப் போராளிகள் தமிழ்நாட்டுக்கு ஆயுதங்களும், தங்கிடமும், பயிற்சியும் தேடி வந்து குவிந்தனர். இலங்கை அரசை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய இந்திய அரசானது இலங்கைக்கு அழுத்தம் தருவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள், டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ் ஆகிய அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இந்த அமைப்புகளின் உறுப்பினர்களை இந்திய நக்சல் அமைப்புகளுடன் எந்தத் தொடர்புகளும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இந்திய உளவு அமைப்புகள் கடுமையாக எச்சரித்திருந்தன.

ஈழத்தைச் சேர்ந்த என்.எல்.எஃப்.டி., ஈழ பாட்டாளி வர்க்க முன்னணி போன்ற மார்க்சிய லெனினிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களை நக்சல்களை நடத்துவது போலவே இந்திய உளவுத் துறைகள் நடத்தின. அவற்றுக்கு பயிற்சிகள், ஆயுத, பண, தங்கிட உதவிகள் அளிக்கப்படாததோடு கண்காணிப்பு போன்ற தொல்லைகளுக்கு உட்படுத்தவும்பட்டன. இந்தியா தனக்கு அடியாட்களை உருவாக்கவில்லை, ஈழத் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த இயக்கங்களை இந்தியாவில் இருக்க அனுமதித்தது. ஆனால் அவற்றின் செயல்பாடுகளை முடிந்த அனைத்து வழிகளிலும் கட்டுப்படுத்தியது. அந்த இயக்கங்களும் இந்தியா தேசிய இன விடுதலைக்கு எதிரான நாடு. அது தற்காலிக அரசியல் தேவைகளுக்காக போராளிகளுக்குப் பயிற்சியளித்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் காட்டிக் கொடுத்துவிடும் என்ற கருத்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துடன் தங்களுக்குத் தொடர்புகள் ஏற்பட்டன என்று கொண்டபள்ளி சீத்தாராமையா இந்தியாடுடேவுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். இந்தத் தொடர்பு மக்கள் யுத்தக் கட்சியின் போர்த்தந்திரங்களிலும் ஆயுத பலத்திலும் பயிற்சியிலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது.

முழுவதும் ராணுவத் தன்மை கொண்ட ஈழப் போராளிகளிடம் பயிற்சி பெற்ற அனுபவங்கள் பற்றிய பல நகைச்சுவைக் கதைகளை முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.

மக்கள் யுத்தக்கட்சியின் ஆயுதக் குழுக்களிலிருந்த பொருளாதார நிபுணர்கள், அடர் காட்டில் போர்வையைப் போர்த்திக் கொண்டு அதற்குள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எழுதும் கவிஞர்கள், பழங்குடி கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்த மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், மாற்று அரசியல் தவிர வேறொன்றையும் நினைத்துப் பார்த்திராதவர்கள், ஜே.என்.யூ., பிட்ஸ் பிலானியில் படித்த அறிவியலாளர்கள் என்று பலவகையான அறிவுஜீவிகளை ஈழப் போராளிகள் போர்ப் பயிற்சிகளில் புரட்டி எடுத்தனர். பயிற்சியின்போது தவறிழைத்தவர்களுக்கு விதிவிலக்கின்றி அடி விழுந்தது.

முறைத்துப் பார்த்தாலே கமிட்டி கூட்டி மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, செண்டூஷி, ஊழியர் கொள்கை என்று விமர்சனம் வைக்கும் நக்சலைட்டுகளுக்கு இதெல்லாம் முற்றிலும் புதிதாகவிருந்தது. நக்சல் அறிவுஜீவிகள் இளம் ஈழப் போராளிகளின் அதிரடி நடவடிக்கைகளைப் புன்னகையுடன் எதிர் கொண்டனர். புரட்சி என்பது உணர்வெழுச்சி, தியாகம், வீரம், அர்ப்பணிப்பு, அரசியல் என்பதிலிருந்து ஆயுதப் போராட்டத்துக்கான உடல் தகுதி, உணவு ஆகியவை குறித்து முதல் முதலாக நக்சல் இயக்கம் சிந்திக்கத் தொடங்கியது அந்தக் காலகட்டத்தில்தான். இந்திய அரசு இலங்கை அரசுக்கு தொல்லை கொடுக்க ஈழப் போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்தது. அதே ஈழப் போராளிகளின் இன்னொரு பிரிவால் தனக்குத்தானே தீராத தலைவேதனையைத் தேடிக் கொண்டது.

வட தெலங்கானாவின் காடுகளில் ஒரு போலீஸ் குழு நக்சல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. சுமார் பத்து பேர் கொண்ட அந்தக் குழுவின் மீது காட்டில்மறைந்திருந்த மக்கள் யுத்தக் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் போலீசார் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் தாக்குதல் என்பது நக்சல்பாரி இயக்கத்தைப் பொறுத்தவரை புதிய உத்தியாகும். அதுவரை போலீசாரைக் கண்டால் சுட்டுக் கொண்டே பின்வாங்கிவிடுவது நக்சலைட்டுகளின் வழக்கம். இப்போது ambush எனப்படும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நக்சல்பாரி இயக்கம் இன்னொரு பரிமாணத்தை அடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறது என்று ராணுவ நிபுணர்கள் எழுதினர்.

பின்பு அடுத்தடுத்து காவல்துறை, துணைராணுவப் படைகள் சென்ற வாகனங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாபில் ஆயுதப்போராட்டங்கள் நடந்து வந்த நேரம். அந்தப் பகுதிகளைவிட தெலங்கானா கிராமங்களில் அரசு இத்தகைய ஒவ்வொரு தாக்குதலிலும் கொத்துக் கொத்தாக தனது வீரர்களை இழந்தது. மக்கள், துணை ராணுவப்படை வீரர்களை லாரிகளில் கூட்டமாகச் சாவதற்குச் செல்லும் கோழிகள், சிக்கன் என்று கிண்டலாக அழைக்கத் தொடங்கினர். இத்தாக்குதல்களின் காரணமாக கிராமங்களின் மீதான போலீஸ் தாக்குதல் குறைந்தது. கட்சி மூச்சு விடுவதற்கும் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் நேரம் கிடைத்தது.

iramurugavel@gmail.com